Mayam 12

Mayam 12

காலை நேரம் சூரியன் அப்போது தான் மெல்ல மெல்ல வானில் உயர்ந்து வந்து கொண்டு இருந்தது.

நாயகி இல்லத்தில் திருமணத்திற்கான வேலைகள் எல்லாம் தடபுடலாக ஒரு பக்கம் நடந்து கொண்டு இருக்க மறுபுறம் தோட்டத்தில் உள்ள மரங்களுக்கு எல்லாம் நீர் பாய்ச்சி கொண்டிருந்த அனுஸ்ரீயின் சிந்தனையோ அவளிடம் இருக்கவில்லை.

எதைப் பற்றி யோசிக்கிறோம் என்று தெரியாமலேயே அவள் மனம் முழுவதும் பல்வேறு சிந்தனைகளில் உழன்று கொண்டிருந்தது.

மரங்களுக்கும் உணர்வுகள் உண்டு.

அவையும் நம்மை போலவே சந்தோஷம், துக்கம் என எல்லா உணர்வுகளையும் உணர்ந்து கொள்ள கூடும்.

நாம் சந்தோஷமாக அவற்றோடு பேசிய வண்ணம் வேலை செய்து கொண்டு இருந்தால் மரங்களும் அதை பார்த்து நன்றாக வளரும் அதேநேரம் நாம் கவலையுடன் மரங்களுக்கு சேவகம் செய்தால் அதை பார்த்து அந்த மரங்களும் துவண்டு போகக் கூடும் என்று ஒரு எண்ணம் அவள் மனதில் எப்போதும் உண்டு.

அதனால் என்னவோ தோட்டத்தில் வேலை செய்யும் நேரத்தில் எல்லாம் தன்னுடைய பிரச்சினைகள் எல்லாவற்றையும் அவள் ஒதுக்கி வைத்து விடுவாள்.

ஆனால் இன்று அந்த எண்ணம் மனதில் இருந்தும் அதை கடைப்பிடிக்க முடியாமல் அவள் மனம் சிந்தனை வயப்பட்டு இருந்தது.

ராதாவுடன் அனுஸ்ரீ அன்று இரவு மனம் விட்டு பேசி கிட்டத்தட்ட ஒரு வாரம் கடந்து இருந்தது.

அதன் பிறகு தொடர்ந்து வந்த திருமணத்திற்கான வேலைகளும், இதர வேலைகளும் அவர்களை சூழ்ந்து கொள்ள ராதா, முத்துராமன் மற்றும் தெய்வநாயகி சிறிது நேரம் கூட ஓய்வாக இருக்கக் நேரமின்றி பம்பரமாக சுழன்று வேலைகளை செய்து கொண்டிருந்தனர்.

ராதாவின் மனதில் இருக்கும் விடயங்களை எல்லாம் அறிந்து கொண்ட பின்பும் தன் தாயையும், தந்தையையும் மறுபடியும் ஒரு சந்தோஷமான வாழ்க்கையை நோக்கி எப்படி அழைத்து செல்வது என்பது அனுஸ்ரீ மனதில் நீங்கா குழப்பமாக இருந்து கொண்டு இருந்தது.

அவர்கள் இருவரையும் ஒரு சில நிமிடங்களாவது மனம் விட்டு பேச வைத்து விடலாம் என்று பலமுறை அவள் முயன்றும் அது எதுவும் நடக்கவில்லை.

முத்துராமன் ஓய்வாக இருக்கும் நேரங்களில் ராதா வேலையாக இருப்பார்.

ராதா ஓய்வாக இருக்கும் நேரங்களில் முத்துராமன் வேலையாக இருப்பார்.

இருவருக்கும் ஓய்வு கிடைக்கும் நேரத்தில் அனுஸ்ரீ தூங்கி போய் இருப்பாள்.

கடவுள் கூட தனக்கு சதி செய்கிறாரே என்ற மனத்தாங்கலோடு அவள் நின்று கொண்டிருந்த வேளை
“அக்கா! என்னக்கா பண்ணிட்டு இருக்கீங்க?” என ஆச்சரியமாக கேட்ட வண்ணம் அவள் முன்னால் வந்து நின்றாள் தாமரை.

