malar – 17

15f7d6172e1b7ac9947002458563-dc2d66cb

malar – 17

அத்தியாயம் – 17

வெற்றி வீட்டைவிட்டு வெளியே வர அவர்களுக்காக பிரகாஷ் – ஜோதி இருவரும் காரில் அழைத்துக்கொண்டு ரிஜிஸ்டர் ஆபீஸ் சென்றனர். அங்கே ஏற்கனவே அனைத்து ஏற்பாடுகளைத் தயார் நிலையில் இருந்தது.

செவ்வந்தி வருவதற்கு முன்னால் குறிப்பிட்ட இடத்திற்கு வந்து சேர்ந்தனர். அவன் காரைவிட்டு இறங்கியதும் சுற்றிலும் பார்வையை சுழற்றியபடி, ‘இன்னும் அவங்க வரலயா?’ என்ற எண்ணத்துடன் செவ்வந்திக்கு அழைத்தான் வெற்றி.

மறுபக்கம் திரையில் ஒளிர்ந்த எண்ணைக் கண்டு போனை எடுத்த மைதிலி, “அண்ணா நாங்க பக்கத்தில் வந்துட்டோம். கொஞ்சம் பதட்டம் இல்லாமல் மாப்பிள்ளைப் போல கம்பீரமாக இருங்க” என்று சொல்லி போனைக் கட் செய்துவிட்டாள்.

அவளின் குறும்புத்தனம் கண்ட செவ்வந்தி, “நீ ஒருநாள் அவரிடம் நல்லா திட்டு வாங்க போறேன்னு தெரிஞ்சிப் போச்சு” என்று சொல்ல அவளோ அதை இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டாள்.

அதற்குள் ரிஜிஸ்டர் ஆபீஸ் வந்துவிடவே, “உனக்காக மாப்பிள்ளை வைட்டிங் மேடம். சீக்கிரம் இறங்குங்க கல்யாணப்பொண்ணு” என்று சொல்லி தன் கிண்டலைத் தொடர்ந்தாள் மைதிலி.

அவளைத் திருத்தவே முடியாது என்று தோன்ற பதில் பேசாமல் காரைவிட்டு இறங்கிய செவ்வந்தி சுற்றிலும் பார்வையை சுழற்றினாள். தன் போனில் யாரோட தீவிரமாக பேசிக்கொண்டிருந்த வெற்றியைக் கண்டவுடன் முகம் மலர்ந்திட அவனை நோக்கி அடியெடுத்து வைத்தாள்.

அதற்குள், “சீக்கிரம் வாங்க உள்ளே ஆபீசர் கூப்பிடுறாங்க” என்று பிரகாஷ் குரல்கொடுத்தான்.

அப்போதுதான் செவ்வந்தி வந்து இறங்கியதைக் கவனித்தவனின் விழிகளில் ரகசிய மின்னல் மின்னி மறைந்தது. ஆனால் எதற்காக என்ற கேள்விக்கு மட்டும் விடை கிடைக்கவில்லை.  மாலை மற்றும் தாலி என்று அனைத்தையும் எடுத்துக்கொண்டு மற்றவர்கள் ரிஜிஸ்டர் அலுவலகத்தின் உள்ளே சென்றனர்.

தங்கையின் அருகே சென்றவன், “செல்லம்மா இந்த புடவை எப்படி அவங்க கைக்குப் போச்சு” என்றான் ரகசிய குரலில்.

அவனின் முகத்தில் சந்தோசத்தைப் பார்த்தவள், “நான்தான் நேற்று மைதிலியை வீட்டிற்கு வரச்சொல்லி கொடுத்துவிட்டேன். உன்னோட முதல் மாத சம்பளத்தில் வாங்கிய பட்டுப்புடவையில் அண்ணி அப்படியே கண்ணைப் பறிக்கிறாங்க இல்ல” என்று அவனை கேலி செய்யவும் அவள் மறக்கவில்லை.

