Mayam-3

காலையில் பறவைகளின் ஒலி கேட்டு கண் விழித்த அனுஸ்ரீ எப்போதும் போல காலையில் எழுந்ததும் கண்களை மூடி கடவுளை வணங்கி கொள்வது போல் அன்றும் கடவுளை மனதார வணங்கி கொண்டே புன்னகையோடு கட்டிலில் இருந்து கீழிறங்கி நின்றாள்.

மெல்ல அடி வைத்து நடந்து சென்றவள் பால்கனி கதவைத் திறக்க அதிகாலை நேரத்து இளங்காற்று அவள் மேனியை தழுவி சென்றது.

அந்த இதமான நிலையை ரசித்து கொண்டு நின்றவள் அவளது பால்கனியில் அமைக்கப்பட்டிருந்த சிறு தோட்டத்தை நோக்கி நடந்து சென்றாள்.

அனுஸ்ரீக்கு வெண்ணிறம் என்றால் அலாதி ப்ரியம்.

அதனால் என்னவோ அந்த சிறு தோட்டம் முழுவதும் வெண்ணிற ரோஜாக்களும், மல்லிகை, முல்லை, சம்பங்கி பூக்களும் நிறைந்து போய் இருந்தது.

அந்த பால்கனியில் ஒரு மூலையில் ஒரு பெரிய தொட்டி அமைக்கப்பட்டிருக்க அதில் மழை நீரை சேகரிக்கும் வகையில் பல உபகரணங்களும் பொருத்தப்பட்டிருந்தது.

இரண்டு நாட்களுக்கு முன்னர் பெய்த மழை நீர் அந்த தொட்டியில் சேமித்து வைக்கப்பட்டிருக்க அந்த நீரை அங்கிருந்த ஒவ்வொரு மரங்கள் மீதும் தெளித்துக் கொண்டிருந்த அனுஸ்ரீ அவ்வப்போது கீழே தோட்டத்தையும் நோட்டம் விட்டு கொண்டு நின்றாள்.

அன்றைய நாள் எந்த வகையான நாளாக அமையும் என்பது அவளுக்கு தெரியாது.

ஆனால் ஒவ்வொரு நாள் காலையிலும் இப்படி மரங்களோடு தன் நாளை ஆரம்பிப்பது அனுஸ்ரீக்கு அவ்வளவு பிடித்தமான விடயம்.

சென்னையில் தன் தாய், தந்தையரோடு இருக்கும் போது கூட சிறு சிறு தொட்டிகளில் மரங்களை நட்டு பராமரித்து வந்தவளுக்கு இப்போது வரை அந்த மரங்களே உற்ற தோழர்கள்.

தன் சோகம், கவலை எல்லாவற்றையும் வேறு யாரிடமும் பகிர்ந்து கொள்ளாவிட்டாலும் தன் தோட்டத்து மரங்களிடமும், மலர்களிடமும் பகிர்ந்து கொள்ளுவாள்.

அன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் வேறு என்பதால் அக்கம்பக்கத்தில் உள்ள சிறு பிள்ளைகள் எல்லாம் அவளிடம் வீட்டு பாடங்களில் உள்ள சந்தேகங்களை கேட்க வருவர்.

அதனால் விரைவாக தோட்டத்து வேலைகளை எல்லாம் முடித்து விட்டு அனுஸ்ரீ குளியலறைக்குள் நுழைந்து கொண்ட வேளை
மறுபுறம் சென்னையில் ரிஷி ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தான்.

எங்கோ ஒரு மூலையில் கனவில் கதவு தட்டும் சத்தம் கேட்பது போல இருக்கவும் வெகு சிரமப்பட்டு தன் கண்களை திறந்தவன் அப்போது தான் அந்த சத்தம் தன் அறைக் கதவை தட்டும் சத்தம் என்பதை உணர்ந்து கொண்டான்.

மெல்ல தட்டுத்தடுமாறி எழுந்து அமர்ந்தவன் தலையோ யாரோ அதன் உள்ளிருந்து மத்தளம் அடிப்பது போல தாறுமாறாக வலித்துக் கொண்டிருந்தது.

அது போதாதென்று கதவையும் விடாமல் யாரோ தட்டி கொண்டே நிற்க கோபமாக எழுந்து கொண்டவன் அதே கோபத்துடன் கதவைத் திறக்க அங்கே கையில் ஒரு ட்ரேயோடு அர்ச்சனா நிற்க அவரருகில் மணிமாறன் நின்று கொண்டிருந்தார்.

