Malar – 10

images - 2020-11-04T133435.219-981c1ea3

Malar – 10

அத்தியாயம் – 10

செவ்வந்தி வாழ்க்கையில் எந்தவிதமான மாற்றமின்றி தெளிந்த நீரோடை போல சென்றது. அன்றுடன் கடை தொடங்கி கிட்டதட்ட ஐந்து மாதங்கள் முடிந்துவிட்டது.  வழக்கம்போலவே பாடலைக் கேட்டபடி அனைவரும் வேலையில் ஈடுபட்டிருந்தனர்.

ஒரு பட பாடலின் வரிசையில் “நான் பேச நினைப்பதெல்லாம்” படத்தில் பாடல்கள் ஒலித்தது. டெயிலர்களுக்கு துணியை கட்டிங் போட்டு கொடுத்துவிட்டு ஒரு மெஷினில் அமர செவ்வந்தியின் மனம் அந்த பாடலோடு ஒன்றிப் போய்விட வாய்விட்டு பாட தொடங்கினாள்

“ஆகாய கங்கையே நீராட வா..

ஆனந்த தென்றலே சீராட்ட வா..

நாள் வந்தது நல்ல நாள் வந்தது..

பூ பூத்தது புது பூ பூத்தது..

பூவோடு பூ சேர பூமாலையாக மாறலாம்..

 

வானவில்லில் பொன்னுஞ்சல் ஆடுவோமே..

கீரிடமாக விண்மீனை சூடுவோமே..

சந்தன மல்லிகை வாசம்கொண்டு

தென்றலும் சாமரம் வீசும்..

அலைகளும் உடைபடும் கடல்களும் வழிவிடுமா?

 

தேடும் விடியல் நம் வாசல் கோலமாகும்..

வேர்வை துளிகள் முத்தாக மாறும் மாறும்..

புயல் மழை காலங்கள் ஓயும்..

இனி படகுகள் கரைகளில் சேரும்..

புது யுகம் பிறந்திட புது சுகம் மலர்ந்துடுமா?” என்று செவ்வந்தி பாடிமுடித்தாள்.

அவள் மற்றவர்களை போல அர்த்தம் புரியாமல் ஒரு பாடலை பாடுவதில்லை. முன்னேற்றம் கொண்ட பாடல்கள், கருத்துள்ள பாடல் என்று தேர்வு செய்து பாடல்கள் கேட்பதால், “அக்கா நீங்க சூப்பராபாடுறீங்க” என்றான் ராம்மோகன் புன்சிரிப்புடன்.

அவனின் குரல்கேட்டு சட்டென்று நிமிர்ந்து, “தேங்க்ஸ் ராம்” என்றவளின் பார்வை சரண்யாவின் மீது கேள்வியாக படித்தது. அவள் தைக்கும் வேலையைவிட்டு கன்னத்தில் கை வைத்து அமர்ந்திருப்பதை பார்த்தாள்.

“நீ ஏன் சரண்யா இவ்வளவு சோகமாக இருக்கிற” என்று கேட்டாள் செவ்வந்தி புரியாத பார்வையோடு.

“இந்த பாட்டு முடிஞ்சதும் மோகினி பெரிய கலெக்டர் ஆகிருவா. அதே மாதிரி படம் முடியும்போது ஆனந்த் பாபுவும் பெரிய பாடகர் ஆகிருவார். படத்தில் ஒரே பாடலில் சீக்கிரம் உச்சிக்கு போயிடுறாங்க. அந்த மாதிரி நம்ம எப்போ ஆகறது” சிந்தனையோடு கேட்டவளை பார்த்து பிரகாஷ் தலையிலடித்துக் கொண்டான்.

அவளின் கேள்வியில் கடுப்பான செவ்வந்தி, “அவங்க ஒரே பாடலில் ஹிட் ஆகலாம். நம்ம அந்த மாதிரி ஆகணும்னா முதலில் ஒழுங்கா தைக்கணும். ம்ம் வேலையைக் கவனி” என்றாள்.  சரண்யா உர்ரென்று முகத்தை வைத்திருப்பதைக் கண்டு மற்றவர்கள் சிரித்தனர்.

“என் அறிவுக்கும் திறமைக்கும் நான் எல்லாம் எங்கே எப்படி இருக்க வேண்டியவள்” கவுண்டமணி பாணியில் சொல்லிவிட்டு கற்பனையில் மிதந்தாள்.

