Malar – 23

49d8c-kadal2balai-85296476

அத்தியாயம் – 23

தனக்கு குழந்தை பிறந்தால் வேளாங்கண்ணி வருவதாக வேண்டியிருந்தார் ஜெகதீஸ். அங்கே செல்வதற்கான நேரம் கிடைக்காமல் ஒவ்வொரு வருடமும் தட்டி சென்று கொண்டே இருந்தது. தாய் – தந்தையின் இழப்பு, தொழிலை கவனிப்பதென்று அதற்கே நேரம் போதவில்லை. ஆனால் அதற்காக கடவுள் விஷயத்தில் விளையாட கூடாதென்ற காரணத்தினால் வேளாங்கண்ணி சென்றுவர எண்ணினார்.

தான் இல்லாத நேரத்தில் தொழிலை கவனித்துக் கொள்ள நரசிம்மனை அழைத்து விவரத்தை கூறிட அடுத்த இரண்டு நாட்களில் தன் குடும்பத்துடன் வந்து சேர்ந்துவிட்டார்.  அவரிடம் விவரங்களை சொல்லி பொறுப்பை ஒப்படைத்துவிட்டு நிம்மதியாக ஊருக்கு கிளம்பினார். ஏற்கனவே சமயம் பார்த்திருந்த நரசிம்மனுக்கு இது வசமாகிப் போனது.

அடிக்கடி பார்த்து பழகியிராத தன் மாமன் – அத்தையிடம் பேசாமல் ஒதுங்கி நின்ற செவ்வந்தி, “வேந்தன் மாமா நீ கொஞ்சம் ஜாக்கிரதையா இரு” மெல்லிய குரலில் அவனிடம் முணுமுணுக்க அவன் கேள்வியாக நோக்கினான்.

“உங்கப்பா பார்த்த நல்லவர் மாதிரியே தோணல. என்னவோ மனசுக்கு தப்பாவே தோணுது. அதனால் தேவை இல்லாமல் பேசி அடிவாங்காமல் அமைதியாக இரு. நாங்க திரும்பி வரும்வரை நீ ரொம்ப உஷாரா இரு மாமா..” என்று கூற அவனும் சரியென்று தலையசைத்தான்.

வெற்றிக்கு செவ்வந்தியை அவர்களோடு அனுப்ப மனமில்லை. அவளுக்கும் அவனைவிட்டு பிரிவதில் எள்ளளவு பிரியமில்லை. ஆனால் சூழ்நிலை அவர்களை பிரித்து பயணிக்க வைப்பதென்ற முடிவில் உறுதியாக இருந்தது. காலத்தின் கை பாவையாக மாறும் செவ்வந்தி மீண்டும் வெற்றியை இனி எப்போது சந்திக்க போகிறாள்.

அவர்களின் லக்கேஜ் அனைத்தும் காரில் ஏற்றபடவே, “விமலா, வெற்றி, ஜமுனா மூவரையும் பத்திரமாக பார்த்துகோங்க. அப்புறம் வேலை அதிகம்னு பாக்டரியில் தங்கிகாதீங்க. இங்கே இவங்க மூவரும் தனியாக இருப்பாங்க” என்று அக்கறையுடன் கூறினார் ஜெகதீஸ்.

“அதெல்லாம் நான் பார்த்துக்கறேன். நீங்க கிளம்புங்க சகலை..” என்று அவர் கூற சரியென்று தலையசைத்துவிட்டு திரும்ப விருப்பமே இல்லாமல் வெற்றியின் கையைப்பிடித்திருந்த செவ்வந்தி தந்தையின் பார்வைக்கு இணங்கி விலகி நடந்தாள். வெற்றிக்கு நெஞ்சில் வலி அதிகரிக்க முகத்தை சோகமாக வைத்துகொண்டு அவளை வழியனுப்பிட வாசலில் நின்றான்.

