Malar – 26

125494183_2782475112074669_6357658000275875444_n-e3efb7c4

Malar – 26

அத்தியாயம் – 26

தன் மனையாளின் அருகே சென்றவன் அவளின் கையைப்பிடித்து அழுத்தம் கொடுத்தான். சட்டென்று உடைந்த செவ்வந்தியின் கண்களில் கண்ணீர் கரையுடைக்க கண்டவன் யாரும் தங்களைக் கவனிக்கவில்லை என்றவுடன் அவளை இழுத்துக்கொண்டு ஓய்வு அறைக்குள் நுழைந்தான்..

செவ்வந்தியை இழுத்து அணைத்த வெற்றியின் கரங்கள் அவளின் முதுகை ஆறுதலாக வருடினான். மாறாக அவனின் நெஞ்சினுள் புதைந்த பெண்ணவளின் கண்ணீர் அவளின் சட்டையை நனைத்தது. அவளைப் போலவே நீண்ட நாட்களுக்கு பிறகு அவர்களை உயிரோடு சந்தித்த சந்தோஷத்தில் அவனின் கண்களும் கலங்கியது.

அங்கே அழகிய மௌனம் குடிகொள்ள, “செவ்வரளி” என்றவனின் அழைப்பில் சட்டென்று நிமிர்ந்து பார்த்த பெண்ணின் உதடுகளில் புன்முறுவல் பூத்தது.

தலையை வலது பக்கமாக சரித்து, “வேந்தன் மாமா” மங்கையவளின் அழைப்பில் தித்திப்பாக நனைந்தவனின் உதடுகளில் மென்னகை அரும்பியது.

அவளின் பளிங்கு முகத்தைக் கையில் ஏந்தி, “இனிமேல் உன் கண்ணில் கண்ணீர் வரவே கூடாதுடி.. என்னோட செவ்வரளியை நான் ராணி மாதிரி பார்த்துக் கொள்வேன்” என்றவுடன் சந்தோஷத்தில் முகம் மலர அவனின் கையைப்பிடித்தவளின் பழைய தைரியம் மீண்டு இருந்தது..

அவனை இழுத்துக்கொண்டு வெளியே செல்ல நினைத்தவளைத் தடுத்து, “இன்னைக்கு ஒருநாள் மட்டும் அவங்களுக்கு நீதான் செவ்வந்தி என்ற உண்மையைச் சொல்ல வேண்டாம்” மனத்தைக் கல்லாக்கிக்கொண்டு கூறியவனை நம்பாமல் பார்த்தாள்.

“நான் சொன்னால் அதுக்குப் பின்னாடி ஒரு காரணம் இருக்கும்னு புரிஞ்சிக்கோ..” என்றவுடன் சரியென்று தலையசைத்து வெளியேறிய பெண்ணின் கண்கள் சிவந்திருக்க கடையில் இருந்த மற்ற ஊழியர்களின் புடைசூழ அமர்ந்திருந்தவர்களின் அருகே சென்றனர்..

அவளின் கண்கள் கலங்கிச் சிவந்திருப்பதைக் கண்ட சங்கீதா, “என்னம்மா விரல் ரொம்ப வலிக்கிறதா?” என்ற விசாரிக்க ஒப்புதலாக தலையசைத்தாள்.

“உன் பெயரென்ன?” என்றவுடன், “மலர்” என்றான் கணவன் வேகமாக..

“ஓஹோ உன் பெயரில் தான் கடை ஆரம்பிச்சிருக்கீங்களா?” என விசாரித்த ஜெகதீஸ் பார்வை அடிக்கடி தன் மீது படிந்து மீள்வதை உணர்ந்து சுதாரித்தான்.

அவரின் பார்வையில் வித்தியாசம் உணர்ந்து, “என் கணவர் வேந்தன்” என்று அறிமுக செய்து வைக்க மற்றவர்களின் பார்வை இவர்களின் மீது கேள்வியுடன் படிந்தது.

சட்டென்று மைதிலியை அருகே அழைத்து, “நீ இவங்களை அழைத்துக்கொண்டு வீட்டுக்குக் கிளம்பு.. அவங்க என்ன கேட்டாலும் செய்துகொடு. பணம் தேவை என்றாலும் நான் உனக்கு தரேன்” என்று கட்டளையிட மெளனமாக தலையசைத்து அவர்களை அழைத்துச் சென்றாள்.

