Manmo 12

அந்த வாரம் முழுவதும் மனைவியை விட்டு இம்மியளவும் நகரவில்லை கார்த்திக். அவளோடு தனியாக நேரம் செலவழிக்க வேண்டும் என்று அவளை ‘ஐல் ஆஃப் வைட்’ அழைத்துப் போயிருந்தான்.

இங்கிலாந்தின் தெற்குக் கரையோரத்தை அண்மித்திருக்கும் தீவு அது. ‘சௌத்தாம்ப்டன்’ துறைமுகத்திலிருந்து ஒரு மணித்தியாலத்திற்கும் குறைவான பயணம்.

அந்த ப்ளாக் ஆடியை ‘ஃபெரி’ யின் தரைத்தளத்தில் பார்க் பண்ணிவிட்டு முதலாம் தளத்தில் போய் அந்த நீலக்கடலை ரசித்திருந்தார்கள் இருவரும்.

அந்தப் பயணத்திற்காக ஐந்து நாட்களை ஒதுக்கியிருந்தான் கார்த்திக். கிட்டத்தட்ட முன்னூற்றி என்பது கிலோமீட்டர் பரப்பளவே கொண்ட சிறிய தீவு அது.

ஐந்து நாட்களும் அந்தத் தீவின் ஒரு மூலையையும் விடாமல் சுற்றிப் பார்த்தார்கள். தான் எத்தனை சிறந்த காதலன் என்பதை அந்த ஐந்து நாட்களில் மித்ரமதிக்குக் காட்டி இருந்தான் கார்த்திக்.

அவன் விரலிடுக்குக் கூட அவன் காதலை அவளுக்குத் தெளிவாக எடுத்துச் சொன்னது. உருகி உருகி அந்த நாட்களை இருவரும் அனுபவித்தார்கள்.

இத்தனை அன்பை மித்ரமதி இதுவரை அனுபவித்ததில்லை. போதும் போதும் என்றவரை அவன் காதலில் திளைத்து எழுந்தாள்.

அந்தக் கண்கள் பார்த்து அவள் தேவை அறிந்தான் கணவன். கிட்டத்தட்ட ‘உள்ளங்கையில் வைத்துத் தாங்கினான்’ என்பார்களே… அப்படித்தான் அவளைக் கவனித்துக் கொண்டான்.

படகில் சவாரி செய்தார்கள், கண்ணாடித் தொழிற்சாலை பார்த்தார்கள், உலகின் முடிவே இது தானோ என்ற வகையில் இருந்த அந்தக் கடற்கரையின் வெள்ளை நிற முடிவைப் பார்த்து அதிசயித்தார்கள்.

ஒற்றைக் குதிரையில் ஒன்றாக அமர்ந்து காற்றில் அவள் கேசம் பறக்கும் அளவிற்கு வேகமாகச் சவாரி போனார்கள். குதிரையேற்றம் கார்த்திக்கிற்கு மிகவும் பிடித்தமான விளையாட்டு.

“பேபி… ரொம்ப நாளா ஒரு ‘ஹோர்ஸ்’ வாங்கணும்னு நினைச்சிருந்தேன். லண்டன் ரிட்டர்ன் ஆனதும் முதல் வேலை அதுதான், சரியா?”

“ம்…” இப்போதெல்லாம் கணவனின் பேச்சிற்கு அவள் மறுபேச்சு பேசியதே இல்லையே!

ஊர் சுற்றினார்கள். ஓய்வு கிடைத்த போதெல்லாம் உறவில் திளைத்தார்கள். கார்த்திக் சற்றே நகர்ந்தாலும் முகம் வாடிப் போனாள் பெண்.

ஐந்து நாட்களும் ஐந்து மணித்தியாலங்கள் போல கரைந்து போக விருப்பமின்றியே வீடு திரும்பி இருந்தார்கள். இதற்கிடையில் தேவகியையும் போய்ப் பார்க்க மறக்கவில்லை.

கல்யாணம் முடிந்து இரண்டு வாரங்கள் கழிந்த நிலையில் பத்மாவும் கணவரும் அமெரிக்கா கிளம்பி விட்டார்கள். தங்கள் இருவருக்குமான வாழ்க்கை ஓரளவு மித்ரமதிக்கு இப்போது பிடிபட்டிருந்தது.

சக்திவேல் வீட்டிற்குக் கூட ஒரு நாள் விருந்திற்குப் போய் வந்திருந்தார்கள்.

