Malar – 24

122474691_4608428512565245_7282334060875596588_n-4332d956

Malar – 24

அத்தியாயம் – 24

அவளின் முகத்தை இரண்டு கைகளால் தாங்கிய வெற்றியின் பார்வை விழி வழியாக மனதை ஊடுருவிச் சென்றது. இத்தனை நாளாக மனதை அழுத்திய பாரம் சற்று குறைந்திருந்ததால் அவனை இமைக்கமறந்து பார்த்தாள்.

“பணக்காரப்பெண்ணாக பிறந்து கஷ்டப்பட வேண்டிய சூழ்நிலையில் வளர்ந்த உன் மனநிலை புரியுது செவ்வந்தி. இதுநாள்வரை உன் மனதைப் புரிஞ்சிக்காமல் இருந்துட்டேன்” என்று சொல்லும்போது கதவைத் திறந்துக்கொண்டு மனோஜ் மற்றும் சம்பூரணம் இருவரும் நுழைந்தனர்.

அவர்களைப் பார்த்தவுடன் வெற்றி எழுந்து நிற்க, “நீ திடீரென்று ஜெகதீஸ் வீட்டை நோக்கி ஓடியதைக் கண்டு மனம் பதறிபோச்சு!” என்றவர் செவ்வந்தியின் தலையை வருடினார் சம்பூரணம்.

மனோஜ் அமைதியாக வெற்றியைப் பார்க்க, “அம்மா நீங்க இவளோடு கொஞ்சநேரம் இருங்க. அப்பாவும், நானும் டாக்டரைப் பார்த்து பேசிட்டு வரோம்” என்றவன் வேகமாக வெளியே செல்ல அவனை பின்தொடர்ந்தார்.

மருத்துவமனைக்கு வெளியே வந்த இருவரும் அங்கிருந்த சிமிண்ட் பெஞ்சில் அமர, “வெற்றி இவ நம்ம செவ்வந்தின்னு தெரிந்தபிறகு நீ மேரேஜ் பண்ணிருக்கிற.. அடுத்து என்ன செய்யலாம்னு முடிவு எடுத்து இருக்கிற?” என அவனிடம் விசாரித்தார் மனோஜ்.

சட்டென்று நிமிர்ந்து அவரைப் பார்த்த வெற்றி, “செவ்வந்தி தான் உயிர் பிழைச்சு திரும்ப வந்திருக்கிறா என்ற உண்மை தெரிஞ்சால் அவளோட உயிருக்கு ஆபத்து அப்பா. அத்தோடு அந்த சொத்தை என் கையில் ஒப்படைக்கும் நாளும் நெருங்கிடுச்சு. இவ்வளவு நாளாக நான் பொறுமையாக இருந்ததுக்கு ஒரு தீர்வு வரணும்” என்றான் குரலில் உறுதியுடன்.

“அந்த சொத்தை செவ்வந்தியிடம் ஒப்படைக்க போகிறாயா?” என்றார்.

“மாமாவும் – அத்தையும் உயிரோடு இருந்திருந்தால் இன்னைக்கு அவளை ராணி மாதிரி வச்சு பாதுகாத்து இருப்பாங்க. அவ தன்னோட கடந்த காலத்தை சொல்லும்போது கேட்டுட்டு  இருந்த எனக்கு எவ்வளவு வலிச்சுது தெரியுமாப்பா. எங்க அப்பனோட பேராசையால் நடக்கக்கூடாததெல்லாம் நடந்திருச்சு” என்றவனின் தோளைத் தட்டி ஆறுதலாக அணைத்துக் கொண்டார்.

“அவ நடந்ததை மறக்க தூக்க மாத்திரை கேட்கிறா அப்பா.. என்னோட செவ்வரளியை இப்படியொரு காயத்தை மனதில் சுமந்துட்டு இருப்பதை அறியாத முட்டாளாக இருந்துட்டேன்” என்று தலையிலடித்துக் கொண்டவனை தடுத்தார்.

