அந்த சத்தம் கேட்டு அவசரமாக தன் கண்களை திறந்து கொண்டவள் தன் கையில் இருந்த கவரையும், கீழே கட்டிலில் சிதறி கிடந்த புகைப்படங்களையும் வேகமாக அந்த சிறு பெட்டியில் போட்டு மூடி தன் கட்டிலின் கீழே தள்ளி விட்டாள்.
அறைக்கதவு விடாமல் தட்டப்பட்டுக் கொண்டே இருக்க அவசரமாக தன் முகத்தை அழுந்த துடைத்து கொண்டு சென்று அனுஸ்ரீ கதவை திறக்க அங்கே ராதா மற்றும் தெய்வநாயகி நின்று கொண்டிருந்தனர்.
“இவ்வளவு நேரமாக கதவைத் தட்டிட்டு இருந்தோம் கதவைத் திறக்காமல் என்ன அனு பண்ணிட்டு இருந்த?” ராதாவின் கேள்வியில் சிறிது பதட்டம் கொண்டவள்
உடனே தன் பதட்டத்தை மறைத்து கொண்டு
“டிரஸ் சேஞ்ச் பண்ணலாம்னு வந்தேன்” என்று கூற தெய்வநாயகியோ அவளது முகத்தை ஆராய்ச்சியாக பார்த்து கொண்டு நின்றார்.
“சரி ஒரு வாரம் எதுக்கு டைம் கேட்ட?” ராதா மறுபடியும் கேள்வியாக அனுஸ்ரீயைப் பார்க்க
அவரருகில் நின்ற தன் பாட்டியை நிமிர்ந்து பார்த்தவள்
“நான் எல்லாம் பாட்டி கிட்ட பேசிக்கிறேனே ப்ளீஸ் ம்மா” என்று கூற அதைக் கேட்ட ராதாவின் முகமோ வாடிப் போனது.
“சரி நீங்க பேசுங்க” என்று விட்டு கவலை தோய்ந்த முகத்துடன் ராதா நகர்ந்து சென்று விட தெய்வநாயகியோ அவரது முகமாற்றத்தைப் பார்த்து சிறிது மன வேதனை கொண்டார்.
என்னதான் இருந்தாலும் ராதா திடீரென்று இத்தனை உரிமை எடுத்துக் கொள்ளும் போது அதை அனுஸ்ரீயால் உடனே ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
சிறிது மன சங்கடம் அவளுக்கு இருக்கவே செய்தது.
ஒரு வருடமாக அவரோடு பேசாதது கூட அவளது இந்த சங்கடத்திற்கு காரணமாக இருக்கலாம்.
அவரை பார்த்த நொடியே மீண்டும் திருமணம் பற்றிய ஒரு நம்பிக்கையின்மை தன் மனதில் எழ அவர் அங்கிருந்து சென்ற அடுத்த கணமே தெய்வநாயகியை ஓடி வந்து அணைத்துக் கொண்டு
“எனக்கு கல்யாணம் எல்லாம் வேண்டாம் பாட்டி” என்று கூறினாள்.
எல்லாம் சரியாக போகிறது என்ற எண்ணத்தோடு நின்று கொண்டிருந்த தெய்வநாயகிக்கோ அனுஸ்ரீயின் இந்த பதில் கவலையையே தந்தது.
அவளது கை பிடித்து அழைத்து சென்று பால்கனியில் இருந்த தோட்டத்தில் அமர்ந்து கொண்டவர் அவளது தலையை ஆதரவாக வருடிக் கொடுத்தார்.
“பாட்டி நான்…”
“வேண்டாம் இத்தனை நாளாக நீ சொல்றதை எல்லாம் நான் கேட்டேன் இல்லையா? இப்போ நான் சொல்றதையும் கொஞ்சம் கேளு”
“சரி சொல்லுங்க”
“இந்த பையனை பற்றி உனக்கு எல்லா விவரமும் நான் சொன்னேன் ஆனா நீ இன்னும் விசாரிக்கணும்னு ஒரு வாரம் கேட்டு இருக்க பரவாயில்லை நீயும் விசாரிச்சுக்க இப்போ பார்த்த வரைக்கும் அந்த பையனை உனக்கு பிடித்து இருக்கா? இல்லையா? அதற்கு பதில் முதல்ல சொல்லு”
“பாட்டி நீங்க…”
“நான் கேட்டதற்கு முதல்ல பதில் சொல்லு”
‘அவரை எப்படி எனக்கு பிடிக்காமல் போகும் அவரால் தானே நான் வேறு ஒருவரை திருமணம் முடிக்க முடியாமல் இருக்கிறேன்’ தன் மனதிற்குள் எண்ணிக் கொண்டவள்
தெய்வநாயகியின் முகம் பார்த்து
“பிடிச்சுருக்கு” என்று கூறினாள்.
