Malar – 6
Malar – 6
அத்தியாயம் – 6
அவளின் சின்ன கனவு இன்று கண்முன்னே இருப்பதை நினைத்து பூரித்தது பெண்ணின் உள்ளம். அவளின் முகத்தில் தோன்றிய உணர்வுகளை படித்தபடி அங்கிருந்த ஒரு சேரில் அமர்ந்தான் வெற்றி.
“வெற்றி இது எல்லாம் நடக்க காரணமே நீதான். உன்னை என்னால் மறக்கவே முடியாது. அதனால் உனக்கும் ஒரு சர்பிரைஸ் வெச்சிருக்கேன்” என்ற செவ்வந்தி லாக்கரை திறந்து எதையோ எடுத்து வந்து அவனின் எதிரே ஒரு சேரை இழுத்துபோட்டு அமர்ந்தாள்.
“எனக்கு எதுக்கு இந்த சர்பிரைஸ் எல்லாம்” என்று அவன் கேட்க, “மூச்சு..” அவனை அடக்கியவள் அவனிடம் ஒரு பைலை நீட்டிட சிரித்தபடியே அதை கைகளில் வாங்கிக் கொண்டான்.
“ரொம்பத்தான் மிரட்டுறீங்க செவ்வந்தி” என்று சொல்ல, “நீங்க எப்போதான் இந்த ‘ங்’ என்ற எழுத்தை விட போறீங்களோ” என்று அவள் சலித்துக்கொள்ள அவனோ ஃபைலை படிக்க தொடங்கினான். அதில் எழுதப்பட்டு இருந்த விஷயம் படித்ததும் அவனின் பிபி எகிறியது.
அவனின் முகம் செந்தணலாக மாறிப்போக, “என்ன செவ்வந்தி இப்படி செய்து வெச்சிருக்கிற” என்று எரிச்சலோடு கேட்டான். அந்த கோபத்தில் அவளை ஒருமையில் அழைத்ததை அவன் உணரவில்லை.
“நான் என்ன பண்ணேன்” என்று அவள் எதுவும் அறியாதவள் போல கேள்வியாக புருவம் உயர்த்தினாள்.
“நீங்க என்ன கடையில் 50 % ஷெரில் வொர்கிங் பார்ட்னராக எழுதி இருக்கீங்க” என்றான் கோபத்துடன்.
“ஆமா நானும் நீங்களும் பார்ட்னர்ஷிப் போட்டு கடையை நடத்தலாம்னு தான் இப்படி டாகுமெண்ட் ரெடிபண்ண சொன்னேன்” என்றாள் அலட்டல் எதுவும் இல்லாமல்.
“இது உங்க உழைப்பு. இதை பகிர்ந்துக்க நான் விரும்பல” என்று அவன் திட்டவட்டமாக கூறவே அவளுக்கு கோபம் வந்தது.
“ஏன் இந்த கடையை உருவாக்க நீங்க எனக்கு பண்ணிய ஹெல்ப் எல்லாம் உழைப்பாக தெரியலையா?” நேரடியாக அவனிடம் கேட்டாள் செவ்வந்தி. அவளின் கேள்விக்கு அவனிடம் பதில் இல்லாமல் போனது.
ஆனாலும் தன் பெயரில் தொடங்கிய தொழில்கள் தோல்வியில் முடிந்ததை நினைத்தபடி, “இது எல்லாம் எனக்கு சரிபட்டு வராதுங்க” என்றான் முடிவாக.
“அதுதான் ஏன்னு கேட்கிறேன். எனக்கு பதில் தெரியனும் சொல்லுங்க” அவளும் பிரச்சனையை விடுவதாக இல்லை.
இந்தமுறை அவனின் பொறுமை காற்றில் பறக்க, “நான் தொடக்கி வைத்த பிஸ்னஸ் கண்டிப்பாக நஷ்டத்தில் தான் முடியும். அதை நானே என் கண்ணால் பார்த்து இருக்கேன் போதுமா?” என்று அவளிடம் கூறியவன் கையில் இருந்த பைலை வீசிவிட்டு அங்கிருந்து செல்ல நினைத்தான்.
