Mayam-1

பறவைகளின் கீச்சொலியும், வண்டுகளின் ரீங்கார சத்தமும் செவிகளில் இன்னிசையாக வந்து ஒலிக்க அதிகாலை நேரத்து தென்றல் காற்று வசந்தபுரம் கிராமத்தை ரம்மியமாக்கி கொண்டிருந்தது.

பெயருக்கேற்றாற் போல வசந்தபுரம் கிராமம் எப்போதும் வாடாத மரங்களையும், வற்றாத குளங்களையும், ஏரிகளையும் கொண்ட ஓர் அழகிய கிராமம்.

எந்தப்பக்கம் திரும்பினாலும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சைப் பசேலென்ற வயல் நிலங்களும், ஊர்க் காவலர்கள் போல செழித்து வளர்ந்து நிற்கும் ஆல் மற்றும் தேக்கு மரங்களும் அந்த ஊரின் கம்பீரம் என்றே சொல்ல முடியும்.

வசந்தபுரம் கிராமம் முழுவதும் எளிமையான வீடுகள் நிறைந்து இருக்க அங்கே இடையிடையே அங்கொன்றும், இங்கொன்றுமாக ஒரு சில அடுக்கு மாடி வீடுகளும் தென்பட்டது.

அவ்வாறு தென்பட்ட அடுக்கு மாடி வீடுகளிலேயே சற்று கம்பீரத்தோடு பழைமை மாறாமல் சுற்றிலும் மரங்களுக்கு நடுவில் ஒரு அரண்மனையின் தோற்றத்தோடு வீற்றிருந்தது நாயகி இல்லம்.

அந்த இரட்டை மாடி வீட்டின் முற்றத்தில் இருந்த தூண்கள் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு தேக்கு மரத்தையும் தனித்தனியாக பிடுங்கி வந்து வைத்தாற் போல அத்தனை உயரமாகவும், தடிப்பாகவும் பார்ப்போரை வியந்து பார்க்க வைக்கும் தோற்றத்தில் இருந்தது.

வீட்டை சுற்றிலும் ஒரு புறம் முல்லை, மல்லிகை மற்றும் நந்தியாவட்டை பூக்கள் கொடியாக பந்தலின் மேல் படர்ந்து இருக்க இன்னொரு புறம் குளம் போன்ற தாமரை வடிவ தாடகத்தினுள் தாமரை மற்றும் அல்லி மலர்கள் மலர்ந்து நிறைந்து இருந்தது.

வீட்டின் பின்புறத்தில் ஒருபுறம் துளசி, அதிமதுரம் போன்ற மூலிகை செடிகள் நேர்த்தியாக நடப்பட்டு இருக்க அதிலிருந்து சற்று தள்ளி பல வண்ணங்களில் ரோஜாப் பூக்களும், செம்பருத்தி, சாமந்தி மற்றும் கனகாம்பரம் பூக்களும் காலை நேரத்து தென்றல் காற்றுக்கு ஏற்றாற் போல அசைந்தாடிக் கொண்டிருந்தது.

இயற்கை எழில் தவழ வீற்றிருந்த அந்த நாயகி இல்லத்தின் முற்றத்தில் முல்லை மற்றும் மல்லிகை நிறைந்த தட்டோடு வந்து அமர்ந்தார் அந்த நாயகி இல்லத்தின் நாயகியான அறுபது வயது மதிக்கத்தக்க தெய்வநாயகி.

பழைமை மாறாமல் கம்பீரத்தோடு நின்று கொண்டிருப்பது அந்த வீடு மட்டுமல்ல தெய்வ நாயகியும் தான் என்பது அவரது தோற்றத்திலும், நடவடிக்கைகளிலும் நன்றாகவே தெரிந்தது.

“ஏய் தாமரை! இன்னும் சமையற்கட்டுல என்ன பண்ணிட்டு இருக்க? ஒரு காபி போட உனக்கு இவ்வளவு நேரமா?” அதட்டலாக அதே நேரம் கம்பீரத்தோடு ஒலித்த தெய்வநாயகியின் குரல் கேட்ட அடுத்த ஐந்தாவது நிமிடம் முகத்தில் பூத்த வியர்வைத் துளிகளைத் துடைத்துக் கொண்டே வந்து நின்றாள் ஒரு இளம்பெண்.

