Mayam 16

ரிஷி மற்றும் அனுஸ்ரீயின் திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் எல்லாம் மெல்ல மெல்ல கலைந்து செல்லத் தொடங்கி இருந்தனர்.

அடுத்த நாள் சென்னையில் ரிசப்சன் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததனால் மணிமாறன், சுந்தரமூர்த்தி மற்றும் முத்துராமன் திருமணம் நடந்து முடிந்த கையோடு கோவிலில் இருந்த வேலைகளை எல்லாம் முடித்து விட்டு ரிசப்சன் ஏற்பாடுகளை கவனிக்க செல்ல தயாராகி நிற்க மற்ற அனைவரும் புதுமணத் தம்பதிகள் சகிதம் ரிஷியின் வீட்டிற்கு செல்ல தயாராகி கொண்டு நின்றனர்.

அனுஸ்ரீ, ரிஷி, தாமரை மற்றும் சந்துரு ஒரு காரில் ஏறி கொள்ள மற்ற அனைவரும் மற்றைய கார்களில் ஏறிக் கொண்டு அவர்களை பின் தொடர்ந்து சென்றனர்.

சந்துரு காரை ஓட்ட தாமரை முன்னால் இருந்த இருக்கையில் அமர்ந்து கொள்ள ரிஷி மற்றும் அனுஸ்ரீ பின் இருக்கையில் அமர்ந்து இருந்தனர்.

காரில் ஏறிக் கொண்ட நொடி முதல் தாமரை யாராவது பேசுவார்கள் என்று எதிர்பார்த்து இருக்க அங்கே யாரும் எதுவும் பேசவே இல்லை.

அனுஸ்ரீ ஒரு புறம் தன் பக்கம் இருந்த ஜன்னலினூடு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க ரிஷியோ இன்னொரு பக்க ஜன்னலினூடு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தான்.

அவர்கள் இருவரையும் பார்த்து தன் தலையில் அடித்துக் கொண்ட தாமரை
“அக்கா, மாமா நாம என்ன சோக ஊர்வலமா போறோம்? இவ்வளவு அமைதியாக இருக்கீங்க யாராவது ஏதாவது பேசுங்களேன்” என்று கூறவும்

“உங்க அளவுக்கு அவங்களுக்கு பேச வராதும்மா அது தான் அவங்க ரொம்ப அமைதியாக வர்றாங்க” அவசரமாக முந்திக்கொண்டு அவளின் கூற்றுக்கு பதில் சொன்னான் சந்துரு.

“அப்போ நான் அதிகமாக பேசுறேன்னு சொல்லுறீங்களா?” தாமரை கோபமாக அவனை முறைத்து பார்க்க

புன்னகையோடு அவளை திரும்பி பார்த்தவன்
“அது நான் சொல்லி தெரியணும்னு இல்லையே! அது தான் கோவில் முழுக்க உன் சத்தம் தானே கேட்டது இனி கோவிலில் நடக்கும் கல்யாணத்துக்கு எல்லாம் மேள தாளங்களுக்கு பதிலாக உன்னை தான் எடுக்கப் போறதாக பேசிட்டாங்க” என்று கூறவும்

இன்னும் கோபமாக அவனை முறைத்து பார்த்தவள்
“நான்…”

“அய்யோ! சாமி! வேண்டாம் நாங்க இரண்டு பேரும் பேசிட்டு வர்றோம் தயவுசெய்து நீங்க இரண்டு பேரும் சண்டை போட்டு காரை எங்கேயும் கொண்டு போய் விட்டுடாதீங்க” அவர்கள் இருவரது வாக்கு வாதத்தை வளர விடாமல் அனுஸ்ரீ அவசரமாக பதில் கூற சந்துரு அவளைப் பார்த்து நக்கலாக சிரிக்க தாமரையோ அவனை பார்த்து பழிப்பு காட்டி விட்டு தன் முகத்தை மறுபுறம் திருப்பிக் கொண்டாள்.