மார்பின் குறுக்கே கையைக் கட்டிக்கொண்டு நின்ற செவ்வந்தி, “நீங்க முன் நின்று செய்யும் செயல் கண்டிப்பாக எனக்கு வெற்றியை தேடி தரும் என்ற எனக்கு நம்பிக்கை இருக்கு” என்று அவனின் நடை தளர்ந்தது.
செவ்வந்தியின் பேச்சு அவனின் காயபட்ட மனதிற்கு மருந்தாக இருந்தபோதும் தன்னால் அவளின் கனவு வீணாக போய்விடுமோ என்று கவலைப்பட்டான்.
அவன் மனதில் நினைத்ததை அவளிடம் கூறவே, “எண்ணம் போல வாழ்க்கை வெற்றி. நம்ம பாசிட்டிவ்வாக நினைத்தால் அது பாசிட்டிவ்வாக நடக்கும். அதே நெகட்டிவாக நினைத்தால் அது அப்படிதான் தோல்வியில் முடியும். என்னைக்குமே நேர்மறையான எண்ணங்களைவிட எதிர்மறையான எண்ணங்களுக்கு வலிமை ஜாஸ்தி. அதுதான் அடுத்தவனுக்கு கெடுதல் நினைக்கதேன்னு பெரியவங்க சொல்வாங்க” அவள் குழந்தைக்கு சொல்வது போல விளக்கமாக கூறினாள்.
அவள் சொன்ன அனைத்து விஷயமும் நூறு சதவீதம் உண்மை. ஏனோ அவளின் பேச்சு தன்னை பலகீனமாக மாற்றுவதை உணர்ந்து, “நீங்க சொல்வது நிஜம்தான். நீங்க தேவை இல்லாமல் என்மேல் நம்பிக்கை வைக்கிறீங்க” என்று அவன் வருத்ததுடன் சொல்ல அவனின் முதுகை வெறித்தாள் செவ்வந்தி.
“நான் நம்பிக்கை வைக்கிறேன்னு உங்களுக்கு புரியுது இல்ல அப்போ அதை காப்பாற்றும் வழியை பாருங்க வெற்றி” என்று சொன்னவள் இறுதியாக சொன்ன விஷயம் அவனின் மனதை உலுக்கியது.
அவனின் எதிர்ப்புறம் திரும்பிய செவ்வந்தி, “எந்தவிதமான கைமாறுகளையும் எதிர்பார்க்காமல் நிறைய உதவி பண்ணி இருக்கீங்க. நீங்க இதுவரை செய்த உதவி போதும் இதுக்குமேல் என்னை சங்கடபடுத்தி பார்க்காதீங்க..” அவள் விளக்கம் கொடுக்க வெற்றிக்கு என்னவோ போலானது.
“கடையின் பார்ட்னர்ஷிப்பில் பாதியை உங்க பெயரில் எழுதி இருக்கேன். நான் முழுவதும் முதல் போட்டு இருக்கேன். உங்களை வொர்கிங் பார்ட்னராக சேர்த்து இருக்கேன் அவ்வளவுதான்” அவள் பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைக்க வைக்க சட்டென்று திரும்பி அவளைப் பார்த்தான்.
அவள் மறுப்பக்கம் திரும்பி நின்றதால் அவளின் உணர்வுகளை புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறிய வெற்றி, “சரிங்க” என்று இறுதியாக அவள் விருப்பத்திற்கு தலையசைத்தான்.
இரவு வெகுநேரம் சென்றபிறகு வீடு திரும்பினான் வெற்றி. அவனின் வரவை எதிர்பார்த்து ஹாலில் அமர்ந்திருந்தபடி தூங்கிவிட்ட தங்கையின் தலையை பாசத்துடன் வருடினான். அவனின் ஸ்பரிசத்தில் சட்டென்று கண்விழித்த ஜமுனா, “என்னாச்சு அண்ணா ஏன் நீ இன்னைக்கு இவ்வளவு லேட்டாக வர்ற” என்று காரணம் கேட்டபடி எழுந்தாள்.
