தோட்டத்தில் இருந்த சீமெண்ட் பெஞ்சில் அமர்ந்திருந்த அனுஸ்ரீயின் மனமோ பல்வேறு யோசனைகளில் உழன்று கொண்டிருந்தது.
இத்தனை வருடங்களாக தன் தாய், தந்தையின் பிரச்சினையை பற்றி தெரிந்து இருந்தும் தான் அதற்கு எந்தவொரு தீர்வும் காண முனையவில்லையோ என்ற கேள்வி அவள் மனதை அரித்து கொண்டே இருந்தது.
தன்னை ரிஷி பார்த்தது ஒன்றிரண்டு தடவைகள் தான்.
அப்படி இருந்தும் தனது பெற்றோருக்காக அவன் யோசித்த அளவுக்கு கூட நான் யோசிக்கவில்லையோ என்ற கவலை சூழ்ந்த மனதோடு அவள் அங்கே அமர்ந்திருக்க
“என்ன தேவி தரிசனம் இன்னைக்கு தோட்டத்துப் பக்கமாக வீசுது?” என்ற குரலில் திடுக்கிட்டு போய் எழுந்து நின்று திரும்பி பார்த்தாள்.
ரிஷி புன்னகை முகமாக அங்கே நின்று கொண்டிருக்க தன் நெஞ்சில் கை வைத்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவள்
“நீங்களா? திடீர்னு சத்தம் கேட்கவும் நான் பயந்துட்டேன்” என்று கூற
வியப்பாக அவளை பார்த்தவன்
“பரவாயில்லையே தேவி என் கூட பேச எல்லாம் செய்யுறாங்களே!” என்றவாறே அந்த பெஞ்சில் வந்து அமர்ந்து கொண்டான்.
“பேசுறதுக்கான சந்தர்ப்பமும், தேவையும் வந்தால் கண்டிப்பாக நான் பேசுவேன்” புன்னகையோடு அவனைப் பார்த்து கூறியவள் சிறிது இடம் விட்டு அந்த பெஞ்சில் மறுபுறம் அமர்ந்து கொண்டாள்.
“இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க தேவியாரே!”
“ஒரு நிமிஷம் இருங்க நானும் நீங்க பொண்ணு பார்க்க வந்த நாள்ல இருந்து பார்க்குறேன் நீங்க என்னை தேவின்னு கூப்பிடுறீங்க அது ஏன்? என் பேரு அனுஸ்ரீ தானே அதில் தேவி எங்க இருந்து வந்தது?”
“யப்பா! இப்போவாது இவ்வளவு லென்த்தா என் கூட பேசி இருக்கியே தாங்க் காட்!”
“நீங்க பேச்சை மாற்ற வேணாம் நான் கேட்டதற்கு பதில் சொல்லுங்க”
“நீ ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆபிஸர் போல! இட்ஸ் ஓகே ஐ வில் மேனேஜ்!”
“கேட்டதை தவிர மற்ற எல்லாம் நல்லா பேசுறீங்க”
“ஓகே ஓகே நான் சொல்லுறேன் அன்னைக்கு கோவிலுக்கு சாமி கும்பிடலாம்னு தான் நான் வந்தேன் அப்போ தான் உன்னை சந்நிதானத்தில் பார்த்தேன் சாமி தரிசனம் வாங்க வந்த இடத்தில் தேவியே தரிசனம் தர நிற்குற மாதிரி இருந்துச்சு ஷோ அப்போவே எனக்கு நீ தேவி ஆகிட்ட உன்னை தேவின்னு சொல்றது தான் எனக்கும் பிடித்து இருக்கு”
“நல்ல ரீசன் போங்க” சிரித்துக் கொண்டே அவனைப் பார்த்து அனுஸ்ரீ கூறவும்
அவளது கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்து கொண்டவன்
“நான் உன்னை பார்த்ததும் இப்படி மொத்தமாக சேன்ஞ்ச் ஆகுவேன்னு நினைக்கல பட் இப்போ அது தான் நடக்குது” என்று கூற அவளோ சற்று கூச்சத்தோடு அவன் கைகளில் இருந்து தன் கைகளை எடுத்துக் கொண்டாள்.