“நீ சொன்னது என்னவோ உண்மைதான்” என்றவனை அழைத்துக்கொண்டு போய் ரிஜிஸ்டர் ஆபீசர் முன்னே நிறுத்தினான் ராம்.

அவர்கள் கொடுத்த ஆவணங்களை சரிபார்த்தவர், “மாப்பிள்ளை நீங்கதானே? இங்கே ஒரு சைன் போடுங்க” என்று ரிஜிஸ்டரை வெற்றியின் பக்கம் நகர்த்தி பேனாவைக் கொடுத்தார்.

வெற்றி கையெழுத்துப் போட்டு நிமிர செவ்வந்தியிடம், “நீ இங்கே கையெழுத்து போடும்மா” என்றார். அவள் புன்னகை மாறாத முகத்துடன் கையெழுத்து போட்டு நிமிர்ந்தாள்.

அதன்பிறகு சாட்சி கையெழுத்து ராம்மோகன் – சரண்யா இருவரும் போட்டனர். இருவரின் கைகளிலும் மாலையைக் கொடுத்து மாற்றிக் கொள்ள சொன்னார்கள்.

அதற்குப்பின் வெற்றியின் கையில் தாலியைக் கொடுத்து, “செவ்வந்தியின் கழுத்தில் கட்டுங்க” என்றனர்.

வெற்றி கையில் தாலியுடன் செவ்வந்தியைப் பார்த்தான். அவள் வெக்கத்தில் முகம் சிவக்க தலையைக் குனிந்து நின்றவள் கண்ணசைவில் அவனுக்கு சம்மதம் தெரிவித்தாள். மறுக்கணமே அவளின் கழுத்தில் தாலியைக் கட்டி தன்னில் பாதியாக ஏற்றிக் கொண்டான் வெற்றி.

அவன் அவளின் நெற்றியின் வகிட்டில் குங்குமம் வைக்க, “திருமணம் நல்லபடியாக முடிந்தது” என்ற பிரகாஷ் அவர்களை ஜோடியாக நிற்க வைத்து செல்லில் போட்டோ எடுத்தான். மற்றவர்கள் அவர்களுக்கு தங்கள் வாழ்த்தை தெரிவித்தனர்.

சற்றுநேரத்தில் அவர்கள் அங்கிருந்து கிளம்பி ஹோட்டலுக்கு சென்று விருந்தை முடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். ஏற்கனவே மற்றவர்களைக் கவனிக்கும் பொறுப்பை மற்ற ஜோடிகளிடமும் கொடுத்திருந்தால் எந்தவிதமான பிரச்சனையும் எழவில்லை.

புதிதாக திருமணம் ஆகி வீட்டின் முன்னே வந்து நின்றவர்களைப் பக்கத்து வீட்டினர் வேடிக்கைப் பார்த்தனர். “இத்தனை நாளாக ராசி இல்லாதவன் என்று சொன்னவனுக்கு எவன் பொண்ணு கொடுத்தது?” என்று அவர்களின் காதுபடவே பேசுவது இருவரின் காதிலும் விழவே செய்தது.

வெற்றியும் – செவ்வந்தியும் அதையெல்லாம் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை. நமக்காக வாழ்வதுதான் வாழ்க்கை. மற்றவர்கள் பார்வைக்கு பந்தாவாக வாழ்ந்துவிட்டு கடைசியில் உறவுகள் இல்லாமல் தனிமரமாக இருப்பவர்கள் இங்கே ஏராளம். ஆனால் இவர்கள் அதிலிருந்து தனித்து தெரிந்தனர்.

தன் தாய் எப்போதும் தகப்பனுக்கே ஒத்து ஊதுவார் என்று அறிந்திருந்த ஜமுனா,“அண்ணா நீ அண்ணியோடு நில்லு. நான் போய் ஆரத்தி கரைத்து எடுத்துட்டு வரேன்” என்று மைதிலியை அழைத்துக்கொண்டு வீட்டிற்குள் விரைந்தாள்.

