malar – 22

aaaaaaa-ddeebc66

malar – 22

அத்தியாயம் – 22

வேதாசலம் எழுதிய உயிலின் படி வெற்றியை எதுவும் செய்ய முடியாது. அதே நேரத்தில் ஜெகதீஸ் சொத்துகளை தன் வசம் கொண்டு வர கருவியாக இருப்பது தன் மகன் மட்டுமே என்பதால் நரசிம்மன் அமைதியாகிவிட்டார்.

தன் வசம் ஒப்படைக்கபட்ட சொத்துகளை நிர்வாகம் செய்யும் பொறுப்பை அவரே ஏற்றுக் கொண்டார். சங்கீதாவின் வயிற்றில் குழந்தை வளர தொடங்கிய அதே சமயம் நரசிம்மன் கொஞ்சம் கொஞ்சமாக சொத்துக்களை அழிக்க தொடங்கியிருந்தார். ஒருப்பக்கம் சீட்டாட்டம், குடி, ஆடம்பரமான வாழ்க்கை என்று அவரின் பேராசையும் அதற்கொரு காரணமாகவே அமைந்தது.

சங்கீதாவிற்கு சீமந்தம் செய்து அழகு பார்த்த கையோடு, தன் மகளை சரியான நபரின் கையில் ஒப்படைக்கவில்லையோ என்ற கவலையிலேயே படுக்கையில் விழுந்த வேதாசலம் இறந்துவிட்டார்.

மொத்த குடும்பமும் சோகத்தில் மூழ்கியிருந்த நேரத்தில் சங்கீதாவிற்கு பெண்குழந்தை பிறந்தது. பூக்குவியல் போல இருந்தவளை முதலில் வெற்றியின் கையில் தான் கொடுக்க, “மாமா பாப்பா ரொம்ப அழகா இருக்கிற” என்று குழந்தையின் நெற்றியில் இதழ் பதித்தான்.

அன்றிலிருந்து வெற்றி முழு நேரமும் தன்னுடைய மாமன் மகளின் அருகிலேயே இருந்தான். அவளின் செல்ல சிணுங்கல் கூட அவனுக்கு சங்கீதம் தான். அந்த குட்டி தேவதை அவனின் உலகமாக மாறிப் போனாள்.

ஜெகதீஸின் குழந்தையைப் பார்க்க வந்த நரசிம்மனின் பார்வையோ தன் மகனின் மீதே நிலைத்தது. வெற்றி குழந்தையை மடியில் வைத்து கிண்கிணி வைத்து விளையாட்டு காட்டிக் கொண்டிருந்தான்.

அதை கண்டவுடன், “என் பையனை அவங்க பிள்ளைக்கு வேலை செய்ய வச்சிருக்காங்க” என்று மனைவியின் காதைக் கடித்தார். விமலா அதை பெரிதாக எடுத்துகொள்ளாமல் இருக்கவே அவருக்கு சுர்ரென்று கோபம் வந்தது.

“வெற்றி வா நம்ம வீட்டுக்குப் போலாம்” என்றவர் வலுக்கட்டாயமாக அவனின் கையைப் பிடித்து இழுத்தார்.

முதலில் வரவில்லை என்று வாய் வார்த்தையாக மறுத்தவன், “அப்பா எனக்கு அங்கே வர பிடிக்கல” என்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்துவிடவே அவரும் பல்லைக்கடித்து பொறுமையுடன் மகனை அங்கேயே விட்டுச் சென்றார்.

நரசிம்மனின் செயல்களில் நாளுக்கு நாள் வேறுப்பாட்டை உணர்ந்த ஜெகதீஸ் தன் தங்கையின் வாழ்வை மனதில் கொண்டு மௌனம் காத்தார். குழந்தை ஒரு மாதம் சென்றவுடன், “செவ்வந்தி” என்று பெயர் வைத்து தொட்டிலில் போட்டனர். அனைவருக்கும் அவள் செவ்வந்தியாக இருந்தாலும் வெற்றிக்கு மட்டும் செவ்வரளி.

தன் பேத்தியிடம் அவன் காட்டும் அன்பு மற்றும் அக்கறையைக் கண்ட வாசுகி, “வெற்றி பெரியவன் ஆனதும் உன் மகளைக் கல்யாணம் செய்யறேன்னு சொன்னால் யோசிக்காமல் அவனுடைய விருப்பத்தை நிறைவேற்றி வை” என்ற தாயை ஜெகதீஸ் கேள்வியாக நோக்கினார்.