அவளின் செயலைக் கண்ட ஜோதி, “எனக்கு தெரிஞ்சி நீயெல்லாம் ஜூவில் இருக்க வேண்டிய ஆள்” நக்கலடித்தாள். அதன்பிறகு அவர்களின் கவனம் முழுவதும் வேலையில் திரும்பிவிடவே பேச்சிற்கு தடை விதிக்கபட்டது.

வெற்றி தன்னிடம் ஒப்படைக்கபட்ட வேலைகளை சரிவர செய்ய தொடங்கினான். அவர்களின் ஏரியாவில் இருந்த ஒரே ஜவுளிக்கடை என்பதால் மலர் டெக்டைல்ஸில் மட்டும் வேலை இருந்துகொண்டே இருந்தது. ஆயுத பூஜை நெருங்கும் சமயத்தில் அவர்களின் கடைக்கு அருகில் புதிய கடை ஒன்று தயாராகி கொண்டிருப்பதை கண்ட வெற்றி சிந்தனையோடு வீடு திரும்பினான்.

அவன் வீட்டிற்குள் நுழையும்போது, “உன் மகன் கைநிறைய சம்பாரிக்கும் எண்ணத்தில் நம்ம பேச்சை கேட்பதே கிடையாது. அவன் தொடங்கிய தொழில் எல்லாம் தோல்வியில் முடியுது என்றுதானே அவனிடம் பேசாமல் ஒதுக்கி வைத்தேன். இன்னைக்கு அந்த மலர் டெக்டைல்ஸ் ரொம்ப நல்லாவே ஓடுதாம். நீ கேள்விபட்டியா?” என்று மனைவியிடம் கேட்டார்.

வெற்றி அவர் பேசியதை காதில் வாங்கியபடி வாசலில் நின்றுவிட, “எனக்கு எப்படிங்க தெரியும்?” என்றார் விமலா.

“அவன் தொடக்கி வைத்தால் தான் கடை ரொம்ப சூப்பரா போகுதுன்னு ஊருக்குள் பேசிக்கிறாங்க. அப்புறம் ஏன் நம்ம வீட்டில் அவன் கை வைத்தால் விளங்கவே மாட்டேங்குது” என்று தீவிர சிந்தனையோடு மனைவியிடம் கேட்டார்.

அவரோ திருவிழாவில் காணாமல் போன பிள்ளைபோல முழிக்க, “அதை அம்மாவிடம் கேட்ட எப்படிப்பா பதில் கிடைக்கும்? அவங்களுக்குதான் உங்களைத் தவிர வேற உலகமே தெரியாதே?” என்று நக்கலடித்தபடி தன் அறையிலிருந்து வெளியே வந்தாள் ஜமுனா.

தன் மகளின் பேச்சில் முகம் சுளித்தபடி கணவர் திரும்புவதை கண்ட விமலா, “பெரியவங்க பேசும்போது தலையிடக்கூடாதுன்னு உனக்கு எத்தனை முறைதான் சொல்வது?” என்று கோபத்தைக் காட்டினார்.

தாயின் பேச்சை இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்ட ஜமுனா, “அம்மா நீங்க வேற யாரைப்பற்றி பேசி இருந்தாலும் வாயைத் திறக்காமல் அமைதியா ரூமிற்குள் இருந்திருப்பேன். ஆனால் நீங்க என் அண்ணனை தானே பேசினீங்க. அதுதான் பதில் சொல்லிட்டு போலன்னு வந்தேன்” என்று திமிராகவே பதில் கொடுத்தாள்.

விமலா மகளை கோபத்துடன் முறைக்க, “அண்ணா தொட்டது தொலைங்காமல் போனதுக்கு காரணம் உங்களோட எண்ணங்கள். என் மகன் தொடங்கிய பிஸ்னஸ் ஓகோன்னு வரும்னு நீங்க நம்பியிருந்தால் எங்க அண்ணனோட திறமைக்கு இன்னைக்கு நாமக்கலில் பாதியை விலைக்கு வாங்கியிருப்பான். ஆனால் உங்களுக்கு தான் அந்த எண்ணமே இல்லையே?” என்று ஏளனமாக கூறினாள்

அவளின் பேச்சில் நரசிம்மனின் முகம் கோபத்தில் சிவக்க அதற்கு நேர் மாறாக வெற்றியின் முகத்தில் புன்னகை அரும்பியது.