“இன்னைக்கு கடையில் கொஞ்சம் வொர்க் செல்லம்மா” என்றவன் சோபாவில் சாய்ந்து அமர்ந்து களைப்புடன் விழி மூடினான்.
அவனின் குரலில் இருந்த சோர்வை கண்டு, “அண்ணா நீ எங்கே வேலைக்கு போற?” என்று நேரடியாக கேட்டுவிட்டாள்.
இத்தனை வருடம் இல்லாமல் இப்போது கொஞ்சநாளாக அவனின் பேச்சிலும், செயலிலும் தெரியும் மாற்றத்தை அவளும் உணர்ந்திருந்தாள். எந்த நேரமும் எதிர்மறையான எண்ணங்களோடு எதன் மீதும் பற்று இல்லாமல் ஏதோ பிறந்தோம் வளர்ந்தோம் என்றபடி இருந்தவன் இப்போது முற்றிலும் மாறிப்போனான்.
காலையில் எழுந்ததும் வேலை என்று சொல்லி வெளியே கிளம்பி சென்றால் இரவு வெகுநேரம் கடந்தபிறகு வீடு திரும்பினான். இடைபட்ட நாட்களில் வெளியூர் பயணங்கள் சென்றது எல்லாமே அவளுக்கு வித்தியாசமாக இருந்தது.
அந்த மாற்றத்தை ஒரு தங்கையாக அவளும் ரசிக்கவே செய்தாள். தன் தமையனை அவமானபடுத்தும் தந்தையை ஒருநாள் ஒருபொழுது அவமானபடுத்திவிட வேண்டும் என்ற எண்ணம் ஈடேற வேண்டும் என்பது தான் அவளின் நீண்டநாள் வேண்டுதல்.
ஜமுனாவின் கேள்வியில் பட்டென்று விழிதிறந்த வெற்றி, “நான் ஒரு விஷயத்தை உன்னிடம் சொல்லல” என்று தொடங்க அவளை அருகே அழைத்தான்.
அவளின் அருகே ஜமுனா அமர, “கொஞ்சநாளுக்கு முன்னாடி செவ்வந்தின்னு ஒரு பொண்ணை சந்திச்சேன்” என்று தொடக்கி அவள் கடைக்கு இடம் பார்த்து கொடுத்தது, அவள் விருப்பத்தை வெளிப்படையாக சொன்னது, அவள் கடையில் சில சில வேலைகளை உதவியாக செய்தது என்று அனைத்தையும் தங்கையிடம் கூறினான்.
அவனிடம் வந்திருக்கும் மாற்றத்திற்கு காரணம் யாரென்று உடனே புரிந்து கொண்டாள் ஜமுனா. இதுவரை நேரில் பார்க்காத செவ்வந்தி அவளின் மனதில் பல படிகள் உயர்ந்தான். கடைசியாக அவள் நிறுவனத்தில் பார்ட்னராக சேர்த்த விஷயத்தையும் தங்கையிடம் கூறினான்.
“அவங்க ரொம்ப நல்ல பொண்ணு என்பதால் நான் இந்த உதவியை செஞ்சேன். ஆனா அவங்க என்னை சங்கடபடுத்தாதீங்கன்னு சொல்லி என் வாயை அடைச்சிட்டாங்க” என்று வருத்தத்துடன் கூறினான்.
அவனின் வருத்தத்திற்கு காரணம் புரிய கலகலவென்று சிரித்த ஜமுனா, “உனக்கு எல்லாம் அவங்கதான் அண்ணா சரியான ஆளு. என்ன சொன்னால் உன்னிடம் வேலை நடக்குன்னு தெரிந்து காய் நகர்த்தி இருக்காங்க. அவங்க கொள்கைகள் நல்லாவே இருக்கு. கைமாறு எதிர்பார்க்காமல் செய்யும் உதவியைக் கூட அவங்க ஏற்றுகொள்ள தயாராக இல்லன்னா கண்டிப்பா ரொம்ப நல்லவங்களாக இருப்பாங்க” என்று செவ்வந்திக்கு சப்போர்ட் பேசினாள் ஜமுனா.
