Mayam-5

Mayam-5

 

அதிர்ச்சியாக அமர்ந்திருந்த அனுஸ்ரீயைப் பார்த்து குழப்பம் கொண்ட தெய்வநாயகி அவளது தோள் மேல் கை வைத்து
“என்னாச்சு அனும்மா?” என்று கேட்க அவளோ கனவில் இருந்து விழிப்பது போல அவரைப் பார்த்து கொண்டு இருந்தாள்.

“அனு என்னம்மா ஆச்சு?” தெய்வநாயகியின் கேள்வியில் கண்கள் கலங்க அவரை திரும்பி பார்த்தவள்

“எனக்கு கல்யாணம் எல்லாம் வேண்டாம் பாட்டி” என்று கூறினாள்.

“ஏன் மா? உங்க அம்மாவும், அப்பாவும் இப்போ தான் உனக்காக ஒன்று சேர்ந்து ஒரு நல்லது பண்ண நினைத்து இருக்காங்க அதை நீ இப்படி எடுத்ததுமே வேண்டாம்னு சொல்லலமா?”

“இத்தனை நாளாக அவங்க என்னைப் பற்றி எதுவுமே யோசித்து பார்த்ததே இல்லையே அப்படி இருக்கும் போது இப்போ மட்டும் என்ன திடீர்னு அக்கறை?”

“அவங்க தப்பு பண்ணி இருக்காங்க தான் அதை நான் மறுக்கல ஆனா அவங்களுக்கு உன் மேல பாசம், அக்கறை இல்லாமல் இல்லை டா அனு உனக்காக எல்லாம் பார்த்து பார்த்து செய்தாங்க தானே?”

“எல்லாம் செய்தாங்க ஆனா எனக்கு அது பிடிக்குமா? இல்லையானு? பார்க்கலயே!”

“………….”

“ப்ளீஸ் பாட்டி புரிஞ்சுக்கோங்க எனக்கு கல்யாணத்தில் எல்லாம் இஷ்டம் இல்லை”

“எதனால் இஷ்டம் இல்லை உங்க அம்மா, அப்பாவை பார்த்து அப்படி நினைத்து இருக்கியா?”

“…….”

“வாழ்க்கையில் ஏதோ ஒன்று, இரண்டு பேர் தப்பு பண்ணாங்கனா  எல்லோரும் அப்படி தான் இருக்கணுமா என்ன? ஏன் நானும், உங்க தாத்தாவும் சந்தோஷமாக வாழலயா? இப்போ வரைக்கும் நான் இவ்வளவு தைரியமாக, தனியாக நின்னு வாழ்க்கையை நடத்த அவர் எனக்கு கொடுத்த தைரியமும், பாசமும் தானே காரணம் இப்படி வாழ்க்கையில் எவ்வளவு பேர் சந்தோஷமாக இருக்காங்க அதை எல்லாம் யோசித்து பாரு அனும்மா”

“இல்லை பாட்டி”

“என்ன இல்லை பாட்டி? அது தான் பாட்டி இவ்வளவு தூரம் சொல்லுறாங்க இல்லை கல்யாணம் பண்ணிக்க சரின்னு சொல்லுங்க அக்கா ஒரு வேளை நீங்க கல்யாணம் வேணாம்னு சொல்ல வேறு எதுவும் காரணம் இருக்கோ?” என்றவாறே அவர்கள் முன்னால் வந்து நின்ற தாமரையை அதிர்ச்சியாக திரும்பிப் பார்த்தாள் அனுஸ்ரீ.

“என்ன அனு தாமரை சொல்லுற மாதிரி வேற ஏதாவது காரணம் இருக்கா?” தெய்வநாயகியின் கேள்வியில் சட்டென்று தன் முகத்தை சாதாரணமாக வைத்து கொண்டவள்

“அய்யோ பாட்டி! அப்படி எல்லாம் எதுவும் இல்லை எனக்கு கல்யாணத்தில் இஷ்டம் இல்லை அவ்வளவு தான் வேறு எந்த காரணமும் இல்லை” என்று அவர் முகம் பார்க்காமல் தலை குனிந்தவாறே கூற அவரோ சற்று குழப்பமாகவே அவளை பார்த்து கொண்டு இருந்தார்.