“ஆனால் செவ்வந்தி அண்ணி அப்படி இல்ல. அவங்க முழுவதுமாக நம்பினாங்க. அண்ணா தொடக்கி வைத்த தொழில் தோல்வியில் முடியாதுன்னு. இன்னைக்கு அதுதானே நடந்திருக்கு. என் அண்ணனை தொழிலில் பார்ட்னராக சேர்த்து இருக்காங்க. அதுக்கெல்லாம் நல்ல மனசு வேணும். உங்களுக்கு தான் அது கிடையாதே” என்று சொல்லும்போது தன் தாய் மாமனின் முகமும், பாசத்தை மட்டும் பொழியும் அத்தையின் முகமும் அவளின் மனக்கண்ணில் தோன்றி மறைந்தது.

தன் மகளின் சீண்டலான பேச்சில் கடுப்பான நரசிம்மன், “போதும் நீ உன் அண்ணனுக்கு ஜிங் ஜக் போட்டது. முதலில் எழுந்து போ இங்கிருந்து” என்று வார்த்தைகளை கடித்து துப்பிவிட்டு அறைக்கு எழுந்து சென்றார்.

அவரின் பின்னோடு சென்ற விமலா, “உனக்கு வாய் அதிகமாகிட்டே போகுது. இது நல்லதுக்கு இல்ல” என்று கண்டிக்கவே கலகலவென்று சிரித்தாள் ஜமுனா.

“எங்க அண்ணன் சம்பாரித்து போட்டு திங்கிறேன் இல்ல. அதனால் கொழுப்பு கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். முதலில் உன் புருசனுக்கு சொத்தில் உப்பை குறைக்க சொல்லு” பதிலுக்கு பதில் பேசிவிட்டு நிமிர்ந்த ஜமுனா அப்போதுதான் தமையன் வாசலில் நிற்பதைக் கவனித்தாள்.

“என்னண்ணா அங்கே நின்னுட்ட? வீட்டுக்குள் வா” என்று அழைத்தவள் அவனுக்கு குடிக்க காபி போட்டு எடுத்துவர சென்றாள்.

அவள் திரும்பி வருவதற்குள் அறைக்கு சென்று உடையை மாற்றி கை கால்களை அலம்பிவிட்டு வந்தவனிடம் சுட சுட காபியைக் கையில் கொடுத்தவளிடம் ஒரு பாஸ் புக்கை நீட்டினான் வெற்றி.

அவனை சிந்தனையோடு ஏறிட்ட ஜமுனா, “இது என்னது?” என்ற கேள்வியுடன் அதன் மீது கவனத்தைத் திருப்பினாள். அதில் ஒரு லட்சம் ரூபாய் தங்கையின் பெயரில் டெப்பாசிட் செய்திருந்தான்.

அதைப் பார்த்தவுடன் அவளுக்கு கோபம் வந்தது.

“உன் மேல் எனக்கு நம்பிக்கை இல்லாத மாதிரியே பண்ற. இந்த பணத்தை எதுக்காக இப்போ டெபாசிட் பண்ணி வச்சிருக்கிற? நான் உன்னிடம் கேட்டேனா?” என்று அவனிடம் சண்டைக்கு வந்தாள் சின்னவள்.

அவளின் பாசம் அவனின் மனதை நெகிழ வைத்தபோதும், “உனக்கான செய்வதாக இருந்தாலும் சிறுக சிறுக சேர்த்தால் தான் ஒட்டு மொத்தமாக உன் திருமணத்திற்கு செய்ய முடியும்?” என்றவன் அவளை சமாதானம் செய்ய அவளின் முகம் தெளிவடைந்தது.

அவள் கொடுத்த காபியை குடித்தபடியே, “இன்னைக்கு வீட்டிற்கு வரும் வழியில் புதிதாக ஒரு ஜவுளிக்கடை வேலை நடப்பதை பார்த்ததில் இருந்தே மனசுக்கு சரின்னு படல ஜமுனா” என்று தன் மன வருத்தத்தை தங்கையிடம் பகிர்ந்தான்.

அண்ணனின் அருகே அமர்ந்தவளோ, “அண்ணா இன்னும் எத்தனை கடை வந்தாலும் அண்ணியின் உண்மையான உழைப்பிற்கு கண்டிப்பா அவங்களோட வாடிக்கையாளர்கள் அவங்க கடைக்குத்தான் வருவாங்க” என்றவளின் நம்பிக்கையான பேச்சே அவனின் மனதிற்கு ஆறுதலைக் கொடுத்தது.