அவர்கள் இருவரையும் பார்த்து சிரித்துக் கொண்டே அனுஸ்ரீ ரிஷியின் புறம் திரும்ப அவனும் அந்த நொடி அவளையே தான் பார்த்து கொண்டு இருந்தான்.

இருவரது பார்வையும் ஒரு நொடி ஒரே நேர்கோட்டில் சந்தித்து கொண்டது.

இமைக்க மறந்து இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டிருக்க
“ரிஷி வீடு வந்துடுச்சுடா! மீதியை உள்ளே வந்து கன்டினியூ பண்ணு!” சந்துரு சிரித்துக் கொண்டே அவன் தோளில் தட்டி கூறி விட்டு உள்ளே சென்று விட அனுஸ்ரீயோ வெட்கத்தோடு ரிஷியைப் பார்த்து புன்னகத்து விட்டு காரில் இருந்து இறங்கி கொண்டாள்.

மனம் முழுவதும் சந்தோஷம் நிறைந்து கொள்ள அவளைப் பின் தொடர்ந்து சென்றவன் மற்றைய சடங்குகளையும் அவளோடு இணைந்து செய்து முடித்தான்.

காலையில் இருந்து பல சடங்குகளை செய்து கொண்டிருந்ததால் என்னவோ சற்று களைப்பாக இருப்பதை போல இருக்க அனுஸ்ரீ அங்கிருந்த இருக்கை ஒன்றில் கண் மூடி அமர்ந்து கொள்ள அவளருகில் வந்து அவளது தோள் தொட்டார் பத்மினி.

தன் தோளில் பட்ட ஸ்பரிசத்தில் அனுஸ்ரீ கண் திறந்து பார்க்க அவளருகில் புன்னகையோடு அமர்ந்து கொண்ட பத்மினி
“என்னம்மா ரொம்ப டயர்டா இருக்கா?” என்று கேட்கவும்

புன்னகையோடு அவரைப் பார்த்து இல்லை என்று தலை அசைத்தவள்
“ரொம்ப எல்லாம் இல்லை அத்தை லைட்டா” என்று கண் சிமிட்ட

சிரித்துக் கொண்டே அவளது தலையை வருடிக் கொடுத்தவர்
“உன் கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் அனும்மா” என்று கூறவும் கேள்வியாக அவரை நோக்கினாள் அனுஸ்ரீ.

“உன் கிட்ட ரிஷி முன்னாடியே சொல்லி இருப்பான்னு தான் நினைக்கிறேன் இருந்தாலும் நானும் சொல்லுறேன் அவன் கொஞ்சம் கோபக்காரன் டக்குன்னு கோபப்பட்டு கத்திடுவான் ஆனா கொஞ்ச நேரம் கழித்து அவனே அவன் பண்ணது தப்புன்னு தெரிந்தால் வந்து மன்னிப்பு கேட்டு பேசிடுவான்”

“ம்ம்ம்ம் தெரியும் அத்தை” அன்று தோட்டத்தில் நடந்த சம்பவத்தை நினைத்து பார்த்து அனுஸ்ரீ கூறவும்

“தெரியுமா எப்படி?” என ஆச்சரியமாக கேட்டார் பத்மினி.

‘அய்யய்யோ! அவசரப்பட்டு உளறிட்டோமோ?’ மனதிற்குள் நினைத்துக் கொண்டதை வெளியே சொல்லாமல் அவரைப் பார்த்து புன்னகத்து கொண்டவள்

