Manmo 20

இளஞ்சிவப்பு வண்ண ரோஜாக்களை ஒன்றாகக் கூட்டி ஓரிடத்தில் வைத்தாற் போல இருந்தது குழந்தை. அமெரிக்கப் பிடிவாதத்தையும், லண்டன் கலரையும், இந்திய அழகையும் சேர்த்துத் தனக்குள்ளே வைத்திருந்தது.

சற்றுத் தூரத்தில் நின்றபடி தன் பிம்பத்தையே வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி நின்றிருந்தான் கார்த்திக். அருகே செல்ல அனுமதி கிடைக்கவில்லை.

“சார்… உங்களை டாக்டர் கூப்பிடுறாங்க.” நர்ஸ் வந்து சொல்லவும் மனமே இல்லாமல் தான் டாக்டரின் ரூமிற்குப் போனான் கார்த்திக். அந்த முகம் மனைவியின் நகலோ!

“வாங்க கார்த்திக்… பேபியைப் பார்த்தீங்களா?”

“ஆமா டாக்டர்…”

“நத்திங் டு வொர்ரி… இன்னும் கொஞ்ச நாளைக்கு இன்குபேட்டர் தான். நீங்க கொஞ்சம் அனுசரிக்கணும்.”

“ஓகே டாக்டர்.”

“லேடீஸ் கொஞ்சம் இமோஷனலா பிஹேவ் பண்ணுவாங்க. பார்த்துக்கோங்க கார்த்திக்.”

“டாக்டர்… பேபியோட கன்டிஷன்…”

“ஒரு ப்ராப்ளமும் இல்லை கார்த்திக். ரெட் ப்ளட் செல்ஸ் கொஞ்சம் கம்மியா இருக்கு. இது நார்மலா பொறக்கிற பேபீஸுக்கும் வர்றது தான். பயப்படும் படியா ஒன்னுமே இல்லை. ஜஸ்ட் ஒன் மன்த் நீங்க சப்போர்ட் பண்ணினா பேபியை வீட்டுக்குக் கொண்டு போயிடலாம்.”

“ஓகே டாக்டர்…‌ மித்ரா…” அவன் முடிக்கவில்லை. இப்போது டாக்டர் புன்னகைத்தார்.

“அதைப் பத்திப் பேசத்தான் நான் இப்போ இங்கே உங்களைக் கூப்பிட்டேன்.”

“சொல்லுங்க டாக்டர்.”

“டெலிவரி க்கு அப்புறமா மித்ராவோட ஹார்ட் பீட் கொஞ்சம் ஜாஸ்தி ஆகியிருக்கு.”

“என்னாச்சு டாக்டர்?” கார்த்திக்கின் குரலில் இப்போது லேசான படபடப்பு. டாக்டர் சட்டென்று பதில் சொல்லி விடவில்லை. கொஞ்ச நேரம் அமைதியாகவே இருந்தார்.

“டாக்டர்! எதுவா இருந்தாலும் சொல்லுங்க டாக்டர்.” அவன் பதறினான்.

“கார்த்திக்… நான் சொல்லுறதை நீங்க தப்பா எடுத்துக்கப்படாது. நான் ஒரு டாக்டர். என் பேஷன்ட்டோட ஹெல்த் எனக்கு எப்பவுமே ரொம்ப முக்கியம்.”

“ம்…”

“மித்ரா… மனசுல எதையோ போட்டுக் கஷ்டப்படுத்திக்குறா. அவளோட மைன்ட் ல ஏதோவொரு பிரச்சினை இருக்கு. அந்தப் பிரச்சினைக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இருக்கா இல்லையான்னு எனக்குத் தெரியாது. எதுவா இருந்தாலும் அதை நிவர்த்தி பண்ணப் பாருங்க கார்த்திக். பேபி சீக்கிரமாக் கிடைச்சதுக்கும் அந்த ஸ்ட்ரெஸ் தான் காரணமா இருக்கும் ன்னு நான் நினைக்கிறேன்.” டாக்டர் பேசி முடிக்க கார்த்திக் அமைதியாகி விட்டான்.

மனதுக்குள் என்னவோ பண்ணியது. தன்னைத் தன் மனைவி இன்னும் மன்னிக்கவில்லை என்பதற்கு இதை விட வேறு என்ன ஆதாரம் வேண்டும்?
ஆனால்… அத்தனை வலியில் கூட அவள் தன் அம்மாவைத் தேடவில்லையே…‌ பாட்டியைத் தேடவில்லையே.‌ அவள் கண்கள் என்னைத்தானே தழுவி நின்றது.‌ 
என்ன நடக்கிறது அவளுக்குள்? கார்த்திக்கிற்கு ஒன்றுமே புரியவில்லை. மனதைத் திடப்படுத்திக் கொண்டான். 

“கண்டிப்பா கவனிக்கிறேன் டாக்டர். எனக்கும் மித்ராக்கும் நடுவில ஒரு சின்னப் பிரச்சினை. இனி அது இருக்காது ன்னு நம்புறேன்.”

“குட் கார்த்திக். சி செக்ஷன் பண்ணியிருக்கு. நார்மல் டெலிவரி மாதிரி இல்லை. கொஞ்சம் கவனமா பார்த்துக்கணும்.”

