malar – 7

download (39)-7690cf4d

அத்தியாயம் – 7

ஜனனியின் நொடிக்கு ஒரு முறை கடிகாரத்தை பார்த்துவிட்டு முள்ளின் மீது நிற்பதுபோல முகத்தை வைத்திருந்தாள். அவளின் நடவடிக்கையை ஓரவிழியால் நோட்டம் விட்ட ஜமுனாவிற்கு கோபம் குறைய மறுத்தது.

ஜமுனாவிற்கு தாய் – தந்தை இருவரும் இருந்தபோதும் உண்மையான பாசத்தை அவளுக்கு காட்டியது வெற்றி மட்டுமே. அவன் மட்டும்தான் அவளின் ரோல் மாடல். பணத்தை கண்டு மயங்காமல், மிரட்டலுக்கு பயப்படாமல் வலம்வரும் அவனின்  கம்பீரம் அனைத்தும் அவளுக்கு பிடிக்கும்.

அதற்கு நேர் மாறாக இருக்கும் ஜனனியை அவளுக்கு ஆரம்பத்தில் இருந்தே பிடிக்காது. என்னவோ அவள் மட்டும் தான் படித்து முடித்தும் வேலைக்கு போவது போலவும், அவள் இல்லாமல் அந்த நிறுவனமே நடக்காது என்பது போல பேசும் விதமும் கண்டாலே எரிச்சலோடு தமையனை முறைத்தாள்.

இருவரின் மனநிலை உணர்ந்த வெற்றி அங்கிருந்த மற்றவர்களை கவனிப்பதாக சொல்லி நகர, “இன்னும் எவ்வளவு நேரம் வெற்றி? நான் எங்க ஆபீஸ்க்கு வேற போகணும்” ஜனனியின் குரல் அவனை தடுத்தது.

அவனின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. அவன் மட்டும் அதற்கு விதிவிலக்கு இல்லையே. அவளின் தொணதொணப்பில் கடுப்பான வெற்றி, “இங்கே கடை திறக்க இன்னும் நேரமாகும். நீ கிளம்புவதாக இருந்தால் உடனே கிளம்பு” என்று ஆட்டோவை அழைத்து வந்தான்.

அவனின் வேகத்தை பார்த்த ஜமுனா, ‘பரவல்ல அண்ணாவிற்கு மூளை நல்லாவே வேலை செய்யுது’ என்று தனக்குள் நினைத்து சிரித்தாள்.

அவளை முறைத்தபடி ஆட்டோவில் ஏறியவள், “ஸாரி வெற்றி என்னால இங்கே இருக்க முடியல. இன்னொரு நாள் வரேன்” என்று சிடுசிடுத்துவிட்டு அவள் கிளம்பினாள் ஜனனி.

“ஹப்பா மழையடிச்சு ஒஞ்சமாதிரி இருக்கு” என்று ஜமுனா சொல்லும்போதே மற்றொரு ஆட்டோ வந்து கடையின் வாசலில் நின்றது.

இப்போது வந்திருப்பது யாரென்று இருவரும் பார்க்க செவ்வந்தி ஆட்டோக்காரருக்கு பணம் கொடுத்துவிட்டு திரும்ப, “வாங்க” என்று அழைத்தபடி வந்த வெற்றியின் குரல்கேட்டு நிமிர்ந்த செவ்வந்தியின் பார்வை சிலநொடிகள் அவனைவிட்டு அசைய மறுத்தது.

இளஞ்சிவப்பு நிறத்தில் சர்ட், சாண்டில் கலர் பேண்ட் அணிந்து டிப்டாப்பாக இருந்தான் வெற்றி. முழு நீல கையை பாதிக்கு மேல் மடித்து விட்டிருந்தான்.

அலையலையாக பரந்த கேசமும், அவனின் கண்ணில் தெரிந்த ஒளியும், எப்போது சோகமாக இருக்கும் அவனின் முகத்தில் இன்று தெரிந்த தெளிவும் மனதை கவர்ந்தது. அவனின் கம்பீரமான தோற்றத்தில் அவளை விழிகள் ரசிக்கவே செய்தது.