 செவ்வந்தி, சங்கீதா இருவரும் காரில் ஏறியிருக்க முன் கார் கதவைத் திறந்து ஏற சென்ற ஜெகதீஸ் பார்வை விமலாவின் கையைப்பிடித்து நின்றிருந்த வெற்றியைக் கண்டு அவரின் மனம் இளகியது.

“நாங்க வெற்றியை கூட கூப்பிட்டு போறோமே..” என்றவுடன் அவனின் முகம் பிரகாசமானது.

“மாமா” என்ற அழைப்புடன் அவரை நோக்கி ஓடிய வெற்றியின் கரம்பற்றி தன் பக்கம் இழுத்தார் நரசிம்மன்.

“அதெல்லாம் வேண்டாம் சகலை. நீங்க வேளாங்கண்ணிக்கு தானே போறீங்க.. முதலில் நீங்க பத்திரமாக போயிட்டு வாங்க” என்று வாய்க்கு வந்த பொய்யை சந்தேகமே வராதபடி சொல்லி முடித்தார்.

ஜெகதீஸ் தங்கையை நிமிர்ந்து பார்க்க, “என் மகனை நான் பார்த்துக்கிறேன் அண்ணா..” என்றாள் சிறிது தயக்கத்துடன்.

அவர் எதுவும் பேசாமல் சரியென்று தலையசைத்துவிட்டு, “நாங்க கிளம்பறோம்” என்று சொல்ல வெற்றி வேறு வழியே இல்லாமல் மூவரையும் பார்த்து டாட்டா காட்டினான்.

அவர்களை வழியனுப்பிவிட்டு வீட்டிற்குள் நுழைந்த நரசிம்மன், “ வேளாங்கண்ணி போனவன் இனி திரும்ப வருவானோ என்னவோ..” என்று கூறியதைக் கேட்டு வெற்றிக்கு தூக்கிவாரிப்போட்டது.

சில நேரங்களில் சொல்லப்படும் சில சொற்கள் அப்படியே பழிக்கும் என்ற காரணத்தால் தான் நல்ல காரியம் செய்யும் நேரத்தில் அபசகுணமாக பேசாதே என்று பெரியவர்கள் கண்டிப்பதுண்டு. ஆனால் சிலருக்கு இந்த விஷயம் புரிவதில்லை.

தன் தந்தையின் பேச்சின் பின்னோடு பொதிந்திருந்த உள்ளர்த்தத்தை உணர்ந்தவன், “அப்பா மாமா குடும்பம் பத்திரமாக வீடு வந்துவிடுவாங்களா?” நம்பாமல் கேட்டவனை முறைத்தவர் பதில் சொல்லாமல் அங்கிருந்து நகர்ந்தார்.

அவர்கள் ஊர் சென்று சேர்ந்துவிட்டதாக தகவல் வரவே வெற்றியும் நம்பிக்கையோடு வலம் வர தொடங்கினான். மறுநாள் விடிந்தால் கிருஸ்துமஸ் என்ற நிலையில் தந்தை யார் யாருடனோ போனில் பேசுவது சந்தேகத்தை வரவழைத்தது.

சிறுபிள்ளைகள் முன்னே சற்று ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை உணராமல் ஜெகதீஸை குடும்பத்துடன் தீர்த்து கட்டும்படி யாரிடமோ பேசுவதை வெற்றி கேட்டுவிட, “அப்பா” என்று கத்தினான்.

அவன் குரல்கேட்டு சட்டென்று திரும்பியவர், “ஏய் இப்போ என்னடா உனக்கு பிரச்சனை?” மகனை அதட்டினார் நரசிம்மன்.

அவரின் கோபத்திற்கு அடிபணியும் வெற்றி அவனில்லை. அவன் பிறந்தது அவருக்காக இருந்தாலும், வளர்த்தது ஜெகதீஸ் என்பதால் அவனின் குணமே அவரின் பேராசைக்கு எதிராக திரும்பியதுதான் காலத்தின் கோலம்.

