Malar – 18

125494183_2782475112074669_6357658000275875444_n-8e722638

Malar – 18

இரவு வானில் தன் நட்சத்திர பட்டாளத்துடன் தன் பயணத்தைத் தொடங்கியது நிலவு. எந்த நேரமும் கலகலப்பாக சுற்றி வரும் நிலவோடு சண்டையிடும் நோக்கத்துடன் கார்மேகங்கள் அவளின் வழியை மறைத்தது. தன்னை மறைத்து படர்ந்த பொதி மேகங்களோடு சண்டையிட்டு இடையிடையே முகம் காட்டினாள்.

தன் அண்ணியை அலங்கரிக்க அருகே சென்ற ஜமுனாவைத் தடுத்து, “எனக்கு இந்த அலங்காரம் எல்லாம் நீ பண்ண வேண்டாம். உனக்கு இன்னும் அந்த வயதாகவில்லை. அண்ணி சொன்னால் புரிஞ்சுகோடா” என்றாள் செவ்வந்தி புன்னகையுடன்.

திருமணம் என்றவுடன் ஆயிரம் கனவு காணும் பெண்களை அவளே நேரில் கண்டிருக்கிறாள். அந்த மாதிரிதான் தன் அண்ணியும் என்றவள் நினைக்கும்போது, ‘நான் அப்படியில்லை’ என்று அவளுக்கு புரிய வைக்கும் விதமாக இருந்தது செவ்வந்தியின் பதில்.

“ஏன் அண்ணி இப்படி சொல்றீங்க? இன்னைக்கு உங்களுக்கு ரொம்ப ஸ்பெஷல் நாள்தானே” என்று சிணுங்கலோடு கேட்டாள்.

வீட்டில் பெரியவர்கள் இருந்து முறையுடன் செய்ய வேண்டிய விஷயத்தை சின்னப்பெண் செய்வதா? என்ற எண்ணம் மனதிற்குள் எழுந்தது. அதே நேரத்தில் மனதில் அவனின் முகம் தோன்றி மறைந்தது. ‘தன்னுடையவன், தனக்கு மட்டுமே சொந்தமானவன்’ என்ற எண்ணமே தித்திக்க வைத்தது.

“உங்க அண்ணன் எனக்கு முதலில் இருந்தே நல்ல தெரியுமே.. அப்புறம் எதுக்கு இந்த தேவையில்லாத பார்மாலிட்டிஸ்” என்று பேச்சை திசை திருப்பினாள்.

“ஆனால்” என்று இழுத்த ஜமுனாவை அருகே அமர வைத்து, “நான் சொன்னால் அதில் ஒரு அர்த்தம் இருக்கும்னு நம்புவதாக இருந்தால் என்னை எதிர்த்துக் கேள்வி கேட்காமல் இருடா” என்றாள் சிரிப்புடன்.

அடுத்த நொடியே தன் தயக்கத்தை விட்டு வெளியே வந்தவள், “இவ்வளவு பொறுமையாக சொல்லி நான் கேட்காமல் இருந்தால் அது சரியில்ல” என்று குறும்புடன் கண்சிமிட்டிவிட்டு அண்ணனின் அறைக்கு அழைத்து சென்றாள் ஜமுனா.

அவளை பாதியில் அனுப்பிவிட்டு வெற்றியின் அறையின் முன்னே வந்து நின்றாள் செவ்வந்தி. முதல் முறையாக திருமணமாகி கணவனின் அறைக்கு செல்லும்போது அவளையும் அறியாமல் பதட்டம் அதிகரிக்கவே செய்தது. அவள் வெளியே சாதாரணமாக இருப்பது போல தன்னைக் காட்டிக் கொண்டாலும் அவளின் முகம் வெளிறிப்போக சிந்தனையோடு அங்கேயே நின்றாள்.