“அதெல்லாம் டோன்ட் வொர்ரி டாக்டர். பாட்டி, ஆன்ட்டி எல்லாம் நல்லாவே பார்த்துக்குவாங்க.”

“அது எனக்குத் தெரியாதா கார்த்திக்?‌ ஆயிரம் பேர் சுத்தி இருந்தாலும் பொண்ணுங்க இந்த மாதிரி நேரத்துல தேடுறது அவங்க ஹஸ்பன்ட்டைத் தான். அதுவும் இல்லாம… இப்போ கைல பேபி வேற இல்லை. மித்ரா ரொம்பவே அப்ஸட் ஆகுவா. நீங்க அவங்க கூட கொஞ்சம் அதிகமாவே டைம் ஸ்பென்ட் பண்ணுங்க கார்த்திக்.”

“ஷ்யூர் டாக்டர்.”

“இந்த பிஸினஸை எல்லாம் கொஞ்ச நாளைக்கு மூட்டை கட்டிப் போட்டிருங்க… சரியா?” 

“ஓகே டாக்டர்.”

“மித்ரா அடிக்கடி ஹாஸ்பிடல் வரவேண்டி இருக்கும். சப்ளிமன்ட்ஸ் குடுத்தாலும் ப்ரெஸ்ட் ஃபீட் தான் பெஸ்ட் கார்த்திக்.‌ இப்போ உங்க சப்போர்ட் உங்க வைஃபுக்கு முழுசாத் தேவைப்படுது. அதைப் புரிஞ்சு நடந்துக்கோங்க.”

“யெஸ் டாக்டர்.” கார்த்திக் எல்லாவற்றிற்கும் தலையாட்டவும் டாக்டர் புன்னகைத்தார். 

டாக்டரோடு பேசி முடித்துவிட்டு கார்த்திக் வெளியே வரவும் சாவித்திரி எதிரே வந்து கொண்டிருந்தார்.

“கார்த்திக்… மித்ரா கண்ணு முழிச்சுட்டா. உங்களைத்தான் தேடுறா.”

“இதோ போறேன் பாட்டி.”

“கார்த்திக்…” நகரப் போனவன் பாட்டியின் கலங்கிய குரலில் அப்படியே நின்றான். அவர் கண்கள் கலங்கி இருந்தது.

“என்னாச்சு பாட்டி?”

“கார்த்திக்… மித்ரா இப்போ இருக்கிற நிலைமையில உணர்ச்சி வசப்படுறது இயற்கை. அவ ஏதாவது கோபமா பேசிட்டா… தப்பா எடுத்துக்காத ராசா. இந்தப் பாட்டிக்காக அதைக் கொஞ்சம் பொறுத்துக்கோ ப்பா.” பாட்டி கையெடுத்துக் கும்பிடவும் கார்த்திக் புன்னகைத்தான்.

“பாட்டி… நீங்க பேசிக்கிட்டு இருக்கிறது என்னோட வைஃபைப் பத்தி. அவ கோபத்துல உங்க மேல பாஞ்சா, எனக்காக நீங்க கொஞ்சம் அதைப் பொறுத்துக்கணும் என்ன?” அவன் குறும்பாகக் கேட்கவும் பாட்டி முகத்தில் அப்படியொரு சந்தோஷம்.

கார்த்திக் விடுவிடுவென மித்ராவின் ரூமிற்குள் போய்விட்டான். மித்ரா கலைந்து போய்க் கிடந்தாள். இவள் ப்ரெஷர், ஹார்ட் பீட் எல்லாம் குறிப்பிட்ட இடைவெளியில் பதிவு பண்ணப் பட்டுக் கொண்டிருந்தது. 

இவன் தலையைக் காணவும் உள்ளே நின்ற நர்ஸ் வெளியே போய் விட்டாள். இப்போதும் மித்ராவின் கை இயல்பாகக் கணவனை நோக்கி நீண்டது.

“கார்த்திக்…” அவள் அலைப்புறுவது வெளிப்படையாகவே தெரிந்தது. கார்த்திக் மனைவியின் கரத்தைப் பற்றிக் கொண்டு அவள் பக்கத்திலேயே அமர்ந்தான்.

“மித்ரா! டென்ஷன் ஆகக் கூடாது. நீ டென்ஷன் ஆக ஆக உன்னோட ஹார்ட் பீட் ஜாஸ்தி ஆகுது. கொஞ்சம் அமைதியா இருக்கணும்.”

“எப்படி கார்த்திக் அமைதியா இருக்கிறது? பேபியை நான் இன்னும் ஒழுங்காப் பார்க்கலை. தொடக்கூட விடலை. சும்மா பேருக்குக் காட்டிட்டுக் கொண்டு போய்ட்டாங்க.” கார்த்திக்கின் விரல்கள் அவள் தலையை, கன்னக் கதுப்புகளை… மெதுவாக வருடிக் கொடுத்தது.

“நான் பார்க்கணும் கார்த்திக்…” அவனிடம் சொன்னால் எல்லாம் நடந்து விடும் என்பது போல அவன் முகத்தைப் பார்த்துச் சொன்னாள் மித்ரமதி.
கண்கள் கலங்கி விட்டிருந்தது. கார்த்திக் அவள் நெற்றியில் மென்மையாக இதழ் பதித்தான்.