“ப்ச்! என்னக்கா இது? இந்த காலங்கார்த்தாலேயே வந்து எதுக்கு டிஸ்டர்ப் பண்ணுற? இன்னைக்கு சன்டே தானே? கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க விடக்கூடாதா?” சலிப்போடு கேட்டு கொண்டே மீண்டும் ரிஷி சென்று கட்டிலில் விழுந்து கொள்ள அர்ச்சனாவும், மணிமாறனும் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு அவன் முன்னால் வந்து நின்றனர்.

“ரெஸ்ட் தான் நீ தினமும் பார்ல போய் எடுத்துட்டு தானே வர்ற ரிஷி? இதற்கு மேலயும் உனக்கு ரெஸ்ட் வேணும்னா வீட்டிலேயே ஒரு ஓரமாக பார் ஆரம்பிக்க சொல்லலாமா?” கையில் இருந்த ட்ரேயை அவனது கட்டிலின் அருகில் இருந்த மேஜையின் மேல் வைத்தவாறு கேட்ட அர்ச்சனாவை சங்கடமாக பார்த்து கொண்டே ரிஷி தன் கட்டிலில் இருந்து எழுந்து அமர்ந்தான்.

“ஸாரிக்கா வர்க் டென்ஷன் அது தான்”

“ஒரு வருஷமா வர்க் டென்ஷனா? ஏன் அப்பா கூட தான் இந்த தொழிலில் 30 வருஷமாக இருந்தாங்க அவங்க ஒரு நாளும் இப்படி வந்து நிற்கலயே ஏன் அவங்க வேலை பார்த்தப்போ வர்க் வரலயா? இல்லை அந்த வர்க்ல டென்ஷனே வரலயா?”

“அக்கா எல்லாம் தெரிஞ்சுகிட்டே நீ இப்படி பேசலாமா?”

“என்ன எல்லாம்…”

“அர்ச்சனா கொஞ்சம் பொறுமையாக பேசு அவன் மனநிலையில் இருந்து கொஞ்சம் யோசித்து பார்த்து பேசும்மா அவன் பிரச்சினை என்னன்னு கேட்டு அதற்கு நாம தானே பதில் சொல்லணும் அதை விட்டு இன்னும் அவனை கஷ்டப்படுத்துனா எப்படி?” அர்ச்சனாவின் தோளில் கை வைத்தவாறு மணிமாறன் கேட்க திரும்பி அவரை பார்த்தவர் கோபத்துடன் தன் முகத்தை திருப்பிக் கொண்டார்.

“அக்கா ப்ளீஸ் க்கா! கோபப்படாதே! நான் என்ன ஆசைப்பட்டா இதெல்லாம் பண்ணுறேன்? என்ன பண்ணுறதுனு தெரியாமல் பண்ணிட்டு இருக்கேன் நீ வேணும்னா பாரு இனி நான் ட்ரிங்ஸை தொடவே மாட்டேன்” அர்ச்சனாவின் தாடையைப் பிடித்து கெஞ்சலாக கேட்ட ரிஷியின் கையை தட்டி விட்டவர்

“இது வரைக்கும் இப்படி பத்தாயிரம் தடவை சொல்லிட்ட” என்று கூறவும் மணிமாறனும் அவனை குற்றம் சாட்டும் வகையில் திரும்பி பார்த்தார்.

“சரி இன்னைக்கு என்ன டேட்? அக்டோபர் பர்ஸ்ட் இப்போ சொல்லுறேன் இந்த புது மாத தொடக்கத்தில் இருந்து இந்த ரிஷியைப் பழைய ரிஷியாக நீங்க பார்ப்பீங்க இதுல எந்த மாற்றமும் இல்லை இது சத்தியம், உண்மை, உறுதி”
ரிஷி உறுதி மொழி எடுத்துக் கொள்வது போல கூற அவன் கூறியதை கேட்டு அர்ச்சனாவும், மணிமாறனும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.

“அய்யோ! அக்கா, மாமா சீரியஸாக தான் நான் சொல்லுறேன் நான் இனி எப்போதும் ட்ரிங்ஸ் எடுக்க மாட்டேன்”

“ரிஷி! உண்மையாக தான் சொல்லுறியாடா?” சந்தேகமாக கேட்ட தன் அக்காவின் கைகளை எடுத்து தன் கைகளுக்குள் வைத்து கொண்டவன்

“மதர் ப்ராமிஸ் க்கா இனி என்னை எப்போதும் பழைய ஜாலியான ரிஷியாகத் தான் நீங்க பார்ப்பீங்க இது சத்தியம் சத்தியம் சத்தியம் போதுமா?” என்று கூற

“ரிஷி!” என்றவாறே ஆனந்தமாக அர்ச்சனா அவனை அணைத்துக் கொண்டார்.

“எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்குடா! நீ மறுபடியும் பழைய படி எப்போ மாறி எல்லார் கூடவும் பேசுவேன்னு தான் இத்தனை நாளாக நாங்க எல்லோரும் காத்து இருந்தோம் இப்போ நீயே இப்படி சொல்லும் போது அவ்வளவு சந்தோஷமாக இருக்கு இது இப்படியே மாறாமல் இருந்தால் சரி அப்புறம் அப்படியே அந்த கல்யாண விஷயமும்” அர்ச்சனா சற்று இழுத்தவாறே கேட்க

ரிஷி புன்னகையோடு
“உங்க இஷ்டப்படி பண்ணுங்க எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை” என்றவாறே தன் அக்காவின் கன்னத்தை பிடித்து ஆட்டினான்.

“நிஜமாக தான் சொல்லுறியாடா? என்னால நம்பவே முடியலயே!” ஆச்சரியமாக கேட்டவரை பார்த்து புன்னகத்தவன்

“ஒரு சந்தேகமும் வேண்டாம் நான் இப்போ சொல்றது எல்லாம் கன்பர்மான விஷயம் ஷோ நோ டவுட்” என்று கூற

“அய்யோ! எனக்கு கையும் ஓடல காலும் ஓடல நான் இப்போவே அம்மா கிட்ட இந்த நல்ல செய்தியை சொல்லிட்டு வர்றேன்” என்றவாறே அர்ச்சனா சந்தோஷமாக அங்கிருந்து சென்றார்.

மகிழ்ச்சியாக செல்லும் தன் மனைவியை பார்த்து புன்னகத்து கொண்ட மணிமாறன் ரிஷியின் புறம் திரும்பி
“ரிஷி உன் மனசார தானே இந்த முடிவு எடுத்து இருக்க? இல்லை உங்க அக்காவை சமாதானப்படுத்த சும்மா சொன்னியா?” என்று கேட்க

“அய்யோ! மாமா நான் நிஜமாக தான் சொல்லுறேன் நேற்று நைட் தான் இந்த முடிவை எடுத்தேன் இப்போ அந்த முடிவில் கன்பர்மாக இருக்கேன்” என்று உறுதியாக கூற

புன்னகையோடு அவனது தோளில் தட்டி கொடுத்தவர்
“நான் இதை பற்றி உன் கிட்ட பேசணும்னு நேற்று நைட் நினைச்சேன் இப்போ நீயே இவ்வளவு உறுதியாக முடிவு எடுத்து இருக்க. ரொம்ப சந்தோஷமாக இருக்கு டா ரிஷி எப்போதும் இப்படியே நல்ல முடிவுகளை எடுக்க பாரு” என்று விட்டு வெளியேறி சென்றார்.

ரிஷி ஆகாஷ் சுவாமிநாதன் மற்றும் பத்மினி தம்பதியினரின் இரண்டாவது வாரிசு.

சுவாமிநாதன் பல துறைகளில் தொழில் நடத்தி அதில் பல வெற்றிகளை கண்ட ஒரு நல்ல மனிதர்.

ஒரே பார்வையில் யாரையும் எளிதில் எடை போட்டு விடக்கூடியவர்.

பத்மினி தன் கணவன் மற்றும் பிள்ளைகள் மீது அலாதியான பாசம் கொண்ட சிறந்த குடும்பத்தலைவி மற்றும் சுவாமிநாதனின் சிறந்த பக்க பலமாக இருப்பவர்.

அவர்களது மூத்த வாரிசு அர்ச்சனா குழந்தைகள் நல மருத்துவராக கடமையாற்றிக் கொண்டிருக்கார்.

அவரது கணவர் மணிமாறன் அர்ச்சனா வேலை பார்க்கும் அதே வைத்திய சாலையில் பிஸியோதெரபிஸ்டாக பணியாற்றி வருகிறார்.

அவர்களுக்கு ஒரு செல்ல மகள்.

மூன்று வயது நிரம்பிய அம்ருதா அந்த வீட்டிற்கே செல்ல பிள்ளை.