தாமரையின் கேள்வியில் தற்காலிகமாக தன் சிந்தனையில் இருந்து வெளி வந்தவள்
“பார்த்தா தெரியலயா? மரத்துக்கு எல்லாம் தண்ணீர் ஊற்றிட்டு இருக்கேன்” என்று கூறவும்

அவளைப் பார்த்து வாய் விட்டு சிரித்த தாமரை
“ஏது? தண்ணீயே இல்லாத வாளியை வைத்தா?” என்று கேட்கவும் குழப்பமாக தன் கையில் இருந்த நீர் வாளியை பார்த்தாள் அனுஸ்ரீ.

எப்போது அதில் இருந்த தண்ணீர் எல்லாம் முடிந்தது என்று அவளுக்கு தெரியவில்லை வெற்று வாளி மாத்திரமே அவள் கையில் இருந்தது.

“அய்யோ! கடவுளே!” என தலையில் தட்டி கொண்டவள்

“என்ன பண்ணுறனு கூட தெரியாமல் நான் சுற்றிட்டு இருக்கேன் பாரேன் தாமரை” என்று கூற

அவளை ஆராய்ச்சியாக பார்த்த தாமரை
“அக்கா ஏதாவது பிரச்சனையா?” என்று கேட்டாள்.

“எனக்கு எப்போ தான் பிரச்சினை இல்லாமல் இருக்கு சரி அதை விடு நீ இன்னைக்கு காலேஜ் போகலயா?” தற்காலிகமாக பேச்சை மாற்றினாள் அனுஸ்ரீ.

“இல்லைக்கா இன்னைக்கு லெக்சர் செம்ம போரிங்கா தான் இருக்கும் ஏன்னா கிளாஸ் எடுக்கப் போறது மதர் தெரசாவோட கொள்ளுப் பேரன்”

“வாட்? மதர் தெரசாவோட கொள்ளுப் பேரனா? என்ன சொல்ற?” ஆச்சரியமாக கேட்ட அனுஸ்ரீயை பார்த்து புன்னகத்து கொண்டவள்

“ஆமாக்கா மதர் தெரசா எவ்வளவு சமூக சேவை செய்து இருக்காங்க அதேமாதிரி தான் இந்த பிரபசரும் ரொம்ப சமுக சேவை செய்வாரு தாலாட்டு பாடாமல் சாப்பாடு ஊட்டாமல் எந்த கஷ்டமும் இல்லாமல் கிளாஸில் இருக்குற ஐம்பது பிள்ளைகளையும் ஒரு செக்கனில் தூங்க வைக்குறது எவ்வளவு பெரிய சேவை!” தன் முகத்தை சீரியசாக வைத்து கொண்டு கூறவும் அதைக் கேட்ட அனுஸ்ரீயோ சிரித்துக் கொண்டே அவள் தோளில் செல்லமாக தட்டினாள்.

“வாயாடி! நான் கூட உண்மையிலேயே அவர் ஒரு சோஷியல் வர்க்கர்னு நினைச்சுட்டேன்”

“அட! இதுவும் ஒரு சோஷியல் வர்க் தான்க்கா அவரு ஒரு அம்மா இல்லை ஐம்பது அம்மாக்களுக்கு சமம்”

“உன்னை எல்லாம்! எப்படி தான் வைத்து சமாளிக்குறாங்களோ?”

“இது! இதற்கு தான் இந்த தாமரை வேணும்னு சொல்றது பார்த்தீங்களா? ஐந்தே நிமிஷம் உங்களை எப்படி கலகலன்னு மாற்றிட்டேன்?”

