Manmo-16

Manmo-16

அந்த மெல்லிய பூங்காற்றை அனுபவித்தபடி வானம் பார்த்து நின்றிருந்தான் கார்த்திக். மனம் மிதந்து கொண்டிருந்தது. தன் மனைவி தன்னை இத்தனை தூரம் பாதிக்கிறாளா? சிரித்துக் கொண்டான்.

அம்மா அப்பா முன்பு நிற்க வைத்து அவள் கேள்வி கேட்டது ஆத்திரத்தைக் கிளப்பினாலும், அந்தச் செய்கைகளை இப்போது நினைக்கும் போது கேலியாகத்தான் இருந்தது.

அவனைச் சந்தி சிரிக்கச் செய்திருப்பாளாம்! அதை நினைத்துப் பார்த்து… இப்போது வாய்விட்டே சிரித்தான் கார்த்திக்.

வேலை அவனை முழுதாக இழுத்துக் கொண்டது. அவள் அனுப்பிய ராஜினாமாக் கடிதம் எதையும் அவன் பொருட்படுத்தவில்லை. உடனேயே ரிச்சர்ட்டைத் தொடர்பு கொண்டு லண்டனில் இருந்த கம்பெனி விவகாரங்களைக் கவனித்துக் கொண்டான். அந்த வேலையும் இப்போது சேர்ந்து கொண்டது.

இவள் அந்தப் பொறுப்பைப் பார்த்துக் கொள்வாள் என்று அவன் நிம்மதியாக இருக்க, அவளோ அம்மாவோடு இந்தியா கிளம்பி இருந்தாள். சரி… விட்டுப் பிடிக்கலாம் என்று விட்டு விட்டான் கார்த்திக்.

அந்த ரிச்சர்ட் வேறு கல்லுளிமங்கன்! இவளைப் பற்றி ஏதாவது பேசினால் வாயையே திறக்க மாட்டான். ஆனால் அவனுக்கு எல்லாம் தெரியும் என்று கார்த்திக்கிற்கும் தெரியும்.

‘நல்லா சேர்ந்தாங்கப்பா ரெண்டு பேரும்!’ மனதுக்குள் பொருமிக் கொண்டான்.

ஆனால் அவள் விவாகரத்து வரை போவாள் என்று அவன் நிச்சயமாக எதிர்பார்த்திருக்கவில்லை. அந்தக் காகிதங்களைப் பார்த்த போது அவனுக்கு அத்தனை ஆத்திரம் வந்தது.

எவ்வளவு தைரியம் இவளுக்கு? எத்தனை துணிச்சல் இருந்தால் இந்த அளவிற்குப் போயிருப்பாள்! நல்ல வேளையாக வேலைகள் அத்தனையும் முடிவுற்றிருந்தன.

அத்தனையையும் தூக்கி ஒரு பக்கம் வைத்துவிட்டு அடுத்த ஃப்ளைட்டிலேயே கிளம்பி இருந்தான். அவளைப் பார்த்து நான்கு மாதங்கள் ஆகியிருந்தன.

விவாகரத்தை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு அவளைப் பார்ப்பதற்காகவே அத்தனை மெனக்கெட்டு கிளம்பி வந்திருந்தான்.

கல்யாணம் முடிந்து ஐந்து மாதங்களில் இவளுக்கு யார் விவாகரத்துக் கொடுக்கப் போகிறார்களாம்?

கைகளை மார்புக்குக் குறுக்காகக் கட்டிக் கொண்டு பால்கனியின் தூணில் சாய்ந்திருந்தான் கார்த்திக்.‌ லதா சித்தியின் வீட்டிற்குத் தான் வந்திருந்தான்.

காலையில் வந்ததும் வராததுமாக மித்ராவின் பாட்டி வீட்டிற்குத் தான் போயிருந்தான். அவளோடு ஒரு மூச்சு சண்டை போட்ட பிறகுதான் சித்தி வீட்டிற்கு வந்தான். அதன் பிறகு நன்றாகத் தூங்கி விட்டான்.

அவளைப் பார்த்த திருப்தியோ என்னவோ தூக்கம் கண்ணைச் சொருகியது. உடையைக் கூட மாற்றாமல் அப்படியே உறங்கி விட்டான். நந்தகுமாரைக் கூட இன்னும் பார்க்கவில்லை.

