“எதுக்குடி தங்கம் இவ்வளவு யோசிக்கிறே?” சாவித்திரி பேத்தியின் நாடியைப் பிடித்துக் கொஞ்சினார்.
“இவ்வளவு க்ரான்ட்டா வேணாம் பாட்டி. சிம்பிளா வேணும்னா செய்யுங்க.”
“ஆஹாஹா… நான் மாட்டேன். ஊரையே கூப்பிட்டு விருந்து வெச்சுத்தான் வளைகாப்புப் பண்ணுவேன்.”
“அதனால தான் நான் இவ்வளவு யோசிக்கிறேன் பாட்டி.”
“ஏன்டா… உங்க கல்யாணத்தைத் தான் என்னால பார்க்க முடியலை. வளைகாப்பையாவது என் இஷ்டப்படி பண்ணிக் கண் குளிரப் பார்க்கிறேனே.”
“எதுக்கு பாட்டி?”
“நீ எதுக்கு இப்போ வீணாப் பிடிவாதம் பிடிக்கிற? உனக்கு இன்னொரு குழந்தை பிறக்கும் போது நான் இருப்பனோ இல்லை போய் சேர்ந்திருவனோ?”
“அதெல்லாம் நல்லாவே இருப்பீங்க.”
“அப்போ என்னை அடுத்த குழந்தை வரைக்கும் காத்துக்கிட்டு இருக்கச் சொல்லுறயா?” பாட்டி கேட்கவும் மித்ரமதி தலையில் அடித்துக் கொண்டாள். சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த கார்த்திக் வாய்க்குள் புன்னகைத்துக் கொண்டான்.
எல்லோரும் கிளம்பி வெளியே வந்திருந்தார்கள். பார்கவி ஒரு மாறுதலுக்காக வெளியே போகக் கேட்கவும் மித்ரமதியால் மறுத்து ஒன்றும் சொல்ல முடியவில்லை. ட்ரைவர் வேலை பார்த்துக் கொண்டு கார்த்திக்கும் கூட வந்திருந்தான்.
ஏழாம் மாதம் ஆரம்பித்திருந்தது. டாக்டர் கொஞ்சம் நடையைக் கூட்டச் சொன்னதால் பாட்டி இப்போதெல்லாம் மித்ராவை அடிக்கடி வெளியே அழைத்துச் செல்வதுண்டு.
பேத்தியைத் தனியே அனுப்ப மனமில்லாததால் பாட்டியும் துணைக்குக் கூட வந்திருந்தார். ஒரு பார்க்கில் உட்கார்ந்து கொண்டு மித்ராவின் வளைகாப்புப் பற்றிய பேச்சுக்கள் நடந்து கொண்டிருந்தது.
“பாட்டி தான் இவ்வளவு சொல்லுறாங்களே மித்ரா. அவங்க இஷ்டத்துக்கு விட்டுருங்களேன்.”
“நல்லாச் சொல்லு பார்கவி. எதுக்கு இந்தப் பொண்ணு இவ்வளவு பிடிவாதம் பிடிக்குது இப்போ? ஏன் கார்த்திக்? இதையெல்லாம் நீங்க என்னன்னு கேக்க மாட்டீங்களா?”
பாட்டி சம்பந்தமே இல்லாமல் கார்த்திக்கை இழுக்கவும் அவன் புன்னகைத்தான். இப்போதெல்லாம் இது அடிக்கடி நிகழ்கிறது.
அவளைச் சார்ந்த யாரோ ஒருவர் அவளை எங்கேயாவது வெளியே அழைத்துச் செல்வது. அந்த இடத்தில் அவள் அனுமதி இல்லாமலேயே கார்த்திக் வந்து இணைந்து கொள்வது.
முடிந்த மட்டும் அவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க சூழ இருப்பவர்கள் செய்யும் முயற்சி அது என்று அவளுக்கும் தெரியும். கண்டு கொள்ள மாட்டாள்.
இவர்களோடு மல்லுக்கு நிற்க அவளால் முடியாது. அதுவும் பாட்டி!
விட்டால் கையைக் காலைக் கட்டித் தன்னை அந்தக் கார்த்திக்கிடம் ஒப்படைத்து விட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. அப்படி ஒரு உறவு இப்போது அவர்களுக்குள்!
மித்ரமதி முடிந்தவரை அவனைத் தவிர்த்து விடுவாள். அவனை நிமிர்ந்து கூடப் பார்ப்பதில்லை. வலிய வலிய வந்து பேசுவான். இவள் பதிலே சொல்ல மாட்டாள். தன்னால் முடிந்த மட்டும் புறக்கணிப்பாள். ஆனால் அதெல்லாம் அவனுக்கு உறைப்பதே இல்லை. அவள் தன் கண்ணுக்கெட்டும் தூரத்தில் இருப்பதே சுகம் என்பது போல அமர்ந்திருப்பான்.
