Mathu…Mathi!-7

mathu...mathi!_Coverpic-ffece7d9

Mathu…Mathi!-7

மது…மதி! – 7

மதுமதியிடம் நெருக்கமாக நின்று கொண்டு வம்பு வளர்த்துக் கொண்டிருந்த, கௌதமிற்கு அலைபேசியில் குறுஞ்செய்தி வர, அவன் சட்டென்று விலகிக்கொண்டான். ‘இப்படி எல்லாம் மிரட்டினா நான் பயந்திருவேனா?’ அவள் அங்கிருந்த சோபாவில் சோர்வாக சாய்ந்து அமர்ந்து கண்களை இறுக மூடினாள்.  

குறுஞ்செய்தியை பார்த்த அவன் முகம் சுருங்கியது. சட்டென்று அலைபேசியை எடுத்துக்கொண்டு வெளியே சென்றான். அவன் சென்றது தெரிந்தாலும், அவள் கண்களை திறக்கவில்லை.  

அலைபேசியில் அழைத்து அவன் தங்கியிருக்கும் வீட்டிற்கு இரண்டு காவலர்களை ஏற்பாடு செய்தான். காரை எடுத்து கொண்டு அவர்கள் வீட்டிலிருந்து சற்று தொலைவில் தெரிந்தவர்கள் வீட்டில் நிறுத்திவிட்டு நடையாக வீட்டிற்கு திரும்பினான்.

தங்கள் அறையில் பால்கனி வழியாக வெளியே இறங்க ஏற்பாடு செய்தான். அதற்குள் அவன் அழைத்திருந்த இருவர் வந்திருக்க, அவர்கள் வீட்டின் அனைத்து பால்கனி முன்னும் இறங்க ஏணி அமைத்தனர். அவன் அவர்கள் செவிகளில் ஏதோ கூறிவிட்டு மடமடவென்று வீட்டிற்குள் சென்று கதவை உள்பக்கமாக தாளிட்டான்.

சோபாவில் கண்மூடி சாய்ந்திருந்த அவள் முகத்தை ஆழமாக பார்த்தான். அவள் தலை கோதினான். அவளிடம் அசைவில்லை. ஆனால், அவள் உணர்வுகள் மேலே எழும்பி, அவள் கண் இமைகள் மெல்ல துடித்து, அவள் விழித்திருப்பதை காட்டியது.

‘பாசாங்கு செய்பவர்களை எப்படி எழுப்புவது?’ அவன் சிரித்துக் கொண்டான்.

அவன் அவளை கைகளில் ஏந்த, அவள் படக்கென்று கண்களை திறந்தாள். “என்ன பண்ணறீங்க?” அவள் கேட்க, “டேக் இட் ஃபார் க்ராண்ட்டட்க்கு அர்த்தம் கற்பிக்கப் போறேன்” அவன் நக்கலாக கூற, அவள் துள்ளி குதிக்க எத்தனிக்க, தென்றலாக அவளை தீண்டிய அவன் விரல்கள் இப்பொழுது உடும்பு பிடியாக மாறுவதை அவள் உணர ஆரம்பித்தாள்.  

“உனக்கு என்னை பத்தி தெரியும் மதும்மா” அவன் குரலில் பிடிவாதம் இருக்க, அவள் தன் கண்களை இறுக மூடிக் கொண்டாள். அவளின் மௌனத்தில் அவன் விரல்கள் மீண்டும் மென்மையை தேக்கி கொள்ள, அவள் தேகம் அவன் தீண்டலை ரசிக்க ஆரம்பிக்க, அவள் மனம் அவன் அருகாமையில் உவகை கொண்டது.  

அவன் அவளை மெத்தையில் மெதுவாக படுக்க வைத்தான். அவள் திரும்பி படுத்துக்கொண்டாள். அவள் விழிகளில் நீர்கோர்த்துக்கொண்டு ஒரு பக்கமாக வழிய ஆரம்பித்தது. ‘நான் தான் முட்டாளா? எனக்கு தான் கிடைத்த வாழ்க்கையை வாழ தெரியவில்லையா?’ அவள் மனசாட்சி அவன் அருகாமையில் அவளுக்கு எதிர்பக்கம் திரும்ப, அவள் உடல் அழுகையோடு குலுங்கியது.  