“கார்த்திக்!” சித்தியின் குரலில் திரும்பினான் கார்த்திக். எல்லோரும் தூங்கி இருந்தார்கள். அப்போதுதான் தூங்கி எழும்பியதால் தன் மனைவியின் நினைவுகளோடு சங்கமித்திருந்தான் கார்த்திக்.

“சித்தி… தூங்கலையா?”

“தூக்கம் வர்ற மாதிரி வேலையா நீ பார்த்து வெச்சிருக்கே?”

“நான் என்ன பண்ணினேன் சித்தி?”

“எதுக்கு உனக்கிந்தத் தேவையில்லாத வேலை கார்த்திக்?”

“புரியலை.”

“ஊர் உலகத்துல கல்யாணம் பண்ணிக்க உனக்கு வேற பொண்ணே கிடைக்கலியா?”

“…………….”

“எதுக்கு அந்தக் கேடு கெட்ட பொண்ணைக் கட்டி இருக்கே?”

“உங்களுக்கு யாரு சொன்னா?”

“உங்கம்மா தான். அப்போவே எல்லாம் சொல்லிட்டாங்க. பேசி இனி என்ன பிரயோஜனம் ன்னு நானும் சும்மா இருந்திட்டேன். முதல்ல உன்னோட வாழ்க்கையை நினைச்சுத்தான் எனக்கு வருத்தமா இருந்திச்சு.”

“ஏன்?”

“இவ்வளவு காலமும் கல்யாணமே வேணாம்னு சொல்லிட்டு இப்போப் போய் அந்த வெளங்காதவளைக் கல்யாணம் பண்ணி இருக்கியே?”

“ஏன்? அவளுக்கு என்ன குறை?” முரண்பாடாக வந்தது கார்த்திக்கின் கேள்வி.

“கார்த்திக்! என்னடா இப்படிச் சொல்லுறே?”

“வேற எப்படிச் சொல்ல?”

“பழிவாங்குறேன் ன்னு கல்யாணம் பண்ணிக்கிட்டது நீதானே?”

“இல்லேங்கலை. அதை நான் சொல்லுவேன். அதுக்காக? நீங்களும் அவளைக் கண்டபடி பேசுவீங்களா?”

“என்னடா கார்த்திக்? சம்பந்தமே இல்லாம பேசுறே?”

“என்ன சம்பந்தம் இல்லாம இப்போ நான் பேசிட்டேன்?”

“……….”

“நந்துவைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு அவ்வளவு வேதனையா இருக்கும். கோபம் வரும். அதுக்காகத்தான் கல்யாணம் பண்ணினேன்.‌ அதுக்காக? நீங்க என் வொய்ஃபை கண்டபடி பேசுவீங்களா?”

“ஏன் கார்த்திக்? உனக்கு வர்ற அந்தக் கோபம் அப்போ எனக்கு வராதா?”

“தாராளமா வரலாம்.‌ ஆனா அது எம் மித்ரா மேல வரக்கூடாது. உங்க பையன் மேல வரணும். இப்போ கேட்டீங்களே… ஊரு உலகத்துல வேற பொண்ணே இல்லையான்னு? அதை உங்க பையனைப் பார்த்துக் கேளுங்க. அதை விட்டுட்டு எதுக்கு அடுத்த வீட்டுப் பொண்ணைத் திட்டுறீங்க?” அவனை அறியாமலேயே அவளுக்காக… தன் மனைவிக்காக வாதாடினான் கார்த்திக். வார்த்தைகள் அவன் அனுமதி இன்றியே வந்து வீழ்ந்தன.

லதாவிற்குத் தலையைப் பிய்த்துக் கொள்ளலாம் போல இருந்தது. மித்ரமதியைத் தான் கார்த்திக் கல்யாணம் பண்ணி இருக்கிறான் என்பதை அறிந்ததில் இருந்து அவர் மனம் கொதித்துக் கொண்டிருந்தது.

தன் மகனை இந்த நிலைக்குத் தள்ளிய ராட்சசி அவள். அவள் தன் அக்காவின் வீட்டு மருமகளா? கார்த்திக்கின் மனைவியா?

பழிவாங்கக் கல்யாணம் பண்ணி இருந்தால் அப்புறம் கார்த்திக்கின் வாழ்க்கை என்ன ஆவது? அந்தப் பாழாய்ப் போனவளைப் பற்றி அவர் கவலைப் படவே இல்லை. ஆனால் கார்த்திக்?