“அது அத்தை அவர் தான் சொன்னாங்க” சற்று தயக்கத்துடன் கூறவும்

“ஓஹ்!” என்று கேட்டுக் கொண்டவர்

“ஒரு வேளை ரிஷி உன் கிட்ட அப்படி எப்போதாவது கோபப்பட்டால் நீ அவசரப்பட்டு அவனை தப்பாக எடுத்துக்காதேம்மா அவன் சின்ன வயதிலிருந்தே இப்படி தான் சட்டுன்னு கோபப்பட்டுடுவான் ஆனா அந்த கோபம் இருக்கும் அளவை விட அவன்
மனதில் அன்பு நிறையவே இருக்கு கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும்னு சொல்லுவாங்க அது ரிஷிக்கு நூறு வீதம் பொருந்தும்” என்று விட்டு அவள் கைகளை தன் கைகளுக்குள் எடுத்து வைத்து கொண்டு

“ஏற்கனவே ஒரு தடவை ரொம்ப உடைந்து போனவன் இப்போ உன்னை நிச்சயதார்த்தம் பண்ண அப்புறம் தான் பழைய படி மாறி இருக்கான் இப்படியே எப்போதும் ரிஷிக்கு துணையாக இருப்பியாம்மா?” என்று கேட்க அனுஸ்ரீயோ சிறிது நேரம் அமைதியாக அவர் கைகளையே பார்த்து கொண்டு இருந்தாள்.

சிறிது நேர யோசனைக்கு பின்னர்
அவர் கைகளை ஆதரவாக அழுத்தி கொடுத்தவள்
“நிச்சயமாக நான் எப்போதும் தவறான விஷயங்களை பண்ண மாட்டேன் அத்தை அவரோட நியாயத்திற்கு எப்போதும் நான் துணையாக இருப்பேன்” என்று கூறவும்

“ரொம்ப ரொம்ப நன்றி அனும்மா” என்றவாறே கண்கள் கலங்க அவளைப் பார்த்து புன்னகத்து கொண்டார் பத்மினி.

“அம்மா அங்கே அந்த திங்க்ஸ் எல்லாம் எங்கே வைக்குறது?” என்றவாறே அர்ச்சனா அவர்கள் அருகில் வரவும்

அவசரமாக தன் கண்களை துடைத்து கொண்டவர்
“அனும்மா நீ அந்த ரூமில் போய் ரெஸ்ட் எடுத்துக்கோமா ட்ரெஸ் சேஞ்ச் பண்ணுறதுனா பண்ணிக்கோம்மா நான் மற்ற வேலைகளை எல்லாம் பார்த்துட்டு அப்புறமாக வர்றேன்” என்று விட்டு அர்ச்சனாவோடு சென்று விட அனுஸ்ரீயும் பெருமூச்சு ஒன்றை விட்டு கொண்டே அவளுக்கென ஒதுக்கப்பட்ட அறைக்குள் நுழைந்து கொண்டாள்.

பட்டு சேலையில் இருந்து சாதாரண சேலைக்கு மாறி கொண்டவள் அந்த அறையில் இருந்த பொருட்களை எல்லாம் ஒவ்வொன்றாக பார்த்து கொண்டு நிற்க அந்த நேரம் பார்த்து அந்த அறைக் கதவும் தட்டப்பட்டது.

“அத்தை வந்துட்டாங்க போல” தன் மனதிற்குள் நினைத்து கொண்டே அனுஸ்ரீ வந்து அறைக் கதவைத் திறக்க அங்கே புன்னகையோடு கைகளை கட்டி கொண்டு நின்று கொண்டிருந்தான் ரிஷி ஆகாஷ்.

“ரிஷி! நீங்க?” அனுஸ்ரீ கேள்வியாக அவனைப் பார்க்க

அவனோ
“ஏன் நான் வரக்கூடாதா என்ன?” என்றவாறே அந்த அறைக்குள் நுழைந்து கொண்டான்.

“இது உங்க வீடுப்பா நீங்க எப்போ வேணா வரலாம்”

“என் வீடு இல்லை நம்ம வீடு” அவளது தலையை செல்லமாக கலைத்து விட்டவாறே ரிஷி கூறவும் புன்னகையோடு அவனைப் பார்த்து சரியென்று தலை அசைத்தாள் அனுஸ்ரீ.