அவனின் பக்கமிருக்கும் நியாயம் அவருக்கும் புரியவே செய்தது. அதே நேரத்தில் சொத்தை உரியவளிடம் ஒப்படைக்க நினைக்கும் அவனின் நேர்மையும், அவளை உயிராக நேசிக்கும் அவனில் ஜெகதீசை கண்டார் மனோஜ். தன் உயிர் நண்பனின் வளர்ப்பை நினைத்து பெருமைப் பட்டார்.

“உன்னிடம் ஒரு விஷயம்…” என்று சொல்லும்போதே பதட்டத்துடன் அவர்களைத் தேடி வந்தார் சம்பூரணம்.

அவளைக் கண்டவுடன், “என்னாச்சு அம்மா” என்றவன் வேகமாக எழுந்து நிற்க, “அவளுக்கு தூக்கம் வருவதற்கு மாத்திரை போட்டு பழகிவிட்டதால்..” அவர் வாக்கியத்தை முடிக்கும் முன்னரே அவள் இருக்கும் அறையை நோக்கிச் சென்றான்.

தன்னை நிதானப்படுத்திக் கொண்டு கதவைத்திறந்து உள்ளே நுழைந்தவன், “அம்மாவிடம் என்ன கேட்ட செவ்வந்தி..” என்றான் அவளின் அருகே அமர்ந்தபடி!

“வெற்றி எனக்கு இப்போ தூங்கணும்” என்று அவள் மீண்டும் அதையே கூறவே அவளை படுக்க வைத்து தலையை வருடிவிட்ட வெற்றி, “ம்ம் கண்ணை மூடி தூங்கு” என்றான் கட்டளையாக.

அவள் மாத்திரைக்காக கைகளை நீட்டிட, “நான் சொன்னால் கேட்கணும்” என்றவுடன் கண்ணீரோடு மறுப்பாக தலையசைத்தவளின் அருகே சென்றவனின் பார்வை அவளின் விழிகளில் ஊடுருவிச் சென்றது.  

 அவளின் இடது கையுடன் தன் வலது கரத்தைக் கோர்த்து, இதழ் நோக்கி குனிந்ததை கண்டவுடன் பயத்தில் அவளின் இமைக்கதவுகள் மூடிக்கொண்டது. அங்கும்மிங்கும் ஓடும் கருவிழிகளில் பார்வை பதித்து அவன் மெளனமாக இருந்தான்.

“உங்களிடம் தூக்க மாத்திரை கேட்க மாட்டேன்” உறுதியுடன் கூறவே அவளின் மீதான காதலோடு அவளின் உதடுகளை சிறைபிடித்தவனின் முத்தத்தில் செவ்வந்தியின் பதட்டம் விடைபெற்றுச் சென்றிட மெல்ல விழிதிறந்து அவனை நோக்கினாள்.

அவளின் இதழைப் பிரிந்து நிமிர்ந்தவன், “இப்போது தூக்கம் வரும்” என்றவன் அவளின் கைகளை பிடித்தபடியே அருகே அமர்ந்தான். தன்னவன் அருகே இருக்கும் நிம்மதியுடன் மெல்ல உறங்கிய செவ்வந்தியைப் பார்த்தபடி மௌனமாக இருந்தான்.

மறுநாள் காலைபொழுது அழகாக விடிந்தது. கீழ்வானம் சிவக்கும் நேரத்தில் கண் விழித்தவளின் பார்வை கையைப்பிடித்தபடி உறங்கி போயிருந்த வெற்றியின் மீதே நிலைத்தது. நேற்று இரவு மாத்திரை கேட்டு கொடுக்காத அவனின் பிடிவாதம் அவளை யோசிக்க வைத்தது.

அவனின் பெயரும், மனோஜ் – சம்பூரணம் இருவரையும் அவன் உறவு சொல்லி அழைப்பதோடு கோர்த்து பார்த்தபோது தன்னுடைய சொந்த அத்தை மகனான வேந்தன் மாமாவைத் தான் திருமணம் செய்திருக்கிறோம் என்ற உண்மை வெட்டவெளிச்சமானது.