“ப்ளீஸ் பாட்டி புரிஞ்சுக்கோங்க எனக்கு கல்யாணம் வேண்டாம்”

“அனும்மா நான் இன்னும் இருக்கப் போறது எத்தனை நாளைக்குனு தெரியாது அதற்கிடையில் இந்த வீட்டில் ஒரு கல்யாணம், காட்சி பார்க்கணும்னு எனக்கு ஆசை இருக்காதா சொல்லு?”

“இப்போ இந்த வீட்டில் கல்யாணம் நடக்கணும் அவ்வளவு தானே? சரி நம்ம தாமரைக்கு கல்யாணம் பண்ணி வைங்க அவளும் உங்களுக்கு ஒரு பேத்தி மாதிரி தானே?”

“என்னது? எனக்கு கல்யாணமா? என்னக்கா விளையாடுறீங்களா? நீங்க இந்த வீட்டு வாரிசு நீங்க எங்கே? நான் எங்கே?”
தாமரை அவசரமாக மறுத்து பேச

அவளை கோபமாக திரும்பிப் பார்த்த அனுஸ்ரீ
“உனக்கு எத்தனை தடவை சொல்லி இருக்கேன் இப்படி பிரித்து பேசாதேன்னு! நீயும் இந்த வீட்டில் ஒருத்தி தான் நான் இல்லாத நேரம் எல்லாம் எப்போவும் பாட்டிக்கு துணையாக நீ தானே இருந்துட்ட வர்ற எனக்கு எப்போதும் ஒரு தங்கச்சியா தானே நீ இருக்க இன்னொரு தடவை இப்படி சொன்னேன்னு வை அப்புறம் இனி நான் உன் கூட பேச மாட்டேன்” என்று கூறவும் தெய்வநாயகியும் அவளுக்கு ஆதரவாக தலை அசைத்தார்.

“சரி சரி நான் சொன்னது தப்பு தான் மன்னிச்சுக்கோங்க ஆனா நீங்க இப்போ பேச்சை மாற்ற வேணாம் அனுக்கா கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லுங்க”
தாமரை அனுஸ்ரீ முன்னால் சம்மணமிட்டு அமர்ந்து கொண்டவாறே கூற

அவளோ
“அது தான் சொன்னேனே உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க சொல்லி மேட்டர் ஓவர்” என சிரித்துக் கொண்டே கூறினாள்.

“அனு இது விளையாட்டு இல்லை ம்மா அவ இப்போ தான் காலேஜுக்கே போக ஆரம்பித்து இருக்கா படிப்பு ஒரு மனுஷனுக்கு ரொம்ப அவசியம்னு நீ தானே சொன்ன இப்போ அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்க சொல்ற?” என்று தெய்வநாயகி கேட்கவும்

அனுஸ்ரீயோ மனதிற்குள்
‘நாம செய்த வேலை நமக்கே இப்போ வினையாக மாறிடுச்சே! இதற்கு தான் அவசரப்பட்டு டயலாக் பேசக்கூடாதுனு சொல்றதோ!’ என எண்ணிக் கொண்டு அமைதியாக இருந்தாள்.

“சரி உங்களுக்கும் வேண்டாம் எங்களுக்கும் வேண்டாம் ஒரு வேளை பண்ணலாம் இப்போ உங்களை உடனே நாங்க எல்லாம் கல்யாணம் பண்ணிக்க சொல்லல சரியா? வெறும் பொண்ணு பார்க்குற சடங்கு மட்டும் தான் ஒரு வேளை உங்களுக்கு மாப்பிள்ளையை பார்த்ததுக்கு அப்புறமும் கல்யாணம் வேணாம்னா ஸ்ட்ராங் ரீசன் சொல்லுங்க அப்புறம் யாரும் உங்களை கட்டாயப்படுத்த மாட்டாங்க” தாமரை கூறியதை கேட்டு அனுஸ்ரீ சந்தோஷமாக அதே நேரம் ஆச்சரியமாக அவளைப் பார்க்க தெய்வநாயகியோ அதிர்ச்சியாக அவளைத் திரும்பி பார்த்தார்.