அவன் அதற்குள் அவளின் அருகே வந்துவிட தன் பார்வை மாற்றிக்கொண்டு, “என்ன வெற்றி லேட்டாக வந்துட்டேனா?” அவசரமாக கேட்டாள்.

“ஏலே முக்கால் தாண்டவும் இல்ல.. எட்டை தொடவும் இல்ல..” அவன் குறும்புடன் கண்சிமிட்ட, “அப்போ ஏழரை போயிருச்சுன்னு சொல்றீங்களா?” நக்கலாக கேட்க வெற்றி பக்கென்று சிரித்துவிட்டான்.

ஜனனியை அவள் ஏழரை என்று சொல்லவில்லை என்று புரிந்தபோதும், “ம்ம் நீங்க சொன்னதும் சரிதான். ஏழரை வந்ததும் போயிருச்சு” இருபொருள்பட கூற செவ்வந்தி கேள்வியாக புருவம் உயர்த்தினான்.

“என்ன அண்ணி வாசலில் நின்னு என்ன பேசிட்டு இருக்கீங்க” என்று இயல்பாக கேட்டபடி அருகே வந்தாள் ஜமுனா.

அவளின் ‘அண்ணி’ என்ற அழைப்பைக்கேட்டு செவ்வந்தி திகைத்து நிற்க, வெற்றியோ அதிர்ந்தான் நின்றது சிலநொடிகள் தான். தன்னை சமாளித்துக்கொண்டு நிமிர்ந்து, “ஜமுனா என்ன பேச்சு இது?” என்று தங்கையை கடிந்து கொண்டான்.

அவனின் மிரட்டலைக் கண்டு மிரண்டுபோய் நின்ற ஜமுனாவின் கரம்பிடித்த செவ்வந்தி, “என்ன சொல்லி கூப்பிட்ட” அவளிடம் நேரடியாக கேட்டாள்.

“அ..ண்..ணி..ன்னு” பயத்தில் வார்த்தைகள் தந்தியடிக்க கூறிய ஜமுனாவின் கன்னத்தை பாசத்தோடு வருடிய செவ்வந்தியின் கண்கள் கலங்கிப்போனது.

அவள் சிறுவயதில் இருந்து ஆசரமத்தில் வளர்ந்தபோதும் உறவுகளுக்காக அதிகம் ஏங்கும் பெண்ணவள். அவளை யாரும் இதுவரை உறவுமுறை சொல்லி அழைத்ததில்லை. அதனால் இன்று ஜமுனாவின் அழைப்பு அவளின் உயிர்வரை தித்திக்க சந்தோஷத்தில் அவளின் முகம் மலர்ந்தது.

“என்னை முதல் முறை உறவுமுறை சொல்லி அழைச்சது நீதான். அதனால் நீ அப்படியே கூப்பிடு” உணர்ச்சியின் பிடியில் சிக்கிதவித்தபடி அவள் கூற வெற்றி இடையே ஏதோ சொல்ல வந்தான்.

உடனே அவனை கரம்நீட்டி தடுத்த செவ்வந்தி, “உங்களுக்கு மனைவியாக வந்தால் தான் என்னை அவ அண்ணின்னு கூப்பிடனும் என்ற சட்டம் இல்ல. எனக்கு கணவனாக வருபவரை அவள் அண்ணன்னு கூப்பிட்டா நான் அவளுக்கு அண்ணிதான். சோ அவ என்னை அண்ணின்னு சொல்வதில் தப்பில்ல” பட்டென்று பதில் கொடுத்துவிட்டு முன்னே நடக்க வெற்றியின் முகம் வாடிப்போனது.

அவளின் இந்த பேச்சு அவனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அதுவரை இருந்த துருதுருப்பு, உற்சாகம் அனைத்தும் எங்கோ ஓடி மறந்தது. செவ்வந்தியின் இந்த பேச்சில் சந்தோஷப்பட அவனால் முடியவில்லை. இதயத்தின் ஓரத்தில் லேசாக வலியை உணர்ந்தான்.