“பாட்டி காபி” தயங்கிக் கொண்டே காபி டம்ளரை நீட்டியவளைத் திரும்பி பார்த்தவர்

“ஒரு காபி போட உனக்கு இவ்வளவு நேரமா?” என்று கேட்க அவளோ தலை குனிந்து பேசாமல் நின்றாள்.

“ஏதாவது கேட்டால் போதும் உடனே தலையை தொங்க போட்டுடவ ஆனா கதை பேச மட்டும் அந்த வாய் பக்கத்து ஊரு வரைக்கும் போகும் சரி சரி முகத்தை அப்படி வைச்சுக்காமல் டம்ளரை இப்படி வைச்சுட்டு போய் அனு எழுந்துரிச்சுட்டாளானு பாரு”

“சரி பாட்டி” என்றவாறே டம்ளரை அவரருகில் வைத்தவள் விட்டால் போதும் என்பது போல வீட்டிற்குள் ஓடிச் சென்றாள்.

அவசரமாக வீட்டிற்குள் ஓடிச் செல்பவளைப் பார்த்து
“நல்ல பொண்ணு இவ” என மனதிற்குள் நினைத்து சிரித்துக் கொண்டே மீண்டும் தன் வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினார் தெய்வநாயகி.

“அக்கா! அனுக்கா!” அறைக் கதவைத் தட்டி விட்டு சிறிது நேரம் காத்து நின்ற தாமரை அறையில் இருந்து யாரும் வெளிவராமல் இருக்கவே மீண்டும் அறைக் கதவைத் தட்டினாள்.

“வர்றேன் தாமரை! ரெடி ஆகிட்டு இருக்கேன் கொஞ்சம் இரு”

“அக்கா பரவாயில்லை நீங்க பொறுமையாகவே வாங்க பாட்டி தான் நீங்க எந்துரிச்சுட்டீங்களானு பார்க்க சொன்னாங்க அது தான் நான் வந்தேன் நான் போய் நீங்க எந்திரிச்சுட்டீங்கனு சொல்லிட்டு வர்றேன்”

“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் இரு நானும் வர்றேன் இரண்டு பேரும் ஒண்ணாவே போகலாம்” என்றவாறே அந்த அறைக்கதவைத் திறந்து கொண்டு வந்தவளை வியப்பாக பார்த்துக் கொண்டு நின்றாள் தாமரை.

இளஞ்சிவப்பு நிற பாவாடை, தாவணி அணிந்து காதில் ஒட்டினாற் போல சிறிய ஜிமிக்கி, கழுத்தில் மெல்லிய ஒற்றை செயின், இரு கைகளிலும் அணிந்து இருக்கும் ஆடைக்கு ஏற்றாற்போல் இளஞ்சிவப்பு நிற வளையல்கள், வில் போன்ற புருவங்களுக்கு மத்தியில் சிவப்பு நிற ஒற்றை பொட்டு என எல்லாம் சேர்ந்து அந்த சந்தன நிற தேகத்தை ஜொலிக்க செய்ய ஊரில் உள்ள அத்தனை பேரையும் ஒரே நொடியில் கவிழ்த்து வீழ்த்தும் புன்னகையோடு வந்து நின்றவளை மேலிருந்து கீழாக பார்த்த தாமரை
“அனுக்கா நீங்க ஒவ்வொரு நாளும் ரொம்ப அழகாகிட்டே போறீங்கக்கா! நானே உங்க மேல திருஷ்டி பட வைச்சுடுவேன் போல இருக்குக்கா பாட்டி கிட்ட சொல்லி உங்களுக்கு திருஷ்டி சுற்றி போட சொல்லணும் அம்மாடி! எவ்வளவு அழகு?” வியந்து கொண்டே கூற

அவள் தோளில் செல்லமாக தட்டியவள்
“போதும் போதும் உன் ஐஸை தினமும் கேட்டு கேட்டு எனக்கு ஜலதோஷம் வந்துடப் போகுது” என்று விட்டு முன்னே நடந்து செல்ல சிரித்துக் கொண்டே அவளை பின் தொடர்ந்து சென்றாள் தாமரை.