இரவு நேரங்களில் இதுவரை அவள் தூக்க மாத்திரை போடாமல் தூங்கியதே கிடையாது. அந்த நிகழ்வு அவளின் ஆழ்மனதில் பதிந்து போனது. அதன்பிறகு ஸ்கூல் மற்றும் கல்லூரி நாட்கள் கூட அமைதியாகத்தான் சென்றது. ஆனால் வேலைக்கு சென்று வர தொடங்கியதில் இருந்து தனிமையை உணர தொடங்கினாள். தனக்கு மட்டும் ஏன் இப்படி நடந்ததென்று அவள் நினைக்கும்போது ஆழ்மனதில் பதிந்த நிகழ்வுகள் மெல்ல கனவாக வரத் தொடங்கியது.

கனவுக்கும், நிஜத்திற்கும் இருக்கும் இடைவெளியில் செவ்வந்தியின் மனம் ஊஞ்சலாடத் தொடங்கியது. இரவு நேரங்களில் கனவு என்பதை மறந்து வாய்விட்டு அலறி எழுந்து அமர தொடங்கினாள். ஒரு முறை மருத்துவரிடம் சென்று செக் செய்துவிட்டு அதன்பிறகு தூக்க மாத்திரைகளை எடுக்க தொடங்கியிருந்தாள்.

கொஞ்சநாளில் எல்லாம் சரியாகும் என்று நினைத்தற்கு மாறாக தூக்க மாத்திரை இல்லாமல் அவளால் தூங்க முடியாது என்ற நிலைக்கு அவளைக் கொண்டுவந்து நிறுத்திவிட்டது அந்த கனவு!

தனக்கு இப்படியொரு பாதிப்பு இருப்பதை அவள் வெளிப்படையாக வெற்றியிடம் சொல்லாமல் மௌனமாக இருந்துவிடவே அதுவும் சேர்ந்து மனதை உறுத்த தொடங்கிவிட்டது. மற்ற நாட்கள் போலவே இன்று தன்னை அறியாமல் அலறிவிட்டால் என்னவாகுமோ என்ற சிந்தனையில் அறையின் வாசலிலேயே நின்றுவிட்டாள்.

செவ்வந்தி அறைக்குள் நுழையாமல் வாசலில் நிற்பதைக் கண்ட வெற்றி, “என்னங்க அங்கே நின்னுட்டிங்க..” என்ற கேள்வியுடன் எழுந்து அவளின் அருகே வந்தான்.

அவனின் குரல்கேட்டு திடுக்கிட்டு நிமிர்ந்தவள், “இல்ல வெற்றி ஏதோ சிந்தனை அதுதான் அப்படியே” கோர்வையாக பேச முடியாமல் தடுமாறினாள்.

அவன் அருகே வரும் முன்னே தன்னை சமாளித்துக்கொண்டு அவனின் அறைக்குள் நுழைந்தாள் செவ்வந்தி.

அவன் கதவைத் தாழிட்டு திரும்பி செவ்வந்தியைப் பார்த்து, “என்னங்க சிந்தனை ரொம்ப பலமாக இருக்கு. என்னிடம் சொன்னால் நானும் என்னால் முடிந்த நியூ ஐடியா கொடுப்பேன் இல்ல” என்றான் குறுஞ்சிரிப்புடன்.

செவ்வந்தி கையோடு கொண்டு வந்த பாலை ஓரமாக வைத்துவிட்டு, “நான் எதையும் யோசிக்கல. திடீரென்று உங்க அறைக்கு வருவதற்கு ஒரு தயக்கம்.. அதோடு கொஞ்சம் பயமாகவும் இருந்தது..” மனதினுள் ஒன்றை வைத்துச் சொல்ல அதை மாற்றிப் புரிந்து கொண்டான் வெற்றி.