“ஏன் அத்தை உங்க பேரன் உங்களுக்கு அவ்வளவு ஸ்பெஷலா?” சங்கீதா வேண்டுமென்றே தன் மாமியாரை வம்பிற்கு இழுத்தாள்.

மருமகளின் பேச்சில் குறும்புத்தனம் உணர்ந்தவர், “உன் மகளோட செல்ல சினுங்களுக்கே உங்களை எல்லாம் ஒரு வழி செய்கிறான். இதில் நாளைக்கே அவளுக்கு வேறொரு இடத்தில மாப்பிள்ளை பார்த்தால் உங்க நிலையை யோசிச்சுகோங்க” என்றார் குறுஞ்சிரிப்புடன்.

அவரின் வார்த்தைகளில் பொதிந்திருக்கும் அர்த்தத்தை உணர்ந்த ஜெகதீஸ், “என் மருமகனுக்கு இல்லாத உரிமையாம்மா? அவனுக்கு செவ்வந்தியை பிடிச்சிருந்தால் உடனே சரின்னு சொல்வது நானாகத் தான் இருப்பேன்.” என்றார்.

வாசுகியின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாக, வெற்றி பள்ளிக்கூடம் செல்ல, செவ்வந்தியும் தளிர் நடை போட துவங்கினாள். ஜெகதீஸ் – சங்கீதாவும் அவரை அக்கறையுடன் கவனித்துக் கொள்ள துவங்கினர்.

அந்த நேரத்தில் விமலா கருவுற்றாள். வீட்டில் இருந்த அனைவருக்கும் எல்லையில்லா சந்தோசம். வெற்றியோ தங்கை பிறக்க போகிறாள் என்று ஆர்பரிக்க தொடங்கிவிட்டான். நரசிம்மனின் குறுக்கு புத்தியால் அவர் வசம் ஒப்படைக்கபட்ட சொத்துகளை முழுவதும் கரைந்து கடைசியில் கடனாளியாக மாறினார்.

அந்த நேரத்தில் விமலாவிற்கு பெண் குழந்தை பிறந்தது. தன்னுடைய தவறால் மனையாள் அனுபவிக்கும் கஷ்டம் உணராத நரசிம்மன் வேறு வழியில் திட்டம் தீட்டி ஜெகதீஸ் வசமிருக்கும் சொத்தை வாங்க முயற்சித்தார்.

தன் மனைவியிடம், “என்கிட்ட ஒப்படைத்த சொத்தெல்லாம் வீணாகப் போகும்படி பண்ணிட்டேன் விமலா.  நீ உன் அண்ணனிடம் பேசி கொஞ்சம் சொத்தை தர சொல்கிறாயா?” என்று பாவமாகக் கேட்க விமலாவின் மனம் இளகியது.  கணவனின் மீது கொண்ட காதல் அவரின் கண்ணை மறைத்தது.

அண்ணனைத் தேடிச்  சென்று அவள் விஷயத்தைப் பகிர, “உன் கணவன்  என்னை நம்பாமல் அப்பாவிடம் பேசி உன் சொத்தை சரிபாகமாக பிரித்து வாங்கிட்டார். இப்போ என்னுடைய சொத்தையும் கொடுன்னா என்ன அர்த்தம்? எனக்கு நீ தங்கச்சிதான் இல்லன்னு சொல்லல. அதுக்காக என் குடும்பத்தைப் பற்றியும் நான் யோசிக்கணும். நான் உனக்கு செய்ய வேண்டிய கடமையிலிருந்து எள்ளளவும் தவற மாட்டேன். ஆனால் நீ கேட்பதை என்னால் செய்ய முடியாது” பட்டென்று முகத்தில் அடித்தாற்போல பதில் கொடுத்துவிட்டார்.

விமலாவிற்கு அண்ணனின் பக்கமிருக்கும் நியாயம் புரியவே, “அப்போ என் மகனை என்னோட அனுப்பிடுங்க அண்ணா. அவன் எதுக்கு உங்களுக்கு பாரமாக இருக்கான். கஷ்டமோ நஷ்டமோ நாங்களே அவனை வளர்த்திக் கொள்கிறோம்” என்றாள்.