இதுநாள்வரை உறவென்று யாரும் இல்லாமல் இருந்தவளுக்கு இந்த நினைவே சந்தோஷத்தைக் கொடுத்தது. சிறுவயதில் பார்த்த முகம் பருவ வயதில் சற்று மாறியிருந்ததால் சட்டென்று அடையாளம் காண முடியாமல் போனதை உணர்ந்தது அவளின் மனம்!

பாலைவனத்தில் நடந்து வந்தவளுக்கு இளைப்பாற சோலையே கிடைத்தது போன்ற எண்ணம் எழுந்து மனதிற்கு அமைதியைக் கொடுத்தது.

செவ்வந்தி இமைக்க மறந்து தன்னவனை பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில் சட்டென்று கண் விழித்த வெற்றிக்கு அவளின் பார்வை இருந்த வித்தியாசத்தைக் கண்டு கொண்டான்.

“குட் மார்னிங்..” என்றவன் புன்னகையுடன் கூற, “வேந்தன் மாமா” என்றாள்.

அவன் புரியாத பார்வையோடு அவளை ஏறிட, “ஸாரி சின்ன வயதில் வெற்றியை அப்படிதான் கூப்பிடுவேன். உங்க பேரும் அதுதான் என்பதால் குழப்பத்தில்” அவள் பாதியில் நிறுத்திவிட நிம்மதி பெருமூச்சுடன் அவளின் தலையை வருடி விட்டான்.

பிறகு, “ம்ஹும் உனக்கு எப்படி கூப்பிட தோணுதோ அப்படியே கூப்பிடு” என்றான் சாதாரணமாக.

அவள் மௌனமாய் தலையசைத்துவிட்டு சிந்தனையோடு எழுந்து அமர்ந்தாள். அதற்குள் நர்ஸ் வந்து டிஸ்சார்ஜ் செய்து அழைத்து செல்லலாம் என்று கூறவே மருத்துவமனை பில்லை கட்டிவிட்டு செவ்வந்தியுடன் வீடு வந்து சேர்ந்தான் வெற்றி.

ஏற்கனவே வெற்றி வேந்தனை அடையாளம் கண்ட பெண்ணிற்கு அவனின் பேச்சில் இருந்த வித்தியாசம் மீண்டும் குழப்பிவிடவே யோசனையுடன் வீடு வந்து சேர்ந்தாள். மனோஜ் மூலமாக அவள் ஜெகதீஸ் மகளென்ற உண்மை அறிந்த சம்பூரணம் அவளுக்கு தேவையானவற்றை உடனிருந்து கவனித்துகொண்டார்.

வெற்றியை மற்றொரு அறைக்குள் அழைத்துச் சென்ற மனோஜ், “உன்னிடம் ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லணும்” என்றவரை கேள்வியுடன் ஏறிட்டான்.

“உங்க அத்தையும், மாமாவும் இன்னும் இறக்கல. அவங்க உயிரோடு இருக்காங்க” என்ற உண்மையை அவனிடம் கூற இன்ப அதிர்ச்சியில் அவரை ஏறிட்டான்.

“அப்பா என்ன சொல்றீங்க?” என அவன் மீண்டும் கேட்க,

“ஆமா வேளாங்கண்ணியில் தான் தங்கியிருக்காங்க. செவ்வந்தி இறக்கல அவள் எங்களைத் தேடி வருவாள் என்ற நம்பிக்கையோடு காத்துட்டு இருக்காங்க. இப்போ அவளும் உயிரோடு இருக்கும் விஷயம் தெரிஞ்சிடுச்சு. அதுதான் உங்க மாமாவுக்கு தகவல் கொடுக்கலாம்னு இருக்கேன். நீ என்ன சொல்ற?” என அவனிடமே கேட்க சிந்தனையோடு சேரில் அமர்ந்தான்.

சிறிதுநேரம் அங்கே அமைதி நிலவியது.

மனோஜ் தன் பதிலுக்காக காத்திருப்பதை உணர்ந்து, “இப்போது அவங்களுக்கு சொல்ல வேண்டாம் மாமா. எங்கப்பா சொத்துக்காக என்ன வேணும் என்றாலும் செய்வார். இந்த முறை அவங்களைப் பாதுகாப்பது என்னோட கடமையும் கூட!” என்றவன் தொடர்ந்து தன் திட்டத்தை கூற சரியென்று தலையசைத்தார்.