“அப்புறம் வீடு எல்லாம் வசதியாக இருக்கா தேவி?”

“அதெல்லாம் நல்லாவே இருக்கு ஆமா நீங்க இவ்வளவு நேரமாக எங்க இருந்தீங்க?”

“சந்துரு கூட பேசிட்டு இருந்தேன்ம்மா நாளைக்கு ரிசப்சன்ல ஏதோ சர்ப்பரைஸ் அது, இதுன்னு சொல்லிட்டு இருந்தான் அது தான் என்னன்னு அவன் கிட்ட கேட்டேன் அதெல்லாம் சர்ப்பரைஸ் சொல்ல மாட்டேன்னு சொல்லுறான்”

“சர்ப்பரைஸா?” அனுஸ்ரீ ஆச்சரியமாக கேட்கவும்

அவளைப் பார்த்து ஆமோதிப்பாக தலை அசைத்தவன்
“ஆமா ஆமா என்னன்னு கேட்டால் சொல்ல மாட்டேங்குறான் அவன்! நாளைக்கு ஈவ்னிங் பார்த்துடலாம் அப்படி என்ன சர்ப்பரைஸ்னு” பேச்சு வாக்கில் அவளை நெருங்கி வந்து நின்றான்.

பேச்சு சுவாரஸ்யத்தில் அனுஸ்ரீ அவன் தன்னருகில் வந்து நின்றதையோ அவனது பார்வையில் தெரிந்த மாற்றத்தையோ கவனிக்கவில்லை.

அங்கு இருந்த மேஜையில் வைக்கப்பட்டிருந்த ஒரு புகைப்படத்தை தன் கையில் எடுத்துக் கொண்டவள்
“ரிஷி இது நீங்களா?” என்றவாறே அவனை பார்ப்பதற்காக திரும்ப அவனோ அவளின் அருகில் மிக மிக நெருக்கமாக வந்து நின்றான்.

“ரிஷி!” அதிர்ச்சியாக அவள் அவனை பார்க்க

அவள் கையில் இருந்த அந்த புகைப்படத்தை வாங்கி பார்த்தவன்
“ஆமா தேவி இது நான் தான் காலேஜ் டேஸ்ல எடுத்தது நல்லா இருக்கா?” என்றவாறே அவளை நெருங்கி வர அவள் மனமோ அன்று தோட்டத்தில் நடந்த நிகழ்வை நோக்கி எண்ணி ஒரு கணம் துணுக்குற்றது.

அன்று போல இன்றும் ஏதாவது தவறுதலாக நடந்து விடுமோ என்ற அச்சத்தோடு அனுஸ்ரீ ரிஷியைப் பார்க்க அவனோ புன்னகையோடு அவளைப் பார்த்து கேள்வியாக தன் புருவம் உயர்த்தினான்.

“இல்லை…அது…நீங்க…தப்பா…அது…இன்னைக்கு…” அவளது தடுமாற்றத்தைப் பார்த்து புன்னகத்து கொண்டவன்

“எதுக்கு இவ்வளவு பதட்டம் தேவி? தோட்டத்து ஞாபகம் வந்துச்சா என்ன?” என்றவாறே அவளைப் பார்த்து கண்ணடிக்கவுமே அவளுக்கு அவன் தன்னிடம் வேண்டுமென்றே தன்னை சீண்டிப் பார்க்க இப்படி செய்தான் என்று புரிந்தது.