அவள் செல்லும் வேகத்தைக் கவனித்த செவ்வந்தி, “நமக்கு கல்யாணமான விஷயம் உங்க வீட்டில் இருப்பவங்களுக்கு தெரியாதா?” என்று வரவழைக்கபட்ட சாதாரணக் குரலில் கேட்டாள்.

அவனோ, “இன்னைக்கு காலையில் தான் அவங்களுக்கு உண்மைத் தெரியும். வீட்டில் செல்லம்மா தவிர வேற யாருக்குமே நம்ம கல்யாணம் பிடிக்கலங்க” என்றான் வெற்றி மெல்லிய குரலில்.

அதைகேட்டு மனம் வலித்தபோது அவள் மெளனமாக நின்றிருந்தாள் செவ்வந்தி. அதே நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்த ஜமுனாவின் கையில் ஆரத்தி தட்டைக் கொடுத்த விமலா, “நீ போய் ஆரத்தி எடு” என்றார் கட்டளையாக.

தாயின் திடீர் மாற்றத்தைக் கண்டு, “அம்மா நீங்கதானா?” என்று நம்பாதக் குரலில் நக்கலோடு கேட்டாள் மகள்.

கணவனின் பேச்சிற்கு மறுப்பேச்சு பேசாத தாயின் செயலைக் கண்டு அவளுக்கு பதட்டம் அதிகரித்தது. இத்தனை வருடமாக தன் மகனென்றும் பாராமல் கணவன் சொன்னதற்கு எல்லாம் சலாம் போட்டு அவனை முடக்கியவர் அவனின் முடிவிற்கு துணை நிற்பது அவளுக்கு அதிசயமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது.

ஆனால் இந்தளவில் அவரின் மாற்றம் பொதுமானதாக இருக்கவே, “சரி” என்பதோடு பேச்சை முடித்துக்கொண்டு வாசலுக்கு விரைந்தாள். அங்கே வெற்றியுடன் நின்றிருந்த செவ்வந்தியைப் பார்த்தவளின் புருவங்கள் கேள்வியாக சுருங்கியது.

செவ்வந்தி வெகு அருகினில் இன்றுதான் விமலா பார்க்கிறார். அவளைப் பார்க்கும்போது ஏனோ அவளின் அண்ணன் முகம் மனதினுள் தோன்றி மறையவே, ‘இல்ல அவங்கதான்..’ என்பதற்கு மேல் யோசிக்க மனமில்லாமல் நின்றுவிட்டார். ஜமுனா இருவரும் ஆர்த்தி எடுத்து வீட்டிற்குள் அனுப்பி வைத்தாள்.

முதல் முறையாக கணவனோடு புகுந்த வீட்டிற்குள் நுழையும்போது தன்னை ஆசிர்வதிக்க தன் தந்தையும், தாயும் இல்லையே என்று மனம் வருந்தினாள். அவளின் மனம் வெற்றிக்கு புரிந்ததோ என்னவோ அவளின் கையை கெட்டியாக பிடித்து வீட்டிற்குள் அழைத்துச் சென்றான்.

வலது காலெடுத்து வைத்து வீட்டிற்குள் நுழைந்த மருமகளிடம், “நீ போய் பூஜை அறையில் விளக்கேற்றி வைம்மா” என்ற தாயைப் பார்த்து வெற்றியும் ஆச்சரியப்பட்டான்.

அவர்களுக்கு விருப்பம் இல்லாமல் நடந்த திருமணம். செவ்வந்தி வீட்டிற்குள் நுழையும்போது பெரிய கழகமே நடக்குமென்று எதிர்பார்த்திருந்தான் வெற்றி. ஆனால் அதற்கு எதிர்மாறாக அமைதியாக தன் மருமகளை ஏற்றுக்கொண்ட தாயை யோசனையோடு பார்த்தான். ஜமுனாவின் பார்வையும் தாயின் மீது சந்தேகமாகவே படிந்தது.