“இப்போ யாரிடம் பேசினீங்க.. எதுக்கு மாமா குடும்பத்தை இங்கே வர விடக்கூடாதென்று நினைக்கிறீங்க?” என்று கோபத்துடன் கேட்டான்.

“உங்க மாமா இங்கே வந்தால் நம்ம எல்லோரும் நடுத்தெருவில் நிற்கணும். அதுதான் உங்க மாமனை வேளாங்கண்ணியில் இருந்து திரும்பி வரும் வழியில் அடிச்சு தூக்க சொல்லிட்டேன்” சர்வ சாதாரணமாக உண்மையைப் போட்டு உடைக்க வெற்றிக்கு கோபம் அதிகரித்தது.

“அப்பா இது தப்பு. நம்மகிட்ட பணம் இருந்தால் அது நம்ம சுயமாக சம்பாரித்த சொத்தாக இருக்கணும். அடுத்தவன் சொத்துக்கு ஆசைபடுவன் நீண்டநாள் நல்ல வாழ்ந்ததாக சரித்திரமே இல்ல. நீங்க தப்புக்கு மேல தப்பு பண்றீங்க” என்று ஜெகதீஸ் மறு உருவமாக பேசிய மகனை பார்வையில் பஸ்பமாக்கிவிட எண்ணினார்.

ஆனால் அவரின் திட்டத்திற்கு அவன்தான் கருவி என்பதால் கோபத்தை கட்டுபடுத்திக்கொண்டு, “டேய் எனக்கு எதிராக திரும்பின மகனே வேண்டான்னு கொன்னு புதைக்க கூட தயங்க மாட்டேன்” என்று அவர் சொல்லி கொண்டிருக்கும்போதே அவரை இடைமறித்தான் மைந்தன்.

“இங்கே பாருங்க நீங்க மட்டும் மாமா குடும்பத்தை அழிக்க நினைச்சா உங்க உயிருக்கு நான்தான் எமன். சின்ன பையனால் என்ன முடியும்னு நினைக்காதீங்க. ஒரு பாட்டல் தூக்க மாத்திரையை நானே முழுங்கிட்டு சொத்துக்காக சொந்த மகனையே கொல்ல நினைத்த தந்தைன்னு எழுதி வச்சிடுவேன்..” அவன் சர்வ சாதாரணமாக கூற அவருக்குத் தூக்கிவாரிப் போட்டது.

“டேய் நீ என்னோட பையன்டா. நீ என்னை மாதிரி இல்லாமல் என் சகலை மாதிரி நியாயதர்மம் எல்லாம் பேசாதே” அவர் அவனை அடிக்க கை ஓங்கினார்.

பிறகு தன் கோபத்தை கட்டுக்குள் கொண்டு வந்தவர், “இந்த சொத்துக்காக இப்போ உன்னை எதுவும் செய்யாமல் விடுறேன். இன்னொரு முறை என்னிடம் எதிர்த்து பேசின அவ்வளவுதான் தொலைச்சிடுவேன் ஜாக்கிரதை” என்று விரல் நீட்டி எச்சரித்துவிட்டு அங்கிருந்து அகன்றார்.

நரசிம்மனின் திட்டமரிந்த வெற்றி மெளனமாக அங்கே நடப்பதை கவனிக்க தொடங்கினான். தன் தாயையும் கைக்குள் போட்டு வைத்திருக்கும் தந்தையின் குணமறிந்து என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்துடன் உறங்கிப்போனான் வெற்றி.

(24. 12.2004) வரலாற்றில் மறக்க முடியாத நாளாக மாறும் என்பதை யாருமே கற்பனை செய்து பாத்திராத ஒரு அகோரமான சம்பவம் நிகழ்ந்தது. இந்தோனோஷியாவின் சுமித்ரா தீவில் உள்ள கடற்கரையில் அதிகாலை நேரத்தில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.

