Manmo-17

கார்த்திக் இப்போதும் பால்கனியில் தான் நின்றிருந்தான். அவனுக்குத்தான் இருள் சூழ்ந்த அந்த ஏகாந்தம் அவ்வளவு பிடிக்குமே!

ஆனால் இன்று மனதுக்குள் கோடி மத்தாப்பு வெடித்துச் சிதறியது. வீட்டில் இருந்த அத்தனை பேரும் அவனை ஒரு தினுசாகத்தான் பார்த்தார்கள். ஆனால் அவன் எதையும் கண்டு கொள்ளவில்லை.

தன் மார்புக்குள் சுருண்டு கொண்ட அவள் ஸ்பரிசத்தை இப்போதும் அவன் கைகள் உணர்ந்தது. இவன் உடைகளைக் கொண்டு ரூம் வரை வந்த பாட்டி இவர்கள் இருந்த கோலம் பார்த்துவிட்டு சங்கடப் பட்டுப் போனார்.

ஏதும் பேசாமல் கட்டிலில் ஆடைகளை வைத்து விட்டு அவர் நகர கார்த்திக் புன்னகைத்துக் கொண்டான். மனைவியின் தூக்கம் கலையாமல் அவள் தலையைத் தலையணையில் வைத்தவன் உடையை மாற்றிக் கொண்டான்.

கார்த்திக் கீழே இறங்கி வந்த போது அவனுக்காகக் காத்திருந்தார் சாவித்திரி.

‘வாங்க தம்பி, உட்காருங்க. தேவகி… குடிக்க ஏதாவது கொண்டு வாம்மா.’ ஐஸ்க்ரீம் மிதக்க அவர் கொடுத்த குளுகுளுப் பானம் அவன் தொண்டைக்குள் சுகமாக இறங்கியது.

‘நியாயமாப் பார்த்தா நீங்க தான் எங்களுக்கெல்லாம் ஸ்வீட் குடுக்கணும் கார்த்திக்.’ பாட்டி பேச்சை சுமுகமாகவே ஆரம்பித்தார்.

‘கண்டிப்பாப் பாட்டி. வெறும் ஸ்வீட் மட்டுமில்லை. உங்களுக்கு என்ன வேணும்னாலும் கேளுங்க குடுக்கிறேன். அமெரிக்கா ல இருக்கிற என் பிஸினஸை வேணும்னாலும் குடுக்கிறேன்.’

‘எனக்கு அதையெல்லாம் விட மித்ராவோட வாழ்க்கை தான் முக்கியம் கார்த்திக்.’ இப்போது பாட்டியின் குரல் கலங்கியது. கார்த்திக் கொஞ்சம் அசௌகரியமாக உணர்ந்தான்.

‘நான் நடந்தது எதையும் பேசி உங்களை சங்கடப்படுத்த விரும்பலை கார்த்திக். எல்லாரும் என்னென்னமோ சொல்லுறாங்க. என்னால எதையும் நம்ப முடியலை. நீங்க எம் பேத்தியைப் பார்க்குற பார்வையில பிரியத்தைத் தவிர வேற எதையும் என்னால கண்டுபிடிக்க முயலை தம்பி.’

‘…………..’

‘போனது போகட்டும் ப்பா. அதைப் பத்தி இனிப் பேச வேணாம். இனி நடக்கப் போறதை மட்டும் பேசலாமே.’

‘ம்…’

‘முன்ன மாதிரி இல்லை கார்த்திக். இப்ப உங்களுக்குன்னு ஒரு குழந்தை வரப்போகுது.’

‘அதை இப்ப தான் எங்கிட்ட சொல்லணும்னு உங்களுக்குத் தோணிச்சா பாட்டி?’

‘எங்களுக்கே தெரியாதே ப்பா. தெரிஞ்சப்போ மித்ரா ஏதாவது சொல்லுவா ன்னு எதிர்பார்த்தோம். ஆனா நீங்க வந்ததுக்கு அப்புறமாத்தான் தெரியுது… அவ எவ்வளவு பெரிய முடிவு எடுத்திருக்கான்னு.’

‘ம்…’

‘எங்களைத் தப்பா நினைக்காதீங்க கார்த்திக். உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல என்ன நடந்ததுன்னு எங்களுக்குத் தெரியாது. அப்படி இருக்கும் போது நீங்க சம்பத்தப்பட்ட எந்த முடிவையும் மித்ரா தான் எடுக்கணும். ஆனா உங்க அம்மா அப்பாவுக்கு தகவல் சொல்ல வேண்டியது எங்க கடமை. அதைத்தான் நான் செஞ்சேன்.’

‘இட்ஸ் ஓகே. விடுங்க பாட்டி.’

‘இப்போ என்ன முடிவு எடுத்திருக்கீங்க கார்த்திக்?’

‘மித்ரா இங்கேயே இருக்கட்டும் பாட்டி.’

‘நல்லது… அப்போ நீங்க?’