அவளின் பேச்சு அவனுக்கு ஆச்சர்யத்தை கொடுக்க தன் அறைக்கு சென்று எதையோ எடுத்துவந்து அவனின் முன்னே நின்றவள், “அப்போ நாளைக்கு கடையின் திறப்புவிழா. நான் வரணும்னு நீ நினைச்சா இந்த பணத்தை அவங்கிட்ட கொடுத்திடு” என்றாள் திட்டவட்டமாக.
அது எந்த பணம் என்று பார்த்தும் புரிந்துவிட தங்கையை முறைத்தவன், “இது உன் கல்யாணத்திற்கு நான் சேர்த்த பணம்” என்றான் அழுத்தமாக.
“சோ வாட்? என் அண்ணாவை ஒருத்தங்க நம்பிக்கையோடு பார்ட்னராக சேர்த்து இருக்காங்க. அப்போ உன் மூலதனமும் தொழிலுக்கு முக்கியம்தானே?” என்று பணத்தை அவனிடம் கொடுத்தாள்.
அவன் நம்பிக்கை இல்லாமல் மெளனமாக அமர்ந்திருக்க, “அண்ணா நீ என்னைக்கும் என் நலனை மட்டும் நினைக்கிற மாதிரி நானும் உன் நலனை நினைப்பேன்னு தெரியாதா? நீ யார் முன்னாடியும் தரம்தாழ்ந்து நிற்பதை பார்க்க நான் விரும்பல. அவங்க செய்தது சரின்னு நினைச்சா இப்போ நான் செய்வதும் சரிதான்னு புரிஞ்சிக்கோ” அவனை சம்மதிக்க வைத்தாள்.
“நீ இந்த விஷயத்தை அப்பா, அம்மாவிடம் சொல்லாத ஜமுனா” என்றதும் சரியென்று தலையசைத்தாள்.அதன்பிறகு இருவரும் சாப்பிட்டுவிட்டு உறங்க செல்ல வெற்றி மணியை பார்த்துவிட்டு, ‘ஜனனிக்கும் போன் செய்து விஷயத்தை சொல்லிவிடலாம்’ என்று நினைத்து அவளுக்கு அழைத்தான்.
முதல் இரண்டு முறை ஃபுல் ரிங் போய் கட்டானது. அடுத்த முறை அவள் போனை எடுத்து, “ஹெலோ சொல்லி வெற்றி” என்றாள் மெல்லிய குரலில்.
“ஜனனி நாளைக்கு கடை ஓபனிங். நீயும் காலையில் வந்தால் நல்ல இருக்கும்” என்று நேரடியாக அவளிடம் விஷயத்தை சொல்லிவிட்டு அவளின் பதிலை எதிர்பார்த்தான்.
“பெயரில் மட்டும்தான் வெற்றி இருக்கு. உன் வாழ்க்கையில் வெற்றி கிடைக்குமான்னு தெரியல. வழக்கமாக தொடங்கும் தொழில் போலதானே?” என்றதும் அவனுக்கு சுள்ளேன்று கோபம் வந்தது. அவள் இன்னும் என்னவெல்லாம் பேசி இருப்பாளோ உடனே போனை கட் பண்ணிவிட்டான்.
“ரோஷம் மட்டும் இருந்து என்ன பண்றது?” நினைத்துகொண்டு அவள் தன் வேலையை கவனித்தாள்.
பால்கனியில் நின்று இருள் சூழ்ந்த வானத்தை பார்த்தான் நிலவை சுற்றி ஒரு அழகான ஒளிவட்டம் தெளிவாக தெரிந்தது. இத்தனை நாள் இல்லாமல் இன்று மட்டும் கண்ணுக்கு தெரியும் ஒளிவட்டம் நினைத்தும் செவ்வந்தியின் நினைவு எழுந்தது.