அவன் கண்கள் அவளையே வட்டமிடும். அவள் மேடிட்ட வயிற்றை அடிக்கடி தொட்டு மீளும். ஆசையாகப் பார்க்கும். மித்ரமதி எதையும் கண்டுகொள்வதே இல்லை.
கொஞ்ச நேரம் பொடி நடையாகப் பெண்கள் மூவரும் நடந்து விட்டு வந்தார்கள். நேரம் போகவும் கார்த்திக் எழுந்து விட்டான்.
“பாட்டி… கிளம்பலாமா?”
“ம்… போகலாம் கார்த்திக்.” லேசாக இருள் பரவ ஆரம்பித்திருந்தது. ஒரு பெரிய ஜவுளி மாளிகையின் பெயரைச் சொன்னவர்,
“ஏன் கார்த்திக்? நாம போற வழியில தானே அந்தக் கடை இருக்கு? அங்க போய்ட்டு வீட்டுக்குப் போகலாமா? பார்கவி… நீ என்ன சொல்றே?”
“போகலாமே பாட்டி.” பார்கவியும் தலையாட்டவும் கார் கடையை நோக்கிப் போனது.
கடையின் வாயிலில் இருந்த படிகள் சற்று அதிகமாக இருக்கவும் காரைப் பார்க் பண்ணிய கார்த்திக் சட்டென்று மனைவியின் பக்கம் வந்துவிட்டான்.
‘மம் ஆர்ம்’ என்பார்களே… அது போல அவன் ஒரு கை எப்போதும் அவளைப் பாதுகாத்த படியே இருந்தது. அவள் படிகளில் ஏறும் போதும் எதிரே யாராவது வந்தால் அவன் கை சட்டென்று அவள் வயிற்றிற்கு முன்னால் நீண்டது.
அவள் அந்தக் கண்ணாடிக் கதவை நெருங்கும் போதும் அவன் கை அவன் வயிற்றைப் பாதுகாத்து… பின் கதவைத் திறந்து விட்டது.
வளைகாப்பிற்காக அவர்கள் வைத்திருந்த புடவைகளைப் பார்த்து மித்ரமதி வாயைப் பிளந்தாள். புடவையில் இத்தனை அழகாக டிசைன் பண்ண முடியுமா?
சேலைத் தலைப்பு முழுவதும் ஆலிலைக் கண்ணன் படங்கள். பார்க்கவே அத்தனை அழகாக இருந்தது.
“அடேங்கப்பா! இந்தப் புடவைக்காகவே குழந்தை பெத்துக்கலாம் போல இருக்கே!” பார்க்கவி அங்கலாய்க்கவும் அத்தனை பேரும் சிரித்தார்கள்.
“பெத்துக்கோ பார்கவி. உன்னை யாரு வேணாம்னு சொன்னது?
“நந்தா க்கு ஆபரேஷன் நல்ல படியா முடியணும் பாட்டி. அதுக்கப்புறம் தான் எல்லாம்.”
“அதுவும் சரிதான். கவலைப்படாதே. சீக்கிரமாவே உம் புருஷனுக்குப் பார்வை வந்திடும்.”
“உங்க ஆசிர்வாதம்… அப்படியே நடக்கணும் பாட்டி.”
“கண்டிப்பா நடக்கும்.” பேச்சு பேச்சாக இருக்க பாட்டி ஒவ்வொரு புடவையாக மித்ராவின் மேல் வைத்துப் பார்த்துக் கொண்டு இருந்தார். கார்த்திக்கின் கண்கள் அங்கே இங்கே நகரவில்லை. மனைவியையே மொய்த்திருந்தது.
தங்க நிறத்தில் ஒரு புடவை. மித்ராவின் நிறத்திற்கு எடுப்பாக இருந்தது. நல்ல பளிச்சென்ற நிறத்தில் ஹெட்பீஸ். அதில் தங்க நிறத்தில் அந்த வெண்ணெய்க் கண்ணன் புன்னகைத்தபடி இருந்தான்.
சேலை வெகு அழகாக இருந்தது. மித்ரா சேலைத் தலைப்பிலிருந்த குழந்தையை வருடவும் பாட்டி கார்த்திக்கைத் திரும்பிப் பார்த்தார். அவன் புருவங்கள் ஏறி இறங்கியது. பாட்டி அதையே தேர்ந்தெடுத்து விட்டார்.