“சரி இந்த மாப்பிள்ளை எனக்கு பிடிக்கலேனு ஒரு ஸ்ட்ராங் ரீசன் நான் சொன்னால் என்னை அதற்கு அப்புறம் யாரும் கட்டாயப்படுத்த கூடாது சரியா?” அனுஸ்ரீயின் கேள்விக்கு தாமரை

“டபுள் ஓகேக்கா” என புன்னகையோடு தன் கட்டை விரலை உயர்த்தி காட்டினாள்.

“அப்போ சரி பொண்ணு பார்க்க வரச் சொல்லுங்க” என்று விட்டு அனுஸ்ரீ வீட்டினுள் சென்று விட தெய்வநாயகியோ கோபமாக தாமரையின் காதைப் பிடித்து கொண்டார்.

“ஏன்டி வாயாடி! உனக்கு எதுக்கு இந்த தேவையில்லாத வேலை சும்மா இருந்தவளை நீயே தூண்டி விடுற இந்த மாப்பிள்ளை பிடிக்கலேனா இனி கல்யாணப் பேச்சை எடுக்கவே மாட்டோம்ங்குற மாதிரி அவகிட்ட சொல்லி இருக்கியே உனக்கு மூளை என்ன குழம்பி போச்சா? அவ எப்படியும் இந்த பையனை வேண்டாம்னு தான் சொல்லுவா அதற்கு அப்புறம் உன் மூளையை எங்கே கொண்டு போய் வைப்ப?” கோபமாக கேட்ட தெய்வநாயகியின் கையில் இருந்த தன் காதை சிரமப்பட்டு விடுவித்து கொண்ட தாமரை

“அய்யோ பாட்டி! அவ்வளவுக்கு என்னை பற்றி நீங்க என்ன நினைச்சுட்டு இருக்கீங்க? அக்கா இந்த மாப்பிள்ளையை எப்படி பார்த்தாலும் வேணாம்னு சொல்லவே மாட்டாங்க எனக்கு நிச்சயமாக தெரியும் அந்த தைரியத்தில் தான் நான் உறுதியாக அப்படி அக்கா கிட்ட சொன்னேன்” என்று கூறவும் தெய்வநாயகி ஆச்சரியமாக அவளைப் பார்த்தார்.

“எனக்கே இப்போ தான் இந்த கல்யாண விஷயம் தெரியும் ஆனா நீ என்னடானா உனக்கு முன்னாடியே இதெல்லாம் தெரிந்த மாதிரி பேசுற? வாயாடி ஏதாவது வில்லங்கம் பண்ணி வைத்திருக்கியா என்ன?” தெய்வநாயகியின் கேள்வியில் திரு திருவென விழித்தவள்

“அய்யோ பாட்டி என் காதில் விழுந்த விஷயத்தை எல்லாம் வைத்து தான் அப்படி சொன்னேன் நீங்க வேற சரி சரி அம்மா ஏதோ வேலை இருக்குன்னு சொன்னாங்க நான் போயிட்டு வர்றேன்” என்று விட்டு சிட்டாகப் பறந்து சென்று விட அவரோ சந்தேகமாகவே அவள் சென்ற வழியை பார்த்து கொண்டு இருந்தார்.

“இவ எதையோ என் கிட்ட மறைக்குறா! இருக்கட்டும் அப்புறம் கவனிச்சுக்கலாம் முதல்ல அனு மனசு மாறுறதுக்குள்ள பொண்ணு பார்க்க அவங்களை வரச்சொல்லி ராதா கிட்டயும், மாப்பிள்ளை கிட்டயும் சொல்லிடலாம்” என்று நினைத்து கொண்ட தெய்வநாயகி தன் போனை எடுத்து ராதா மற்றும் முத்துராமனிடம் இந்த விடயத்தை பற்றி பகிர்ந்து கொண்டார்.

தன்னறைக்குள் வந்து சேர்ந்த அனுஸ்ரீயோ குட்டி போட்ட பூனை போல குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தாள்.

“வர்ற மாப்பிள்ளையை என்ன காரணத்தை சொல்லியாவது வேண்டாம்னு சொல்லிடணும் இல்லையா அவங்க வாயாலேயே இந்த பொண்ணு வேண்டாம்னு சொல்லிட்டு போக வைக்கணும் அதற்கு அப்புறம் இந்த கல்யாணப் பேச்சை யாரும் எடுக்க மாட்டாங்க பாவம் தாமரை! நம்ம ப்ளான் தெரியாமல் வாய் விட்டு மாட்டிக்கிட்டா” என்று எண்ணி சிரித்துக் கொண்டே நடந்து கொண்டிருக்க அப்போது அவளுக்கு தெரிந்திருக்கவில்லை யார் உண்மையாக யாரிடம் மாட்டிக்கொண்டு இருக்கிறார்கள் என்று.

