Mayam-2

சென்னை ஆர்.எஸ் பப்

சனிக்கிழமை இரவு என்பதனால் என்னவோ ஆர்.எஸ் பப் இருந்த சாலை முழுவதும் ஆட்கள் நிறைந்து போய் இருந்தனர்.

மேலைத்தேயேர்கள் பல்வேறு விதமான விடயங்களை இந்த நாட்டில் இருந்து வெளியேறும் போது விட்டு சென்றாலும் நமது நாட்டினர் இன்று வரை அவர்களிடம் இருந்து பின்பற்றும் பழக்கங்களில் ஒன்றே இந்த பப்பிற்கு செல்லும் வழக்கம்.

தங்களை வசதியானவர்களாக காட்ட ஒரு சிலர் இப்படியான இடங்களுக்கு சென்றாலும் அநேகமான மக்கள் தங்கள் மனதிருப்திக்காக இங்கே வருவர்.

ஆர்.எஸ் பப் சென்னையில் உள்ள பிரபலமான பப்களில் ஒன்று.

காலையிலும், இரவிலும் எப்போதும் அங்கே கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

இரவு நேரத்திற்கு ஏற்றாற்போல் மெல்லிய விளக்கு வெளிச்சத்தில் ஆர்.எஸ் பப் நிறைந்து இருக்க அதனுள்ளே இருந்த பாரின் முன்னால் இருந்த மேஜையில் தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தான்  ரிஷி ஆகாஷ்.

ஒரு கையினால் மதுபான கோப்பையை இறுக பற்றி இருந்தவன் மறுகையினால் மேஜையின் மீது விடாமல் ஓங்கி குத்தி கொண்டே இருந்தான்.

அவனருகில் சோர்வாக அமர்ந்து இருந்த இன்னொருவனோ கன்னத்தில் கை வைத்து கொண்டு அவனையே பார்த்து கொண்டு நின்றான்.

“துரோகி! துரோகி! நம்ப வைத்து ஏமாற்றிட்டா!” புலம்பிக் கொண்டே தன் கையில் இருந்த கோப்பையில் உள்ள மதுபானம் ஒட்டுமொத்தத்தையும் ஒரே தடவையில் தன் வாயில் கவிழ்த்து கொண்டவன்

“பாஸ் வன் சிப் ப்ளீஸ்” என்றவாறே மீண்டும் அந்த கோப்பையை தன் முன்னால் நின்ற வெயிட்டரிடம் நீட்ட அவனருகில் இருந்தவனோ அவசரமாக அவன் கை பிடித்து தடுத்தான்.

“ரிஷி ஏற்கனவே நான்கு, ஐந்து ரவுண்டு தாண்டிட்ட இதற்கு மேலும் நீ ட்ரிங்ஸ் எடுத்தால் ஒழுங்காக வீடு போய் சேரமாட்ட ஷோ ப்ளீஸ் வேண்டாம் வா போகலாம்” தன் கை பிடித்து அழைத்தவன் கையை கோபமாக தட்டி விட்டவன்

“ஹேய்! லீவ் மீ இடியட் ஐ வான்ட் மோர் ட்ரிங்க். பாஸ் அவன் அப்படி தான் லூசுப்பயல் ஏதாவது உளறிட்டு இருப்பான் அவனை விட்டுட்டு நீங்க இன்னொரு சிப் கொடுங்க” தள்ளாடிய படியே தன் கையில் இருந்த கிளாஸை நீட்டினான்.

“ரிஷி ப்ளீஸ் டா ஏன்டா இப்படி எல்லாம் பண்ணுற? வீட்ல அம்மா கிட்ட இப்போ நீ குடிச்சதுக்கே என்ன பதில் சொல்லப்போறேன்னு தெரியல இதுல நீ இன்னும் ட்ரிங் பண்ணா நான் என்னடா பதில் சொல்லுவேன்?” விட்டால் அழுது விடும் நிலையில் நின்றவனை நிமிர்ந்து பார்த்தவன்