புடவையின் விலையைக் கேட்டபோது மித்ரமதி பாட்டியைப் பார்த்தாள். அவ்வளவு பணம் இவர்கள் கொண்டு வரவில்லையே.
“பாட்டி! அவ்வளவு பணம் கொண்டு வந்திருக்கீங்களா என்ன?”
“அது எதுக்கு நான் கொண்டுவர? உம் புருஷன் எதுக்கு இருக்காரு. பொண்டாட்டி வளைகாப்புக்கு ஒரு புடவை வாங்கிக் குடுக்க வழியில்லாமலா அமெரிக்காவுல பிஸினஸ் பண்ணுறாரு?”
“அதானே!” பாட்டி நீட்டி முழக்கவும் பார்கவி அதற்கு ஒத்து ஊதினாள். மித்ரமதி எதுவும் பேசவில்லை. மௌனமாகிப் போனாள்.
புடவையை வாங்கிக் கொண்டு வீடு வர மணி ஏழைத் தாண்டி இருந்தது. இவர்களை இறக்கி விட்டு காரை நகர்த்தப் போன கார்த்திக் அதை நிறுத்தி விட்டு மித்ரமதியிடம் வந்தான். இவன் வரவும் பாட்டி சட்டென்று உள்ளே நகர்ந்து விட்டார்.
“நீ எங்கூடப் பேச மாட்டேன்னு எனக்குத் தெரியும் மித்ரா. இருந்தாலும் பரவாயில்லை… மனசுக்குள்ள என்னவோ ஒரு பயம்…” அவன் தயங்கவும் மித்ரா அவனை அண்ணார்ந்து பார்த்தாள்.
“இல்லையில்லை… நீ பயப்படாத டா. கொஞ்சம்… கொஞ்சம் கவனமா இரு மித்ரா.” சொல்லும் போதே கார்த்திக்கின் குரல் கரகரத்தது.
அதற்கு மேலும் அங்கு தாமதிக்காமல் காரைக் கிளப்பி விட்டான். மித்ரமதி தான் நெற்றி சுருங்க போகும் அந்தக் காரையே பாத்திருந்தாள்.
***
“ஹேய் ரிச்சர்ட்! வா வா!” மித்ரமதி வாய் கொள்ளாப் புன்னகையோடு அழைக்க சிரித்தபடி வந்தான் ரிச்சர்ட்.
“ஹாய் மேடம். எப்படி இருக்கீங்க? ஆஃப்டர் அ லாங் டைம்.”
“ஆமா… ஜெர்னி எப்படி இருந்துச்சு?”
“ஒரு பிரச்சனையும் இல்லை மேடம்.”
“வெயில் கஷ்டமா இருக்கா?”
“அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை மேடம்.” உள்ளுக்குள் கசகசத்தது. ஆனாலும் புன்னகைத்தான் ரிச்சர்ட்.
வளைகாப்பிற்கான ஏற்பாடுகள் எல்லாம் ஜரூராக நடைபெற்றுக் கொண்டிருந்தன. பாட்டியைக் கையால் பிடிக்க முடியவில்லை. அந்த ஏற்பாடு, இந்த ஏற்பாடு என்று ஓடிக் கொண்டிருந்தார்.
மித்ரமதிக்கு இந்த ஃபங்ஷனுக்கு ரிச்சர்ட் ஐயும் அழைத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. அவன் இது போலெல்லாம் விழாக்களை நிச்சயம் பார்த்திருக்க மாட்டான்.
அழைப்பு விடுக்கவும் உடனேயே சம்மதித்து விட்டான் ரிச்சர்ட். ஆவலாக அவன் கிளம்பி வரவும் இவளுக்கும் சந்தோஷமாகிப் போனது.
மாடியிலிருந்த ரூம் ஒன்றையே வந்தவனுக்கு ஏற்பாடு பண்ணி இருந்தாள் பெண்.
* * * * * *
கார்த்திக் தொடர்ந்தாற் போல வந்த அந்த நாட்களை வெகுவாக அனுபவித்திருந்தான். பாட்டி ஒவ்வொன்றிற்கும் அவனைத் தான் அழைத்து அபிப்பிராயம் கேட்டார்.
நடக்க இருக்கும் நிகழ்வு பற்றி அவனுக்கு எதுவுமே தெரியாது. அவன் கேள்விப்பட்டதும் இல்லை… பார்த்ததும் இல்லை.
ஆனால் நடக்கும் ஏற்பாடுகளைப் பார்க்கும் போது அவர்கள் திருமணத்தை விட விமர்சையாக இந்த ஃபங்ஷன் இருக்கும் என்று தான் தோன்றியது.