“இன்னும் கொஞ்ச நாளைக்கு அப்படித்தான் இருக்கும் மித்ரா. நாமதான் புரிஞ்சு நடந்துக்கணும்.”

“கார்த்திக்… என்ன நீங்களும் இப்படியே பேசுறீங்க? எனக்கு இப்போவே பேபியைப் பார்க்கணும். பக்கத்துல பார்க்கணும். தூக்கணும். நீங்க… நீங்க பார்த்தீங்களா?”

“ம்…” அவன் தலை மெதுவாக ஆமோதித்தது.

“தூரத்துல நின்னு.” அவன் கண்களுமே இப்போது லேசாகக் கலங்கியது. 

“ப்ரிமேச்சர் இல்லையா மித்ரா. இப்படித்தான் இருக்கும். நம்ம பேபியோட நன்மைக்குத்தான் இதெல்லாம் பண்ணுறாங்க. நாமளே அதைப் புரிஞ்சுக்கலைன்னா எப்படி?” 

வாகாக அவள் பக்கத்தில் அமர்ந்து, மனைவியை முழுதாக அணைத்து, அவன் இதமாகச் சொல்லவும் மித்ரமதி தொய்ந்து அவனில் சாய்ந்து கொண்டாள்.

“கொஞ்சம் பொறுத்துக்கணும் மித்ரா. வேற வழி இல்லை.”

“ஏன் இப்படி?” அவள் விரக்தியாகக் கேட்கவும் கார்த்திக் புன்னகைத்தான்.

“காட் இஸ் க்ரேட்!” அவன் வார்த்தைகளில் பல அர்த்தங்கள் இருந்தன.

“நந்தகுமாருக்கு என்ன ஆச்சு?” 

“ஷ்…” மனைவி ஞாபகப்படுத்தவும் தான் அந்த நினைவே வந்தது கார்த்திக் ற்கு.

“தெரியலை டா.”

“தெரியலையா?”

“நான்… அந்த விஷயத்தையே மறந்து போய்ட்டேன்.” என்றவன் அவசர அவசரமாகத் தனது ஃபோனைத் தேடினான். அது அவன் கைக்கு அகப்படவில்லை.

“ஃபோனை எங்க வெச்சேன்னு ஞாபகம் இல்லை. அப்புறமாக் கேக்கலாம்.” சொல்லிவிட்டு அவன் அமைதியாக இருக்கவும் மித்ரமதி கார்த்திக்கை யோசனையாகப் பார்த்தாள்.

கார்த்திக் தானா இது? அத்தனை திட்டம் போட்டுத் தன் தம்பிக்காகத் தன் வாழ்க்கையையே பணயம் வைத்த அதே கார்த்திக் தானா இது?
அவள் தன் முகத்தையே பார்த்திருப்பதைக் கூட உணராமல் ஏதோ சிந்தனையில் இருந்தான் கணவன்.

“என்னாச்சு?” தன் தோளில் சாய்ந்த படி இருந்தவள் கேட்கவும் தான் நிகழ்காலத்துக்கு வந்தான் கார்த்திக். 

“ஒன்னுமில்லை.” அவளின் நம்பாத பார்வையில் இப்போது அவன் புன்னகைத்தான். அவன் கை அவள் வயிற்றைத் தடவிக் கொடுத்தது.

“ரொம்பக் கஷ்டப்பட்டுட்டே பேபி!” சொல்லும் போதே அவன் குரல் கரகரத்தது. அவளை இன்னும் தனக்குள் புதைத்துக் கொண்டான் கார்த்திக்.

***

ஒரு வாரம் போயிருந்தது.‌ இந்த ஏழு நாட்களில் குழந்தையை பார்க்க மட்டுமே அதன் பெற்றோருக்கு அனுமதி கிடைத்திருந்தது. 

மித்ராவைக் குழந்தைக்குப் பசி தீர்ப்பதற்கு மட்டுமே பயன்படுத்திக் கொண்டார்கள். உடல் உபாதைகள் அனைத்தையும் தாங்கிக் கொண்டாள் பெண். மனைவியைத் தாங்கிக் கொண்டான் கார்த்திக்.

பழையவை எதையும் மறந்தும் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. குழந்தை ஒன்று மட்டுமே தற்போது பிரதானம் என்பது போல இருவரும் நடந்து கொண்டார்கள்.

அன்று மித்ரமதியை வீட்டுக்குச் செல்ல டாக்டர் அனுமதித்திருந்தார். மனைவியின் உடல்நிலை தேறும் வரை ஹாஸ்பிடலே கதியென்று கிடந்தான் கார்த்திக். பணம் தண்ணீராய்க் கரைந்தது.

ரிச்சர்ட் கிளம்பி இருந்தான். இந்த நிலைமையில் கிளம்புவது மனதுக்குக் கஷ்டமாக இருந்த போதும் கார்த்திக் ற்காகக் கிளம்பினான்.

இவன் லண்டன் போனால் தான் கார்த்திக்கின் சுமை கொஞ்சம் குறையும். அதற்காகவே புறப்பட்டான் ரிச்சர்ட். மார்க் எப்போதும் போல அமெரிக்காவில் இருப்பதைப் பார்த்துக் கொள்வதால் கார்த்திக் கொஞ்சம் ஆசுவாசமாக உணர்ந்தான். 