‘நான் இங்கேயே இருந்தா மித்ரா தேவையில்லாம கோபப்படுவா. இப்போ அவளுக்கு அது நல்லதில்லை பாட்டி.’

‘ம்… பக்கத்துலேயே இருக்கணும்னு தோணலியா?’ பாட்டி இதைக் கேட்டபோது சிரித்தான் கார்த்திக்.

‘அவளுக்கே தோணும் போது எனக்குத் தோணாதா பாட்டி?’

‘அவளுக்குத் தோணுதுன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?’ பாட்டி குறும்பாகக் கேட்க கார்த்திக்கின் முகம் சிவந்து போனது. இரண்டு பேருமே இப்போது சிரித்தார்கள்.

நாங்கள் இருந்த கோலத்தைப் பார்த்த பிறகும் இப்படி ஒரு கேள்வி உனக்கு அவசியம் தானா என்பதைப் போல இருந்தது அவன் சிரிப்பு.

‘கண்டிப்பா அமெரிக்கா போகணுமா கார்த்திக்?’

‘அப்படியில்லை பாட்டி. போனா நல்லது… அவ்வளவு தான்.’

‘கொஞ்சம் பக்கத்துலேயே இருக்கிற மாதிரிப் பார்த்துக்கோங்க கார்த்திக்.’

‘சரி பாட்டி.’ அவன் கிளம்பவும்,

‘சாப்பிட்டுட்டுப் போகலாமே.’ என்றார் தேவகி.‌ அதுவரை மௌனமாகவே நின்றிருந்த மாமியாரை ஏறிட்டுப் பார்த்தான் கார்த்திக்.

‘அதை உங்க பொண்ணு சொல்லட்டும் ஆன்ட்டி. கண்டிப்பா சாப்பிடுறேன்.’

“அண்ணா…” அன்றைய நிகழ்வில் மூழ்கியிருந்த கார்த்திக்கைக் கலைத்தது நந்தகுமாரின் குரல். மலர்ந்த முகமாகவே திரும்பினான் கார்த்திக்.

“வா நந்து.” எப்போதும் தம்பியைப் பார்க்கும் போது மனதில் தோன்றும் வலி இன்று லேசாக மட்டுப் பட்டிருந்தது.

“என்ன ண்ணா… குரல் ரொம்ப ஹாப்பியா இருக்கு?” தம்பி கேட்கவும் அவனை இறுக அணைத்துக் கொண்டான் கார்த்திக். அந்த அணைப்பின் வேகம் சொன்னது அவன் மகிழ்ச்சியின் அளவை.

“ரொம்ப சந்தோஷமா இருக்கு ண்ணா. மித்ராவைப் பார்த்தியா?”

“ம்…”

“என்ன சொன்னாங்க?” இப்போது கார்த்திக் எதுவும் பேசவில்லை. குழந்தை பற்றிக் கேட்டபோது இலகுவாகத் தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டான்.

ஆனால்… மித்ராவைப் பற்றி தம்பி கேட்டபோது அது அவனுக்கு அவ்வளவாக ருசிக்கவில்லை. எப்படி இருந்தாலும் எதிரில் நிற்பவன் ஒரு காலத்தில் தன் மனைவிக்காக உயிரை விடக் கூடத் துணிந்தவன் என்ற நினைவு கார்த்திக்கிற்கு அவ்வளவு உவப்பாக இருக்கவில்லை.

“அண்ணா!”

“சொல்லு நந்து.”

“அண்ணி பார்கவியைப் பார்க்க வந்திருந்தாங்க.”

“ஓ…” அண்ணனின் குரலில் தெரிந்த வித்தியாசத்தை நந்தகுமார் சட்டென்று பிடித்துக் கொண்டான். அவன் வாய் இப்போது மித்ராவை ‘அண்ணி’ என்று விளித்தது. ஒரு ஆணின் மனது இன்னொரு ஆணிற்குப் புரியாதா என்ன?

“அவங்களுக்கு பார்கவி தான் என்னோட வொய்ஃப் ன்னு தெரியலை. என்னைப் பார்த்ததும் ஷாக் ஆகிட்டாங்களாம். ஆனா அப்போ கூட இவங்க தான் அண்ணி ன்னு எங்களுக்கும் தெரியாது.”

“ம்…” நந்தகுமாரின் அண்ணி என்ற வார்த்தை பெரியவனுக்குப் பிடித்திருந்தது.

“ஆனா… நடந்ததைக் கேள்விப்பட்டப்போ… ரொம்ப வருத்தமா இருந்திச்சு ண்ணா.”

“அது அப்படியில்லை நந்து…”

“நீ என்னதான் விளக்கம் சொன்னாலும் என்னால ஏத்துக்க முடியலை ண்ணா. நம்ம கார்த்திக் அண்ணா வான்னு இருந்திச்சு.”

“…………….”

