Mayam-4

குளித்து முடித்து விட்டு ரிஷி தயாராகி தன் அறையில் இருந்து வெளியேறி ஹாலை நோக்கி நடந்து வர அங்கே அவனது வருகைக்காக காத்திருந்த பத்மினி அவனை பார்த்ததுமே
“ரிஷி!” என்றவாறே புன்னகையோடு நெருங்கி வந்தார்.

“என்னம்மா காலையிலேயே உங்க முகம் இவ்வளவு ஜொலி ஜொலிக்குது? என்ன விஷேசம்?” புன்னகையோடு கேட்டவனின் தலையை செல்லமாக கலைத்து விட்டவர்

“அது தான் அர்ச்சனா நீ சொன்ன எல்லாவற்றையும் என் கிட்ட சொல்லிட்டாளே! இதற்கு மேல எனக்கு வேற என்ன சந்தோஷம் இருக்கு சொல்லு? எங்க நீயும் குடித்து குடித்து உன் உடம்பை கெடுத்து கல்யாணமே வேண்டாம்னு இருந்துடுவியோனு பயந்துட்டே இருந்தேன் நல்ல வேளை காலையில் முதல் விஷயமாக இதைக் கேட்டதும் எவ்வளவு சந்தோஷமாக இருந்தது தெரியுமா?” என்று கூறவும் தன் முக வாட்டத்தை மறைத்து சிரித்துக் கொண்டே அவர் கன்னத்தை பிடித்து ஆட்டியவன் அவர் கை பிடித்து அங்கிருந்த ஷோபாவில் அவரை அமரச் செய்து விட்டு அவரருகில் அமர்ந்து கொண்டான்.

“ஸாரி ம்மா உங்க எல்லாரையும் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் இல்லையா?”

“இல்லைபா ரிஷி அப்படி எல்லாம் எதுவும் இல்லை இந்தளவிற்கு நீ பழைய படி மாறி வந்ததே எங்களுக்கு போதும்”

“ஓகே ஓகே அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் பட் நான் கல்யாணம் பண்ணிக்கணும்னா ஒரு சில கன்டிஷன்ஸ் இருக்கே!” என்று ரிஷி கூற

“கன்டிஷன்ஸா? ஏது இந்த மணல் கயிறு படத்தில் எட்டு கன்டிஷன் போடுவாங்களே அப்படியா?” என கேள்வியாக அர்ச்சனாவும், பத்மினியும் அவனை பார்த்தனர்.

“சேச்சே! அப்படி எல்லாம் இல்லை ரொம்ப ரொம்ப சிம்பள் கன்டிஷன்ஸ் தான்
கன்டிஷன் நம்பர் வன் பொண்ணு மாடர்ன் பற்றி தெரிந்து இருக்கலாம் பட் நல்ல குடும்ப பாங்கான பொண்ணா இருக்கணும் அதாவது பேமிலிக்கு முக்கியத்துவம் கொடுக்கணும், எல்லோருக்கும் அன்பை வாரி வாரி வழங்கணும்”

“பார்ரா! அடுத்த கன்டிஷன் என்ன?” என்று கேட்ட மணிமாறன் புறம் திரும்பியவன்

“இந்த வசதி, வாய்ப்பு எல்லாம் நமக்கு தேவையில்லை ஏழையாக இருந்தாலும் நல்ல குணம் நிறைந்த பொண்ணா இருக்கணும்” என்று கூற

அவனருகில் மற்றைய புறமாக வந்து அமர்ந்து கொண்ட அர்ச்சனா
“அடுத்த கன்டிஷனை நான் சொல்லுறேன் பொண்ணு பார்க்க எப்படி இருந்தாலும் பரவாயில்லை வெளித்தோற்றம் முக்கியம் இல்லை கரெக்டா?” என்று கேட்க

“அய்யோ! அக்கா எப்படி கரெக்டா சொல்லுற? உன் மூளையும் வேலை செய்ய ஆரம்பிச்சுடுச்சு போல!” கிண்டலாக பதில் சொன்ன ரிஷியின் தோளில் தட்டியவர் புன்னகையோடு அவன் தலையை வருடிக் கொடுத்தாள்.

“இன்னும் வேற ஏதாவது இருக்கா?” பத்மினி கேள்வியாக அவனை பார்க்க அவரைப் பார்த்து ஆமோதிப்பாக தலை அசைத்தவன்

“இன்னும் ஒரு முக்கியமான கன்டிஷன் இருக்கு” என்று கூற

“இதற்கு மேல என்னடா கன்டிஷன்?” என குழப்பமாக கேட்டார் மணிமாறன்.