மனிதனின் உணர்வுகள் மிகவும் நுட்பமானது. ஜனனியை காதலிக்கும் வெற்றியின் மனம் செவ்வந்தியின் பேச்சில் காயப்பட காரணம் என்னவென்று அவன் கொஞ்சம் சிந்தித்து இருந்தால் காரணம் புரிந்து இருக்கும்? ஒரே நேரத்தில் இருவேறு குணம் உடைய பெண்களை தன் மனம் விரும்புமா என்றவன் யோசிக்கும் நாள் என்றுதான் வருமோ? 

அவன் சிந்தனையோடு அவளையே பார்க்க, “அண்ணா லேட் ஆகுது சீக்கிரம் வாங்க” என்று கத்தினாள் ஜமுனா.

அவன் தன்னை நிலைபடுத்திக்கொண்டு அவர்களின் அருகே செல்ல ரிப்பனை கட் பண்ண கத்திரிக்கோலை வைத்திருந்த தட்டை அவனிடம் நீட்டினாள் செவ்வந்தி.

“நான் கட் பண்ணணுமா?” என்று அவன் சந்தேகமாக கேட்க, “உங்க பெயர் என்ன” என்று தலையை சரித்து குறும்பு மின்னும் பார்வையோடு கேட்டாள்.

“வெற்றி” என்றதும், “உங்க பெயரில் இருக்கும் வெற்றி எனக்கும் கிடைக்கட்டுமே. ப்ளீஸ் ரிப்பனை நீங்களே கட் பண்ணுங்க” என்றாள் சிரித்த முகமாகவே. அவளிடம் இப்படியொரு செயலை எதிர்பார்க்காத வெற்றி அதிர்ச்சியுடன் நிற்க ஜமுனா வியப்புடன் செவ்வந்தியைப் பார்த்தாள்.

நரசிம்மன் இந்நாள் வரை இந்த மாதிரி செய்ய சொல்லி அவள் பார்த்ததில்லை. அப்படி இருக்கும்போது தன் அண்ணனின் மீது அவள் வைத்திருக்கும் நம்பிக்கை செவ்வந்தியின் குணம் ஜமுனாவிற்கு பிடித்துப்போனது.

ஜனனியிடம் அவள் எதிர்பார்த்த விஷயம் இது. ஆனால் செவ்வந்தி அந்த இடத்தை பூர்த்தி செய்யவே, ‘அண்ணனுக்கு இவங்கதான் அண்ணியாக வரணும்’ என்று நினைத்துக்கொண்டாள்.

அவர்களை சுற்றி கடையின் சேல்ஸ்மேன், டெய்லர்,துணி எடுக்க வந்த பொதுமக்கள் என்று நிறையப்பேர் நின்றிருப்பதை கவனித்த வெற்றி மெல்லிய குரலில், “என்னங்க நீங்களே ரிப்பனை கட் பண்ணுங்க” என்றான்.

“முடியாது” பட்டென்று அவளிடமிருந்து பதில் வரவே அவன் தங்கையை நோக்கினான்.

ஜமுனாவிற்கு அவனின் தயக்கம் புரிந்தாலும் அவன் மீது செவ்வந்தி வைத்திருக்கும் நம்பிக்கையை உடைக்க விரும்பாமல், “நீங்களே கட் பண்ணுங்க அண்ணா. இங்கே எல்லோரும் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க” என்றாள்.

அதற்கு மேலும் மறுக்க முடியாமல் ரிப்பனை கட் பண்ணிய வெற்றியின் மனமோ, ‘என் மலருக்கு இந்த தொழில் வெற்றியை தரணும்’ என்று வேண்டிக் கொண்டான்.