“போனது போகட்டும் ண்ணா. முன்னாடி என்னோட நிலைமையைப் பார்த்து நீ ஆத்திரப்பட்டே. ஆனா இப்போ  அப்படியில்லை ண்ணா. நான் நல்லா இருக்கேன். சந்தோஷமா இருக்கேன். அண்ணி மேல எந்தத் தப்பும் இல்லை. அதை நீ புரிஞ்சுக்கணும்.”

“ம்…”

“பார்கவி நொந்து போயிட்டா. நாம இங்க சந்தோஷமா இருக்கோம். தப்பே பண்ணாம அங்க ஒரு பொண்ணு நம்மால வருத்தத்துல இருக்குன்னு ரொம்பவே வேதனைப்பட்டா.”

“ம்…”

“அண்ணா… நான் எதுவும் தப்பாப் பேசிடலையே?”

“இல்லைடா நந்து. அது… ஏதோவொரு கண்மண் தெரியாத கோபம். சரி விடு… நீ போய்த் தூங்கு.”

“அண்ணி பக்கத்துல இப்போ இருக்கணும் ன்னு உனக்குத் தோணலையா ண்ணா?”

“… ஆசையா இருக்கு டா நந்து.”

“அப்போ ஏதாவது பண்ணு ண்ணா.”

“வேணாம் நந்து. என்னைப் பார்த்தாலே டென்ஷன் ஆகுறா. சத்தம் போடுறா. அழுறா…”

“அதெல்லாம் அப்படித்தான் ண்ணா இருக்கும். அதுக்காக அப்படியே விட்டுட முடியுமா?”

“கொஞ்சம் காலம் போகட்டும் டா. மூட் ஸ்விங் ஆ கூட இருக்கலாம்.”

“ம்… பார்கவியும் அதைத் தான் சொன்னா. உடம்புல இப்போ நிறைய மாற்றங்கள் இருக்குமில்லையா? ஆனா நீ ரொம்ப விலகிப் போயிடாத ண்ணா.”

“இல்லைடா.”

“அமெரிக்கா போறியா?”

“ஒரு ட்ரிப் போயிட்டு வந்தா நல்லது தான்.”

“சரி… போயிட்டு சீக்கிரமா வந்திடு.”

“டாக்டர் உனக்கு என்ன சொன்னார்?”

“இன்னும் ஒரு சிக்ஸ் மன்த் ல ஆபரேஷன் பண்ணலாம் ன்னு சொல்றாங்க.”

“வெரி குட்!” தம்பியை மீண்டும் அணைத்துக் கொண்டான் கார்த்திக்.

நந்தகுமார் நகர்ந்து விட கார்த்திக் பாக்கெட்டில் கையை விட்டுத் துழாவினான். கைக்கு அகப்பட்ட பொருள் அப்போது அவனுக்கு மிகவும் தேவைப்பட்டது.

ஆனால்…‌ அந்த வாசனை அவளுக்குப் பிடிக்கவில்லையே! கையைச் சட்டென்று வெளியே எடுத்தவன் வானம் பார்த்துச் சிரித்தான்.

‘ஒரு பெண் என்னை இவ்வளவு தூரம் பாதிக்கிறாளா?’ இல்லையில்லை… என் மனைவி என்னை மிகவும் பாதிக்கிறாள். தன்னைத் தானே திருத்திக் கொண்டான் கார்த்திக்.

***

ஒரு வாரம் போயிருந்தது. கார்த்திக் சித்தியின் வீட்டில் இருந்த படியே தொழில்களை கவனித்துக் கொண்டான். மார்க், ரிச்சர்ட் இருவரும் அவனுக்குப் பெரிதும் உதவினார்கள்.

இந்த ஒரு வாரத்தில் மித்ரமதியைப் பார்க்கும் வாய்ப்புகள் அமையவில்லை. இவனாகப் போய் பார்ப்பதற்கும் மனம் இடம் கொடுக்கவில்லை. அவனைப் பார்த்தாலே அவள் உணர்ச்சி வசப்படுகிறாளே!

வேண்டாம்! இப்போது அது அவளுக்கு அத்தனை நல்லதல்ல என்பதால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான். மூன்று நாட்களுக்கு முன்பு ஹாஸ்பிடல் வரை வந்திருந்தாள்.

பார்கவி தகவல் சொல்லவும் அவசர அவசரமாகக் கிளம்பிச் சென்று தூரத்தில் இருந்து பார்த்து விட்டு வந்திருந்தான். மெலிந்து போயிருந்தாள்.

ஃபோன் அவனை அழைத்தது. சாவித்திரி தான் அழைத்துக் கொண்டிருந்தார்.

“சொல்லுங்க பாட்டி.”

“என்ன கார்த்திக்… ஆளையோ காணோம்? அமெரிக்கா கிளம்பிட்டீங்களோ ன்னு நினைச்சேன்.”

“உங்க கிட்ட சொல்லாம போவேனா பாட்டி. அன்னைக்கு ஹாஸ்பிடல் போனப்போ கூட வந்தேன்.”