“உங்களை” கோபமாக அவன் நெஞ்சில் கை வைத்து அவனை தள்ளி விட்டவள்

“என் கிட்ட ஓவரா வம்பு பண்ணாதீங்க அப்புறம் ரொம்ப பீல் பண்ணுவீங்க” என்று எச்சரிக்கை செய்வது போல ஒற்றை விரல் நீட்டி கூறவும்

“அப்படியா? அப்படி என்ன நடக்குமோ?” அவளது விரலை பிடிக்க அவன் தன் கையை நீட்ட

லாவகமாக அவனது பிடியில் சிக்காமல் விலகியவாறே அறைக் கதவின் அருகில் சென்று நின்றவள்
“இன்னைக்கு நைட்க்கு தெரியும்” என்றவாறே அவனை பார்த்து கண் சிமிட்டி கூறி விட்டு சென்றாள்.

“என்ன இது? இன்னைக்கு ஆளாளுக்கு சர்ப்பரைஸ் கொடுக்குறாங்க” ரிஷி தனக்குள் பேசி கொண்டு நிற்க

“அனும்மா அந்த திங்க்ஸ் எல்லாம்” என்றவாறே அந்த அறைக்குள் நுழைந்த பத்மினி

“டேய் ரிஷி! நீ இங்க என்னடா பண்ணிட்டு இருக்க?” என்று ஆச்சரியமாக அவனை பார்த்து கேட்டார்.

“என்னம்மா கேள்வி இது? நம்ம வீட்ல ஒரு ரூமில் இருக்க கூட
எனக்கு உரிமை இல்லையா?” தன் முகத்தை சோகமாக வைத்து கொண்டு அவன் கேட்கவும்

அவனது தோளில் தட்டியவர்
“இது அனுஸ்ரீ இன்னைக்கு முழுவதும் தங்கி இருக்க கொடுத்த ரூம் அங்கே உனக்கு என்ன வேலைன்னு கேட்டேன்?” என்று கூற

“என்ன?” என்றவாறே ரிஷி அவரை குழப்பமாகப் பார்த்தான்.

“என்ன என்ன?”

“அனு ஏன்மா இங்கே இருக்கணும்? மேல இருக்கலாம் தானே?”

“இன்னைக்கு மட்டும் அனு இங்கே தான் இருக்கணும்”

“அது தான் ஏன்?”

“ஏன் டா இப்போ கத்துற? உன் கிட்ட முன்னாடியே சொல்லி தானே இருந்தேன் ரிசப்சன் முடிஞ்ச அப்புறமாக தான் மற்ற சடங்குகள் எல்லாத்துக்கும் நேரம் குறித்து இருக்குன்னு”

“என்ன? நீங்க சடங்குன்னு சொன்னது அதையும் சேர்த்தா? அய்யோ!” ரிஷி அதிர்ச்சியாவது போல தன் நெஞ்சில் கை வைத்து கொள்ள

“டேய்! டேய்! ஓவரா நடிக்காதேடா! தாங்கல சரி சரி அனு எங்கே இருக்கான்னு சொல்லு” பத்மினி கேட்ட கேள்விக்கு வாசற்புறம் கையை காட்டியவன்

“அவ அப்போவே போயிட்டா” என்று கூறினான்.

“சரி சரி நீயும் வெளியே வந்து எல்லோர் கூடவும் பேசிட்டு இரு” என பத்மினி அவன் தோளில் தட்டி கூறி விட்டு செல்ல

அவனோ
“இதற்கு தான் அனு அப்படி சொல்லிட்டு போனாளா? இது தெரியாமல் போச்சே” என்று முணுமுணுத்துக் கொண்டே அவரை பின் தொடர்ந்து சென்றான்.

அதன் பிறகு நண்பர்களின் கேலியிலும், உறவினர்களின் பேச்சிலும் அவர்கள் வீடு முழுவதும் சந்தோஷம் நிறைந்து போய் இருந்தது.

அனுஸ்ரீ கூட அந்த நொடி காலையில் இருந்து தன் மனதிற்குள் இருந்த பதட்டத்தை மறந்து போய் இருந்தாள்.