சிறிது நேரம் அவர்கள் இருவருக்கும் இடையே ஒரு கனத்த அமைதி நிலவியது.
“நான் ஒரு முக்கியமான விஷயம் பேசணும்” இருவரும் ஒன்றாக ஒரே நேரத்தில் கூற அதை எதிர்பார்க்காத இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகத்து கொண்டனர்.
“சரி நீங்க சொல்லுங்க” அனுஸ்ரீ புன்னகையோடு அவனைப் பார்த்து கூற
மறுப்பாக தலை அசைத்தவன்
“இல்லை இல்லை லேடிஸ் பர்ஸ்ட் நீயே சொல்லு” என்று கூறினான்.
“சரி நானே சொல்லுறேன் பர்ஸ்ட் உங்களுக்கு நான் பெரிய தாங்க்ஸ் சொல்லணும்”
“தாங்க்ஸா எதுக்கு?”
“இன்னைக்கு அம்மாவையும், அப்பாவையும்..” அதை சொல்லும் போதே அவள் நா தழுதழுத்தது.
“ஹேய்! சில் யா!” மெதுவாக அவள் கை மீது ரிஷி தட்டி கொடுக்க
தன் முகத்தை அழுந்த துடைத்து கொண்டு அவனை நிமிர்ந்து பார்த்தவள்
“ஐ யம் ஓகே” என்று விட்டு மேலும் பேசத் தொடங்கினாள்.
“சின்ன வயதிலிருந்தே அம்மா, அப்பா சண்டையை மட்டுமே தான் பார்த்து வளர்ந்தேன் அதனால என்னவோ அவங்க இப்படி ஒண்ணா இருக்குறதைப் பார்த்தா எனக்கு ஆச்சரியமாக இருக்கு எனக்கும் மனதில் ஒரு ஓரமாக ஆசை இருந்தது தான் எப்படியாவது அவங்க ஒண்ணா சேர மாட்டாங்களானு ஆனா அதை என்னால சரியா பண்ண முடியல இன்னைக்கு அதே விஷயத்தை நீங்க ரொம்ப ஈஸியாக பண்ணிட்டீங்க அதற்கு தான் இந்த தாங்க்ஸ்”
“ஹேய்! இந்த தாங்க்ஸ் எல்லாம் வேண்டாம் ஏதோ என் மனசுக்கு தோணுணதை பண்ணேன் அப்போ உங்க அம்மாவும், அப்பாவும் அகைன் திரும்ப சேரணும்னு உனக்கு ஆசை இருக்கா?”
“அப் கோர்ஸ் அது இல்லாமல் இருக்குமா அவங்க டிவோர்ஸ் பண்ணதுக்கு அப்புறமும் வன் இயர் எப்படியாவது அவங்க பிரச்சினையை இல்லாமல் பண்ணணும்னு ட்ரை பண்ணேன் பட் அவங்க வீட்டுக்கே வர நேரம் இல்லாமல் ஆளுக்கொரு பக்கம் ஓடிட்டு இருந்தாங்க கடைசியாக எதுவும் வேணாம்னு தான் பாட்டியோட இருக்கலாம்னு ஜாப் எல்லாம் ரிசைன் பண்ணிட்டு வந்தேன்”
“யாஹ்! அம்மா சொன்னாங்க பாரிஸ் ஆஃபர் ஒண்ணையும் கேன்சல் பண்ணிண இல்லை?”
“ஆமா பட் அது எப்படி அவங்களுக்கு தெரியும்?”
“உன்னை பற்றி கேட்ட இடத்தில் சொல்லி இருப்பாங்க”
“ஓஹ் பட் அந்த விஷயம் என் அம்மா, அப்பாவுக்கே தெரியாது பாட்டிக்கு மட்டும் தான் தெரியும்” குழப்பமாக அனுஸ்ரீ கூறவும்
“அப்படியா?” என்றவாறே சிறிது நேரம் யோசித்து பார்த்த ரிஷி
“ஒரு வேளை உன் பழைய கம்பெனியில் சொல்லி இருக்கலாம்” என்று கூற
“இருக்கலாம்” என்றவாறே அனுஸ்ரீ தன் தோளை குலுக்கி கொண்டாள்.