“நீங்க இப்போ இருக்கும் நிலையில் அவனுக்கு ஸ்கூல் பீஸ் கட்டி படிக்க வைக்க முடியாது விமலா. அதனால் அவனை உங்களோடு அனுப்ப முடியாது. அவன் பெரியவன் ஆனதும் அம்மா, அம்மாவிடம் போறேன்னு சொன்னால் கண்டிப்பா அனுப்பி வைக்கிறேன்” பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு நகர்ந்தார்.

விமலா வெறும் கையோடு வீடு வரவே அங்கே நடந்ததை ஓரளவு யூகித்து அறிந்த நரசிம்மன், ‘என்னை இப்படி கஷ்டப்பட வச்சிட்ட இல்ல. உன்னை அவ்வளவு சீக்கிரம் சும்மா விடமாட்டேன்’ என்று மனதிற்குள் கறுவினான்.

அவர் செய்த தவறை உணரும் நிலையில் அவரில்லை. கோபமும், பேராசை அனைத்தும் அவரின் கண்ணை மறைக்கவே பொய் முகமூடி போட்டுக்கொண்டு காலம் வரும்வரை பொறுமையாக காத்திருக்க முடிவெடுத்தார். வெற்றி அவர்களின் வசமிருப்பது நன்மைக்கே என்று நினைத்தார்.

வெற்றியை கருவியாக கொண்டு ஜெகதீஸ் சொத்துகளை அடைய நினைத்தார். ஆனால் குழந்தைகளின் மனதில் தானாக விஷச்செடி வேர் விடுவதில்லை. அவன் ஜெகதீஸ் நிழலில் வளர்ந்ததால் கொஞ்சம் கொஞ்சமாக அவரிடம் இருக்கும் நற்பண்புகளை கற்றுக்கொள்ள தொடங்கினான்.

இந்நிலையில் திடீரென்று வாசுகி ஹார்ட் அட்டாக்கில் இறந்துவிட்டார். அது மற்றொரு பேரிடியாக அமையவே அதிலிருந்து பிள்ளைகளை மீட்டெடுத்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினார்.

வருடங்கள் உருண்டோடியது.

அன்று விடுமுறை என்பதால் சிறியவர்கள்  இருவரும் தோட்டத்தில் ஓடிபிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர். எட்டு வயது செவ்வந்தி பன்னிரண்டு வயதான வெற்றியைப் பிடிக்க அவனின் பின்னோடு ஓடிக் கொண்டிருந்தாள்.

“என்னை உன்னால் பிடிக்க முடியாது செவ்வரளி” என்றான் சிரிப்புடன் அவளின் கைகளுக்கு அகபடாமல் ஓடினான் வெற்றி.

“மாமா என்னை அப்படி கூப்பிடாதே. எனக்கு அந்த பெயர் சொன்னால் பிடிக்கல” என்று சிணுங்கிய செவ்வந்தி ஓரிடத்தில் நின்று அவனை முறைத்தாள்.

மெல்ல அவளின் அருகே வந்தவன், “என்ன அங்கேயே நின்னுட்ட செவ்வரளி” அவளை வேண்டுமென்றே சீண்டினான் வெற்றி.

அவனின் முகத்தில் தோன்றிய சந்தோசம் கண்டு எரிச்சலோடு, “எனக்கு பிடிக்கலன்னு சொன்னால் உனக்கு புரியாத வேந்தன் மாமா? எங்க அம்மா அப்பா வச்ச பெயரை ஏன் இப்படி கொலை பண்ரீங்க” அவனிடம் சண்டைக்கு வந்தாள்.

“செவ்வந்தி, செவ்வரளி எல்லாமே பூ பெயர்தான். அத்தைக்கு பிடிக்கும்னு அந்த பெயர் வச்சாங்க. எனக்கு அப்படி கூப்பிட பிடிக்கல சோ.. நீ எப்பவும் என்னோட செவ்வரளி தான்” என்றான் சிரிப்புடன்.

“அதெல்லாம் முடியாது. நான் வயதில் சின்னவளாக இருந்தாலும் எனக்கு நீங்க மரியாதை தரணும் மாமா” என்று அவள் கறாராக கூறவே, “முடியாது” என்றான்.

அவனை முறைத்தவள், “இருங்க நான் அப்பாவிடம் சொல்றேன்” என்று வீட்டிற்குள் ஓடியவளின் பின்னோடு சென்றான் வெற்றி. அங்கே மனோஜுடன் பேசியபடி சோபாவில் அமர்ந்திருந்தார் ஜெகதீஸ்.

“அப்பா மாமாவை எனக்கு மரியாதை தர சொல்லுங்க” என்று கத்தியபடி அவரின் வலதுபுறம் சென்று அமர்ந்தாள்.