“நான் பார்க்கலையே?”

“தூரத்துல நின்னேன்.”

“ஓ… பரவாயில்லை. இன்னைக்கு கோவிலுக்கு வாங்களேன்.”

“என்ன விசேஷம் பாட்டி?”

“இன்னைக்கு உங்கப்பாவுக்குப் பொறந்த நாளாமே?”

“ஆமா… உங்களுக்கு யாரு சொன்னா?”

“வேற யாரு? உங்கம்மா தான். இப்போ இங்க தான் கிளம்பி வந்திருக்காங்க. ஏதோ அப்பா பேர்ல அர்ச்சனை ரெடி பண்ணி இருப்பாங்க போல. மருமகளைக் கூட்டிட்டுப் போக வந்திருக்காங்க.”

“ஓ…”

“நீங்களும் வாங்க கார்த்திக்.”

“இல்லை பாட்டி. நீங்க போய்ட்டு வாங்க.”

“அட! சும்மா வாங்க கார்த்திக்.”

“மித்ரா என்னைப் பார்த்தா சங்கடப்படுவா.”

“இன்னும் எத்தனை நாளைக்கு? தள்ளித் தள்ளிப் போனா விரிசல் பெருசாத்தான் ஆகும். அதுக்கு நீங்க இடம் குடுக்காதீங்க கார்த்திக். பாட்டி சொல்றேன்… கிளம்பி வாங்க.”

“ம்…” ஆசை இருந்தாலும் அரை மனதாகவே தலையாட்டினான்.

தனியே போக ஒரு மாதிரியாக இருக்கவும் நந்துவையும் பார்கவியையும் கூட அழைத்துக் கொண்டான். அப்பாவின் பிறந்த நாள் என்பதால் மித்ரா தவறாக எடுக்க ஏதுமில்லை என்று தான் தோன்றியது.

எதற்குத் தான் அவள் பின்னால் அலைகிறோம் என்றெல்லாம் இப்போது நினைக்கத் தோன்றவில்லை கார்த்திக் ற்கு. அவனுக்குப் பிடித்திருந்தது. அவ்வளவு தான்.

அந்தப் பிடித்தம்… தன் மனைவிக்காக வந்ததா? இல்லை… தன் குழந்தைக்காக வந்ததா? இதையெல்லாம் ஆராயவும் அவன் தயாரில்லை.

இவர்கள் கார் கோயில் வாசலில் போய் நின்றது. முதலில் இறங்கிய கார்த்திக் உள்ளே போனான். நந்துவும், பார்கவியும் கொஞ்சம் தாமதமாகவே உள்ளே போனார்கள்.

“அடடே கார்த்திக்! வாங்க வாங்க.” பாட்டி புன்னகையோடு வரவேற்கவும் பத்மா மகனை ஒரு தினுசாகப் பார்த்தார்.

‘ஏது இவ்வளவு தூரம்?’ என்றாற் போல இருந்தது அவர் பார்வை. ஆனால் எதுவும் பேசவில்லை.

“நந்தா…” நந்தகுமாரின் காதைக் கடித்தாள் பார்கவி.

“என்ன பாகீ?”

“மித்ரா… பட்டுப்புடவை கட்டி… ஜுவல்ஸ் எல்லாம் போட்டு சும்மா அட்டகாசமா வந்திருக்காங்க.”

“அப்படியா?”

“ம்… சூப்பரா இருக்காங்க நந்தா.” ரகசியம் பேசினாள்.

“நம்ம கல்லுளி மங்கன் என்ன பண்ணுறான்?”

“பேயன் பலாப்பழத்தைப் பார்த்த மாதிரி பார்க்கிறார்.”

“அடேங்கப்பா! பரவாயில்லையே.”

“என்ன நந்து அங்கேயே நின்னுட்ட?” பத்மா கேட்ட பிறகுதான் பேச்சை நிறுத்திவிட்டு இருவரும் வந்து இணைந்து கொண்டார்கள்.

“மித்ரா! சாரியில சூப்பரா இருக்கீங்க?” இது பார்கவி.

“நல்லா சொல்லும்மா. இந்தக் கிழவிக்கு எம் பேத்தியோட கல்யாணத்தைத் தான் பார்க்கக் குடுத்து வெக்கலை. சரி… புடவை கட்டி நாலு நகையைப் போடு ன்னா அதுக்கும் முடியாதாம்.” பாட்டி அங்கலாய்த்தார்.

“காசு மாலை அட்டகாசமா இருக்கு.”

“அது பாட்டியோடது பார்கவி. எனக்கு ரொம்பப் பிடிக்கும்.” மித்ரா சொல்லவும் அந்த நகையைக் கார்த்திக்கின் கண்கள் ஆராய்ந்தது.

“அடி தான் வாங்கப் போற நீ. சாகுற வயசுல பாட்டிக்கு இப்போ நகைதான் ரொம்ப முக்கியமாக்கும்!”