“பார்த்திங்களா சொல்ல வந்த விஷயத்தை விட்டுட்டு வேறு ஏதோ பேசிட்டு இருக்கேன்” என்று தன் தலையில் தட்டி கொண்டவள்
“எனக்கு ஆரம்பித்தில் மேரேஜ்ல இன்ட்ரஸ்ட் இருக்கல பாட்டி கிட்ட ஆரம்பத்தில் இருந்து மேரேஜ் வேணாம்னு தான் சொல்லி இருந்தேன் ஆனா அவங்களும், தாமரையும் சேர்ந்து அப்படியும், இப்படியுமா பேசி பொண்ணு பார்க்க வர்றதுக்கு சம்மதிக்க வைச்சு இப்போ நிச்சயதார்த்தமும் நடந்துடுச்சு இதற்கு முன்னாடியே நான் இதை எல்லாம் உங்க கிட்ட சொல்லி இருக்கணும் பட் அந்த டைம் மைண்ட் வேற யோசனையில் இருந்துடுச்சு ஸாரி” என்று கவலையுடன் கூற
“இட்ஸ் ஓகே பட் எதனால உனக்கு கல்யாணம் பண்ணிக்க இன்ட்ரஸ்ட் இருக்கல?” என்று கேட்டான் ரிஷி.
“அம்மா, அப்பாவை பார்த்து வந்த பயம் தான் கல்யாணம் பண்ணால் எப்போவும் இப்படி சண்டை தான் வரும்னு நான் ஆரம்பத்தில் நினைச்சு இருந்தேன் அம்மா, அப்பாவோடு பேசவே பயமாக இருக்கும் ஆனா நாளாக நாளாக சண்டை குறைஞ்சது அதேநேரம் அவங்க வீட்ல இருக்கும் நேரமும் குறைஞ்சது இத்தனைக்கும் அவங்களோடது லவ் மேரேஜ்” கவலையுடன் கூறிய அனுஸ்ரீயின் தோளில் தட்டி கொடுத்தவன்
“அவங்க ஆரம்பத்தில் உட்கார்ந்து கொஞ்ச நேரம் மனம் விட்டு பேசி இருந்தால் இவ்வளவு பார தூரமாக அது உன்னை பாதித்து இருக்காது பரவாயில்லை போனது போகட்டும் இனி நான் வந்துட்டேன் இல்லை இனிமேல் நோ வொரிஸ்” என்று கூறவும்
புன்னகையோடு அவனை திரும்பி பார்த்தவள்
“தாங்க்ஸ்” என்று கூறினாள்.
“ஒரு டவுட் கேட்கலாமா?”
“கேளுங்க”
“இப்போ நீ கல்யாணம் பண்ணிக்க முழுமையாக சம்மதிச்சியா இல்லை யாரும் போர்ஸ் பண்ணி சம்மதிச்சியா?”
“சேச்சே! என்னை அப்படி யாரும் போர்ஸ் பண்ண முடியாது நான் பார்த்த விடயங்களை எல்லாம் வைத்து மனதில் ஒரு பயம் இருக்கு தான் இல்லைன்னு இல்லை ஆனா இந்த நிச்சயதார்த்தம் எல்லாம் பிடிச்சு தான் ஓகே சொன்னேன் அதற்கு ஒரு காரணமும் இருக்கு” சட்டென்று அவள் தன் பார்வையை தாழ்த்தி கொள்ள ரிஷிக்கு அவளது அந்த பதிலே போதுமானதாக இருந்தது.
அவள் மனதில் இருக்கும் குழப்பங்களை எல்லாம் சீக்கிரமாக சரியாக செய்து விடுவேன் என்ற நம்பிக்கையோடு அவள் முகம் பார்த்து கொண்டிருந்தவனுக்கு அப்போது தெரியவில்லை பின்னாளில் வரப்போகும் பெரிய பிரச்சினைக்கு தானே காரணமாக இருக்கப் போகிறேன் என்பது.
“தேவி உனக்கு கயல்விழினு பெண்களுக்கு ஏன் சொல்லுறாங்கனு தெரியுமா?” சம்பந்தமில்லாத ரிஷியின் கேள்வியில் அவனை விசித்திரமாக பார்த்தவள்
“இல்லையே!” என்றவாறே தன் தோளை குலுக்கி கொண்டாள்.