நாளை தன் நண்பர்கள் தரவிருக்கும் சர்ப்பரைஸை எண்ணி எதிர்பார்ப்போடு ரிஷி காத்திருக்க கடவுளோ அவன் எதிர்பார்க்காத விடயங்களை அவனுக்கு கொடுக்க காத்திருந்தார்.

அடுத்த நாள் காலை ரிஷி மற்றும் அனுஸ்ரீயின் குடும்பத்தினர் அவர்களது ரிசப்சன் நடக்கவிருக்கும் மண்டபத்தை நோக்கி புறப்பட்டுச் செல்ல தயாராகி கொண்டு இருந்தனர்.

இரண்டு, மூன்று மணி நேரப் பயணத்திற்கு பின்னர் அவர்கள் மண்டபத்தை வந்த சேர நண்பகல் ஆகி இருந்தது.

அப்போது இருந்தே அனுஸ்ரீ மற்றும் ரிஷியை அலங்காரம் பண்ணவென தனித்தனியாக அழைத்து சென்று விட மற்ற அனைவரும் மண்டப அலங்காரம், வரவேற்பு என எல்லா வேலைகளையும் கவனித்து கொண்டு இருந்தனர்.

ரோஜா பூக்களினால் தோரணம் போல மேடை அலங்கரிக்கப்பட்டு இருக்க குங்கும நிற லெஹங்கா அணிந்து மிதமான ஒப்பனையோடு அனுஸ்ரீயும் அவளருகில் ஊதா நிற சர்ட், கறுப்பு நிற கோர்ட்டோடு கம்பீரமாக தன் வசீகர புன்னகையோடு ரிஷி ஆகாஷும் நின்று கொண்டிருந்தான்.

உறவினர்களும், நண்பர்களும் ஒவ்வொருவராக வந்து அவர்களை வாழ்த்தி விட்டு சென்று கொண்டிருக்க அவர்கள் எல்லோரது வாழ்த்துக்களையும் இன்முகத்துடன் அவர்கள் பெற்றுக் கொண்டு நின்றனர்.

அப்போது ரிஷி மற்றும் அனுஸ்ரீ நின்று கொண்டிருந்த மேடையின் முன்னால் வந்து நின்ற சந்துரு
“டேய் நண்பா! இது உனக்கு சர்ப்பரைஸா இல்லையானு எனக்கு தெரியாது பட் கண்டிப்பாக சிஸ்டர் உங்களுக்கு இது சர்ப்பரைஸ் தான்” என்றவன்
சற்று விலகி நின்று வாயில் புறமாக கை காட்ட அங்கே ராதா மற்றும் முத்துராமன் புன்னகையோடு தங்கள் கைகோர்த்தபடி அனுஸ்ரீயை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தனர்.

ஒரு கணம் அங்கு நடப்பது கனவா? நிஜமா? என்று புரியாமல் அனுஸ்ரீ தன் கண்களை இமைக்கவும் மறந்து அவர்களை பார்த்து கொண்டு நிற்க ரிஷியோ அதை விட ஆச்சரியமாக அவர்களை பார்த்து கொண்டு நின்றான்.

“ஹெப்பி மேரிட் லைஃப் அனு கண்ணா!” ராதா புன்னகையோடு அனுஸ்ரீயை அணைத்துக் கொள்ள

“ம்மா!” என்றவாறே அவரை தாவி அணைத்துக் கொண்டவள் கண்களோ நிற்காமல் கண்ணீரை வடித்து கொண்டு இருந்தது.

எத்தனை வருடங்களாக இப்படி தன் பெற்றோரை அந்நியோன்யமாக பார்க்க அவள் ஏங்கி இருப்பாள்.

இன்று அந்த காட்சி தன் கண்கள் முன்னால் அரங்கேறியதைப் பார்த்து அவளுக்கு சந்தோஷத்தில் பேச வார்த்தைகள் கூட வரவில்லை.