சக்ரதேவும் குழந்தையைப் பார்த்த பிறகு இந்தியாவை விட்டு நகர மறுத்துவிட்டார்.‌ அனைவரும் குழந்தையின் வரவில் இன்புற்றிருந்தார்கள். குழந்தை வீட்டுக்கு வரும் நாளை ஆவலோடு எதிர்பார்த்திருந்தார்கள்.

அந்தக் கண்ணாடித் தடுப்பிற்குப் பின்னால் நின்றபடி குழந்தையைப் பார்த்திருந்தார்கள் இருவரும். கார்த்திக்கின் கை மனைவியின் தோளை இதமாக வருடிக் கொடுத்தது. 

“கார்த்திக்!” டாக்டரின் குரலில் இருவருமே திரும்பினார்கள். மித்ராவின் கலங்கிய விழிகள் டாக்டருக்குமே வருத்தமாகத்தான் இருந்தது. அவரும் ஒரு பெண் தானே!

“இந்த ஒரு வாரத்துலேயே பேபிகிட்ட நல்ல முன்னேற்றம் தெரியுது மித்ரா. கவலைப்படாதீங்க. இன்னும் கொஞ்ச நாள்தான். அதுக்கப்புறமா எல்லாமே நார்மல் ஆகிடும்.” டாக்டர் சொல்லவும் மித்ரமதி கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

“இன்னைக்கு நைட்டுக்கு ஒரு தரம் மித்ராவை ஹாஸ்பிடலுக்குக் கூட்டிக்கிட்டு வாங்க கார்த்திக். ப்ரெஷர், பல்ஸ்ஸை செக் பண்டிட்டு பேபிக்குத் தேவையானதையும் எடுத்துக்கலாம்.”

“ஓகே டாக்டர்.” டாக்டர் நகர்ந்து விட இருவரும் கார் பார்க்கிங் ற்கு வந்தார்கள். காரில் ஏறி அமர்ந்த மாத்திரத்தில் மித்ரா கைகளில் முகம் புதைத்துக் குலுங்கி அழுதாள்.

கார்த்திக்குமே நிலை குலைந்து போனான். பிரசவத்திற்காக வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்பி இருந்தார்கள். கலங்கிய கார்த்திக் மனைவியின் தோற்றம் பார்த்துச் சட்டெனத் தன்னைச் சமாளித்துக் கொண்டான்.

“ஹேய் மித்ரா…” அவன் கைகள் மனைவியை இழுத்து அணைத்துக் கொண்டது.

“ப்ளீஸ்டா… அழாதே. அழுது அழுது நீயும் எதையாவது இழுத்துக்காதே. அதுக்கப்புறம் இந்த கார்த்திக்கை யாரும் உயிரோட பார்க்க முடியாது.” அவன் வார்த்தைகளில் மித்ராவின் அழுகை சட்டென்று நின்றது.

தன்னைச் சுதாரித்துக் கொண்டவள் கண்களைத் துடைத்துக் கொண்டாள். கவலை தனக்கு மட்டும் தானா? இல்லையே… எல்லோருக்கும் தானே. 
இதோ… எத்தனை கவலை இருந்த போதும் எதுவும் இல்லாதது போல இவன் எல்லாவற்றையும் தாங்கிக் கொள்ளவில்லை? அப்படியிருக்க நான் மட்டும் எதற்கு அழுது புலம்புகிறேன்?

“கார்த்திக்…”

“சொல்லுடா?”

“எனக்கு… நந்தகுமாரைப் பார்க்கணும்.” இப்போது கார்த்திக்கின் நெற்றி ஒரு கணம் சுருங்கியது.

“எதுக்கு?” கேட்டபடியே அவன் காரை ஸ்டார்ட் செய்ய ஸ்டியரிங் கில் கை வைத்தாள் மித்ரமதி.

“எனக்கு நந்தகுமாரைப் பார்க்கணும் கார்த்திக்.”

“அதான் ஏன்?”

“பார்க்கணும்… அவ்வளவுதான்.” அவள் அத்தோடு முடித்துக் கொண்டாள். ஆனால் கார்த்திக் தவித்துப் போனான்.

இவள் இங்கே பிடிவாதம் பிடிக்கிறாள். ஆனால் அங்கே லதா சித்தி சிறிதளவும் மாறி இருக்கவில்லை. அது அவனுக்கு நன்றாகத் தெரியும்.

இரண்டு நாட்களுக்கு முன்பு தான் நந்துவுக்குக் கட்டைப் பிரித்திருந்தார்கள். எல்லோரும் மிகவும் பதட்டத்தில் அமர்ந்திருக்க, அத்தனை பேரையும் ஒரு ஆட்டு ஆட்டுவித்த பின்பு திரும்பியிருந்தது நந்துவின் ஒளிமயமான உலகம்.

பார்கவி சந்தோஷத்தில் ஓவென்று சத்தம் போட லதா முகத்தை மூடிக் கொண்டு அழுது தீர்த்தார். வீடே திருவிழாக் கோலம் கொண்டிருந்தது. கார்த்திக்கும் மகிழ்ந்து போனான். 

டாக்டர்கள் கூட அத்தனை சந்தோஷப்பட்டார்கள். ஒரு வழியாக எல்லாம் ஓய்ந்து சித்தியின் வீடு இப்போதுதான் வழமைக்குத் திரும்பி இருந்தது. இப்போது பார்த்து இவள் அங்கு போய் நின்றால் என்ன ஆகும்? 