“தண்ணீருக்கு உள்ள கயல் மீன்னு ஒரு வகை இருக்கு அதை நாம தூரத்தில் இருந்து பார்க்கும் போது நம்மளைப் பார்க்குற மாதிரியே இருக்குமாம் ஆனா கிட்ட போய் பார்த்தா வேறு எங்கோ பார்த்துட்டு இருக்குமாம்”
“ஷோ?”
“அதே மாதிரி பெண்களோட பார்வையும் தூரத்தில் இருக்கும் போது நம்மளையே பார்க்குற மாதிரி இருக்கும் ஆனா பக்கத்தில் போய் பார்த்தா வேறு எங்கோ பார்த்துட்டு இருப்பாங்களாம் இது எப்போவோ ஒரு தடவை ஒரு புக்ல படிச்சேன் அப்படி உண்மையாக இருக்குமான்னு ஒரு இரண்டு, மூன்று தடவை டெஸ்ட் வேற பண்ணி பார்த்தேன்”
“என்ன?” சிரித்துக் கொண்டே அனுஸ்ரீ கேட்கவும்
அவளை பார்த்து ஆமோதிப்பாக தலை அசைத்தவன்
“காலேஜ்ல ஒரு சில கேர்ள்ஸ் நம்மளையே பார்த்துட்டு இருப்பாங்க அப்போ எனக்கு இந்த படிச்ச விஷயம் ஞாபகம் வரும் உடனே அவங்களை திரும்பி பார்ப்பேன் என்னையே பார்க்குற மாதிரி இருக்கும் சரி பக்கத்தில் போய் பார்க்கலாம்னு போனால் அப்போவும் அப்படியே என்னையே தான் பார்த்துட்டு இருப்பாங்க அப்போ நான் நினைச்சேன் உண்மையான கயல்விழி என்பது கண்ணழகுக்கு சொல்றது தான் இதற்கு இல்லைன்னு இது ஏதோ சும்மா எழுதிய விஷயம்னு நினைச்சேன் பட் இன்னைக்கு நான் அதை அக்செப்ட் பண்ணுறேன் உண்மையான கயல்விழியை நான் பார்த்துட்டேன்” என்று கூற
“பார்த்துட்டீங்களா? எங்கே? எப்போ?” என ஆச்சரியமாக கேட்டாள்.
“காலையில் நிச்சயதார்த்தம் ஸ்டார்ட் பண்ணப்போ நீலப்பச்சை கலர் பட்டு ஸாரி கட்டி இருந்த பொண்ணு அடிக்கடி என்னைப் பார்த்துட்டே இருந்தா என்னையே தான் அவ பார்க்குறானு ஒரு கெத்தா அவ பக்கத்தில் போனா அவ கண்ணோ என்னைப் பார்க்கவே இல்லை” ரிஷி கூறியவற்றை எல்லாம் அத்தனை நேரமாக அமைதியாக கேட்டுக் கொண்டு இருந்தவள் இறுதியாக அவன் சொன்னதைக் கேட்டு முகம் சிவக்க தன் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
ரிஷி வேண்டுமென்றே அவள் முகத்தை எட்டி எட்டிப் பார்க்க அவளோ சிவந்து போன தன் முகத்தை அவனுக்கு காட்டாமல் மறைக்க பெரும் பிரயத்தனப்பட்டு கொண்டு இருந்தாள்.
“போதும் பா உங்க ஐஸ் தாங்கல” சிரித்துக் கொண்டே அனுஸ்ரீ கூறவும்
ரிஷியோ
“உன்னை சிரிக்க வைக்க எவ்வளவு டயலாக் எல்லாம் விட வேண்டியதாக இருக்கு ஷப்பா!” என்று போலியாக அலுத்துக் கொண்டே கூற அவனை பார்த்து மனம் விட்டு சிரித்தாள் அனுஸ்ரீ.