“அதெல்லாம் தர முடியாது மாமா. எனக்கு அவ என்னைக்கும் செவ்வரளிதான்” என்று ஜெகதீஸ் இடதுபுறம் அமர்ந்தான் வெற்றி.

இருவரின் பிடிவாதத்தை கண்ட மனோஜ், “இப்போ நீ யாருக்கு சப்போர்ட் பண்ண போற?” என்று கிண்டலாக சிரித்தார்.

“ஏன் செவ்வந்தி மாமா மீது கோபமாக இருக்கிற? அவன் சின்னத்தில் இருந்து உன்னை அப்படியே கூப்பிட்டு பழகிட்டான். அதனால் திடீரென்று மரியாதையாக பேச சொன்னால் என்ன அர்த்தம்?” என்று மகளை அதட்டினார்.

“அப்போ நானும் அவரை வேந்தன்னு சொல்லட்டுமா?” என்று எதிர்கேள்வி கேட்ட மகளிடம், “அவன் உன்னைவிட வயதில் பெரியவன்” என்றார் ஜெகதீஸ்.

செவ்வந்தி முகம் வாடுவதை கண்ட வெற்றி தன் குறும்புத்தனத்தை கைவிட்டு, “ஸாரிங்க.. இனிமேல் உங்களை பெயர் சொல்லி கூப்பிட மாட்டேன்” என்று எழுந்து சென்றான். அவனின் பேச்சு அவளைப் பாதித்தது.

“அப்பா மாமாவை இவ்வளவு மரியாதையாக பேச சொல்லலப்பா” என்றாள் கண்கள் கலங்கிட.

“வேந்தன் மாமான்னு நீ எவ்வளவு உரிமையாக சொல்லும்போது உன்னை செவ்வரளி என்று கூப்பிட அவனுக்கும் உரிமை இருக்கு. அவனை வேணும்னு நோகடிக்கதே செவ்வந்தி” மகளுக்கு புரியும் விதமாக எடுத்துக் கூறிவே உடனே எழுந்து அவனின் அறைக்கு சென்றாள்.

படுக்கையில் அமர்ந்திருந்தவனின் அருகே சென்று அமர்ந்தவள், “மாமா இனிமேல் அப்படி கூப்பிடாதேன்னு சொல்ல மாட்டேன். உனக்கு எப்படி விருப்பமோ அப்படியே கூப்பிடு” என்றபோது அவன் பேசாமல் முகத்தை வேறுப்பக்கம் திருப்ப அவனின் அமைதியை அவளை என்னவோ செய்தது.

அவன் எதிர்பாராத சமையத்தில் அவனின் கன்னத்தில் இதழ் பதித்தவள் காதைப் பிடித்துகொண்டு, “ஸாரி மாமா” என்றாள். அவளின் செயலில் அவனின் மனம் சிறகில்லாமல் வானத்தில் பறந்தது.

அவளை வேண்டுமென்றே முறைத்தவன், “இல்லங்க உங்களுக்கு பிடிக்காதபோது நான் பெயர் சொல்லி கூப்பிடல” என்று அவன் வேண்டுமென்றே முறுக்கிக்கொண்டான்.

அவனின் கன்னத்தில் கடித்து வைத்து, “இனிமேல் நீ பெயர் சொல்லி கூப்பிடல இதுதான் பனிஸ்மென்ட்” அவன் வலியில் ஆவேன அலறிட சிரித்தபடி ஓடியவளை துரத்திகொண்டு ஓடினான் வெற்றி. சிறிதுநேரத்தில் இருவரும் விளையாடுவதை கண்ட ஜெகதீஸ் முகம் தெளிந்தது.

அவளை இழுத்து பிடித்து நிறுத்தி, “ஸாரி சொல்லுடி” எனவும் மறுப்பாக தலையசைத்தவளின் நெற்றியில் முத்தமிட்டு,  “தேங்க்ஸ் ஃபார் தி பனிஸ்மென்ட்” என்றவனின் விழிகளில் வித்தியாசத்தை உணராமல் இருந்தாள் செவ்வந்தி.

 அடுத்து வந்த நாட்களில் மழையில் ஆட்டம்போட்டு காய்ச்சலில் படுத்தவளின் பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டான் வெற்றி. அவனின் கரத்தை பிடித்துக்கொண்டு தூங்குபவளிடமிருந்து கையை எடுக்க முயற்சித்தான் வெற்றி.