பேச்சு பேச்சாக இருக்க அர்ச்சனை முடித்து, பிரகாரம் வலம் வந்து என அனைத்தும் முடித்திருந்தார்கள்.

கார்த்திக்கின் பார்வை மனைவியையே வருடிய படி இருந்தது. ஆனால் மித்ரமதி அவனைக் கண்டு கொள்ளவே இல்லை. வந்த வேலை முடிந்ததும் பத்மாவிடம் விடை பெற்றுக் கொண்டவள் கிளம்பி விட்டாள்.

கைப் பொம்மையைக் களவு கொடுத்தாற் போல நின்றிருந்தான் கார்த்திக். பார்கவிக்கு அவனைப் பார்க்கவே பாவமாக இருந்தது.

***

“கலர்க் கலர்க் கனவுகளை நனவாக்கி வந்தாரை வாழவைக்கும் சென்னை மா நகரத்தின் நூற்றி இரண்டு புள்ளி ஐந்து எஃப் எம் தென்றல் வானொலியில் உங்களைச் சந்திப்பது உங்கள் மனதிற்கினிய தோழி பார்கவி.”

பார்கவி சொல்லி முடித்ததும் அங்கிருந்த அனைவரும் கை தட்டி ஆரவாரம் செய்தார்கள். பார்கவி தென்றல் வானொலியில் இணைந்து அன்றோடு மூன்று வருடங்கள் நிறைவு பெறுகின்றன.

அவள் நிகழ்ச்சியின் அபிமான நேயர்களை வானொலியின் சார்பாக அழைத்து ஒரு சிறு ஏற்பாடு பண்ணி இருந்தாள் பார்கவி.

அம்புஜம் மாமி கூட மாமாவோடு வந்திருந்தார். வானொலி நிலையத்தாரே அனைத்து ஏற்பாடுகளையும் பண்ணி இருந்தார்கள்.

நிலையத்தோடு சேர்ந்தாற் போல இருந்த அந்தச் சின்ன மைதானத்தில் வண்ண விளக்குகள் மின்ன சின்னச் சின்ன விரிப்புகள் நிலத்தில் விரிக்கப்பட்டிருந்தன.

அனைவரும் தங்கள் இணைகளோடு அமர்ந்திருந்தார்கள். நந்தகுமாரும் வந்திருந்தான். பார்கவியின் கணவன் என்று நந்து அறிமுகம் செய்யப்பட்ட போது அனைவரும் கொஞ்சம் திகைத்துப் போனார்கள்.

ஆனால் அவர்கள் ஜோடிப் பொருத்தமும் அன்னியோன்யமும் அவர்களை வெகுவாகத் திருப்திப் படுத்தி இருந்தது.

மித்ரமதியும் வந்திருந்தாள். கொஞ்சம் தயங்கியவளை பார்கவி வற்புறுத்தவும் சரி என்று சொல்லி விட்டாள்.

‘போயிட்டு வா மித்ரா. அதான் உனக்கு பார்கவி ப்ரோக்ராம் ன்னா அவ்வளவு பிடிக்குமே. எதுக்குத் தயங்கிறே?’ இது தேவகி.

கலகலப் பேச்சுக்கள், சிற்றுண்டிகள் எனப் பொழுது இனிமையாகக் கழிந்தது. இறுதியாகச் சின்னதாக ஒரு நெருப்பை நடுவில் மூட்டி கிட்டாரோடு வந்து உட்கார்ந்தான் ஒரு பையன்.

இதை யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. இது நந்தகுமாரின் ஏற்பாடு. அவன் நண்பனை கிட்டார் வாசிக்க அழைத்திருந்தான். நந்தகுமாரும் நன்றாகப் பாடுவான்.

கிட்டார் ஒலி ஆரம்பிக்க “நந்தா… நீ என்… நிலா… நிலா…” என்று அவன் ஆரம்பிக்க எல்லோரும் கைதட்டிச் சிரித்தார்கள். பார்கவி அழகாக வெட்கப்பட்டாள்.

மித்ரமதிக்குக் கண்கள் பனித்தது. வாய்கொள்ளாப் புன்னகை முகத்தில் இருந்தாலும் கண்கள் கலங்கிப் போனது. தன் மனைவிக்காக அவன் பாடுவதும் அவள் நாணுவதும் என… அவர்களைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல தோன்றியது.

வயிற்றில் லேசான அசைவு தெரிந்தது. ஆறாவது மாசம் ஆரம்பித்திருந்தது. கார்த்திக்கை அன்று கோவிலில் பார்த்தது தான். அதன் பிறகு அவள் பார்க்கவில்லை.

அமெரிக்கா கிளம்பி விட்டானாம். இது பாட்டி சொன்ன தகவல். இப்போதெல்லாம் பாட்டியின் வாயில் கார்த்திக் பற்றிய பேச்சுத்தான்.