“அவங்க குடும்பத்து ஆட்களை எல்லாம் உனக்கு பிடித்து இருக்கா?”
“அய்யோ பாட்டி! எனக்கு அவங்களைப் பிடிக்காமல் எல்லாம் இந்த கல்யாணம் வேண்டாம்னு நான் சொல்லல”
“அப்போ வேற என்ன காரணம்?”
“……”
“சொல்லு அனும்மா வேற என்ன காரணம்?”
“எனக்கு கல்யாணம் என்றாலே பயமாக இருக்கு பாட்டி அம்மாவும், அப்பாவும் ஒருத்தருக்கு ஒருத்தர் பழகி நல்லா புரிந்து கல்யாணம் எல்லாம் பண்ணிட்டு இப்போ டிவோர்ஸ் பண்ணிட்டு இருக்காங்க ஒருத்தருக்கு ஒருத்தர் பேச விரும்பாமல் பார்க்க விரும்பாமல் ஆளுக்கொரு திசையில் பிரிஞ்சு போயிட்டாங்க நாளைக்கு நான் கல்யாணம் பண்ணதுக்கு அப்புறம் ஏதாவது ஒரு சின்ன பிரச்சினை வந்து அதுவும் இப்படி ஆகிடுச்சுனா என்னால தாங்க முடியாது பாட்டி எனக்கு தான் அம்மா, அப்பா பாசம் சரியாக கிடைக்கல அதே மாதிரி இன்னொரு உயிருக்கும் அப்படி நடந்துடக் கூடாது பாட்டி” கேவலுடன் தெய்வநாயகியின் மடியில் சாய்ந்து அனுஸ்ரீ கண்ணீர் வடிக்க அதை பார்த்து அந்த பெரியவர் கண்களும் தாரை தாரையாக கண்ணீர் வடித்தது.
இரு பெரியவர்கள் அவசரத்தில் எடுத்த முடிவு இன்று அவர்கள் பெற்ற பிள்ளையின் வாழ்க்கையையே கேள்விக்குறியாக மாற்றி விட்டதே என்ற கவலையோடு அவர் அமர்ந்திருக்க அனுஸ்ரீயைப் பார்ப்பதற்காக அவளது அறைக்குள் வந்த முத்துராமனின் செவிகளிலும் அவளது பேச்சு நன்றாக விழுந்தது.
இத்தனை நாளாக தான் எல்லா விடயங்களிலும் இருந்து ஒதுங்கி இருந்தது இவ்வளவு பார தூரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்ற அவர் கனவிலும் நினைக்கவில்லை.
ஆனால் இன்று அவர் எடுத்த முடிவுகள் எல்லாம் தன் ஒரே மகளின் மனதில் இத்தனை பெரிய கஷ்டத்தை ஏற்படுத்தி விட்டதே எனக் கவலையோடும், சுய பச்சாதாபத்தோடும் கண்கள் கலங்க அங்கிருந்து வேகமாக வெளியேறி சென்றார்.
கண்களை துடைத்து கொண்டே அனுஸ்ரீயின் அறைக்குள் இருந்து வெளியே வந்த முத்துராமனைப் பார்த்த ராதா யோசனையோடு அவரைப் பார்த்து கொண்டு நின்றார்.
“எதற்காக இவர் இப்போ கண்ணை துடைச்சுட்டு போறாரு? இவர் அவ்வளவு சீக்கிரமாக எதற்கும் அழ மாட்டாரே!” யோசனையோடு முத்துராமனையே ராதா பார்த்து கொண்டு நிற்க தூரத்தில் நின்று அவர்கள் இருவரையும் பார்த்து கொண்டு நின்ற தாமரை புன்னகையோடு
அவரருகில் வந்து நின்றாள்.
