“எல்லாரோட வாழ்க்கையிலயும் எப்பவுமே ஒரு பிரச்சினை, சோகம் சதா பயணிச்சுக்கிட்டுத் தாங்க இருக்கு. அதுக்கு எந்த மனுஷனுமே விதிவிலக்கு இல்லை. என்ன… அதைத் தூக்கி ஒரு மூலையில போட்டுட்டு சின்னதா ஒரு புன்னகையை உதட்டுல ஒட்டிக்கிட்டு வாழ்றதுல தான் நம்ம வெற்றியே இருக்கு. இதுக்கு மேல தத்துவம் பேசினா நேயர்கள் அடிக்க வருவாங்க. அதால பார்கவி கொஞ்சம் அடக்கியே வாசிக்கிறேன். இது உங்கள் அபிமான தென்றல் வானொலி, நூற்றிரெண்டு புள்ளி ஐந்து எஃப் எம். ஒரு அழகான பாடலை இப்போ கேட்போமா?”
பார்கவியின் குரலில் மனதில் இருந்த சலிப்பு லேசாக விலகியது மித்ரமதிக்கு. ‘நல்லவனுக்கு நல்லவன்’ படத்திலிருந்து ‘உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே’ பாடல் ஒலிபரப்பாகியது. எங்கிருந்து தான் இந்தப் பெண் இந்தப் பாடல்களை எல்லாம் கண்டு பிடிக்குமோ? உதட்டோரப் புன்னகையோடு பாடலைத் தானும் சேர்ந்து பாடியது லண்டன் பெண்.
இன்று காலையிலேயே அம்மா அவர் பாட்டை ஆரம்பித்து விட்டார். யாரோ ஒரு டாக்டரின் ஜாதகம் வந்திருக்கிறதாம். பையன் பார்க்க அத்தனை வாட்டசாட்டமாக, மித்ரமதிக்குப் பொருத்தமாக இருக்கின்றானாம்.
குடும்பமும் இவர்களுக்கு ஏற்றாற்போல் இருக்கிறதாம். மித்ரமதிக்குத் தலையைப் பிய்த்துக் கொள்ளலாம் போல இருந்தது.
அவள் பார்த்திருக்கிறாள். தன் சொந்த வீட்டிலேயே பார்த்திருக்கிறாள். அப்பா ஒரு நல்ல அன்பான தகப்பன் தான். அதில் எந்தக் குறையும் சொல்ல முடியாது.
ஆனால்… அம்மாவிற்கு ஒரு நல்ல கணவனா என்று கேட்டால் அதற்கு அவளுக்கு விடை தெரியாது. அதை நிரூபிக்கும் எந்த செயற்பாடுகளையும் அவள் அவர்கள் வீட்டில் பார்த்ததில்லை.
பணத்திற்கும், வசதிக்கும் எந்தக் குறைவும் இருக்கவில்லை. ஆனால் அதையும் தாண்டிய பல விடயங்களை அம்மா அப்பாவிடம் எதிர்பார்த்தார் என்பதை இப்போது இவளால் புரிந்து கொள்ள முடிந்தது.
பணத்தைத் துரத்திய அப்பா அதைக் கடைசி வரை புரிந்து கொள்ளவேயில்லை. காதலைக் காட்டாத கணவன் என்றபோதும் அவரின் இழப்பை ஏற்றுக்கொள்ள அம்மா தவித்த தவிப்பு அவளுக்குத் தெரியும்.
இது போதாதென்று நண்பர்கள் வீட்டில் நடக்கும் திடீர் ‘சேர்தல்’ களும், ‘பிரிதல்’ களும் அவளை முகம் சுளிக்க வைத்திருந்தன.
“பாடல் முடியும் நேரம் ஒரு நேயர் வந்திருக்காங்க, அது யாருன்னு பார்த்திடலாம். ஹலோ! யார் பேசுறீங்க?”
“பார்க்கவி க்கா. நான் செல்வி, சென்னையில இருந்து பேசுறேன்.”
“சொல்லுங்க செல்வி. எப்படி இருக்கீங்க? என்ன பண்ணுறீங்க செல்வி?”
“நல்லா இருக்கேன் க்கா. படிச்சிட்டு சும்மா தான் இருக்கேன். வீட்டுல மாப்பிள்ளை பார்த்திருக்காங்க.” இதைக் கேட்ட போது மித்ரமதி யின் முகத்தில் ஒரு சலிப்பு.
“அடடா! வாழ்த்துகள் வாழ்த்துகள் செல்வி! மாப்பிள்ளை என்ன பண்ணுறார்?”
“மாத்ஸ் டீச்சர் க்கா.”
“கணக்கு வாத்தியார் நம்ம செல்வியைக் கணக்குப் பண்ணிட்டார் போலத் தெரியுது. செல்வி குரல்ல அவ்வளவு வெக்கம் சொட்டுது. சொல்லுங்க செல்வி, எப்போ கல்யாணம்?”