எல்லாவற்றையும் விட வேலைகளைக் காரணங் காட்டிக்கொண்டு அடிக்கடி மனைவியைப் பார்க்க முடிந்தது. முன்னை விட இப்போது நன்றாக சதை போட்டு கொழு கொழு வென்றிருந்தாள்.
அந்தக் கன்னங்களைக் கடிக்கலாம் போல அத்தனை அழகாக இருந்தது. அவள் அழகி தான். இருந்தாலும் இப்போது இன்னும் மெருகேறி இருந்தாள்.
அந்தத் தாய்மையின் அழகைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருந்தது கார்த்திக் ற்கு.
தான் எதற்காக அவளைக் கல்யாணம் பண்ணினோம் என்பதெல்லாம் கார்த்திக் ற்கு இப்போது சுத்தமாக மறந்து போனது.
மனைவியும் பிறக்க இருக்கும் தன் குழந்தையுமே உலகமென வாழும் அக்மார்க் இந்தியக் கணவனாக மாறிப் போனான். பத்மா கூட தன் மகனைப் பார்த்து மலைத்துப் போனார்.
இன்னும் மகனோடு அத்தனை சுமுகமான பேச்சுவார்த்தை இல்லை என்றாலும் அவன் மாற்றம் அவர் எதிர்பாராதது… ஆனால் விரும்பியது.
கார்த்திக் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் மனைவியின் அருகாமையை அனுபவிப்பான். பேச்சுக் கொடுப்பான். பதில் வராது. கண்டுகொள்ளவே மாட்டாள். இருந்தாலும் அவனுக்கு அதுவெல்லாம் மனதில் தைப்பதே இல்லை.
தான் பண்ணிய காரியத்துக்குப் பழி தீர்க்கவே மனைவி இப்படியெல்லாம் பண்ணுகிறாள் என்றும் அவனுக்குத் தெரியும். ஆனால் எதையும் சிந்திக்கவே அவன் பிரியப்படுவதில்லை.
அவனுக்கு அவள் அருகாமை முக்கியம். அவன் குழந்தை முக்கியம், அவ்வளவுதான்.
ரூமை விட்டு கார்த்திக் வெளியே வரவும் எதிரே பார்கவி வரவும் சரியாக இருந்தது.
“நந்தா…” இவனைப் பார்த்த மாத்திரத்தில் அலறினாள் பார்கவி. கார்த்திக்கும் திகைத்துப் போனான்.
“என்ன பாகீ?”
“உங்க அண்ணா என்ன கோலத்துல நிக்குறாரு தெரியுமா?”
“என்னாச்சு?”
“ஃபுல் சூட் ல நிக்குறாரு.” பார்கவி பல்லைக் கடிக்கவும் நந்தகுமார் தலையில் அடித்துக் கொண்டான்.
“ஏன்? இந்த சூட் நல்லா இல்லையா?” இது கார்த்திக்.
“நடக்கப்போறது உம் பொண்டாட்டி வளைகாப்பு ண்ணா. அதுக்கு நீ சூட் ல போவியா?”
“அப்போ என்ன ட்ரெஸ் போடுறது?”
“வேஷ்டி கட்டு.”
“வாட்!” கார்த்திக்கின் முகம் கொஞ்சம் கோணியது.
“வே… வேஷ்டி எனக்குக் கட்டத் தெரியாது நந்து.” கார்த்திக் தடுமாற தலையில் அடித்தபடி நகர்ந்து விட்டாள் பார்கவி.
“முதல்ல கடைக்குப் போய் பட்டு வேஷ்டி சட்டை வாங்கலாம். சீக்கிரமாக் கிளம்பு. இத்தனை பேரு வீட்டுல இருக்காங்க. நீ என்ன உடுத்தணும்னு யாரும் சொல்லலை பாரு. இதுக்குத் தான் பொண்டாட்டி பக்கத்துல இருக்கணும்னு சொல்றது.” நந்தகுமார் வேண்டுமென்றே சத்தமாக முணுமுணுத்தான்.
***
மண்டபம் நிறைந்திருந்தது. கல்யாண மண்டபமே தோற்றுப் போகும் அளவிற்கு ஜமாய்த்திருந்தார் சாவித்திரி. உற்றார் உறவினர் சொந்த பந்தம் நண்பர்கள் என ஊரே திரண்டு வந்திருந்தது.
அத்தனை பேருக்கும் திருப்தியாக உணவு பரிமாறப்பட்டது. பத்மாவிற்கு அத்தனை மகிழ்ச்சி. அமெரிக்க வாழ்வு கொடுத்த ஒட்டு மொத்தச் சலிப்பையும் மருமகளின் ஒற்றைச் சீமந்தம் போக்கி இருந்தது.