கொஞ்சநாள் பழகிய செவ்வந்தி அவன் மீது வைத்த நம்பிக்கை அவனின் காயபட்ட இதயத்திற்கு மருந்தாக மாறியது. ஜனனி அவன் மீது வைத்திருக்கும் அவநம்பிக்கை நினைத்து அவன் சற்று அவமானமாக உணர்ந்தான்.
அதை புரிந்துகொள்ள முடியாமல் இருவரின் இடையே ஒரு திரை விழுந்து இருந்தது. அவளின் ஒவ்வொரு செயலும் அவனை உயிர்ப்பிக்க முதல் மாதிரி இல்லாமல் எதிர்மறையாக யோசிப்பதை குறைத்துக் கொண்டான்.
மறுநாள் காலையில் கடை திறப்பு விழாவிற்கு கிளம்பி வந்த அண்ணனை பார்த்து, “ம்ம் என் அண்ணா ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டு இருக்கிற” என்று அவள் கிண்டலடிக்க அவன் பின் தலையை வருடிவிட்டு வேறுபுறம் பார்த்தான்.
தமையனின் மனம் புரிந்து அவள் கலகலவென்று சிரித்தபடி கடையின் திறப்புவிழாவிற்கு கிளம்பினார்கள்.
காலையில் எழுந்து குளித்துவிட்டு நேராக நாமக்கல் ஆஞ்சிநேயர் கோவிலில் சென்று அர்ச்சனை தட்டை கொடுத்துவிட்டு விழி மூடி நின்றாள். பலநாள் கனவு இன்று நிஜமான நிம்மதி அவளின் முகத்தில் தெரிந்தது. ‘என் வளர்ச்சியைப் பார்க்க நீங்க இருவரும் கூட இல்லாமல் போனது என்னோட துருதிஷ்டம்’ என்று நினைத்துக் கொண்டாள்.
அவள் அதை நினைத்தும் சங்கீதாவிற்கு விக்கல் எடுக்க தொடங்கியது. சட்டென்று தண்ணியைக் குடித்தவர், “என் மகள்தான் எங்கிருந்தோ நினைக்கிறா. அவளுக்கு பக்கபலமாக நீதான் துனையிருக்கணும் கடவுளே” என்று வாய்விட்டு வேண்டிக் கொண்டார்.
மனையாளின் இந்த வேண்டுதலை கண்டு, “நம்ம எண்ணங்கள் அவளை எங்கிருந்தாலும் சந்தோசமாக வைத்திருக்கும் சங்கீதா. அவளை நினைத்து கவலைப்பட்டு உடலைக் கெடுத்துக்காதே. சீக்கிரமே பாப்பா நம்மள தேடி வருவா” என்று நம்பிக்கையூட்டும் விதமாக பேசியவரின் மனதிலும் அதே வேண்டுதல் தான் இருந்தது.
இருவரின் வேண்டுதலும் இறைவனின் காதில் விழுந்ததோ என்னவோ? சாமிக்கு உடைக்கப்பட்ட தேங்காயில் பூ வந்திருப்பதை பார்த்த பூசாரி, “உன் தொழில் அமோகமாக இருக்கும்மா” என்று சொல்ல அவளின் முகம் பளிச்சென்று மலர்ந்தது.
பூஜை முடிந்ததும் மனநிறைவுடன் கடைக்கு புறப்பட்டு சென்றாள். அதே நேரத்தில் ஜமுனாவும், வெற்றியும் கடையின் முன்னே பைக்கில் வந்து இறங்கினர். புதுக்கடையின் திறப்புவிழாவிற்கு என்று சில சிறப்பு சலுகைகள் தருவதாக ஏற்கனவே விளம்பரம் கொடுக்கப்பட்டு இருந்தால் முதல்நாளே கடையில் கூட்டம் அதிகமாக இருந்தது.
