Malar – 25
Malar – 25
அத்தியாயம் – 25
அதிகாலை நேரம் தூக்கம் கலைந்து எழுந்த வெற்றியின் பார்வை மனையாளின் மீதே நிலைத்தது. தன் மார்பை மஞ்சமாக்கி உறங்கியவளின் முகத்தை மறைத்த கூந்தலைக் காதோரம் ஒதுக்கிவிட்டு அவளின் நெற்றியில் இதழ் பதித்தான்.
அதே நேரத்தில் அவளின் முகம் மாறுவதைக் கவனித்தவனின் புருவங்கள் சுருங்கியது. அவளின் வலது கரத்தை அழுத்தமாக பிடித்துக்கொள்ள, “அப்பா.. அம்மா..” என்று உளறினாள்.
“அத்தையும், மாமாவும் கப்பலில் ரொம்ப பத்திரமாக இருக்காங்க.. கடலோட சீற்றம் அடங்கி வெகுநேரமாச்சு.. நீ மட்டும்தான் தத்தளிச்சிட்டே இருக்கிற.. செவ்வந்தி கையைக் கொடு..” என்ற குரலில் இருந்த நிதானம் கண்டு முயற்சி செய்து தண்ணீருக்கு மேல் பார்வையைச் செலுத்தினாள்.
அவளின் ஆள் மனதை கடலாக உருவகம் செய்திருந்ததால் அது அமைதியாக இருந்தது. ஒவ்வொரு நாளும் அவர்கள் கொண்ட தாம்பத்தியம் அவளின் ஆழ்மனதினுள் கணவன் தன்னை பாதுகாப்பான் என்ற நம்பிக்கையை விதைக்க செவ்வந்தியின் கனவில் உருவம் பெற்ற அவளுக்கு வெகு அருகில் நின்ற கப்பலைக் கவனித்தவள், “வேந்தன் மாமா குரல் மாதிரி கேட்குது” என யோசிக்க தொடங்கினாள்.
செவ்வந்தியின் மனம் புரிய, “ம்ஹும் உன் பக்கத்தில் இருக்கிற கப்பலில் நான் நிற்பது தெரியல” என்று கூற பார்வையைச் சுழலவிட்டாள் பெண்ணவள்.பெரிய கப்பலின் மீது தன் பெற்றோரையும், சின்ன கப்பலில் வெற்றியின் முகமும் கண்டு அவளின் பயம் தெளிந்தது.
அவளின் பளிங்கு முகத்தில் தோன்றி மறைந்திடும் உணர்வுகளை கவனித்தவன், “செவ்வந்தி என்ன யோசிக்கிற.. உனக்கு நீச்சலடிக்க தெரியும் இல்ல.. சீக்கிரம் வா..” என்றவன் மீண்டும் குரல்கொடுக்க அதை பின்பற்றி கனவில் நீச்சலடித்து சின்ன கப்பலின் விளிம்பைப் பிடித்தவளின் கரம்பிடித்து மேலே தூக்கியவன் அவளை இறுக்கி அணைத்தான்.
அதுவரை கடலுக்குள் தத்தளித்த மனம் சட்டென்று நிகழ்காலம் நோக்கி பயணித்தது. திடீரென்று மனம் வேகமாக வேலை செய்ய தான் காண்பது கனவென்று உணர்ந்து விழி திறக்க படுக்கையில் வெற்றியின் அணைப்பில் இருப்பதை உணர்ந்தவளின் விழிகளில் கண்ணீர் கரையுடைத்தது.
“வெற்றி அந்த கனவில் அம்மா, அப்பா இருவரும் பத்திரமாக இருப்பதை பார்த்தேன். அந்த கடல் சீற்றத்தில் இருந்து தப்பிச்சு கப்பலில் ஏறிட்டேன்” என்றவளின் முகத்தை முத்தத்தால் அர்ச்சித்தவனின் கண்களிலும் கண்ணீர் பெருகியது.
சிலருக்கு உடலில் ஏற்படும் காயங்களுக்கு மருந்து மருத்துவரிடம் இருக்கும். மனிதனின் நினைவலைகள் மிகவும் நுட்பமானது. நாம் வேண்டாம் என்று ஒதுக்கும் நினைவுகளை மீண்டும் நினைவுபடுத்திடும்.