அதன் தாக்கத்தினால் கடலின் அலைகள் மேலெழும்ப தொடங்கியது. திடீரென்று நித்திரை கலைந்து கண்விழித்த செவ்வந்தி தன்னருகே படுத்திருந்த தாய் – தந்தையை பார்த்தாள். அவர்கள் இருவரும் ஆழ்ந்த நித்திரையில் இருக்க அவளின் காதுகளில் மெல்லிய இரைச்சல் போல ஒலிகேட்க தொடங்கியது.

முதலில் ஒன்றும் புரியாமல் சுற்றும் முற்றும் பார்வையை சூழலவிட்டபடி எழுந்தவள் ஜன்னலின் வழியாக வெளியே வேடிக்கை பார்த்தாள். கடல் அலைகள் மேலெழும்பி கரையோரம் இருக்கும் குடிசைகளை வாரிச்சுருட்டி செல்வதை கண்முன்னே கண்டவள், “அப்பா.. அம்மா..” என்று பயத்தில் காத்த தொடங்கினாள்.

அவளின் சத்தம்கேட்டு கண்விழித்த ஜெகதீஸ், சங்கீதா இருவரும், “என்னடா.. என்னாச்சு குட்டிமா” என்று பதட்டத்துடன் ஜன்னலை நெருங்கியவர்கள் அங்கே கடல் ஆடும் கோர தாண்டவத்தை கண்முன்னே கண்டனர்.

கடலின் அலைகள் வேக வேகமாக மேல் எழும்பி கரையோரம் இருக்கும் வீடுகளை வாரிச்சுருட்டி செல்வதை கண்ட ஜெகதீஸ், “இங்கே இருப்பது ஆபத்தானது. வாங்க நம்ம முதலில் கிளம்பலாம்” என்று தன் மகளின் கையைப் பிடிக்க அவளோ தாயின் கரத்தை பிடித்துகொண்டாள்.

தங்களின் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எண்ணி வேகமாக மாடியிறங்கி செல்ல அங்கே கண்ணுக்கெட்டும் தூரம் வரை இருந்த குடிசைகள் அனைத்தும் கடலுக்கு இரையாகி இருந்தது. கடல் அலைகளின் உயரம் அதிகரிப்பதை கண்ட ஜெகதீஸ் அங்கிருந்து ஓட ஆரம்பிக்க கடலலைகள் கரையைக் கடந்து ஊருக்குள் நுழைந்திருந்தது.

அவர்கள் வேகமாக ஓடிக் கொண்டிருக்கும்போது கடலலைகள் அவர்களை மூழ்கடித்து உள்ளிழுத்தது. தன் தாய் – தந்தையின் கரத்தை பிடித்திருந்த செவ்வந்தி, “அப்பா – அம்மா கையை விடாதீங்க” என்று சொல்லி முடிக்கும்போது கடலலை அவளை இழுத்து சென்றிருந்தது.

அந்த பேரிடரை பற்றி அனைத்து டி.வி.நியூஸில் சொல்லி கொண்டிருப்பதை கேட்டபடி தூக்கம் கலந்து எழுந்து வந்தான் வெற்றி. அங்கே கடல் அலைகள் உயர எழும்பும் காட்சியைக் கண்டு, “அப்பா என்னப்பா இது..” என்று புரியாமல் கேட்டான்.

“இந்தோனேசியாவில் இருக்கிற தீவில் நிலநடுக்கம் வந்ததால் ஊருக்குள் சுனாமி வந்திடுச்சு வெற்றி. நிறைய பேரோட உயிர் போயிருக்குன்னு சொல்றாங்க. நல்லவேளை நான் உன்னை ஜெகதீஸ் குடும்பத்துடன் அனுப்பல..” என்று சொல்லும்போதுதான் தன் தாய் மாமன் குடும்பம் நினைவு வந்தது.