“என்னால முடியல டா சந்துரு அவ செஞ்ச துரோகம் இன்னும் என் மனசுக்குள்ள இருந்து என்னை வெறியேற வைக்குதுடா அவளாக தானே என் வாழ்க்கையில் வந்தா நானா அவளை என் வாழ்க்கையில் வரச் சொல்லி சொன்னேன் அவளுக்காக எல்லாம் பார்த்து பார்த்து பண்ணுணேன்டா ஆனா அவ கடைசியில் என்னை விட வசதியான ஒருத்தனை பார்த்ததும் ஊரெல்லாம் அழைத்து பண்ண நிச்சயதார்த்தத்தில் வைத்து என்னை தூக்கி எறிந்து அசிங்கப்படுத்திட்டு போயிட்டாளேடா போயிட்டாடா போயிட்டா மொத்தமாக என்னை உயிரோடு வைத்து சமாதி கட்டிட்டு போயிட்டாடா போயிட்டா” என்றவாறே கண்ணீர் வடிக்க அவனெதிரில் நின்றவனோ அவனைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

“விடு ரிஷி அவ எல்லாம் ஒரு ஆளுன்னு அவளை நினைத்து உன்னை நீயே வருத்திக்கலாமா? நீ அவ முன்னாடி இன்னும் கம்பீரமாக வாழ்ந்து காட்டணும்டா அவ எந்த பணத்தை பார்த்து உன்னை தூக்கி எறிந்துட்டு போனாளோ அந்த பணம் எல்லாம் வெறும் தூசுனு நீ அவளுக்கு காட்டணும் நீ சந்தோஷமாக வாழ்ந்து காட்டணும் ரிஷி இப்படி உன் உடம்பை கெடுத்துக்க கூடாது”

“உன் லெக்சர் ரொம்ப போரிங் டா நீ என்ன பண்ணுற போய் காரை ஸ்டார்ட் பண்ணு நான் பில் பே பண்ணிட்டு வர்றேன் சரியா?” என்றவாறே ரிஷி அவன் அணைப்பில் இருந்து விலகி கொண்டு கூற அவனோ ஒரு மார்க்கமாக அவனைப் பார்த்து விட்டு பார்க்கிங்கை நோக்கி சென்றான்.

ரிஷி ஆகாஷ் சென்னையில் இருக்கும் பிரபலமான இளம் தொழிலதிபர்களில் ஒருவன்.

தன் முப்பது வருட வாழ்க்கையில் சந்தோஷத்தையும், வெற்றியையும் மட்டும் பார்த்து வளர்ந்தவன் இப்போது மனதளவில் நொறுங்கி போய் அமர்ந்திருக்கிறான்.

அதற்கு காரணம் அவள் ஆத்மிகா.

அவனோடு காலேஜில் ஒன்றாக படித்த அவனது நண்பர்கள் வட்டத்தில் இருந்தவர்களுள் ஆத்மிகாவும் ஒருத்தி.

ஆத்மிகா அவனைக் காதலிப்பதாக கூற முதலில் ரிஷி அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

நாம் எல்லோரும் நல்ல நண்பர்கள் என்று அவளிடம் இருந்து அவன் விலகி வந்த போதும் ஆத்மிகா தொடர்ந்து அவன் பின்னால் வந்து கொண்டே இருக்க ஒரு கட்டத்தில் ரிஷியும் அவளிடம் தன் மனதை பறி கொடுத்தான்.

ரிஷி ஆகாஷ் சற்று சிவந்த நிறத்தில் எப்போதும் புன்னகை மாறாத முகத்துடன் தான் வலம் வருவான்.

அவனது அழகே ஆளை மயக்கும் அவனது புன்னகை தான்.

அந்த புன்னகைக்கு மயங்காத ஆட்களே இல்லை.

ரிஷி ஆகாஷின் கம்பீரமான தோற்றமும், மனதை சூறையாடும் அழகும் எல்லாவற்றுக்கும் மேலாக அவனது செல்வ செழிப்பும் பல பெண்களை அவன் பால் ஈர்க்கவே செய்தது.

இப்படியான சகல ஆளுமைகளும் நிறைந்த ஒருவன் தனக்கு கணவனாக வேண்டும் என்ற ஒரே ஒரு எண்ணத்தோடு ஆத்மிகா தன்னை சுற்றி வந்ததை ரிஷி ஆகாஷ் அப்போது அறிந்திருக்கவில்லை.