பட்டும் வைரமுமாக மின்னிக் கொண்டிருந்தார். சக்ரதேவும் ஆனந்தமாகவே நடமாடிக் கொண்டிருந்தார். ஒற்றை மகன். அவனைத் தான் சிறப்பாக வளர்க்கவில்லையே என்ற குற்றவுணர்வு இப்போது காணாமற் போயிருந்தது.
பேரக்குழந்தை. அதுவும் பெண் குழந்தை. டாக்டர் சாவித்திரிக்கு மிகவும் வேண்டப்பட்டவர் என்பதால் கெஞ்சி மன்றாடி பத்மா என்ன குழந்தை என்று அறிந்து கொண்டார்.
முதலில் மறுத்த டாக்டரும் குழந்தையின் உயிருக்கு எந்த ஆபத்தும் வராது என்று தெரிந்ததால் நாசூக்காகப் பட்டும் படாமலும் சொல்லி இருந்தார். ஆனால் பத்மா புரிந்து கொண்டார்.
ஆணென்றால் என்ன? பெண்ணென்றால் என்ன? எல்லாம் ஒன்று தான். ஆனால் அவருக்குக் குழந்தைக்கு ஏற்றாற் போல நகைகள் வாங்க வேண்டும். உடைகள் தைக்க வேண்டும்.
‘எதுக்கு அத்தை தைக்கணும்? அதுதான் இப்போ ரெடிமேட் இருக்கே?’ இது பார்கவி.
‘என்னது? பொறந்த குழந்தைக்கு ரெடிமேட்டா? அதெல்லாம் சரிவராது. பொண்ணுன்னா பின்க். பையன்னா ப்ளூ. அதுக்குன்னே ஸ்பெஷலா மெட்டீரியல் இருக்கு, அது வாங்கித் தைக்கணும். அதுக்கு ஏத்தா மாதிரி ஜ்வல்ஸ் வாங்கணும்.’ பட்டியலே போட்டார் பத்மா. பார்கவி வாய் பிளந்து பார்த்திருந்தாள்.
‘எதுக்கும் ஒரு வார்த்தை மித்ராவைக் கேட்டுக்கோங்க அத்தை.’
‘அதெல்லாம் கேட்டுட்டேன் பார்கவி. உங்களுக்கு எப்படி இஷ்டமோ அப்படியே பண்ணுங்க ஆன்ட்டி ன்னு சொல்லிட்டா.’
‘அது சரி! அவங்க என்னைக்கு உங்களை எதிர்த்துப் பேசி இருக்காங்க?’ இளையவள் சொல்லவும் பத்மாவின் நெஞ்சு திக்கென்றது.
அவள் என்னை நிற்க வைத்துக் கேட்ட கேள்விகளை நீ பார்க்கவில்லே என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டார்.
‘உங்கிட்டச் சொல்றதுக்கு என்ன பார்கவி. இந்தக் கார்த்திக் கல்யாணம் பண்ண மாட்டானா? இப்படிக் குழந்தை பெத்துக்க மாட்டானா ன்னு நானும் அந்த மனுஷனும் ஏங்கி இருக்கோம். இவங்க இருக்கிற நிலைமையைப் பார்த்தா இது ஒன்னோட நின்னு போகுமோ என்னவோ. என்னோட ஆசையை எல்லாம் இந்தக் குழந்தையைக் கொஞ்சியே நான் தீர்த்துக்கிறேனே!’ பத்மா சட்டென்று அழவும் பார்கவிக்கு ஒரு மாதிரி ஆகிப்போனது. அத்தையை அணைத்துக் கொண்டாள்.
மனதின் கவலைகள் அனைத்தையும் மறந்து விட்டு முகம் முழுக்கப் புன்னகையோடு வளைய வந்தார் பத்மா. லதா எதிலும் பங்கெடுத்துக் கொள்ளவில்லை.
ஃபங்ஷனுக்கு வந்திருந்தார். அவ்வளவுதான். ஆனால் அந்தக் குறையை பார்கவி தீர்த்திருந்தாள்.
“என்ன பத்மா? வளைகாப்பு உனக்கா? இல்லை உன் மருமகளுக்கா? இப்படி ஜொலிக்குறே?” சொந்தத்தில் ஒரு பெண் பத்மாவைக் கலாய்த்தது.