“ஆமாலே! உன் கிட்ட ஏதோ மேஜிக் இருக்கு தான் போல பேசாமல் நீ இப்படியே என் கூட இருந்தால் எனக்கு எந்த யோசனையும் வராது போலவே?”
புன்னகையோடு கூறிய அனுஸ்ரீயை பார்த்து சிரித்துக் கொண்ட தாமரை

“நல்லா சொன்னீங்க போங்க அப்புறம் மாமா வந்து என்னை அடிக்காமல் இருந்தால் சரி தான்” என்று கூறவும்

“அடிப் பாவி! வர வர உனக்கு வாய் ரொம்ப கூடிடுச்சு முதல்ல அதற்கு ஒரு பெரிய திண்டுக்கல் பூட்டு வாங்கி பூட்டணும்” என்றவாறே அவள் தோளில் அடிக்க வர

அவளோ
“சிறுத்தை சிக்கும் இந்த சில் வண்டு சிக்காதுலே!” என்றவாறே வீட்டினுள் ஓடிச்சென்று மறைந்தாள்.

தாமரையுடன் பேசிய அந்த கொஞ்ச நேரத்திலேயே அனுஸ்ரீயின் மனநிலை சற்று நேரத்திற்கு முன்பு இருந்த கலக்கமான மனநிலையை மறந்து இருந்தது.

‘நான் எப்போ ஏதாவது கஷ்டத்தில் இருந்தாலும் எங்கே இருந்தாவது இவ வந்துடுறா எப்படி தான் கண்டு பிடித்து வர்றாளோ தெரியல இன்னும் பத்து நாள் அதற்கு அப்புறமாக இப்படி அடிக்கடி இங்கே வர முடியுமா தெரியலயே!’ அதை பற்றி யோசிக்கும் போதே ஏதோ ஒரு சிறையில் தன்னை அடைத்தது போன்ற உணர்வு அவளுக்கு.

தங்கள் வீட்டையே சிறிது நேரம் அனுஸ்ரீ பார்த்து கொண்டு இருக்க அந்த நேரம் பார்த்து சரியாக அவளது போனும் அடித்தது.

திரையில் ஒளிர்ந்த ‘ரிஷி’ என்ற பெயரை பார்த்ததுமே அவளது முகம் அவளது அனுமதி இன்றி செவ்வானமாய் சிவந்தது.

நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த பிறகு ரிஷியும், அனுஸ்ரீயும் அடிக்கடி பேசிக் கொள்ளாவிட்டாலும் இருவருக்கும் இடையே ஒரு நல்ல புரிதல் இருந்து கொண்டு இருந்தது.

ரிஷி வேலையாக இருப்பான் என்று தெரிந்து அவள் அவனை எப்போதும் தொந்தரவு செய்வதில்லை.

ரிஷியும் அதை பற்றி பெரிதாக எதுவும் நினைத்து கொண்டதில்லை.

ஏனெனில் அவனைச் சூழ்ந்து இருந்த வேலைகளே அவனை எதைப்பற்றியும் சிந்திக்க விடாமல் செய்து இருந்தது.

தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் ரிஷி அனுஸ்ரீயோடு ஒரு ஐந்து நிமிடங்களாவது பேசி கொள்வான்.

இருவரும் ஒருவரை பற்றி ஒருவர் சுகம் விசாரித்து கொள்வதற்குள்ளேயே ரிஷிக்கு அடுத்த கட்ட வேலைகள் வந்து குவிந்து விடும்.

அனுஸ்ரீயும் அதை எல்லாம் பார்த்து அவனோடு கோபித்துக் கொண்டதில்லை.

இப்படி இருவருக்கும் இடையில் இருக்கும் சுமுகமான ஒரு புரிதல் இன்னும் சில நாட்களில் சுக்குநூறாக நொறுங்கி போகக்கூடும் என்பதை அப்போது அவர்கள் இருவரும் அறிந்து இருக்கவில்லை.

இதில் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் அனுஸ்ரீ இன்னமும் ரிஷியை தனக்கு முன்னாலேயே தெரியும் என்ற விஷயத்தை அவனிடம் சொல்லி இருக்கவில்லை அதற்கான நேரமும் அவளுக்கு கிடைத்து இருக்கவில்லை.

இது தான் காலத்தின் கோலம் போல!