அவனைப் பற்றிச் சதா பேசிய வண்ணமே இருந்தார். அவனும் தினசரி இவரோடு பேசுவான் போலும். அமெரிக்கா விஷயம் முழுவதும் பாட்டிக்கு அத்துப்படியாக இருந்தது.

அவன் புதிதாகக் கை கோர்த்திருந்த சூப்பர் மார்க்கெட் பெரிய அளவில் விளம்பரங்களுடன் இவர்கள் பொருட்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருந்தது.

இவர்கள் கம்பெனியின் முதலாளி என்ற வகையில் கார்த்திக் கண்டிப்பாக அந்த விழாவிற்குப் போகவேண்டி இருந்தது. அதற்காகக் கிளம்பியவன் தான். இரண்டு மாதங்கள் ஓடியிருந்தது.

வயிற்றை மெதுவாகத் தடவிக் கொடுத்தாள் மித்ரமதி. யார் உனக்கு இல்லாவிட்டால் என்ன? நான் இருக்கிறேன் என்று சொல்வது போல இருந்தது குழந்தையின் அசைவு.

வயிறு நன்றாகவே மேடிட்டிருந்தது. பார்கவிக்கு இவள் வயிற்றைத் தொட்டுப் பார்ப்பதே பெரிய பொழுதுபோக்கு.

“இப்போ பார்கவி ஒரு பாட்டுப் பாடுவாங்க.” நந்தகுமார் பாடலை முடித்து விட்டு அறிவித்திருந்தான்.

“ஏய் நந்தா! என்ன இது?” பார்கவி கிசுகிசுத்தாள்.

“ஏன்டீ கோந்தே! நோக்கு அது வேற வருமா?” அம்புஜம் மாமி ஆச்சரியப்பட்டுப் போனார்.

“சுமாராத்தான் மாமி பாடுவேன்.”

“இல்லை மாமி… நம்பாதீங்க. சூப்பராப் பாடுவா.” நந்தகுமார் மீண்டும் கோர்த்து விட்டான்.

“நீ இப்போப் பாடுறே!” மாமி ஆணையே போட பார்கவிக்கு வேறு வழியில்லாமல் போனது.

“பாடு பாகீ.” நந்தகுமாரின் குரல் காதலாக மனைவியை வற்புறுத்தியது.

“ராசாவே உன்னை நான் எண்ணித்தான்…                                      பல ராத்திரி மூடலை கண்ணைத்தான்…” பார்கவி பாடலை ஆரம்பிக்கவும் பரிதவித்துப் போனாள் மித்ரமதி.

இது போன்ற பாடல்கள் எல்லாம் அவளுக்குப் புதிது. இவற்றையெல்லாம் பெரும்பாலும் பார்கவியின் நிகழ்ச்சிகள் தான் அவளுக்கு அறிமுகப்படுத்தி இருந்தன.

தமிழ் நன்றாகப் புரியும் என்பதால் பாடல்களின் பாவங்களை அவளால் அருமையாகவே புரிந்து கொள்ள முடியும். அதுவே இன்று அவளுக்கு வினையானது.

“ஆவாரம் பூவு… அதுக்கொரு நோவு…” பாடிய பார்கவியின் குரலில் காதல் சொட்டியது. நந்தகுமார் மனைவியின் இடையை அணைத்துக் கொண்டான்.

“உன்னை நினைச்சு… உசிரிருக்கு…” அவள் குரல் கலங்கியதோ!

“ஆகாயம் பூமி… ஆண்டவன் சாட்சி…” மித்ரமதி நெகிழ்ந்து போய் உட்கார்ந்திருந்தாள். தன் எதிரே காதலே உருவாக அமர்ந்திருக்கும் அந்த ஜோடியை ஏக்கத்தோடு பார்த்திருந்தன அவள் விழிகள்.

“பூத்தது…‌ வாடுது…‌ நீ வரத்தான்…” தன் பக்கத்தில் அசைவை உணரவும் திரும்பிப் பார்த்தாள் மித்ரமதி. அவள் அமர்ந்திருந்த விரிப்பில் அத்தனை நெருக்கமாக உட்கார்ந்து கொண்டிருந்தான் கார்த்திக்!

இதை மித்ரா எதிர்பார்க்கவில்லை. அமெரிக்காவில் இருப்பதாகப் பாட்டி இன்று காலையில் கூடப் பேசினார்களே! இவன் என்ன இப்போது இங்கே வந்து நிற்கிறான்?

பாடல் முடிந்திருக்க அனைவரும் கை தட்டினார்கள். ஆர்ப்பரித்த கணவன் கன்னத்தில் முத்தமிட்ட பார்கவி அவன் தோளிலேயே சாய்ந்து கொண்டாள். நந்துவும் ஒரு மலர்ந்த புன்னகையோடு மனைவியை அணைத்துக் கொண்டான்.

