MayaNadhi Suzhal 16
MayaNadhi Suzhal 16
மாயநதிச்சுழல்
சுழல்-15
இதுவரை:
வண்டி, முப்பது நிமிடத்தில் ஹெல்ப்லைன் மருத்துவமனையின் வளாகத்தில் அரைவட்டமடித்து நின்றது. உரிய பணத்தை செலுத்திவிட்டு, மருத்துவமனையின் வரவேற்பு நோக்கி அமுதாவின் கால்கள் வேகமாக விரைந்தன. ரிசப்ஷனை நெருங்கும் முன்னர், “மிஸ்.அமுதா?”என பக்கவாட்டில் இருந்து எழுந்த ஆண்குரல் நடையின் வேகத்தை குறைத்திருந்தது.
இனி:
“அமுதாவா?”என்றபடிக்கே ரிசப்ஷன் அருகில் கிடந்தியிருந்த நாற்காலியில் இருந்து எழுந்து வந்தவனைக் கண்டு அமுதாவின் முகத்தில் ஆச்சர்யத்தைவிடவும் பயம் மிளிர்ந்தது. “மதிமாறன்?”என்று வார்த்தைவராமல் முனுமுனுத்தவள், அவனது நீட்டிய கைகளை லேசாகப் பற்றிக் குலுக்கினாள்.
“இவ்வளவு சீக்கரம் வருவீங்கன்னு நினைக்கலை…”என்றவன் அமுதாவை அளவெடுக்கும் பார்வை ஒன்றை வீசினான்.
“சுபி இப்போ எப்படி இருக்கா? நினைவு வந்திருச்சா? எனக்கு அவளைப் பார்க்கணும்..”
“ப்ளீடிங்க் கொஞ்சம் ஸ்டாப் ஆகியிருக்குன்னு சொல்லறாங்க…இன்னும் ஐ.சி.யூல தான் இருக்கா… கீழ விழுந்ததில தலையில சின்ன கன்கஷன்..அதனால இன்னும் நினைவு வரலை…பட், நாளைக்கு கண் முழிச்சிருவான்னு டாக்டர்ஸ் சொல்லிட்டாங்க…”என்றவன், அமுதாவுடன் வேக நடை நடந்து மிந்தூக்கி வழியாக, இரண்டாம் தளத்தை அடைந்திருந்தான்.
தளம் மிகவும் அமைதியாக, நிசப்தமாக இருந்தது. சத்தமில்லாமல் ஓடிக் கொண்டிருந்த தொலைக்காட்சியில் செய்திகள் ஒளிபரப்பிக் கொண்டிருக்க, யாரும் அதனை கவனித்துப் பார்க்கவில்லை. இரண்டொருவர் நாற்காலியில் சோகமே உருவாக அமர்ந்திருந்தனர். சிலர் நித்திரையில் ஆழ்ந்திருக்க, செவிலியர் அமரும் இடத்தின் அருகில் சென்று நின்றான்.
“பேஷண்ட் பேரு. சுரபி. இன்னைக்கு நைட் அட்மிட் பண்ணோம். அவங்க சிஸ்டர் வந்திருக்காங்க…ஐ.சி.யூல அலவ் பண்ணுவாங்களான்னு கொஞ்சம் கேட்டு சொல்லறீங்களா சிஸ்டர்”என மெல்லமாக மொழிந்தான். அந்த செவிலி அங்கிருந்து அகன்று சென்றதும், இருவரும் ஐ.சி.யூவின் வாயில் அருகில் நின்று கொண்டனர். படபடப்புடன் கைப்பையை இருக்க பற்றியிருந்த அமுதாவைக் காண மதிமாறனுக்கு ஆச்சர்யமாக இருந்தது.