“சரி நீங்க ஏதோ சொல்லணும்னு சொன்னீங்களே என்ன விஷயம்?” அனுஸ்ரீயின் கேள்வியில் தன் முகம் இறுக கண்களை மூடிக் கொண்டவன்
“என் லைஃப்ல நடந்த ஒரு பெரிய தப்பு பற்றி சொல்லணும்” என்றவாறே தன் கண்களை திறந்து அவளைத் திரும்பி பார்த்தான்.
“தப்பா?”
“ஆமா நான் பண்ண முதல் தப்பு ஆத்மிகா”
ஏற்கனவே அனுஸ்ரீக்கு அந்த விடயம் தெரிந்து இருந்தாலும் அவனாக அவன் மனச் சுமைகளை இறக்கி வைக்கட்டும் என்று நினைத்து கொண்டவள் அமைதியாக அவன் முகம் பார்த்து அமர்ந்திருந்தாள்.
“காலேஜில் வன் ஆஃப் மை பெஸ்ட் பிரண்ட் அவளாக தான் பர்ஸ்ட் என்னை லவ் பண்ணுறேன்னு சொன்னா நான் ஆரம்பத்தில் அக்செப்ட் பண்ணல பட் அவ எனக்காக ஓடி ஓடி சில விஷயங்கள் எல்லாம் பண்ணதைப் பார்த்து அது தான் லவ்னு நினைச்சு நானும் அவளை லவ் பண்ணேன் கிட்டத்தட்ட ஐந்து வருஷம் ரொம்ப சந்தோஷமாக லைஃப் போச்சு என்னை விட லக்கி யாரும் இல்லைன்னு ரொம்ப பெருமையாக இருந்தேன் அதனால தான் என்னவோ அந்த கடவுள் என் புத்தியில் படுற மாதிரி நல்ல ஒரு பனிஷ்மெண்ட் கொடுத்தான் அத்தனை பேர் முன்னாடி நான் அவ மேல வைத்த காதலை தூக்கி எறிஞ்சுட்டு போனா ஒரு வருஷமாக பைத்தியம் மாதிரி இருந்தேன் அவ நினைப்பு வரும் போதெல்லாம் ட்ரிங்க்ஸ் பண்ணேன்” அனுஸ்ரீ கேள்வியாக அவனைப் பார்க்க தலை குனிந்து கொண்டவன்
“அது எனக்கு தான் ஆபத்துன்னு தெரியும் இருந்தும் ஏதோ ஒரு கோபம் சந்துரு, அக்கா, மாமா எல்லோரும் திட்டி பார்த்தாங்க பட் என்னால அதை விட முடியல அன்னைக்கு செப்டம்பர் 30 கடைசியாக நான் பப்க்கு போன நாள் மறக்க முடியாத நாள் அங்கே தான் ஆத்மிகா வந்தா அவ பேசுன பேச்சை எல்லாம் கேட்டு அவளை கொன்னு போடுற அளவுக்கு கோபம் வந்தது அப்போ தான் ஒரு விஷயத்தை யோசிச்சேன் தப்பு பண்ண அவளே சந்தோஷமாக இருக்கும் போது நான் ஏன் என் லைப்பை ஸ்பாயில் பண்ணணும்னு யோசிச்சு பார்த்தேன் பர்ஸ்ட் ட்ரிங்ஸை விட்டேன் அதற்கு அப்புறம் வீட்டில் அம்மா கிட்ட சொல்லி பொண்ணு பார்க்க எல்லாம் ஏற்பாடு பண்ண சொன்னேன் எனக்குன்னு ஒரு அன்பான வைஃப், அழகான குழந்தைங்க, சந்தோஷமான ஒரு பேமிலி அது போதும்னு டிசைட் பண்ணிட்டேன்” என்று கூறி விட்டு சிறிது நேரம் அமைதியாக இருந்தான்.
“எனக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கு அதையும் நீ தெரிஞ்சுக்கணும்னு நினைக்குறேன்” ரிஷியின் கூற்றில் அதிர்ச்சியாக அவனை நிமிர்ந்து பார்த்தவள்
“இன்னுமா?” என்று கேட்க
அவளை பார்த்து அவசரமாக மறுப்பாக தலை அசைத்தவன்
“நீ நினைக்குற மாதிரி எல்லாம் இல்லை நான் கொஞ்சம் சட்டுன்னு கோபப்படுவேன் அது தான்” என்று கூறவும் புன்னகையோடு அவனைப் பார்த்தவள்
“தெரியும்” என்று கூறினாள்.