ஆனால் அதே கார்த்திக் இப்போது இப்படிப் பேசவும் திடுக்கிட்டுப் போனார் லதா. நான்கு மாதங்கள் மனைவியைப் பிரிந்திருந்தது அவனுக்குள்ளும் சில மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கும் என்று அவருக்குப் புரியவில்லை.

“அப்படி என்னடா பெரிய ரதி அவ? உன்னையே இப்படி மயக்கி வெச்சிருக்கா?” சித்தியின் முகத்தில் அத்தனை ஆத்திரம். சிரித்தபடியே சித்தியின் அருகில் போன கார்த்திக் அவர் தோள்களைப் பற்றிக் கொண்டான்.

“ரதி தான் சித்தி அவ. என்னோட ரதி.”

“அடேங்கப்பா! ஒரு மாசம் குடும்பம் நடத்தினதுக்கே இத்தனை மயக்கம் ன்னா… ஒரு பிள்ளையைப் பெத்து உன் கையில குடுத்துட்டான்னா… நீ எங்களையெல்லாம் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டே. அடப் போடா!”

சித்தி கோபமாக நகர்ந்து விட்டார்.‌ வீட்டுக்கு வந்திருக்கும் அண்ணனை இன்னும் பார்க்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் ரூமை விட்டு வெளியே வந்திருந்தான் நந்தகுமார்.

வெளியே வந்தவன் இவர்கள் பேசிய அனைத்தையும் கேட்டதை இவர்கள் அறியவில்லை. தலையில் இடி விழுந்தாற் போல இருக்க சத்தம் செய்யாமலேயே திரும்பி விட்டான்.

***

இரண்டு நாட்கள் கடந்திருக்கும். புயல் போல அன்று வந்து போனவனை அதன்பிறகு மித்ரமதி பார்க்கவில்லை. என்ன காரணத்தைச் சொல்லிக் கொண்டு அவளைப் போய்ப் பார்ப்பது என்று அவன் அங்கே மண்டையை உடைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தது இவளுக்குத் தெரியாது.

‘ஒரு வேளை அமெரிக்கா போயிருப்பானோ?’ எண்ணமிட்ட படி இருந்தவளைக் கலைத்தது கீழே கேட்ட பேச்சுக் குரல்கள். யாராக இருக்கும்?

தலையை நீட்டிக் கீழே பார்த்தாள் மித்ரா. பத்மாவும் சக்ரதேவும் அமர்ந்திருந்தார்கள். பாட்டியும் அம்மாவும் வாய் கொள்ளாப் புன்னகையோடு அவர்களிடம் அளவளாவிக் கொண்டிருந்தார்கள்.

மித்ரா திகைத்துப் போனாள். இவர்கள் எங்கே இங்கே? கார்த்திக் அழைத்து வந்திருக்க நியாயமில்லை. அப்படியென்றால்… அம்மாவின் வேலையா?

தன் மகளின் வாழ்க்கை பாழாகிப் போய் விட்டதே என்று பூஜையறையில் சதா கண்ணீரில் கரைவது அவர் தானே!

எதற்காக இப்போது இங்கே வந்திருக்கிறார்கள்? குழந்தை விஷயம் இவர்களுக்குத் தெரியுமா? அம்மா உளறி இருப்பார்களோ? விஷயம் கார்த்திக் வரை போகவில்லை என்று அவன் பேச்சிலேயே அன்று தெரிந்தது.

“மித்ரா!” இவள் தலையைக் காணவும் அழைத்தார் பத்மா.

“ஆங்!” சிந்தனை பாதியிலேயே அறுந்தது பெண்ணுக்கு.

சட்டென்று அவர் எழுந்து கொள்ள மித்ரமதியும் கீழே இறங்கி வந்தாள். பக்கத்தில் வந்தவர் அவள் வயிற்றைத் தடவிக் கொடுக்க சட்டென்று அம்மாவைத் திரும்பிப் பார்த்தாள் பெண்.

தேவகியின் தலை தானாகக் குனிந்தது. ஆனால் பாட்டியின் பார்வை மித்ராவைக் கூராக எதிர்கொண்டது.

பத்மாவின் கண்கள் கண்ணீரைத் தாரை தாரையாகக் கொட்ட வெடித்து அழுதார். மித்ராவிற்கு ஒரு மாதிரியாகிப் போனது. சக்ரதேவ் எழுந்து வந்தவர் மனைவியைத் தாங்கிக் கொண்டார்.