அடுத்ததாக ரிஷி ஆகாஷ் அந்த வீட்டின் ஒரே ஆண் வாரிசு.

தன் குடும்பத்தை எந்த சூழ்நிலையிலும் விட்டு கொடுக்க விரும்பாதவன்.

தன் தாய்க்கு எப்போதும் செல்ல பிள்ளை.

எப்போதும் சந்தோஷமாக இருந்து வந்த அவர்களது குடும்பம் சிறிது நாட்களாக ஒரு சில இன்னல்களை சந்தித்து இருக்க இனி அந்த கஷ்டங்கள் எல்லாம் அவர்களை விட்டு விலகி செல்லுமா என்பது இனி வரும் காலங்களிலேயே தெரியவரும்.

*******************************************
நாயகி இல்லத்தில் வாசலில் நின்ற அரச மரத்தின் கீழ் பிள்ளைகள் ஒரு சிலர் வட்ட வடிவில் அமர்ந்து இருக்க அனுஸ்ரீ அவர்கள் எல்லோருக்கும் நடுவில் அமர்ந்து இருந்து அவர்கள் எல்லோருக்கும் வீட்டுப் பாடத்தை சொல்லி கொடுத்து கொண்டிருந்தாள்.

வீட்டின் முற்றத்தில் அமர்ந்திருந்த தெய்வநாயகியோ கனத்த மனதோடு தன் பேத்தியை பார்த்து கொண்டிருந்தார்.

அவரின் நினைவுகளோ சிறிது காலம் பின்னோக்கி நகர்ந்தது.

தன் குழந்தை பிறந்து ஒரு சில வருடங்களிலேயே தன் கணவர் இறந்து விட தோட்டத்தை பராமரித்தும், வயல் நிலங்களை குத்தகைக்கு விட்டும் வந்த பணத்தை கொண்டு தன் வாழ்க்கையை நடத்தி வந்த தெய்வநாயகிக்கு தன் ஒரே மகளான ராதா என்றால் அத்தனை பிரியம்.

தன் மகளுக்காக எதையும் செய்ய அவர் தயங்கியதில்லை.

மேற்படிப்புக்காக கிராமத்தில் இருந்து வெளியேறி வெளியூர் சென்று படித்த ராதா அங்கேயே வேலை கிடைத்து விட அப்படியே அந்த ஊரில் தங்கி விட்டார்.

அவ்வப்போது ஊருக்கு வந்து செல்பவர் ஒரு நாள் தன்னோடு ஒன்றாக வேலை பார்க்கும் தன் சக நண்பன் முத்துராமன் என்பவரை விரும்புவதாக வந்து கூற முதலில் தெய்வநாயகிக்கு ஒன்றும் புரியவில்லை.

சிறிது நேரம் யோசித்து பார்த்தவர் மகளின் ஆசைகளுக்கு எப்போதும் தடை சொல்லாததால் என்னவோ இந்த விடயத்திற்கும் தடை சொல்லவில்லை.

ஊரையே அழைத்து தன் மகளின் திருமணத்தை கோலகலமாக நடத்தியவர் தன் மகள் இனி எப்போதும் சந்தோஷமாக இருக்கக்கூடும் என்று நினைத்து இருக்க திருமணம் முடிந்த இரண்டே வருடங்களில் கணவரோடு சண்டை போட்டு விட்டு ராதா மீண்டும் தன் தாய் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.

பிரச்சினை என்னவென்று விசாரித்து பார்த்ததில் திருமணம் முடித்த கையோடு வேலையை விட்டு ராதாவை நிறுத்திய முத்துராமன் தான் மட்டும் வேலை பார்த்தால் போதும் என்று கூறி இருந்தார்.

அதில் ராதாவுக்கு முழுமையாக உடன்பாடு இருக்கவில்லை.

இருந்தும் ஆரம்பத்தில் அவர் அதற்கு சற்று இணங்கி இருந்தாலும் நாளாக நாளாக அவரது ஆடம்பர தேவைகள் அதிகரித்து கொண்டே சென்றது.

இதனால் அடிக்கடி இருவருக்கும் இடையே சண்டை உருவாகத் தொடங்கியது.

ஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்துக்
கொள்ள முடியாமல் ஒரு நாள் முத்துராமன் ராதாவை அடித்து விட அவரோ மயங்கி விழுந்தார்.

