Maya Nadhisuzhal 34

Maya Nadhisuzhal 34

மாயநதிச்சுழல்

25 மாதங்கள் கழித்து….

மதிமாறனின் வாழ்க்கை அந்த பெங்களூர் தினத்திற்குப் பிறகு வெகுவாக மாறிப் போயிருந்தது. “ஒரு பொண்ணு எப்படி ஏமாத்தியிருக்கா…இதுல பெரிய போலீஸாம்… ப்ரமோஷன் வேறையாம்..”என வீட்டினரின், முக்கியமாக அன்னையின் ஏசல் பேச்சுகளும், கிண்டல் பேச்சுகளும் கேட்டு சகிக்காமல் போனவன், வீட்டிற்குச் செல்வதை வெகுவாக குறைத்துக் கொண்டான்.

“அமுதசுரபி” கேஸின் மூலமாக, நிறைய பப்ளிசிட்டியும், இத்தனை வருடங்களாக நடந்த கடத்தல்களை கண்டுபிடித்தவன் என்ற பெயரும் புகழும் மதிமாறனுக்கு வாய்த்தது. குற்றவாளிகளைப் பிடிக்க இயலாமல் போனாலும், முழு மூச்சாக வேலை செய்து, முடிந்த வரையில் ஆதாரங்களை சமர்பித்ததற்காக பாராட்டுகள் குவிந்தன. ஒவ்வொரு முறை யாரேனும் பெருமையாக தன்னைப் பேசுவதைக் கேட்கும் போது, “இது நான் கண்டுபிடிக்கலைங்க. பாராட்டெல்லாம் அந்த சுரபிக்குத்தான் போகணும்”என மனதிற்குள் எண்ணிக் கொள்ளவான். உண்மையாக அவனாக இந்த கேஸில் எதையும் கண்டு பிடிக்கவில்லை என்ற எண்ணம் வெகுவாக மதிமாறனின் மனதை ஆக்கிரமித்திருந்தது. அவனது இந்த எண்ணத்தை, தன்னடக்கம் என மேலதிகாரிகள் புகழவும் செய்தனர்.

அவ்வப்போது, தனிமையான நேரங்களில் தலை தூக்கும் சுரபியின் நினைவுகளை எண்ணிப் பார்த்துக் கொள்வான். அவளுடன் தன் வீட்டில் கழித்த அந்த இனிமையான நான்கு தினங்களில் அவன் மனதில் தோன்றிய நிறைவும் திருப்தியும் எப்போது நினைத்தாலும் மதிமாறனின் நெஞ்சை நிறைத்துவிடும். “பொண்ணு பார்க்கட்டுமா தம்பி”என வீட்டிலிருந்து அடிக்கடி தொல்லைகள் கிளம்பும். மதி வேண்டாம் என கூறும் நேரங்களில் “இன்னமும் அந்த சிறுக்கியை நினைச்சுட்டு இருக்கேன்னு சொன்ன, உன்னை வெட்டி போட்டிருவேன்…”என அம்மாவின் மிரட்டல்களை கண்டுகொள்ள மாட்டான். “இப்போதைக்கு வேண்டாம். கொஞ்ச நாள் போகட்டும்”என்று தட்டிக் கழிக்கவே முயற்சி செய்வான்.

“இன்னமும் அந்த பொண்ணையே நினைச்சுட்டு இருக்கறது நல்லதில்ல மதி. அவ நல்லவளா இருந்து, திரும்பி வருவான்னு நிலைமை இருந்தா கூட நீ காத்திருக்கறதில ஒரு நியாயம் இருக்குப்பா. இது கை மீறின விஷயம்பா. அப்படியே அவ திரும்பி வந்தாலும், உன்னால உன் வேலையை விட்டுட்டு, அவளை குற்றவாளியாப் பார்க்காம மனைவியா ஏத்துக்க முடியுமா சொல்லு. சட்டத்துக்கு வேணா அவ குற்றவாளின்னு நிரூபிக்க எந்த சாட்சியும் இல்லாம போகலாம்.”

“ ஆனா, அவ பண்ணது எல்லாமே உனக்குத் தெரிஞ்சும் நீ அவளுக்காக காத்திருக்க கூடாதுப்பா. நாங்க பார்க்கற பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோ. நடந்ததை எல்லாம் கெட்ட கனவா நினைச்சு மறந்திடு”என பல்வாறாக அன்னையும், தந்தையும் எடுத்துச் சொல்லி, மதிமாறனின் மனதை ஒருவாறு மாற்றியிருந்தனர். அம்மா அப்பாவின் வற்புறுத்தலுக்குகாக, ஒன்றுவிட்ட மாமன் மகளான லாவண்யாவை மணந்து கொண்டான்.