சட்டென்று வாய்விட்டு சிரித்தவனை அவள் காரணம் புரியாமல் கேள்வியாக நோக்கிட, “நான் என்ன சிங்கமா? இல்ல புலியா? உங்களைக் கடிச்சு குதறிவிடுவேன் என்று சொல்வதற்கு?” என்று கேட்கவே அவளின் முகம் சற்று தெளிவடைந்தது.

அவளின் அருகே இயல்பாக வந்து அமர்ந்தவன், “நான் எப்பவும்போல தாங்க இருக்கேன். என்ன முதலில் உங்க கடையில் 50% பார்ட்னர். இப்போ லைப் பார்ட்னர். சோ நீங்க எப்போதும்போல எதார்த்தமாக இருங்க. அதுதான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” என்றான்.

மனதின் படபடப்பு மெல்ல குறைய, “ஷ்.. என்னன்னு தெரியல வெற்றி. என்னையும் அறியாமல் ஒரு பதட்டம் வந்துடுச்சு” என்றாள் மெல்லிய குரலில்.

அவளின் வலது கையோடு தன் இடது கையைக் கோர்த்து, “ஒரு பத்து நிமிஷம் இப்படியே இருந்தால் பதட்டம் குறைந்துவிடும்” என்றவனின் கரங்களின் அழுத்தம் அவளுக்குள் அமைதியைக் கொடுத்தது. செவ்வந்தியின் பார்வையோடு தன் பார்வையை கலக்கவிட்டான் வெற்றி.

அவனின் பார்வை மெல்ல அவளின் மனதினுள் ஊடுருவிச் சென்று, ‘உனக்காக நான் இருக்கிறேன்’ என்ற எண்ணத்தை அவளின் மனதில் பதிய வைத்தது.  இருவருக்கும் இடையே அழகான மௌனம் நிலவியது.

அத்தோடு இரவு நேரம் நிசப்தமும் சேரவே ரம்மியமாக மாறியது. நொடிகள் நிமிடங்களாக மாறிக் கரைய தொடங்கியது. எங்கிருந்தோ கேட்ட காலிங்பெல் சத்தம்கேட்டு தன்னை மீட்டுக்கொண்ட செவ்வந்தியிடம் விடைபெற்று சென்றிருந்தது தயக்கம்.

“நாளைக்கு காலையில் கோவிலுக்குப் போகணும்னு சொல்வாங்க. அதனால் எப்படியும் சீக்கிரம் எழுந்திரிக்கணும். அதனால் வாங்க தூங்கலாம்” என்றவன் சொல்ல அவள் சரியென்று தலையசைத்துவிட்டு கட்டிலில் ஒருபுறம் படுக்க, வெற்றி மறுபுறம் வந்து அவளுக்கு முதுகாட்டி படுத்துவிட்டான்.

சிறிதுநேரத்தில் சீரான மூச்சுக்காற்று தன்னவளிடம் இருந்து வருவதைக் கவனித்த வெற்றி அவளின் பக்கம் திரும்பிப் படுத்தான். அவளின் பளிங்கு முகத்தில் தோன்றி மறையும் கலவையான உணர்வுகளைப் படிக்க முடியாமல் தடுமாறினான்.

அப்போது அவள் புருவம் சுளித்து விழிக்கும் முன்னரே, “செவ்வரளி மாமா உன்னைவிட்டு எங்கையும் போகல. உன் பக்கத்திலேயே இருக்கேன்” புருவத்தை வருடியது அவனின் விரல்கள்.

அவனின் குரல் அவளின் செவிகளை எட்டியதோ என்னவோ, “இத்தனை நாளாக என்னைவிட்டு எப்படி இருந்த மாமா? இப்போ நான் இருக்கேன்னு சொல்ற? அன்னைக்கு ஊருக்கு.. ஊருக்குப்..” என்று குழந்தைபோல உளற தொடங்கினாள்.