அதை பார்த்து பதறி போன முத்துராமன் உடனடியாக அவரை வைத்திய சாலையில் அனுமதிக்க அப்போது தான் ராதா கர்ப்பமாக இருக்கும் விஷயம் அவருக்கு தெரியவந்தது.

அதன் பிறகு அவர் தன் மனைவியை பூப்போல பார்த்து கொள்ளத் தொடங்கினார்.

ராதா ஆசைப்பட்ட எல்லாவற்றையும் அவரது காலடியில் கொண்டு போய் சேர்த்தார் முத்துராமன்.

குழந்தை பிறந்து ஒரு வருடம் கடந்த நிலையில் மீண்டும் ராதா பழைய படி மாறி விட முத்துராமன் அவரோடு சண்டை போட விருப்பமின்றி தன் நாள் முழுவதையும் ஆபிஸிலேயே கழிக்கத் தொடங்கினார்.

பிரச்சினை பற்றி கேட்டறிந்த தெய்வநாயகி தன் மகளை சமாதானப்படுத்தி மீண்டும் அவர் கணவரோடு அனுப்பி வைக்க அவரோ மாதத்திற்கு ஒரு தரம் இப்படி சண்டை போட்டு கோபித்துக் கொண்டு வரத்தொடங்கி இருந்தார்.

தன் மகளின் குணம் தெய்வநாயகிக்கு தெரிந்து இருந்தாலும் கணவன் மனைவி சண்டையில் பாதிக்கப்படும் தன் பேத்தியை எண்ணி அவர் தினம் தினம் மனதிற்குள் வருந்தி கொண்டிருக்க அனுஸ்ரீயோ தன் பாட்டிக்கு எப்போதும் ஆறுதலாக இருந்து கொண்டிருந்தாள்.

நாளாக நாளாக இவர்கள் பிரச்சினை பற்றி யாரும் கண்டு கொள்ளாமல் இருந்து விட நாட்கள் பல வருடங்களாக உருண்டோடி வந்து நின்றது.

இப்படி பிரச்சினையோடு அவர்கள் நாட்கள் நகர்ந்து கொண்டிருந்த வேளை ஒரு நாள் அனுஸ்ரீ தெய்வநாயகிக்கு போன் எடுத்து ராதா மற்றும் முத்துராமன் விவாகரத்து செய்து விட்டதாக கூற அவரோ பதறி போனார்.

தன் மகளின் வாழ்க்கை இப்படி ஆகி விட்டதே என்ற கவலை ஒரு புறம் தன் பேத்தியின் எதிர்கால வாழ்க்கையின் அச்சம் ஒரு புறம் என அவர் துவண்டு போய் இருக்க அனுஸ்ரீயோ
“நான் எப்போதும் உங்களுக்கு துணையாக இருப்பேன்” என்று விட்டு அவரோடு வந்து தங்கி கொண்டாள்.

என்ன தான் பேத்திக்கு ஆறுதலாக அவர் இருந்தாலும் அவளுக்கு ஒரு நல்ல சந்தோஷமான வாழ்க்கையை எவ்வாறு ஏற்படுத்தி கொடுப்பது என்ற ஒரு கவலை அவர் மனதில் இருந்து கொண்டே இருந்தது.

“என்ன பாட்டி யோசனை எல்லாம் பலமாக இருக்கு?” தன் கையில் இருந்த புத்தகங்களை எல்லாம் அங்கிருந்த மேஜையின் மீது வைத்த அனுஸ்ரீ தெய்வநாயகியின் அருகில் அமர்ந்து கொண்டவாறே கேட்க

அவளது தலையை ஆதரவாக வருடிக் கொடுத்தவர்
“எல்லாம் உன் கல்யாணத்தைப் பற்றிய யோசனை தான் அனும்மா” என்று கூற அவரது பதிலைக் கேட்டவள் சட்டென்று அமைதியாக தலை குனிந்து கொண்டாள்.

“என்னாச்சு அனும்மா?”