புன்னகையோடு போனை அட்டன்ட் செய்து காதில் அனுஸ்ரீ வைத்த அடுத்த நொடி
“ஹலோ மை டியர் தேவி!” என உற்சாகமாக ஒலித்தது ரிஷியின் குரல்.

“என்னப்பா வாய்ஸ் ரொம்ப எனர்ஜிடிக்கா இருக்கு?”

“ஆமா பின்ன இருக்காதா? எத்தனை நாள் வேலை? இன்னைக்கு தான் ஃப்ரீயா ரொம்ப ஜாலியா இருக்கேன்”

“ஓஹ்! அப்படியா? இப்போ எங்க இருக்கீங்க? ப்ரேக் பாஸ்ட் எல்லாம் ஆச்சா?”

“யாஹ்! அதெல்லாம் எப்பவோ முடிச்சாச்சு இப்போ எங்க வீட்டு மொட்டை மாடியில் நின்னு தேவி தரிசனம் கிடைக்குமானு பார்த்துட்டு இருக்கேன்”

“உங்களுக்கு எப்போதும் காமெடி தான் சென்னையில் உங்க வீட்ல இருந்தா எப்படிப்பா தேவி தரிசனம் கிடைக்கும்?”

“நான் சென்னையில் இருக்கேன்னு சொல்லலயே!” சிரித்துக் கொண்டே ரிஷி கூற

“வாட்? அப்போ நீங்க இப்போ எங்க இருக்கீங்க?” என ஆச்சரியமாக கேட்டாள் அனுஸ்ரீ.

“கல்யாணத்துக்கு இன்னும் பத்து நாள் தானே இருக்குன்னு அம்மா இங்கே வசந்தபுரத்திற்கே வர சொல்லிட்டாங்க ஷோ கல்யாணம் முடியுற வரை இங்கேயே தான் ஆபிஸ் வேலை எல்லாம் கொஞ்ச நாள் தள்ளி வைச்சாச்சு இன்னும் வரப்போகும் எல்லா நாளும் உனக்கே உனக்காக!” ரிஷியின் கூற்றில் ஏற்கனவே சிவந்து இருந்த அனுஸ்ரீயின் முகம் மேலும் குங்குமமாய் சிவந்து போனது.

அவளிடம் இருந்து எந்த பதிலும் இல்லாது போகவே
“தேவியாரே! என்ன பேச்சையே காணோம்?” என்று கேட்டான் ரிஷி.

“ஆஹ்! அப்படி எல்லாம் எதுவும் இல்லையே!” அவள் முயன்றும் அவளது குரலில் கலந்து இருந்த வெட்கமும், தயக்கமும் ரிஷிக்கு புரியாமல் இல்லை.

“அத்தை, மாமா, பாட்டி எல்லாம் என்ன பண்ணுறாங்க?” அவளது தயக்கத்தை மாற்ற பேச்சை மாற்றினான் அவன்.

“எல்லோரும் வேலை வேலைன்னு ஓடிட்டே இருக்காங்க ஒருத்தரை ஒருத்தர் பார்க்க கூட நேரம் இல்லை!” கவலையோடு அனுஸ்ரீ கூறவும்

“அப்போ அத்தை, மாமா இன்னும் பேசிக்கலயா?” என்று கேட்டான் ரிஷி.

“எங்கே ப்பா? அம்மா ப்ரீயா இருக்கும் நேரம் அப்பா பிஸி அப்பா ப்ரீயா இருக்கும் நேரம் அம்மா பிஸி இப்படியே தான் போகுது நானும் எவ்வளவோ ட்ரை பண்ணிட்டேன் எதுவும் சரி வரல”

“அப்படியா?” சிறிது நேரம் யோசித்து கொண்டு நின்றவன்

“அனும்மா நீ எப்படியாவது அத்தை, மாமாவை வெளியே எங்கேயாவது கூட்டிட்டு வர முடியுமா?” என்று கேட்கவும்

“என்ன விளையாடுறீங்களா? வீட்ல ஐந்து நிமிஷம் கூட இருக்க நேரம் இல்லாமல் இருக்காங்கனு சொல்றேன் நீங்க வெளியில் கூட்டிட்டு வர முடியுமானு கேட்குறீங்க?” என சற்று கோபமாகவே கேட்டாள் அனுஸ்ரீ.