தன் தந்தையின் தொழிலை தன் பொறுப்பில்
தொடங்கியவன் குறுகிய காலத்தில் பல வெற்றிகளை காண ஆத்மிகாவோ இன்னும் அவன் மேல் போதை கொள்ள ஆரம்பித்தாள்.

ரிஷிக்கு பல நல்ல பண்புகள் இருந்தும் அவனை விட்டு பிரியாத ஒரு கெட்ட பழக்கமும் இருந்தது.

அது தான் முன் கோபம், அவனுக்கு முன் கோபம் அடிக்கடி வரும்.

சில சமயங்களில் எதையும் யோசிக்காமல் சட்டென்று எடுத்தெறிந்து பேசி விடுவான்.

ஆனால் சிறிது நேரம் கழித்து தன் தவறை உணர்ந்து மீண்டும் பழைய படி மாறி விடுவான் அது தான் ரிஷி.

அவனது முன்கோபத்தில் பலமுறை சிக்கி ஆத்மிகா அனுபவப்பட்டு இருந்தாலும் அவனது வசதி வாய்ப்புகளுக்காகவே அவனை விடாது அவள் சுற்றி வந்தாள்.

ரிஷியின் வீட்டினருக்கு அவளை மனதார பிடிக்கா விட்டாலும் அவனது சந்தோஷத்திற்காக அவளை தங்கள் வீட்டில் ஒருத்தியாக பார்க்க ஆரம்பித்தனர்.

நான்கு, ஐந்து வருடங்களாக காதலித்து வந்தவர்கள் இறுதியாக திருமணம் செய்து கொள்ள தங்களை தயார் படுத்த தொடங்கினர்.

அப்போது தான் ரிஷி ஆகாஷின் தொழிலுக்கு போட்டியாளானாக வந்தான் அபிமன்யு ராஜ்.

ஆறடி உயரத்தில் பாடி பில்டர் போன்ற உடலமைப்போடு, தொட்டாலே இரத்தம் வந்து விடுமோ என்ற நிறத்தில் கலியுக கண்ணனாக வெளிநாட்டில் மேற்படிப்பை முடித்து விட்டு வந்து நின்றவன் மேல் இலேசாக ஆத்மிகாவிற்கு ஒரு ஈடுபாடு வரத்தொடங்கியது.

ரிஷி பரம்பரை பணக்காரர்களாக இல்லாவிட்டாலும் அவர்கள் இது நாள் வரை சேர்த்து வைத்த சொத்துக்களே இன்னும் மூன்று, நான்கு தலைமுறைகளுக்கு போதுமானதாக இருந்தது.

ஆனால் அபிமன்யு பரம்பரை பணக்காரர் வம்சத்தை சேர்ந்தவன் அவனது தந்தை வேறு அரசியலில் மிகப்பெரும் புள்ளி.

அதனால் என்னவோ அபிமன்யுவோடு ரிஷியை ஒப்பிட்டு பார்க்க தொடங்கியவள் இறுதியில் ரிஷியை தூக்கி எறிந்து விட்டு அபிமன்யுவோடு தன் வாழ்க்கையை ஆரம்பித்து கொண்டாள்.

ஊரை எல்லாம் அழைத்து வெகு விமரிசையாக ரிஷி மற்றும் ஆத்மிகாவின் நிச்சயதார்த்தம் நடக்க இருக்க அத்தனை பேரின் முன்னிலையிலும் அவனை வேண்டாம் என்று கூறியவள் அபிமன்யுவின் கை பிடித்து அங்கிருந்து வெளியேறி செல்ல அன்று உடைந்து போய் அமர்ந்தவன் தான் இன்னும் அந்த நிலையில் இருந்து விடுபடவில்லை.

இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் கடந்து எல்லோரும் இயல்பு நிலைக்கு திரும்பி இருந்தாலும் ரிஷியால் மாத்திரம் இயல்பாக இருக்க முடியவில்லை.