கடை திறந்ததும் சாமிக்கு விளக்கேற்றிவிட்டு சேல்ஸ்மேன் அவரவர் இடங்களில் சென்று நிற்க மற்றவர்கள் துணி எடுப்பதும் அதை தைக்க கொடுத்தனர். ஆயிரம்  ரூபாய்க்கு மேல் வாங்குபவர்களுக்கு சிறப்பு சலுகைகள் என்பதால் கூட்டம் கொஞ்சம் கலைகட்டியது.

ஜமுனா கடையை சுற்றிலும் பார்வையை சுழற்றினாள். கடைக்குள் நுழையும் இடத்தில் பணம் செலுத்தும் இடமும், அடுத்து இருக்கும் பிரிவில் ஆண்களுக்கான உடைகள் ரெடிமேட், அதற்கு எதிரே சிறுவர்களின் ஸ்கூல் உடைகள், பெண்களுக்கான சேலை, சுடிதார் ரெடிமேட், மெட்டிரியல்ஸ், சாக்கெட், பாவாடை, நைட்டி என்று விலைக்கு தகுந்தாற்போல் நேர்த்தியாக அடுக்கபட்டு இருந்தது.

கடையின் இரு புறமும் துணிகளை அதற்கு உண்டான ரேக்குகளில் அடுக்கப்பட்டு உடைகளை எடுத்து காட்ட முன்னாடி டேபிள்கள் போடட்டிருந்தது.

அதைக் கடந்து உள்ளே சென்றால் தனியாக மர தடுப்பின் பின்னோடு டெயிலர்களுக்கு சிங்கர் மிஷின் போடபட்டு இருந்தது. ஒரு ஓரத்தில் துணிகளை வெட்டுவதற்கு தனியாக டேபிள் போடபட்டு இருந்தது. அந்த அறையின் வலதுபுறம் இருக்கும் வழியை அங்கே தைப்பவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இடதுபுறம் இன்னொரு மரதடுப்பின் மூலம் உருவாக்கபட்ட அறையில் சாப்பாடு சாப்பிடவும், களைப்பாக இருக்கும் நேரத்தில் இளைப்பாறும் இடமாக பயன்படுத்தி கொள்ள அமைக்கபட்டு இருந்தது.

அந்த கடை முழுவதையும் சுற்றி வரும்போதே அண்ணன் சொன்ன விஷயங்கள் மனதில் ஓடியது. அதே நேரத்தில் செவ்வந்தியின் திறமைகளும், அவளின் திட்டமிடல் எவ்வளவு தூரம் சரியாக இருக்கிறது என்று உணர்ந்தவளின் மனதில் திடீரென்று ஒரு கேள்வி எழுந்தது.

அவள் செவ்வந்தியை தேட பணம் செலுத்தும் இடத்தில் நின்றுகொண்டு வெற்றியும் அவளும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருந்தனர்.

“வெற்றி நீங்க கணக்கு வலக்கை எல்லாம் பார்த்துகோங்க. நான் மற்ற வேலைகளை பார்த்துக்கறேன்” என்று சொல்ல, “முடியாதுங்க” என்றான் வெற்றி பட்டென்று முகத்தில் அடித்தாற்போல.

“ஏன் முடியாது. நீங்க என் பார்ட்னர் தானே?”

“அதுக்கு உங்க இடத்தில் நான் எப்படி உட்கார முடியும்”

“இதெல்லாம் ஒரு காரணமா வெற்றி? நீங்க வேலையை கவனிங்க” என்று சொல்ல அவன் அசையாமல் நிற்கவே இருவரின் இடையே வாக்குவாதம் வந்தது. தூரத்தில் நின்றபடி அவர்கள் சண்டைப் போடுவதை பார்த்த ஜமுனா அருகே வந்தாள்.

“இங்கே இருவரும் என்ன பண்ணிட்டு இருக்கீங்க” என்று அவளின் கேள்வியில் சட்டென்று திரும்பிய வெற்றி, “என்னை கல்லாப்பெட்டி உட்கார சொல்றாங்க ஜமுனா” என்றான் அவன் கோபமாக.