“பத்மா! என்ன இது? எதுக்கு இப்போ இப்படி அழுற?”

“தேவ்! நம்ம நிலைமையைப் பார்த்தீங்களா? நம்ம வீட்டு வாரிசு. ஆனா நமக்கு எதுவுமே தெரியாது. இப்படியெல்லாம் நடக்காதா ன்னு எத்தனை நாள் ஏங்கி இருப்போம். இப்போ எல்லாமே நாம ஆசைப்பட்ட படி நடக்குது தேவ். ஆனா… நமக்கு எதுவுமே தெரியாதே.”

பத்மா பேசிப் பேசி அழ சக்ரதேவின் கண்களும் கலங்கியது. மித்ரமதிக்குக் குற்ற உணர்ச்சியாக இருந்தது. யாரையோ தண்டிக்க நினைத்து இவர்களைத் தள்ளி வைத்தது தவறோ என்று முதல்முறையாகத் தோன்றியது.

“ஆன்ட்டி…” அதற்கு மேல் என்ன பேசுவதென்று அவளுக்குத் தெரியவில்லை.

“உன்னை நான் குத்தம் சொல்லலைடா தங்கம். எங்க தலை விதி. நாங்க வாங்கிட்டு வந்த வரம் அப்படி. ஆண்டவன் எல்லாருக்கும் எல்லாத்தையும் குடுத்துற மாட்டான்.”

மித்ரா அமைதியாகிப் போனாள். சக்ரதேவ் மருமகளின் தலையை வாஞ்சையாகத் தடவிக் கொடுத்தார்.

“பத்திரமா இருந்துக்கோ ம்மா.”

“ம்…”

அதற்கு மேல் அவர்கள் அங்கே இருக்கவில்லை. கிளம்பி விட்டார்கள். நேராகத் தங்கை வீட்டிற்கு வந்த பத்மா மகன் மீது தான் பாய்ந்தார்.

“இப்போ உனக்கு சந்தோஷமா?” நீண்ட நாட்களுக்குப் பின் தன்னிடம் பேசிய அம்மாவை ஆச்சரியமாகப் பார்த்தான் கார்த்திக்.

அவர்கள் அமெரிக்காவிலிருந்து கிளம்பும் போதே தகவல் சொல்லி இருந்ததால் பத்மா இந்தியா வருவது எல்லோருக்கும் தெரிந்திருந்தது.

“நீ நினைச்சது எல்லாம் நடந்திருச்சா?‌ இப்போ சந்தோஷமா இருக்குமே உனக்கு?”

“என்ன ஆச்சு பத்மா?” இது லதா.

“அதான் சார் பழிவாங்க எல்லாம் பண்ணினார் இல்லை. இப்போ அந்தப் பொண்ணு வாயும் வயிறுமா நிக்குது. இப்போ இவர் காலடியில தானே வந்து விழணும்?” அங்கே நந்தகுமார், பார்கவி எல்லோரும் கூடி இருந்ததால் சட்டென்று அவர்களைத் திரும்பிப் பார்த்தான் கார்த்திக்.

“ஆனா ஒன்னு மட்டும் ஞாபகம் வச்சுக்கோ! அந்தப் பொண்ணுக்கு இன்னொரு கல்யாணம் நானே முன்னின்னு பண்ணிக் குடுத்தாலும் குடுப்பேனே ஒழிய உங்கால்ல விழ விடமாட்டேன்.” அத்தனை ஆங்காரம் பத்மாவின் குரலில்.

கார்த்திக்கிற்கு ஒன்றுமே புரியவில்லை. வாயும் வயிறும் என்றால் என்ன என்று அவன் தலையைப் போட்டுக் குழப்பிக் கொண்டிருந்தான்.

நந்துவும் பார்கவியும் கூட அமைதியாகத் தான் உட்கார்ந்திருந்தார்கள். கேள்விப்பட்ட விஷயம் அவர்களை உலுக்கி இருந்தது.

போன தடம் தெரியாமல் திரும்பி வந்திருந்த நந்தகுமார் மனைவியிடம் அனைத்தையும் கொட்டிவிட்டான். தாங்கள் அன்று பார்த்த மித்ரமதி தான் கார்த்திக்கின் மனைவி என்று அப்போதுதான் அவர்களுக்குத் தெரிந்தது.