ஆனால் செவ்வந்தி மெளனமாக அவர் சொன்னதை செய்ய பூஜை அறையில் விளக்கேற்றி வைத்துவிட்டு, “வெற்றி” என்றழைக்கும் முன்னரே அவளின் அருகே வந்து நின்றவன் கண்மூடி நின்றான். அவனின் செயலைக் கண்டு சந்தோசம் அடைந்த செவ்வந்தியும் கரம் குப்பி கண்மூடி நின்றாள்.

‘என் செவ்வரளி அவ்வளவு பெரிய ஆபத்தில் இருந்து காப்பாற்றி என்னிடம் கொண்டு வந்து சேர்த்ததற்கு நன்றி கடவுளே’ என்று வேண்டினான்.

‘இத்தனை நாள் ஆஸ்ரமத்தில் வளர்ந்த எனக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தற்கு நன்றி சாமி’ என்று வேண்டிக்கொண்டு கண் திறக்கும்போது அவளின் எதிரே வந்து நின்றவன் குங்குமத்தை எடுத்து அவளின் நெற்றி வகுட்டில் வைத்துவிட்டான். யாருடைய உந்துதலும் இன்றி அவனே அதை செய்ததில் அவளின் மனம் மகிழ்ச்சியடைந்தது.

அதன்பிறகு இருவரும் வெளியே வரவே கையில் பால் பலத்துடன் வந்த விமலா, “ம்ஹும் இங்கே வந்து உட்காருங்க” என்று சொல்லவே வெற்றி பேசுவதற்கு வாயெடுக்க அவனின் கரம்பிடித்து தடுத்த செவ்வந்தி அமைதியாக இருக்கும்படி கண்ணசைவில் சொல்ல அவனும் வேறு வழியில்லாமல் மௌனமானான்.

ஆனால் ஜமுனாவினால் அப்படி இருக்க முடியவில்லை.

“என்னம்மா இன்னைக்கு சூரியன் மேற்கே உதிச்ச மாதிரி இருக்கு. உன் கணவனின் அனுமதி இல்லாமல் நீ எதுவும் செய்ய மாட்டியே? என்ன விஷயம்?” என்றவளின் பார்வை அவரின் மீது சந்தேகமாகவே படிந்து மீண்டது.

“ஜமுனா” என்று செவ்வந்தி அவளை அதட்டினாள்.

சட்டென்று அவரின் பக்கம் திரும்பியவள், “அண்ணி நீங்க வேற என்ன சரின்னு கேட்டுக்குவேன். இவங்களைக் கேள்வி கேட்காதேன்னு சொல்லாதீங்க.. என் அண்ணனை எவ்வளவு கீழ்த்தரமான முறையில் பேசினாங்க தெரியுமா?” என்று எரிச்சலோடு தாயை முறைத்தாள்.

இதுவரை அவளை விளையாட்டு பெண்ணாக பார்த்திருந்த செவ்வந்தி மற்றும் மைதிலிக்கு இந்த ஜமுனா முற்றிலும் புதியவள். எந்த நேரமும் அண்ணனின் பின்னோடு பாசமாக இருக்கும் பெண்ணின் மனபக்குவம் கண்டு மலைத்து நின்றனர்.

இத்தனை நாளாக கணவனின் பேச்சைக்கேட்டு ஆடியதால் பிள்ளைகள் இருவருமே தனக்கு பகையாளி ஆகிபோனத்தை வருத்ததுடன் உணர்ந்தார். திடீரென்று பாசம் கட்டினால் பிள்ளைகள் அதை வேஷமாக பார்ப்பதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆனால் தன் மீது இருக்கும் கோபம் குறைய கொஞ்ச நாளாகலாம் என்ற முடிவிற்கு வந்திருந்தார்.