மறுபுறம் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த தாமரையோ தன் மனதிற்குள்
“நல்ல வேளை அங்கே இருந்து ஓடி வந்துட்டேன் இல்லேனா பாட்டி கிட்ட வசமாக மாட்டி இருப்பேன் எது எப்படியோ கல்யாணமே வேணாம்னு சொன்ன அக்காவை பொண்ணு பார்க்குற சடங்கு வரைக்கும் சம்மதிக்க வைச்சாச்சு இனி எப்படியும் கல்யாணத்துக்கு சம்மதிக்க வைச்சுட வேண்டியது தான்” என்று எண்ணி புன்னகையோடு தன் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.

ஆனால் இது வரை நடந்து முடிந்த விடயங்களின் முடிவில் தன்னை யார் பெண் பார்க்க வருகிறார்கள் என்ற விஷயம் அனுஸ்ரீக்கு சொல்லப்படவும் இல்லை அவளும் அதைப் பற்றி கேட்கவில்லை.

அனுஸ்ரீயின் வீட்டினரிடம் இருந்து சம்மதம் கிடைத்து விட உடனே அந்த செய்தியை மணிமாறன் தன் குடும்பத்தினரிடம் தெரிவித்தார்.

அந்த செய்தியை கேட்டு பத்மினி அளவில்லாத சந்தோஷத்துடன் இருக்க அர்ச்சனா மற்றும் மணிமாறன் ஒருவருக்கொருவர் அர்த்தமுள்ள பார்வை ஒன்றை பரிமாறிக் கொண்டனர்.

அன்று இரவு ரிஷி வேலை முடிந்து இரவு ஒன்பது மணி அளவில் வீடு வந்து சேர்ந்தான்.

அன்று அர்ச்சனாவிடம் சொன்னது போல அதன் பிறகு மறந்தும் அவன் மதுபானங்களை தேடி செல்லவில்லை.

அதனாலேயே இந்த நேரத்திற்கு வீட்டுக்கு வரும் பழக்கமும் அவனுக்கு வந்து சேர்ந்தது.

ரிஷி வருவதைப் பார்த்ததும் பத்மினி ஆவலுடன் அவனை பார்த்து கொண்டு நிற்க அவனோ ஆச்சரியமாக அவரை பார்த்த வண்ணம் அவர் முன்னால் வந்து நின்றான்.

“என்னம்மா மணி ஒன்பது தாண்டிடுச்சு இன்னும் தூங்காமல் இருக்கீங்க?” ரிஷி கேட்க

புன்னகையோடு அவன் கன்னத்தைப் பிடித்து ஆட்டியவர்
“இன்னைக்கு ஒரு முக்கியமான, சந்தோஷமான செய்தி வந்து இருக்கு அதை பற்றி உன் கிட்ட நானே இப்போ சொல்லணும்னு தான் வெயிட் பண்ணேன்” எனவும்

“அப்படியா? அப்படி என்ன முக்கியமான, சந்தோஷமான செய்தி?” என்று கேட்டவாறே தன் கழுத்தில் இருந்த டையை கழட்டி கொண்டு அங்கிருந்த கதிரையில் அமர்ந்து கொண்டான்.

“நீ கேட்ட மாதிரியே நல்ல குடும்ப பாங்கான, குணமான மகாலட்சுமி மாதிரி ஒரு பொண்ணு உனக்கு பார்த்து இருக்கோம் வர்ற ஞாயிற்றுக்கிழமை பொண்ணு பார்க்க போறோம்” பத்மினி கூறிய
விடயத்தை கேட்ட ரிஷி ஆகாஷ் ஆச்சரியமாக அவரை திரும்பி பார்த்தான்.