சில நேரங்களில் ஆழ்மனத்தின் வழியாக நாம் மனதோடு புதைத்த ஞாபகம் உருவமெடுத்து அவர்களை வதைக்கும். ஆழ்ந்த உறக்கத்தால் ஏற்படும் கனவில் பிடியிலிருந்து தப்பிக்க நினைப்பவர்கள் கண்விழித்தால் அவர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் கிடையாது.
“ஹே இனிமேல் நீ கவலைபட வேண்டாம். அந்த கனவின் பிடியிலிருந்து நீ தப்பிச்சிட்ட..” என்றவன் சந்தோஷத்துடன் கூற கணவனின் கண்ணீரைத் துடைத்துவிட்டு மார்பினுள் புதைய சென்றவளை தடுத்து அவளின் இதழைச் சிறைபிடித்தான் கணவன்.
காலை நேரம் பகலவனின் வரவினால் கீழ்வானம் சிவக்க கணவனின் கை சிறையினுள் இருந்த செவ்வந்தியின் முகம் செவ்வானத்துடன் போட்டி போட்டது. தன்னவளை முழுமையாக மீட்டுவிட்ட சந்தோசம் அவனின் கண்களில் தெரிந்தது.
“இத்தனை வருடமாக எங்கிருந்த வெற்றி? என்னை இந்தளவு நேசிக்கிற உன்னைப் பார்க்கும்போது எவ்வளவு சந்தோசமாக இருக்கு தெரியுமா? உன்னுடைய ஒவ்வொரு செயலும் என்னை உயிர்ப்புடன் வச்சிருக்கு.. ஐ லவ் யூ” என்றவளை இமைக்க மறந்து பார்த்தான்.
“ராசி இல்லாதவன்னு மத்தவங்க விட்டு விலகியபோது நீ மட்டும் தான் அப்பாவின் வழிகாட்டுதல், அம்மாவின் அக்கறை, தோழியின் பாசம், ஆசானின் நம்பிக்கை என்று அனைத்துமாய் இருந்து என்னை எனக்கே அடையாளம் காட்டிய கண்ணாடி நீதானடி..” அவளின் நெற்றியில் அழுத்தமாக தன் நேசத்தை பதிவு செய்தான்.
அவளின் மலர் முகத்தை கையில் தாங்கி, “இன்னைக்கு மனைவியாக நீ என்னோடு இருக்கும்போது என் பேருக்கு அர்த்தம் கிடைச்சமாதிரி இருக்கு. உன்னை உனக்காக நேசிப்பதில் இருந்து என்னைக்கும் பின்வாங்க மாட்டேன்.. ஐ லவ் யூ பொண்டாட்டி” என்றவனின் வார்த்தைகள் மயிலிறகாய் மனம் வருடிச் சென்றது.
அவனைவிட்டு விலகி எழுந்த செவ்வந்தி குளியலறைக்குள் சென்று மறைய சிந்தனையுடன் படுக்கையில் அமர்ந்தான் வெற்றி. ஜெகதீஸ் – சங்கீதா இருவரும் அந்த இடத்திலிருந்து வீடு மாறி போயிருக்க மனோஜ் அவர்களைத் தேடி கண்டுபிடிக்க முடியாமல் திண்டாடினார். அவர் போன் செய்தாலும் ரிங் சென்றதே தவிர யாரும் எடுக்கவில்லை. இந்நிலையில் அடுத்து என்ன செய்வதென்ற கேள்வி மனதில் எழுந்தது.
“இன்னைக்கு கடைக்கு சீக்கிரம் கிளம்பணும் வெற்றி” என்றவுடன் சரியென்று தலையசைத்த வெற்றி டவலை எடுத்துகொண்டு குளியலறைக்குள் சென்று மறைய செவ்வந்தி சமையலறை நோக்கி நகர்ந்தாள்.
காலை உணவு வேளையில் மூவரும் சாப்பிட அமர விமலாவும், நரசிம்மனும் அங்கே வருவதைக் கண்ட ஜமுனா, “ஜோடிக்கிளிகள் காரணமில்லாமல் எதுக்கு இங்கே வருது” என முணுமுணுக்க செவ்வந்தியின் உதடுகளில் குறுநகை மின்னி மறைந்தது.