“அப்பா மாமா குடும்பத்துக்கு ஏதாவது ஆகிருக்குமா?” என்று அவன் பதட்டத்துடன் விசாரிக்க, “ம்ம் இந்நேரம் மூணுபேரும் இறந்திருப்பாங்க. எனக்கு அடியாளுக்கு கொடுக்க வேண்டிய பணம் மிச்சமாகிடுச்சு” என்று நெஞ்சில் இறக்கம் துளியுமின்றி கூறிச் சென்றார்.

அன்று முழுவதும் செய்தி வாசிக்கும் சேனல்களை மாற்றி மாற்றி பார்த்த வெற்றிக்கு கடைசியில் புரிந்த ஒரே விஷயம் இனி ஜெகதீஸ் குடும்பத்தை பார்க்க முடியாது என்பது மட்டுமே! தன்னை அக்கறையோடு பார்த்துக் கொண்ட பாசமிகுந்த குடும்பத்தை இழந்துவிட்டதை உணர்ந்த வெற்றி அழுது காய்ச்சலை வரவழைத்துக் கொண்டான்.

கடலின் கோரதாண்டவம் மெல்ல குறைந்து கடலின் அலைகளின் உயரம் மெல்ல குறைந்து கடல் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது. செவ்வந்தி வெகுநேரம் கழித்து முகத்தில் பட்ட சூரிய வெளிச்சத்தால் தன்னுணர்வு அடைந்து, “லோக்.. லோக்..” என்று இருமியபடி கண்விழித்து அந்த இடத்தை பார்த்தாள்.

கரையோரம் மனிதர்களின் உடல்களும், படகுகளும், காடுமரங்களும் தாறுமாறாக கிடந்தது. சிலர் அங்கிருந்தவர்கள் அனைவரும் ஏதோவொரு விதத்தில் பாதிக்கபட்ட நிலையில் கண்ணீரோடு காட்சி தந்தனர். மரண ஓலம் போல ஒலித்த அழுகுரல்கள்.

முதலில் செவ்வந்திக்கு தான் எங்கிருக்கிறோம் என்றே தெரியவில்லை. அங்கிருந்த உடல்களில் தன் தாய் – தந்தையின் உடலைத் தேடியது பிஞ்சு உள்ளம். ஆனால் கிடைக்காமல் போகவே கண்களில் கண்ணீர் பெருகிட, “அம்மா.. அப்பா..” என்று அழுக தொடங்கினாள்.

மற்றொரு பக்கம் பசி வேறு வயிற்றை கிள்ளியது. அவளைப் போலவே பசியில் அழுகையோடு இருந்த குழந்தையைக் கண்டு அவளுக்கும் அழுகை அதிகரித்தது.

கடல் ஆடிய தாண்டவத்தில் பாதிக்கபட்டவர்களுக்கு விமானங்கள் மூலமாக உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது. நிறைய பேர் குடும்பத்தை இழந்தும், இருப்பிடத்தை இழந்தும் தவித்தனர். கடலோரத்தில் குடிசை கட்டி வாழ்ந்த பல மீனவ குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர்.

பணம் படைத்த பெண்ணாக பிறந்த செவ்வந்தி ஒரே நாளில் அனாதையாக மாறிப்போனாள். உயர் ரக ஆடைகளை அணிந்திருந்த பெண்ணவள் அடுத்த வேலை உணவு, உடை இரண்டுக்கும் அடுத்தவர்  கையேந்த வேண்டிய நிலையில் இருந்தாள். அந்த வயதில் தாய் – தந்தையை இழந்து தனித்து நின்றாள்.

அங்கே வந்த சீரமைப்பு படையினர் பேசியபோதுதான் தான் கரை ஒதிங்கிய ஊர் கன்னியாகுமரி என்ற விவரமே அவளுக்கு தெரிய வந்தது. அவளை போன்ற குடும்பத்தை இழந்த குழந்தைகளை அருகே இருக்கும் மண்டபத்தில் தற்காலிகமாக தங்க வைத்தனர். அங்கேயும் சில வக்கிரம் பிடித்த மனிதர்களின் கையில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ள விடியும் வரை விழித்திருப்பாள்.