“இன்னும் ரெண்டு மாசத்துல க்கா.”
“அப்படியா! காத்திருப்புகள் கனமா இருக்கோ?”
“அதெல்லாம் இல்லை க்கா, தினமும் பேசிடுவார். நான் உங்க கிட்ட முக்கியமா ஒரு விஷயம் சொல்லணும் க்கா.”
“சொல்லுங்க செல்வி.”
“எப்படி க்கா உங்களால இப்படி எப்பவும் கலகலன்னு பேச முடியுது? உங்க ஒரு ப்ரோக்ராம் கூட நான் மிஸ் பண்ண மாட்டேன். எப்பவும் சிரிச்சுக்கிட்டே இருக்கீங்களே? அது எப்படிக்கா?”
“அது எப்படின்னா… அப்படித்தான் செல்வி.” சிரித்துக்கொண்டே பெண் தொடர்ந்தாள்.
“நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போதே சொன்னதுதான் செல்வி. இந்த பார்கவிக்கும் கஷ்டங்கள் அப்பப்போ வரும். ஆனா அதைச் செருப்பைக் கழட்டிப் போடுற மாதிரி தூக்கித் தள்ளி வெச்சிடுவேன். ஒவ்வொரு மனுஷனுக்கும் ஆண்டவன் நிறைய நல்ல விஷயங்களைக் குடுத்திருக்கான் செல்வி. ஆனா அதை யாருமே உணர்றதில்லை. இல்லாததையே நினைச்சு நினைச்சு வேதனைப்படறான்.”
“சரிதான் க்கா.”
“ஆஹா! நம்ம கல்யாணப் பொண்ணு சோகமாகிட்டாங்களே… அது கூடாதே. இதோ அவங்களைக் குளிர வெக்கிற மாதிரி ஒரு பாடல், ‘ரோஜா’ படத்தில இருந்து ‘புது வெள்ளை மழை’ வந்துக்கிட்டே இருக்கு. வாங்க எல்லாரும் நனைவோம்.”
பாடல் ஆரம்பித்த போது மீண்டும் மித்ரமதி யின் முகத்தில் புன்னகையொன்று வந்து போனது. ஒலிக்கும் பாடல் அவளுக்குப் பிடிக்கும். சங்கடங்களை மறந்து பாடலை ரசித்தாள்.
இன்று ஆஃபீஸில் முக்கியமான மீட்டிங் இருக்கிறது. பங்குதாரர்கள் என்ற வகையில் அத்தனை பேரும் வருவார்கள். பங்குதாரர்கள் என்றால் வேறு யாருமல்ல. அப்பாவின் நண்பர்கள் தான்.
சந்திரசேகர், சக்திவேல், தினகர், திவாகர்.
இந்த நால்வர் கூட்டணியின் சுருக்கம் தான் ‘எஸ் டி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்.’ மித்ரமதி யின் அப்பா சந்திரசேகர் தவறிய பிறகு அந்த இடத்தை மித்ரமதிக்குக் கொடுத்திருந்தார்கள். அவர் பங்கிற்கான லாபமும் அவளையே வந்து சேர்ந்தது. அவள் அம்மாவிற்கு இதிலெல்லாம் அத்தனை ஈடுபாடு கிடையாது.
அவரது இப்போதைய ஒரே கவலை மகளை ஒரு நல்லவன் கையில் பிடித்துக் கொடுத்துவிட வேண்டும் என்பதுதான்.
கம்பெனியின் அத்தனை நடவடிக்கைகளையும் மாதம் ஒரு முறை இப்படி ஒரு மீட்டிங் வைத்து அலசி ஆராய்வார்கள். அடுத்தடுத்து கம்பெனி பண்ணவிருக்கும் ப்ராஜெக்ட்கள் அதற்காக அவர்கள் கொடுக்கும் ‘கொட்டேஷன்’ என எல்லாமே அங்கே விவாதிக்கப்படும்.
சக்திவேல் மாமாவும் தினகர் மாமாவும் மித்ரமதி சொல்லும் விளக்கங்களைச் சரியான கோணத்தில் புரிந்து கொள்வார்கள். ஆனால் திவாகர் மாமாவைச் சமாளிப்பது தான் மித்ரமதிக்குப் பெரும்பாடாகிப் போய்விடும்.
இப்போது மட்டுமல்ல, அவள் அப்பா உயிரோடிருந்த காலத்தில் கூட அப்படித்தான். கையில் குச்சி இல்லாத குறையாக மித்ரமதியை விரட்டிக் கொண்டிருப்பார்.
‘என்ன படிக்கிறாய்? என்னென்ன பாடங்கள் தெரிவு செய்திருக்கிறாய்? அடுத்து என்ன பண்ணப் போகிறாய்?’ இப்படி ஆயிரம் கேள்விகள்.
