இன்று தனக்கு பெண் பார்க்க செல்லப் போகிறோம் என்கிற எவ்வித பதட்டமோ, பரபரப்போ இன்றி தன் தூக்கத்தில் இருந்து எழுந்து அமர்ந்தான் ரிஷி ஆகாஷ்.

அன்று இறுதியாக அனுஸ்ரீயின் புகைப்படத்தை அர்ச்சனாவிடம் இருந்து பெற்றுக் கொண்டவன் அதன் பிறகு அவள் பற்றி தன் வீட்டினரிடம் பேசிக் கொள்ளவில்லை.

அதற்கான நேரமும் அவனுக்கு கிடைக்கவில்லை.

நாட்கள் என்னவோ ஜெட் வேகத்தில் சென்றது போல நகர்ந்து இருந்தது அவனுக்கு.

ஏற்கனவே முதல் நாள் இரவு பத்மினி நாளை நேரத்திற்கு வசந்தபுரம் செல்ல வேண்டும் என்று கூறி இருந்ததால் வழக்கத்தை விட சற்று முன்பாகவே எழுந்து கொண்டவன் எப்போதும் போல ஆறுதலாகவே குளித்து முடித்து தயாராகி கொண்டு நின்றான்.

கீழே ஹாலில் மற்ற அனைவரும் சற்று படபடப்போடு தயாராகி கொண்டு நிற்க ரிஷி ஆகாஷோ வெகு சாதாரணமாக தன் அறையில் இருந்து வெளியேறி வந்தான்.

பெஃர்ன் பச்சை நிற சேர்ட், இள நீல நிற ஜீன்ஸ், இடது கையில் அவனது விலையுயர்ந்த ரிஸ்ட் வாட்ச் சகிதம் தயாராகி வந்தவன் ஒரு கையினால் தன் கூலிங் கிளாஸை மாட்டிக் கொண்டு மறு கையினால் தன் தலை முடியை கோதிக் கொண்டே படியிறங்கி வந்தான்.

வெள்ளை நிறத்தில் சிவப்பு கற்கள் பதித்த ப்ராக் அணிந்து ஹாலில் விளையாடிக் கொண்டிருந்த அம்ருதா ரிஷி வருவதைப் பார்த்ததும்
“மாமா ரெடி” என்றவாறே அவனருகில் ஓடிச்செல்ல

“அம்மு குட்டி இன்னைக்கு ஏஞ்சல் மாதிரி இருக்குறீங்களே! ஷோ க்யூட்” என அவள் கன்னத்தில் முத்தமிட்டவாறே தூக்கி கொண்டு பத்மினியின் முன்னால்
வந்து நின்றான்.

“அம்மா எல்லாம் சரியா போகலாமா?” என்று ரிஷி கேட்க

அவனை நிமிர்ந்து பார்த்த பத்மினி
“இருடா ஏன் இப்படி பறக்குற? என்ன என்ன எடுத்து வைச்சுருக்குன்னு பார்க்க வேண்டாமா?” என படபடப்போடு கூற அவனோ குழப்பமாக அவரையும் அவரருகில் நின்ற அர்ச்சனாவையும் மாறி மாறிப் பார்த்தான்.

அர்ச்சனா சைகையில்
‘ஒண்ணுமே புரியல’ எனப் பத்மினியைக் காட்டி கூற

ரிஷியோ தன் அன்னையின் தோளில் கை வைத்து
“அம்மா இன்னைக்கு பொண்ணு பார்க்க தானே போறோம் அதற்கு எதுக்கு இவ்வளவு பதட்டம்?” என்று கேட்கவும்

அவரோ தன் தலையில் தட்டி கொண்டே
“அட ஆமா! நான் ஏதோ பதட்டத்தில் இன்னைக்கு நிச்சயதார்த்தம்னே நினைச்சுட்டேன்” என சிரித்துக் கொண்டே கூறினார்.