கார்த்திக் யோசனையோடே காரை ஓட்டிக் கொண்டிருந்தான். சித்தியின் வாய் சும்மா இருக்காது என்று அவனுக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும்… அவள் சொன்னதைத் தட்ட முடியாமல் சித்தியின் வீட்டின் முன்பாகக் காரை நிறுத்தினான்.

கொஞ்சம் சிரமப்பட்டே காரிலிருந்து இறங்கினாள் மித்ரமதி. அவள் உடம்பு மனதைப் போல அத்தனை தூரம் அவளோடு ஒத்துழைக்கவில்லை.
மித்ரா எதற்கும் தயங்காமல் வீட்டினுள்ளே போனாள். யாரின் அரவத்தையும் காணவில்லை.

“பார்கவி!” அவள் அழைக்கவும் நந்தகுமார் உள்ளேயிருந்து வந்தான். கார்த்திக்கும் காரைப் பார்க் பண்ணிவிட்டு அப்போதுதான் உள்ளே வந்து கொண்டிருந்தான்.

“வாங்க அண்ணி.” சந்தோஷமாகவே அழைத்தான் நந்தகுமார்.
தடுமாறாத நடை. அலைப்புறாத கண்கள். மித்ரமதியின் கண்களுக்கு முழுமையாகத் தெரிந்தான் நந்தகுமார். கணவனைத் திரும்பிப் பார்த்தாள் மித்ரா.

புன்னகையோடு நின்றிருந்தான். ஆனால் அந்தப் புன்னகை அவன் கண்களை எட்டவில்லை என்று மனைவிக்குப் புரிந்தது.

நந்தகுமாரின் கண்கள் இப்போது மித்ரமதியைப் பார்த்து நட்பாகப் புன்னகைத்தது.

“எப்படி இருக்கீங்க நந்தகுமார்?”

“ஏன் அவனுக்கென்ன? ராஜா மாதிரி ஜம்முன்னு இருக்கான். நீ என்னடிம்மா? பிரசவத்துக்காக ஹாஸ்பிடல் போய்ட்டு வெறுங்கையோட வந்து நிக்கிறே?” எங்கேயோ கேட்ட கேள்விக்கு எங்கிருந்தோ பதில் வந்தது.

“அம்மா!” நந்தகுமார் அம்மாவை அதட்டினான். ஆனால் பதில் சொல்லிவிட்டு ஆங்காரமாக நின்றிருந்தார் லதா. 

மித்ரமதி எதுவும் பேசவில்லை. அமைதியாக ஒரு புன்னகையைச் சிந்தினாள். கார்த்திக் மனைவியின் கையைப் பிடித்து வெளியே இழுக்க அதைத் தடுத்தவள் நந்தகுமாரிடம் பேச ஆரம்பித்தாள்.

“பார்கவி எங்க நந்தகுமார்?”

“இன்னைக்கு ப்ரோக்ராம் இருக்கில்லை அண்ணி. அதுதான் போயிருக்கா.”

“ஓ… பார்கவி ப்ரோக்ராம் கேட்டு ரொம்ப நாளாச்சு நந்தகுமார்.”

“உக்காருங்க அண்ணி.”

“பரவாயில்லை… நந்தகுமாரோட இந்த நிலைமைக்கு நான் தான் காரணம்ன்னு அத்தனை பேரும் சொன்னாங்க இல்லையா? அதான்… நந்தகுமாரை பழைய மாதிரி ஒரு தடவை பார்த்துட்டுப் போகலாம் ன்னு வந்தேன்.”

“ஐயோ அண்ணி! என்ன பேச்சு இது? யாரு அப்படியெல்லாம் தேவையில்லாம பேசினது? நான் எப்பவும் அப்படிச் சொல்லலையே?”

“நீங்க சொல்லலை ன்னா என்ன? அதான் இன்னைக்கு வரைக்கும் வஞ்சம் வெச்சுப் பேசுறாங்களே.” மித்ராவின் முகத்தில் இப்போது ஒரு இகழ்ச்சிப் புன்னகை.

“ஆமாடியம்மா! பேசத்தான் செய்வேன். கண்ணைப் பறி குடுத்துட்டு அத்தனையையும் இழந்திட்டு நின்னது எம்புள்ளை.” லதா மீண்டும் எகிறினார்.

“அம்மா! நீங்க கொஞ்ச நேரம் சும்மா இருக்கீங்களா?”

“பரவாயில்லை பேசட்டும் விடுங்க நந்தகுமார். இவங்க பேசுறதெல்லாம் எனக்கு இப்போ வலிக்கிறதே இல்லை. ஏன்? உங்க அண்ணா பேசாத பேச்சா?” அவள் கண்ணீரோடு சொல்ல கார்த்திக்கின் முகத்தில் கவலை அப்பிக் கொண்டது.

“நீங்க இழந்ததெல்லாம் உங்களுக்குக் கிடைச்சிடுச்சு நந்தகுமார். ஆனா நான் இழந்ததெல்லாம் எனக்குத் திரும்பக் கிடைக்குமா?” 

“அண்ணீ! என்ன பேச்சு இது? எல்லாமே சரியாகும். கவலைப் படாதீங்க. கூடிய சீக்கிரமே நீங்க சிரிக்கிற நாள் வரும்.” 