“என்ன ம்மா ரொம்ப நேரமாக யோசிச்சுட்டு இருக்கீங்க?” தாமரையின் கேள்வியில் தன் சுய நினைவுக்கு வந்தவர்
“ஆஹ்! ஒண்ணும் இல்லையே!” சமாளிப்பது போல கூறி விட்டு அங்கிருந்து நகர்ந்து சென்று விட
புன்னகையோடு அவரைப் பார்த்து கொண்டு நின்றவள்
“நடக்க போகும் அனு அக்கா கல்யாணத்தில் தான் இந்த வீட்டில் இருக்கும் எல்லோருடைய பிரச்சினையும் இல்லாமல் போய் சந்தோஷம் திரும்பி வரப்போகுது யப்பா! பிள்ளையாரப்பா! சீக்கிரமா இந்த குடும்பத்திற்கு ஒரு நல்ல சந்தோஷமான நிலையைக் கொடுத்துடுப்பா” என தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டே தன் வேலைகளை கவனிக்க சென்றாள்.
அனுஸ்ரீ அழுது முடிக்கும் வரை அவளது தலையை ஆதரவாக வருடிக் கொடுத்த தெய்வநாயகி அவளது அழுகை சற்று குறையவுமே மெல்ல அவளது தாடையைப் பற்றி அவளது முகத்தை நிமிர்த்தினார்.
“இங்க பாரு டா அனு ஒவ்வொருத்தர் யோசிக்குற விதமும் ரொம்ப வித்தியாசமானது ராதாவும், மாப்பிள்ளையும் யோசிக்குற விதம் வேற நீ யோசிக்குற விதம் வேற அவங்க எடுத்த முடிவு அவங்களோட தனிப்பட்ட யோசனையால் வந்தது நீ எடுக்கப் போற முடிவு நீ யோசிக்குற விதத்தில் தான் இருக்கு நீ சொன்ன தானே இன்னொரு உயிர் அம்மா, அப்பா பாசம் இல்லாமல் வளரக் கூடாதுனு உனக்கு அந்த கஷ்டம் தெரியும் அப்படி இருக்கும் போது அந்த கஷ்டத்தை உன் குழந்தைகளுக்கு வர விடுவியா சொல்லு?”
“அய்யோ பாட்டி! நான் அப்படி பண்ண மாட்டேன்!”
“அதே தான் நானும் சொல்லுறேன் குடும்பம்னா பிரச்சினை வரும் அதை மனசு விட்டு அந்த இடத்திலேயே பேசி முடிச்சுடணும் அதை விட்டுட்டு நீ பெரிய ஆளா? நான் பெரிய ஆளா? ன்னு பார்த்துட்டு இருந்தோம்னா தான் வாழ்க்கையே பிரச்சினையாக மாறும் நான் ராதாவை நம்புனதை விட உன்னை அதிகமாக நம்புறேன் ஏன்னா நீ எந்த ஒரு விஷயத்தையும் ரொம்ப நிதானமாக யோசித்து தான் பண்ணுவ அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு உனக்கு ஒரு வாரம் நேரம் இருக்கு நல்லா யோசி நீ எந்த முடிவு எடுத்தாலும் எனக்கு சம்மதம் நான் உன்னை கட்டாயப்படுத்த மாட்டேன் நான் சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லிட்டேன் இனி முடிவு உன் கையில் தான்” தெய்வநாயகி அனுஸ்ரீயின் கண்களை துடைத்து விட்ட படியே கூறவும்
புன்னகையோடு அவரை அணைத்துக் கொண்டவள்
“நிச்சயமாக உங்க நம்பிக்கையை நான் பொய்யாக்க மாட்டேன் பாட்டி” என்று கூறினாள்.
“சரி சரி முதல்ல போய் சேலையை மாத்திட்டு வா சாப்பிடலாம்” என்றவாறே அவளின் கை பிடித்து எழுப்பியவர் அவளது தலையை வருடிக் கொடுத்து விட்டு சென்று விட அறைக்கதவை சாத்தி விட்டு சிறிது நேரம் அந்த கதவின் மேலே சாய்ந்து கண்களை மூடி நின்றவள் நீண்ட பெருமூச்சு ஒன்றை விட்டு கொண்டு குளியலறையை நோக்கி சென்றாள்.
சிறிது நேரத்தில் பட்டு சேலையில் இருந்து சாதாரண காட்டன் சுடிதாருக்கு மாறிக் கொண்டவள் தன் போனை எடுத்துக் கொண்டு பால்கனியை நோக்கி சென்றாள்.