“என்ன ம்மா சொல்லுறீங்க? நிஜமாவா? அதற்குள்ள பொண்ணு பார்த்தாச்சா? நம்ப முடியலயே!” ஆச்சரியமாக கேட்ட ரிஷியின் தலையை வருடிக் கொடுத்தவர்

“நிஜமாகத் தான் டா சொல்லுறேன் பொண்ணு பேரு அனுஸ்ரீ விஸ்காம் படிச்சுருக்கா என்ன காரணமோ தெரியல பாரின் போக இருந்த வேலையை எல்லாம் விட்டுட்டு இப்போ அவங்க பாட்டியோட வசந்தபுரம் கிராமத்தில் இருக்கா”

“ஏது? வசந்தபுரமா? அது எங்கே இருக்கு?”

“காஞ்சிபுரம் போற வழியில் இடையில் இருக்குடா இங்க இருந்து ஒரு இருபது கிலோமீட்டர் தூரம் இருக்கும்”

“என்னம்மா ஒரேயடியாக கிராமத்திற்கே போயிட்டீங்க!”

“கிராமம்னா என்ன? அங்கே எல்லாம் ஆட்கள் இல்லையா? நீ அந்த ஊரைப் பார்த்தா இப்படி எல்லாம் கேட்க மாட்ட”

“சரி சரி ஊரை விடுங்க அந்த பொண்ணு பற்றி சொல்லுங்க”

“அது சரி அனுஸ்ரீக்கு 25 வயது அம்மா, அப்பா சென்னையில் தான் இருக்காங்க ஆனா பிரிந்து தான் இருக்காங்க அதற்காக அவங்க குணமானவங்க இல்லைனு இல்லை ஏதோ மனஸ்தாபம் பிரிஞ்சுட்டாங்க ஆனா பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணாம்”

“ஏதோ இடிக்குதும்மா பொண்ணு பாட்டியோட கிராமத்தில், அப்பாவும், அம்மாவும் ஆளுக்கொரு பக்கம் கொஞ்சம் யோசிக்க தான் வேணும் சரி எதற்கும் நாளைக்கு காலையில் நான் யோசித்து சொல்லுறேன்ம்மா” என்று விட்டு ரிஷி படியேறி தன்னறைக்குள் நுழைந்து கொள்ள பத்மினியோ எல்லாம் சரியாக நடந்து விட வேண்டும் என்று மனதார கடவுளிடம் வேண்டிக் கொண்டார்.

அவர் இதுநாள் வரை அனுஸ்ரீயை ஒரு தடவை கூட சந்தித்ததில்லை.

ஆனால் மணிமாறன் மற்றும் அர்ச்சனா இரு வேறு இடங்களில் இருந்து அவள் பற்றி தகவல்கள் சொன்னதுமே அவருக்கு மனதளவில் அவளை பிடித்து போய் விட்டது.

அதற்கு என்ன காரணம் என்று அவருக்கும் தெரியவில்லை.

அவர் எதிர்பார்த்த மாதிரி குணநெறிகளோடு, ரிஷிக்கு ஏற்றாற்போல் அனுஸ்ரீ இருந்தது கூட சில வேளை அவரது இந்த பிடித்தத்திற்கு காரணமாக இருக்கலாம்.

இரவு உணவை முடித்து விட்டு ரிஷி தன்னறைக்குள் செல்ல போக அர்ச்சனா அவனருகில் வந்து ஒரு புகைப்படத்தை அவனது கையில் வைத்தார்.

“என்ன அக்கா இது?”

“திருப்பி பாரு”

“ஏன் வாயை திறந்து சொன்னா என்னவாம்?” முணுமுணுத்துக் கொண்டே அந்த புகைப்படத்தை திருப்பி பார்த்தவன் விழிகளோ அதில் இருந்த பெண்ணை வியப்பாக பார்த்தது.

பார்ப்பதற்கு சிறு பெண்ணின் தோற்றத்தில் இருந்தாலும் அதில் சற்று முதிர்ச்சி இருக்கவே செய்தது.

அந்த கண்களில் ஏதோ ஒரு வசியம் இருப்பதை போல ஒரு பிரமை அவன் மனதிற்குள்.

எந்தவித வெளி அலங்காரங்களும், ஒப்பனையுமில்லாமல் எளிமையாக பாவாடை, தாவணி அணிந்து இருந்த அந்த பெண்ணை அவனுக்கு முதல் பார்வையிலேயே பிடித்து போனது.