பிறகு பக்கத்தில் இருந்த அனாதை இல்லத்தில் அனைவரையும் சேர்த்தனர். இரவு கண்ணை மூடினால் அந்த கோர சம்பவம் மட்டுமே அவளின் நினைவிற்கு வந்தது. உரிய பாதுகாப்பு இல்லாமல் படிப்பை மட்டுமே மனதில் வைத்துக்கொண்டு நிதர்சனத்தை உணர தொடங்கினாள்.

மற்றொரு பக்கம் தன் மகளை கடலுக்கு பலி கொடுத்த ஜெகதீஸ் மனையாளின் பிடிவாதத்தினால் வேளாங்கண்ணியில் தங்கிவிட்டார். தன் மகள் இறக்கவில்லை என்ற எண்ணத்திலும், என்றோ ஒருநாள் தங்களை தேடி செவ்வந்தி வருவாள் என்ற எண்ணத்தில் பெற்றவர்கள் நம்பிக்கையுடன் ஒவ்வொரு நாளாக கடத்த தொடங்கினர்.

இதற்கிடையே தனக்கு அமைந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி ஜெகதீஸ் குடும்பம் சுனாமியில் இறந்துவிட்டதாக நினைத்து நீலிகண்ணீர் வடித்து சொத்துகளை நிர்வாகம் செய்யும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார் நரசிம்மன். அவருக்கு தகுந்த மாதிரி பேசும் மனையாளை தன் கை பாவையாக மாற்றியவர் தான் இரண்டு பிள்ளைகளுக்கு தந்தை என்பதை மறந்தார்.

தாய் – தந்தையின் திடீர் தலைகீழ் மாற்றத்தால் அதிகம் பாதிக்கபட்டது ஜமுனா மட்டுமே. அவளுக்கு தேவையானதை கவனித்து கொள்ளும் அக்கறை இல்லாமல் சென்ற பெற்றவர்களை வெறுத்து அவளை கவனிக்கும் பொறுப்பை தனதாக்கி கொண்டான். அதன்பிறகு அவள் மட்டுமே வெற்றியின் உலகமாக  மாறிப்போனாள். வெற்றி முதல் பரிசு வாங்கி வந்தாலோ, அவன் நல்ல மதிப்பெண் எடுத்தாலோ நரசிம்மனுக்கு பிடிக்கவில்லை.

ஏற்கனவே தந்தையின் சுயரூபம் அறிந்திருந்த வெற்றிக்கு படிப்பு மட்டுமே தனக்கு ஆதாரம். அதனால் எக்காரணத்தை கொண்டு படிப்பை பாதியில் நிறுத்தும் நிலை வரக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காகவே நன்றாக படித்தான்.

அவனால் ஏற்பட்ட கோபத்தை தன் மனையாளிடம் காட்டிட, “ஏங்க அவன் நம்ம பையன்..” என்றாள் விமலா.

“அவன் என் மகன்தான். ஆனால் அவனுக்கு உயிர் என்னவோ அவன் மாமா ஜெகதீஸ் தான். அவன் வாய் திறந்து உண்மையைச் சொன்னால் நம்ம இருவரும் கம்பி எண்ணனும். அதனால் அவனை இப்போதிருந்தே தட்டி வைக்கணும்” என்றவர் தீவிரமாக யோசித்து ஊருக்குள் அவனுக்கு ராசி இல்லையென கதை காட்டினார்.

அனைத்து உண்மையும் தெரிந்தும் தன் தந்தையின் தவறான எண்ணத்திற்கு உரிய தண்டனை தர முடியாமல் தங்கையின் மீது வைத்துவிட்ட பாசத்திற்காக மௌனமாகிப் போனான் வெற்றி வேந்தன். அவள் கடந்த காலத்தின் பிடியிலிருந்து தன்னை மீட்டுக்கொண்டு கணவனை ஏறிட்டாள் செவ்வந்தி.