அதுவும் கார்த்திக் அந்தப் பெண்ணைப் பழிதீர்த்துக் கொள்ளக் கல்யாணம் பண்ணி இருக்கிறானா? ஐயையோ! என்ன இது? தாங்கள் இங்கே சந்தோஷமாகக் குதூகலிக்கத் தங்களால் ஒரு பெண் வாடுகிறதா?

நினைக்க நினைக்க பார்கவிக்கு மனது ஆறவில்லை. கார்த்திக்கிடம் இது பற்றி எப்படிப் பேசுவது என்று தெரியாமல் கணவன் மனைவி இருவரும் தவித்தபடி இருந்தார்கள்.

“போ… எங்கேயாவது போய் பட்டாசு கொளுத்தி இதைக் கொண்டாடு. இதெல்லாம் நடக்கணும்னு தானே ஆசைப்பட்டே? மூணாவது மனுஷங்க மாதிரிப் போய்ப் பார்த்துட்டு வர்றோம் லதா.” இப்போதும் ஒரு மூச்சு அழுதார் பத்மா.

“வாயும் வயிறும் ன்னா என்ன?” லேசாக பார்கவியின் புறம் சாய்ந்த கார்த்திக் அவளிடம் கேட்டான்.

“ப்ரெக்னன்ட் ஆ இருக்கிறதை அப்படியும் சொல்லுவாங்க.”

“வாட்!” கார்த்திக் அதிர்ச்சியில் சத்தம் போட பார்கவி ‘ஆம்’ என்பது போல தலையாட்டினாள்.

அதற்கு மேல் கார்த்திக் அங்கே அமர்ந்திருக்கவில்லை. சித்தியின் வீட்டு ப்ளாக் ஆடி அவன் கைகளில் சீறிப் பாய்ந்து கொண்டு பறந்தது.

மனைவியைப் பார்க்கக் காரணம் தேடி அலைந்து கொண்டிருந்தவனுக்கு லட்டு மாதிரியான வாய்ப்புக் கிடைத்த போது தவற விடுவானா என்ன?

என்ன உணர்கிறோம் என்று புரியாமலேயே காரை அவள் வீட்டின் முன்பாக நிறுத்தி விட்டு உள்ளே போனான். பாட்டி தான் எதிரே வந்து கொண்டிருந்தார்.

“மித்ரா எங்கே?” அவன் பரபரப்பதைப் பார்த்தபோது சேதி அவன் காதிற்கும் போயிருக்கிறது என்று புரிந்தது பாட்டிக்கு. இதைத் தானே அவரும் எதிர்பார்த்தார்.

எதுவும் பேசாமல் மேல் நோக்கி மாடியைக் கைகாட்டினார் பாட்டி. இரண்டிரண்டு படிகளாகத் தாவிக் கொண்டு போனான் அந்தக் கிறுக்கன். பதறியபடி வந்த தேவகியைக் கை நீட்டித் தடுத்தார் சாவித்திரி.

“அமைதியா இரு தேவகி. இனி எல்லாம் நல்லதாவே நடக்கும். கொஞ்சம் கிறுக்கன் தான். ஆனாப் பாசக்காரப் பய போலத்தான் தெரியுது. என்னதான் நடக்குதுன்னு பார்ப்பமே!”

“அத்தை…”

“பேசாம இரு.” மாமியாராக நடந்து கொண்டார் சாவித்திரி.

அன்று வெயில் கொஞ்சம் கொளுத்தியதால் மீண்டும் ஒரு குளியலைப் போட்டுவிட்டு பாத்ரூமிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தாள் மித்ரமதி. ஸ்லீவ்லெஸ் காட்டன் நைட்டி.

ரூம் கதவு படாரெனத் திறக்கத் திகைத்துப் போனாள் இவள். தூக்கிக் கொண்டை இட்டிருந்த கூந்தலிலிருந்து நீர்த்துளிகள் வழிந்த வண்ணம் இருந்தன.

கார்த்திக்! மிரண்டு போய் விழித்துக் கொண்டு நின்றவளைச் சுவரோடு சாய்த்தவன் அவளை நகர விடாமல் சிறை செய்து கொண்டான்.

தன்னையே மருண்ட படி பார்க்கும் அந்த விழிகளை ஆழப் பார்த்தான் கார்த்திக்.

“சொல்லு மித்ரா!” அவன் குரல் கரகரத்தது.