அனுஸ்ரீ 25 வயதை இன்னும் ஒரு சில மாதங்களில் நெருங்க போகும் அழகிய இளமங்கை, தெய்வநாயகியின் பாசத்துக்குரிய செல்ல பேத்தி.

என்னதான் நகரத்தில் பிறந்து வளர்ந்தவளாக இருந்தாலும் அவள் தோற்றத்தில் எப்போதும் ஒரு கிராமத்து சாயல் இருக்கவே செய்யும்.

தான் பிறந்து வளர்ந்த நகரத்து வாழ்க்கையை விட அவளுக்கு எப்போதும் தன் பூர்வீக கிராமத்தின் மீது ஒரு தனிக் காதல் உண்டு.

அதனால் என்னவோ விஸ்காம் படித்து முடித்து விட்டு வெளிநாட்டில் கிடைத்த வேலையை வேண்டாம் என்று ஒதுக்கி விட்டு தன் பாட்டியோடு செழுமை பொங்கும் வசந்தபுரத்தில் தங்கி இருக்கிறாள்.

“குட் மார்னிங் மை டியர் பாட்டி” புன்னகையோடு கூறி கொண்டு தெய்வநாயகியின் முன்னால் அனுஸ்ரீ வந்து நிற்க அவள் கைகளை பற்றி தன்னருகில் அமரச் செய்தவர் அத்தனை நேரமாக தான் கட்டிக் கொண்டு இருந்த மல்லிகை மற்றும் முல்லை பூக்களை அவள் தலையில் வைத்து விட்டார்.

“எதற்கு பாட்டி இதெல்லாம்?” அனுஸ்ரீ அவர் தலையில் வைத்த பூக்கள் வாசனையை உள்ளிழுத்துக் கொண்டே கேட்கவும்

அவள் தலையை ஆதரவாக வருடிக் கொடுத்தவர்
“வயசு பொண்ணு தலை நிறைய பூ வைத்து இருந்தால் தான் அழகு” என்று கூற

அவர்கள் அருகில் நின்ற தாமரையோ
“அனுக்கா எப்படி பார்த்தாலுமே அழகு தானே பாட்டி” எனவும் தெய்வநாயகி சட்டென்று அவளை திரும்பி பார்த்தார்.

அவர் தன்னை பார்ப்பதை கண்டு கொண்டவள் அவசரமாக உள்ளே ஓடிச்சென்று விட அவர்கள் இருவரையும் பார்த்து சிரித்துக் கொண்ட அனுஸ்ரீ
“பாட்டி அவதான் விளையாட்டு பொண்ணுனு தெரியும் தானே அப்புறம் எதுக்கு சும்மா சும்மா அவளை பார்த்து பயந்து ஓட வைக்குறீங்க?” என்று கேட்க

தெய்வநாயகியோ
“அவளை பற்றி எனக்கு தெரியாதா? சின்ன வயதிலிருந்தே அவ இங்கே என் கூட தானே இருக்கா? அது என்னவோ தெரியல அவளை சீண்டிப் பார்க்குறதுல எனக்கு ஒரு ஆனந்தம் நான் ஏதாவது சொன்னா தலை தெறிக்க ஓடுறதுல அவளுக்கு ஒரு ஆனந்தம்” என பதிலளிக்கவும் அவளோ புன்னகையோடு அவர் தோளில் வாகாக சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.