அன்றைய பொழுது ஓடி மறைந்திட இரவு படுக்கை அறைக்குள் நுழைந்தான். செவ்வந்தி தூக்கம் வராமல் பித்துபிடித்தவளைப் போல தலையைக் கையில் தாங்கியபடி அமர்ந்திருக்க, “இன்னும் தூங்காமல் என்ன யோசிச்சிட்டு இருக்கிற” என்ற கேள்வியுடன் அவளை நெருங்கி அமர்ந்தான்.

“எனக்கு தூக்கம் வரல” பல்லைக்கடித்துக்கொண்டு கூறியவளை வலுக்கட்டாயமாக படுக்கையில் தள்ளி அவளை இறுக்கியணைத்தவன், “இப்போ தூங்கு” என்றான். அவனிடம் இருந்து விலக தோன்றாமல் தூங்க முயற்சித்தவளின் விழிகளை உறக்கம் தழுவியது.

அவளை இமைக்க மறந்து பார்த்தபடி வெற்றியும் உறங்கிவிட, “அம்மா.. அப்பா..” கனவின் தாக்கத்தில் இருந்து கண்விழித்து எழுந்து அமர்ந்தாள். சின்ன வயதில் இருந்து அவளை ஆட்டி வைத்திடும் கனவின் பிடியிலிருந்து தப்பிக்க ஒரே வழி தூக்க மாத்திரைதான் என தோன்றியது.

“என்ன தூக்கம் கலைஞ்சி போகிடுச்சா?” என விசாரித்த கணவனின் குரலில் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தாள்.

வெற்றி அவளை இமைக்காமல் நோக்கிட, “இரவில் தூக்க மாத்திரை இல்லாமல் என்னால் தூங்க முடியாதுன்னு சொன்னால் கேட்கவே மாட்டீங்கிறீங்க” என்றவளின் குரலில் எரிச்சல் வெளிப்படையாகவே தெரிந்தது.

அவளின் கரம்பிடித்து இழுக்க மார்பில் வந்து விழுந்த செவ்வந்தியின் கன்னத்தை விரலால் வருடிய வெற்றி, “நான் உயிரோடு இருக்கும் வரை தூக்க மாத்திரையை நீ கனவில் கூட நினைக்கக்கூடாது” என கட்டளையிட்டவனின் மற்றொரு கரம் அவளின் இடையோடு பதிந்தது.

அவனின் விரல் பதிந்த இடத்தில் குறுகுறுப்பு அதிகரிக்க, “வெற்றி கையை எடுங்க” மனம் படபடக்க கூறியவளின் விழியோடு தன் பார்வையைக் கலக்கவிட்டு, “முடியாது” என்றவன் அழுத்தமாக அவளின் மார்பினில் புதைந்தான்.

செவ்வந்தி அவனை தடுக்க முடியாமல் திணற கரங்களோ அவனை விலக்கி தள்ளுவதில் குறியாக இருந்தது. தென்றல் காற்றின் மெல்லிய வருடலில் பூக்களின் இதழ்கள் திறந்து கொள்ளும். அதுபோல அவனின் தீண்டலில் மயங்கியவளிடம் தன் தேடலைத் தொடர்ந்தான் வெற்றி.

அவனின் கரங்களின் ஆளுகைக்கு கீழ் வந்தவளை முழுவதுமாக ஆட்கொண்ட திருப்தியில் அவளின் நெற்றியைச் செல்லமாக முட்டி, “ஐ லவ் யூ செவ்வந்தி” என்றான்.

தன்னை பெண்ணாக உணர வைத்த கணவனை இமைக்காமல் நோக்கி, “வெற்றி..” என்ற அழைப்புடன் அவனின் மார்பில் புதைந்தாள். சற்றுநேரத்தில் தன்னவளிடம் சீரான சுவாசத்தை உணர்ந்தவனின் உதடுகளில் புன்முறுவல் பூத்தது.