செவ்வந்தியின் வாக்கியத்தின் பின்னோடு கொட்டிக் கிடந்த வலியை அவனால் உணர முடிந்தது. தன் வீட்டில் இருப்பவர்கள் தன்னை ஒதிக்கி வைத்தபோதே அவன் எந்தளவிற்கு வலியை அனுபவித்தான் என்று அவனுக்கு மட்டுமே தெரியும். அவளின் பேச்சில் அவனையும் அறியாமல் அந்த நாளின் தாக்கம் வந்து போனது.

அவன் செவ்வந்தியை இழுத்து மார்புடன் சேர்த்து அணைத்துக்கொண்டு, “அது நடந்து முடிஞ்சுப்போச்சு செவ்வரளி. அதை மனதில் நினைத்து மறுக்காதே கண்ணம்மா. உன்னை என்னால் இப்படி பார்க்க முடியல” என்றான் புலம்பலோடு.

அவன் சொன்னவுடன் சரியென தலையசைத்தவள், “இனி என்னைவிட்டுப் போகாதே வேந்தன் மாமா” என்றவளின் தலையை வருடிவிட்டவன், “இல்ல உன்னைவிட்டு இனி எங்குமே போக மாட்டேன்” என்றான் உறுதியான குரலில்!

 மறுநொடியே செவ்வந்தி ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுவிட்டாள். அவள் கனவு கண்டால் புலம்பும் விஷயம் அன்று வீட்டிற்கு சென்றபோதே அவனுக்கு தெரியும் என்பதால் அவளுக்கு ஆறுதலும், நம்பிக்கையும் கொடுக்கும் விதமாக பேசினான். ஆனால் தன்னவள் அதற்காக தூக்க மாத்திரை எடுத்துக்கொள்ளும் விஷயம் அவனுக்கு தெரியாது.

அவனின் நெஞ்சத்தை மஞ்சமாக்கி அவள் உறங்கிவிட அவளை சுமந்த வெற்றியின் மனதில் பாரம் அதிகரிக்கவே செய்தது. செவ்வந்தியை நினைத்து வெகுநேரம் தூங்காமல் இருந்தவன் விடியலின் போது மெல்ல உறங்கிப் போனான்.

‘கூ.. கூ..’ என்று கூவிய குயிலின் சத்தத்துடன் சேர்த்து சூரியனின் வெளிச்சம் முகத்தில் விழவே, ‘ஐயோ பொழுது விடிந்துவிட்டதா?’ என்று பதறியடித்து எழுந்து செல்ல நினைத்தாள்.

தன்னை யாரோ இருக்கியணைத்து இருப்பதை உணர்ந்தவள் சட்டென்று நிமிர்ந்து பார்க்க வெற்றியோ ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதைக் கண்டாள்.

இரவு முழுவதும் அவனின் கையணைப்பில் தூங்கியதை நினைத்து, ‘நான் எப்போது இவரின் அருகே வந்து படுத்தேன்’ என்று குழப்பத்துடன் நினைக்க தலைவலி வின் வின் என்றது.

“என்னங்க கையை எடுங்க. நான் குளிச்சிட்டு கீழே போகணும்” என்றவள் வெற்றியை மெல்ல எழுப்ப முயற்சித்தாள்.

“இத்தனை வருடமும் ஓடிட்டுத்தானே இருக்கிற? அதுக்குள் என்ன அவசரம்? நீ எந்த வேலையும் செய்ய வேண்டாம். முதலில் படுத்துத் தூங்கு. வீட்டில் யாராவதுக் கேட்டால் நான் வந்து பதில் சொல்றேன்” என்றவனின் அணைப்பு மெல்ல இறுகியது.

தன்னை ஒருமையில் பேசியதோடு நில்லாமல் தனக்காக வீட்டில் இருப்பவர்களிடம் பேசுகிறேன் என்றவனை வியப்புடன் விழி விரிய நோக்கினாள் செவ்வந்தி. அவனின் பார்வையை அவன் உணர்ந்தானோ என்னவோ?