“ஏன்டீ பார்கவி… நீ உருகி உருகிப் பாட்டுப் போடுறதோட ரகசியம் நேக்கு இப்பத்தான் பிடிபடுது!” அம்புஜம் மாமி கலாய்க்க எல்லோரும் சிரித்தார்கள்.

இப்போது பாடல் மாறி இருந்தது. கிட்டார் வாசித்த பையனே “ஆயிரம் நிலவே வா…” என்று பாட ஆரம்பித்திருந்தான். மித்ரமதி தான் ஒவ்வொரு பாடலுக்கும் துடித்துப் போனாள்.

“நள்ளிரவு துணையிருக்க… நாமிருவர் தனியிருக்க…” பாடல் வரிகளில் ஏதேதோ நினைவுகள் வந்து முட்டி மோதியது மங்கைக்கு.

எழுந்து போக முடியாத படி அங்கு ஒரு மோன நிலை சூழ்ந்திருக்க தவித்த படி அமர்ந்திருந்தாள் மித்ரமதி.

“இல்லை உறக்கம்… ஒரே மனம்… என் ஆசை பாராயோ…” வரிகள் கொஞ்சம் இலகு தமிழில் இருந்ததால் கார்த்திக் ற்கும் பாடலின் அர்த்தம் புரிந்தது. லயித்துப் போனான்.

இயல்பாக அவன் கை மனைவியின் இடையை அணைத்திருந்தது. “என் உயிரிலே… உன்னை எழுத… பொன் மேனி தாராயோ…” நல்ல வேளையாகப் பாடலை அத்தோடு முடித்திருந்தான் பையன்.

அத்தோடு அந்த மாலைப் பொழுதின் ஒன்றுகூடல் இனிதாக நிறைவு பெற்றிருந்தது. அனைவரும் பார்கவிக்கும் நந்தகுமாருக்கும் வாழ்த்துச் சொன்னபடி கலைந்து போனார்கள்.

அம்புஜம் மாமி போகும் போதும் ஒரு கலாட்டா பண்ணிவிட்டுத் தான் கிளம்பி இருந்தார்.

“என்ன சார்? எத்தனை மணிக்கு வரச்சொன்னா எத்தனை மணிக்கு வந்து நிக்குறீங்க?” பார்கவி உரிமையாக கார்த்திக்கை மிரட்டினாள்.

“சாரி ம்மா. ஃப்ளைட் கொஞ்சம் லேட் ஆகிடுச்சு.”

“ஏய் பாகீ! அண்ணா வந்திருக்கானா?” நந்தகுமாரின் விழிகள் அலைப்புற சட்டென்று கார்த்திக்கைத் திரும்பிப் பார்த்தாள் மித்ரமதி.

இந்தத் தம்பிக்காகத் தானே அனைத்தும் செய்தான். அவன் கோலத்தைப் பார்க்கும் போதெல்லாம் கோபம் பொங்கும் என்று சொன்னானே?

ஆனால் இப்போது அந்த முகத்தில் கோபத்தைக் காணவில்லை. சாதாரண டெனிம் ஷர்ட்டில் வந்திருந்தான். முகத்தில் களைப்புத் தெரிந்தது. அமெரிக்காவில் இருந்து இந்தியா வருவதென்றால் பின் சாதாரணத் தூரமா என்ன?

“ஆமா… ஆமா… வந்திருக்காரு உங்க அண்ணா…‌ பாதியில…”

“சாரி டா நந்து.”

“பரவாயில்லை விடு ண்ணா.”

“பார்கவி… கிளம்பலாமா?” இது மித்ரா. அவர்களோடு தான் மித்ரமதி வந்திருந்தாள். தனியே போகப் பாட்டி அனுமதிக்கவில்லை.

“நீங்க அண்ணாவோட போங்க அண்ணி. நானும் பாகியும் பீச் வரைக்கும் போகலாம் ன்னு பார்க்கிறோம்.‌ இதுக்கு மேல உங்களை பீச்சுக்குக் கூட்டிட்டுப் போனா உங்க பாட்டி எங்களைக் கொன்னுடுவாங்க.” அழகாகப் பிளானை மாற்றினான் நந்தகுமார்.

மித்ராவிற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவர்கள் இருவரும் தனித்திருக்க விரும்பும் போது அவளால் என்ன சொல்ல முடியும்!

“என்ன நந்தா… பீச்சுக்குப் போறோம்னு சொல்லவே இல்லை.” நகர்ந்தபடியே கேட்டாள் பார்கவி.

“வாயை மூடிட்டு வா பாகீ.” அவர்கள் இருவரும் போய் விட்டார்கள்.

கார்த்திக் மனைவியின் கையைப் பிடிக்கச் சட்டென்று அதைத் தட்டிவிட்டாள் பெண். வயிற்றைத் தள்ளிக் கொண்டு தேர் போல அவள் செல்வதை ரசனையோடு பார்த்திருந்தான் கணவன்.