அவர்கள் செல்லும் வரை கம்பீரமாக நின்றிருந்த கணவனும், மனைவியும் தரையில் அமர மற்றவர்கள் அவர்களை சூழ்ந்துகொள்ள, “அண்ணா அவங்களை உங்களுக்கு தெரியுமா?” என விசாரித்த தங்கையின் முகம் பார்த்தான்.

பிறகு, “என்னைத் தூக்கி வளர்த்த மாமாவையும், அத்தையும் தெரியாமல் போகுமா?” என்று கேட்க இன்ப அதிர்ச்சியுடன் அவனை நோக்கிய ஜமுனா வார்த்தைகளின்றி மெளனமாகினாள். மூவரும் உணர்ச்சிகளின் பிடியில் சிக்கியிருப்பதை உணர்ந்த மற்றவர்கள் பேச்சை திசை திருப்பினர்.

“இனிமேல் வண்டியை ரெடி பண்ண கடை கடையாக ஏறி இறங்க தேவையில்லை” என்ற சரண்யாவை முறைத்த செவ்வந்தியின் கைபற்றி அழுத்திய வெற்றியின் உதடுகளில் புன்னகை அரும்பியது.

அண்ணியின் பார்வையைக் கவனித்த ஜமுனா காரணம் என்னவென்று பார்வையால் அண்ணனிடம் வினாவிட, “செவ்வந்தி அப்படியே உங்க அப்பாவை என்னோட வண்டியை ரெடி பண்ணி தர சொல்லுடி” என்று கிண்டலோடு கூறிய கணவனை அடிப்பதற்கு எதுவும் கிடைக்காமல் பக்கத்தில் தேடியவளின் கையில் காலியான வாட்டர்கேன் சிக்கியது.

அதை எடுத்து அடிக்க கை ஓங்கி, “எங்கப்பாவை கிண்டல் பண்றீங்களா மாமா…” என கேட்டவளின் பேச்சில் வித்தியாசம் உணர்ந்து மற்றவர்கள் புரியாமல் விலகி செல்ல ஜமுனா மட்டும் இடையில் கையூன்றி இருவரையும் முறைத்தாள்.

அவளை கண்டு கொள்ளாமல், “எங்க மாமாவை நான் கிண்டலடிப்பேன் அதையெல்லாம் நீ கேட்காதே” என்றான் குறுஞ்சிரிப்புடன்.

“நீங்க கிண்டலடிப்பது என் அப்பா” என சின்னபிள்ளை போல இருவரும் போட்டி போட்டுக்கொண்டு சண்டையிட்டனர்.

“ஹே.. கொஞ்சம் நிறுத்துங்க.. ஆமா அண்ணி உங்க அப்பாவா?” என்ற ஜமுனாவின் கேள்விக்கு ஒப்புதலாக தலையசைக்க,

“அப்போ அண்ணா இவங்க உன்னோட செல்ல செவ்வரளியா?” என்று கேட்க அவனும் குறும்புடன் கண்சிமிட்டினான்.

பிறகு நடந்த அனைத்தையும் தன் தங்கை மற்றும் மனையாளிடம் கூறினான். அவன் சொன்ன விஷயங்கள் இரு பெண்களின் மனதையும் இருவேறு வழிகளில் பாதித்தது.

செவ்வந்திக்கு தன் மாமனார் இவ்வளவு மோசமானவரா? அவரின் சூழ்ச்சியில் வெற்றியின் மனம் எவ்வளவு கஷ்டபட்டு இருப்பான் என்று கணவனுக்காக வருந்தியது.

மற்றொரு பக்கம் ஜமுனாவின் மனநிலையோ, ‘அடுத்தவங்க பணத்தை வைத்து இப்படி சொகுசாக வாழ்வதைவிட நடுத்தர வாழ்க்கையை எவ்வளவோ மேல்’ என்ற எண்ணம் எழுந்தது.