தான் தொடங்கிய தொழில் துலங்காமல் போய்விடுமோ என்ற பயத்தில் அவன் பேசுவதைக் கவனித்துவிட்ட ஜமுனா, “நீ சும்மா மனசை போட்டு குழப்பிக்காதே அண்ணா.மற்றவங்க சொல்றது எல்லாமே நடக்கனும்னு இல்ல. இந்நேரம் வரை வீட்டில் நடந்த வாக்குவாதம் உனக்கு தெரியும்தானே?! உன்னோட வளர்ச்சியை கண்டு இவங்களே வாயடைத்துப் போயிருக்கும் சமயத்தில் நீ இப்படி யோசிப்பதே சரியில்ல” என்று கண்டிப்புடன் கூறிய தங்கையின் தலையை செல்லமாக ஆட்டிவிட்டு எழுந்து சென்றான் வெற்றி.

அவன் அறைக்குள் சென்ற சற்று நேரத்தில் ஜனனியிடமிருந்து போன் வரவே, ‘இவ எதுக்கு இப்போ கூப்பிடுற?’ என்ற சந்தேகத்துடன் போனை எடுத்து காதில் வைத்தான்.

மறுப்பக்கம், “என்னடா வேலைக்கு சேர்ந்ததில் இருந்தே என்னோடு பேசுவதை அவாயிட் பண்ணிட்டு இருக்கிற? ஒரு பொண்ணுக்கு கீழே வேலை பார்கிறோமே என்ற அருவருப்பே இல்லாமல் இருக்க உன்னால் எப்படிடா முடியுது?” என்று பொரிந்து தள்ளினாள்.

உடனே மீசையை முறுக்கிவிட்டு வேலையை விட்டுவிடுவான் என்ற எண்ணத்தில் அவள் பேச, “அந்த கடையில் எனக்கும் 50% பார்ட்னர்ஷிப் இருக்கு. அந்த கடைக்கு நானும் முதலாளி தான். அதனால் நீ நினைக்கிற எதுவும் நடக்காது ஜனனி. நான் வேலையை விட்டுட்டு உனக்கு டிரைவர் வேலைப் பார்க்கணும் என்ற உன் எண்ணம் பலிக்காது” என்றான் கர்வத்துடன்.

தான் மனதில் நினைத்ததை உடனே கணித்துவிட்ட கடுப்பில், “காதலியை வெளியே கூட்டிட்டுப் போவது உனக்கு அவ்வளவு அருவருப்பாக இருக்கா?” என்று அவனிடம்  வேண்டுமென்றே சண்டைக்கு வந்தாள்.

“நான் அப்படி சொல்லலம்மா. நீ மட்டும்தான் வேலைக்கு போற. உன்னால் தான் அந்த நிறுவனமே இன்னைக்கு முதல் இடத்தில் இருக்குன்னு சீன் போடுற இல்ல. அதை தான் சொல்றேன்” என்று நிறுத்தி நிதானமாக வார்த்தையைவிட்ட வெற்றியின் உதடுகளில் புன்னகை அரும்பியது.

ஏற்கனவே அவன் தன்னை மதிப்பதில்லை என்ற கோபமும் இத்தோடு சேர்ந்துவிடவே, “என்னையே எடுத்தேடுந்து பேசும் அளவிற்கு வந்துட்ட இல்ல. என்னைக்கா இருந்தாலும் நீ தோல்விதான் அடையப் போற. அன்னைக்கு என்ன செய்யறேன்னு பாரு” என்று அவள் சவால்விடவே,

“அப்படியொரு நிலை எனக்கு வராது ஜனனி. ஆனால் உனக்கு வந்தாலும் வரலாம். கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கும் வழியைப் பாரு” என்று கூலாக பதில் சொல்லிவிட்டு போனை வைத்தவனுக்கு சந்தோசம் மட்டுமே மிகுதியாக இருந்தது.

படுக்கையில் அமர்ந்து ஜனனி மீது தனக்கு இருப்பது வெறும் இனக்கவர்ச்சியா? அல்லது உண்மையான காதலா? என்ற கேள்விக்கு அவனுக்கு மறுநாளே விடைக்குமென்று அவன் கனவிலும் நினைக்கவில்லை.

அன்று மதியம் அனைவரும் ஒன்றாக சாப்பிட அமர்ந்தபோது ஜோதி – பிரகாஷ் இருவரும் முதல்நாள் சென்றிருந்த ஆர்கெஸ்டிரா பற்றிய விஷயத்தை கடைபரப்பி கொண்டிருந்தனர்.

“நேற்று அவங்க பாடிய பாடல் எல்லாமே நல்ல இருந்தது இல்ல?” என்று மனைவி அன்றைய நாளில் நூறாவது முறையாக கேட்க அவனும் ஒப்புதலாக தலையாட்டி வைத்தான்.