வீட்டில் உள்ளவர்களுக்கு முன்னால் தன்னை சாதாரணமாக காட்டி கொள்பவன் தன் உயிர் தோழனின் முன்னால் மாத்திரமே இவ்வாறு தன் கவலை, கோபம், ஆற்றாமை என எல்லா இயல்புகளையும் காட்டுவான்.

அவனுக்கு எப்போதெல்லாம் ஆத்மிகாவின் ஏமாற்று வேலை ஞாபகம் வருகிறதோ அப்போதெல்லாம் இந்த பப்பே தஞ்சம் என்று இருப்பான்.

பழைய நினைவுகளோடு தள்ளாடிய படியே நடந்து வந்தவன் கால் தடுமாறி விழப் போக ஒரு இளம்பெண் அவனை சட்டென்று தன் கைகளால் அவனை பிடித்து நிறுத்தினாள்.

தன்னை பிடித்து நிமிர்த்திய பெண்ணை நிமிர்ந்து பார்க்காமலேயே
“தாங்க்ஸ் பாஸ்” என்று விட்டு செல்லப் போனவன்

“என்ன ரிஷி லவ் பெயிலியர் ரொம்ப வாட்டுதோ?” என்று நக்கலாக ஒலித்த குரலில் தன் ஒட்டுமொத்த போதையும் இறங்க அதிர்ச்சியாக திரும்பிப் பார்த்தான்.

கழுத்தில் இருந்து முழங்கால் வரை உடலை மொத்தமாக இறுக்கி பிடித்து உடல் வளைவுகளை அப்பட்டமாக காட்டும் சிவப்பு நிற கவுனோடு அதற்கேற்றார் போல ஆளை அடித்து வீழ்த்தும் ஒப்பனையோடு கேலியாக சிரித்துக் கொண்டே தன் முன்னால் நின்றவளைப் பார்த்து ரிஷியின் உதடுகள்
“ஆத்மிகா!” என்று முணுமுணுத்துக் கொண்டது.

“பரவாயில்லையே என் பெயர் கூட ஞாபகம் இருக்கே? என்ன மிஸ்டர் ரிஷி ஆகாஷ் ஒரேயடியாக விழுந்துட்டீங்க போல இந்த ஆத்மிகா இல்லாமல் வாழ்க்கை இல்லைன்னு தோணுதோ?” அவளது பேச்சில் போதை இறங்கி கோபம் நிறைந்து கொள்ள
தன் கோபத்தை மறைத்து சத்தமிட்டு சிரித்தவன் அவள் முன்னால் வந்து நின்று அவளை ஏற இறங்கப் பார்த்தான்.

“நீ இல்லாமல் நான் வாழ மாட்டேன்னு நினைச்சியா? அடச்சீ நீ இல்லாத வாழ்க்கை தான் டி எனக்கு சொர்க்கம் மாதிரி இருக்கு நினைத்த இடத்திற்கு நினைத்த நேரத்திற்கு போயிட்டு வர்றேன் பிரண்ட்ஸ் கூட ஜாலியாக டைம் ஸ்பெண்ட் பண்ணுறேன் எங்கே இருக்கேன் என்ன செய்யுறேன்னு யாருக்குமே சொல்ல தேவையில்லை ப்ரீ பர்ட் டி நான் ப்ரீ பர்ட் நொய்யு நொய்யுன்னு போன் பண்ணி பேச தேவையில்லை தப்பே பண்ணாமல் கண்ட கண்ட நா..”

“ரிஷி!” கோபமாக கத்தியவளைப் பார்த்து இன்னும் பலமாக சிரித்தவன்

“அடடா! மிஸஸ். அபிமன்யு ராஜ்க்கு கோபம் வருதோ? வரட்டும் வரட்டும் உன்னை மாதிரி ஒரு சில பொண்ணுங்களால ஒட்டுமொத்த பொண்ணுங்களுக்கும் கெட்ட பேரு நீயெல்லாம் உயிரோடு இருக்குறத விட செத்துப் போயிடுடி செத்துப் போ” என்றவாறே கோபமாக அவள் கழுத்தில் கை வைக்க போக

அவசரமாக அவர்கள் அருகில் ஓடி வந்த சந்துரு
“டேய்! என்னடா பண்ணிட்டு இருக்க? தேவையில்லாத ஆட்கள் கிட்ட உனக்கு என்ன பேச்சு வா போகலாம்” என்றவாறு ரிஷியை அங்கிருந்து இழுத்து கொண்டு சென்றான்.