“பின்னே விடுவேனா நானு. எத்தனை வருஷத்துக்கு அப்புறமா சொந்த பந்தங்களோட சேர்ந்து ஒரு ஃபங்ஷன் கொண்டாடுறேன். அதுவும் என் வீட்டு விசேஷம். சும்மா கலக்கிட மாட்டேன்!” அவருக்கு அத்தனை ஆனந்தம். கூடியிருந்த அனைவரும் கிளுக்கிச் சிரித்தார்கள்.
சற்று நேரத்திலெல்லாம் நந்தகுமாரோடு வந்திறங்கிய மகனைப் பார்த்து பத்மா மலைத்தே போய்விட்டார். சக்ரதேவ் கூட மகனை இமைக்க மறந்து பார்த்திருந்தார்.
வெண்பட்டு நிற வேஷ்டி சட்டையில் அந்த ப்ளாக் ஆடியில் வந்திறங்கினான் கார்த்திக். இளவட்டங்கள் ஒன்றிரண்டு அவனைத் திரும்பிப் பார்த்தது.
வேஷ்டி சட்டையில் தன் கணவனைக் கூட பத்மா இதுவரை பார்த்ததில்லை. எப்போதும் ட்ரடிஷனல் ஃபங்ஷன் என்றால் குர்தா தான் அணிவார் சக்ரதேவ்.
மகன் வந்து நின்ற கோலம் தாய்க்கு அத்தனை பூரிப்பாக இருந்தது.
“அடடே! நம்ம மாப்பிள்ளையா இது?” சாவித்திரி இன்று புதிதாக கார்த்திக்கை முறை வைத்து அழைத்தார். தேவகி கூட புன்னகைத்துக் கொண்டார்.
பார்கவி வேண்டுமென்றே கார்த்திக்கை நிற்க வைத்து ஆரத்தி எடுத்தாள். கார்த்திக்கிற்கு என்னவோ போலிருந்தது. மித்ராவிற்கு அக்கா தங்கை முறையிலிருந்த அத்தனை பேரும் அங்கு கூடவும் சங்கோஜமாக உணர்ந்தான்.
“நந்தா… உங்கண்ணாவைத் தட்டுல பணம் போடச் சொல்லு.” அவள் நந்தகுமாரை அதிகாரம் பண்ணவும் சிரித்தவன் ஆயிரம் ரூபாவைத் தட்டில் போட்டான்.
கூடியிருந்த அனைவரும் கோஷம் போட்டு எதிர்க்கவும் தன் ‘வாலெட்’ ஐ அப்படியே தட்டில் போட்டான் கார்த்திக். இப்போது கொல்லென்று சிரிப்புச் சத்தம்.
புதிதாக உணர்ந்தான். எல்லாம் வினோதமாக இருந்தது. ஆனாலும் அந்தச் சடங்குகள் சம்பிரதாயங்களை ஆழ்ந்து அனுபவித்தான்.
மணப்பெண் அலங்காரத்தில் இருந்தாள் மித்ரமதி. ஏழு மாத வயிறு போல இல்லாமல் நன்றாவே புடவையில் தெரிந்தது அவள் மேடிட்ட வயிறு.”
“என்ன அண்ணி? கணக்கைத் தவற விட்டுட்டீங்களா? ஏழு மாசம் தானா? இல்லை ஒன்பதா?” உறவுக்காரப் பெண்மணி ஒருவர் கேட்கவும் சாவித்திரியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
“வெளங்காதவ! நாசமாப் போக! அவ கண்ணுல பட்டாசைக் கொளுத்திப் போட! எம் பேத்திக்குக் கண்ணைப் போடுறாளே!” மாமியார் புலம்பவும் தேவகியின் முகத்திலும் கவலை தெரிந்தது.
“அத்தை…”
“நீ கவலைப்படாத தேவகி. நம்ம பொண்ணுக்கு ஒன்னும் ஆகாது. வீட்டுக்குப் போனதும் மித்ராவையும், கார்த்திக்கையும் உக்கார வெச்சு நல்லா சுத்திப் போட்டா எல்லாம் சரியாகிடும்.” மருமகளைச் சமாளித்தாலும், மனதுக்குள்…
‘அந்தப் பையன் வேற ராஜாக் கணக்காட்டம் இருக்கானே!’ என்று புலம்பியது.
கார்த்திக்கிற்கு அன்று ஜாக்பாட் அடித்தாற் போல இருந்தது. முன் வரிசையில் ஒய்யாரமாக அமர்ந்து கொண்டு மனைவியை சைட் அடித்துக் கொண்டிருந்தான்.
இப்படியொரு அலங்காரத்தில் அவளை இதுவரை அவன் பார்த்ததில்லை. லண்டனில் கோவிலில் வைத்துத் தாலி கட்டிய போதும் அலங்காரம் பண்ணி இருந்தாள் தான். ஆனால் இப்படி இல்லை.