“அது சஸ்பென்ஸ் இப்போ சொல்ல முடியாது” ரிஷி அவரை பார்த்து கண்ணடித்தவாறே கூற

புன்னகையோடு அவர்கள் எல்லோரையும் பார்த்து கொண்டு இருந்த பத்மினி
“இன்னும் நீ எத்தனை கன்டிஷன் போட்டாலும் பரவாயில்லை நீ கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சதே எங்களுக்கு ரொம்ப சந்தோஷம் இனி நம்ம வீட்டுக்கு மருமகளைக் கண்டு பிடிக்குறது தான் இனி என்னோட முதல் வேலை சரி சரி வாங்க எல்லோரும் சாப்பிடலாம்” என்றவாறே எழுந்து கொள்ள மற்ற அனைவரும் அவரைப் பின் தொடர்ந்து டைனிங் ஹாலை நோக்கி சென்றனர்.

பத்மினியும்,அர்ச்சனாவும் எல்லோருக்கும் சாப்பாடு பரிமாறிக் கொண்டிருக்கையில்
“குட் மார்னிங் ம்மா” என்றவாறே சந்துரு அங்கு வந்து சேர்ந்தான்.

“ஹேய் சந்துரு! வாடா ராஜா எப்படி இருக்க? வீட்ல அம்மா, அப்பா எல்லோரும் நல்லா இருக்காங்களா?” பத்மினியின் கேள்விக்கு புன்னகையோடு தலை அசைத்தவன்

“எல்லோரும் ரொம்ப நல்லா இருக்கோம் ம்மா நீங்க எப்படி இருக்கீங்க?” என்றவாறே டைனிங் டேபிளின் அருகில் வந்து அமர்ந்து கொண்டான்.

“ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கோம் டா ராஜா” என்றவாறே சந்துருவுக்கும் பத்மினி உணவு எடுத்து வைக்கப் போக

அவசரமாக அவர் கை பிடித்து தடுத்தவன்
“இப்போ தான் வீட்டில் பத்து செட் பூரி சாப்பிட்டு வர்றேன் ம்மா இதற்கு மேலும் சாப்பிட்டால் என் வயிறு தாங்காது” என்று கூற

சுற்றி நின்ற அனைவரும்
“பத்து செட்டா?” என அதிர்ச்சியாக அவனை பார்த்தனர்.

“என்ன பத்து செட்டா? பத்து செட் அவ்வளவு தான் வளர்ற பிள்ளை சாப்பிடுறதைப் பார்த்து கண்ணு வைக்காதீங்க” சந்துரு கூறியதை கேட்டு சிரித்துக் கொண்ட பத்மினி

“சரி அப்போ இந்த பாயாசத்தையாவது சாப்பிடு” என்றவாறு ஒரு டம்ளரை எடுத்து அவனிடம் கொடுத்தார்.

“பாயசமா? சூப்பர் சூப்பர்! ஆமா இன்னைக்கு என்ன ஏதாவது விஷேசமா?” சந்துரு கேள்வியாக எல்லோரது முகத்தையும் பார்க்க

மணிமாறனின் மடியில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்த அம்ருதா
“எங்க ரிஷி மாமாக்கு கல்யாணமே! அம்மா சொன்னாங்களே!” என்று கூற அவளது பதில் கேட்டு அனைவரும் வாய் விட்டு சிரிக்க சந்துருவோ ஆச்சரியமாக ரிஷியைத் திரும்பி பார்த்தான்.

“அப்போ நேற்று நைட் நீ உளறலயா? உண்மையாகத் தான் சொன்னியாடா?” சந்துரு வியப்பாக ரிஷியைப் பார்க்க

வெட்கப்படுவது போல தலையை குனிந்து கொண்டவன் மெல்ல அவனை நிமிர்ந்து பார்த்து
“யாஹ்!” என்றவாறே மீண்டும் தலையை குனிந்து கொள்ள

“அட கடவுளே! இவன் வெட்கப்படுற கொடுமையை எல்லாம் என்னை பார்க்க வைத்துட்டியே!” என தன் தலையில் தட்டி கொண்டான்.