“என்ன?” அதிர்ச்சியாக அவரை பார்த்த ரிஷியைப் பார்த்து எல்லோரும் சிரிக்க

அர்ச்சனாவோ தன் சிரிப்பை விட்டு விட்டு
“அம்மா இதெல்லாம் ரொம்ப ஓவரு! பாருங்க குழந்தை எப்படி ஷாக் ஆகி நிற்குதுனு முதல்ல பொண்ணு சம்மதம் சொல்லணும் அப்புறம் தான் நிச்சயதார்த்தம் எல்லாம் இல்லையா ரிஷி?” என பத்மினியைப் பார்த்துக் கொண்டே ரிஷியின் தோளில் தட்டவும்

அவரை திரும்பி பார்த்தவன்
“அம்மா இப்போவே அடுத்த ஸ்டெப்க்கு ரெடி ஆகுறாங்க போல” என்று விட்டு தன் அன்னையின் அருகில் வந்து

“அம்மா ப்யூச்சர்ல நடக்குறதை எல்லாம் அப்புறமாக பார்க்கலாம் பர்ஸ்ட் இப்போ பொண்ணு பார்த்துட்டு வரலாம் சரியா ஒரு காரை நான் எடுத்துட்டு வர்றேன் இன்னொரு காரை சந்துரு எடுத்துட்டு வருவான் நீங்க எல்லாரும் சீக்கிரம் ரெடியாகிட்டு வாங்க” என்று விட்டு அங்கே நின்றால் இன்னும் ஏதாவது வில்லங்கம் வந்து விடுமோ என்ற பயத்தில் அம்ருதாவுடன் வெளியேறி கார் பார்கிங்கை நோக்கி சென்றான்.

அவர்கள் வீட்டில் இருந்து புறப்பட்டு சுமார் இரண்டு மணி நேர பயணத்திற்கு பின்னர் வசந்தபுரம் கிராமத்தை அவர்கள் வந்து சேர்ந்தனர்.

இப்போதைய காலகட்டத்தில் இப்படி பசுமை மாறாத கிராமத்தை காண்பது என்பது அரிதானதே.

“அம்மா இந்த ஏரியா இவ்வளவு அழகா இருக்கும்னு நான் நினைத்து கூட பார்க்கல எவ்வளவு க்ளீன் அன்ட் பியூட்டி! அமேசிங்!” ஆச்சரியமாக அதே நேரம் வியந்து போய் கூறிய ரிஷியைப் பார்த்து புன்னகத்து கொண்ட பத்மினி

“இந்த வசந்தபுரம் நான் சின்ன வயதில் எங்கே தாத்தா, பாட்டி இருக்கும் போது வந்த போது எப்படி இருந்ததோ இப்போவும் அப்படியே தான் இருக்கு மரங்கள் எல்லாம் இன்னும் கூடுதலாக இருக்கு அவ்வளவு தான் வித்தியாசம் மற்றபடி வேறு எந்த மாற்றமும் இல்லை” என்று கூற

“ரியலி?” என ஆச்சரியமாக கேட்டவன் தன் கூலிங் கிளாஸை கழட்டி விட்டு தன் இருக்கையின் பக்கப்புற கண்ணாடியை மெதுவாக கீழே பணித்தான்.

இத்தனை நாள் பரபரப்பான அந்த சூழலில் வாழ்ந்து பழக்கப்பட்டதாலோ என்னவோ இப்போது இந்த கிராமத்து காற்று தன் முகம் மோதியது அவனுக்கு ஒரு விதமான புத்துணர்ச்சியை மனம் முழுவதும் பரப்பியது.

தன் காரை ஒரு ஓரமாக நிறுத்தியவன் அந்த தருணத்தை சிறிது நேரம் மனம் நிறைய ரசித்து கொண்டு இருந்தான்.

“ரிஷி நேரம் ஆகுதுடா பொண்ணு பார்த்ததுக்கு அப்புறம் வேணா நீ இந்த இடத்தை சுற்றி பார்த்துக்கோ நம்ம வீடு ஒண்ணும் இங்க இருக்கு அங்கேயே வேணா நீ தங்கிக்கோ இப்போ கிளம்பலாம்டா” கண்களை மூடி அமர்ந்திருந்த ரிஷியின் தோளில் பத்மினி தட்ட

“ஓஹ் ஸாரி ஸாரி ம்மா” என்றவாறு சிரித்துக் கொண்டே காரை ஸ்டார்ட் செய்தவன் அவர் சொன்ன வழியை பின்பற்றி அனுஸ்ரீயின் வீட்டை வந்து சேர்ந்தான்.

சிறு நேரத்தில் அவர்களை பின்பற்றி சந்துருவின் காரும் அங்கே வந்து விட வாசலில் அவர்களுக்காகவே காத்து நின்ற முத்துராமன் புன்னகையோடு அவர்களை நெருங்கி வந்து
“வாங்க! வாங்க! உங்களுக்காகத் தான் காத்துட்டு இருக்கோம்” என்றவாறே அவர்கள்
அனைவரையும் வீட்டினுள் அழைத்து கொண்டு சென்றார்.