“செல்லம்மா” என அண்ணனின் அதட்டலில் தலையைக் குனிந்தவள் அமைதியாக சாப்பிட தொடங்க கணவனின் முக இறுக்கத்திற்கு காரணம் புரியாமல் யோசனையுடன் மாமனார், மாமியாரின் மீது கவனம் பதித்தாள்.
“வெற்றி இந்த வாரம் நம்ம குடும்ப வக்கீல் வருவார்” என்று நினைவுபடுத்தினார். அவரின் குரல் ஓங்கி ஒலிப்பதை கண்டு ஜமுனாவின் முகத்திலும் சிந்தனை படர்ந்தது.
“ம்ஹும்.. எனக்கும் நினைவு இருக்குப்பா.. நான் எதிர்பார்த்துட்டு இருக்கிற நாள் இல்லையா?” இருபொருள்பட கூறியவன் கைகழுவிவிட்டு எழுந்து செல்ல நரசிம்மன் முகத்தில் கடுமை பரவியது.
விமலா அமைதியாக இருக்க மற்ற இருவரும் உணவை முடித்துக்கொண்டு எழுந்து செல்ல, “உன் மகனோட திமிரு குறையவே இல்ல” எரிச்சலோடு கூறினார்.
சிறிதுநேர அமைதிக்குப் பிறகு, “நேர்மையாக இருக்கும் சிலருக்கு நியாயமாக வரும் கோபம் மத்தவங்க கண்களுக்கு திமிரு மாதிரி தெரிந்தால் அதுக்கு அவன் பொறுப்பில்லை” என்ற மனையாளை முறைத்தார்.
அவரின் பார்வையை பயமின்றி எதிர்கொண்டு, “என்னை முறைத்து என்னங்க ஆகப்போகுது? உங்களோட பிளான்படி அனைத்து சொத்தும் உங்க கைக்கே வரப்போகுது.. அதுக்குப்பிறகு இந்த விமலா எல்லாம் கண்ணுக்கு தெரியுமோ என்னவோ?” ஏளனமாக கூறியவர் கணவனுக்கு உணவைப் பரிமாறிவிட்டு விலகி சென்றார்.
மூவரும் மற்ற சிந்தனைகளை ஒதுக்கிவிட்டு ஜவுளிகடைக்கு கிளம்பிச் செல்ல கடைக்கு முன் நின்று யாருடனோ பேசிக்கொண்டிருந்தான் ராம்மோகன். அவனுடன் சரண்யா மற்றும் சில கடை ஊழியர்கள் நின்றிருப்பதை கவனித்த செவ்வந்தி, “என்னாச்சு” என்ற கேள்வியுடன் அவர்களை நெருங்கினாள்.
“அது ஒண்ணுமில்ல அக்கா. இங்கே எந்த கடையில் பைக்கை ரிப்பேர் பண்ண கொடுத்தாலும் சரியா செய்து தர மாட்டேங்கிறாங்க. ஆனால் நம்ம பார்த்திபன் அண்ணா பைக் மட்டும் சூப்பரா போகுது.. அதுதான் எந்த மெக்கானிக் ஷாப் என்று விசாரிச்சிட்டு இருந்தார்” அவள் சாதாரணமாக கூறவே,
“இந்த கூட்டத்தை பார்த்து நானே பயந்து போயிட்டேன்” என்றவள் சொல்லி முடிக்க வெற்றி கடையைத் திறந்து உள்ளே நுழைய மற்றவர்கள் அவனை பின் தொடர்ந்தனர்.
“அண்ணா அந்த கடை எங்கே இருக்குன்னு சொல்லுங்க” என்று விசாரித்த கணவனை முறைத்துவிட்டு தன் இடத்தில் சென்று அமர்ந்தாள்.
“அது எங்க ஊரில் ரெடி பண்ணினேன் தம்பி..” என்றவர் பாவமாக சொல்ல அடுத்து அவன் ஊரைப்பற்றிய விசாரணையில் இறங்கினான்.
அவனின் தொல்லையைப் பொறுக்க முடியாமல், “அண்ணா தயவுசெய்து சீக்கிரம் பேசி முடிச்சிட்டு வேலையைக் கவனிக்கிறீங்களா?” என எரிந்து விழுந்த ஜமுனாவை பார்வையால் அடக்கினாள் செவ்வந்தி.