மித்ரமதிக்கு அப்போது தான் தன்னிலை மீண்டது. தன் மூக்கோடு உரசிய அவன் மூக்கின் நெருக்கம் அவனுக்கே உரித்தான அந்த சிகரெட் வாசத்தை அவளுக்கு உணரச் செய்தது.

முகத்தைத் திருப்பிக் கொண்டாள் பெண். லேசாகக் குமட்டியது. ஆனால் அவன் விடவில்லை. அவள் முகத்தைத் தன் புறமாகத் திருப்பினான்.

“சொல்லு மித்ரா!”

“என்ன சொல்லணும்?”

“எங்கிட்ட சொல்ல உனக்கு ஒன்னுமே இல்லையா?” அவன் கேட்ட போது அவள் நெஞ்சு வெடித்தது.

இருக்கிறதே… யாரிடமும் சொல்ல ஆசைப்படாமல் அவனிடம் மட்டுமே சொல்ல அவளிடம் அற்புதமான ஒரு சேதி இருக்கிறதே!

ஆனால் அத்தனையையும் காலால் மிதித்து நொறுக்கி விட்டு இப்போது வந்து சொல்… சொல் என்றால் அவள் எப்படிச் சொல்வாள்?

“சொல்லு மித்ரா! அந்த விஷயத்தை நீ சொல்லி நான் கேக்கணும் மித்ரா. சொல்லு… உன் வாயால அதை எங்கிட்டச் சொல்லு.”

அவன் மீண்டும் மீண்டும் வற்புறுத்த அவள் கண்களை இறுக மூடிக் கொண்டாள். நெஞ்சுக்குள் ஏதோ பண்ணியது. உள்ளுக்குள் அவள் கொஞ்சம் கொஞ்சமாக நொறுங்கிக் கொண்டிருந்தாள்.

“இத்தனை நாளும் இல்லாம திடீர்னு டிவோர்ஸ் பேப்பர்ஸ் வந்ததுக்கு இதுதான் காரணமா?” அவன் சரியாக அவளைப் பிடித்திருந்தான்.

“…………..”

“சொல்லு மித்ரா!” அவன் நெருக்கம் இன்னும் அதிகமானது. இப்போது மித்ரமதிக்குத் தலை சுற்றியது.

“மித்ரா… சொல்ல மாட்டியா?” இப்போது கார்த்திக்கின் குரல் கெஞ்சியது.

“என்ன சொல்லணும் கார்த்திக்?” மீண்டும் கேட்டாள் பெண். இப்போது அவள் குரலுமே நடுங்கியது.

“உனக்குள்ளேயே ஒரு ரகசியத்தை ஒளிச்சு வெச்சிருக்கியே! அது எனக்குத் தெரியக் கூடாதுன்னு மறைச்சு வச்சிருக்கியே! அதைச் சொல்லு மித்ரா. அதை உன் வாயால எங்கிட்டச் சொல்லு மித்ரா.” அவன் குரல் அவளை மயக்கியது.

“ஆமா! உங்ககிட்ட சொல்றதுக்கு எங்கிட்ட ஒரு விஷயம் இருக்கு!” மித்ரமதி தன்னை மறந்து கத்த ஆரம்பித்திருந்தாள். கைகள் இரண்டாலும் காதைப் பொத்திக்கொண்டு அவள் சத்தம் போட அவன் கண்கள் பளபளத்தது.

“சொல்லு ரதி…”

“நான் ஆசை ஆசையாக் காதலிச்ச மனுஷனுக்கும் எனக்கும் நடுவில ஒரு உயிர் வரப்போகுது கார்த்திக்! அதை அந்த மனுஷன் கிட்டத் தான் முதல் முதலாச் சொல்லணும்னு எம் மனசு கிடந்து தவிச்சுது கார்த்திக்!”

“………….”

“ஆனா அந்த இடியட்டுக்கு இதெல்லாம் புரியாது கார்த்திக்! என்னை நோகடிச்சுப் பார்க்க மட்டும் தான் அந்த மனுஷனுக்குத் தெரியும் கார்த்திக்! என்னோட காதலைக் குப்பைத் தொட்டியில போட்டுட்டாரு அந்த மனுஷன் கார்த்திக்!” கதறிய படி அவன் மார்பில் விழுந்து அவள் அழ… அவளை இறுக்கிக் கொண்டான் கார்த்திக்.