பாரம்பரிய முறைப்படி கட்டப்பட்டிருந்த அந்த வீடும், அந்த வீடு அமையப் பெற்றிருந்த சூழலும் முதல் பார்வையிலேயே ரிஷியின் வீட்டினருக்கு பிடித்து போனது.

ரிஷி அந்த வீட்டின் உள் அமைப்பையே நோட்டம் விட்ட வண்ணம் அமர்ந்து இருக்க அவனருகில் அமர்ந்திருந்த சந்தருவோ அவனது காதருகில் மெதுவாக குனிந்து
“என்ன வீடு ரொம்ப பிடிச்சுருக்கா? பேசி முடிச்சுடலாமா?” என்று கேட்க

அவனை திரும்பி முறைத்து பார்த்தவன்
“நாம என்ன வீட்டை வாங்கவாடா வந்து இருக்கோம் பொண்ணு பார்க்குறதுக்குடா” என்று கூற

அவனது கை பற்றி குலுக்கிய சந்துரு
“வாவ்! சரியா கண்டுபிடிச்சு சொல்லிட்ட வெல்டன்!” எனவும்

“டேய்! என்ன நக்கலா?” என்று கேட்டான் ரிஷி.

“தெரியுது தானே! அப்புறம் என்ன வீட்டை வாங்க வந்தவன் மாதிரி ஒவ்வொரு கல்லா ஆராய்ந்து ஆராய்ந்து பார்க்குற எல்லாரும் உன்னை தான் பார்க்குறாங்க நீ என்னடான்னா எங்கேயோ பார்த்துட்டு இருக்க அட்லீஸ்ட் முகத்தை சிரிச்ச மாதிரியாவது வைடா தாங்க முடியல” என சந்தோஷமாக அலுத்துக் கொண்டே கூற அவனை பார்த்து சிரித்துக் கொண்டவன் சிறிது நேரம் அங்கிருந்தவர்களோடு பேசிக் கொண்டு இருந்தான்.

அவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போதே அலங்காரங்கள் முடித்து அனுஸ்ரீயை ராதா மற்றும் தெய்வநாயகி ஹாலுக்கு அழைத்து கொண்டு வந்தனர்.

ஆகாய நீல நிற பட்டு சேலை அணிந்து அதற்கு ஏற்றாற்போல் முத்துக்கற்கள் பதித்த மாலை மற்றும் ஜிமிக்கி அணிந்து தலையை ஒற்றை ஜடை பின்னலிட்டு அதில் காலையில் மலர்ந்த புத்தம் புது மல்லிகை மலர்களை சூடி எவ்வித மேலதிக ஒப்பனையுமின்றி வந்து நின்ற அனுஸ்ரீயை பார்த்ததுமே அங்கிருந்த அனைவருக்கும் பிடித்து போனது.

பெரியவர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் சந்தோஷமாக பார்த்து கொள்ள ரிஷியோ கண் இமைக்காமல் அவளை பார்த்து கொண்டு இருந்தான்.

இதற்கு முதல் பல அழகான பெண்களை அவன் பார்த்தது உண்டு, பழகியதும் உண்டு.

ஆனால் இன்று அனுஸ்ரீயை முதன்முதலாக பார்த்ததும் அவளது அந்த ஆர்ப்பாட்டமில்லாத சாந்தமான அழகு அவனை ஏதோ செய்தது.

நிழலாக பார்த்ததைவிட நிஜத்தில் பார்த்ததுமே அவளை மனதார அவனுக்கு பிடித்து போனது.

சந்துரு ரிஷியைப் பார்க்க அவனோ அனுஸ்ரீயையே பார்த்து கொண்டு இருந்தான்.

நண்பனது இந்த ஒரு மாற்றமே அவனுக்கு சந்தோஷத்தை தர
“இனிமேலாவது என் நண்பன் சந்தோஷமாக, நிம்மதியாக இருக்க வேண்டும்” என்று மனதார நினைத்துக் கொண்டு தன் நண்பனின் தோளில் தட்டிக் கொடுத்தான்.

புன்னகையோடு சந்துருவை திரும்பி பார்த்த ரிஷியைப் பார்த்து சந்தோஷம் கொண்ட பத்மினி இனி எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்து கொண்டார்.