தேனிலவு முடிந்த கையோடு தொழிலில் லேசாகக் கவனம் திருப்பி இருந்தான் கார்த்திக். மித்ரமதி இங்கே எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டாலும் இவர்களை வீழ்த்தவென போட்டிக்காக லண்டனில் வாங்கிய கம்பெனி,

அமெரிக்க வியாபாரம் என அவனை வேலைப்பளு அழுத்தியது.
முடிந்தவரை அவன் மனைவியோடு நேரம் செலவழித்தாலும் அது காதல் கொண்ட பெண் மனதிற்குப் போதவில்லை. என்னதான் வேலை இருந்தாலும் இரவுகளை இனிப்பாக்க அவன் தவறுவதே இல்லை. ஞாயிறுகளை முழுமையாக அவளுக்கென்றே ஒதுக்கி இருந்தான்.

‘இத்தனை அன்பாக இருப்பவன் முதல் நாளிரவு ஏன் அப்படி நடந்து கொண்டான்?’ என்ற கேள்வி மித்ரமதியின் மனதில் எழாமல் இல்லை. ஆனால் அந்தக் கசப்பைப் பற்றிப் பேசி இருக்கும் இதத்தைக் கெடுத்துக் கொள்ள அவள் விரும்பவில்லை.

புதிதாக அந்தக் கறுப்பு நிற உயர்ஜாதிக் குதிரையை வாங்கி இருந்தான் கார்த்திக். இவர்கள் வசித்த பகுதியில் குதிரை சவாரிக்கு அனுமதி இருந்ததால் ஞாயிறு காலை அவன் பொழுது அதனுடனேயே கழியும்.

மனைவியையும் உடனிருத்திக் கொண்டு பொடி நடையாகக் குதிரையை நடத்திச் செல்பவன் அதற்கான பிரத்தியேக மைதானம் வந்ததும் முழுதாக மாறிப் போவான்.

அவன் வேகம் தாங்க முடியாமல் சமயத்தில் மித்ரமதி இறங்கிக் கொள்வதும் உண்டு. அத்தனை வேகம் கார்த்திக்கிடம்.

“எதுக்குக் கார்த்திக் இத்தனை வேகம்?” அவள் எவ்வளவு சொன்னாலும் அவன் கேட்டுக்கொள்ள மாட்டான். அந்தக் குதிரை கூட இப்போதெல்லாம் தனது எஜமானனின் வேகத்தைப் புரிந்து கொண்டிருந்தது.

இடையில் ஒரு முறை இவன் அமெரிக்கா போக வேண்டிய கட்டாயம் ஏற்படவும் தவிர்க்க முடியாமல் போய் வந்திருந்தான் கார்த்திக்.

நான்கே நான்கு நாட்கள். அதற்குள் மித்ரமதி வாடிப்போனாள். இவர்கள் வீட்டில் தனியாக இருக்க முடியாது என்று அவள் அம்மா வீட்டில் தான் அவளை விட்டு விட்டுப் போயிருந்தான் கார்த்திக்.

இங்கிருந்த படிதான் வேலைக்கும் போய் வந்தாள் பெண். ரிச்சர்ட் கூடக் கேலிப் பண்ணினான். முறைப்பைப் பதிலாகத் தந்த போதும் மனதுக்குள் சிரித்துக் கொண்டாள்.

‘இந்தக் கார்த்திக் இல்லாமல் தானே இத்தனை காலமும் நான் வாழ்ந்தேன்! இது என்ன? புதிதாக என்னை இப்படி ஆக்கிவிட்டான்?’

ஆனால் திரும்பி வந்த பிறகு, அந்த நான்கு நாட்கள் பிரிவின் வேகத்தை அவன் ஒட்டுமொத்தமாக அவள் மீது திணித்த போது ஓய்ந்து போனாள் பெண்.

***

“மித்ரா.”

“சொல்லுங்க கார்த்திக்.” இரண்டு பேரும் ஆஃபீஸில் உட்கார்ந்து கொண்டு வேலை பார்த்திருந்தார்கள்.

“உனக்கொரு மெயில் ஃபார்வர்ட் பண்ணி இருக்கேன். படிச்சுப் பார்த்துட்டு என் காபினுக்கு வாடா.”

“ஓகே கார்த்திக்.” மளமளவென மின்னஞ்சலைத் திறந்தவள் அவன் அனுப்பியிருந்த மெயிலைப் பார்த்து விட்டு வாய் பிளந்தாள்.

“வாவ்!” அமெரிக்காவில் இருக்கும் இவர்கள் கம்பெனி அங்கு மிகவும் பிரபலமான ஒரு சூப்பர் மார்க்கெட்டிற்குக் கொடுத்திருந்த கொட்டேஷனை ஏற்றுக் கொண்டதாக மெயில் வந்திருந்தது.
மிகவும் அருமையான வாய்ப்பு.

இதைத் திறம்படச் செய்து முடித்தால் இவர்கள் கம்பெனி அடுத்த லெவலுக்குப் போக நிச்சயம் வாய்ப்புகள் உண்டு.