மறுநாள் காலை கண்விழித்த செவ்வந்தி முதலில் கண்டது தன் கணவனின் முகத்தை மட்டுமே. இத்தனை வருடங்களில் அந்த கனவின் தாக்கமின்றி அவள் இயல்பாக தூங்கி எழுந்ததில்லை. ஆனால் இந்த இரண்டு நாளாக அவனின் கைவளைக்குள் நிம்மதியாக உறங்கி எழுந்தாள்.

அவனின் நெற்றியில் பாசத்துடன் இதழ்பதித்து விலகி குளித்துவிட்டு வெளியே வந்த செவ்வந்தியின் தலையில் பூவைச் சூடி திஷ்டி கழித்த சம்பூரணம், “இனிமேல் உன் வாழ்க்கையில் எல்லாமே நல்லதாக நடக்கும்” என்றார்.

“அந்த நம்பிக்கை எனக்கும் இருக்கு அத்தை” என்றவள் பேசியபடி அவருடன் இணைந்து சமைக்க தொடங்கினாள். சிறிதுநேரத்தில் குளித்துவிட்டு வேறொரு உடையில் தயாராகி வந்தவனை விழிவிரிய நோக்கினாள்.

இத்தனை நாளில்லாமல் இன்று அவனின் தோற்றம் அழகாக இருப்பதைக் கண்டு சிந்தனையில் ஆழ்ந்தவளிடம், “அவனுக்கு காபியை கொடுத்துட்டு வா செவ்வந்தி” என்று அனுப்பினார் சம்பூரணம்.

மனோஜுடன் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த கணவனிடம் காபியைக் கொடுக்க, “இன்னைக்கு நம்ம வீட்டுக்குப் போகணும்” என்றவுடன் சரியென்று தலையசைத்துவிட்டு நகர்ந்தாள் செவ்வந்தி.

காலை உணவை மனோஜின் வீட்டில் முடித்துவிட்டு வீடு நோக்கி பயணித்த இருவரும் மௌனமாகவே வந்தனர். தார்சாலையில் ஆள் ஆரவாரமில்லாத ஓரிடத்தில் வண்டியை நிறுத்திய வெற்றியை அவள் கேள்வியாக நோக்கினாள்.

“உன்னிடம் கொஞ்சம் பேசணும் செவ்வந்தி” என்றவுடன் வண்டியிலிருந்து இறங்கிய செவ்வந்தி மெளனமாக நின்றிருந்தாள். அவளின் கரங்களைப் பிடித்த வெற்றி, “நேற்று நடந்ததை நினைத்து வருத்தமா?” என்றான் மெல்லிய குரலில்.

அவள் மறுப்பாக தலையசைக்க நிம்மதி பெருமூச்சுடன் அவளின் முகத்தை ஏறிட்டவன், “சரி.. இப்போ பேச வேண்டிய விஷயத்தை பேசிவிடலாம்” என்றவனை அவள் கேள்வியாக நோக்கினாள்.

“எங்கப்பா வைத்திருக்கும் சொத்துகள் வேணான்னு சொல்லிட்டு வெளியே வந்தால் என்னை இதே மாதிரி நேசிப்பாயா செவ்வந்தி” அவளை காதலோடு பார்த்தவனின் வார்த்தையின் பின்னோடு மறைந்திருப்பது பூகம்பம் என்னவென்று அறியாமல் சிலநொடிகள் மெளனமாக கழிந்தது.

அவன் பதிலுக்காக காத்திருப்பதை உணர்ந்து, “உங்களை நான் முதலில் சந்திக்கும்போது எப்படி பார்த்தேனோ அதே மாதிரிதான் இன்றுவரை இருக்கீங்க.. அவ்வளவு சொத்துக்கும் அதிபதி என்றாலும் சொந்தக்காலில் நிற்க நினைத்த உங்களைத்தான் காதலிச்சேன். என்னவோ தெரியல சொத்துகளை வேணான்னு உதறிட்டு வருவதாக சொல்றீங்க.. நீங்க எது செய்தாலும் அதில் ஒரு காரணமிருக்கும். எனக்கு இதில் எந்தவிதமான வருத்தமும் இல்ல” தன் மனதில் இருப்பதை கூறினாள்.