சட்டென்று எழுந்து நின்ற தங்கையை வெற்றி கேள்வியாக நோக்கிட, “இப்போவே கிளம்பு அண்ணா.. இந்த அப்பாவை இன்னைக்கு லேப் அண்ட் ரைட் வாங்காமல் விடுவதில்லை. எத்தனை நாள் உன்னை எவ்வளவு கேவலமாக பேசி இருப்பாரு.. நாக்கை பிடிங்கிட்டு சாகின்ற மாதிரி நாலு கேள்வி கேட்டால்தான் என்  மனசு ஆறும்”  என்றவளை செல்லவிடாமல் தடுத்தாள் செவ்வந்தி.

“அண்ணி அவரோட சுயநல புத்தியால் நம்மதான் அதிகம் பாதிக்கபட்டு இருக்கோம். என்னால் இதுக்குமேல் பொறுமையாக இருக்க முடியாது” என்றவள் வாசலை நோக்கி நடந்தவளை வெற்றியின் வார்த்தை தடுத்தது.

“செல்லம்மா” என்ற அழைப்பில் நின்ற பெண்ணின் கண்கள் கலங்கிட அவளை சமாதானம் செய்து அரவணைத்துக் கொண்டனர் கணவனும், மனைவியும்!

அங்கே நடந்த அனைத்தையும் கேட்டுக்கொண்டே வேலை செய்தவர்களுக்கு, “நம்ம சம்பாரித்து சாப்பிடும் காசே உடம்பில் ஒட்ட மாட்டேங்குது. ஆனால் இவங்க அப்பா செய்த காரியத்தை நினைக்கும்போது மனசுக்கு கஷ்டமாக இருக்கு. அடுத்தவன் சொத்துக்காக ஆசைப்பட்டு மனுஷன் இதெல்லாம் செய்வானா?” என்று ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொண்டனர்.

அதே நேரத்தில் மைதிலியுடன் வீடு வந்து சேர்ந்த இருவரையும் அமர வைத்து அவள் உபசரிக்க, “நாமக்கல் எவ்வளவு தூரம் மாறிடுச்சு..” என்ற சங்கீதாவை அமைதியாக பார்த்தார்.

“உங்களுக்கு இதுதான் சொந்த ஊராம்மா?” கையில் ஜூஸுடன் வந்தவள் இருவருக்கும் கொடுக்க, “ம்ஹும் ஆமாம்மா” என்றார் ஜெகதீஸ்.

“மலருக்கும் இதுதான் சொந்த ஊரு. நானும், அவளும் ஆசரமத்தில் சேர்ந்து வளர்ந்தவங்க. இங்கே வந்த கொஞ்சநாளில் ஜவுளிக்கடை வைத்த கொஞ்ச நாளில் அண்ணனை லவ் பண்ணி மேரேஜ் பண்ணிகிட்டா” என்று கூற அவர்களும் அமைதியாக கேட்டு கொண்டனர்.

அவர்களிடம் பேசியபடி சமைத்த மைதிலி அவர்களிடம் பேச்சு கொடுக்க, “நாங்க வேளாங்கண்ணி சாமி கும்பிட போன நேரத்தில் சுனாமி வந்திருச்சும்மா. அதில் என் மகள் செவ்வந்தியை இழந்துட்டோம். எங்க குழந்தை சாகல என்ற நம்பிக்கையில் நாளை கடத்திட்டு இருக்கோம்” சோகமாக ஜெகதீஸ் சொல்லி முடித்தார்.

இருவரையும் பார்வையால் அளந்த மைதிலியின் காதுகளில் செவ்வந்தியின் வார்த்தைகள் ரீங்காரமிட உண்மை வெட்டவெளிச்சமானது. தான் அவசரப்பட்டு உளறிவிட கூடாதென்று அமைதியாக இருந்தாள்.

அன்றைய இரவு வீட்டுக்கு வந்த மூவரும் சிந்தனையில் சுழல, மறுநாள் விடியலை ஆர்வத்துடன் எதிர் நோக்கினார் நரசிம்மன். தன் மகள் மற்றும் மருமகனை நேரில் பார்த்தும் இனம்காண முடியாமல் பஸில் வந்த களைப்பில் ஜெகதீஸ் மற்றும் சங்கீதா நிம்மதியாக உறங்கினர்.