கணவனின் அறைக்குப் போனாள் மித்ரமதி. மலர்ந்த புன்னகையோடு அமர்ந்திருந்தான் கார்த்திக். அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு அந்த முரட்டுக் கன்னத்தில் முத்தம் வைத்தாள் மித்ரா.

“ரொம்பப் பெரிய சான்ஸ் இல்லை கார்த்திக்?”

“ம்… இந்த சூப்பர் மார்க்கெட்டோட கை கோர்த்துக்கிறது நிறைய கம்பெனிகளோட கனவு மித்ரா.”

“அப்புறம் என்ன? ஜமாய்ச்சிடலாம் கார்த்திக்.” அவள் சொன்னபோது கார்த்திக்கின் முகம் யோசனையைக் காட்டியது.

“என்னாச்சு கார்த்திக்?” கேட்டவளைத் தன் மடியில் இருத்திக் கொண்டான் கார்த்திக். அவன் கை மெதுவாக அவள் இடையை வருடிக் கொடுத்தது.

“கொஞ்ச நாள் அங்கேயே தங்க வேண்டி வரும் மித்ரா.”

“ஓ…”

“எங்கூட அமெரிக்கா வர்றியா? அம்மா கூட அடிக்கடி ‘எப்போ மித்ராவைக் கூட்டிட்டு வர்றே’ ன்னு கேக்குறாங்க.”

“அங்க வந்தா இங்க யாரு கம்பெனியை பார்த்துக்கிறது கார்த்திக்?”

“அதான் ரிச்சர்ட் இருக்கான் இல்லை. ஜஸ்ட் ஒன் வீக் மித்ரா. அதுக்கப்புறம் வேணுமின்னா நீ கிளம்பி வரலாம். அங்க இருந்தே நீ எல்லாத்தையும் பார்த்துக்கலாம் மித்ரா.”

“ம்… ஓகே கார்த்திக்.” அவள் சம்மதம் சொல்ல அப்போதே அம்மாவிற்குக் காலைப் போட்டான் கார்த்திக்.

“அம்மா! உம் மருமக அவ தோள்ல சுமந்துக்கிட்டு இருந்த கம்பெனியை ஒரு வாரம் இறக்கி வைக்கச் சம்மதிச்சுட்டா.” அவன் அவளைக் கலாய்க்கவும் அந்தக் கன்னத்தில் இப்போது பட்டென்று ஒரு அடி வைத்தவள் ஃபோனை வாங்கிக் கொண்டு நகர்ந்து விட்டாள். கார்த்திக்கின் நெற்றியில் சிந்தனை முடிச்சுக்கள்.

***

கணவனும் மனைவியும் அமெரிக்கா வந்து விட்டார்கள். இவர்கள் வந்த அடுத்த நாளே பத்மா தங்களைச் சார்ந்தவர்கள் அனைவரையும் அழைத்து ஹோட்டலில் பெரிய விருந்தே வைத்து விட்டார்.

தன் அழகான மருமகளை அத்தனை பேரிடமும் காட்டிப் பூரித்துப் போனார்.

மார்க் ஐ மனைவிக்கு அறிமுகப் படுத்தினான் கார்த்திக். ஏற்கனவே இருவருக்குள்ளும் அறிமுகம் இருந்தாலும் கார்த்திக்கின் மனைவியாகச் சந்திப்பது இதுவே முதற்தடவை.

“ஹாய் கார்த்திக்!” அந்தக் குரலில் நின்றான் கார்த்திக். உள்ளே சிக்னல் கிடைக்காததால் ஃபோனோடு வெளியே வந்திருந்தான்.

“இந்த ஜெனியை மறந்துட்டீங்க பார்த்தீங்களா? வெட்டிங் க்குக் கூட இன்வைட் பண்ணவே இல்லை!” அவன் எதிரே அராபியன் குதிரை நின்றிருந்தது.

கார்த்திக்கின் வலது கண் கொஞ்சம் சுருங்கியது. அவன் மனதுக்குள் ஒரு சில கணக்குகள் கணநேரத்தில் தோன்றி மறைந்தன.

“ஹாய் ஜெனி.”
“வொய்ஃப் எங்க கார்த்திக்? நான் பார்க்கலாமா?”

“வொய் நாட்? இதோ…” என்றவன் வந்த வேலையை மறந்து மார்க் ஐ அழைத்தான்.

“மார்க்! மித்ராவை அழைச்சிட்டு வெளியே வா.” அவன் சொன்ன அடுத்தாவது நிமிடத்தில் மார்க்கோடு எழிலோவியமாக நடந்து வந்தாள் மித்ரமதி.