“அய்யோ! தேவி! வீட்ல இருக்குறதால தான் எப்போ பார்த்தாலும் வேலை வேலைன்னு அவங்க ஓடிட்டு ஒருத்தரை ஒருத்தர் பார்க்குறதை சங்கடமாக நினைக்குறாங்க அது உனக்கு புரியலயா?”

“அட! அதில் இப்படி ஒரு அர்த்தமும்
இருக்கா? நான் இப்படி யோசிக்கவே இல்லையே!” தன் கன்னத்தில் தட்டி கொண்டே யோசித்த வண்ணம் கூறினாள் அனுஸ்ரீ.

“வீட்ல எப்போதும் ஆட்கள் இருக்குறதால கூட அவங்க பேச தயங்கலாம் அதனால நீ எப்படியாவது அவங்களை வெளியே கூட்டிட்டு வா மீதியை அப்புறம் பார்த்துக்கலாம்”

“அது முடியுமானு தெரியலயே சரி ப்பா எதற்கும் நான் கூட்டிட்டு வர ட்ரை பண்ணுறேன்”

“ட்ரை எல்லாம் இல்லை கூட்டிட்டு வர்ற அவ்வளவு தான் அப்புறம் எங்கே வர்றேன்னு டிசைட் பண்ணி சொல்லிடு உனக்கு சப்போர்ட்க்கு நான் வேணா வர்றேன்”

“அய்யோடா? நீங்க சப்போர்டா?”

“பின்ன இல்லையா?” கேலியாக வந்தது ரிஷியின் குரல்.

“சரி சரி நான் எல்லாம் பிக்ஸ் பண்ணிட்டு உங்களுக்கு மெசேஜ் போடுறேன் ஓகே வா?”

“ஓகே ஓகே சீ யூ பாய்”

“ஓகே பாய்” புன்னகையோடு போனை வைத்தவள் சந்தோஷம் நிறைந்த மனநிலையோடு தெய்வநாயகியைத் தேடி சென்றாள் சிறிது நேரத்தில் அந்த சந்தோஷமும், சிரிப்பும் தன் மாயக்காரனாலேயே மாயமாகி போவது தெரியாமல்.

சமையலறை வாயிலில் இருந்து சற்று தள்ளி பாய் ஒன்றை விரித்து அதில் அமர்ந்திருந்தவாறே அகத்தி, முருங்கை, வாதமடக்கி போன்ற கீரைகளை ஆய்ந்து கொண்டிருந்தார் தெய்வநாயகி.

“பாட்டி!” என்றவாறே புன்னகையோடு அவரெதிரில் வந்து அமர்ந்து கொண்ட அனுஸ்ரீ தானும் ஒன்றிரண்டு கீரைகளை கையில் எடுத்துக் கொண்டாள்.

“பரவாயில்லை அனும்மா நான் பார்த்துக்கிறேன் நீ வைம்மா”

“பரவாயில்லை பாட்டி எனக்கும் வீட்ல சும்மாவே இருக்க போரிங்கா தான் இருக்கு இந்த வேலையையாவது செய்யுறேன்”

“என்ன ஏதோ மறைத்து வைத்து பேசுற மாதிரியே இருக்கு?” தெய்வநாயகி ஆராய்ச்சியாக அனுஸ்ரீயின் முகம் பார்க்க

உடனே தன் முகத்தை சரி செய்து கொண்டவள்
“அய்யோ! பாட்டி அப்படி எல்லாம் எதுவும் இல்லையே!” என்று கூறவும்

“அப்படியா?” என்று கேட்டுவிட்டு மீண்டும் தன் வேலையை கவனிக்க தொடங்கினார் தெய்வநாயகி.

“பாட்டி!”

“சொல்லுடாம்மா”

“பாட்டி!”

“என்னம்மா சொல்லு?”

“பாட்டி!”