“இல்ல அண்ணி இவங்க பேசிட்டே இருக்காங்க” என்றவள் கூற, “அவங்களுக்கு வேலை இல்லாத சமயத்தில் சம்பளம் கொடுப்பது நம்ம கடமை. அதுக்காக பேச வேண்டாம்னு சொல்ல இது நேரம் இல்ல ஜமுனா இப்போ அர்ஜண்ட் வொர்க் எதுவும் இல்ல அதனால் கண்டுக்காமல் விடு” என அவளுக்கு புரியும்படி கூறிவிட்டு மற்ற வேலைகளை கவனித்தாள்.
“வேளாங்கண்ணியில் ஒரு குட்டி மெக்கானிக் ஷாப்பில் ரெடி பண்ணினேன் தம்பி” என்றார் பார்த்திபன்.
“அவ்வளவு தூரம் என்னால் போக முடியாதே..” அவன் சிந்தனையோடு சொல்ல,
“அப்புறம் எதுக்கு அவரைப்போட்டு இந்த பாடுபடுத்துற” பிரகாஷ் கோபத்துடன் கேட்டான்.
“எந்த தொழிலாக இருந்தாலும் சுத்தமாக செய்து கொடுப்பவர்கள் மீதுதானே நம்ம கவனம் திரும்பும். அதுமாதிரி தான் நானும் விசாரிச்சேன். அந்த அண்ணா இங்கேயே இருந்திருந்தால் என் பைக்குடன் சேர்த்து இன்னும் தெரிஞ்சவங்க நாலுப்பேரை அவருக்கு அறிமுகபடுத்தி வைத்திருப்பேன்” அவன் காரணத்தைச் சொல்ல மற்றவர்கள் அமைதியாகினர்.
அவனின் பேச்சில் நியாமிருப்பதை உணர்ந்து, “அவரோட போன் நம்பர் தரேன் நீ பேசி பார்க்கிறாயா?” என கேட்டவுடன் முகம் பளிச்சென்று மாறிட நம்பரை வாங்கி உடனே அவருக்கு அழைத்து பேசினான்.
ராம் பேசிவிட்டு கடைக்குள் நுழைய, “என்ன சொன்னாரு” என்றாள் ஜோதி.
“அவரை இங்கே வர சொன்னதுக்கு சரின்னு சொல்லிட்டாரு. அவரோட மனைவிக்கு கொஞ்சம் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவங்களை தனியாக விட்டுட்டு வர முடியாது. இருவரும் சேர்ந்து வந்தால் செலவாகும்னு சொல்றாரு” என்றவனின் முகத்தில் சிந்தனை படர்ந்தது.
அதுவரை அமைதியாக இருந்த வெற்றி, “அவருக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுக்கலாம். பணம் ஒரு விஷயமே இல்ல. ஆனால் நீ சொன்ன மாதிரி தொழில் சுத்தமாக இருக்கிறதா அது பற்றி மட்டும்தான் யோசிக்கணும்” என்றவனும் அவனின் பைக்கை அவரிடம் கொடுக்க நினைத்து தன் பக்கமிருக்கும் நியாயத்தைக் கூறினான்.
அந்த நேரத்தில் பைக்கை தள்ளி வந்த மைதிலி வண்டியை நிறுத்திவிட்டு கடைக்குள் நுழைய, “என்னாச்சு வண்டியைத் தள்ளிவிட்டு வந்திருக்கிற?” என்று தோழியிடம் வாட்டர்கேனை நீட்டியபடி விசாரித்தாள் செவ்வந்தி.
“இந்த ஸ்கூட்டி செம மக்கர் பண்ணுது செவ்வந்தி. வீட்டில் இருந்து கிளம்பிய கொஞ்ச நேரத்தில் பாதிவழியில் நின்றுவிட்டது. எந்த மெக்கானிக் கடையில் கொடுத்தாலும் இரண்டாயிரம், மூணாயிரம்னு பணம்தான் தண்ணியாக கரையுதே தவிர வண்டியை மட்டும் சரியாக யாருமே ரெடி பண்ணி தரமாட்டேங்கறாங்க” எரிச்சலோடு கூறியவள் மடமடவென்று தண்ணியைக் குடித்துவிட்டு நிமிர்ந்தாள்.
அப்போதுதான் அங்கே அனைவரும் ஓரிடத்தில் இருப்பதைக் கவனித்தவள், “என்ன டிஸ்கஷன் போயிட்டு இருக்கு” என்று விசாரிக்க பிரகாஷ் நடந்ததை சொல்லி முடித்தான்.