“மித்ரா! மீட் மை ஃப்ரெண்ட் ஜெனி.” அவன் பரஸ்பரம் அறிமுகப்படுத்த இரு பெண்களும் நட்போடு கை குலுக்கிக் கொண்டார்கள்.

அமெரிக்கர்கள் நாகரிகமானவர்கள் தான். இருந்தாலும் இது தேவையில்லாத வேலை என்றே மார்க் ற்குத் தோன்றியது.

மரியாதைக்காகக் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்த கார்த்திக் அதன்பிறகு மனைவியையும் அழைத்துக் கொண்டு உள்ளே போய் விட்டான்.

அடுத்து வந்த நாட்களில் எல்லாம் கார்த்திக் நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருந்தான். ஒரு நாள் மாத்திரம் மித்ராவைத் தன்னோடு அழைத்துக் கொண்டு போய் கம்பெனியைக் காண்பித்தவன் மதியம் வீடு வரும் போது கொண்டு வந்து விட்டு விட்டுப் போய்விட்டான்.

கணவன் மனைவி இருவருக்குள்ளும் பேச்சுவார்த்தையே இல்லாமல்ப் போனது. காலையிலேயே தொழிற்சாலைக்குப் போய் விடுவான் கார்த்திக். தளபாடத் தொழில் என்பதால் பொருட்களின் தரம் அவனுக்கு மிக முக்கியமானதாக இருந்தது.
இரவு வீடு திரும்பும் போதும் நன்றாகவே தாமதமாகி விடுகிறது.

மருமகளின் முகம் வாடுவதைப் பொறுக்காத பத்மா கூட ஒரு தரம் கார்த்திக்கைச் சத்தம் போட்டிருந்தார்.

“முன்ன மாதிரி இப்போ இல்லை கார்த்திக். உனக்காக ஒரு பொண்ணு வீட்டுல காத்துக்கிட்டு இருக்கா. அதுக்கேத்த மாதிரி கொஞ்சம் ப்ளான் பண்ணிக்கோ.” ஆனால் மகன் அதைக் காதில் போட்டுக்கொண்டது போல் தெரியவில்லை.

மித்ரா விழித்திருந்து உணவு பரிமாறுவதையும் அவன் அவ்வளவாக விரும்புவதில்லை.

“நீ பேசாம சாப்பிட்டுட்டு ரெஸ்ட் எடு மித்ரா. எனக்காகக் கண் முழிக்க வேணாம்.” இப்படிச் சொல்பவன் தான் அதன் பிறகு மனைவியின் சேவையை முழுதாக நாடுவான்.

அர்த்த ராத்திரியில் மட்டும் தான் இப்போதெல்லாம் அவனுக்கு மனைவியின் ஞாபகம் வந்தது.

மித்ராவிற்கு அப்போதெல்லாம் மனம் கொஞ்சம் சுணங்கிப்போகும்.

இரண்டு வார்த்தை என்னோடு பேச நேரமில்லை. ஆனால்… நடப்பை மனம் ஏற்றுக்கொள்ளக் கொஞ்சம் சிரமப்பட்டது. இதையெல்லாம் தாண்டி அவன் காதலைத் தானே அவள் பெரிதும் விரும்பினாள்.

வேண்டி நின்றாள்.
அன்றும் அப்படித்தான். அவன் வீட்டுக்கு வரும்போதே மணி பதினொன்றைத் தாண்டி இருந்தது.

அதுவரை கன்ஸ்ட்ரக்ஷன் கணக்கு வழக்குகளை லாப்டாப்பில் பார்த்துக் கொண்டிருந்த மித்ரா எழுந்து கீழே போனாள்.

“என்ன மித்ரா… இன்னும் தூங்கலையா?”

“கொஞ்சம் வெர்க் இருந்தது கார்த்திக். அதைப் பார்த்துக்கிட்டு இருந்தேன். நீங்க வாங்க சாப்பிடலாம்.”

“ம்…” உடை மாற்றாமல் அப்படியே டைனிங் டேபிளில் உட்கார்ந்தான் கார்த்திக்.

“ரொம்ப டயர்டா?” அவன் தோள்களை இதமாக வருடிக் கொடுத்தாள் மனைவி.

“ம்… நீ இன்னும் சாப்பிடல்லையா மித்ரா?”

“இல்லை கார்த்திக்.” இருவருக்கும் உணவைப் பறிமாறியபடி மித்ராவும் அவனோடு உண்டு முடித்தாள்.

வேலைகளை முடித்துக் கொண்டு அவர்கள் ரூமிற்கு அவள் போனபோது கார்த்திக் அவளுக்காகக் காத்திருந்தான்.