“இப்போ நீ அடி வாங்க போற பார்த்துக்கோ ஒழுங்காக என்ன விஷயம்னு சொல்லு”

“பாட்டி! அது வந்து அது” இம்முறை தெய்வநாயகியின் அருகில் உரசியவாறு வந்து அமர்ந்து கொண்டாள் அனுஸ்ரீ.

தன் கையில் இருந்த கீரையை கீழே வைத்தவர் அனுஸ்ரீயை திரும்பி பார்த்தவாறே அவள் கைகளை எடுத்து தன் கையில் வைத்துக் கொண்டார்.

“சொல்லு அனும்மா என்ன வேணும்?”

“அது வந்து பாட்டி எனக்கு வீட்லயே சும்மா உட்கார்ந்து இருக்க ரொம்ப போரிங்கா இருக்கு அது தான் நான் நம்ம தோட்டம் வரைக்கும் போயிட்டு வரவா?”

“என்ன? அனும்மா நீ விளையாடுறியா என்ன?” அதிர்ச்சியாக கேட்ட தெய்வநாயகியைப் பார்த்து புன்னகத்து கொண்டவள்

“எதற்கு பாட்டி இவ்வளவு ஷாக் ஆகுறீங்க? நம்ம தோட்டத்துக்கு தானே போகப் போறேன் அதுவும் எல்லா இடத்திற்கும் இல்லை நம்ம திராட்சை தோட்டத்துக்கு மட்டும் தான் உங்களுக்கு தெரியும் தானே வாரத்திற்கு இரண்டு தடவை நான் கண்டிப்பாக அங்கே போவேன்னு என் கையால் உரம் போட்டு தண்ணீர் பாய்ச்சி அதை பார்த்துக்கணும்னு எனக்கு எவ்வளவு ஆசை! இப்போ இருபது நாளாக நான் அங்கே போகவே இல்லையே” சற்று கவலை தோய்ந்த குரலில் முகத்தை சோகமாக வைத்து கொண்டு கூறவும்

“அது இல்லை அனும்மா கல்யாணத்துக்கு இன்னும் பத்து நாள் தான் இருக்கு இந்த நேரத்தில் வெளியே அங்கே இங்கே தனியா போறது சரி இல்லையே!” என்று யோசனையோடு கூறினார் தெய்வநாயகி.

“நான் தனியா போகலயே தாமரையையும் கூட்டிட்டு போறேன்” கொஞ்சம் கொஞ்சமாக தன் திட்டமிட்ட படியே பேசத் தொடங்கி இருந்தாள் அனுஸ்ரீ.

“யாரு தாமரை உனக்கு துணையா? நீ தான் அவளுக்கு துணை”
சலித்து கொண்டே தெய்வநாயகி கூறவும்

‘நம்ம திட்டம் சக்ஸஸ்’ என மனதிற்குள் உற்சாகமாக நினைத்துக் கொண்டவள்

“அப்போ நான் அப்பாவையும், அம்மாவையும் வேணும்னா கூட்டிட்டு போறேனே?” கேள்வியாக தன் பாட்டியின் முகம் நோக்கினாள்.

‘அப்படியா விஷயம்?’ என தன் மனதிற்குள் நினைத்து கொண்ட தெய்வநாயகி

“சரி சரி இவ்வளவு தூரம் கேட்குறதால விடுறேன் ரொம்ப நேரம் வெளியே சுற்றாமல் வெயில் உச்சிக்கு வர்றதுக்குள்ள வீட்டுக்கு வந்து சேருங்க” என்று விட்டு எழுந்து கொள்ள

“அய்யோ! பாட்டி தாங்க்ஸ் தாங்க் யூ சோ மச்” என அவர் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் ஒன்றை வைத்தவள் சமையலறைக்குள் ஓடிச்சென்று தாமரையை இழுத்து கொண்டு வெளியே தோட்டத்தை நோக்கி சென்றாள்.