சுரபி அக்கா, அக்கா என சொல்லியிருந்த காரணத்தினால் ஒரு 35 வயதினரை மனதில் வரிந்திருந்தவனுக்கு, அமுதா இவ்வளவு சிறியவளாக இருப்பாள் என நம்ப சிரமமாக இருந்தது. சுரபியை விடவும் உயரம் கம்மியாக, தோள் வரையிலும் சீராக வெட்டப்பட்ட கூந்தலை சிறிய கொண்டை போலாக்கி தலையில் சொருகியிருந்தாள். உயரத்தை சமன் செய்ய அரை அடி நீல ஹை ஹீல்ஸ் செருப்பு, அடர் நீள வண்ணன் ஜீன்ஸ், மெல்லிய நீல வண்ண காட்டன் டாப்ஸ், அதன் மேல் ஒரு ஆழ்ந்த சிவப்பு நிற ஸ்வெட்டர் என மதிமாறன் மனதில் கற்பனை செய்திருந்த அமுதா அக்காவிற்கும், எதிரில் கைப்பையை இறுக்கமாக பற்றியபடிக்கு நின்றிருந்த அமுதாவிற்கும் எள் அளவும் ஒற்றுமை இல்லை. மதிமாறன் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்க அமுதாவின் மனமோ, ஐ.சி.யூவின் கதவுகள் எப்போது திறக்கும் என ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டு நின்றிருந்தது.
சிறிது நேரத்தில் உள்ளே சென்றிருந்த செவிலி எதிர்பட்டாள். “ஒருத்தர் மட்டும் போய் பார்க்கலாம்… உள்ள போனதும் வலது பக்கம் மூனாவது பெட்”என மொழிந்துவிட்டு மீண்டும் அவளது இருக்கைக்குச் சென்று அமர்ந்து கொண்டாள். அமுதா வேகமாக செருப்பைக் கழற்றி, கதவருகில் வைத்துவிட்டு, அருகில் இருந்த ஸ்டேண்டில் கைப்பையை மாட்டியபின் உள்ளே சென்றாள்.
சில்லென்ற குளிரூட்டப்பட்ட அறை அமுதாவை வரவேற்றது. நிறைய விளக்குகள் அணைக்கப்பட்டிருக்க, அங்கங்கே சில விளக்குகள் மட்டும் எரிந்து கொண்டிருந்தன. “சுரபி…” என்று எதிர்பட்ட செவிலியிடம் மொழிய, “மூனாவது பெட்”என கைகாட்டியவள், நாற்பக்கமும் சூழ்ந்திருந்த திரையை மெல்ல விலக்கினாள். கைகளில் சலைன் பாட்டில் வழியே திரவும் உடம்பினுள் சென்று கொண்டிருந்தது. வலது காலில் நிறைய பாண்டேஜ்களும், பஞ்சுகளும் கட்டப்பட்டிருந்தன. சுரபி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.
“சுபி…சுபிம்மா”என மெல்லமாக வாய்க்குள் முனுமுனுக்கும் போதே அமுதாவின் கண்கள் கட்டிக் கொண்டன. சுரபியின் தலைமேலிருந்து, “கீங் கீங்”ஓசை எழுப்பிக் கொண்டிருந்த ஒரு கருவியின் சத்தத்தினால் அமுதாவின் அழுகை வெளிகேட்கவில்லை. முகத்தில் அவ்வளவாக சிராய்ப்புகள் இல்லை. காலில் மட்டுமே கட்டுகள் போடப்பட்டிருந்தன. கழுத்து வரை போர்த்தபட்டிருந்தது. முகத்தை மட்டும் கவனித்தால் அயர்ந்து உறங்குவது போல் மட்டுமே தெரியும். “இப்பவும் தூங்கிட்டு தான இருக்கா…ஏன் பெருசா ஏதோ நடந்திட்ட மாதிரி யோசிக்கற”என மனதிற்குள் நினைத்துக் கொண்டவள், மேலே யோசிக்கும் முன்னர், செவிலி எட்டிப் பார்த்தாள்.
“பேஷண்டை டிஸ்டர்ப் பண்ணாதீங்க மேடம்….நல்லா தூங்கறாங்க…”என்று மெல்லமான குரலில் திடமாக மொழிய, தன்னை ஒருவாறு நிலைபடுத்திக் கொண்டாள்.
“எப்போ கண் விழிப்பா சிஸ்டர்?ப்ளீடிங்க நின்னுடுச்சா?”
“வலிதெரியாம இருக்க செடேஷன் குடுத்திருக்கு. ப்ளீடிங் முழுசா நிக்கலை…80% நின்னுடுச்சு…மத்தபடி நார்மல் தான்..”