“அனுக்கா கோவிலுக்கு போகணும்னு சொன்னீங்களே போயிட்டு வரலாமா?” பூஜைத் தட்டில் கோவிலுக்கு கொண்டு செல்வதற்கான பொருட்களை எல்லாம் அடுக்கியபடி தாமரை அவளெதிரில் வந்து நிற்க

“ஆமா தாமரை போகணும் தான் நல்ல வேளை ஞாபகப்படுத்துன இல்லேனா இப்படியே பேசிட்டு இருந்துருப்பேன் சரி பாட்டி நாங்க கோவிலுக்கு போயிட்டு வர்றோம் அதற்குள்ள நீங்க சமைக்க போறேன்னு சொல்லிட்டு கிச்சன்க்கு உள்ளே போய் அதை, இதை உருட்ட கூடாது சரியா? சமையல் வேலையை எல்லாம் நாங்க வந்து பார்த்துக்குவோம்” தெய்வநாயகியின் கன்னத்தை பிடித்து ஆட்டிய படி சொல்லி விட்டு அனுஸ்ரீ தாமரையோடு இணைந்து நடந்து செல்ல அவரோ கண்கள் கலங்க தன் பேத்தியை பார்த்து கொண்டு இருந்தார்.

தன் மனதில் உள்ள பாரங்கள் எல்லாம் எப்போது விலகும் என்று அவருக்கு தெரியாது.

ஆனால் ஒரு நாள் நிச்சயமாக அவை எல்லாம் விலகும் என்ற நம்பிக்கையில் அவர் தன் வாழ்நாளை கழித்து கொண்டு இருக்கிறார்.

“அனுக்கா அங்க பாருங்க அந்த கொள்ளி வாய் கண்ணன் அந்த அரசமரத்துக்கு பக்கத்தில் நின்னு உங்களையே பார்த்துட்டு இருக்கான் அவன் கண்ணில் கொள்ளியை வைக்க என்னமா பார்த்துட்டு இருக்கான்” வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த தாமரை சற்று தள்ளி அரசமரம் ஒன்றின் அருகில் நின்று இவர்களையே பார்த்து கொண்டு நின்ற ஒரு ஆடவனைப் பார்த்து திட்டிக் கொண்டே வர

அவள் கையை பிடித்து கொண்ட அனுஸ்ரீ
“தாமரை உன் கிட்ட எத்தனை தடவை சொல்லி இருக்கேன் இப்படி எல்லோருக்கும் திட்ட கூடாதுனு அவன் அவன் பாட்டுக்கு நின்னுட்டு போயிடுவான் நம்ம வேலை என்ன? கோவிலுக்கு போறது தானே? அதை மட்டும் பார்ப்போம் தேவையில்லாமல் ஊர் வம்பு நமக்கு எதற்கு? அவன் ஒரு ரௌடி அவன் கிட்ட போய் நாம வம்பு வளர்க்கணுமா? சொல்லு? எதையும் கண்டுக்காமல் பேசாமல் வா” எனவும்
தாமரையோ

“ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு பொறுமை ஆகாதுக்கா” என சலிப்போடு கூற பதிலுக்கு அவளை பார்த்து புன்னகத்து செய்தவள் அமைதியாக நடந்து சென்றாள்.

“என்னா தாமரை! சௌக்கியமா?” அந்த ஆடவன் வேண்டுமென்றே தாமரையைப் பார்த்து கேட்க பதிலுக்கு அவள் கோபமாக வாய் திறக்க போக அவள் கை பிடித்து அனுஸ்ரீ வேண்டாம் என்று தலை அசைத்தாள்.

தன் கண்களை ஒரு முறை சிறிது நேரம் மூடி திறந்து கொண்டவள்
“கண்ணன் ஐயா! நீங்க இந்த ஊரில் இருக்கும் போது எங்க சௌக்கியத்திற்கு என்ன குறை வரப்போகுது? வீதிக்கு வீதி, சந்திக்கு சந்தி நீங்க அய்யனார் சாமி இந்த ஊரில் இருக்குற பொண்ணுங்களுக்கு எல்லாம் ஒரு காவல் காரன் மாதிரி ராத்திரியும், பகலும் மழை, வெயில் எல்லாம் உங்க சொட்டை தலையில் இல்லை இல்லை அதாவது உங்க மேல சொட்டு சொட்டாக விழுந்தாலும் அசராமல் இருந்து பாதுகாப்பாக இருக்கும் போது எங்களுக்கு என்ன குறை வரப்போகுது சொல்லுங்க” எனவும் அவளருகில் நின்ற அனுஸ்ரீயோ தன் சிரிப்பை வெகு சிரமப்பட்டு அடக்கி கொண்டு நின்றாள்.