“பார்க்கலாம்… நந்தகுமார், அம்மாவை ஞாபகம் இருக்கா? நீங்க கூட பேசி இருக்கீங்களே… ஃபோன்ல?”

“நல்லா ஞாபகம் இருக்கு. அன்னைக்கு வளைகாப்பு நடந்தப்போ பேச முடியலை. கண்டிப்பா வீட்டுக்கு வரும்போது பேசுறேன் அண்ணி.”

“ம்… உங்களை அடிக்கடி விசாரிப்பாங்க. அவங்க பொண்ணால ஒரு பையன் இந்த நிலைமைக்கு ஆளாகிட்டான்னு அவங்களும் நினைச்சாங்களோ என்னவோ?” சலிப்பாகச் சொல்லிவிட்டு மித்ரா காரை நோக்கிப் போய்விட்டாள். 

“என்ன ண்ணா இது? எதுக்கு அவங்களை இப்போ இங்கே கூட்டிட்டு வந்தே? அம்மாவோட பேச்சைப் பார்த்தியா?”

“போகணும்னு அடம் பிடிக்கும் போது நான் என்னடா பண்ணுவேன் நந்து?”

“என்னைக் கூப்பிட்டிருக்கலாம் இல்லை?”

“அடி தான் வாங்கப் போற நீ. இப்போ தான் ஆப்பரேஷன் முடிஞ்சிருக்கு. வீட்டுல அடங்கி உக்காருன்னு டாக்டர் சொல்லி இருக்காரா இல்லையா?”

“சரி சரி… பாவம் ண்ணா அவங்க. எவ்வளவு நொந்து போய் பேசுறாங்க. நல்லா பார்த்துக்கோ ண்ணா. நீயும் வலிக்கிற மாதிரி ஏதாவது பேசிடாத. தாங்க மாட்டாங்க. ப்ளீஸ் ண்ணா.”

“ம்…” கார்த்திக் வேறு எதுவும் பேசவில்லை. மௌனமாக நகர்ந்து விட்டான்.

***

கார் வீட்டை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. மித்ரமதி அமைதியாக உட்கார்ந்திருக்கவும் ரேடியோ வை ஆன் பண்ணினான் கார்த்திக்.

“வாழ்க்கையில எவ்வளவு தான் கவலை இருந்தாலும் இசை ங்கிற ஒன்னு அதை லேசாக்கிடும் நேயர்களே. பார்கவி யின் இன்றைய காதல்ப் பாடல்கள் வரிசையில் அடுத்ததா ஒலிக்கப் போவது… இந்திரா படப்பாடல். கேட்டு மகிழுங்கள். இது தென்றல் வானொலி… நூற்றி ரெண்டு புள்ளி ஐந்து எஃப் எம்.” 
பார்கவியின் குரல் புதுப் பொலிவோடு உற்சாகமாக ஒலிக்க மித்ரமதியின் முகத்தில் அழகானதொரு புன்னகை. பாடல் ஆரம்பிக்கவும் ரேடியோவின் சத்தத்தை இன்னும் அதிகமாக்கினாள்.

அந்தப் புதிய ரக ஆடிக் கார் ஏ ஆர் ரஹ்மானின் இசைக் கோர்வையை அத்தனை துல்லியமாக இவர்கள் செவிக்கு விருந்தாக்கியது.

அவளுக்கு மிகவும் பிடித்தமான பாடல்கள் வரும்போது இப்படிச் சத்தத்தை அதிகமாக வைத்துக் கேட்பது அவள் பழக்கம். இடைக்காலப் பாடல்களை அவளுக்கு அறிமுகப் படுத்தியது பார்கவி தான்.

ஆனால் ஆஸ்கார் கிடைத்த பிற்பாடு ரஹ்மானைத் தேடித் தேடிக் கேட்டிருக்கிறாள்.

‘தொடத் தொட மலர்ந்ததென்ன… பூவே… தொட்டவனை மறந்ததென்ன…’ 

பாலசுப்ரமணியம் உருகிக் கேட்க கார்த்திக் மனைவியைத் திரும்பிப் பார்த்தான்.
சீட்டில் கண்மூடிச் சாய்ந்திருந்தாள். உதட்டில் ஓர் இளநகை உறைந்திருந்தது. லேசாக அந்த முகம் வெளிறி இருந்தது. கார்த்திக் பெருமூச்சொன்று விட்டான்.

***
அன்றிரவே மீண்டும் ஹாஸ்பிடல் வந்திருந்தார்கள் இருவரும். மித்ரமதியை செக் பண்ணிய டாக்டர் முகத்தில் புன்னகை.

“குட் மித்ரா. எல்லாம் நார்மலா இருக்கு. இதே மாதிரி மெயின்டெய்ன் பண்ணணும்… ஓகே.”

“ஓகே டாக்டர்.”

“பீ ஹாப்பி ம்மா. ஏன் எதையோ பறிகுடுத்த மாதிரியே இருக்கீங்க? நர்சுங்களே சைட் அடிக்கிற மாதிரி ஹஸ்பென்ட்… அழகான குழந்தை… இன்னும் என்ன வேணும் மித்ரா?” டாக்டர் கேலியில் இறங்க கார்த்திக்கும் புன்னகைத்தான்.