அவர்கள் இருவரது வேடிக்கையான பேச்சுக்களையும் கேட்டு அனைவரும் சிரித்துக் கொண்டு கொண்டு இருக்க மனம் குளிர அதை எல்லாம் பார்த்து கொண்டு நின்ற பத்மினி
“என் பையனும், என்னோட குடும்பமும் பழைய மாதிரி இப்போ சந்தோஷமாக இருக்கு இனி எப்போதும் இப்படியே இருக்கணும் கடவுளே!” என மனதிற்குள் வேண்டிக் கொண்டே எல்லோருக்கும் சாப்பாடு பரிமாறும் வேலையை கவனிக்க தொடங்கினார்.

ரிஷி திருமணத்திற்கு சம்மதம் சொல்லி இரண்டு வாரங்கள் கடந்து இருந்தது.

அவனது தாயும், தந்தையும் மும்முரமாக அவனுக்கு ஏற்ற பெண்ணை தேடிக் கொண்டு இருக்க மணிமாறன் மற்றும் அர்ச்சனா ஒரு புறம் தங்கள் வேலைகளை சிறப்பாக நடத்தி கொண்டிருந்தனர்.

அன்றிலிருந்து சரியாக இரண்டு நாட்கள் கழித்து

வசந்தபுரத்தில் நாயகி இல்லத்தின் முற்றத்தில் தெய்வநாயகி அமர்ந்து இருக்க அவரருகில் அனுஸ்ரீ அமர்ந்து கொண்டு அவர்களது தோட்டத்து கணக்கு வழக்குகளை எல்லாம் பார்த்து கொண்டிருந்தாள்.

தன் பேத்தியையே சிறிது நேரம் பார்த்து கொண்டு இருந்தவர் தன் கலங்கிய கண்களை அவள் அறியாமல் துடைத்து விட்டு கொண்டு இருக்க அந்த நேரம் பார்த்து அவரது போனும் அடித்தது.

திரையில் ஒளிர்ந்த ராதா என்ற பெயரை பார்த்து ஆச்சரியமாக புருவம் சுருக்கியவர் சிறிது நேரம் யோசனையோடே அந்த போனின் திரையைப் பார்த்து கொண்டு இருந்தார்.

தெய்வநாயகி போனை அட்டன்ட் செய்யாமல் இருப்பதை பார்த்து குழப்பமாக அவரை திரும்பி பார்த்த அனுஸ்ரீ அவரது யோசனையான முகத்தை பார்த்தவாறே
“பாட்டி! பாட்டி! போன் ரொம்ப நேரமாக ரிங் ஆகுது அதை எடுத்து பேசாமல் என்ன யோசித்துட்டு இருக்கீங்க?” என அவர் கையில் தட்டிக் கேட்டாள்.

அவளது சத்தம் கேட்டு தன் சிந்தனையில் இருந்து வெளி வந்தவர்
“ஆஹ்! ஒண்ணும் இல்லை அனும்மா” என்றவாறே போனை எடுத்துக் கொண்டு சற்று தள்ளி செல்ல அனுஸ்ரீயோ குழப்பமாக அவரைப் பார்த்து கொண்டு இருந்தாள்.

“பாட்டிக்கு திடீர்னு என்ன ஆச்சு?” யோசனையோடு அவரை பார்த்து கொண்டு இருந்தவள்

“சரி அவங்க வந்த பிறகு கேட்கலாம்” என நினைத்து கொண்டே மீண்டும் தன் வேலையை கவனிக்க தொடங்கினாள்.

அனுஸ்ரீ தன்னருகில் இருக்கும் போது ராதாவோடு போனில் பேசுவது ஏனோ தெய்வநாயகிக்கு சரியாக தோன்றவில்லை.

அனுஸ்ரீ வசந்தபுரத்திற்கு வந்த நாட்களில் இருந்து இன்று வரை அவளிடமோ, தெய்வநாயகியிடமோ ராதா பெரிதாக பேசியது இல்லை.

ஆரம்பத்தில் ஒன்று,இரண்டு தடவை பேசியவர் அதன் பிறகு அவர்களை பெரிதாக தொடர்பு கொள்ளவே இல்லை.

இன்று ராதா திடீரென்று இத்தனை நாட்கள் கழித்து தன்னை அழைப்பது ஏனோ அவருக்கு சந்தோஷத்தை தராமல் குழப்பத்தையே தந்தது.

அதே குழப்பமான மனநிலையோடு தெய்வநாயகி தன் போனை அட்டன்ட் செய்து காதில் வைத்தார்.