“மதும்மா…” அவன் அழைக்க, அவள் திரும்பவில்லை. அவன் அவள் அருகில் படுத்துக்கொள்ள அவள் வேறு பக்கம் திரும்பி படுத்துக்கொண்டாள். அவன் அவளை நெருங்க, அவள் படக்கென்று எழுந்து வேறு அறைக்கு செல்ல எத்தனிக்க, “வேற ரூமுக்கு போய்த்தான் பாரேன்” அவன் தன் கைகளை அவன் தலைக்கு அண்டை கொடுத்து, ஒரு காலை இன்னொரு காலுக்கு மேல் போட்டு கால்களை ஆட்டியபடி கூறினான்.

அவள் தன் பற்களை நறநறத்துக்கொண்டு தலையணையை கீழே போட, “சீரியல் ஹீரோயின் மாதிரி கீழ படுக்க போறியா மதும்மா” அவன் எழுந்து அமர்ந்து தலையணையை பார்த்து தலையை அசைத்தது கேலியாக கேட்க, அவள் கெளரவம் சட்டென்று நூறு கிலோமீட்டர் வேகத்தில் ஏற, அந்த தலையணையை மீண்டும் எடுத்து மெத்தையில் வைத்து அவர்களுக்கு இடையே படபடவென்று தலையணையை அடுக்கி சுவரை பார்த்தபடி படுத்துக்கொண்டாள்.

அவள் படுத்த வேகத்தில் அவன் தலையணைகளை தூக்கி எறிந்து அவள் மேல் கைகளை போட்டுக்கொண்டு, “மதுமதியாலையே என்னை கட்டுப்படுத்த முடியலைன்னா, பாவம் அந்த பஞ்சு தலையணையால் என்னை கட்டுப்படுத்த முடியுமா?” அவள் செவியோரம் அவன் இதழ்கள் கிசுகிசுக்க, அவள் தன் கண்களை இறுக மூடிக்கொண்டாள்.  

அவள் கண்கள் காட்டிய இறுக்கத்தை, அவள் முகச் சுருக்கம் கூற, “ஐ அம் டேக்கிங் யூ ஃபார் க்ராண்ட்டட்” என்றான் அவள் முகமெங்கும் இதழால் ஸ்பரிசித்தபடி.  

அவன் தீண்டலில் அவள் குழைய அவள் தேகம் நடுங்கியது. நடுங்கிய அவள் தேகத்திற்கு அவன் கைகள் அரணாக மாற, அவள் சரேலென்று திரும்பி அவன் மார்பில் படுத்துக்கொண்டு அவள் சட்டையை கொத்தாக பிடித்து கதறி அழுதாள்.

அவள் அழட்டும் என்பது போல் அவன் மௌனம் காத்தான். அவள் முகம் அவனுள் புதைய புதைய அவள் கைகள் அவனை குத்தியது. “ஏன் என்னை படுத்தறீங்க?” அவள் கண்ணீர் அவன் சட்டையை நனைத்தது.

“உங்களுக்கு தெரியும் தானே? எனக்கு உங்களை பிடிக்காதுன்னு.” அவள் அவன் தோள் மேல் படுத்துக்கொண்டே கேட்க, அவனிடம் பதிலில்லை. அவள் அவன் அரவணைப்பில் வாகாய் சாய்ந்து கொண்டு, “தெரியுமா? தெரியாதா? எனக்கு உங்களை பிடிக்கலை… பிடிக்கலை… பிடிக்கலை… அது தெரியுமா? தெரியாதா?” அவள் சீற, அவன் அவள் முகத்தை ஒற்றை விரலால் தூக்கினான்.  