அதை கவனித்த சரண்யா, “யார் பாடினாங்க” என்று கேட்க, “எங்க தெருவில் ஆர்கேஸ்ரா நடத்தினாங்க. நானும், இவரும் போயிருந்தோம் சரண்யா. அவங்க பாடிய பாடல் எல்லாமே நன்றாக இருந்தது” என்றாள் ஜோதி சிரிப்புடன்.

“என்னடா உன் பொண்டாட்டி சிரிக்கும் சிரிப்பே சரியில்ல. என்ன விஷயம்?” என்று விசாரித்தான் ராம்மோகன் குறும்புடன்.

“அதை அவளே சொல்வா” என்றவன் சாப்பிடுவதில் கவனமாகிவிடவே அவனை புரியாத பார்வை பார்த்துவிட்டு சாப்பிட தொடங்கிவிட்டான்.

“யாரெல்லாம் நல்ல பாடுனாங்க” என்று செவ்வந்தி ஆர்வமாக கேட்டாள்.

“பாடியவங்க எல்லோருமே நல்ல பாடினாங்க. அதைவிட தொகுத்து வழங்க மேடையேறிய ஆதவ் அண்ணாவின் பேசினால் கூட்டம் களைகட்டுச்சு. அவரை பார்க்கவே வயசு பிள்ளைகள் நிறைய வந்தாங்க” என்றவள் சொல்லிக்கொண்டே சென்றாள் ஜோதி.

“என்ன பிரகாஷ் ஆதவ் பற்றி வர்ணனை எல்லாம் தூள் பறக்குது நீங்க கட்டுக்காமல் இருக்கீங்க” என்று செவ்வந்தி குறும்புடன் கண்சிமிட்டினாள்.

அவனோ, “அவளுக்கு ஆதவ் அண்ணாமேல் ஒரு ஈர்ப்பு. ஆனால் நான் இவளை உண்மையாக விரும்பினேன். அதுதான் இரண்டு வீட்டிலும் சொல்லி பல எதிர்ப்புகளுக்கு பிறகு கல்யாணம் பண்ணிகிட்டோம்” என்றான் சாதாரணமாகவே.

அவனிடம் அப்படியொரு பதிலை எதிர்பார்க்காத செவ்வந்தி, “உனக்கு ஜோதி மீது கோபமே வரலயா பிரகாஷ்” என்ற கேள்விக்கு மறுப்பாக தலையசைத்தான்.

“ஏன்” என்றவள் கேட்க, அப்போது செவ்வந்தியிடம் ஏதோ கேட்க வந்த வெற்றியின் காதுகளில் பிரகாசின் பதில் தெளிவாக விழுந்தது.

 “ஒரு பொண்ணை பார்த்தும் மனசுக்குள் வரும் ஈர்ப்புக்கும், உண்மையான காதலுக்கும் வித்தியாசம் இருக்கு இல்லக்கா. அவளுக்கு ஆதவ் மேல் வந்தது கிரேஸ். எனக்கு இவ மேல வந்தது லவ். இரண்டும் வெவ்வேற ஒன்னா போட்டு குழப்பக்கூடாது” என்றான்.

ஏற்கனவே ஜனனி மீது இருப்பது ஈர்ப்பா? காதலா? என்ற கேள்விக்கு விடை தெரியாமல் குழம்பிக்கொண்டிருந்தான் வெற்றி. இப்போது அவனின் பதிலில் அவனுக்கு ஏதோ புரிந்தும் புரியாதது போல இருந்தது. அவளிடம் கேட்க வந்த விஷயத்தை மறந்தவன் சிந்தனையோடு வெளியே கிளம்பிவிட்டான்.

“பரவால்லா கட்டிய மனைவியை தெளிவா புரிஞ்சி வச்சிருக்கீங்க பிரகாஷ்” என்று மனம் திறந்து பாராட்டிவிட்டு அன்றைய வேலைகளில் கவனத்தை திருப்பினர்.

அடுத்தடுத்து நாட்கள் மின்னல் வேகத்தில் சென்று மறைய அதே வீதியில் புதிதாக திறக்கபட்ட கடையைக் கண்டு மற்றவர்களின் மனம் பரிதவித்தது. இதுநாள் வரையில் வேலை இருந்துகொண்டே இருந்ததால் அவர்களுக்கு நிம்மதியாக இருந்தது.

திடீரென்று புதிதாக ஒரு கடை உருவாகவும், ‘நமக்கு வேலை இல்லாமல் போய்விடுமோ’ என்ற சிந்தனையில் மற்றவர்கள் இருக்க செவ்வந்தி எப்போதும் போலவே வளைய வருவதை கவனித்தான் வெற்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!