“ஹலோ அம்மா!” ராதாவின் குரல் கேட்ட அடுத்த கணமே அவரது கண்கள் இரண்டும் அவரையும் அறியாமல் கலங்கியது.

என்ன தான் தனது பிள்ளைகள் தவறு செய்தாலும் தாய்க்கு எப்போதும் அவர்கள் செல்லப் பிள்ளைகள் தானே.

“ஹலோ அம்மா நான் தான் ராதா பேசுறேன் கேட்குதா?” மறுமுனையில் எந்த பதிலும் இல்லாமல் இருக்கவே ராதா மீண்டும் சிறிது சத்தமாக பேசினார்.

“ஹான்! கேட்குது கேட்குது சொல்லு” பட்டும் படாமலும் பதில் அளித்தார் தெய்வநாயகி.

அவரது இந்த நடவடிக்கைகளுக்கான காரணம் ஏற்கனவே தெரிந்து இருந்ததனால் அதைப் பற்றி ராதா பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

“எப்படி இருக்கீங்க அம்மா? அனுஸ்ரீ நல்லா இருக்காளா?”

“ஹான் இருக்கோம் இருக்கோம் நீ என்ன விஷயமாக போன் பண்ண சொல்லு?”

“ஹ்ம்ம்ம்ம் உங்களுக்கு இன்னும் கோபம் தான் போல பரவாயில்லை”

“………”

“சரி நான் ஏன் போன் பண்ணேன்னா அனுஸ்ரீக்கு ஒரு வரன் வந்து இருக்கு அது விஷயமாக தான் பேச போன் பண்ணேன்”

“வரனா? அவளை பற்றி உனக்கு ஞாபகம் எல்லாம் இருக்கா?”

“அம்மா பழைய கதைகள் எல்லாம் இப்போ வேண்டாம் ப்ளீஸ் இப்போ பேச வந்த விஷயத்தை பற்றி மட்டும் பேசலாமே”

“சரி சொல்லு”

“பையன் பேர் ரிஷி ஆகாஷ் பெரிய பிஸ்னஸ் மேன் ரொம்ப நல்ல பையன் இந்த சின்ன வயதிலேயே ரொம்ப பொறுப்பாக தன் பிஸ்னஸை பார்த்துக்குறான் சென்னையில் இருக்கும் ரொம்ப வசதியானவங்கள அவங்களும் இருக்காங்க பையனுக்கு ஒரு அக்கா மட்டும் தான் அம்மா, அப்பா எல்லோரும்…”

“சரி நான் அனு கிட்ட பேசிட்டு சொல்லுறேன்”

“அம்மா நான் இன்னும் முழுசா சொல்லி முடிக்கல”

“முதல்ல அனு கிட்ட கல்யாணம் பண்ணிக்க சம்மதத்தை கேட்டுட்டு சொல்லுறேன்” ராதாவின் பதிலை எதிர்பாராமலேயே தெய்வநாயகி அழைப்பை துண்டித்து விட மறுபுறம் ராதாவோ மனமுடைந்து போனார்.

இவை எல்லாம் அவர் எதிர்பார்த்தது தான் என்றாலும் ஏனோ அதை தாங்கும் மன தைரியம் அவருக்கு இல்லை.

ராதா அனுஸ்ரீ மீது உண்மையான அக்கறையோடு இந்த திருமணத்தை பற்றி கூறி இருந்தாலும் ஏனோ தெய்வநாயகிக்கு அதை அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.

ஏற்கனவே தன் மகளின் முடிவுகளை எல்லாம் கேட்டு கேட்டு அவளது வாழ்க்கை இப்போது கேள்விக்குறியாக இருப்பதை போல இந்த முடிவில் தன் பேத்தியின் வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு விடக்கூடாதே என்ற ஒரு எண்ணம் அவர் மனதில் ஓடிக் கொண்டே இருந்தது.

போனில் பேசிய பின்னர் தெய்வநாயகி மனதில் இன்னும் பாரங்கள் வந்து ஏறிக் கொள்ள கவலை தேங்கிய மனதுடன் மீண்டும் அவர் அனுஸ்ரீயின் அருகில் வந்து அமர்ந்து கொண்டார்.