அவள் முகம் அவன் முகத்திற்கு மிக அருகே இருக்க, அவள் கண்ணீர் அவன் கன்னம் தொட்டு செல்ல, அதை துடைக்க இருவருக்கும் மனமில்லாமல் போக அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டே இருக்க, சில நிமிடங்களில் அவள் சுதாரித்துக்கொண்டு, “பதில்?” என்றாள் ஒற்றை கேள்வியாக.

அவன் கைகள் தன் தோளோடு படுத்திருந்த அவள் இடையை தன்னோடு சேர்த்துக்கொண்டு, “பதில் தானே வேணும் மதும்மா?” அவள் முகத்தை ஆழமாக பார்த்தபடி கேட்டான்.

“தெரியும். நல்லா தெரியும். என் மதும்மாவுக்கு என்னை சுத்தமா பிடிக்காதுன்னு தெரியும்.” அவன் குரல் பிசிறு தட்டியது. அவன் மேல் கொள்ளை காதல் பேசிய அவள் கண்களை பார்த்தபடி, “உனக்கு என் மேல் எவ்வளவு வெறுப்புன்னு உன் கண்கள் சொல்லுது மதும்மா” என்றான் அவன்.

அருகே இருக்கும் அவன் கன்னங்களை தீண்டிவிடுவோமோ என்று அவள் இதழ்கள் அஞ்ச, “உன் வெறுப்பை சொல்லமால் சொல்லுது உன் இதழ்கள்” அவன் அவள் இதழ்களை பிடித்து கூற, “போதும், நீங்கள் என் கேள்விக்கு பதில் சொன்ன லட்சணம்” அவன் கைகளை தட்டிவிட்டு அவள் எழுந்து அமர்ந்தாள்.

“பார்த்தியா வேண்டாம் புருஷன் கைப்பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம். நீ தான் பதில் சொல்ல சொன்ன, சொன்னாலும் திட்டுற சொல்லலைனாலும் திட்டுற?” அவன் அப்பாவியாக கைகளை விரிக்க, “அது தான் திட்டுறேனில்லை. அப்ப பேசாதீங்க” என்றாள் கடுவன்பூனை போல்.

அப்பொழுது அவள் அலைபேசி ஒலிக்க, கௌதமின் தாயார் எண்ணை பார்த்ததும் அவள் கண்கள் சுருங்க, அவன் ஒற்றை புருவத்தை உயர்த்தி, ‘யார்?’ என்று வினவினான்.

 “உங்க அம்மா…” அவள் முணுமுணுக்க, அவன் படக்கென்று எழுந்து அவள் அலைபேசியை உயிர்ப்பித்து ஸ்பீக்கரில் வைத்தான்.  

யாருடைய பேச்சுக்கும் காத்திராமல், “என்ன ரொம்ப யோக்கியம் மாதிரி பேசுவ, குடிச்சிட்டு வண்டி ஓட்டிருக்க. என் மகன் ரிப்போர்ட்டை நம்பாம உன்னை நம்பினான். பல இடத்தில் விசாரிச்சிட்டான். எங்கையும் தப்பு நடக்கலை, நீ தான் குடிச்சிட்டு வண்டி ஒட்டிருக்கன்னு எல்லாரும் சொல்றாங்க” அவர் கூற, அவள் மௌனித்தாள்.

“என்னடி உன் லட்சணம் தெரிஞ்சிட்டுன்னு பேசாம இருக்கியா? உன்னை என் மகன் தங்கத்தட்டில் வைத்து தாங்கினான். திமிர் பிடித்து போனது நீ. போனவ அப்படியே போய்டு. இதை சாக்கா வச்சுக்கிட்டு அவன் பக்கம் வந்தவ அப்படியே இருந்திராத” அவர் பேச, அங்கு மௌனம்.

“நான் பேசியதெல்லாம் அவன் கிட்ட சொல்லி பிரச்சனையை கிளப்பாம, என் மகனை சந்தோஷமா வாழ விடு” அவர் கூற, “அம்மா, வேற எதுவும் இருக்கா?” என்று கெளதம் கேட்க, கௌதமின் தாயார் இப்பொழுது மௌனித்தார்.