ஆத்மிகாவோ அவர்கள் இருவரையும் வேண்டாத பொருளைப் பார்ப்பது போல பார்த்து விட்டு அங்கிருந்து நடந்து சென்று தன் நண்பர்களுடன் அரட்டை அடிக்க தொடங்கி இருந்தாள்.

“கொஞ்ச நேரத்துக்குள்ள பெரிய வம்பையே விலைக்கு வாங்கி வைச்சுருப்படா நீ நல்ல வேளை சரியான நேரத்திற்கு அங்கே நான் வந்தேன் இல்லைனே என்ன ஆகி இருக்கும்?”

“அந்த புள்ளப்பூச்சி எமலோகம் போய் இருப்பா! இனி யாரும் யாரையும் ஏமாற்ற நினைக்க மாட்டாங்க” சிரித்துக் கொண்டே ரிஷி கூறி விட்டு அவர்கள் காரில் சாய்ந்து நிற்க

அவன் முன்னால் வந்து நின்ற சந்துரு
“ஆமா மனசுக்குள்ள அப்படியே பெரிய சமூகசீர்திருத்தவாதினு நினைப்பு இந்த காலத்தில் நூற்றுக்கு எண்பது வீதமான ஆளுங்க இந்த ஆத்மிகா மாதிரி தான் இருக்காங்க அதற்காக எல்லோரையும் போய் கொலை செஞ்சு நாட்டை காப்பாற்ற போறியா?” என்று கேட்கவும்

சிறிது நேரம் அமைதியாக நின்றவன்
“யெஸ் கரெக்ட் ஐடியா!” என்றவாறே காரில் தட்ட அதை பார்த்து சந்துரு அதிர்ச்சியாக அவனை நிமிர்ந்து பார்த்தான்.

“டேய்! அது நான் விளையாட்டுக்கு சொன்னதுடா கொலை எல்லாம் பண்ணிடாதேடா ரிஷி!” பயத்தோடு தன்னருகில் வந்து நின்ற தன் நண்பனைப் பார்த்து சிரித்தவன்

அவனது தோளின் இரு புறமும் தன் கைகளை போட்டு கொண்டு
“டேய்! சந்துரு நான் அதை கரெக்ட்னு சொல்லலடா என் நண்பா என் மனசுக்குள்ள ஒரு திட்டம் ஓடிட்டு இருந்துச்சு அதற்கு தான் யெஸ் சொன்னேன்” என்று கூறவுமே அவனுக்கு நிம்மதியாக மூச்சு வெளிவந்தது.

“அந்த புள்ளப்பூச்சி என்ன சொன்னா? அவ இல்லாமல் வாழ்க்கை இல்லைன்னு தோணுதானு கேட்டா இல்ல? நீ வேணா பாரு சந்துரு இன்னும் எண்ணி ஒரே வருஷத்தில் ஒரு குடும்பப் பாங்கான பொண்ணை கல்யாணம் பண்ணி குழந்தை, குட்டினு நான் சந்தோஷமாக அவ கண்ணு முன்னாடி கெத்தாக வாழ்ந்து காட்டுறேன் அதை பார்த்து  பார்த்தே அவ சாகட்டும்” கைகளை சொடக்கிட்ட படியே கூறிய ரிஷியைப் பார்த்து சரியென்று தலை அசைத்த சந்துரு

“சரி டா ரிஷி! சூப்பர் பிளான்! ஆல் தி பெஸ்ட்! இப்போ வா வீட்டுக்கு போகலாம்” என்றவாறே அவனை காரினுள் தள்ளி ஏற்ற

அவன் கைகளை தட்டி விட்டபடியே காரில் ஏறி அமர்ந்தவன்
“நான் குடிச்சுட்டு போதையில் உளர்றனு தானே நீ நினைச்சுட்டு இருக்க நெவர் சந்துரு நெவர் இப்போ நான் சொன்னது உன் மேல…”

“டேய்!”