“அக்கா என்ன பண்ணுறீங்க?” தாமரை குழப்பமாக அனுஸ்ரீயை பார்க்க

புன்னகையோடு அவள் கன்னத்தை பிடித்து ஆட்டியவள்
“நான், நீ, அப்பா, அம்மா எல்லோரும் நம்ம திராட்சை தோட்டத்துக்கு போகப் போறோம்” என்று கூற

“அய்யோ! அக்கா! நிஜமாவா?” என்று ஆச்சரியமாக கேட்டவள்

“எவ்வளவு நாளாச்சு நம்ம தோட்டத்துக்கு போய் இப்போ எல்லாப் பக்கமும் திராட்சை பழம் குலை குலையாக காய்த்து இருக்கும் ஒரு கை பார்த்துடலாம்” என்று கூறவும் அனுஸ்ரீயோ தன் தலையில் அடித்துக் கொண்டாள்.

“அடியே! நான் சொன்னது உனக்கு புரியலயா? நம்ம கூட அம்மாவும், அப்பாவும் வர்றாங்க அம்மாவும், அப்பாவும்” சற்று அழுத்தமாகவே கூறினாள் அனுஸ்ரீ.

“அம்மாவும், அப்பாவும்!” சிறிது நேரம் யோசித்து கொண்டு நின்றவள்

“ஹையோ! அம்மாவும், அப்பாவும் வர்றாங்களா?” என உற்சாகமாக கேட்க

புன்னகையோடு ஆமோதிப்பாக தலை அசைத்தவள்
“ஆமா ஆமா இன்னைக்கு எப்படியாவது அவங்களை வெளியே கூட்டிட்டு போகணும் நம்ம இரண்டு பேரும் ஒண்ணா போய் அவங்களை கூப்பிட்டா அவங்க வர முடியாதுனு கூட சொல்லலாம் அதனால நீ போய் அம்மாவை கூட்டிட்டு வா நான் போய் அப்பாவை கூட்டிட்டு வர்றேன்” என்று கூற தாமரை சரியென்று விட்டு ராதாவை தேடி செல்ல அனுஸ்ரீ முத்துராமனைத் தேடி சென்றாள்.

முத்துராமன் போனில் யாருடனோ மும்முரமாக பேசிக் கொண்டு இருக்க தயக்கத்துடன் அவரெதிரில் வந்து நின்ற அனுஸ்ரீ
” நான் உங்க கூட பேசணும்” என்று சைகையில் கூறினாள்.

“நான் அப்புறமாக பேசுறேன் ஸார்” என்றவாறே தன் போனை வைத்தவர்

“சொல்லு அனும்மா என்ன விஷயம்?” என்று கேட்டார்.

“அப்பா நீங்க என் நிச்சயதார்த்தம் ஆன நாள்ல இருந்து வேலை வேலைன்னு ஓடிட்டே இருக்கீங்க பாவம் தானே நீங்க? அது தான் உங்களுக்கு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக நாம நம்ம தோட்டம் வரைக்கும் போயிட்டு வரலாமா? நான் பாட்டி கிட்ட கூட சொல்லிட்டேன் போகலாமாப்பா?” ஆவலுடன் அனுஸ்ரீ கேட்கவும்

சிறிது நேரம் யோசித்து கொண்டு நின்றவர் புன்னகையோடு அவள் புறம் திரும்பி
“சரிம்மா வா போகலாம்” என்று கூற துள்ளலோடு அவர் கை பற்றி கொண்டு நடந்து சென்றாள் அனுஸ்ரீ.

அந்த நேரத்தில் மறக்காமல் ரிஷிக்கும் இந்த செய்தியை சொல்லி இருந்தாள் அவள்.

மறுபுறம் தாமரை அனுஸ்ரீ கூறியது போலவே ராதாவுடன் பேசி அவரை அழைத்து கொண்டு வர வீட்டு வாசலில் அனுஸ்ரீயுடன் நின்று கொண்டிருந்த முத்துராமனோ தாமரையுடன் நடந்து வந்த ராதாவை அதிர்ச்சியாக பார்க்க அதை விட பன்மடங்கு அதிர்ச்சியோடு அனுஸ்ரீ அருகில் நின்ற முத்துராமனை பார்த்து கொண்டு நின்றார் ராதா……

error: Content is protected !!