“பாட்டி எனக்கு கல்யாணம் எல்லாம் வேண்டாம் நான் இப்படியே உங்க கூடவே இருக்கேன் பாட்டி ப்ளீஸ்”

“நீ புரிஞ்சு தான் பேசுறியா அனும்மா? எத்தனை நாளைக்கு நான் உன்னை பார்த்துக்க முடியும் சொல்லு? என் காலம் இன்னும் நாள்ல முடிஞ்சுடும் அதற்கு அப்புறம் உன்னை யாரு பார்த்துக்குவா? நான் பெற்றது தான் சரி இல்லை அவளுக்கு பிறந்த பாவத்திற்காக நீயும் கஷ்டப்படணுமா?” கண்கள் கலங்க கேட்ட தெய்வநாயகியின் தோளில் சாய்ந்து கொண்ட அனுஸ்ரீ

“உங்களுக்கு எப்படி சொல்லி புரிய வைக்கிறதுனு தெரியல பாட்டி சின்ன வயதிலிருந்தே அம்மா, அப்பா சண்டையை பார்த்து வளர்ந்ததால் என்னவோ எனக்கு கல்யாணத்துக்கு மேல இஷ்டமும் இல்லை, நம்பிக்கையும் இல்லை” என்று கூற அவரோ அதிர்ச்சியாக அவளைத் திரும்பி பார்த்தார்.

“இனி இதை பற்றி பேச வேண்டாம் பாட்டி இதோட இந்த பேச்சை விட்டுடலாம்” என்று விட்டு அனுஸ்ரீ வீட்டினுள் சென்று விட தெய்வநாயகியோ அவள் சொன்ன வார்த்தைகளை கேட்ட அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாமல் கலக்கத்தோடு அமர்ந்திருந்தார்.

“பாட்டி!” தாமரையின் குரல் கேட்டு தன் சிந்தனையில் இருந்து வெளி வந்தவர் கேள்வியாக அவளை நோக்கினார்.

“நீங்க கவலைப்பட வேண்டாம் பாட்டி! நிச்சயமாக அனுக்கா கல்யாணம் பண்ணிப்பாங்க உங்க கொள்ளுப் பேரப் பிள்ளைகள் எல்லாம் இந்த வீட்டில் ஓடி விளையாடித் திரியுறதை நீங்க பார்க்க தான் போறீங்க நீங்க அக்காவுக்கு மாப்பிள்ளை பார்க்க தொடங்குங்க பாட்டி நிச்சயமாக அனுக்கா கல்யாணத்துக்கு சம்மதிப்பாங்க” உறுதியாக கூறிய தாமரையை வியப்பாக பார்த்தார் தெய்வநாயகி.

“எப்படி இவ்வளவு உறுதியாக சொல்லுறேன்னு பார்க்குறீங்களா? நேற்று கோவிலுக்கு போய் இருந்தப்போ நான் சாமி கிட்ட அனுக்காக்கு கூடிய சீக்கிரமே கல்யாணம் நடக்கணும்னு வேண்டிக்கிட்டு பூ எடுத்தேன் சாமியே என் வேண்டுதலை ஏத்துக்கிட்ட மாதிரி மஞ்சள் பூவை கொடுத்தாரு தெரியுமா?”
கள்ளங் கபடமின்றிய புன்னகையோடு கூறிய தாமரையின் தலையை சிரித்துக் கொண்டே வருடிக் கொடுத்த தெய்வநாயகி

“நீ சொன்ன மாதிரியே எல்லாம் நடந்துச்சுன்னா உன் வாய்க்கு சக்கரை தான் அள்ளி போடுவேன்” என்று கூறவும்

அவளோ
“சக்கரை எல்லாம் வேண்டாம் பாட்டி சக்கரையை கொஞ்சம் வறுத்த ரவை, நெய்யோடு சேர்த்து கேசரியாக பண்ணி கொடுங்க அது போதும்”
என்று கூற அதைக் கேட்டு அவர் வாய் விட்டு சிரிக்க தொடங்கினார்.

வீட்டின் உள்ளே இருந்து கொண்டு அவர்கள் பேசியதை எல்லாம் அனுஸ்ரீ கேட்டு சிரித்துக் கொண்டு இருந்தாலும் தன் பாட்டியின் மனதில் இருந்த ஏக்கம் அவளுக்கு புரியாமல் இல்லை.

ஆனால் சிறு வயது முதல் அவள் மனதில் பதிந்த விடயங்களும், மனதில் மறைத்து வைத்த அவனது ஞாபகங்களும் சேர்ந்து அவளை திருமணத்திற்கு ஒத்துக் கொள்ள வைக்க முடியாமல் கட்டி வைத்து இருந்தது.

அவள் தன் மனதில் இருந்த முடிவோடு உறுதியாக தன் அடுத்த வேலைகளை கவனிக்க செல்ல அவள் மன உறுதியை ஆட்டம் காண செய்யப் போகும் அந்த மாயக்காரனோ இன்னும் சிறிது நாட்களில் அவளை தேடி வரக் காத்திருந்தான்……