“ஆமா பேசினேன் இல்லன்னு சொல்லல. ஆனால் கல்யாணம் பண்ணிட்டு வந்த பையனை எப்படியோ போ என்று விட முடியாது. வெற்றியின் திருமண பேச்சு எடுத்ததும் உங்க அப்பாவிற்கு பிடிக்கல. இன்று நம்ம யாரின் விருப்பத்தையும் கேட்காமல் அவன் திருமணம் செய்துட்டு வந்ததை என்னால் தவறாக நினைக்க முடியல. நம்ம ஒருவரை மதிச்சு மதிப்பு கொடுத்தாதான் அது நமக்கு திரும்ப கிடைக்கும்னு புரிஞ்சிட்டேன்” என்றவர் கையில் இருந்த பால் பழத்தை மகளின் கையில் கொடுத்துவிட்டு அங்கிருந்து அகன்றார்.

அவரின் பேச்சில் இருந்த மாற்றத்தை உணர்ந்த ஜமுனா, ‘ஏதோ இந்தளவுக்கு புத்தியில் உரைத்ததே அதுவே பெரிய விஷயம்தான்’ என்று மனதளவில் நினைத்துக்கொண்டு அண்ணனையும், அண்ணியையும் அமர வைத்து பால், பழத்தை கொடுத்தாள்.

அவர்களோடு சிறிதுநேரம் இருந்த மைதிலி, “சரி செவ்வந்தி நான் கிளம்பறேன். இதில் உன் புடவை மற்றது அனைத்தும் இருக்கு” என்று ஒரு ட்ராலியை அவளிடம் கொடுத்துவிட்டு, “உன்னோட திங்க்ஸ் எல்லாமே டைம் கிடைக்கும்போது வந்து எடுத்துக்கோ. உடனே கடைக்கு வரணும்னு கிளம்பி வர வேண்டாம். ஒரு வாரம் ஆகட்டும்” என்றாள்.

“அதுவரை கடையை யார் பார்த்துக்குவா” என்று செவ்வந்தி அவளிடமே கேட்டாள்.

“நீங்க இருவரும் கடைக்கு வரும் வரை நான் பார்த்துக்கறேன்” அழுத்தமாக கூறிவிட்டு கண்ணசைவில் இருவரிடமும் விடைபெற்றாள்.

பெரியவர்கள் இருந்து திருமணம் நடத்தியிருந்தால் சடங்கு சம்பரதாயம் என்று ஏதோவொன்றை சொல்லி அவர்களைப் பிரித்து வைத்திருப்பார்கள். ஆனால் இங்கே அதுக்கெல்லாம் ஆளில்லை.

இருவருக்கும் நடந்தது ரிஜிஸ்டர் மேரேஜ். வீட்டின் தலைவனுக்கு அந்த திருமணம் பிடிக்கவில்லை. தலைவிக்கு விருப்பம் இருந்தபோது முழு மனதோடு கலந்து கொள்ள முடியவில்லை. அடுத்து வீட்டின் கடைக்குட்டி ஜமுனா. அவளுக்கு இந்த சடங்கு, சம்பிரதாயம் பற்றி எதுவுமே தெரியாது.

தன் மனதில் யோசனை தறிகெட்டு ஓடுவதை உணர்ந்து, ‘இப்போ என்ன செய்யறது? இவ வேற ஒரு வாரம் கடை பக்கமே வராதீங்கன்னு சொல்லிட்டுப் போறா’ என்று யோசிக்க தொடங்கினாள்.

அவளின் சிந்தனையைக் கலைக்கும் விதமாக அங்கே வந்த ஜமுனா, “என்னோடு வாங்க அண்ணி ரூமை எல்லாம் சுத்தி காட்டுறேன்” என்று அழைத்தாள். செவ்வந்தி புன்னகையுடன் அவளோடு சென்றுவிட வெற்றி மட்டும் தனித்துவிடப்பட்டான். நரசிம்மன் வந்ததும் வீட்டில் பிரச்சனை அதிகரிக்கும் என்ற நிலை அடுத்து என்ன செய்வதென்று தீவிரமான யோசனையில் இறங்கினான்.