போனில் சில எண்களை அழுத்தி விட்டு அனுஸ்ரீ காத்து நிற்க அவளது பொறுமையை சோதிக்காமல் மறுபுறம் அழைப்பு உடனே எடுக்கப்பட்டது.
“ஹாய் அனு! எப்படி டி இருக்க? பேசி எவ்வளவு நாள் ஆச்சு? எங்கே இருக்க? என்ன பண்ணிட்டு இருக்க?” ஆரவாரத்துடன் மறுமுனையில் இருந்த நபர் கேள்விகளாக கேட்க
புன்னகையோடு நின்று கொண்டிருந்தவள்
“நான் நல்லா இருக்கேன் ராஜி நீ எப்படி இருக்க?” என்று கேட்டாள்.
“நான் செம்ம ஜாலியாக இருக்கேன் நீ என்ன பண்ணுற? ரொம்ப நாளைக்கு அப்புறம் மேடம்க்கு என் ஞாபகம் வந்து இருக்கு என்ன ஏதாவது விஷேசமா? கல்யாணம் ஏதும் பிக்ஸ் ஆகிடுச்சா என்ன?” தோழியின் கேள்வியில் சற்று முகம் சிவந்து போனவள்
“கிட்டத்தட்ட அப்படி தான் எனக்கு ஒருத்தர் பற்றி ஒரு டீடெய்ல்ஸ் வேணும் அது தான்” என்று இழுக்க மறுமுனையில் இருந்த அவளது தோழியோ வாய் விட்டு சிரித்துக் கொண்டு நின்றாள்.
“ஏய்! எதுக்கு டி இப்படி சிரிக்குற?” சற்று கோபமாக அனுஸ்ரீ கேட்கவும்
“இல்லை நீ காலேஜ் டேஸ்ல பேசுனதை எல்லாம் வைத்து எங்க சாமியாரா போயிடுவியோனு நினைச்சேன் ஆனா பாரேன் அந்த கன்னி மனதையும் ஒரு மாயக்காரன் கொள்ளை அடிச்சுட்டான்” என்று ராஜி சிரித்துக் கொண்டே கூறினாள்.
“அப்படி எல்லாம் எதுவும் இல்லை எனக்கு ஒரு டீடெய்ல் வேணும் சொல்ல முடியுமா? முடியாதா?”
“சரி சரி கேளு”
“உனக்கு ரிஷி ஸாரை ஞாபகம் இருக்கா?”
“ரிஷி ஸாரா? யாரு அவரு?”
“அதற்குள்ள மறந்துட்டியா? நாம பைனல் இயர்ல இருக்கும் போது ஒரு கம்பெனிக்கு ஆட் பண்ணி கொடுக்கணும்னு வன் வீக் வர்க் பண்ணோமே ஒரு கம்பெனி அதோட எம்.டி”
“ரிஷி ஸார்? ஆஹ்! ஆமா ஆமா ஞாபகம் வந்துடுச்சு நம்ம ரோமியோ ஸார் தானே? அவரோட லவ்வரோட எப்படி ரொமாண்டிக்கா இருந்தாரு மறக்க முடியுமா? அது சரி அவரைப் பற்றி உனக்கு என்ன தெரியணும்?”
“ஆஹ் அது வந்து அவரு இல்ல அன்னைக்கு”
“ஏய் வெயிட்! வெயிட்! எதற்கு இவ்வளவு டென்ஷன்? நீயும் அவரை சைட் அடிச்ச ஆள் தானே அப்புறம் என்ன?”
“சீச்சி அப்படி எல்லாம் இல்லை”
“ஆஹான்! இந்த சமாளிபிகேஷன் எல்லாம் வேணாம் நீ அவரை திருட்டுத்தனமாக போட்டோ எல்லாம் எடுத்தவ தானே? எல்லாம் எனக்கு தெரியும் சரி அதை விடு நீ கேட்க வந்த விஷயத்தை சொல்லு”
“அது வந்து ராஜி அவருக்கு வன் இயர்க்கு முன்னாடி என்கேஜ்மண்ட்னு சொல்லி இருந்தாங்க இல்லையா?”