“என்ன பாட்டி ஏதாவது பிரச்சினையா?” தன் பாட்டியின் முக வாட்டத்தைப் பார்த்து மனம் தாளாமல் அனுஸ்ரீ கேட்க

“அது வந்து உன்…” என தெய்வநாயகி கூறும் போதே மீண்டும் அவரது போன் அடித்தது.

மறுபடியும் ராதா தான் போலும் என்ற யோசனையோடு போனை எடுத்து பார்க்க இம்முறை அழைப்பு முத்துராமனிடம் இருந்து வந்தது.

“மாப்பிள்ளை! இவர் எதுக்கு எனக்கு போன் எடுக்காரு?” யோசனையோடு தன் போனை பார்த்தவர் மீண்டும் எழுந்து அனுஸ்ரீயிடம் இருந்து சற்று தள்ளி சென்று நின்றார்.

போனை அட்டன்ட் செய்து வைத்தவர்
“ஹலோ!” என்று கூற

மறுமுனையில் முத்துராமன்
“ஹலோ அத்தை! எப்படி இருக்கீங்க? அனு நல்லா இருக்காளா? என்ன பண்ணிட்டு இருக்கா? நான் போன் பண்ணால் எடுக்குறாளே இல்லை ஏதாவது வேலையா இருக்காளா?” என்று கேட்கவும்

அனுஸ்ரீயை ஒரு தடவை திரும்பி பார்த்தவர்
“நாங்க நல்லா இருக்கோம் மாப்பிள்ளை அனு தோட்டத்து கணக்கு, வழக்கு எல்லாம் பார்த்துட்டு இருக்கா” என்று கூறினார்.

“ஓஹ்! அங்கே அவ வந்த ஆரம்பத்தில் அடிக்கடி போன் பண்ணி பேசுவேன் இப்போ எல்லாம் போன் பண்ணா அவ எடுக்குறாளே இல்லை! என் மேலயும் அவளுக்கு கோபமோ தெரியல” மனம் வருந்தி முத்துராமன் பேச தெய்வநாயகிக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.

தன் மகள் மீது உரிமையாக கோபம் கொள்ள முடிந்தவரால் தன் மருமகன் மீது கோபம் கொள்ள முடியவில்லை.

அவர் மீது தவறுகள் இல்லாமல் இருந்தாலும் எப்போதும் தெய்வநாயகி அவரோடு உரிமையாக பேசியது இல்லை.

அனுஸ்ரீ மீது முத்துராமனுக்கு அளவு கடந்த பாசம் இருந்தாலும் அதை அவர் எப்போதும் வெளிக்காட்டி கொண்டது இல்லை.

நாள் முழுவதும் ஆபிஸ் வசம் என்று இருப்பவர் நேரம் கிடைக்கும் போதெல்லாம் போனை எடுத்து அனுஸ்ரீயோடு பேசி கொள்வார்.

அவளுக்கும் தன் தாயை விட தந்தை மீது ஒரு தனி மரியாதை கலந்த பாசம் உண்டு.

வீட்டை விட்டு கிராமத்திற்கு வந்த புதிதில் தந்தையோடு அடிக்கடி பேசியவள் அதன் பிறகு எப்போதாவது தான் பேசுவாள்.

தொடர்ந்து பேசினால் அவரை தேடி அங்கே தனது வீட்டுக்கு சென்று விடக்கூடும் என்ற ஒரு சிறு பிள்ளை தனமான அச்ச உணர்வே
அவளை இப்படி மாற்றி இருந்தது.

“ஹலோ அத்தை! லைன்ல இருக்கீங்களா?”

“ஆஹ்! சொல்லுங்க மாப்பிள்ளை என்ன விஷயம்?”

“என் பிரண்ட் ஒருத்தன் நேற்று எனக்கு போன் பண்ணி இருந்தான் அவனுக்கு தெரிந்த டாக்டர் ஒருத்தரோட மச்சானுக்கு பொண்ணு பார்க்கறாங்களாம் நம்ம அனுஸ்ரீ பற்றி என் பிரண்ட் அவங்க கிட்ட சொல்லி இருக்கான் அவங்களுக்கு கேட்ட வரைக்கும் பிடித்து இருக்காம் அது தான் உங்க கிட்ட இதைப் பற்றி சொல்லி அனு கல்யாணம் பற்றி பேசலாம்னு போன் பண்ணேன்” என்று முத்துராமன் கூறவும்

தெய்வநாயகியோ தன் மனதிற்குள்
‘புருஷனும், பொண்டாட்டியும் இந்த ஒரு விசயத்திலாவது ஒற்றுமையாக இருக்காங்களே’ என எண்ணி புன்னகத்து கொண்டார்.