“கண்ணன் ஐயா! இப்போ நாங்க கோவிலுக்கு போகலாமா?” தாமரை சிரித்த முகமாக பணிவோடு கேட்பது போல கேட்க அவனோ சரியென்று தலை அசைத்து விட்டு மற்றைய புறமாக நடந்து செல்ல தொடங்கினான்.

“இவ என்ன புகழ்ந்து பேசுனாளா? இல்லை கேவலப்படுத்தி பேசுனாளா? புரியலயே” தலையில் தட்டி கொண்டே நடந்து சென்றவனைப் பார்த்து வாய் விட்டு சிரித்தவள்

“பார்த்தீங்களாக்கா? அந்த கொள்ளி வாய் கண்ணனையே குழப்பி விட்டுட்டேன் யாரு கிட்ட வம்பு வளர்க்க பார்க்குறான்? நாங்க எல்லாம் ரொம்ப விவரமானவங்க” என்று கூற

ஆமோதிப்பாக தலை அசைத்த அனுஸ்ரீ
“ஆமா ஆமா ரொம்ப விவரம் தான்” என்றவாறே அவளுடன் இணைந்து நடந்து சென்றாள்.

“அக்கா நான் ஒரு விஷயம் கேட்டால் தப்பாக எடுத்துக்க மாட்டீங்களே?”

“என்ன பூஜை தட்டில் இருக்குற வாழைப்பழம் வேணுமா?”

“அய்யோ! அதெல்லாம் வேணாம்க்கா அப்படியே பழம் வேணும்னா நான் மரத்தில் இருந்தே பறிச்சு எடுத்துக்குவேன்”

“அது சரி! அப்போ வேற என்ன கேட்கப்போற?”

“நீங்க எவ்வளவு பெரிய படிப்பு படிச்சு இருக்கீங்க! பாட்டி நீங்க பாரின் எல்லாம் போய் வேலை பார்ப்பீங்கனு எங்க கிட்ட எல்லாம் சொல்லி இருந்தாங்க ஆனா நீங்க அதெல்லாம் வேணாம்னு இங்க கிராமத்துக்கு வந்து இருக்கீங்க ஏன்க்கா?”

“என்னைப் பொறுத்தவரை சிட்டி லைஃப் எல்லாம் ஒரு மெஷின் வாழ்க்கை தாமரை காலையில் ஆறு மணிக்கு எழும்பி, மடமடனு எதையோ ஒண்ண சமைத்து, அவசர அவசரமாக ரெடி ஆகி, அந்த சமைச்சு வைச்ச ஏதோ ஒண்ணை அவசரமாக அள்ளி வாயில் போட்டு, ட்ராபிக்கில் பாதி உயிரை இழந்து, கடகடனு ஆபிஸ் போய் அங்கே கண்டவன் கிட்ட ஏச்சு, பேச்சு வாங்கி, திரும்ப ஈவ்னிங் வீட்டுக்கு வந்து டின்னருக்கு ஏதாவது ஒண்ணை வயிற்றுக்கு அள்ளி போட்டு மறுபடியும் அடுத்த நாள் இதே மாதிரி நடக்கும் இந்த இருபத்தைந்து வருஷ வாழ்க்கையில் இந்த ஒரு வருஷமாக தான் நான் நிம்மதியாக இருக்கேன் எனக்கு இந்த கிராமத்து லைஃப் ரொம்ப பிடிக்கும் தாமரை எந்த டென்ஷனும் இல்லை, எந்த பிரச்சினையும் இல்லை இங்க தோட்டத்து கணக்கு வழக்கு எல்லாம் பார்த்துட்டு ஒரு மனநிறைவான வாழ்க்கை கிடைத்து இருக்கு இதை விட்டுட்டு மறுபடியும் என்னை அந்தப் மெஷின் லைப்க்குள்ள போக எனக்கு ஏனோ இஷ்டம் இல்லை”