தன்னை துல்லியமான புரிந்து வைத்திருக்கும் மனையாளை பார்வையால் வருடி, “ரொம்ப தேங்க்ஸ்..” மனநிறைவுடன் கூறினான். அங்கிருந்து கிளம்பிய இருவரும் நேராக கடைக்கு வந்து சேர்ந்தனர்.

வெற்றி – செவ்வந்தி இருவரும் ஜோடியாக வருவதைக் கவனித்த ஜமுனாவின் முகம் மலர, “இங்கே நின்று யாரைப் பார்த்துட்டு இருக்கிற?” என விசாரித்தபடி அருகே வந்த மைதிலியின் பார்வையும் வாசலின் மீதே நிலைத்தது.

செவ்வந்தி நெற்றியில் இருந்த கட்டை கண்டவுடன், “அண்ணா அண்ணிக்கு என்னாச்சு” பதட்டத்துடன் நெருங்கிய ஜமுனாவின் கண்கள் லேசாக கலங்கியது.

“அண்ணி நேற்று படிக்கட்டில் இருந்து கீழே விழுந்துட்டா செல்லம்மா” என உண்மையை மறைத்து தங்கையிடம் பொய் கூறிய கணவனை மெளனமாக ஏறிட்டாள். பிறகு அவனைத் தொடர்ந்து ஜமுனாவை சமாதானம் செய்ய சிறிது நேரமானது.

அங்கே நடந்த எதையும் அறியாத மைதிலி, “அந்தளவுக்கு கவனமில்லாமல் எதை யோசிச்சிட்டு இருந்தியோ.. சரி இப்போ எந்த பிரச்சனையும் இல்லையே..?” அக்கறையுடன் கேட்க மறுப்பாக தலையசைத்தாள் செவ்வந்தி.

அவரவர் வேலைகளில் ஈடுபட நேரம் போனதே தெரியவில்லை. இரவு தன் தங்கையுடன் வீடு வந்து சேர்ந்தனர் கணவனும், மனைவியும்!

மகனும், மருமகளும் வீட்டிற்குள் நுழைவதைக் கண்ட விமலா, “ஏய் செவ்வந்தி நெற்றியில் என்ன காயம்” என்ற கேள்வியுடன் நெருங்கிய தாயை சந்தேகத்துடன் நோக்கினாள் ஜமுனா.

“இவ்வளவு நடிப்பு தேவையில்ல..” என்றவள் அங்கிருந்து நகர்ந்த மகளை முறைத்துவிட்டு மருமகளிடம் விசாரணையில் இறங்கினாள். ஜமுனாவிடம் கூறிய அதே பொய்யை அவரிடம் ஒப்பித்துவிட்டு அறைக்குள் சென்று மறைந்தாள் செவ்வந்தி.

அவளின் பின்னோடு சென்ற மகனை பார்த்தபடி வந்த நரசிம்மன், “ம்ஹும்.. இன்னும் இரண்டு மாதம் தான் அப்புறம் கவனிச்சுக்கிறேன்” என்ற கணவனை எரிச்சலோடு நோக்கினார் விமலா.

இத்தனை வருட திருமண வாழ்க்கையில் கணவனின் சுயநலம் மட்டுமே மேலோங்கியது என்ற கசப்பான உண்மையை உணர்ந்தார். அடுத்து என்ன செய்வதென்ற சிந்தனையில் ஆழ்ந்த மனையாளின் மீது அர்த்தம் பொதிந்த பார்வையை வீசினார் நரசிம்மன்.

வெற்றியின் யோசனைப்படி ஜெகதீஸ் – சங்கீதாவை மீண்டும் நாமக்கல் அழைத்துவரும் முயற்சியில் தீவிரமாக இறங்கினார் மனோஜ். தன் கணவனுக்கு பக்கபலமாக நின்ற சம்பூரணம் மனமோ மீண்டும் அவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கியது.

நாட்கள் ரெக்கை கட்டி பறக்க இரண்டு மாதம் உருண்டோடியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!