அவள் கடையின் முன்னாடி இறங்கிய ஜமுனா, “மலர் டெக்டைல்ஸ்” என்ற பெயர் பலகையைக் கண்டவுடன் அவளின் முகம் பூவாக மலர்ந்தது.
வாசலில் வண்ண காகிதம் கட்டப்பட்டு இருப்பதை பார்த்து, “நல்ல டேக்ரேசன் பண்ணி இருக்கீங்க அண்ணா” என்று சொல்லும்போதே ஒரு ஆட்டோவில் வந்து இறங்கினாள் ஜனனி.
கருப்பு நிற சேலை அணிந்து வந்திருந்த ஜனனியைப் பார்த்தும் ஜமுனாவிற்கு சுள்ளேன்று கோபம் வந்துவிட,“அண்ணா இவங்களை எதுக்கு இங்கே வர சொன்ன” அருகே நின்ற தமையனின் காதைக் கடித்தாள்.
“ஷ்.. ஜமுனா நீ எதுவும் ஏறுக்கு மாறாக பேசாதே” அவளை அடக்கிவிட்டு, “வா ஜனனி” என்று அவளை வரவேற்றான்.அவனையும், கடையையும் பார்த்தாள்.
இந்த மாதிரி திறப்புவிழாவிற்கு வெற்றி அடிக்கடி அவளை அழைப்பதால், ‘இவன் ஜெய்க்கிற மாதிரி தோரணைதான் இருக்கே தவிர செயலில் ஒன்றையும் காணோம்’ என்று இளக்காரமாக நினைத்துக் கொண்டாள்.
அவளின் மனதை படித்துவிட்ட ஜமுனாவோ, ‘யாரை நீ இளக்காரமாக நினைக்கிறீயோ அவங்கதான் வெற்றியை முதலில் தொடுவாங்க’ என்று நினைத்துகொண்டு முகத்தை திருப்ப அதை கவனித்த ஜனனிக்கு எரிச்சல் மண்டியது.
“வெற்றி திறப்புவிழா சீக்கிரம் முடிந்துவிடும் தானே? நான் ஆபீஸ் போகணும். எங்க கம்பெனிக்கு புதிய கிளையை தொடக்கி இருக்காங்க. அதுக்கும் போகணும்” என்று எண்ணையில் இட்ட அப்பளம் போல குதித்தாள்.
அவளுக்கு பதிலடி கொடுக்க நினைத்து காத்திருந்த ஜமுனாவிற்கு இது ஒரு வாய்ப்பாக அமைத்துவிட, “உங்களுக்கு அது ரொம்ப முக்கியம்னா நீங்க கிளம்பலாம். அண்ணாவோட பார்ட்னர் இன்னும் வரல. அவங்க வந்தபிறகுதான் திறப்புவிழா. உங்க அவசரத்திற்கு எல்லாம் நாங்க ஆட முடியாது” முகத்தில் அடித்தாற்போல பேசிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
என்றும் இல்லாத திருநாளாக தங்கையின் பேச்சில் வெற்றிக்கு சிரிப்பு வரவே, “சரியான வாலு” என்று சிரித்துவிட அவமானமாக உணர்ந்தாள் ஜனனி.
“என்ன வெற்றி கூப்பிட்டு வெச்சு அவமானப்படுத்திரியா?” என்று எரிந்து விழுக,
“அவ கோபபடுவதில் என்ன தவறு இருக்கு. நீ வரும்போதே அங்கே போகணும்னு சொன்ன அதன் பட்டுன்னு பேசிட்டா. சின்ன பொண்ணுதானே விடு” மற்றவர்களை வரவேற்றபடி அவளுக்கு பதில் கொடுத்தான்.
எல்லோரும் கடையின் திறப்புவிழாவிற்காக வந்து அனைவரும் காத்திருக்க ஜமுனா, வெற்றி, ஜனனி மூவரும் அவர்களோடு சேர்ந்து நின்றனர்.