கண் இமைக்காமல் தன் கையில் இருந்த புகைப்படத்தையே பார்த்து கொண்டு நின்ற தன் தம்பியை பார்த்து சிரித்துக் கொண்ட அர்ச்சனா
“என்ன தம்பி என்னாச்சு?” என அவன் தோளில் தட்டி கேட்க

சிரித்த கொண்டே அந்த புகைப்படத்தால் தன் முகத்தை மறைத்து கொண்டவன்
“சரி நீங்க எல்லாம் இவ்வளவு தூரம் சொல்றதால”

“சொல்றதால?”

“அம்மா கிட்ட சன்டே பொண்ணு பார்க்க போற பிளானுக்கு ஓகே சொல்லிடு” என்று விட்டு ஏதோ ஒரு பாடலை விசிலடித்தபடியே படியேறி சென்றான்.

சந்தோஷமாக படியேறி செல்லும் தன் சகோதரனைப் பார்த்து புன்னகத்து கொண்ட அர்ச்சனா
“எல்லாம் நல்ல படியாக நினைத்த மாதிரி நடந்துடணும் முருகா!” மனதிற்குள் கடவுளிடம் வேண்டிக் கொண்டே அதே சந்தோஷமான மனநிலையோடு தன்னறைக்குள் நுழைந்து கொண்டார்.

**********************************************
அனுஸ்ரீயை பெண் பார்க்கும் படலத்திற்காக தெய்வநாயகி அந்த நாயகி இல்லத்தையே இரண்டாக்கி கொண்டிருந்தார்.

அவர் அவளை பெண் பார்க்க வருபவர்கள் பற்றி தகவல்கள் எல்லாம் அவளுக்கு சொல்லி இருந்தாலும் அவளோ அதை எல்லாம் காது கொடுத்து கேட்கும் மனநிலையில் இல்லை.

எப்படி இந்த திருமணத்தில் இருந்து தப்பித்து செல்வது என்ற எண்ணத்தோடே அங்கே சுற்றி வந்து கொண்டிருந்தாள்.

அதேநேரம் தெய்வநாயகியின் செய்கைகளைப் பார்த்து அவளுக்கு வேடிக்கையாக இருந்தாலும் மறுபுறம் இந்த ஏற்பாடு எல்லாம் வீணாகப் போகிறதே என்ற ஒரு கவலையும் இருந்து கொண்டே இருந்தது.

தாமரை அன்று இறுதியாக தெய்வநாயகியிடம் பேசியதன் பின்னர் தனியாக அவரிடம் சிக்கி கொள்ளாமல் எப்போதும் வேலையாக இருப்பதை போல தன்னை காட்டி கொண்டு இருக்க இந்த வேலைகளுக்கு நடுவில் அவரும் அவளை பற்றி மறந்து போனார்.

விடிந்தால் ரிஷியின் வீட்டினர் அனுஸ்ரீயை பெண் பார்க்க வரப் போகிறார்கள் என்று இருக்க அன்று காலையில் வசந்தபுரம் வந்து சேர்ந்தார் ராதா.

அனுஸ்ரீ மற்றும் தெய்வநாயகி ராதாவை பார்த்து கிட்டத்தட்ட ஒரு வருடம் கடந்து இருந்தது.

முன்பு இருந்ததை விட ராதா நன்றாகவே இளைத்துப் போய் இருந்தார்.

“அம்மா!” தெய்வநாயகியை வீட்டு வாசலில் பார்த்ததுமே புன்னகையோடு அவரை வந்து அணைத்துக் கொண்டார் ராதா.

“ராதா!” கண்கள் கலங்க தன் மகளை அணைத்துக் கொண்டவர் அமைதியாக தன் கலங்கிய கண்களை துடைத்து கொண்டார்.

ராதாவின் கார் சத்தம் கேட்டு தன்னறைக்குள் இருந்து வேகமாக படியிறங்கி வந்த அனுஸ்ரீயோ வாசற் கதவருகில் தயங்கியபடி நின்றாள்.

தன் தாய், தந்தையின் மீது சிறிது மனக் கவலை இருந்தாலும் அவர்களை பார்க்கும் நேரமெல்லாம் அவர்களது அன்புக்காக அவள் மனம் ஏங்காமல் இல்லை.