“ஹப்பா சாமிகளா அந்த அண்ணனுக்கு முதலில் ஸ்பெஷல் கார் ஏற்பாடு அனுப்பி கூட வர வைங்க.. எனக்கு என் ஸ்கூட்டியை நல்ல ரெடி பண்ணி தரனும் அவ்வளவுதான். மற்றபடி இரண்டு நாள் என்னோடு தங்கி கொள்ளட்டும். பணம் பற்றியெல்லாம் யோசிக்க வேண்டாம்..” மடைதிறந்த வெள்ளமாக உரைத்தாள்.
“என்னோட வண்டியும், ஜமுனாவோட ஸ்கூட்டி எல்லாமே கொஞ்சம் வேலை பார்க்க வேண்டியிருக்கு. அதனால் அவரைக் கிளம்பி வர சொல்லு.. மொத்த செலவை ஆளுக்கு பாதியாக பகிர்ந்துக்கலாம்” வெற்றி முடிவை சொல்ல மற்றவர்கள் ஒரு மனதாக ஏற்றுக் கொண்டனர்.
ராம் மீண்டும் அவருக்கு போன் செய்து தங்களின் முகவரியைக் கூறவே, “இன்னும் மூன்றுநாள் இங்கே வேலையிருக்கு தம்பி. நாம் முடிச்சிட்டு கிளம்பி வரேன்” என்று சொல்லவே அவனும் அழைப்பைத் துண்டித்தான்.
அடுத்தடுத்த நாட்களில் வேலையில் தங்களின் கவனத்தை திருப்பினர்.
அன்று காலை சீக்கிரமாக கடையைத் திறந்த வெற்றி, “நான் பேங்க் வரை போயிட்டு வரேன்” என்று விடைபெற்றுச் செல்ல அர்ஜண்ட் பிளவுஸ் ஒன்றை தைக்கும் வேலையில் மும்பரமாக இறங்கினாள் செவ்வந்தி.
ஏனோ காரணமின்றி மனம் படபடவென்று அடித்துக்கொள்ள அவளின் கவனம் மெல்ல சிதறிட மிசின் ஊசி அவளின் இடது கையின் ஆள்காட்டிவிரலை பதம் பார்க்க, “ஆ” என்ற அலறலோடு எழுந்தாள்.
ஊசி மூன்று துண்டுகளாக உடைந்ததில் நகத்தில் நடுவே ஆழமாக இறங்கி சதையைக் கிழித்துக்கொண்டு வெளியே வந்திருக்க அதன் மற்ற பாகங்கள் சதையில் அங்கொன்றும், இங்கொன்றுமாக தைத்திருக்க கண்டு நூலை வெட்டிவிட்டு எழுந்து வெளியே சென்றாள்.
விரலில் வலியின்றி இருக்க ஊசியை வலது கையால் பிடுங்க முயற்சி செய்து முடியாமல் போகவே, “ஐயோ பிடுங்கிய பிறகு வலி உயிர் போகுமே.. இன்னைக்கு என்ன நினைவில் தைக்க உட்கார்ந்தேன்னு தெரியல” என்று புலம்பினாள்
அந்த நேரத்தில் கிட்டதட்ட ஐம்பது வயதைக் கடந்த ஒருவர் கடைக்குள் நுழைவதைக் கண்டு, “என்ன வேணும்” என்ற விசாரணையுடன் அவரை நெருங்கினாள்.
அவளை நிமிர்ந்து பார்த்தவரின் முகம் பரீட்சையமான முகமாக தோன்றவே சிந்தனையோடு அவரை நெருங்கிய செவ்வந்தியிடம், “நான் பைக் மெக்கானிக் ஜெகதீஸ். வேளாங்கண்ணியில் இருந்து வந்திருக்கேன். இரண்டு நாளைக்கு முன்னர் ராம்மோகன் என்ற தம்பி இந்த முகவரிக்கு வர சொல்லி போன் பண்ணினாரு” என்று தான் வந்த விஷயத்தை தடுமாற்றம் இன்றி உரைத்தார்.
அவரின் பெயர் அவளுக்கும் பிரளயத்தை ஏற்படுத்திட, “இன்னும் அவர் கடைக்கு வரல.. நீங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க” என்றவள் அவருக்கு சேரை இழுத்துப் போட்டு அமர சொன்னாள்.