“ஒன்னுமே இல்லைடா. ஆண்டவன் உங்களுக்கு நிறையவே கருணை காட்டி இருக்கான். அதுக்கு முதல்ல நன்றி சொல்லுங்க. பத்து மாசம் கஷ்டப்பட்டுப் பெத்ததைப் பறி குடுத்துட்டுப் போறவங்களும் இருக்காங்க.”

“டாக்டர்!”

“ஆமா மித்ரா… என் சர்வீஸ் ல எத்தனையோ பார்த்துட்டேன். உங்களுக்கு அப்படியெல்லாம் ஆண்டவன் பெருசாக் கஷ்டத்தைக் குடுத்திடல்லை. சின்னப் பசங்க நீங்க. இதையெல்லாம் தைரியமா சந்திக்கணும். புரியுதா?”

“ம்…”

“லைஃப்னா எல்லாம் தான். தைரியமா ஃபேஸ் பண்ணணும் மித்ரா. குட் லக்!”

“தான்க் யூ டாக்டர்.” டாக்டரிடம் விடைபெற்றுக் கொண்டவர்கள் குழந்தைக்குத் தேவையானதையும் கவனித்து விட்டுக் கிளம்பி இருந்தார்கள்.

காரை ட்ரைவ் பண்ணிக் கொண்டிருந்த கார்த்திக் அதை ஒரு ஒதுக்குப் புறமாக நிறுத்தினான். ஆள் அரவம் இருக்கவில்லை. சற்றுத் தொலைவில் தெரிந்த அந்த ஒற்றை மின் கம்பத்தின் வெளிச்சம் மட்டுமே அந்த இடத்தை மஞ்சளாக்கி இருந்தது.

“என்னாச்சு?”

“பேசணும் மித்ரா.”

“என்ன பேசணும் கார்த்திக்? வீட்டுக்குப் போய்ப் பேசலாமே?”

“எந்த வீட்டுக்கு மித்ரா?”

“இதென்ன கேள்வி? நம்ம வீட்டுக்குத் தான்.”

“நம்ம வீடு லண்டன் ல தான் இருக்கு.”

“சரி… பாட்டி வீட்டுக்கு.”

“நான் இதுவரைக்கும் உங்க பாட்டி வீட்டுல தங்கினது இல்லை மித்ரா.”

“உங்க அம்மா அப்பா இப்படி நினைக்கலியே. சட்டுன்னு வந்துட்டாங்க.” பத்மாவும் அவர் கணவரும் இப்போது பாட்டி வீட்டில் தான் தங்கி இருந்தார்கள்.

“எனக்கு அவங்களைப் பத்தித் தெரியாது. நான் என்னைப் பத்திப் பேசிக்கிட்டு இருக்கேன் மித்ரா.”

“……………”

“நான் எந்த உரிமையில அந்த வீட்டுல வந்து தங்கிறது?”

“ஏன்? நானில்லையா அந்த வீட்டுல?”

“நீ இருக்கே மித்ரா… ஆனா… எனக்காக இருக்கியா?”

“ஓஹோ! இல்லாமத்தான் அன்னைக்கு ரூம் வரைக்கும் வந்து கட்டிப் புடிக்கத் தோணிச்சா. கிஸ் பண்ணத் தோணிச்சா?” அவள் காட்டமாகக் கேட்டாள். மூச்சு வாங்கியது.

“எதுக்கு இப்போ டென்ஷன் ஆகுற?”

“பின்ன என்ன பேசுறீங்க நீங்க?”

“அதெல்லாம் எனக்காத் தோணினது மித்ரா. ஆனா… உம் மனசுல அப்படியெல்லாம் இல்லை.”

“இல்லைன்னு நான் உங்ககிட்ட வந்து சொன்னேனா?”

“சொன்னாத்தானா மித்ரா? என்னால புரிஞ்சுக்க முடியாதா? அதான் இன்னைக்கு நந்துகிட்ட சொன்னியே?”

“கார்த்திக்…” இப்போது அவள் முகத்தில் ஒரு சலிப்புத் தோன்றியது.

“இங்கப்பாருங்க கார்த்திக். நடந்தது எதையும் நான் இப்போ பேச விரும்பலை. மனசு நிறைய வேதனை இருக்கு. நான் உண்டு என் வேலை உண்டு ன்னு இருந்தவளைக் காதலிக்க வெச்சது நீங்க.” அவள் இதைச் சொல்லும்போது அவன் கண்கள் மின்னியது.

“உங்க பின்னாடி அலைய வெச்சு, நீங்க இழுத்த இழுப்புக்கெல்லாம் ஆட வெச்சு… கடைசியில… கடைசியில…” இப்போது வார்த்தைகள் சிக்கியது பெண்ணுக்கு. கார்த்திக் அமைதியாகவே இருந்தான்.

“மறக்க முடியாது கார்த்திக். எதையும் அத்தனை சுலபத்துல மறக்க முடியாது. பேசுவேன்… எனக்கு எப்பல்லாம் வலிக்குதோ அப்பல்லாம் பேசுவேன். நான் அப்படித்தான் இருப்பேன். ஏன்னா இழந்தது நான்.”