இது போதாதென்று இன்று காலையில் அம்மா சொன்ன ஜாதகம் வேறு இந்த மனிதர் கொண்டு வந்தது தானாம். திவாகர் மாமா கேட்டால் நல்ல பதிலாகச் சொல்லு என்று தேவகி வேறு கட்டளை இட்டிருந்தார்.
தன்னை ஓரளவு ஆசுவாசப்படுத்தி இருந்த பார்க்கவியின் குரலை நிறுத்திவிட்டு ஆஃபீஸ் இருந்த ஐந்தாவது தளத்தை வந்தடைந்தாள் மித்ரமதி.
“குட்மார்னிங் மேடம்!”
“குட்மார்னிங் ரிச்சர்ட். எல்லாம் ரெடியா?”
“எல்லாம் ரெடியா இருக்கு மேடம். லன்ச் கூட ஆர்டர் பண்ணிட்டேன். டின்னரைக் கொஞ்சம் லேட்டா ஆர்டர் பண்ணிக்கலாம்.”
“குட்.” அவள் முகத்தில் பதட்டத்தைப் பார்த்தவன் அவள் கேட்காமலேயே ஒரு காஃபியை வரவழைத்தான்.
“தான்க் யூ ரிச்சர்ட்.”
“எதுக்கு மேடம் இவ்வளவு டென்ஷன்?” ரிச்சர்ட்டின் குரலில் வாயை உப்பி மூச்சை வெளியிட்டவள் அழகாகப் புன்னகைத்தாள்.
“ப்யூட்டிஃபுல்.” ரிச்சர்ட்டும் சிரிக்க இப்போது அவளது சிரிப்பு முறைப்பானது.
“ஓகே மேடம்!” இரண்டு கைகளையும் உயர்த்தி சரண்டர் ஆனவன்,
“இப்போ சொல்லுங்க மேடம், எதுக்கு இந்த டென்ஷன்?” என்றான்.
“இல்லை ரிச்சர்ட். ஒரு ப்ராஜெக்ட் பத்தி டிஸ்கஷன் நடக்கும் போதே திவாகர் மாமாவைச் சமாளிக்க நான் அத்தனை கஷ்டப்படுவேன். இன்னைக்கு அஞ்சு ப்ராஜெக்ட் பத்திப் பேசப்போறோம். அதை நெனைச்சாலே எனக்குப் பைத்தியம் புடிக்குது.”
“டோன்ட் வொர்ரி மேடம். இதுவரைக்கும் எல்லாமே பர்ஃபெக்ட் ஆ தான் பண்ணி இருக்கீங்க. இனியும் அப்படித்தான் நடக்கப் போகுது. திவாகர் சாருக்கு உங்க மேல பொறாமை மேடம். இந்தக் கம்பெனியை அவர் பையன் பொறுப்புல குடுக்காம எல்லாருமாச் சேர்ந்து உங்க திறமை மேல நம்பிக்கை வெச்சது சாருக்குப் பொறுக்கலை.”
மித்ரமதி யின் முறைப்பையும் பொருட்படுத்தாது சொல்லி முடித்தான் ரிச்சர்ட். இது எப்போதும் நடப்பதுதான். ரிச்சர்ட் க்கு ஏனோ திவாகரைப் பிடிக்காது.
தன் மரியாதைக்குரிய இளம் முதலாளியைச் சதா சஞ்சலப்படுத்தும் அந்த மனிதரை அவனுக்குப் பிடிக்காது. ஏதாவது சட்டென்று சொல்லி விடுவான்.
ஆனால் எத்தனை மனஸ்தாபங்கள் இருந்தாலும் மித்ரமதி தன் அப்பாவின் நண்பரை எங்கேயும் விட்டுக் கொடுத்ததில்லை. அவர் கண்டிப்பின் பின்னே இருக்கும் அக்கறை அவளுக்கும் தெரியும்.
சரியாகப் பத்து மணிக்கு அனைவரும் வந்து விட மீட்டிங் ஆரம்பமானது. அடுத்தடுத்து அவர்கள் பண்ணப்போகும் ப்ராஜெக்ட்கள் அதற்கான வரைபடங்கள் அதற்குக் கொடுக்கப் போகும் கொட்டேஷன் கள் என அனைத்தும் அங்கு விவாதிக்கப்பட்டன.
அனைத்தையும் உருவாக்க அவளுக்கு உறுதுணையாக இருந்த அனைத்து ஊழியர்களும் அங்கு முன்வைக்கப்பட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளித்தார்கள்.
சாதக பாதகங்கள் விவாதிக்கப்பட்டுத் தேவையான திருத்தங்களும் செய்யப்பட்டன. இன்றையோடு முடியும் வேலை அல்ல இது என்று தெரிந்த போதும் அத்தனை பேரும் மாலை ஏழு மணி வரை கலந்து கொண்டார்கள்.