“என்ன நண்பா! சர்ப்பரைஸ் எப்படி?” சந்துரு புன்னகையோடு தன் நண்பனின் தோளில் கை போட்டு கொண்டு கேட்க

“சத்தியமா எதிர்பார்க்காத சர்ப்பரைஸ் டா இது! ஆனா இது எப்படி?” ரிஷி வியப்பாக கேட்கவும்

“ஆல்ரெடி நிச்சயதார்த்தம் அப்போ நீ பண்ணது தானே அதோட கன்டினியூ தான் உன் மேரேஜ்க்கு என்ன சர்ப்பரைஸ் கொடுக்கலாம்னு எல்லோரும் பேசிட்டு இருக்கும் போது அங்கிள் அன்ட் ஆன்ட்டி தான் அனுக்காக இந்த சர்ப்பரைஸ் கொடுக்கப் போறோம்னு சொன்னாங்க ஷோ உனக்கும் அது சர்ப்பரைஸ் தான்னு பண்ணிட்டோம்” என்ற சந்துருவை தன் தோளோடு அணைத்துக் கொண்டான் ரிஷி.

“இது நாள் வரை நாங்க எங்க தனிப்பட்ட கோபத்தை மனதில் வைத்து உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டோம் கண்ணா! கல்யாண வாழ்க்கையில் பிரச்சினை வரும் பேசி தீர்க்க முடியாத பிரச்சினையே இல்லை அது புரியாமல் இத்தனை வருடங்களாக நாங்க இருந்துட்டோம் எங்களைப் பார்த்து நீ உன் வாழ்க்கையை தவற விட்டுடக் கூடாது அது தான் உன் கல்யாணத்தன்னைக்கே இதை சொல்லுறோம் நீ என் கிட்ட அன்னைக்கு கேட்ட தானே எப்போதும் இப்படியே அப்பா கூட இருப்பீங்களானு?
இப்போ சொல்லுறேன் கண்ணா கண்டிப்பாக இனி உன் சந்தோஷத்தை நாங்க இல்லாமல் பண்ண மாட்டோம் அதே மாதிரி நீயும் சந்தோஷமாக இருக்கணும்”
ராதா கண்கள் கலங்க அனுஸ்ரீயின் கை பிடித்து கூற

“அம்மா! அப்பா!” என்றவாறே ராதா மற்றும் முத்துராமனின் கைகளை பற்றி கொண்டவள் புன்னகையோடு சுற்றிலும் தன் பார்வையை சுழல விட்டாள்.

மேடையில் இருந்து சற்று தள்ளி பத்மினியின் அருகில் கண்கள் கலங்க நின்று கொண்டிருந்த தெய்வநாயகியை பார்த்து அனுஸ்ரீ தன் கையை நீட்ட புன்னகையோடு அவளருகில் வந்து அவளது கையை பற்றி கொண்டவர்
“இப்போ உன் மனதில் இருந்த பயம் போயிடுச்சா அனும்மா?” என்று கேட்கவும்

புன்னகையோடு அவரைப் பார்த்து ஆமோதிப்பாக தலை அசைத்தவள்
“இப்போ தான் பாட்டி எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கு” என்று கூற அங்கிருந்த அனைவருக்குமே மனம் நிறைந்து போய் இருந்தது.

பல நாட்களாக எதிர்பார்த்த சந்தோஷம் கிடைத்த மன திருப்தியோடு அனுஸ்ரீ தன் பெற்றோர் மற்றும் பாட்டியுடன் பேசிக் கொண்டு நிற்க மறுபுறம் தன் நண்பன் ஒருவனுடன் பேசிக்கொண்டு நின்ற ரிஷியின் முகமோ அவன் சொன்ன செய்தியை கேட்டு அதிர்ச்சியாக மாறியது மட்டுமின்றி அவனது பார்வையோ அனுஸ்ரீயை கோபமாக வெறித்துப் பார்த்து கொண்டிருந்தது……