“இப்போல்லாம் நாம பேசுறதே ரொம்ப அபூர்வமாப் போச்சில்லை கார்த்திக்?” அவள் கேட்கவும் புன்னகைத்துக் கொண்டே அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தான் கார்த்திக்.

“எவ்வளவு சாஃப்ட்டா இருக்கே பேபி!”

“கார்த்திக்! ப்ளீஸ்… நான் சொல்லுறதைக் கொஞ்சம் கேளுங்க.” இப்போதும் அவள் பேச்சு அவனிடத்தில் எடுபடவில்லை. தன்போக்கில் முன்னேறிக் கொண்டிருந்தான்.

“கார்…த்தி…க்!” மிகவும் சிரமப்பட்டு அவனைத் தன்னிடமிருந்து விலக்கினாள் மனைவி.

“எனக்கு உங்க கூட பேசணும் கார்த்திக்.”

“காலையில பேசலாம் மித்ரா.”

“இல்லையில்லை… எனக்கு இப்போவே பேசணும்.” அவன் முகத்தில் சட்டென ஒரு எரிச்சல் பாவம் தோன்றியது.

“சரி… சொல்லு. என்ன?”

“எனக்கு நீங்க இப்படி நடந்துக்கிறது பிடிக்கலை கார்த்திக்.”

“ஏன்? அப்படி நான் என்ன பண்ணினேன்?”

“கார்த்திக்! நான் என்ன சொல்ல வர்றேன்னு உங்களுக்குத் தெரியும்.”

“ஸோ… இதுல என்ன இருக்கு மித்ரா? எல்லா வீட்டுலயும் எல்லா ஹஸ்பன்ட் அன்ட் வொயிஃப் குள்ளயும் இது நடக்கிறது தானே?”

“கார்த்திக்! நமக்கு இப்போ தான் கல்யாணம் ஆகி இருக்கு. ஆஃப் கோர்ஸ்… நீங்க பிசியா இருக்கீங்க. எனக்கும் அது புரியுது. ஆனா… கிடைக்கிற கொஞ்ச நேரத்தையாவது நீங்க எனக்காக ஸ்பென்ட் பண்ணலாம் இல்லையா?”

“ஹேய்! நான் உங்கூடத் தானே மித்ரா டைம் ஸ்பென்ட் பண்ணுறேன்? நோ ஃப்ரெண்ட்ஸ்… நோ பப்… நத்திங்.”

“நான்… நான் அதைச் சொல்லலை கார்த்திக்… புரிஞ்சுக்கோங்க. ஐ லவ் யூ கார்த்திக்… எனக்கு உங்க லவ் தான் ஃபர்ஸ்ட் வேணும். மத்ததெல்லாம் அதுக்கப்புறம் தான். நான் உங்க கூட பேசணும், சிரிக்கணும், பாடணும், ஆடணும்… இப்படி நிறைய இருக்கு கார்த்திக்.”

அவள் மூச்சு விடாமல் பேசி முடிக்க ஒரு கோணல் சிரிப்புச் சிரித்தான் கார்த்திக்.

அவன் இத்தனை நாள் கொக்குப் போலக் காத்திருந்தது இந்த ஒரு நொடிக்காகத் தானே!

“மிஸ்.மித்ரமதி சந்திரசேகருக்கு லவ் ன்னாப் பிடிக்காதே?” கேலியாக வந்தது அவன் குரல்.

“அது இந்த கார்த்திக் ஹரிகிருஷ்ணனா வைப் பார்க்கிற வரைக்கும்.” முகமெல்லாம் புன்னகையாகப் பதில் சொன்னாள்
பெண்.

“ஸோ… கார்த்திக் ஹரிகிருஷ்ணனாவைப் பார்த்தா லவ் வரும். நந்தகுமாரைப் பார்த்தா லவ் வராது. அப்படித்தானே மித்ரா?” அவன் குரல் இப்போது குதர்க்கத்தைக் குத்தகைக்கு எடுத்திருந்தது.

“நந்தகுமாரா? அது யாரு கார்த்திக்?”

“ஓ… பெயர் கூட ஞாபகம் இல்லை. சூப்பர் மித்ரா.” கணவனின் குரலில் இருந்த கேலி மித்ராவைச் சீண்டிப் பார்த்தது.

“நீங்க என்ன சொல்லுறீங்கன்னு எனக்குப் புரியலை கார்த்திக்.”

“அட! கோபமெல்லாம் வருது. அது சரி… உண்மை சுடத்தானே செய்யும்.”

“எந்த உண்மை?”

“யூனிவர்ஸிட்டியில ஒருத்தன் உனக்காக கையை வெட்டிக்கிட்டு ஹாஸ்பிடல்ல கிடந்தானே… ஞாபகம் இல்லை?”