“எல்லோருக்கும் காஃபி கொண்டு போய் குடும்மா” அனுஸ்ரீயின் கையில் டம்ளர் நிறைந்த ட்ரேயை வைத்தவாறே கூறிய ராதா

அவளது காதில் மெதுவாக
“அந்த க்ரீன் சர்ட் போட்டு இருக்குறவர் தான் மாப்பிள்ளை நல்லா பார்த்துக்கோ” என்று கூறவும் சரியென்று அவரை பார்த்து தலை அசைத்தவள்

தன் மனதிற்குள்
‘இன்னைக்கு எப்படியாவது இந்த மாப்பிள்ளை என்னை வேணாம்னு சொல்லிட்டு போயிடணும்’ என நினைத்துக் கொண்டே அவர்கள் அருகில் நடந்து சென்றாள்.

எல்லோரையும் பார்த்து இயல்பாக சிரித்துக் கொண்டே காஃபியை பரிமாறியவள் தலை குனிந்தவாறே ரிஷியின் அருகில் சென்று நின்றாள்.

‘டம்ளரை எடுக்கும் போது எப்படியாவது தட்டி விடலாமா?’ தன் மனவோட்டத்தை எண்ணி புன்னகத்து கொண்டே அவனின் புறமாக ட்ரேயை நீட்ட அவளது முகத்தை பார்த்து கொண்டே ரிஷி டம்ளரை எடுத்துக் கொள்ளப் போனான்.

‘யார் இந்த பச்சை சட்டை கடைசியாக ஒரு தடவை பார்த்துக்கலாம்’ என மனதிற்குள் எண்ணிக் கொண்டு மெல்ல அவன் முகம் நிமிர்ந்து பார்த்தவள் எதிரில் புன்னகையோடு அமர்ந்திருந்தவனைப் பார்த்து அதிர்ச்சியாகி நின்றாள்.

‘ ரிஷி! இவரா? இவர் எப்படி இங்கே? இவரா மாப்பிள்ளை?’ மனதிற்குள் பல கேள்விகள் எழ அவசரமாக தன் முகத்தை சரி செய்து கொண்டு அங்கிருந்து விலகி வந்து தன் அன்னையின் அருகில் நின்றவள் முகமோ யோசனையில் குழப்பமடைந்து போய் இருந்தது.

மற்றவர்கள் யாருக்கும் அவளது இந்த முகமாற்றம் வித்தியாசமாக தென்படாது போனாலும் ஒருவர் கண்களுக்கு மட்டும் அந்த மாற்றம் நன்கு படவே செய்தது.

புன்னகையோடு அவளை பார்த்து விட்டு அந்த கண்களின் உரிமையாளர் அங்கிருந்து நகர்ந்து விட அனுஸ்ரீ மாத்திரம் அங்கே மனம் நிறைந்த பதட்டத்துடன் நின்று கொண்டிருந்தாள்.

எல்லோரும் தங்களுக்குள் பேசிக் கொண்டிருக்க அவர்கள் எல்லோரது கவனத்தையும் திருப்புவது போல பேசத் தொடங்கினார் சுவாமிநாதன்.

“நான் சுற்றி வளைத்து பேச விரும்பல எங்க வீட்ல எல்லோருக்கும் அனுஸ்ரீயை பிடித்து இருக்கு என் பையனுக்கு ரொம்பவே பிடித்து இருக்கு அதனால இந்த வீட்டுக்கு போய் தகவல் சொல்லுறோம்னு எல்லாம் நாங்க சொல்ல மாட்டோம் இப்போவே நாங்க எங்க சம்மதத்தை சொல்லிட்டோம் இனிமேல் முடிவு எடுக்க வேண்டியது நீங்களும் அனுஸ்ரீயும் தான்” சுவாமிநாதனின் நேரடியான பேச்சில் தெய்வநாயகி சற்றே நிம்மதியாக உணர்ந்த அதேநேரம் அனுஸ்ரீயின் பதிலையும் எண்ணி சிறிது கலக்கம் கொண்டார்.

தாமரை அன்று சொல்லியவற்றை
எல்லாம் கேட்டு ஏதோ ஒரு தைரியத்தில் இத்தனை தூரம் ஏற்பாடுகள் செய்து விட்டார்.

ஆனால் இப்போது அனுஸ்ரீ வேண்டாம் என்று எல்லோர் முன்னிலையிலும் சொல்லி விட்டால் அவரால் எதுவும் செய்ய முடியாது.

அதே நேரம் இன்னொரு திருமணம் பற்றிய பேச்சையும் எடுக்க முடியாது.