எல்லோரும் கலைந்து விட நேரம் இரவு எட்டைத் தொட்டிருந்தது. மறுநாள் மீதி வேலைகளைத் தொடரலாம் என்று முடிவெடுத்தவர்கள் டின்னரையும் அங்கேயே முடித்து விட்டு கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டார்கள்.
“அப்புறம்… மித்ரா! திவாகர் ஏதோ சொல்றானே? மாப்பிள்ளையைப் பிடிச்சிருக்கா?” சக்திவேல் ஆரம்பிக்கவும் என்ன சொல்வதென்றே புரியவில்லை மித்ரமதிக்கு.
“மாமா… அது வந்து…”
“என்ன வந்து போயீ… பிடிச்சிருக்கா? பிடிக்கலையா? அதை முதல்ல சொல்லு.” திவாகர் சட்டென்று கோபமாகக் கேட்கவும் மித்ரமதிக்குக் கோபம் வந்ததோ இல்லையோ… ரிச்சர்ட் பல்லைக் கடித்தான்.
“கொஞ்சம் பொறுமையாப் பேசு திவா. கல்யாண விஷயம். அப்படி அவசரப்பட்டெல்லாம் முடிவெடுக்க முடியாது. நீ சொல்லும்மா.” எப்போதும் போல இப்போதும் பொறுமையாக வந்தது சக்திவேலின் குரல்.
மனிதருக்கு என்ன தோன்றியதோ, நண்பரின் பேச்சில் முகத்தைத் திருப்பிக் கொண்டார்.
“மாமா… இப்போ என்ன அவசரம்? இன்னும் கொஞ்ச நாள்…”
“உனக்கு அம்பது வயசுல கல்யாணம் பண்ணத் தோணும். அப்போ மாப்பிள்ளை பார்க்கச் சொல்லுறியா?” மித்ரமதியை முடிக்க விடாமல் மீண்டும் குறுக்கறுத்தது திவாகரின் குரல்.
“திவா… கொஞ்சம் பொறுமையா இருப்பா. அதான் நான் பேசுறேன் இல்லை.”
“என்னமோ பண்ணுங்க. நான் கிளம்புறேன்.” கோபமாகச் சொல்லிவிட்டுக் கிளம்பி விட்டார் திவாகர். சக்திவேல் தினகரைத் திரும்பிப் பார்க்க அவர் ‘அவன் போனாப் பரவாயில்லை… நீ பேசு’ என்பது போல ஜாடை காட்டினார்.
“இங்கப்பாரு மித்ரா. வயசு ஏற்கெனவே இருபத்தி நாலு முடிஞ்சுது. இன்னும் தாமதப்படுத்தக் கூடாதும்மா. உங்கம்மாக்கும் வயசு ஆகுதில்லையா? உங்கப்பா உயிரோட இருந்திருந்தா நாங்க எல்லாம் இவ்வளவு கவலைப்பட மாட்டோம். எல்லாத்தையும் அவனே பார்த்திருப்பான். ஆனா இப்போ நிலைமை அப்படி இல்லை. பணத்தைக் கட்டிக் காப்பாத்தின அண்ணன்மார் எம் பொண்ணை நடுரோட்டுல விட்டுட்டாங்கன்னு உங்கம்மா நாளைக்கு மனம் நொந்து ஒரு வார்த்தை சொல்லிடக்கூடாது இல்லையா?”
“புரியுது மாமா.” தலையைக் குனிந்தபடி சொன்னாள் மித்ரமதி. இப்படித் தன்மையாகப் பேசுபவரிடம் என்ன சொல்வது?
“தயங்காத மித்ரா. கல்யாணமே வேணாம்னு நீ சொல்லுறது எனக்கு அவ்வளவு புத்திசாலித்தனமாத் தோணலை. இந்த மாப்பிள்ளை வேணாம்னா விட்டுரு. ஆனா ரொம்பக் காலம் கடத்தாதே. சில விஷயங்களை அந்தந்த வயசுல பண்ணிடணும், புரியுதா?”
“ம்…” அரைமனதாகத் தலையாட்டிய பெண்ணின் தலையைத் தடவிக் கொடுத்தவர் கிளம்பிவிட்டார். கூடவே தினகரும் சென்று விட நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்தாள் மித்ரமதி.
எதிரே இவளையே பார்த்தபடி நின்றிருந்தான் ரிச்சர்ட்.
“ஏன் ரிச்சர்ட்? ஒரு பொண்ணு கல்யாணம் பண்ணிக்காம வாழவே முடியாதா?”
“அப்படி யாரு சொன்னா மேடம்? ஆனா இது இன்டியன் கல்ச்சர். நான் இதுக்கு மேல பேசினா உங்களுக்குக் கோபம் வரும்.” தன் எல்லை தெரிந்து எட்ட நின்றவனைப் பார்த்த போது இப்போது சிரிப்பு வந்தது மித்ரமதிக்கு.