“அம்மா, நீங்க சொன்னதெல்லாம் நான் அப்படியே மதுமதி கிட்ட சொல்லிடுறேன். என்கிட்டே சொல்ல வேண்டாமுன்னும் சொல்லிடறேன்” அவன் நிதானமாக கூறிவிட்டு அலைபேசி பேச்சை துண்டித்தான். மதுமதி முகத்தில் நமட்டு புன்னகை தோன்ற, “என்ன, எங்க அம்மாவை பார்த்தா சிரிப்பா இருக்கா?” அவன் முறைத்தான் போலிக் கோபத்தோடு.

“நான் குடிச்சிருப்பேனு நீங்க நினைக்குறீங்களா” அவள் கேட்க, அவன் அவள் அருகே அமர்ந்து அவள் தோள் மீது கைபோட்டு அவளை ஆழமாக பார்த்தான்.

“குடிச்சிருக்க மதுமதி. ஆனால், எப்படின்னு தான் யோசிக்குறேன்? அன்னைக்கு விபத்து நடந்ததுக்கு அப்புறம் என்ன நடந்ததுனு யோசிச்சி பாரேன்” அவன் கூற, “நான் அந்த பொண்ணு விழுந்ததும் பதட்டமா இறங்கினேன். அப்ப அங்க கூட்டம் கூடுச்சு. கொஞ்ச நேரம், அங்க நின்னுட்டு பதட்டம் தணிய தண்ணீர் குடிச்சேன்” அவள் கூற, “தண்ணீர் யார் கொடுத்தாங்க?” அவன் கேள்வியாக நிறுத்தினான்.  

“யாரும் கொடுக்கலை. நான் வைத்திருந்த பாட்டில் தான்.” அவள் உறுதியாக கூறினாள். “அங்க தான் ஏதாவது தப்பு நடந்திருக்கணும்” அவன் கூற, “என் பாட்டில் தண்ணீர் தானே? அப்புறம் எப்படி தப்பு நடந்திருக்கும்?” அவள் அவனை யோசனையாக பார்த்தாள்.

“எல்லாம் நடக்கும். கூட்டம் கூடி இருக்கு. ஆனால், உனக்கு அங்க சாட்சி சொல்ல யாருமில்லை. கேமரா பதிவும் சரியா இல்லை” அவன் உதட்டை சுளித்தான்.

“அன்னைக்கு தண்ணீர் எப்படி இருந்ததுன்னு நியாபகம் இருக்கா?” அவன் கேட்க, “அன்னைக்கு பதட்டத்தில் எனக்கு எதுவுமே தெரியலை. அப்படியே தெரிஞ்சிருந்தாலும், அதெல்லாம் இப்ப நியாபகம் இருக்காது” அவள் நொடித்து கொள்ள, “எதையாவது சொல்லி சொல்லி என்கிட்டே சண்டை போட மட்டும் எல்லாம் நியாபகம் இருக்கா?” அவன் சிடுசிடுத்தான்.

“உங்க சம்பந்தப்பட்ட விஷயங்களை மறக்க முடியாம போறது தானே என் பெரிய பிரச்சனை” அவள் முகம் திருப்ப, அவன் அவள் முகத்தை தன் பக்கம் திருப்பினான்.  அவன் முகத்தில் மெல்லிய தென்றல் தீண்டிய உணர்வு.