“நரம்பில கண்ணாடி ஆழமா ஏத்தியிருக்குனு சொன்னாங்களே…அதனால ஃப்யூச்சர்ல எந்த பாதிப்பும் இருக்காதா சிஸ்டர்…” என்று வினவின அமுதாவை கொஞ்சம் விசித்திரமாகப் பார்த்த செவிலி, “மேடம், இந்த டீடெயில்லாம் நீங்க டாக்டர்ட்ட தான் கேட்கணும்…பேஷண்டைப் பார்த்துட்டீங்கன்னா வெளிய வெயிட் பண்ணுங்க…டியூடி டாக்டர் ரவுண்டஸ் வர நேரம். இங்க இருந்தா எங்களை திட்டுவாங்க…”என்று அவ்விடத்தை விட்டு வேகமாக வெளியேறச் சொன்னார்.
தங்கையின் முகத்தில் மீண்டும் பார்வையை ஓட்டி,மனதை திடப்படுத்திக் கொண்டு, ஆழ்ந்த பெருமூச்சுகளுடன் ஐ.சி.யூவின் வாயிலை நோக்கி நகர்ந்தாள் அமுதா. காத்திருந்தது போல் அருகில் வந்த மதிமாறனைப் பார்த்து சினேகமாகத் தலையசைத்தாள்.
“எப்படி இருக்கா? கண் முழிச்சாளா?”என வினவிய மதிமாறனின் குரலும் படபடத்தது.
இல்லை என்று தலையசைத்த அமுதா, காலியாக இருந்த நீள இரும்பு சேரில் சென்று அமர்ந்தாள். “கண் முழிக்கலை. ப்ளீடிங் 80% நின்னுடுச்சுன்னு சொன்னாங்க…” என்று மட்டும் நிலைகுத்திய பார்வையுடன் மொழிந்தாள். அமோதிப்பாக மதிமாறன் தலையசைத்தது பக்கவாட்டுப் பார்வையில் விழுந்தது.
“எப்படி ஆக்ஸிடெண்ட் ஆச்சு…உங்க கூட வெளிய சாப்பிடப் போறேன்னு மட்டும் தான் சொன்னா? உங்களுக்கு எதுவும் அடிபடலியே? எப்படி கண்ணாடி குத்திச்சு…வண்டி இடிச்சுடுச்சா?”என நாற்காலியில் இருந்து திரும்பி, மதிமாறனை பார்த்தவண்ணம் அமர்ந்து கொண்டு வினவினாள்.
“இது எதார்த்தமா நடந்த ஆக்ஸிடெண்ட் இல்லைங்க….உங்க தங்கை தானா ஏற்படுத்திகிட்டது..” என்று ஆழ்ந்த பெருமூச்சுடன் பேசத் துவங்கிய மதிமாறன், விபத்தைப் பற்றி, குழந்தை நடுரோட்டில் நின்றதிலிருந்து துவங்கி, சுரபி மயக்கமுற்று விழுந்தது வரையிலும் சொல்லி முடித்தான். இடையில் குறுக்கிடாமல் கேட்டுக் கொண்டிருந்த அமுதாவின் முகம், எந்த சலனமும் இன்றி இயல்பாக விஷயங்களை உள்வாங்கிக் கொண்டிருந்தது.
சுரபி, குழந்தையின் அன்னையை அடித்ததைப் பற்றி கூறிய போது, அமுதாவிடம் இருந்து எழுந்த இதழ்பிரியா சிரிப்பை மதிமாறன் கவனிக்கத்தான் செய்தான். ஒருவாறு, நடந்தவிஷயங்களை கோர்வையாக சொல்லி முடித்தான்.
“சுரபி எப்பவுமே அப்படித்தான்…கொஞ்சம் எமோஷ்னல் டைப்…”என்றவள், “உங்களுக்குத் தான் எப்படி நன்றி சொல்லறதுன்னே தெரியலை சார். உங்க வேலை எல்லாம் விட்டுட்டு இவ்வளவு தூரம் உதவி செங்கிருக்கீங்க….நன்றின்னு ஒரு வார்த்தையால சொல்லி முடிச்சுக்கறது தப்பு. உங்களுக்கு நாங்க கடமைபட்டிருக்கோம்னு வேணா சொல்லலாம்..”
“பெரிய வார்த்தை எல்லாம் பேசறீங்க..”என்று மறுப்பாக தலையசைத்தவன், “ஒருவகையிலப் பார்த்தா, சுரபிக்கு அடிபட நான் தான் காரணம். அவளை இன்னைக்கு வெளிய கூட்டிட்டு வராம இருந்திருந்தா அடியே பட்டிருக்காது…ஐ, ஃபீல் கில்டி..”