“என் மனைவி வெளியே நிற்கிறாம்மா.. நான் போய் அவளை அழச்சிட்டு வரேன்” என்றவுடன் சரியென்று தலையசைத்த செவ்வந்தி கையை உதறிவிட்டு, ‘ஷ்..’ என்றாள்.
அதில் சட்டென்று திரும்பியவரின் பார்வை அவளின் கையில் ஊசி ஏறி இருப்பதைக் கவனித்ததும், “என்னம்மா கையில் ஊசி ஏறியிருக்கிற மாதிரி இருக்கு” என்று கேட்க ஒப்புதலாக தலையசைத்த செவ்வந்தியின் கையைப் பிடித்து கவனமாக ஊசியை எடுத்தார்.
அவரின் தோற்றம் ரொம்பவே மாறிப் போயிருந்த காரணத்தினால் அவளால் சட்டென்று அவரை இனம் காண முடியாமல் தடுமாறியவளிடம், “கொஞ்சம் கவனமாக வேலை செய்திருக்கலாம் இல்லம்மா” என்றார் அக்கறையுடன்.
“இனிமேல் கவனமாக இருக்கேன் அப்பா” என்றவளை நிமிர்ந்து பார்த்தவரின் மனமும் நெகிழ்ந்தது.
“விரலில் இரத்தம் வருது.. முதலில் கையைக் கழுவிவிட்டு ஒரு காட்டன் துணியை தண்ணியில் நனைத்து கட்டுப் போடுமா” என்றபோது அவரை தேடி வந்த பெண்மணியை அடையாளம் கண்டு கொண்ட செவ்வந்தி இன்ப அதிர்ச்சியில் சிலையென உரைந்து நின்றாள்.
“அந்த தம்பி இன்னும் வரலன்னு சொல்றாங்க” என்று மனைவியிடம் கூறியவரின் மீது பார்வையை பதித்தாள். இத்தனை வருடமாக இருந்துவிட்டதாக நினைத்த தாய் – தந்தையே நேரில் கண்ட சந்தோஷத்தில் அவளுக்கு பேச்சு வர மறுத்தது.
“ஐயோ இந்த பொண்ணு கையில் இரத்தம் வருது” அவளை நெருங்கிய சங்கீதாவைக் கண்டு, “ஒரு நிமிஷம்” அங்கிருந்து அகன்றாள்.
பெற்றோரை பார்த்த சந்தோஷத்தில் கைவிரல் காயத்தின் வலியை மறந்து வெற்றிக்கு அழைத்தவளின் அருகே வந்த மைதிலி, “என்னடி பதட்டமாக இருக்கிற?” என விசாரிக்க அவளின் பின்னோடு ஜமுனாவும் வருவதைக் கண்டாள்.
“உள்ளே.. வேளாங்கண்ணி.. மெக்கானிக்.. இல்ல அப்பா.. அம்மா.. உயிரோடு..” என்று கோர்வையாக சொல்ல முடியாமல் தடுமாறிய செவ்வந்தியின் கவனம் இப்போது கைபேசியின் மீது திரும்பியது.
வெற்றி அழைப்பில் இருப்பதை கவனித்த செவ்வந்தி, “என்னங்க எந்த வேலையாக இருந்தாலும் பரவால்லா விட்டுட்டு உடனே கிளம்பி கடைக்கு வாங்க” என்று கட்டளையிட்டு போனை வைத்தவளின் பரபரப்பு மற்ற இருவரையும் தொற்றிக் கொண்டது.
மைதிலி மற்றும் ஜமுனா இருவரும் வந்தவர்களை உபசரிக்க கணவனுக்காக காத்திருந்தாள். சிறிது நேரத்தில் பதட்டத்துடன் கடைக்குள் நுழைந்தவன் சேரில் அமர்ந்திருந்த இருவரையும் அடையாளம் கண்டு, ‘மாமா.. அத்தை..’ என்றவனின் பார்வை மனையாளின் மீது படிந்தது.
தன் உணர்வுகளை வெளியிட தெரியாத பேதையாக காட்டில் துளைந்து போன குழந்தை போல மருண்டு விழித்த மனைவியின் மனநிலை புரிந்து அவளை நோக்கிச் சென்றான்.