இந்தப் புத்தி, அடிக்கடி காதல் பார்வைகளை அள்ளி வீசும் போது வந்தா இன்னும் நல்லா இருக்கும்.
“கிளம்பலாமா மேடம்?”
“ம்…”
“இன்னைக்கு நான் உங்களை ட்ராப் பண்ணுறேன் மேடம்.”
“ஏன்?”
“நீங்க ரொம்ப டயர்டாத் தெரியுறீங்க. ட்ரைவ் பண்ண வேணாம்.”
“தான்க் யூ ரிச்சர்ட்.” பதில் சொன்னவளை ‘அது என் பாக்கியம்’ என்பது போல ஒரு பார்வை பார்த்தான்.
அந்தப் பார்வைக்கு பதில் சொல்லாமல் நகர்ந்து விட்டாள் பெண்.
*************
டீலர்கள் மீட்டிங்கை முடித்துக் கொண்டு தனது அறையில் வந்து உட்கார்ந்தான் கார்த்திக். புள்ளிவிவரங்கள் நல்ல திருப்தியாக இருந்தது.
மரத் தளபாடங்கள் செய்து விற்பது தான் சக்ரதேவ் ஆரம்பித்த தொழில். பெரிதாகத் தொழிற்சாலை அமைத்துத் தொழிலைத் திறம்படவே நடத்தினார் மனிதர்.
மகன் தொழிலில் வந்து இணைந்த போது அவன் திறமையைப் பார்த்து அனைத்தையும் அவன் கையில் ஒப்படைத்து விட்டு ஒதுங்கி விட்டார்.
கார்த்திக்கும் அவர் கணக்கைப் பொய்யாக்கவில்லை. அப்பாவின் தொழிலோடு மட்டும் நின்று விடாமல் சிறுகச் சிறுகத் தன் காலை மற்றைய இடங்களிலும் பதிக்க முடிவு செய்திருந்தான்.
“மார்க்… நைட் ஃப்ளைட்டுக்கு எல்லாம் ரெடியா?”
“சார்…” கையைப் பிசைந்த மார்க்கை ஆச்சரியமாகப் பார்த்தான் கார்த்திக். இன்று இரவு அவன் லாஸ் ஏஞ்சல்ஸ் பயணப் படுவதாகத் திட்டம்.
தொழில் முறைப் பேச்சுவார்த்தை ஒன்றில் நாளை அவன் கலந்து கொள்ள வேண்டும். இன்று இரவு பயணப்பட்டால் எல்லாவற்றிற்கும் சௌகரியமாக இருக்கும்.
“என்னாச்சு மார்க்? ப்ளான் ல ஏதாவது சேன்ஜ் பண்ணி இருக்கியா?”
“அதெல்லாம் இல்லை சார்… ஜெனி…”
“ஜெனியா… அது யாரு? நம்ம ஸ்டாஃபா?” கார்த்திக் கேட்ட பாணியில் தலையில் கையை வைத்துக் கொண்டான் மார்க்.
அந்தக் குதிரை இந்தப் பெட்ரால்மாக்ஸ் லைட் தான் வேண்டும் என்று அடம்பிடிக்கிறது. இவன் என்னடா என்றால் பெயர் கூட ஞாபகம் இல்லாமல் ஸ்டாஃபா என்று கேட்கிறானே!
“மார்க்…” சற்றுச் சத்தமாகவே அழைத்தான் கார்த்திக். திடுக்கிட்ட மார்க் கவனம் கலைந்து திரும்பும் போது கார்த்திக்கின் அறைக்கதவு அனுமதி கேட்கப்படாமலேயே திறந்தது.
சர்வாங்கமும் நடுங்கிய மார்க் உள்ளே நுழைந்த பெண்ணிடம் ஒரு பதட்டத்தோடு ஓடிப் போனான். கார்த்திக்கின் ஒற்றைப் புருவம் ஏறி இறங்கியது.
கடந்த வார இறுதியின் மீதங்களோடு காதலாகத் தன்னைப் பார்த்த அந்த அராபியன் குதிரையை ஒரு தினுசாகப் பார்த்தான் கார்த்திக்.
மார்க்கிற்குத் தெரியும், இந்த அணுகுமுறை தன் முதலாளிக்குச் சற்றும் பிடிக்காது என்று. ஏதோ விளக்கம் சொல்லப் போனவனைக் கார்த்திக்கின் ஒரு பார்வை அந்த இடத்தை விட்டு வெளியேற்றியது.
அமைதியாக அந்தக் கண்ணாடிச் சுவர் வரை நடந்து சென்றவன் ‘மான்ஹட்டன்’ நகரின் பரபரப்பை ஒரு சில நொடிகள் ரசித்துப் பார்த்தான்.