மறுநாள் காலைப் பொழுது அழகாக விடிந்தது.

எங்கிருந்தோ கேட்ட குயிலின் சத்தத்தில் கண்விழித்த கணவனும், மனைவியும் ஒருவரையொருவர் பார்த்தபடி மெளனமாக சிறிதுநேரம் அமர்ந்திருந்தனர். செவ்வந்தி எழுந்து குளியலறைக்குள் சென்று மறைந்திட ஜன்னலின் அருகே நின்ற வெற்றியின் பார்வை வெட்டவெளியாக பரந்து விரிந்திருந்த வானத்தின் மீதே நிலைத்ததது.

 அதற்குள் செவ்வந்தி குளித்துவிட்டு வெளியே வர, “மனோஜ் அப்பாவுக்கு போன் பண்ணி அவங்க இருவரையும் வீட்டுக்கு கூட்டிட்டு வர சொல்லு” என்றவன் குளியலறைக்குள் சென்று மறைந்தான்.

இருவரும் தயாராகி வெளியே வர அவர்களுக்காக ஹாலில் காத்திருந்த நரசிம்மனின் எதிரே அமர்ந்தான் வெற்றி. ஜமுனா பதிலின்றி அண்ணனின் அருகே வந்து நின்றுகொள்ள செவ்வந்தியின் முகம் சிந்தனையில் ஆழ்ந்தது. கணவனின் பின்னோடு நின்றிருந்த விமலாவின் மனம் நிலையின்றி தவித்தது.

அவர்களின் குடும்ப வக்கீல் மற்றும் சில நபர்களோடு வீட்டிற்குள் நுழைய, “வாங்க” என்று வரவேற்று அவர்களை அமர வைத்து உபசரித்தார்.

சிறிதுநேர அமைதி நிலவிட, “முடங்கிய தொழில்களை எடுத்து நடத்தி  சொத்துகளை நல்ல நிலைக்கு கொண்டு வந்திருக்கிறீங்க. வேதாசலம் எழுதிய உயில்படி ஜெகதீஸ் குடும்பம் இயற்கை சீற்றத்தில் அழிந்ததால் செவ்வந்தியின் சொத்தை நிர்வாகிக்கும் பொறுப்பை உங்களிடம் ஒப்படைத்து இருந்தேன். இப்போது மொத்த சொத்தையும் வெற்றியிடம் முறைப்படி ஒப்படைக்கணும்” என்றவரை தடுத்தான் வெற்றி.

“ஸார் செவ்வந்தி குடும்பம் உயிரோடு இருக்காங்க” என்று குண்டைத்தூக்கி போட்ட வெற்றியை கொலைவெறியுடன் நோக்கினார் நரசிம்மன்.

“இத்தனை வருடமாக அவங்க உயிரோடு இருக்கும் விஷயத்தைப் பற்றி யாருமே எங்களுக்கு தெரியபடுத்தவே இல்ல. அவங்களோட உடல்கள் கிடைக்காததால் இறந்திருப்பாங்க என்ற முடிவில் இருந்தோமே வெற்றி” யோசனையுடன் தாடையை தடவினார் குடும்ப வக்கீல்.

தன்னருகே பதட்டத்துடன் நின்றிருந்தவளை கைகாட்டி, “ஜெகதீஸ் – சங்கீதாவின் ஒரே வாரிசு என் மனைவி செவ்வந்தி” என்று அவளை அறிமுகம் செய்தான் வெற்றி.

அவளைப் பார்த்தும் முகம் மலர, “ஓஹோ உங்க தாய் மாமன் மகளையே திருமணம் பண்ணிட்டீங்களா?” என்றவர் செவ்வந்தியிடம் சில கேள்வி கேட்டார்.

வேளாங்கண்ணிக்கு சென்றதில் தொடங்கி உயிர் தப்பிய விஷயங்களை கூறி முடிக்க நரசிம்மனின் முகத்தில் பழிவெறி தாண்டவம் ஆடியது. தன் மருமகள் அண்ணனின் மகள் என்ற சந்தோஷத்தில் கண்கள் கலங்கியது.