அவன் கார் எதுவென்று அவளுக்குத் தெரியாது. வீதிக்கு வந்தவள் தயங்கியபடி நின்றிருந்தாள். ஆனால் இனிக் குழந்தை பிறக்கும் வரை ஜாகை இந்தியாவில் தான் என்பதால் ஒரு ப்ளாக் ஆடியை வாங்கி இருந்தான் கார்த்திக்.

அவன் கதவைத் திறந்து விட ஏறி அமர்ந்தாள் மித்ரமதி. அத்தனை நேரமும் ஒரே இடத்தில் உட்கார்ந்திருந்தது கொஞ்சம் கஷ்டமாக இருந்தது பெண்ணுக்கு.

அவள் சீட்டில் கண்மூடிச் சாய்ந்திருக்கவும் கார்த்திக் ற்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. அவன் கண்கள் அவள் வயிற்றில் ஒரு சில கணங்கள் படிந்திருந்தன.

“மித்ரா… என்னடா பண்ணுது?” அவன் குரலில் வெல்வெட்டின் மிருது.

அவள் பதிலேதும் சொல்லவில்லை. அமைதியாகவே கண்மூடி அமர்ந்திருந்தாள். ஒரு பெருமூச்சோடு காரை ஸ்டார்ட் செய்தான் கார்த்திக்.

ராசாத்தி தான் வீட்டின் கதவைத் திறந்து விட்டார். கார்த்திக் தான் அழைத்து வருவான் என்று முன்னமே தெரிந்ததால் பெண்கள் இருவரும் படுக்கைக்குப் போயிருந்தார்கள்.

“பாட்டி எங்க ராசாத்தி அக்கா?”

“பாட்டியும் அம்மாவும் தூங்குறாங்க ம்மா.”

“ஓ… சாரிக்கா. லேட் ஆகிடுச்சு. நீங்களும் போய்த் தூங்குங்க.” கார்த்திக் இவள் பின்னோடே வரவும் ராசாத்தி தயங்கினார்.

“காஃபி போடட்டுமா ம்மா?”

“இல்லையில்லை… வேணாம். நீங்க போய்த் தூங்குங்க.” சொல்லிவிட்டு மாடியேறினாள் மித்ரமதி. ராசாத்தி போய்விட அந்த மெல்லிய இருட்டில் மாடிகளில் மனைவியை நிறுத்தினான் கார்த்திக்.

இரண்டாவது படியில் ஏறி இருந்தவளைக் கைப்பிடித்துத் தடுத்தவன் முதற்படியில் நின்று கொண்டு அவளைத் தன் புறமாகத் திருப்பி இருந்தான்.

“மித்ரா… எங்கூடப் பேச மாட்டியா?” கார்த்திக்கின் குரல் இளகி வந்தது.

“ஏதாவது பேசு ரதி. திட்டணும்னு தோணினா திட்டு. ப்ளீஸ் டா.” அவன் குரல் இப்போது கெஞ்சியது. அவளோடு பேசும் பொழுதுகளில் அவன் ஏப்போதுமே கெஞ்ச நினைப்பதில்லை. ஆனால் அவனையும் மீறி அந்தக் குரல் கெஞ்ச ஆரம்பித்து விடும்.

“பேசு ரதி. ஸ்கேன் ல ‘கேர்ள்’ ன்னு சொன்னாங்களாமே? பார்கவி சொன்னா. ஏன்? உனக்கு அதை எங்கிட்டச் சொல்லணும்னு தோணலியா?” இப்போது அந்தக் கெஞ்சலில் லேசாகச் சோகம் இழையோடியதோ?

“நெக்ஸ்ட் டைம் டாக்டர் கிட்டப் போகும் போது நானும் வரட்டுமா?” அவன் கேட்கவும் சட்டென்று திரும்பி மாடியில் ஏறப் போனாள் மித்ரமதி.

ஆனால் கார்த்திக் அவளை விடவில்லை. அவளைத் தடுத்து நிறுத்தியவன் அவள் நின்றிருந்த படிக்கு வந்திருந்தான்.

“போதும் மித்ரா! என்னை விட்டுத் தள்ளித் தள்ளிப் போகாதே.” இப்போது அவளை முழுதாக இழுத்து அவனோடு அணைத்திருந்தான். அவள் மேடிட்ட வயிறு அவனோடு முட்டிக் கொண்டு நின்றது.

“இப்போ உன்னோட பிரச்சினை என்ன? நான் பண்ணினது தப்பு அதுதானே?சரி… நான் அதுக்காக உங்கிட்ட மன்…” அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே அவள் வயிற்றில் அசைவு தெரிய அதைக் கார்த்திக்கும் உணர்ந்தான்.

அவன் வாய் வார்த்தைகளைத் தொலைத்திருந்தது. அவன் அதிர்ந்து போய் நிற்க மீண்டும் அதே போல இன்னொரு அசைவு. கார்த்திக் கண்கள் கலங்க மனைவியைப் பார்த்தான். கல்லுப் போல நின்றிருந்தாள் மித்ரமதி.