“கார்த்திக்!” அந்தக் குரலில் உலகத்து மயக்கமெல்லாம் ஒட்டுமொத்தமாகக் குவிக்கப்பட்டிருந்தது.
தலையைத் திருப்பி ஒற்றைப் பார்வை பார்த்தவனை விழுங்கியது அந்த விழிகள்.
“இது என்னோட ஆஃபீஸ்.”
“ம்… தெரியும். அன்னைக்கும் இதே ஆபீஸுக்குத்தான் நான் வந்ததா ஞாபகம்.”
“யெஸ்… ஆனா அன்னைக்கு மார்க்கோட அனுமதி இருந்ததா எனக்கும் ஞாபகம்.”
“ஸோ வாட்? எனக்கு இங்க வர அனுமதி இல்லையா கார்த்திக்?”
“குடுத்ததா எனக்கு ஞாபகம் இல்லை பேபி.”
“ஆனா நீங்க குடுத்த நிறைய ஸ்வீட்டான விஷயங்களை நான் இன்னும் மறக்கலை கார்த்திக்.” அந்த வார்த்தைகளில் தோளை லேசாகக் குலுக்கினான் கார்த்திக். இது போலப் பல பெண்கள் சொல்லி அவன் கேட்டிருக்கிறான். பார்வை இப்போது மீண்டும் நகரின் பரபரப்பில் லயித்தது.
“எனக்கு எப்போ, எது தேவைன்னு நான் தான் முடிவு பண்ணுவேன்.”
“ஷ்யூர் கார்த்திக். நீங்களே சொல்லுங்க… எப்போ நாம திரும்பவும் மீட் பண்ணலாம்?”
“நாளைக்கு முக்கியமான ஒரு மீட்டிங் இருக்கு. என் மைன்ட் முழுக்க இப்போ அதுல தான் இருக்கு. ப்ளீஸ்…” அவன் வார்த்தைகள் ஒவ்வொன்றிலும் தெறித்த கம்பீரத்தில் தன்னை அறியாமலேயே அவனை நோக்கி வந்தது பெண்.
அமைதியாகப் பார்த்திருந்தான் கார்த்திக் ஹரிகிருஷ்ணா.
அவன் அருகில் வந்தவள் நெருங்கி நின்று எம்பி அவன் இதழில் இதழ் பதித்தாள்.
“ஐ ஆம் வெயிட்டிங்…” சொன்னவள் மீண்டும் ஒரு முறை இதழ் பதித்துவிட்டு நகர்ந்து விட கார்த்திக் மார்க்கை அழைத்தான்.
“இனி ஒரு முறை இது மாதிரி நடந்தது… உன் இடத்துக்கு வேற ஆள் போட வேண்டி வரும்.”
“சாரி சார்.” கோபமாகச் செல்லும் முதலாளியைப் பார்த்துக் கொண்டே முணுமுணுத்தான் மார்க்.
************
ஏர்போர்ட்டில் அனைத்து சம்பிரதாயங்களையும் முடித்துக்கொண்டு அமைதியாக உட்கார்ந்திருந்தான் கார்த்திக். லாஸ் ஏஞ்சல்ஸ் செல்லும் விமானம் இன்னும் சிறிது நேரத்தில் பயணப்படத் தயாராக நின்று கொண்டிருந்தது.
தொலைபேசி சிணுங்கவும் எடுத்துப் பார்த்தான். சித்தி அழைத்துக் கொண்டிருந்தார். அவசரமாக அழைப்பை ஏற்றான்.
“சொல்லுங்க சித்தி.”
“கார்த்திக்… ஃப்ரீயா இருக்கியா? பேச முடியுமா?”
“அதெல்லாம் முடியும், நீங்க சொல்லுங்க சித்தி. நந்து எப்படி இருக்கான்?”
“அவன் தான் உங்கிட்ட பேசணும்னு சொன்னான். அதான் கூப்பிட்டேன். இந்தா, நீயே பேசு.” சித்தி ஃபோனை நந்தகுமாரிடம் கொடுத்து விட்டு நகர்ந்து விட்டார்.
கார்த்திக்கின் அம்மா பத்மாவின் தங்கை இந்த லதா சித்தி. கார்த்திக்கிற்குச் சித்தி என்றால் அத்தனை பிரியம். அவர்கள் எல்லோரும் இருப்பது இந்தியா என்பதால் அடிக்கடி பார்க்க முடிவதில்லை.
“அண்ணா!”
“சொல்லு நந்து. எப்படி இருக்க?”
“நல்லா இருக்கேன் ண்ணா. நீ எப்படி இருக்க?”
“நான் ஓகே டா.”
“வெளியே இருக்கியா? ரொம்ப சத்தமா இருக்கு?”
“ஏர்போர்ட் ல இருக்கேன். நீ சொல்லு.”