பாட்டி தன் நகைப் பெட்டியை பேத்தியின் மேல் கொட்டி இருந்தார். குங்குமம் வைத்திருந்தாள். நெற்றி வகிட்டில் தீட்டி இருந்தது கார்த்திக்கை மயக்கியது.
தலை நிறையப் பூ. அவன் ரோஜா உள்ளும் புறமும் பூக்களைத் தாங்கி நின்றது. ஏதேதோ ஆசைகள் தோன்ற ஒரு மாய உலகில் மிதந்து கொண்டிருந்தான் கணவன்.
நலுங்கு வைக்கப் பெண்கள் ஆயத்தம் ஆகவும் சாவித்திரி முதலில் கார்த்திக்கைத் தான் அழைத்தார். என்ன ஏது ஒன்றுமே அவனுக்குப் புரியவில்லை. மனைவிக்குப் பக்கத்தில் அழைக்கிறார்கள். அது மட்டுமே போதுமாக இருக்க எழுந்து போனான்.
நடந்து வந்த கணவனை மித்ராவின் கண்கள் ஒரு நொடி தொட்டு மீண்டது. பிரச்சினை என்று ஆரம்பித்த பிறகு மித்ரா அவனை இப்படி ரசனையாகப் பார்த்ததில்லை.
கார்த்திக்கிற்கு போதை ஏறியது. ஐடியாக் கொடுத்த நந்தகுமாரை அணைத்துக் கொள்ளலாம் போல இருந்தது.
“மாப்பிள்ளை… எங்க பொண்ணுக்கு நலுங்கு வைங்க.” பாட்டி சொல்லவும் திருதிருவென முழித்தான் கார்த்திக்.
“அமெரிக்கா மாப்பிள்ளைக்கு இதெல்லாம் தெரியுமா பாட்டி?” மீண்டும் கூட்டத்திலிருந்து ஒரு குரல்.
“ஏன்? எங்க லண்டன் பொண்ணு இவ்வளவு அழகா வெட்கப்படும் போது அமெரிக்கா மாப்பிள்ளை நலுங்கு வெச்சா என்னவாம்?” பார்கவி வேண்டுமென்றே சீண்டினாள்.
மகனின் நிலையைப் பார்த்துச் சிரித்த பத்மா தான் முதலில் மருமகளுக்கு நலுங்கு வைத்தார். கார்த்திக் வைத்த கண் வாங்காமல் மனைவியையே பார்த்திருந்தான்.
“இப்போ நலுங்கு வைங்க மாப்பிள்ளை.” பாட்டி சொல்வதற்கு முன்பே கிண்ணத்திலிருந்த சந்தனத்தை எடுத்திருந்தான் கார்த்திக்.
மித்ரமதி நிமிர்ந்து கணவனின் முகம் பார்த்தாள். அவள் முகம் அன்று கொஞ்சம் இளகினாற் போல தெரிந்தது கார்த்திக் ற்கு. அம்மா செய்தது போல அனைத்தையும் செய்து முடித்து நகர்ந்தான்.
“ஆ… அப்படியெல்லாம் போக முடியாது மாப்பிள்ளை சார். பொண்ணுக்கு வெறும் கண்ணாடி வளையல் போட்டா ஆச்சா? இதுக்குத் தான் நாங்க அமெரிக்கால இருந்து மாப்பிள்ளை எடுத்தோமா?” பார்கவி சீண்டினாள்.
கார்த்திக் பதிலுக்குச் சிரித்தவன் அவன் கழுத்தில் கிடந்த செயினைக் கழட்டி மனைவியின் கழுத்தில் போட்டுவிட்டான்.
“ஐயையோ! வளைகாப்பை முடிச்சுட்டுத் தான் கல்யாணமே பண்ணிக்கிறாங்கப்பா.” பார்கவி சத்தமாகச் சொல்ல அந்த இடமே சிரிப்பில் அதிர்ந்தது. மித்ரமதிக்கு முகமெல்லாம் சிவந்து போனது.
“மாப்பிள்ளை சார்! உங்க பொண்டாட்டி வெட்கப்படுறா பாருங்க. நல்லா இன்னும் கொஞ்சம் சந்தனத்தைப் பூசி விடுங்க. முகமே சிவந்து போச்சு.” சுற்றிவர கேலிப் பேச்சுக்கள்.