“நீங்க சொல்றதும் ஒரு வகையில் சரி தான்க்கா என்ன இருந்தாலும் கிராமத்து வாழ்க்கை மாதிரி எதுவும் சந்தோஷத்தை தராது ஆனா அனுக்கா ஒரு வேளை உங்களுக்கு மாப்பிள்ளை பார்த்து அவர் கல்யாணம் பண்ணி உங்களை அந்த சிட்டிக்கு கூட்டிட்டு போயிட்டாங்கனா என்ன பண்ணுவீங்க?” தாமரையின் கேள்வியில் சட்டென்று அந்த இடத்திலேயே நின்றாள் அனுஸ்ரீ.

“என்ன ஆச்சுக்கா? நான் ஏதாவது தப்பாக சொல்லிட்டேனா?” கவலையுடன் கேட்டவளைப் பார்த்து புன்னகத்து கொண்டவள்

“நான் தான் கல்யாணமே பண்ணிக்கப் போறது இல்லையே!” என்று விட்டு முன்னே கோவிலுக்குள் நடந்து செல்ல

தாமரையோ
“என்ன அக்கா இப்படி சொல்லுறீங்க?” என அதிர்ச்சியாக கேட்டுக் கொண்டே அவளை பின் தொடர்ந்து சென்றாள்.

“கிராமத்தை விட்டு போகப் பிடிக்கலேனா கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னா சொல்லுவீங்க?” தாமரை கவலையுடன் கேட்கவும்

அவளை பார்த்து மறுப்பாக தலை அசைத்த அனுஸ்ரீ
“நான் அதற்காக கல்யாணம் வேண்டாம்னு சொல்லல எனக்கு கல்யாணத்தின் மேல் நம்பிக்கை இல்லை அவ்வளவு தான்” என்று கூறினாள்.

“அப்படி எல்லாம் சொல்லாதீங்கக்கா கல்யாணம் பண்ணி எவ்வளவு பேர் சந்தோஷமாக இருக்காங்க எங்க அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி இவ்வளவு ஏன் உங்க பாட்டி, அம்மா, அப்…”

“எங்க அம்மா, அப்பாவா?” விரக்தியான புன்னகையோடு கேட்டவளைப் பார்த்து தாமரை அமைதியாக நின்றாள்.

“எனக்கு கல்யாணத்துக்கு மேல் இருந்த நம்பிக்கை இல்லாமல் போக அவங்களும் தானே காரணம் எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து அம்மா, அப்பா பாசமே தெரியாது அம்மா ஒரு பக்கம் லேடிஸ் கிளப், சமூக சேவைனு போயிடுவாங்க அப்பா எந்நேரமும் ஆபிஸில் தான் அவங்க இரண்டு பேரும் வீட்டுக்கு வர்றதே அதிசயம் அப்படியே வீட்டுக்கு வந்தாலும் ஒருத்தருக்கு ஒருத்தர் சண்டை போட்டுக்கவே நேரம் போதுமா இருக்கும் நான் ஒருத்தி இருக்குறதே அவங்களுக்கு தெரியாது இப்படி ஆளுக்கொரு திசையில் போறவங்க எதற்காக கல்யாணம் பண்ணணும்? எதற்காக குழந்தை பெத்துக்கணும்? சின்ன வயதிலிருந்தே மனதில் பட்ட காயம் இது ஒரு நாளும் ஆறாது எனக்கு என்ன ஒரு சின்ன தேவை வந்தாலும் எங்க வீட்டு வேலைக்காரங்க தான் செய்து தருவாங்க” விரக்தியாக கூறியவள் தோளை தாமரை ஆதரவாக பற்றி கொண்டாள்.