“மாமா கையெடுக்காதீங்க அப்புறம் தூக்கம் போயிரும் காய்ச்சல் வந்திரும்” என்று அரை தூக்கத்தில் புலம்பினாள். அவளின் அருகே அமர்ந்து தலையை வாரியபடி அமைதியாக இருந்தான் வெற்றி. ஜெகதீஸ் – சங்கீதா இருவரும் எவ்வளவு சொல்லியும் அவர்களின் பேச்சை காதில் வாங்காமல் ஸ்கூலிற்கு போகாமல் அவளின் அருகிலேயே இருந்தான்.

அவளுக்கு உடல்நிலை சரியானதும், “தேங்க்ஸ் வேந்தன் மாமா” என்றவளிடம் அரளி பூவை நீட்டி சிரித்தான் வெற்றி.

அதை வாங்கி நுகர்ந்து பார்த்தவள், “எனக்கு இந்த பூவோட மெல்லிய வாசனையும், உன்னோட இந்த அக்கறையான பாசமும் பிடிச்சிருக்கு. நீ கடைசிவரை என்னோடு இருக்கணும் சரியா?” என்றாள் கண்ணில் குறும்பு மின்னிட.

அவன் சரியென்று தலையசைக்க ஜெகதீஸ் – சங்கீதா இருவரும் மனோஜ் பிரச்சனை பற்றி தீவிரமாக விவாதித்து ஒரு முடிவிற்கு வந்தனர்.  அவர்களுக்கு உதவியதை அறிந்த மனோஜ் நேரில் வந்து நன்றி சொல்லிவிட்டு செல்வதை கவனித்தான் வெற்றி.

“மாமா அவங்க ஏன் உங்களுக்கு நன்றி சொன்னாங்க” என்று விளக்கமாக கேட்டான்.

அவனை அருகே அமர்த்திய ஜெகதீஸ், “இப்போ அவங்க ரொம்ப இக்கட்டான சூழ்நிலையில் இருந்தாங்க வெற்றி. அவங்களுக்கு மாமா பண உதவி செய்தேன். அதுதான் நன்றி சொல்றாங்க” என்று அவனுக்கு புரியும் விதமாக கூறினார்.

அவன் சரியென்று தலையசைக்க, “பணம் இன்னைக்கு போகும் நாளைக்கு வரும் வெற்றி. அதனால் பணத்தை வைத்து ஒரு மனிதரை எடைபோட கூடாது. என்னைக்குமே அவங்க குணத்தை மனதில் வைத்து முடிவெடுக்கணும். ஒருத்தரின் பணத்திற்கு ஆசைபட்டால் நம்ம வச்சிருக்கும் பணம் இரட்டிப்பாக வேற வழியில் வீணாகும். என்னைக்குமே பணத்தை மதிக்கக் கூடாது. அதே நேரத்தில் அடுத்தவங்க சொத்துக்கு ஆசைப்படக் கூடாது” என்று அவர் கூறியது அவனின் மனதில் ஆழமாக பதிந்தது.

“ஒருத்தன் நம்மளை ஏமாற்றி இன்னைக்கு நல்லா இருக்கலாம். ஆனால் அவன் அப்படியே இருப்பான்னு யாராலும் சொல்ல முடியாது” என்று அவர் கூறியதை மனதில் நிறுத்தினான். அவரின் அறிவுரைகளை கேட்டு அவனின் மனம் நேர்மையான வழியில் செல்ல நினைத்தது.

தாய் – தந்தையின் பாசத்தை உணராத வெற்றிக்கு மனோஜ் – சம்பூரணம் இருவரும் காட்டும் பாசம் அவர்களை அப்பா – அம்மா என்று அழைக்க வைத்தது. குழந்தை இல்லாத தம்பதிக்கு அவன் மகனாகிவிடவே, “அத்தை மாமா” என்றழைத்த செவ்வந்தி அவர்களின் மருமகளாக மாறிப் போனாள்.

எல்லாம் நன்றாக சென்று கொண்டிருந்த நேரத்தில் கிறிஸ்மஸ்க்கு வேளாங்கண்ணி செல்வதாக முடிவெடுத்து நரசிம்மன் – விமலாவை வர வரவழைத்தனர்.அந்த பயணம் தங்களின் வாழ்க்கையை புரட்டி போட போவதை அறியாமல் இருந்தனர். விதி தன் விளையாட்டை ஆட ஆரம்பித்தது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!