நல்லவேளை! யாரும் தூய தமிழில் பேசவில்லை. தமிழ், பேச்சு வழக்கிலேயே இருந்ததால் கார்த்திக் ற்கு எல்லாம் நன்றாகப் புரிந்தது. ரசித்துக் கொண்டான். மனைவியின் கன்னத்தில் லேசாகத் தட்டியவன் ஒரு சிரிப்போடு நகர்ந்து விட்டான்.
போகும் அந்தக் கம்பீரத்தை யாரும் அறியாமல் ரசித்துக் கொண்டாள் மனைவி.
ரிச்சர்ட்டைக் கையில் பிடிக்க முடியவில்லை. வளைகாப்பைப் பார்த்தானோ இல்லையோ, கலர்க் கலராகத் திரிந்த இளவட்டங்களை நன்றாக சைட் அடித்தான். நட்பு வளர்த்துக் கொண்டான். புது இடம், புது மனிதர்கள்… எந்தப் பாகுபாடும் அவனிடம் இருக்கவில்லை. நன்றாகவே என்ஜாய் பண்ணினான்.
எல்லாம் முடிந்து வீடு வந்த போது மித்ரமதி களைத்துப் போனாள். அவள் முகத்தில் அசதி தெரிந்தது.
“பார்கவி… கொஞ்சம் மித்ராக்கு ஹெல்ப் பண்ணும்மா. வெந்நீர் ல குளிக்கச் சொல்லு.”
“சரி பாட்டி.” பார்கவி நகரப் போகவும் அவளைத் தடுத்தான் கார்த்திக்.
“பார்கவி… ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ்.”
“ம்…” சிரிப்போடு தலையாட்டினாள் பார்கவி. மனைவியின் ரூமிற்கு வந்திருந்தான் கார்த்திக். கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்த மித்ரமதி சத்தத்தில் கண்களைத் திறந்தாள். எதிரே அவளையே பார்த்தபடி நின்றிருந்தான் கணவன்.
இந்த ரூமிற்குள் அவன் அத்தனை சுலபத்தில் வருதில்லை என்பதால் ஆச்சரியமாக எழுந்தாள் மித்ரமதி.
அவன் கண்கள் அவளை உச்சி முதல் பாதம் வரை அளந்தது. கைகளில் அணிந்திருந்த கண்ணாடி வளையல்கள் அவளுக்கு இன்னும் அழகு சேர்த்தது.
அந்தப் பார்வையில் திணறிப் போனாள் பெண். நான் உன் கணவன் என்பதைப் பார்வை மூலம் உணர்த்திக் கொண்டிருந்தான் கார்த்திக். அவளுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.
அவன் நெருங்கி வந்த போதும் அசையாமல் அப்படியே தான் நின்றிருந்தாள். ஒற்றை விரலால் அவள் நாடியைப் பிடித்து முகம் தூக்கியவனின் கண்கள் அவளிடம் கெஞ்சியது.
“ப்ளீஸ் ரதி… ஒரே ஒரு தடவை…” அவன் அவளிடம் யாசகம் கேட்ட போது நொறுங்கிப் போனாள் மாது.
நீ? என்னிடம் யாசகம் கேட்பதா? நீ… என்னைத் தீண்ட என்னிடம் அனுமதி கேட்கும் உறவா நமது?
அன்று கொஞ்சிய நீயே இன்று கெஞ்சுகிறாய் என்றால்… அந்த நிலைமைக்குக் கொண்டு வந்தது யார்? நானா? நீ தானே?
அவள் மனதின் ஓலம் எதுவும் அவனுக்குக் கேட்கவில்லை. கேட்கும் நிலையிலும் அவன் இல்லை. அவன் அவளுக்குள் முத்துக் குளித்துக் கொண்டிருந்தான்.
அவன் உதட்டு வெப்பம் அவள் உயிர் வரை தீண்டியது. இன்னும் இன்னுமென்று அவன் சுகித்திருக்க அவள் வயிற்றில் ஓர் ஒற்றை அசைவு. அசைவை உணர்ந்த கார்த்திக் சட்டென்று விலகினான்.
சகலமும் வடிந்து போனது. அசைவு தெரிந்த இடத்தில் அவன் கையை வைக்க மீண்டும் ஓர் அசைவு. இப்போது அவனுக்கு மனைவி மறந்து போனது.
அப்படியே மண்டி இட்டவன் அவள் வயிற்றில் முகம் புதைத்தான். மீண்டும் மீண்டும் அசைவுகள். கண்களில் நீர் துளிர்க்க அசைந்த இடத்தில் முத்தம் வைத்தவன் சட்டென்று வெளியே போய்விட்டான்.
மித்ரமதி நூலறுந்த பட்டம் போல நின்றிருந்தாள்.