“நீங்க யாரைச் சொல்லுறீங்க கார்த்திக்?” மித்ராவின் வயிற்றுக்குள் இப்போது பயப்பந்து ஒன்று உருண்டது.

“ந…ந்த…குமா…ர்!” தெளிவாக உச்சரித்தான் கார்த்திக்.

“ஆமா… ஒரு பையன் அப்படிப் பண்ணிக்கிட்டான். ஆனா… அப்போவே அவன் அண்ணா… வந்து…” மேலே மித்ரமதி தொடரவில்லை. கால்கள் லேசாக நடுங்க ஆரம்பித்தது.

“பாதி மீட்டிங் ல ஃபோன் வருது. உங்க தம்பி சாகக் கிடக்கிறான். வந்து அள்ளிக்கிட்டுப் போங்கன்னு.”

“ஐயையோ!”

“ஆங்… இப்படித்தான் எனக்கும் வலிச்சுது. காரைப் போட்டுக்கிட்டு ஓடுற தூரத்துலயா நான் இருக்கேன்? பதறியடிச்சிக்கிட்டு ஓடினேன். நல்ல வேளை, என்னோட சித்தி பண்ணின புண்ணியம். பையன் பொழச்சுக்கிட்டான். இதுவே ஏதாவது ஒன்னு ஆகியிருந்தா?” கார்த்திக்கின் குரல் இப்போது ஓங்கி இருந்தது. மித்ரமதி இரு கைகளாலும் வாயைப் பொத்திக் கொண்டாள்.

“அது என்ன உங்கப்பன் ஊரா? காசு கொடுத்து போலீஸ் வாயை மூட. போலீஸ் ஸ்டேஷன், கேஸு, கௌன்ஸிலிங் ன்னு அலைஞ்சு…” கார்த்திக் முழுதாக ஒரு நிமிடம் கண்களை மூடி வானம் பார்த்தபடி நின்றிருந்தான்.

அன்று அவன் பட்ட துயரை இன்று மீட்டிப் பார்ப்பது போல் இருந்தது அவன் நின்றிருந்த தோற்றம். மித்ரா உறைந்து போய் அப்படியே நின்றிருந்திருந்தாள்.

இந்தப் பிரச்சினையை அத்தனை வீரியமாக அப்போது அவள் நினைத்திருக்கவில்லை. ஒரு முட்டாளின் கோழைத்தனம் என்றுதான் எண்ணி இருந்தாள்.

அதுதான் பையன் பிழைத்துக் கொண்டானே! அதன் பிறகு அவள் கவனம் படிப்பில் போய் விட்டது.

“சரி… அதோட தான் எல்லாம் முடிஞ்சு போச்சு. நீ படிச்சுக் கிழிச்சது போதும்டா ன்னு ஊரோட போனா… அவனைப் பிடிச்ச இந்தச் சனி அத்தோட தீரலை.” கார்த்திக் இப்போது அங்கிருந்த நாற்காலி ஒன்றினைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.

கணவனின் அந்த ஒற்றை வார்த்தையிலேயே மித்ரமதி பாதி செத்துப் போனாள். ‘அவன் ‘சனி’ என்று இப்போது என்னைத்தானே சொல்கிறான்?’

“என்ன ஆச்சுது, ஏது ஆச்சுது ஒன்னுமே புரியலை. திடீர்னு நந்துவோட பார்வை போச்சு. இன்னைக்குப் பார்வையைத் தொலைச்சிட்டுக் குருடனா நிக்கிறான் என்னோட தம்பி. இதெல்லாம் யாரால? யாரால?” கார்த்திக்கின் குரல் மேலும் மேலும் வலுப்பெற மித்ரமதி நடுங்கிப் போனாள்.

‘இவன் என்ன சொல்கிறான்? எப்போது இதெல்லாம் நடந்து முடிந்தது? யாரோ ஒரு பையன் ஏப்போதோ காதல் சொன்னான். எனக்குப் பிடிக்கவில்லை.

நாகரிகமாக மறுத்துவிட்டு நான் என் படிப்போடு ஐக்கியமாகி விட்டேனே! இப்போது வந்து இப்படியெல்லாம் சொன்னால்…’

மித்ரமதிக்கு லேசாக மயக்கம் வரும்போல இருந்தது. அங்கிருந்த கட்டிலை ஆதாரமாகப் பிடித்துக் கொண்டவள் அதில் தொய்ந்து போய் அமர்ந்தாள்.

“கார்த்திக்!”

“கூப்பிடாதே! உன்னோட வாயால இனி என்னோட பெயரைக் கூப்பிடாதே!”

“கார்த்திக்! என்ன பேசுறீங்கன்னு புரிஞ்சு தான் பேசுறீங்களா? இதுக்கும் நம்ம கல்யாணத்துக்கும் என்ன சம்பந்தம் கார்த்திக்? அது வேற இது…”

“சம்பந்தம் இருக்கு. எல்லாத்துக்கும் சம்பந்தம் இருக்கு.”