“நீங்க ஏன் அண்ணி அண்ணாவிடம் அப்படி சொன்னீங்க” அவள் அண்ணனுக்கு சப்போர்ட் போட, ‘தங்களை யாராவது கவனிக்கிறார்களா?’ என்று நோட்டமிட்டபடி திரும்பிய செவ்வந்தியின் ஜமுனாவிடம்,

“எனக்கு துணி தைக்கிற வேலை இருக்கு ஜமுனா. நான் அங்கே கட்டிங் பண்ணிகொடுத்தால் தான் தைக்க முடியும். அதன் உங்க அண்ணாவை இங்கே இருக்க சொன்னேன்” என்று பொறுமையை இழுத்துபிடித்து கூறினாள்.

அதற்குள் ஒருவர் பில்போட அவர்களின் அருகே வர, “சரிங்க நீங்க கஸ்டமரை கவனிங்க” அவர்களுக்கு பேச இடம் கொடுக்காமல் அவள் வேகமாக நகர்ந்துவிட்டாள்.

வெற்றியோ தர்மசங்கடமாக தங்கையை பார்த்து, “இவங்க ஏன் இப்படியெல்லாம் பண்றாங்க ஜமுனா? எனக்கு ஒரு மாதிரியா இருக்கு” என்று கூறவே, “சரி அண்ணா நீ வேலையை கவனி நான் அவங்ககிட்ட பேசறேன்” என்றவளின் கையில் பணம் கொடுத்து அனுப்பினான்.

ஜமுனா செவ்வந்தியை தேடி சென்றாள்

வெற்றியிடம் வேலையை ஒப்படைத்துவிட்டு சென்ற செவ்வந்தி துணிகளை தைக்கும் இடத்திற்கு சென்று தன் வேலையை தொடங்கினாள். சிறிதுநேரம் கழித்து அங்கே வந்த ஜமுனா தயக்கமாக அவளையே பார்த்தாள்.

தன் மனதில் இருப்பதைக் கேட்டால் எங்கே தன்னை தவறாக நினைத்துவிடுவார்களோ என்ற எண்ணம் அவளை பேசவிடாமல் செய்தது. அதே நேரத்தில் வெற்றி கொடுத்துவிட்ட பணம் கையில் வைத்துகொண்டு சிந்தனையோடு ஒரு ஓரமாக நின்றாள்.

அவள் வந்ததில் இருந்து கவனித்த செவ்வந்திக்கு அவள் ஏதோ கேட்க நினைக்கிறாள் என்ற விஷயம் புரியவே, “என்னாச்சு ஜமுனா? என்னவோ மாதிரி இருக்கிற”என்று அவள் தொடங்கும்போது இவளுக்கு குப்பென்று வியர்த்துவிட்டது.

“அது வந்து அண்ணி” என்று அவள் தயக்கத்துடன் இழுக்க, “என்ன விஷயம் நேரடியாக சொல்லு” என்றாள்.

அங்கிருந்த மற்றவர்கள் கவனம் மெல்ல அவர்களின் பக்கம் திரும்பிட, “நீங்க வேலையை கவனிங்க” என்று சொல்லிவிட்டு ஜமுனாவை இழுத்துக்கொண்டு பக்கத்து அறைக்கு சென்றாள்.

அறையின் உள்ளே நுழைந்த மறுநொடி, “என்னிடம் என்னவோ கேட்க நினைக்கிற இல்ல அதை தயங்காமல் நேரடியாக கேளு” என்றாள்.

அவளின் இந்த நேரடித் தாக்குதலை எதிர்பார்க்காத ஜமுனா ஒரு நிமிடம் தடுமாறினாலும் சட்டென்று தன்னை சமாளித்துக்கொண்டு, “அண்ணி நீங்க ஏன் அண்ணாவை  ரிப்பன் கட் பண்ண சொன்னீங்க” கேட்க நினைத்தை கேட்டுவிட்டாள்.