“சே, சே…ஏன் அப்படி யோசிக்கறீங்க…அவ இன்னைக்கு வந்ததால தான் ஒரு குழந்தையை காப்பாத்த முடிஞ்சிருக்கு..அந்த விதத்தில பார்த்தா கெட்டதுலையும் நல்லது தானே நடந்திருக்கு..” என அமுதா விவரிக்க. “ம்ம்ம்”என்று ஆமோதிப்பாக தலையசைத்தான் மதிமாறன்.
இருவரும் சிறிது நேரம் அவரவர் எண்ணங்களில் மூழ்கியிருக்க, “காபி சாப்பிடலாமா? தலை வலிக்குது”என மதிமாறன் மொழிய, அமுதா சரியென தலையசைத்தாள். மருத்துவமனையின் வாயிலில் வீற்றிருந்த சிறிய பெட்டிக் கடையை நோக்கி சென்று, ஆளுக்கு ஒரு காபி வாங்கிக் கொண்டனர். நடக்கும் போது அமுதா சற்றே வலதுகாலை சாய்த்து நடப்பது போல் தோன்றியது. அதுவும் ஊன்றி கவனித்தால் மட்டுமே விளங்கும் இந்த சிறிய குறை தவிற, அமுதா அழகாகவே இருந்தாள்.
“அக்கா அக்கான்னு நிறைய சொல்லியிருக்கா…. நானும் வயசில கொஞ்சம் பெரியவங்களா இருப்பாங்கன்னு எதிர்பார்த்தேன். இவ்வளவு சின்ன வயசா இருப்பீங்கன்னு தெரியலை..”என காபியை பருகிக் கொண்டே மதிமாறன் மொழிய, அமுதா இதழ்பிரிக்காமல் சிரித்தாள்.
“கேட்கணும்னு நினைச்சேன்….சுரபிக்கு நீங்க மட்டும் தானா? ஐ மீன் அப்பா அம்மா ஃபேமிலி இதெல்லாம்….”என கேள்வியாக நிறுத்தினான். மதிமாறனின் முகத்தில் ஒரு அளவிடும் பார்வையை ஓடவிட்ட அமுதா, “இவ்வளவு நாள் சுரபிகிட்ட பேசியிருக்கீங்க…ஒரு தடவை கூட வீட்டைப் பத்தி கேட்டதில்லையா?”
“சுரபி எதுவும் சொன்னதில்லை..”
“நீங்க கேட்டிருக்கீங்களான்னு தான் கேட்டேன்…” என திரும்பவும் கண்களை குறுக்கிக் கொண்டு அமுதா வினவ, தன் மீது தவறோ என்ற எண்ணத்தில் மதிமாறன் மெல்ல இல்லை என்று தலையசைத்தான்.
“சுரபி தானா அவளைப் பத்தியொ,என்னைப் பத்தியோ சொல்லியிருக்க மாட்டா…நீங்க கேட்டிருந்தா ஒருவேளை சொல்லியிருக்கலாம்.”
“சரிங்க தப்பு தான்…சுரபிட்ட அவளைப் பத்தி பர்சனலா நான் எதுவும் பேசினது இல்லை.. என்னைப் பத்தியும் சொன்னது இல்லை”
“ஓ, ஆனா ஒரே ஒரு தடவை “லவ்” பண்ணறேன்னு மட்டும் சொல்லியிருக்கீங்க…அதைத் தவற வேற எதுவும் பர்சனலா பேசினதில்லை..கரெக்டா”என அமுதா பேசியது குதற்கமாகவே தெரிந்தது. மதிமாறன் முகம் கொஞ்சம் கன்றி, சிவந்தும் போனது. அந்த நொடியே அவனுக்கு அக்காவிற்கும், தங்கைக்கும் உள்ள வித்தியாசம் விளங்கியது. சுரபி எவ்வளவுக்கு எவ்வளவு மென்மையான குணமுடையவளோ, அதற்கு நேர் எதிர் அவளது தமக்கை என புரிந்தது. சுரபி ஒரு நாளும் அடுத்தவரை எடுத்தெரிந்து, அதும் அவர் முகத்தின் நேராக சொல்லிவிடமாட்டாள்.
“ராட்சஸிகளைப் பார்த்து பழகினா தான், தேவதைகள் எப்படி இருப்பாங்கன்னு புரியுது”என மனதிற்குள் நினைத்துக் கொண்டான். அதிலும் இன்று, சுரபி செய்திருக்கும் விஷயம், நினைத்தாலே புல்லரிக்கும் விதம் தான்.