“கார்…த்…திக்…” இப்போது மித்ரமதிக்கு உடெம்பெல்லாம் பதறியது.

“மான்ஹட்டன் ல இருக்கிற கார்த்திக் லண்டன் வரைக்கும் வர வேற என்ன காரணம் இருக்கப் போகுது? உங்க அழகு சுண்டி இழுத்திச்சா?”

“………….” அவள் விழிகளில் இப்போது லேசான பளபளப்பு. அந்தப் பார்வை அவனை வெறித்தது.

“திவாகரைக் கரெக்ட் பண்ணி அத்தனை கொட்டேஷனையும் வரவழைச்சு, ‘எஸ் டி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்’ ஐ வீழ வெச்சு, அந்தக் கம்பெனியை இந்தக் கார்த்திக் வாங்கி… இத்தனையும் எதுக்காகன்னு நினைச்சே?”

“அப்போ… நம்ம கல்…யாணம்?” வார்த்தைகள் நொண்டி அடித்ததது பெண்ணுக்கு.

“மிஸ்.மித்ரமதி சந்திரசேகருக்கு லவ் ன்னா என்னன்னு புரிய வேணாம்? அதோட வலி எப்படி இருக்கு ம்ன்னு காட்ட வேணாம்?”

“உங்களுக்கே இது முட்டாள்த்தனமாத் தோணலையா கார்த்திக்?”

“இல்லை… தோணலை.”

“பழிவாங்குறேன்னு கிளம்பி உங்க வாழ்க்கையையும் தான் கேள்விக்குறி ஆக்கி இருக்கீங்க கார்த்திக்.” இப்போது மித்ரமதி லேசாகக் கலங்கினாள்.

“ஐ டோன்ட் கெயார்.” அவன் கல்லாகிப் போயிருந்தான்.

“அதுக்கு எதுக்குக் கார்த்திக் கல்யாணம்? காதலிச்சிருக்கலாமே. அப்பக் கூட நீங்க நினைச்சதை சாதிச்சிருக்கலாமே?”

“மொதல்ல அப்படித்தான் ஐடியா இருந்தது. ஆனா ஆக்ஸ்போர்ட் ல பார்த்ததை விட ஆஃபீஸ்ல பார்த்தப்போ செமையா இருந்தியா… அதான், மனசை மாத்திக்கிட்டேன்.”

“………….”

“பிஸினஸை அம்போன்னு இங்க போட்டுட்டு உம்பின்னால என்னை நாயா அலையச் சொல்லுறியா? இந்தக் கார்த்திக் பின்னாடி பொண்ணுங்க அலைஞ்சதாத் தான் சரித்திரம். ஆனா… முதல்முறையா என் தம்பிக்காக அந்தக் கருமத்தையும் நான் செஞ்சு தொலைச்சேன். இதுக்கெல்லாம் எனக்கு ஏதாவது நீ குடுக்க வேணாம்?”

“கார்த்திக்?”

“ஆ… யூ டோன்ட் வொர்ரி பேபி… நல்லாவே என்ஜாய் பண்ணினேன். அதுல எல்லாம் உன்னைக் குறை சொல்லவே முடியாது.”

காதுகளைத் தன் கைகளால் பொத்திக் கொண்டாள் மித்ரா.

அவளின் அழகான தாம்பத்தியம் அங்கு கடை விரிக்கப்பட்ட போது அவளுக்கு அத்தனை வேதனையாக இருந்தது. கேவலமாக இருந்தது.
என்னதான் நடக்கிறது இங்கே?

இவன் ஏதேதோ பினாத்துகிறானே! திவாகர் மாமாவும் இதில் கூட்டு என்கிறானே?

“கார்த்திக்… நீங்க என்னென்னவோ எல்லாம் சொல்லுறீங்க. எல்லாம் விளையாட்டுத் தானே? எல்லாம் சும்மா… சும்மா தானே?” முகம் நிறைந்த குழப்பம். ஆனாலும் ஒரு நப்பாசை. அவன் இதுவரை பேசிய அனைத்தையும் அழித்துவிட மாட்டானா என்று. அல்லது… நான் கனவேதும் காண்கிறேனா?

அவன் சிகரெட்டின் வாசம் அவளை நிஜத்திற்குக் கொண்டு வந்தது.

முதல்நாள் இரவிற்குப் பிறகு இன்று வரை அவள் முன் அவன் பிடித்திராத சிகரெட்.