“பட் அவங்க சண்டையில் எனக்கு ஒரு நல்லது நடந்தது அம்மா அடிக்கடி கோவிச்சுக்கிட்டு இங்கே பாட்டி ஊருக்கு என்னை கூட்டிட்டு வருவாங்க ஆரம்பத்தில் அவங்க சண்டையை பார்த்து அழுதழுது வெறுத்து போய் இருந்த நான் அதற்கு அப்புறமாக அவங்க சண்டை போட்டால் எப்போ பாட்டி வீட்டுக்கு கூட்டிட்டு போவாங்கனு ஆவலாக காத்துட்டு இருக்க ஆரம்பிச்சேன்

கிராமத்துக்கு வந்தாலே எனக்கு அவ்வளவு சந்தோஷமாக இருக்கும் ஆனா பாட்டி அம்மா கிட்ட பேசி பேசி அவங்களை சமாதானப்படுத்தி மறுபடியும் ஊருக்கு அனுப்பிடுவாங்க சரி சண்டையில் தான் அவங்க வாழ்க்கை போகும்னு நானும் அதை கண்டுகொள்ளாமல் இருந்தால் காலேஜ் பைனல் இயர் டைம் இரண்டு பேரும் டிவோர்ஸ் பண்ணிகிட்டு ஆளுக்கொரு பக்கம் பிரிந்து போனாங்க என்னை பற்றி ஒரு செக்கன் கூட அவங்க யோசிக்கல என்னை பற்றி அக்கறை இல்லாதவங்க கூட நான் ஏன் இருக்கணும்னு யோசிச்சேன்? ஆனாலும் கடைசியாக ஒரு நம்பிக்கை அது தான் காலேஜ் முடிச்சு ஒரு வருஷம் வரை அங்க ஒரு கம்பெனியில் வேலை பார்த்துட்டே அவங்களை மறுபடியும் ஒண்ணு சேர்க்க ட்ரை பண்ணேன் எப்படியாவது சரி ஆகிடுவாங்கனு நினைத்தேன் எந்த மாற்றத்தையும் காணல

இடையில் வேறு வேறு பிரச்சினை வேற
அந்த நேரம் தான் பாரிஸ் போற ஆஃபர் வந்தது எப்படியும் அவங்க இரண்டு பேரையும் விட்டு போறதுனு ஆகியாச்சு அப்புறம் ஏன் ஏதோ தெரியாத இடத்தில் போய் கஷ்டப்படணும்னு யோசிச்சுட்டு அந்த ஜாப்பை வேண்டாம்னு சொன்ன கையோட பாரின்க்கு அப்ளை பண்ண மற்ற ஜாப் எல்லாவற்றையும் கேன்சல் பண்ணிட்டு இங்கே வந்துட்டேன் இனியும் நான் அந்த ஊருக்கு போகப் போறது இல்லை கடைசி வரை இப்படியே பாட்டி கூட, உன் கூட பேசி சிரித்து சந்தோஷமாக இருந்துட்டுப் போயிடுவேன் அது தான் பல விஷயங்களை மறந்து வாழ சரியான வழி” புன்னகையோடு தாமரையைப் பார்த்து கூறிய அனுஸ்ரீ

“சரி சரி நேரமாச்சு பாட்டி வீட்டில் காத்துட்டு இருப்பாங்க சீக்கிரமாக போய் சமைக்க வேற செய்யணும் வா சாமி கும்பிட்டு அவசரமாக போகலாம்” என்று விட்டு முன்னே செல்ல அடியெடுத்து வைத்து விட்டு

பின்னர் மறுபடியும் அவளின் புறம் திரும்பி
“நான் சொன்னதை எல்லாம் பாட்டி கிட்ட சொல்லி அவங்களை பீல் பண்ண வைச்சுடாதே! சரியா?” என்று கேட்க அவளோ கனத்த மனதோடு சரியென்று தலை அசைத்தாள்.

“குட் கேர்ள்” என அவள் கன்னத்தில் தட்டி விட்டு அனுஸ்ரீ புன்னகையோடு முன்னே நடந்து செல்ல தாமரையோ அவளை எண்ணி பெருமூச்சு விட்டு கொண்டு தன் முகத்தை சரி செய்து கொண்டவாறே அவளைப் பின் தொடர்ந்து சென்றாள்………….

JF. Husna,
B.Sc in Health Promotion,
Rajarata University Of Sri Lanka.