வாசற் கதவருகில் தயங்கி நின்ற அனுஸ்ரீயை பார்த்ததும் புன்னகையோடு அவளருகில் வந்த ராதா
“எப்படி டா அனு இருக்க?” என்று கேட்க

“நா…நல்லா இருக்…இருக்கேன் ம்மா” என்றவாறே அவரை அணைத்துக் கொண்டாள்.

“ஸாரி டா நேற்றே வர இருந்தேன் திடீர்னு ஒரு வேளை அது தான் வர முடியல ஸாரி டா”

“சரி சரி ரொம்ப நேரம் பிரயாணம் பண்ணி
வந்தது களைப்பாக இருக்கும் போய் குளிச்சுட்டு வா” தெய்வநாயகி கூற சரியென்று அவரை பார்த்து தலை அசைத்தவர் அனுஸ்ரீயின் தலையை வருடி விட்டு வீட்டிற்குள் நுழைந்தார்.

ராதா வீட்டிற்குள் நுழைந்து ஒரு சில நிமிடங்களில் இன்னொரு கார் அவர்கள் வீட்டு வாசலில் வந்து நின்றது.

அனுஸ்ரீயும், தெய்வநாயகியும் அது யாராக இருக்கும் என்று ஆராய்ச்சியாக பார்க்க அந்த காரில் இருந்து இறங்கி நின்றார் முத்துராமன்.

“அப்பா!”

“மாப்பிள்ளை!” அனுஸ்ரீயும், தெய்வநாயகியும் ஆச்சரியமாக அவரை பார்க்க புன்னகையோடு அவர்கள் எதிரில் வந்து நின்றவர் தெய்வநாயகியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி கொண்டார்.

“நல்லா இருங்க மாப்பிள்ளை நல்லா இருங்க” சற்று சங்கடத்தோடு அவரை ஆசிர்வாதம் செய்தவர்

அனுஸ்ரீயின் புறம் திரும்பி
“ராதா ரூமுக்கு பக்கத்து ரூமை அப்பாவுக்கு ரெடி பண்ண சொல்லும்மா” என்று கூற அவரை பார்த்து சரியென்று தலை அசைத்தவள் தன் தந்தையை பார்த்து புன்னகத்து விட்டு வீட்டிற்குள் நுழைந்து கொண்டாள்.

“நீங்க நாளைக்கு தான் வருவீங்கனு நினைச்சேன் மாப்பிள்ளை அது தான் உங்களுக்கு ரூம் ரெடி பண்ண முடியாமல் போயிடுச்சு” சற்று சங்கடத்தோடு தெய்வநாயகி கூறவும்

இயல்பாக அவரைப் பார்த்து புன்னகத்த முத்துராமன்
“பரவாயில்லை அத்தை நானும் உங்க கிட்ட முன்னாடி சொல்லி இருக்கணும் என் பொண்ணுக்கு இது வரை எதுவும் சரியாக நான் பண்ணது இல்லை இந்த கல்யாணத்திலாவது அவளுக்கு ஒரு அப்பாவாக ஏதாவது பண்ணணும் அது தான் ஒரு நாள் முன்னாடியே வந்துட்டேன்” என்று கூற அவரோ வாயடைத்துப் போய் நின்றார்.

“அப்பா ரூம் ரெடி” புன்னகையோடு அனுஸ்ரீ வந்து நிற்க வாஞ்சையோடு அவளது தலையை வருடிக் கொடுத்தவர் அவளது கன்னத்தில் தட்டி விட்டு வீட்டிற்குள் நுழைந்து கொண்டார்.

“பார்த்தியா அனும்மா! உங்க அம்மாவும், அப்பாவும் இந்த ஒரு விசயத்தில் எவ்வளவு பொறுப்பாக இருக்காங்கனு” தன் கலங்கிய கண்களை துடைத்து கொண்டே புன்னகையோடு கூறி விட்டு தெய்வநாயகி வீட்டிற்குள் சென்று விட

அனுஸ்ரீயோ தன் மனதிற்குள்
“இது எல்லாம் நாளையோடு முடிந்து விடப் போகிறது பாட்டியின் இந்த சந்தோஷம் நிலைக்கப் போவதில்லை எல்லோரது சந்தோஷமும் ஒரு நாளில் முடிந்து விடப்போகிறதே!” என கவலையுடன் அவரைப் பார்த்து கொண்டு நின்றாள்…….

error: Content is protected !!