“தெரியுமா? எப்படி?” ரிஷி ஆச்சரியமாக கேட்க
“சொல்லுறேன் பட் அதற்கு முதல் நான் கேட்குறதுக்கு பதில் சொல்லுங்க” என்றவள்
“அன்னைக்கு கோவிலில் வைத்து ஒரு கேள்வி கேட்டீங்க அது உங்களுக்கு ஞாபகம் இருக்கா?” என்று கேட்டாள்.
“கோவிலில் வைத்தா? என்ன கேட்டேன்?” சிறிது நேரம் தன் தாடையை தடவிக் கொண்டே யோசித்தவன்
“ஆஹ்! ஞாபகம் வந்துடுச்சு இதற்கு முன்னாடி நான் உன்னை மீட் பண்ணி இருக்கேனானு கேட்டேன்” என்று கூறவும்
புன்னகையோடு அவனைப் பார்த்து ஆமோதிப்பாக தலை அசைத்தவள்
“நீங்க கொஞ்சம் நல்லா யோசித்து பாருங்க என்னை இதற்கு முதல் நீங்க பார்த்து இருக்கீங்களா? உங்களுக்கு பழக்கப்பட்ட இடங்களில் எங்கேயாவது?” என்று கேட்டாள்.
அவளது முகத்தை சிறிது நேரம் பார்ப்பதும் சிறிது நேரம் யோசிப்பதுமாக அவன் அமர்ந்திருக்க அவனது செய்கையைப் பார்த்து புன்னகத்து கொண்டவள்
“சரி சரி ஓவரா யோசிக்காதீங்க நானே சொல்லுறேன்” என்று விட்டு தன் போனை எடுத்து எதையோ மும்முரமாக தேடிக் கொண்டு இருந்தாள்.
“என்ன ஏதோ சொல்லுறேன்னு சொல்லிட்டு போனைப் பார்த்துட்டு இருக்க?” ரிஷியின் கேள்விக்கு அவனை நிமிர்ந்து பாராமலே
“இருங்க பா ஒரு விஷயம் அதை காட்டுனால் தான் உங்களுக்கு புரியும்” என்றவள் மீண்டும் தன் போனில் மூழ்கிப் போனாள்.
பல இடங்களில் தேடிப் பார்த்து இறுதியாக தான் தேடியதை கண்டு பிடித்து எடுத்த அனுஸ்ரீ
“இதை ஞாபகம் இருக்கா?” என்றவாறே அவன் புறமாக காட்ட அதே நேரம்
“ரிஷி டைம் ஆச்சு போகலாமா?” என்றவாறு சந்துருவும் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தான்.
“இதோ வரேன்டா” சந்துருவை பார்த்து கூறியவன்
அனுஸ்ரீயின் புறம் திரும்பி
“ஸாரி டா டைம் ஆச்சு நான் கிளம்புறேன் இன்னும் கல்யாணத்துக்கு ஒரு மாதம் இருக்கு தானே இடையில் பேசிக்கலாம்” என்று விட்டு சென்று விட அவளும் புன்னகையோடு அவனை வழி அனுப்பி வைத்தாள்.
அன்று அவள் அந்த புகைப்படத்தை அவனிடம் காட்டி இருந்தால் பின்னால் வரப்போகும் பல பிரச்சினைகளை அவள் தடுத்து இருக்கக்கூடும்.
அவள் தான் ஏற்கனவே அவனை சந்தித்து இருக்கிறோம் என்ற ஒரு விடயத்தை மாத்திரம் தான் அவனிடம் சொல்ல எண்ணி இருந்தாள்.
தான் அவனை விரும்பியதை சொல்லி அதை அவன் தவறாக எடுத்து விடக்கூடுமோ என்றெண்ணி அவள் அதை மறைக்க நினைக்க ஆனால் விதியின் விளையாட்டு அன்று அவளை அந்த விடயம் பற்றி அவனிடம் பேச விடாமல் செய்து பின்னாளில் பாரிய ஒரு பிரச்சினைக்கு தூபம் போட காத்து இருந்தது……