“சும்மா கண்ணை விரித்து அப்படி பார்க்காதே! ஒரு பார்வையில் மனுசனின் வாயை அடைக்கும் வித்தையை உனக்கு யார்தான் கற்றுக் கொடுத்தாங்களோ?” என்ற வெற்றி அவளை அணைத்தபடியே உறங்கினான்.

அவன் பேசுவதைக்கேட்டு செவ்வந்திக்கு சிரிப்பாக வரவே, ‘வார்த்தைக்கு வார்த்தை மரியாதை தூள் பறக்குது?!’ என்றவள் அவனின் அணைப்பில் சற்று நேரம் மெளனமாக இருந்தாள்.

சிறிதுநேரம் சென்றபிறகு தன் கைவளைவில் இருந்தவளை விடுவித்துவிட்டு அவன் மறுப்பக்கம் திரும்பிப் படுத்து தூக்கத்தை தொடரவே, ‘ம்ஹும் தூக்கத்தில் பேசறாரு’ தனக்குள் நினைத்தபடி எழுந்து குளியலறைக்குள் புகுந்தாள்.

அவள் குளித்துவிட்டு சமையலறைக்கு செல்ல நினைத்து வெளியே வரும்போது நரசிம்மன் ஹாலில் அமர்ந்து காபி குடித்துக் கொண்டிருந்தார். அவரின் அருகே அமர்ந்திருந்த விமலா ஆழ்ந்த சிந்தனையில் இருந்தாள்.

அப்போதுதான் ஹாலில் நின்றிருந்த அண்ணியைக் கண்டவுடன், “என்ன அண்ணி இப்போதான் தூக்கம் தெளிந்ததா?” என்று கண்சிமிட்டளோடு கேட்டு செவ்வந்தியின் முகத்தை செவ்வானமாக சிவக்க வைத்தாள்.

அவளின் பின்னோடு குளித்துவிட்டு வெளியே வந்த வெற்றி, “அவ காலையில் சீக்கிரமே எழுந்து விட்டாள் செல்லம்மா. ஆனால் ஹாலுக்கு வந்தால் தேவை இல்லாத சிலரிடம் அவள் ஏச்சும், பேச்சும் வாங்க வேண்டி இருக்குமே அதன் உள்ளேயே இருன்னு சொன்னேன்” என்றவனின் பேச்சு நரசிம்மனின் கோபத்தை அதிகரிக்க செய்தது.

ஜமுனா தன் அண்ணனுக்கு, ‘சபாஷ்’ போட, தன் மகனின் வாழ்க்கையை கேள்வி குறியாக மாறியதற்கு தானும் ஒரு காரணம் என்று நினைத்த விமலாவின் மனம் குற்ற உணர்வில் தவித்தது.

அவர்களின் குடும்ப பின்னணி அறியாத செவ்வந்தி, “அவர் அப்படியெல்லாம் யாரையும் சொல்லல. நான்தான் எழுந்திருக்க லேட் ஆகிடுச்சு. என்னைத் தப்பிக்க வைக்க அவரே வேணும்னு பொய் சொல்றாரு” என்றவள் உண்மையைப் போட்டு உடைக்க நரசிம்மன் மனைவியிடம் கண்ஜாடை காட்டிவிட்டு ஏதோ சொல்ல வாயெடுத்தார்.

அதற்குள், “இதைவைத்து அவன் ‘பொண்டாட்டிக்கு ஜிங் ஜக்’ போட தொடங்கிட்டான் என்று நினைக்காதீங்க. அப்படி போட வேண்டிய அவசியம் இருந்திருந்தால் அதை என்னைக்கோ செய்திருப்பார். ஒருத்தர் அன்பை தேவையில்லாமல் தவறாக விமர்சிக்க வேண்டாம்” என்று நாசுக்காக சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டாள் செவ்வந்தி.