“அண்ணா…” நந்தகுமார் இழுக்கவும் கார்த்திக்கின் வலது கண் லேசாகச் சுருங்கியது. தன்னிடம் பேச இவனுக்கு என்ன தயக்கம்? எதைப் பேச இப்படி யோசிக்கிறான்?
“என்னாச்சு நந்து? இன்னைக்கு பார்கவி வந்தாங்களா?”
“ம்…”
“மேல சொல்லு.”
“எனக்கு… என்ன சொல்றதுன்னு…”
“ப்ரப்போஸ் பண்ணினாங்களா?”
“அண்ணா!” நந்தகுமாரின் குரலில் அத்தனை ஆச்சரியம்.
“சொல்லு… நான் சொன்னது சரியா?”
“ம்…”
“பிடிச்சிருந்தா ஓகே சொல்லு நந்து.”
“எப்படி ண்ணா? எனக்கு அது தப்பாத் தோணுது.”
“டேய்! காதலிக்கிறது தப்புன்னு யாரு சொன்னா?”
“காதலிக்கிறது தப்புன்னு நான் சொல்லலை. ஆனா நான் காதலிக்கிறது தப்புன்னு சொல்ல வர்றேன்.”
“ஏன்? நீ காதலிச்சா என்ன தப்பு?”
“அண்ணா… ப்ளீஸ் புரிஞ்சுக்கோ! எனக்கு இது சுயநலமாத் தெரியுது.”
“ஸோ… உனக்கு பார்கவியைப் பிடிச்சிருக்கு? ஏத்துக்கிறதுல தான் தயக்கம், சரியா?”
“…………….”
“நந்தூ…” கார்த்திக்கின் குரல் இப்போது தம்பியை மிரட்டியது.
“சொல்லு ண்ணா.”
“என்ன யோசனை இப்போ?”
“இல்லை ண்ணா. பழைய குப்பை எதையும் யோசிக்கலை நான். இந்தக் கண்ணு தெரியாதவனோட வாழுற கொடுமை எதுக்கு அந்தப் பொண்ணுக்கு ன்னு தான் மனசு கிடந்து தவிக்குது ண்ணா.”
“அதைப்பத்தி அந்தப் பொண்ணே கவலைப்படலை. நீ ஏன்டா இவ்வளவு கவலைப்படுறே?”
“என்னையே உயிரா நினைக்கிற பொண்ணு. அவளைப்பத்தி நான் கவலைப்பட வேணாமா ண்ணா?”
“அட்ராசக்க! காதல் வாசனை இங்க வரை வீசுதுடா நந்து.”
“அண்ணா! ப்ளீஸ். கேலி பண்ணாத.”
“இல்லைடா நந்து. இது கேலியில்லை, சந்தோஷம். என்னைப் பொறுத்தவரை பார்கவி ரொம்பத் தெளிவான பொண்ணு மாதிரித்தான் தெரியுறா. நீ கவலையே படாம அந்தப் பொண்ணுக்கு ஓகே சொல்லு. எல்லாம் நல்லபடியாவே நடக்கும்.”
“ம்…”
“ஃபோனைச் சித்திக்கிட்டக் குடு.”
“ம்… அம்மா!” நந்துவின் குரலில் லைனுக்கு வந்தார் லதா.
“சொல்லு கார்த்திக்.”
“என்ன சித்தி? நந்து என்னென்னமோ சொல்லுறான். பொண்ணு உங்களுக்கு ஓகே வா?”
“கார்த்தி…”
“இப்போ நீங்க எதுக்குத் தயங்குறீங்க சித்தி?”
“எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலைடா கார்த்தி…” சொல்லி முடித்து விட்டு ஓவென்று அழுத சித்தியை எப்படித் தேற்றுவது என்று தெரியாமல் அமைதியாக இருந்தான் கார்த்திக். ஆனால் முகத்தில் மட்டும் அப்போது அத்தனை ரௌத்திரம் தெரிந்தது.
லதா தன்னைத்தானே சுதாரித்துக் கொண்டார்.
“கார்த்தி… எம் புள்ளைக்கு ஒரு நல்ல எதிர்காலம் வர்றப்போ சந்தோஷமா இருக்கு. ஆனா அதே நேரம்… அந்தப் பொண்ணை நினைக்கும் போது மனசை என்னமோ பண்ணுதுடா.”
“சித்தீ… ப்ளீஸ். ஃபூல் மாதிரிப் பேசாதீங்க. யாரையும் நீங்க வற்புறுத்தலை. அந்தப் பொண்ணு தானே விருப்பப்பட்டுக் கேக்குது. இதுல நீங்க வருத்தப்பட என்ன இருக்கு?”
“சரிதான்…”
“அதோட நந்துக்குக் குணமாக நிறைய வாய்ப்புகள் இருக்குன்னு டாக்டர்ஸ் சொல்லுறாங்க. கூடிய சீக்கிரமே அவனுக்குப் பார்வை வந்திடும். அந்த நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்கு. அப்புறம் என்ன?”