“பையன் பேர் ரிஷி ஆகாஷ் பெரிய பிசினஸ் மேன்”

“ரிஷி ஆகாஷா?” ஆச்சரியமாக கேட்ட தெய்வநாயகியின் மனமோ சற்று முன்னர் இருந்த கலக்கமான நிலையை மறைந்து ஏதோ ஓர் நிம்மதியான உணர்வை சுமந்து கொண்டது.

‘என் பொண்ணும், என் மருமகனும் ஒரே மாதிரி நல்ல விஷயத்துக்காக என் கிட்ட பேசி இருக்காங்க இதை வைத்து அவங்க இரண்டு பேர் வாழ்க்கையையும் சரியாக்கிடலாம்னு எனக்கு இப்போ நம்பிக்கை வந்து இருக்கு அனுஸ்ரீயோட இந்த கல்யாணம் தான் அவங்க இரண்டு பேரையும் சேர்த்து வைக்கப் போற ஒரு பாலமாக இருக்கும் போல!’ கண்கள் கலங்க தன் மனதிற்குள் எண்ணிக் கொண்டவர்

புன்னகைத்து கொண்டே
“இப்போ கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி ராதா போன் பண்ணி இதே விஷயத்தை பற்றி தான் என் கிட்ட சொன்னா இரண்டு பேரும் ஒரே மாதிரி யோசித்து இருக்கீங்க ரொம்ப சந்தோஷமாக இருக்கு” என்று கூற மறுமுனையில் முத்துராமன் அமைதியாக இருந்தார்.

“நான் முதல்ல அனு கிட்ட கல்யாணத்துக்கு சம்மதமானு கேட்டு சொல்லுறேன் அதற்கு அப்புறமாக பொண்ணு பார்க்க ஏற்பாடு பண்ணுங்க மாப்பிள்ளை சரியா?” என்று விட்டு போனை வைத்த தெய்வநாயகி அதே புன்னகை மாறாத முகத்துடன் அனுஸ்ரீயின் அருகில் வந்து அமர்ந்து கொண்டார்.

“என்ன பாட்டி ஆச்சு? கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி டைட்டானிக் கப்பல் கவிழ்ந்த மாதிரி அவ்வளவு டல்லா இருந்தீங்க இப்போ என்னடானா அந்த கப்பலில் இருந்து தப்பிச்சு வந்த மாதிரி அவ்வளவு சந்தோஷமாக இருக்கீங்க! என்ன நடக்குது? ஒவ்வொரு வாட்டி ஒவ்வொரு கால் வரும் போதும் முகத்தில் ஒவ்வொரு உணர்ச்சி கொப்பளிக்குதே! என்ன விஷயம்?” என்று அனுஸ்ரீ கேட்கவும்

புன்னகையோடு அவளை தன்னோடு சேர்த்து அணைத்து விட்டு விடுவித்தவர்
“உங்க அம்மாவும், அப்பாவும் உன் கல்யாண விஷயம் பற்றி பேச போன் பண்ணி இருந்தாங்க” என்று கூற

அவளோ
“என்ன?” என்றவாறே அவரை அதிர்ச்சியாக நோக்கினாள்.

“இவ்வளவு வருஷமாக எந்த விஷயத்தை எடுத்தாலும் ஏட்டிக்கு போட்டியாக இருந்த இரண்டு பேரும் உன் கல்யாணம் பற்றி பேசப் போய் தான் ஒரே மாதிரி எண்ணத்தோடு இணைந்து இருக்காங்க எத்தனை வருஷமாக இப்படி அவங்க ஒற்றுமையாக ஒரே மாதிரி ஒரு முடிவு எடுக்கணும்னு நான் காத்துட்டு இருந்தேன் அது கடைசியாக உன்
கல்யாண பேச்சை எடுத்த பிறகு தான் நடந்து இருக்கு” தெய்வநாயகி சந்தோஷமாக தன் பாட்டில் கூறிய வண்ணம் இருக்க அனுஸ்ரீயோ அவர் ஆரம்பத்தில் சொன்ன விடயங்களையே இன்னும் முழுமையாக உணர்ந்து கொள்ள முடியாமல் அதிர்ச்சியில் உறைந்து போய் இருந்தாள்…….