‘தன் கணவனை காட்டிக் கொடுக்கிறாளே?!’ என்று விமலா யோசிக்கும்போதே அவள் பதிலடி கொடுத்துவிட்டு சென்றுவிட யோசிக்க தொடங்கினார் விமலா. அதே நேரத்தில் நேற்று மருமகளாக வீட்டிற்குள் நுழைந்தவள் தன்னையே எடுத்தெறிந்து பேசி விட்டாளே என்ற எண்ணவோட்டத்தில் மெளனமாக இருந்தார்.

 ஏற்கனவே, வெற்றி யாரிடமும் சொல்லாமல் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்த விஷயம் அனைத்தும் அவரின் தோளில் நண்பர்களுக்கு தெரிய வரவே நரசிம்மனிடம் போன் போட்டு துக்கம் விசாரிப்பதை போல பேசியதைக்கேட்டு எரிச்சலோடு வீடு வந்து சேர்ந்த கணவனை விமலாதான் சமாதானம் செய்தார்.

இப்போது அத்தோடு இந்த பிரச்சனையும் சேர்ந்தது.

செவ்வந்தி பேசியதில் தவறு இல்லையென்று உணர்ந்த ஜமுனா, “இதுதான் எங்க அண்ணி. தன் மனதில் நினைப்பதை பட்டென்று பேசிவிடுவாங்க. அவங்களுக்குள் உள்ளுக்குள் வன்மத்தை வைத்து வெளி வேஷம் போட தெரியாது” என்று தன் பங்கிற்கு காதுபடவே சத்தமாக கூறிவிட்டு தன் வேலையைத் தொடர்ந்தாள்.

செவ்வந்தி பட்டென்று உண்மையைப் போட்டு உடைத்தது அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் அடுத்த நொடியே, ‘தன் கணவன் அப்படியெல்ல’ என்று புரியும் விதமாக கூறிவிட்டு கடந்து சென்றவளைப் பின் தொடர்ந்தது அவனின் பார்வை.

வெற்றி சோபாவில் வந்து அமர, “நீ நகரு ஜமுனா. இன்னைக்கு நான் சமைக்கிறேன். நீங்க இருவரும் காபியைக் குடிச்சிட்டு இன்னைக்கு நியூஸ் பேப்பரை புரட்டிட்டு உட்கார்ந்திருங்க. நான் சமையலை முடிச்சிட்டு கூப்பிடுறேன்” என்றவள் சமையலறையில் எந்த பொருள் எங்கிருக்கிறது என்று கேட்டுக்கொண்டு தன் வேலையைத் தொடர்ந்தாள்.

ஜமுனாவோ ஹாலில் இருந்த அண்ணனுக்கு காபியைக் கொடுத்துவிட்டு, “என்னண்ணா வேகமாக குளித்துவிட்டு வந்த மாதிரி தெரியுது” என்று அண்ணனை வேண்டுமென்றே வம்பிற்கு இழுத்தாள்.

அவன் சிரிப்பைத் தன் பதிலாக கொடுக்க, “பொண்டாட்டி சம்பாரிக்கிற இல்ல அதன் சார் சப்போர்ட் பண்றாரு” என்றார் நக்கலோடு.

“அந்த கடையில் நானும் 50 % பார்ட்னர். இப்போ அவ எனக்கு லைப் பார்ட்னர். யாரென்று தெரியாதபோதே என்மேல் முழு நம்பிக்கை வைத்த பெண். இன்னைக்கு என்னையே சகலமும்னு நம்பி வந்திருக்கும்போது அவளுக்கு சப்போர்ட் பண்ணாமல் வேற யாருக்கு பண்றதுப்பா” ஏதும் அறியாத குழந்தைபோல கேட்ட மகனை அனுபவஸ்தர் ஆன நரசிம்மன் முறைத்தார்.

வெற்றியின் பதிலடி மற்ற மூவருக்கும் சிரிப்பை வரவழைத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!