“ஆமா டி அந்த கூத்தை ஏன் கேட்குற ரொம்ப செலவு பண்ணி நல்ல கிராண்டா என்கேஜ்மண்ட் ரெடி பண்ணி இருந்தாங்க ஆனா அந்த ரோமியோ ஸாரோட லவ்வர் பங்ஷன் ஹால்ல அந்த என்கேஜ்மண்டை கேன்சல் பண்ணிட்டு இன்னொரு வசதியான ஆள் வரவும் அவனோட போயிட்டா பாவம் ரோமியோ ஸார் ரொம்ப டவுன் ஆகிட்டாரு சோஷியல் மீடியாவில் எல்லாம் இது தான் கொஞ்ச நாள் ஹாட் டாபிக் நீ பார்க்கலயா?”
“இல்லை ராஜி நான் எந்த சோஷியல் மீடியாவும் யூஸ் பண்ணுறது இல்லை”
“ஓஹ்! இட்ஸ் ஓகே ஆமா ஏன் நீ திடீர்னு அவரைப் பற்றி கேட்ட?”
“இன்னைக்கு என்னை பொண்ணு பார்க்க ரிஷி ஸார் தான் வந்தாங்க”
“வாட்? ரியலி? சூப்பர் நியூஸ் டி இதை இல்லையா நீ முன்னாடி சொல்லி இருக்கணும்? கங்க்ராட்ஸ் மை டியர்” தோழியின் சந்தோஷமான வாழ்த்தில் புன்னகத்து கொண்டாள் அனுஸ்ரீ.
“அப்போ ஓகே சொல்லிட்டியா அனு?” ராஜியின் கேள்வியில் சிறிது நேரம் அமைதியாக இருந்தவள்
“இன்னும் இல்லை அவரைப் பற்றி கொஞ்சம் தெரிஞ்சுகிட்டு வன் வீக் கழித்து முடிவு சொல்லுறேன்னு சொல்லி இருக்கேன்” என்று கூறவும்
“எதற்கு வன் வீக்? நீ தான் ஆல்ரெடி அவரைப் பார்த்து மெர்சல் ஆகிட்டியே! உடனே ஓகே சொல்லி எங்களுக்கு சீக்கிரமாக கல்யாண சாப்பாடு போட ரெடி பண்ணு நம்ம செட்ல நீ மட்டும் தான் இன்னும் பேச்சுலர் எங்கே உண்மையாக நீ இப்படியே இருந்துடுவியோனு நினைச்சேன் பட் அந்த கடவுள் உனக்கு இப்படி ஒரு சர்ப்பரைஸை கொண்டு வந்து தந்துட்டாரு ஐ யம் ஸோ ஹெப்பி டியர்” என மனம் நிறைந்த சந்தோஷத்தோடு தன் தோழியைப் பாராட்டினாள் ராஜி.
“இப்போ நீ அவரைப் பற்றி பேசவும் தான் இன்னொரு விஷயம் ஞாபகம் வந்தது ஆள் கொஞ்சம் டிரிங்ஸ் பண்ணுவார்னு கேள்விப்பட்டேன் பட் நாட் ஸ்யூர் எதற்கும் நீ கேட்டு பார்த்துக்கோ ஆனா நான் அவரை அப்படி பார்க்கல எப்படியோ அவர் உனக்கு ஏற்ற ஜோடி தான்”
“ஹ்ம்ம்ம் பார்க்கலாம் அப்புறம் ராஜி நான் உன் கிட்ட இப்போ சொன்ன விஷயத்தை இப்போ நம்ம ப்ரண்ட்ஸ் கிட்ட சொல்லாதே! எல்லாம் கன்பர்ம் ஆன அப்புறம் சொல்லலாம் சரியா?”
“ஓகே ஓகே டன்” சிறிது நேரம் மனம் விட்டு தன் தோழியோடு போனில் பேசி விட்டு தன் அறைக்குள் வந்தவள் மனமோ இலேசானது போல இருந்தது.
மனதில் எங்கோ ஓர் மூலையில் பொக்கிஷமாக சேர்த்து வைத்த அந்த ஞாபகங்கள் எல்லாம் மீண்டும் அவளது மனதை சந்தோஷ சாரலாக வருடிச் செல்ல புன்னகையோடு தன் அறையில் இருந்து வெளியேறி வந்தவள்
“பாட்டி நான் கோவிலுக்கு போயிட்டு வர்றேன்” என்று விட்டு அவரது பதிலைக் கூட எதிர்பாராமல் வேகமாக வீட்டில் இருந்து வெளியேறி கோவிலை நோக்கி சென்றாள்.
கடவுள் சந்நிதானத்தை வந்து சேர்ந்தவள் கண்களை மூடி மனமார கடவுளை வேண்டிக் கொண்டு நிற்க இரு கண்களோ அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தது.