ஜமுனாவிடம் இருக்கும் தெளிவைக் கண்டு மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்ட செவ்வந்தி, “பரவல்ல உனக்கும் கொஞ்சம் மூளை வேலை செய்யுது ஜமுனா” என்று சொன்னவள், “நீ ஏன் திடீர்னு இப்படியொரு கேள்வி கேட்கற” என்று கேட்டாள்.

தன்னை ஓரளவு சுதாரித்துக்கொண்டு, “இல்ல அண்ணி அப்பா தொடங்கிய எந்த வேலையிலும் அண்ணாவை ரிப்பன் கட் பண்ண சொன்னது இல்ல. அண்ணா தொட்டது தொலங்காதுன்னு” அவள் தொடங்கும்போது இடையில் புகுந்தாள் செவ்வந்தி.

“அது உங்களுக்கு தானே தவிர எனக்கு இல்ல” என்று சொல்ல திகைப்புடன் நின்றிருந்தாள் ஜமுனா.

“என்ன அண்ணி எனக்கு புரியல” என்று கேட்க, “உங்க அண்ணா மேல் நீங்க வைத்திருக்கும் அவநம்பிக்கை தான் உங்க பிஸ்னஸ் எல்லாமே தோல்வியில் முடிய காரணமே. அவர் தொட்டது தொலங்காதுன்னு நீங்களே ஒரு முத்திரை குத்திட்டிங்க. அப்புறம் பார்வையில் எங்கிருந்து மாற்றம் வரும்” என்ற இகழ்ச்சியாக உதடு வளைத்தாள் செவ்வந்தி.

அவளின் கேள்வியில் இருந்த நியாயம் ஜமுனாவிற்கு புரிந்தது. தன் அண்ணன் மீது அவர்கள் வைத்திருக்கும் எண்ணம் தவறு என்று நிரூபிக்க ஒரு நேரத்தை எதிர்பார்த்து காத்திருந்தவளுக்கு செவ்வந்தியின் பேச்சு பிடிக்கவே செய்தது.

“எண்ணங்கள் போல வாழ்க்கை. நம்ம என்ன நினைக்கிறோமோ அதுதான் நடக்கும். உங்க அண்ணா இந்த கடையைத் திறந்து வைத்தால் ஓடவே ஓடாதுன்னு ஒரு எண்ணம் எல்லோருக்கும் இருக்கும். ஆனா நான் சொல்றேன் எனக்கு நிச்சயம் இந்த பிஸ்னஸ்ல வெற்றி கிடைக்கும்” என்று கண்களில் ஒளி மின்ன கூறிய செவ்வந்தியின் கருத்தை ஏற்றுக்கொண்டாள் ஜமுனா.

“எங்க வீட்டில் அப்பா, அம்மா வைக்காத நம்பிக்கையை நீங்க அண்ணாமேல் வெச்சிருப்பதை பார்க்கவே மனசுக்கு நிறைவாக இருக்கு” என்றதும் தன்னை மீறி கலகலவென்று சிரித்துவிட்டாள் செவ்வந்தி.

ஜமுனா அவளை வியப்புடன் பார்க்க, “உங்க அண்ணாவை சந்திக்காமல் போயிருந்தால் இந்நேரம் வேறு யாரிடமாவது கைகட்டி வேலைப் பார்க்கும் நிலைமை எனக்கு வந்திருக்கும் ஜமுனா. என் பணத்தை காப்பாற்றி கொடுத்தார். அவர் வந்தபிறகு தோல்வி என்ற படியில் இருந்து வெற்றி என்ற படிகட்டுகளை ஏறிட்டு இருக்கேன். சோ நான் வைக்கும் நம்பிக்கை என்னைக்கும் பொய்யாக போகாது”  அவளின் நம்பிக்கையான பேச்சில் ஜமுனாவின் மனதில் பல படிகள் மேலே உயர்ந்தாள் செவ்வந்தி.

அவள் அங்கிருந்து செல்ல நினைக்கும்போது, “ஒரு நிமிஷம் அண்ணி” என்று அவளை தடுத்தாள்.