அனுஸ்ரீ ஏதாவது சொல்லி விடுவதற்குள் நிலைமையை சரியாக கொண்டு செல்ல வேண்டும் என்று எண்ணிக் கொண்ட தெய்வநாயகி அனுஸ்ரீயின் அருகில் வந்து நின்று கொண்டார்.

“அவ எல்லார் முன்னாடியும் பேச வெட்கப்படுறா போல நான் அனும்மா கிட்ட கேட்டு…”

“இல்லை பாட்டி நானும் இங்கேயே என் மனதில் தோணுறதை சொல்லுறேன்” அனுஸ்ரீயின் அந்த உறுதியான குரலில் ரிஷி ஒரு கணம் அவளை வியப்பாக பார்த்தான்.

இத்தனை நேரமாக அவள் இருந்த நிலையையே பார்த்து கொண்டு இருந்தவன் அவள் அழகு போல அவளும் அமைதியானவள் என்று எண்ணி இருந்தான்.

ஆனால் அவன் யூகங்கள் சில நேரங்களில் மாறும் என்பதை அப்போதே அவன் கண் முன்னே காட்டினாள் அனுஸ்ரீ.

“நீங்க இங்க வர்றதுக்கு முதல் என்னை பற்றியும், என் குடும்பத்தை பற்றியும் விசாரித்து பார்த்து தான் வந்து இருப்பீங்க ஆனா நான் உங்களை பற்றி எந்த டீடெய்ல்ஸும் தெரிஞ்சுக்கல ஷோ அதெல்லாம் தெரிஞ்சுகிட்டு நான் கொஞ்சம் யோசிக்கணும் அதற்கு எனக்கு ஒரு வாரம் டைம் வேணும்”

“அனு! என்ன இப்படி பேசுற? பெரியவங்க முன்னாடி இப்படியா பேசுவ? அவங்க கிட்ட ஸாரி கேளு” ராதா சற்று கோபமாக அவளது காதில் கூற

சுவாமிநாதன் மற்றும் பத்மினியை நேராக பார்த்து நின்றவள்
“நான் எந்த விடயத்தையும் கொஞ்சம் ஆராய்ந்து பார்த்து தான் செய்து பழக்கம் அதே மாதிரி தான் இதையும் நினைத்து சொன்னேன் நான் ஏதாவது தப்பாக சொல்லிட்டேனா? இல்லையே?” என்று கேட்கவும்

புன்னகையோடு அவளருகில் வந்து நின்ற பத்மினி
“நீ எதுவும் தப்பாக சொல்லலமா உன் மனதில் பட்டதை சொல்லி இருக்க அவ்வளவு தான் நம்ம மனதில் பட்ட விடயங்களை உடனுக்குடன் சொல்லிடணும் இல்லேனா பின்னாடி பல சிக்கல்களை அது உண்டு பண்ணும் நீ யோசித்து உன் பதிலை சொல்லும்மா உன் சம்மதம் தான் எங்களுக்கு முக்கியம்” என்றவாறே அங்கிருந்தவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு வெளியேறி சென்றார்.

அங்கு நடந்தவற்றை எல்லாம் புன்னகையோடு பார்த்து கொண்டு இருந்த ரிஷி அங்கிருந்து வெளியேறி செல்லும் போது எல்லோரும் சென்றதை உறுதிப் படுத்திய பின் அனுஸ்ரீயின் அருகில் வந்து நின்றான்.

“உன்னை பர்ஸ்ட் போட்டோவில் பார்த்ததும் லைட்டா பிடிச்சது இப்போ இங்கே பொண்ணு பார்க்குறதுக்காக வந்து உன்னை நேரில் பார்த்தது அதை விட கொஞ்சம் ஜாஸ்தியா பிடிச்சது அதற்கு அப்புறமாக இப்போ நீ சும்மா வெட்டு ஒண்ணு துண்டு இரண்டுன்ற மாதிரி பேசுனதை பார்த்ததும் ரொம்ப ரொம்ப பிடிச்சு போச்சு இனிமேல் நீயே வேணாம்னு சொன்னாலும் நான் உன்னை வேண்டாம்னு சொல்ல மாட்டேன் வன் வீக் கழித்து நிச்சயதார்த்தத்திற்கு நாள் குறித்து சொல்லு ஓகே வா?” அனுஸ்ரீயின் கன்னத்தில் தட்டி சொல்லி விட்டு அவன் சென்று விட அவளோ அவனது பேச்சை கேட்டு குழப்பமடைந்து போய் நின்றாள்.