அவள் சொல்வதைப் பொறுமையாக கேட்ட வக்கீல், “அப்போ உங்க அப்பாவும், அம்மாவும் இறந்துட்டாங்களா?” என்ற விசாரணையில் இறங்கினார்.

“அவங்களும் உயிரோடு தான் இருக்காங்க” என்று சொல்லும்போது மனோஜூடன் ஜெகதீஸ் மற்றும் சங்கீதா இருவரும் வீட்டிற்குள் நுழைந்தனர்.

ஏற்கனவே மனோஜ் சொன்ன அனைத்தையும் கேட்ட இருவருக்கும் மகள், மருமகன் மீது பாசம் ஊற்றேடுத்தது. இத்தனை வருடமாக எந்த வைராக்கியத்தை மனதில் வைத்து காத்திருந்தார்களோ அது நடந்துவிட்டதை நினைத்து கண்கள் இரண்டு கலங்கிட பேச்சின்றி மெளனமாக நின்றிருந்தனர்.

அவர்களைக் கண்டு பதட்டத்துடன் எழுந்து நின்றவருக்கு, ‘இவ்வளவு நாளாக முட்டாளாக இருந்திருக்கேனே.. கடைசியில் இந்த சொத்து எனக்கு கிடைக்க வாய்ப்பே இல்லாமல் பண்ணிட்டாங்களே..’ என்று மூவரையும் பார்த்து எரிச்சலோடு பல்லைக் கடித்தார்.

சட்டென்று தன் இருக்கையில் இருந்து எழுந்த வெற்றி, “ஸார் எங்க மாமா குடும்பம் உயிரோடு திரும்ப வரமாட்டாங்க என்ற நினைவில் எங்கப்பா இருந்தார். எந்த நேரமும் கெட்டவங்க பக்கமே கடவுள் நிற்பாருன்னு சொல்ல முடியாதே” என்றவனின் பார்வை அவரின் மீது படிந்து மீண்டது.

அவரும் ஒப்புதலாக தலையசைக்க, “எங்க பாட்டன் சொத்து பேரனுக்கு என்று உரிமையுடன் கேட்க முடியாது. நான் மகள் வழி பேரன். இந்த சொத்தை முழுவதும் ஜெகதீஸ் மாமாவின் மகளான செவ்வந்திக்கு தான் முழு உரிமையும்! என் பெயரில் இருக்கும் சொத்துகளை ஆள எனக்கு விருப்பம் இல்ல..” என்று தன் முடிவை வெளிப்படையாக கூறி விலகி நின்றான்.

அடுத்ததாக வக்கீல் பார்வை செவ்வந்தியின் மீது படிந்தது.

தன் பெற்றோரின் பார்த்தவளின் உள்ளம் பாகாக உருகிட, “ஸார் எனக்கும் இந்த சொத்து வேண்டாம். இவ்வளவு சொத்துகளை ஆளப் பிறந்த நான் ஒருவேளை சோற்றுக்கு மற்றவர்களை கையேந்தி நின்ற நிலையை நான் இன்னும் மறக்கல. உங்க உணவு, உடுத்த உடை, இருக்க இருப்பிடம் இந்த மூன்றுமே கிடைக்காமல் அனாதையாக ஆசரமத்தில் வளர்ந்த எனக்கு இந்த சொத்தின் மீது ஈடுபாடு கிடையாது” என்றவளின் வார்த்தைகளில் வெளிபட்ட வலியை உணர்ந்து பெரியவர்களின் உள்ளம் மருகியது.

“இந்த மாதிரி பலமடங்கு சொத்தை சம்பாரிக்கும் திறமையும் என்  கணவரிடம் இருக்கு. அவரைவிட இந்த சொத்து எனக்கு பெருசும் இல்ல. அதனால் எனக்கும் இந்த சொத்து வேண்டாம் ஸார்” என்று கூறிய செவ்வந்தியை கைபற்றி அழுத்தினான்.

தன் கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்தபடி ஓடிச்சென்று தாய் – தந்தையை கட்டியணைத்து அழுகையை தொடர்ந்தாள். தன் மகளை தவிர மற்றவர்களை அவர்கள் கவனிக்கவில்லை. வெற்றியும், ஜமுனாவும் ஒருவரையொருவர் பார்த்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!