“அந்த பொண்ணை உனக்கு எங்கயாவது பார்த்த மாதிரி, இல்லை தெரிந்த பொண்ணு மாதிரி…” அவன் வினவ, “இல்லைங்க… என்னால் சில விஷயங்கள் உறுதியா சொல்ல முடியும். அந்த பெண்ணை எனக்கு தெரியவே தெரியாது. அந்த பெண் வேணுமின்னே என் வண்டியில் வந்து விழலை. அவ குடிச்சிருந்தா. தள்ளாட்டத்தில் சுதாரிக்க முயற்சி பண்ணினா. நானும் சுதாரித்தேன். அதனால் தான் அங்க விபத்து நடக்கலை” மதுமதி கூற,  

“அப்ப ஒரு விஷயம் உறுதி ஆகுது மதும்மா. அன்னைக்கு உன்னை ஏதோ பண்ண யாரோ உன்னை ஃபாலோ பண்ணிருக்காங்க. எதேச்சலா நடந்த விபத்தை முழுசா அவங்களுக்கு சாதகமா பயன்படுத்திக்கிட்டாங்க. அவங்க தான் உன் தண்ணீர் பாட்டிலில் எதையோ கலந்திருக்கணும். அது தான் டெஸ்ட் ரிசல்ட் நமக்கு சாதகமா இல்லை” அவன் கூற, “வீடியோ ரெகார்டிங்க்ல…” மதுமதி ஆரம்பிக்க, அவன் மறுப்பாக தலையசைத்தான்.

“அதுல எதுவுமே தெளிவா இல்லை. அது எதுக்கும் பயன்படாது” அவன் தன் நமட்டை கடித்தபடி மறுப்பாக தலையசைத்தான்.

“அந்த பொண்ணு…” மதுமதி ஆரம்பிக்க, “அது யாருன்னு விசாரிக்கணும். இவங்க கூட்டாளியா இருந்தா, காசை வாங்கிட்டு இதை பண்ணிட்டு இப்ப தலை மறைவா இருக்கணும்.” அவன் கூற, “ஒருவேளை இவங்க ஆளா இல்லைனா?” மதுமதி கவலை தோய்ந்த குரலில் முகத்தில் அச்சத்தோடு கேட்டாள்.

அவன் அவள் தலையை அசைத்து, “பயப்படாதா, அப்படி எல்லாம் அந்த பெண்ணை ஒன்னும் பண்ணிருக்க மாட்டாங்க” அவன் உறுதியாக கூறினான் .

“எப்படி சொல்லறீங்க? அவள் கேட்க, அவனுக்கு விக்கல் எடுத்தது. அவள் மடமடவென்று அவனுக்கு தண்ணீர் எடுக்க சமையலறை நோக்கி சென்றாள். ‘இங்கையே தண்ணீர் அவ எதுக்கு இப்ப அங்க போனாள்?’ அவன் அவள் அக்கறையை எண்ணி புன்னகைக்க, அங்கு குளிர்சாதனப்பெட்டியில் அவள் பார்த்த காட்சியில் அவள் உடல் நடுங்கியது.  

சட்டென்று, அங்கிருந்த பாட்டில்களை மடமடவென்று எடுத்து வெளியே வீசினாள். அந்த உயர்ரக கண்ணாடி பாட்டில்கள் சிதறி உடைந்தது.  அதிலிருந்த அனைத்தும் வெளியே வழிந்தோடியது. அங்கு எழுந்த சத்தத்தில், கெளதம் அங்கு விரைந்து சென்றான்.  

அந்த காட்சியை பார்த்த அவன், “மதுமதி…” கர்ஜித்தபடி கையோங்க, “அடிங்க… அடிங்க… இது தானே நீங்க” அவள் முகத்தில் அடித்துக்கொண்டு அங்கு அமர, அவன் கோபம் பன்மடங்காக ஏறியது.  

‘இப்ப என்ன நடந்திருச்சுன்னு இப்படி பண்ணிக்கிட்டு இருக்கா?’ கெளதம் அவளை வெறுப்போடு பார்க்க, அவர்கள் வீட்டின் முன் பக்கம் தீ பிடிக்க ஆரம்பித்தது. இருவரும் பற்ற ஆரம்பித்த நெருப்பை கவனிக்கவில்லை.

 கவனமாக செயலாற்றிய அவன் கவனம் முழுதும்  இப்பொழுது அவன் மனைவியின் பக்கம் இருந்தது.

மது… மதி! வருவாள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!