எந்த பிரச்சனை வந்தாலும், ‘செவ்வந்தி பற்றிய உண்மையை மட்டும் சொல்லக்கூடாது’ என்ற முடிவிற்கு வந்தான். அதனால் என்ன பின்விளைவு வந்தாலும் அதை தனியாக நின்று சந்திக்கும் அளவிற்கு அவனிடம் துணிவு இருப்பதால் எதைப்பற்றியும் அவன் கவலைப்படவில்லை.

அதே நேரத்தில் வீட்டின் மற்ற அறைகளை சுற்றிவிட்டு கடையாக ஜமுனாவின் அறைக்குள் நுழைந்த செவ்வந்தி திகைத்துப் போனாள். அவளின் கை வண்ணத்தில் அந்த அறையே தலைகீழாக மாறியிருந்தது.

சின்ன சின்ன கைவினைப் பொருட்களை வெளியே தேடித் பிடித்து வாங்கும் நிறையப்பேரை கண்டிருக்கிறாள். அதெல்லாம் பெண்கள் விரும்ப கூடிய அலங்கார பொருட்கள், பிளாஸ்டிக் பூவில் செய்யப்பட்ட தோரணங்கள் மற்றும் அழகான பெயிண்டிங் கொண்ட பூ ஜாடிகள் என்று ஏகப்பட்டப் பொருட்கள் அவளின் அறையில் இருப்பதை கண்டு பிரம்மித்துப் போனாள்.

“ஜமுனா இதெல்லாம் நீயே செய்ததா?” என்று ஆச்சர்யத்துடன் அவற்றைத் தொட்டுப் பார்த்தாள்.

குழந்தை போன்ற குதுகலத்துடன், “ஆமா அண்ணி.. எனக்கு இதில் எல்லாம் இன்டரஸ்ட் அதிகம். அண்ணா நான் என்ன கேட்டாலும் வாங்கி கொடுத்துவிடுவான். அதில் செய்ததுதான்.. நல்லா இருக்கா அண்ணி” கண்ணில் எதிர்பார்ப்பைத் தேக்கி கேட்டாள்.

“எல்லாமே சூப்பர்.. இப்போ மார்கெட்டில் இல்லாத பல புதிய டிசைன்ஸ் உன்னிடம் இருக்கு.. நிஜமாவே உன் திறமையைப் பார்த்து ஆச்சர்யப்படாமல் இருக்க முடியல ஜமுனா” என்று மனம் திறந்து பாராட்டினாள்.

பிறகு இருவரும் அவர்களின் அறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். ஜமுனாவின் கைவினைப்பொருட்களை எந்தவழியில் மக்களுக்கு அறிமுகப்படுத்தலாம் என்று மனதளவில் திட்டம் தீட்ட தொடங்கினாள்.

ஒருவரின் திறமையை மனம் திறந்து பாராட்டுவது மட்டும் இன்றி அதை வைத்து அவர்களின் திறமையை மற்றவர்களுக்கு தெரிய வைப்பது என்று அதிகம் யோசிப்பாள் செவ்வந்தி. அதே மாதிரிதான் ஜமுனாவின் கைவினைப்பொருட்களை வெளி உலகிற்கு கொண்டு வர நினைத்தாள்.

நேரம் சென்றதே தெரியாமல் பேசிக் கொண்டிருந்தவர்கள் மாலை எழுந்து வெளியே வந்தனர். வெற்றி அவனின் அறையில் இருந்ததால் விளக்கை மீண்டும் ஏற்றிவிட்டு ஜமுனாவின் அறையில் குளித்து அங்கேயே சிறிதுநேரம் ஓய்வெடுத்தாள்.

பகல் பொழுது சென்று இரவும் வந்தது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!