“பிள்ளையாரப்பா! நான் உன் கிட்ட எப்போவும் எனக்கு அது வேணும் இது வேணும்னு கேட்டது இல்லை நீ எதைக் கொடுத்தாலும் சந்தோஷமாக ஏற்றுக்கிட்டு தான் போவேன் ஆனா நான் உன் கிட்ட முதல் தடவையாக கேட்ட விஷயம் ரிஷி! நான் கேட்ட நேரம் நீ எனக்கு அதை கொடுக்கல அதனால நானும் உன் கிட்ட அதற்கு அப்புறமாக எனக்கு வேணும்னு எந்த ஒரு விஷயத்தையும் கேட்கல ஆனா இப்போ நான் இனி எனக்கு எதுவும் வேணாம்னு விலகி போக நினைச்ச நேரம் மறுபடியும் எனக்கு அவரைத் திருப்பி கொண்டு வந்து கொடுத்துட்ட நான் எனக்கு கிடைக்காதுனு நினைத்த ஒரு பொக்கிஷம் இப்போ என் கையில் கிடைத்த மாதிரி இருக்கு ஆனா அதை முழுமையாக என்னால சந்தோஷமாக ஏற்றுக் கொள்ள முடியல ஏன்னா நான் பார்த்து வளர்ந்த விஷயங்கள் அப்படி அது எல்லாம் இன்னும் என் மனதை குழப்பமாக்கிட்டே இருக்கு இதற்கு எல்லாம் நீ தான் எனக்கு ஒரு வழி காட்டணும்” கண்களை மூடி மனதார கடவுளை வேண்டிக் கொண்டவள் புன்னகையோடு தன் கண்களை திறக்க அவளெதிரில் புன்னகையோடு அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டு நின்றான் ரிஷி ஆகாஷ்.
அவனை அங்கு எதிர்பார்க்காத அனுஸ்ரீயோ பதட்டத்துடன் அவனை அதிர்ச்சியாக நிமிர்ந்து பார்க்க அவனோ புன்னகையோடு அவளைப் பார்த்து கேள்வியாக புருவம் உயர்த்தினான்.
“நீங்க இங்க எப்படி?” குழப்பமாக அவனை அனுஸ்ரீ பார்க்க
“ஊரை சுற்றி பார்க்கலாம்னு நின்னேன் அப்போ ஒரு தேவி தரிசனம் கோவில்ல தெரிந்தது அது தான் நேரடியாக ஒரு தேவி தரிசனம் வாங்கலாம்னு வந்தேன் தரிசனம் கிடைக்குமா?” ரிஷியின் கேள்வியில் மலங்க மலங்க விழித்தவள்
“பாட்டி தேடுவாங்க நான் வர்றேன்” என்றவாறே அங்கிருந்து செல்லப் போக அவள் முன்னால் வழி மறித்தவாறு வந்து நின்றான் ரிஷி.
“யாராவது பார்த்தால் தப்பாக நினைக்க போறாங்க”
அனுஸ்ரீ பதட்டத்துடன் சுற்றிலும் பார்த்து கொண்டே கூற
புன்னகையோடு அவளை நெருங்கி வந்து நின்றவன்
“போட்டோவிலும், நேரிலும் சாரியில் பார்த்ததால் என்னவோ எந்த வித்தியாசமும்
தெரியல ஆனா இப்போ இப்படி சுடிதாரில் பார்க்கும் போது தான் எனக்கு ஒரு டவுட் வருது நாம இதற்கு முதல் எப்போதாவது மீட் பண்ணி இருக்குமோ? எனக்கு உன்னை ரொம்ப பழக்கப்பட்ட மாதிரியே ஒரு பீல்” என்று கூறவும் அனுஸ்ரீயோ அதிர்ச்சியாக அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“என்னம்மா நான் ஏதோ தப்பாக கேட்ட மாதிரி இப்படி பார்க்குற?”
“நான் வீட்டுக்கு போறேன் அங்கே எல்லோரும் காத்துட்டு இருப்பாங்க” என்றவாறே அவனது பதிலை எதிர்பாராமல் அனுஸ்ரீ அவனைத் தாண்டி ஓடி செல்ல ரிஷியோ புன்னகையோடு புள்ளி மானைப் போல துள்ளி ஓடுபவளைப் பார்த்து கொண்டு நின்றான்……