உலகத்தின் உச்சியிலேயே நிற்பது போல ஒரு பிரமை அவனுள். உடம்பெங்கும் மகிழ்ச்சி பொங்கி வழிந்தது. அவளைத் தன்னிடமிருந்து பிரித்தவன் அந்த இதழ்களோடு இதழ் சேர்த்திருந்தான்.

அவளின் ஸ்பரிசம்! அவன் தொலைத்திருந்த அவளின் ஸ்பரிசம். சிலிர்த்தது அந்த முட்டாளிற்கு.‌ தன் சொர்க்கம் எங்கே இருக்கிறது என்று அவனுக்கு லேசாகப் புரிந்தது.

அவளை அணைத்திருந்த அவன் கை அவள் வயிற்றை லேசாகத் தடவிக் கொடுத்தது. மித்ரமதிக்கு எங்கிருந்து தான் அத்தனை கோபம் வந்ததோ! அவனை ஒரே பிடியாகப் பிடித்துத் தள்ளி இருந்தாள்.

நெகிழ்ந்து போய் நின்றிருந்த கார்த்திக்கும் அவளிடமிருந்து இப்படியொரு எதிர்ப்பை எதிர்பார்த்திருக்கவில்லை. பின்னோக்கிப் போனவன் தடுமாறித் தன்னைச் சமாளித்திருந்தான்.

“வெளியே போங்க கார்த்திக்!” இப்போதும் மித்ராவின் குரல் நிதானத்தைத் தவற விட்டிருந்தது. ஆனால் கார்த்திக் அசையவில்லை. அப்படியே அவளைப் பார்த்தபடி நின்றிருந்தான்.

“உங்களுக்கும் என்னோட குழந்தைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. முதல்ல நீங்க வெளியே போங்க.” அவள் கதவை நோக்கிக் கையை நீட்ட அவன் அவளை நோக்கி வந்து கொண்டிருந்தான்.

“எப்படியெப்படி? உன்னோட குழந்தைக்கும் எனக்கும் சம்பந்தமில்லையா?”

“இல்லை…”

“நிரூபிக்க முடியுமா உன்னால?” அவன் கேட்கவும் அவள் வாய்விட்டுச் சிரித்தாள்.

“அதான் அன்னைக்குக் கேட்டீங்களே கார்த்திக்? அது என்ன உன்னோட அப்பன் ஊரா, காசு குடுத்துப் போலீஸ் வாயை மூட ன்னு. இது என்னோட அப்பன் ஊர் கார்த்திக்! இப்போ நான் காசைக் குடுத்தா எல்லாரோட வாயையும் மூட முடியும்.”

“ஆனா உன்னோட மனசுக்குத் தெரியுமே!”

“மனசா? புல் ஷிட்! அதைப்பத்தி யாரு கவலைப்பட்டா? ஏன்? இதுக்கு முன்னாடி நீங்க கவலைப் பட்டீங்களா? இல்லையே!” இத்தனையும் அவள் பேசிக் கொண்டிருக்க அவளை மீண்டும் நெருங்கி இருந்தான் கார்த்திக்.

அவன் நெருங்க நெருங்க அந்த சிகரெட் வாசம் அவளை நிலைகுலைய வைத்திருந்தது. தலையை ஏதோ செய்ய பாத்ரூமை நோக்கி நகர்ந்தாள் மித்ரமதி.

அவள் தன்னைத் தவிர்ப்பதற்காகவே தள்ளிப் போகிறாள் என்று நினைத்த கார்த்திக் மனைவியின் கையைப் பிடித்துத் தன்னை நோக்கி இழுத்தான்.

அவ்வளவுதான்! அவள் அடக்கிக் கொள்ள முடியாமல் அவன் மீதே வாந்தி எடுத்திருந்தாள். அவன் அணிந்திருந்த லைட் ப்ளூ ஷர்ட்டை நாசம் பண்ணி இருந்தாள் மனைவி.

கார்த்திக்கிற்கு என்ன பண்ணுவதென்றே புரியவில்லை. அவனை விலக்கப் போனவளை அவன் அனுமதிக்கவில்லை. அனைத்து அழுக்கையும் தன் மேலேயே ஏற்றுக் கொண்டான்.

“பாட்டீ… ஆன்ட்டீ…” அவன் போட்ட சத்தத்தில் கீழிருந்த பெண்கள் இருவரும் மூச்சு வாங்க ஓடி வந்தார்கள்.