“……………”

“ஒவ்வொரு பொண்ணும் அவ புருஷனை எவ்வளவு எதிர்பார்ப்பாளோ… தேடுவாளோ… அந்த டைம்ல எல்லாம் நான் தனியாத்தான் நின்னிருக்கேன்.”

“அப்பல்லாம் நான் உம் பக்கத்துல, கூப்பிடுற தூரத்துல தான் இருந்தேன் மித்ரா.” இப்போது மித்ராவின் கண்கள் அவனைக் கோபமாகப் பார்த்தது.

“ஆங்! இருந்தீங்க… அதுக்காக? உங்க கால்ல வந்து விழுவா இந்த மித்ரா ன்னு எதிர்பார்த்துக்கிட்டு இருந்தீங்களா?”

“அப்படி இல்லைடா…”

“எம் மனசு உங்களைத் தேடுது. நீங்க எம் பக்கத்துல இருக்கணும்னு தோணுது. எனக்கு அங்க வலிக்குது… இங்க வலிக்குது…‌ உங்க பொண்ணு என்னைத் தூங்க விடாம சதா தொல்லைப் பண்ணுது… இப்படியெல்லாம் சொல்லிக்கிட்டு உங்ககிட்ட வந்து கெஞ்சுவேன்னு நினைச்சீங்களா?”

“நான் அந்த அர்த்தத்துல சொல்லலை டா!”

“பழிவாங்கத்தானே கல்யாணம் பண்ணினீங்க? அதோட நிறுத்தி இருக்கலாம் இல்லை. ஏன்… ஏன்… குழந்தை…” விம்மி வெடித்தாள் மித்ரமதி.

“ஏன்டா? ஏன் அப்படிப் பண்ணினே? ஏன்டா பண்ணினே?” மரியாதை காற்றில் பறக்க கணவனை மாறி மாறி அடித்தாள் மித்ரமதி. 
கார்த்திக் எதுவும் பேசவுமில்லை… எதையும் தடுக்கவும் இல்லை. அனைத்தையும் வாங்கிக் கொண்டான். தாங்கிக் கொண்டான்.

அடித்து ஓய்ந்தவள் அவன் மார்பிலேயே வீழ்ந்து கதறினாள். நோயும் நீயே… அதற்கு மருந்தும் நீயே! கார்த்திக் மனைவியை இறுக்கி அணைத்துக் கொண்டான். 

“பழி வாங்கணும்னு தான் எல்லாமே ஆரம்பிச்சேன். ஆனா… ஆரம்பிக்கும் போதே நானும் விழுந்துட்டேனே மித்ரா! என்னை என்ன பண்ணச் சொல்லுற? வாழ்க்கை முழுசுக்கும் நீதான்னு ஆனதுக்கு அப்புறம் நான் எதுக்குத் தயங்கணும்? ஏன் தடைபோடணும்?” 

அவன் கேட்ட நியாயத்தில் அவளுக்குச் சிரிப்புத் தான் வந்தது. கொலையே பண்ணிவிட்டு அந்தப் புண்ணுக்கு புனுகு தடவ நினைக்கும் இவனை என்ன பண்ணுவது?

கண்களைத் துடைத்தவள் அவனிலிருந்து விலகப் போனாள். அவன் கைகள் அதை மறுக்கவும், அண்ணார்ந்து பார்த்தாள் பெண்.

“லேட் ஆச்சு… போகலாம் கார்த்திக்.”

“போகலாம்.” சொன்னவன் அவளிடம் ஒரு சிடி யைக் கொடுத்தான்.

“என்ன இது?”

“இன்னைக்கு ரொம்ப ரசிச்சு அந்தப் பாட்டைக் கேட்டீங்களே…” என்றவன், சிடி ப்ளேயரை ஆன் பண்ணினான். 

அந்த அந்தகாரத்தைக் கிழித்துக் கொண்டு கிளம்பியது பாடல். மித்ரமதிக்கு மெய் சிலிர்த்தது. கணவனின் தோளில் சாய்ந்தபடி பாடலை ரசித்திருந்தாள்.
அவன் கைகள் அவள் கூந்தலை அளைந்து விளையாடியது. அதன் வாசம் நுகர்ந்து பார்த்தது. சின்னச் சின்ன ஸ்பரிசங்கள் அவளை எங்கேயோ அழைத்துச் சென்றது.

‘காதலன் தீண்டாத பூக்களில் தேனில்லை…                                   
இடைவெளி தாண்டாதே… என் வசம் நானில்லை…’

இப்போது அவள் சட்டென்று அண்ணார்ந்து அவனைப் பார்க்க அந்த சொரசொரப்பான கன்னம் அவளைத் தீண்டிச் சோதித்தது.

“இந்த லைனுக்கு என்ன அர்த்தம்?” இது கார்த்திக்.

“கிளம்பலாம் கார்த்திக்.” இப்போதும் அவள் அவசரமாக விலகப் பார்க்க அதை அனுமதிக்கவில்லை கணவன்.

“நீ சொல்லலைன்னா… எனக்குப் புரியாதா ரதி…” அவன் வாய் அந்த ‘ரதி’ யை உச்சரித்தால் அவன் தேவை என்னவென்று மனைவிக்குப் புரியாதா என்ன?

அந்த ப்ளாக் ஆடி நிலைகுலைந்து போனது!

பார்வைகள் புதிது… ஸ்பரிசங்கள் புதிது…