“இல்லை இல்லை இந்த கார் மேல சத்தியம் நீ வேணா பாருடா நான் சொன்னதை செய்வேன் நான் வாக்கு மாறாத சொக்கத்தங்கம் டா” என்று புலம்பிக் கொண்டே இருக்க தன் நண்பனைப் பார்த்து கவலை கொண்டவன் அவன் வீட்டை நோக்கி காரை செலுத்தினான்.

பெஷண்ட் நகர் பீச்சில் இருந்து இரண்டு, மூன்று கிலோமீட்டர் சற்று உள்ளே சென்று ஒரு பெரிய பங்களாவின் முன்னால் அவர்கள் கார் நின்றது.

வாட்ச்மேன் ஒருவர் வந்து வீட்டு கேட்டைத் திறக்க காரை கொண்டு சென்று அந்த வீட்டின் வாயிலின் முன்னால் நிறுத்தியவன் ரிஷியை கைத்தாங்கலாக அழைத்து கொண்டு வீட்டிற்குள் சென்றான்.

அந்த வீட்டின் ஹாலோ விளையாட்டு மைதானத்தை போல பரந்து விரிந்து விசாலமாக இருந்ததோடு அங்கிருந்த ஒவ்வொரு பொருட்களுமே அந்த வீட்டின் செல்வ செழிப்பை நன்கு பறைசாற்றியது.

அங்கிருந்த ஸோபாவில் கவலையாக அமர்ந்திருந்த ஒரு நடுத்தர வயது பெண்மணி சந்துரு மற்றும் ரிஷியைப் பார்த்ததும் அவசரமாக அவர்களை நெருங்கி வந்தார்.

“இன்னைக்கும் குடிச்சுட்டு தான் வந்து இருக்கானா இவன்?” ஆற்றாமையோடு கேட்டவரைப் பார்த்து பதில் பேச முடியாமல் சந்துரு தலை குனிந்து நின்றான்.

“நீயாவது அவனுக்கு எடுத்து சொல்ல கூடாதா சந்துரு? குடித்து குடித்து இப்படி உடம்பை கெடுத்துக்கிறானே இவன்!”

“இல்லை க்கா நான் எவ்வளவு சொல்லியும் ஜஸ்ட் வன்னு சொல்லி தான் குடிச்சான் பட் கொஞ்சம் ஓவர் ஆகிடுச்சு இனி இப்படி நடக்காமல் பார்த்துக்குறேன்க்கா”

“ஒரு வருஷமா இப்படி இனி நடக்காதுனு தானே இரண்டு பேரும் சொல்லிட்டு இருக்கீங்க ஆனா எந்த மாற்றத்தையும் காணல”

“ஸாரி க்கா”

“சரி சரி அம்மா, அப்பா சத்தம் கேட்டு எழுந்து வந்து இதெல்லாம் பார்க்க வேண்டாம் ஏற்கனவே அம்மா ரொம்ப மனசொடிஞ்சு போய் இருக்காங்க அவனை அவன் ரூம்லயே கொண்டு போய் விட்டுடலாம் வா”

“இல்லக்கா பரவாயில்லை நான் தனியாகவே அவனை கூட்டிட்டு போறேன் அப்புறம் உங்க மேலயும் வாடை அடிக்கும்” என்றவாறே சந்துரு ரிஷியை கூட்டிக் கொண்டு செல்ல அவரோ கண்கள் கலங்க அவர்கள் இருவரையும் பார்த்து கொண்டு நின்றார்.

“ஆரம்பத்திலேயே அந்த பொண்ணு இந்த வீட்டுக்கு வேண்டாம்னு சொல்லி இருந்தால் இவ்வளவு தூரம் இந்த பிரச்சினை போய் இருக்காதோ?” யோசனையோடு நின்றவரின் தோளில் ஆதரவாக ஒரு கரம் பட அந்த ஸ்பரிசத்தில் அவர் திரும்பி பார்த்தார்.