“கல்யாணம் பண்ணின கையோட என் விளையாட்டை ஆரம்பிக்கலாம்னு தான் நினைச்சேன் பேபி. ஆனா, அடுத்த நாளே போல்ட்டா என்னை எதிர்த்தே பார்த்தியா? அதை நான் ரொம்பவே ரசிச்சேன். அப்போ தோணிச்சு. இது லேசுப்பட்ட பொண்ணில்லை ன்னு.”
அவன் அந்த சிகரெட்டை ஆழ்ந்து சுவாசித்தான். மித்ராக்குக் குமட்டிக் கொண்டு வந்தது.

“அப்போவே நான் இதையெல்லாம் சொல்லி இருந்தா நீ என்ன பண்ணி இருப்பே? நான் கட்டின தாலியைக் கழட்டி எம் முகத்துல வீசிட்டு போய்க்கிட்டே இருந்திருப்பே. ஆனா இப்போ முடியாதில்லை.”

அவன் வில்லன் போல ஒரு சிரிப்புச் சிரித்தான். மித்ரா இதுநாள் வரை தான் மயங்கிப் போய்ப் பார்த்திருந்த அந்த முகத்தை இப்போது ஒரு பயத்தோடு ஏறிட்டுப் பார்த்தாள்.

“இப்போ அப்படியெல்லாம் எதுவும் பண்ண முடியாது. ஏன்னா? பேபி… நீங்க தான் என்னை அவ்வளவு லவ் பண்ணுறீங்களே!” சொல்லிவிட்டுக் கடகடவெனச் சிரித்தான் கார்த்திக்.

அவன் காலடியோசை அவளை நெருங்க அண்ணார்ந்து பார்த்தாள் பெண். சிகரெட்டை முடித்திருந்தவன் அவளை அப்படியே அள்ளி அணைத்துக் கொண்டான்.

“கார்த்திக் ப்ளீஸ்… தள்ளிப்போங்க.”

“ஏன்? எதுக்கு நான் தள்ளிப் போகணும்?”

“கார்த்திக் ப்ளீஸ்… இவ்வளவு நேரமும் நீங்க பேசினதுக்கும் இப்போ பண்ணுறதுக்கும் சம்பந்தமே இல்லை கார்த்திக்.”

“ஏனில்லை? அப்போ தம்பியின் காதலி… இப்போ அண்ணனின் மனைவி.”

“கார்த்திக்!” மித்ரமதியின் குரல் கீச்சிட்டது.

“டைட்டில் நல்லா இருக்கில்லை பேபி? உங்கூடப் பேசிப் பேசி எனக்கும் இப்போல்லாம் தமிழ் நல்லாவே வருது.”

“யாரோ ஒரு பொறுக்கி எதுவோ பண்ணினான்னு…” கோபமாக ஆரம்பித்தவளை அடக்கினான் கார்த்திக்.

“மித்ரா! வார்த்தையை அளந்து பேசு. அவன் பொறுக்கியில்லை! என் தம்பி.” கர்ஜனையாக வந்தது கணவனின் குரல்.

“என்னைப் பொறுத்தவரை அவன் பொறுக்கி தான். வாழ்க்கையை ஃபேஸ் பண்ணத் தெரியாத கோழை.”

“மித்ரா!” அதற்கு மேல் அவன் பேசவில்லை. மூர்க்கனாக மாறி இருந்தான். அவளைத் தன் ஆதிக்கத்தின் கீழ்க் கொண்டு வந்திருந்தான்.

மித்ரமதி திமிறிப் பார்த்தாள், முடியவில்லை. அவன் பலத்திற்கு முன்பு அவள் மென்மை எடுபடவில்லை. அவள் திமிறத் திமிற அவன் மூர்க்கத்தனம் உச்சத்திற்குப் போய்க் கொண்டிருந்தது.

“கார்த்திக்… ப்ளீஸ். இப்படியெல்லாம் வேணாம்.” அவள் பேச்சு அவன் காதிலேயே விழவில்லை.

அவன் நினைத்ததைச் சாதித்து முடித்திருந்த போது மித்ரமதி நொந்து போனாள். மனது மட்டுமல்ல… இப்போது அவள் உடம்பும் சேர்ந்து வலித்தது.

அந்த சிகரெட் நொடி அவள் நாசியை நிரப்பி இருக்க பாத்ரூமிற்குள் ஓடினாள் பெண். இரவு உண்டது அனைத்தும் வெளியே வந்தது.
அந்த வாசம் தலையை ஏதோ பண்ண சுவரில் தலையைச் சாய்த்துக் கொண்டாள். இன்னும் இன்னுமென்று அவள் வயிறு காலியாகும் வரை அத்தனையும் வெளியே வந்தது.

எதையும் பொருட்படுத்தாமல் இன்னொரு சிகரெட்டைப் பற்ற வைத்தான் கார்த்திக்.