“நீ சொல்றது சரிதான் கார்த்தி. உன்னோட பேசினாலே மனசுல இருக்கிற சஞ்சலம் எல்லாம் பறந்து போயிரும். அது சரி… நீ எப்போ கல்யாணம் பண்ணப்போறே?”
“ஆங்… நாட்டுக்கு இப்போ இது ரொம்ப முக்கியம் தான்.”
“நாட்டுக்கு இல்லைடா, உன்னோட வீட்டுக்கு இது இப்போ ரொம்பவே முக்கியம். உங்கம்மா ஃபோனைப் போட்டு இதைப்பத்தித் தானே புலம்புறா.”
பேச்சு அபாயகரமான திசையில் செல்லவும் கார்த்திக் அத்தோடு நிறுத்திக் கொண்டான்.
“சித்தி… ஃப்ளைட்டுக்கு டைம் ஆச்சுது. நான் வெச்சிடட்டுமா?”
“சரிப்பா… சரி. நீ பத்திரமாப் போயிட்டு வா. அடிக்கடி கால் பண்ணு கார்த்தி.”
“சரி சித்தி, பை.”
லைனைத் துண்டித்து விட்டு சாய்ந்து உட்கார்ந்தான் கார்த்திக். கேபின் க்ரூ ஒன்று அவனைத் தாண்டிச் சென்று கொண்டிருந்தது.
சிவப்புச் சீருடையில் நான்கைந்து பெண்கள் நகர அதிலொன்று இவனைப் பார்த்து அழகாகப் புன்னகைத்தது.
அந்தச் சிரிப்பு இன்று தடாலடியாகத் தன் ஆஃபீஸ் அறைக்குள் நுழைந்த பெண்ணை இவனுக்கு ஞாபகப்படுத்தியது.
அந்தத் திடீர் வருகையை கார்த்திக் அத்தனை தூரம் ரசிக்கவில்லை. தன் மேல் திணிக்கப்படும் எதையும் அவன் விரும்புவதுமில்லை.
இவை எல்லாவற்றையும் தாண்டி இப்போது நந்தகுமாரின் பிரச்சினை தான் பெரிதாகத் தெரிந்தது.
நன்றாகப் படிக்கும் பையன். சித்தப்பா நல்ல பின்புலம் உள்ளவர் என்பதால் ஆக்ஸ்ஃபோர்ட் வரை அனுப்பி வைத்தார்கள். அங்கு பிடித்தது அவனுக்குக் கிரகம்.
படிப்பையும் தொலைத்துப் பார்வையையும் தொலைத்து விட்டு வந்திருந்தான். குடும்பமே நிலைகுலைந்து போனது. ஆனாலும் டாக்டர்கள் கை விடவில்லை.
பார்வை மீண்டும் வர வாய்ப்புகள் அதிகமிருப்பதாகத்தான் சொல்கிறார்கள். சிகிச்சைகளும் எந்தக் குறைவும் இல்லாமல் நடந்த வண்ணம் தான் இருக்கின்றன.
பயணிகளுக்கான அறிவிப்பு ஒலிக்கவும் அனைத்தையும் மறந்து எழுந்து கொண்டான் கார்த்திக்.
அதேவேளை… இரவு உணவை முடித்துக் கொண்டு கட்டிலில் புரண்ட படி இருந்தாள் மித்ரமதி. மனம் அன்றைய நிகழ்வுகளை மீட்டிப் பார்த்தது.
மீட்டிங் அத்தனை பேருக்கும் திருப்தியாக முடிந்தது மனதை லேசாக்கியது. எப்படியும் எழுபத்தைந்து சதவீதம் இவர்களுக்குச் சாதகமாகத்தான் முடியும். அதில் சந்தேகமில்லை.
தொழிலை வெகு லாவகமாக நடத்தத் தெரிந்தவளுக்கு வாழ்க்கை தான் கண்ணாமூச்சி காட்டியது. இதற்கு மேலும் அம்மா அமைதியாக இருப்பார் என்று தோன்றவில்லை. நல்லவேளையாக இப்போது வந்திருக்கும் வரன் இன்னும் பாட்டியின் காதுக்குப் போகவில்லை. இல்லையென்றால் அவர் வேறு ஆரம்பித்திருப்பார்.
இவர்கள் எல்லோரும் சொல்கிறார்கள் என்பதற்காக ஒரு கல்யாணம் பண்ணுவது என்பது எத்தனை புத்திசாலித்தனம்?
காதலில்லாமல், ஒரு புரிதல் இல்லாமல், நட்பு இல்லாமல்… ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்து வாழ்வில் இணைவது என்பது எத்தனை மடத்தனம்!
அதே மடத்தனத்தைத் தான் தானும் பண்ணப் போகிறோம் என்று புரியாமல் கண்ணயர்ந்தாள் மித்ரமதி.