“பர்ஸ்ட் போட்டோவில் தான் பார்த்தாரா? அவங்களுக்கு என்னை ஞாபகம் இல்லையா?” யோசனையோடு படியேறி தன் அறைக்குள் வந்து சேர்ந்தவள் அந்த அறையின் மூலையில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பெட்டிகள் சிலவற்றின் அருகில் வந்து நின்றாள்.

மெல்ல அந்த பெட்டிகளை ஒவ்வொன்றாக கீழே எடுத்து வைத்தவள் இறுதியாக இருந்த ஒரு சிறிய இரும்பு பெட்டியை தூக்கி கொண்டு வந்து தன் கட்டிலில் ஏறி அமர்ந்து கொண்டாள்.

தெய்வநாயகி, ராதா மற்றும் முத்துராமன் ரிஷியின் வீட்டினரை வழியனுப்பி வைக்க வீட்டு வாசலில் நின்று கொண்டிருக்க பத்மினியின் முகத்தில் மாத்திரம் சிந்தனை ரேகைகள் ஓடிக்கொண்டிருந்தது.

“என்ன ஏதோ யோசித்து கொண்டு இருக்கீங்க போல இருக்கு? அனு சொன்னதில் உங்களுக்கு ஏதாவது கஷ்டமாகிடுச்சா?” முத்துராமன் சற்று கவலையோடு சுவாமிநாதன் மற்றும் பத்மினியை பார்த்து கேட்க அவசரமாக அவரைப் பார்த்து இல்லை என்று தலை அசைத்த பத்மினி சற்று சங்கடமாக சுவாமிநாதனை ஏறிட்டுப் பார்த்தார்.

“நீங்க என்ன நினைக்குறீங்கனு எனக்கு கொஞ்சம் புரியுது” சுற்றிலும் ஒரு முறை பார்த்து விட்டு

“டிவோர்ஸ் விஷயம் தானே?” என்று கேட்டார் முத்துராமன்.

“இல்லை அது” சற்று சங்கடமாக பத்மினி இழுக்க

அவரை பார்த்து புன்னகத்து கொண்டவர்
“டிவோர்ஸ் எனக்கும் என் மனைவிக்கும் இடையில் விழுந்த ஒரு விரிசல் அதற்காக என் பொண்ணு வாழ்க்கையை நான் விடக்கூடாது இல்லையா? அது தான் அவளோட கல்யாணம் முடியுற வரை அவளோடு இருந்து என் பொறுப்புகளை இனிமேலாவது சரியாக செய்யலாம்னு இருக்கேன் அதோடு டிவோர்ஸ் எனக்கும், என் வைப்க்கும் தானே? என் பொண்ணுக்கும் எனக்கும் இல்லையே?” என்று கூறவும் சுவாமிநாதனோ புன்னகையோடு அவரது தோளில் தட்டி கொடுத்தார்.

சிறிது நேரத்தில் அவர்கள் அனைவரும் சென்று விட ராதாவும், தெய்வநாயகியும் அனுஸ்ரீயின் அறையை நோக்கி சென்றனர்.

தன் முன்னால் இருந்த அந்த சிறு பெட்டியையே சிறிது நேரம் பார்த்து கொண்டு இருந்த அனுஸ்ரீ அதில் தொங்கிய பூட்டை பார்த்து புன்னகத்து கொண்டே தன் கட்டிலின் அருகில் இருந்த மேஜையின் மீது இருந்த பர்ஸை எடுத்து திறந்து அதனுள்ளே இருந்து ஒரு சாவியை எடுத்து அந்த பெட்டியை திறந்தாள்.

அந்த பெட்டியின் உள்ளே இருந்த பொருட்களை எல்லாம் பார்த்ததும் அவள் கண்கள் அவளையும் அறியாமல் கலங்கியது.

தன் கண்களை துடைத்து கொண்டே அதற்குள் இருந்த ஒரு கவரை எடுத்து திறந்து பார்த்தவள் புன்னகையோடு கண்கள் கலங்க அந்த கவரை எடுத்து பிரித்து பார்த்தாள்.

அந்த கவரில் இருந்து ஒரு சில புகைப்படங்கள் கீழே விழ அந்த புகைப்படங்கள் எல்லாவற்றிலுமோ ரிஷி ஆகாஷ் பல்வேறு விதமான கோணங்களில் நின்று கொண்டிருந்தான்……

error: Content is protected !!