“ஐயையோ!‌ மித்ரா… என்னாச்சு? என்ன அத்தை திடீர்னு இப்படி வாந்தி எடுத்திருக்கா?” பதறினார் தேவகி.

“என்ன தேவகி பேசுற நீ? மாசமா இருக்கிற பொண்ணு வாந்தி எடுக்காம பின்ன நீயும் நானுமா வாந்தி எடுப்போம்?” மருமகளை ஒரு அதட்டு அதட்டியவர் மித்ராவை பாத்ரூமிற்குள் அழைத்துச் சென்றார்.

தேவகி ரூமை அவசர அவசரமாகக் க்ளீன் பண்ண கார்த்திக் அமைதியாக நின்றிருந்தான்.

“தேவகி… மித்ராக்கு ஒரு நைட்டி எடுத்துக் குடு.” பாட்டி பாத்ரூமிலிருந்து சத்தம் போட கையில் அழுக்கோடு நின்றிருந்த தேவகி மருமகனைச் சங்கடமாகப் பார்த்தார்.

அங்கிருந்த கப்போர்ட் ஐத் திறந்தவன் கையில் அகப்பட்டதை எடுத்து பாட்டியிடம் நீட்டியிருந்தான். வெளியே வந்த பாட்டி,

“கார்த்திக்! நீங்க உள்ள போய் வாஷ் பண்ணுங்க. எனக்கு வேஷ்டி சட்டையைத் தவிர வேற எதுவும் வாங்கத் தெரியாது. நான் உங்க அம்மாக்கு ஒரு காலைப் போட்டு உங்களுக்கு ஏதாவது ட்ரெஸ் அனுப்பச் சொல்லுறேன். சரியா?” என்றார்.

கார்த்திக்கின் முகத்தில் ஒரு புன்னகை. அவன் பாத்ரூமிற்குள் போக மித்ரமதி வெளியே வந்தாள்.

“மித்ரா… கவனமா வாடா. என்ன பண்ணுது உனக்கு?” தேவகி மகளை அழைத்து வந்து கட்டிலில் அமர வைத்திருந்தார்.

கார்த்திக் பாத்ரூம் கதவை மூடிக் கொண்டான். ஷர்ட்டை மாத்திரம் கழட்டி அதை நீரில் நனைத்தவன் அப்படியே நின்றிருந்தான். அன்றும் ஒரு நாள் இப்படித்தானே வாமிட் பண்ணினாள்.

அப்படியென்றால்… அப்போதிருந்தேவா… அந்தச் சந்தேகம் அவனைக் கொன்றது. அது கூடத் தெரியாமல்… நான் இன்னொரு முறை சிகரெட் பிடித்தேனே?

தேவகி மகளைத் தாங்கியது வேறு அவனைச் சுட்டது. எத்தனை நேரம் அப்படியே நின்றிருந்தானோ… ஷர்ட்டை அப்படியே அங்கிருந்த பாக்கெட்டில் போட்டவன் உடம்பை மாத்திரம் லேசாகக் கழுவிக் கொண்டு வெளியே வந்தான்.

மித்ரமதியைத் தவிர ரூமில் வேறு யாரும் இருக்கவில்லை. தேவகி அதற்குள் ரூமை முழுதாகச் சுத்தப்படுத்தி இருந்தார். டெட்டோல் வாசனை மூக்கை நிறைத்தது. அசதியில் மனைவி கண்ணயர்ந்திருக்க வேண்டும். அவளிடம் எந்த அசைவும் இல்லை.

அவள் பக்கத்தில் போய் அமர்ந்தான் கார்த்திக். அப்போதும் அவளிடம் அசைவில்லை. அவளின் ஓய்ந்த தோற்றம் இப்போது வலித்தது கணவனுக்கு.

அவள் நெற்றியை மெதுவாக வருடிக் கொடுத்தான். அவன் அருகாமைக்காக ஆசைப்பட்டிருந்தாளோ… இல்லை… அவன் ஸ்பரிசத்தைத் தூக்கத்தில் கூட உணர்ந்து கொண்டாளோ…

“கார்…த்தி…க்” என்று முனங்கிய படி அவன் வெற்று மார்பில் ஒண்றிக் கொண்டாள். கார்த்திக் சிலிர்த்துப் போனான்!

error: Content is protected !!