இருவருமே சாலையின் நடுவில் சென்றோம் தான். ஆனால், ஒரு போலீஸ் அதிகாரியாக, ஒரு ஏ.சி.பியாக இருந்தும் தனக்கு இல்லாத அந்த நொடி நேரத் துணிவு, சாதாரண பூஞ்சை உடம்பு கொண்ட பெண்ணிற்கு இருந்ததை எண்ணி எண்ணி வியந்தான். அமுதாவின் கேள்வியும், அதை அவள் கேட்ட விதமும் மதிமாறனுக்கு சற்றும் பிடித்தமாயில்லை. இருந்த போதும், சுரபிக்காக தன்னை சாந்தப்படுத்திக் கொண்டான்.
சுரபியுடன் பழகத் துவங்கியிருந்த இந்த சில வாரங்களில் அவள் மீது, நல்ல மதிப்பும், திறமையாக விளையாடும் பெண், மாணவர்களின் மனதைப் புரிந்து கொண்டு பாசம் காட்டி பாடம் நடத்தும் ஆசிரியை என்ற பெருமிதமும் உண்டாகியிருந்ததென்றால், இன்று சுரபி நடந்து கொண்டதை நினைத்து நெஞ்சம் பாசத்தில் வெடித்துச் சிதறிவிட்டிருக்கும். அந்த அளவிற்கு சுரபியை மனம் விரும்பியது.
அதிலும், அவ்வளவு நேரம் நன்றாக பேசிக் கொண்டிருந்தவள்,”உனக்கெல்லாம் எதுக்கு குழந்தை?”என்று, பளாரென அந்த தாயின் கன்னத்தில் அறைந்தவள், திடீரென வெட்டப்பட்ட மரம் போல் கீழே சாய, உண்மையில் மதிமாறன், அந்த நொடியில் தான் தனக்கு சுரபி மீது கொண்ட காதலை உணர்ந்தான். போலீஸ் என்ற கர்வம் உடைபட, ஏ.சி.பி என்ற திமிர் காற்றில் கரைய, சாமானியன் போல், காதலி கண்விழிக்க வேண்டும் என்ற தவிப்பில் மதிமாறன் நின்றது அப்போது தான். அவளுக்கு ஏதும் ஆகிவிடக்கூடாது என்ற எண்ணம் பிரதானமாக இருக்க, மற்றதெல்லாம் மறந்தும் போனது.
சுரபியின் அக்காவிடம் இதெல்லாம் சொல்ல நா எழுந்த போதும், அதற்கான சமயமோ, சந்தர்ப்பமோ அதுவன்று என்று அமைதி காத்தான். இருவரும், குடித்து முடித்த கோப்பைகளை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு, மீண்டும் மருத்துவமனையின் வாயிலை நோக்கி நடந்தனர். ரிஷப்சன் அருகில் மீண்டும் சென்று அமரச் சென்றவனை, “இப்படி உட்காரலாமா?”என்று, வாயில் அருகில் இருந்த வரவேற்பு பலகையின் கீழ, தனியாகப் போட்டிருந்த இரட்டை நாற்காலியை கைகாட்டினாள் அமுதா. மறுபேச்சில்லாமல், மதிமாறன் ஒரு நாற்காலியில் அமர்ந்து கொள்ள, அவனது வலது பக்க நாற்காலியை தனதாக்கிக் கொண்டாள் அமுதா.
மதிமாறனின் முகம் இன்னமும் செம்மை பூத்திருந்தது. இதற்கு மேலும் பேசாது இருத்தல் கூடாது என நினைத்த அமுதா,”சுரபி அவளைப் பத்தி, என்னைப் பத்தி, எங்க குடும்பம் பத்தியோ சொல்லாம இருக்க பெரிய காரணம் இருக்கு. அதும் முக்கியமா உங்ககிட்ட சொல்லாம மறைக்கறதுக்கு…காரணம் உங்க வேலை” என அமுதா சொல்லி நிறுத்த, கண்களில் ஆர்வமாக மதிமாறன் அமுதாவை ஏறிட்டான். இவனிடம் சொல்லலாமா வேண்டாமா என சில கணங்கள் அமுதா தயங்குவது தெரிந்தது. மனதை திடப்படுத்திக் கொண்டவள், அமைதியான ஆழ்ந்த குரலில் பேசத் துவங்கினாள்.