திருமணத்திற்கு முன்னர் லாவண்யாவுடன் அவ்வளவாக பேசி, புரிந்து கொள்ளவில்லை. முதலிரவுக்காக அந்த பெரிய வீட்டின் மாடி அறையில் லாவண்யாவிற்காக காத்திருந்த போது, என்றைக்கும் இல்லாமல் சுரபியின் நினைவுகள் வெகுவாக அலைகலைத்தன. பால்கனியை திறந்துவிட்டு, வெளிக்காற்றில் நின்றிருந்தவனுக்கு, அந்த அறையின் ஓரத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அவனது திருமணப்பரிசுப் பொருட்கள் கண்களில் பட்டன. அதிலும், மற்ற சரிகை காகிதங்களில் இருந்து சற்றே வேறுபட்டு, மெல்லிய இள மஞ்சள் நிற பார்ச்மெண்ட் காகிதம் சுற்றப்பட்ட அந்த பெட்டி மதிமாறனின் கவனத்தை பெரிதாக ஈர்த்தது.

மெல்ல அந்த காகிதப் பெட்டியை கையில் எடுத்தவன், பெட்டியை சுற்றும் முற்றும் திருப்பிப் பார்த்தான். யார் அனுப்பியிருக்கின்றனர் என்ற தகவலோ, வாழ்த்து அட்டையோ இல்லை. அதனாலேயே சற்றே ஆர்வம் தூண்டப்பட, வேகமாக அந்த அட்டையைப் பிரித்தவனுக்கு முதலில் ஒரு சிறு, ஆச்சர்யமும், அதனுடனேயே சின்ன சிரிப்பும் எழுந்தது.

அந்த பெட்டியில் இருந்து அழகிய சிறிய ரக போன்சாய் மரம் ஒன்று தன், பச்சை நிற இலைகளுடன் மெல்ல காற்றில் அசைந்து கொண்டிருந்தது. அதன் கீழே ஒரு சிறிய வாழ்த்து அட்டை, அதில், “ஹேப்பி ஃபார் யு ஏ.சி.பி…ஹேப்பி மேரீட் லைஃப்..”என்று கிறுக்கலான கையெழுத்தில் வாழ்த்தும், அதன் கீழே “ராகினி”என்ற எழுத்துக்களும் மிளிர்ந்தன. மதிமாறன் புன்னகை மாறாத முகத்துடன், அறைக்கதவை தட்டிக் கொண்டு உள்ளே நுழைந்த லாவண்யாவை, வரவேற்றான்.

திருமணம் நிட்சயமானது முதல் சரியாக பேசிப் பழகாத கணவன், இன்று முதல் தடவையாக புன்னகை சிந்தும் முகத்துடன் தன்னைப் பார்ப்பதைக் கண்ட லாவண்யாவிற்கும் மனதில் நிம்மதி பொங்கியது. அதே சந்தோஷத்துடன் அருகில் வந்தவள், அவன் கையில் பிடித்திருந்த பொன்சாய் மரத்தின் மீது பார்வையை செலுத்தினாள். “ஆட, போன்சாய் மரம்…எனக்கு ரொம்ப பிடிக்கும்ங்க…நான் கூட எங்க வீட்டில ரெண்டு மூனு மரம் வச்சிருக்கேன்.. நீங்க கையில வச்சிருக்கற வெரைட்டி பேரு என்ன? ஃபாரின் மரம் மாதிரி இருக்கு?” என்று ஆர்வமாக வினவிய லாவண்யாவை சின்ன சிரிப்புடன் ஏறிட்டவன்.

“என்ன மரம்? எந்த ஊர்ல இருக்கு? யார் அனுப்பிச்சான்னு ஆராய்ச்சிக்கு இனிமே அவசியம் இல்ல லாவண்யா. உனக்கு இஷ்டம்னா இந்த மரத்தையும் உன் செடிகளோட வச்சு வளர்த்திக்கோ. எனக்கு செடி வளர்க்கலாம் இண்டிரெஸ்ட் இல்லை…”என்று மொழிந்தவனின் மனம் எதனாலோ நீண்ட நாட்களுக்குப் பிறகு அமைதியானது போல் ஒரு உணர்வு ஆட்கொண்டது. சற்றே நிறைவாக உணர்ந்தவன், நீண்ட நாட்களுக்குப் பிறகு சுரபியின் நினைவுகளில் இருந்து விடுபட்டுவிட்டது போல் எண்ணினான்.

தன் புது மனைவியையும். தனது எதிர்காலத்தையும் நோக்கி செல்வது போலவும், அதனுடனேயே சுரபியின் நினைவுகளை, மனது சஞ்சலப்படுத்தா வண்ணம் எடுத்துக் கொண்டு செல்வது போலவும் தோன்றியது. இந்த நினைவுகளுடன், மதிமாறன் லாவண்யாவைப் பார்த்து புன்னகைக்க, அவளும் இதழ்பிரிக்காமல் புன்னகை பூத்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!