“என்ன அர்ச்சனா! பன்னிரண்டு மணி ஆகப்போது இன்னும் தூங்காமல் என்ன பண்ணிட்டு இருக்க?” என்று கேட்டவரது கையின் மேல் தன் கையை வைத்தவர்

“சந்துரு ரிஷியைக் கூட்டிட்டு வந்தான் அது தான் பார்த்துட்டு நின்னேன்” எனவும்

புன்னகையோடு அவரைப் பார்த்தவர் பெருமூச்சு ஒன்றை விட்டு கொண்டே
“ஒரு வருஷமா ரிஷி ரொம்ப மாறிட்டான் யாரு கூடவும் பேசுறதும் இல்ல வீட்டுக்கு நேரத்துக்கு வர்றதும் இல்லை நானும் அவன் கூட பேச தான் இருக்கேன் நாளைக்கு சன்டே தானே ப்ரீயா பேசலாம் இப்போ போய் தூங்கு மா போ பாப்பா முழிச்சுட்டானா அப்புறம் உன்னை தேடி அழுவா” எனவும் அவரை பார்த்து சரியென்று விட்டு மற்றைய புறமாக அவர் நடந்து சென்றார்.

மனம் நிறைந்த கவலையுடன் செல்லும் தன் மனைவியை பார்த்து கொண்டு நின்றவர்
“மாமா நான் போயிட்டு வர்றேன்” என்ற சந்துருவின் குரலில் தன் சிந்தனை கலைந்து திரும்பி பார்த்தார்.

“இன்னைக்கு எத்தனை ரவுண்டு?” கேள்வியாக பார்த்தவரை பார்த்து தலை குனிந்து கொண்டவன்

“பாவிப் பயலே ரிஷி! உன்னால எல்லோரும் என்னை ரவுண்டு கட்டுறாங்க நாளைக்கு வந்து உன்னை கும்மி எடுக்குறேன்டா!” என முணுமுணுத்துக் கொண்டே அவரை நிமிர்ந்து பார்த்து கையில் மடித்து இருந்த ஒவ்வொரு விரலாக நிமிர்த்த அவரோ அதிர்ச்சியாக அவனை பார்த்து கொண்டு நின்றார்.

“என்னடா ஒவ்வொரு விரலாக விரிச்சுட்டே போற? கடை மொத்தமாக அவன் வயிற்றில் தான் இருக்கா என்ன?” அதிர்ச்சியாக கேட்டவரை பார்த்து

புன்னகத்து கொண்டே
“அவ்வளவு இல்ல மாமா ஜஸ்ட் நாலு தான் நாலே நாலு தான்” என்றவாறே மெல்ல மெல்ல
அங்கிருந்து விலகி நடந்து சென்று வாசலைத் தாண்டி ஓடி சென்றவன் அதே வேகத்தோடு தன் காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டு சென்றான்.

“கண்டிப்பாக நாளைக்கு என்ன வேலை இருந்தாலும் ரிஷியோடு பேசணும்” என்று முடிவெடுத்து கொண்ட ரிஷியின் மாமா மணிமாறன் அதே உறுதியான மனநிலையோடு தங்கள் அறையை நோக்கி சென்று விட மறுபுறம் ரிஷி தூக்கமும், போதையும் ஒன்று சேர உளறிக் கொண்டே கட்டிலில் உருண்டு புரண்டு கொண்டிருந்தான்.

  1. “நான் சொன்னதை செய்வேன் டா சந்துரு கல்யாணம் பண்ணுவேன் நான் கல்யாணம் பண்ணுவேன் நல்ல குடும்ப பொண்ணா நல்ல தெய்வீகம் நிறைந்த பொண்ணா என் பொண்டாட்டி வருவா டா வருவா! மை டியர் வைஃப் வேர் ஆர் யூ? மை வைஃப்பே!” ரிஷி இங்கே சென்னையில் தன் அறையில் இருந்து கொண்டு புலம்பிக் கொண்டு இருக்க வசந்தபுரத்தில் நாயகி இல்லத்தில் தன் அறையில் ஆழ்ந்து தூங்கி கொண்டிருந்த அனுஸ்ரீயோ ஏதோ ஒரு சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்து சுற்றிலும் பார்த்து விட்டு எதுவும் இல்லாமல் போகவே மீண்டும் கண்களை மூடி உறங்கிப் போனாள்…….