Mayanadhi suzhal 30

Mayanadhi suzhal 30

மாயநதிச்சுழல்
சுழல்-30
இதுவரை:
சந்தர்பத்திற்கு ஏற்றவாறு, தொலைக்காட்சியில் “கடவுள் தந்த அழகிய வாழ்வு… உலகம் முழுதும் அவனது வீடு…கண்கள் மூடியே வாழ்த்துபாடு”என மெல்லமாக பாடத் துவங்க, அனு வேண்டுமென்றே பாட்டின் சத்தத்தை அதிகப்படுத்தினாள். சற்று நேரம் பேசாமல் பாடலைக் கேட்டுக் கொண்டிருந்த லலிதா, “டிவியை ஆஃப் பண்ணுடீ”என சொல்லி, ஹாலில் இருந்து எழுந்து அறையினுள் முடங்கிக் கொண்டாள். சோஃபாபில் அமர்ந்திருந்த தந்தையைப் பார்த்து அனு, முறுவலிக்க, அவரும் பதிலுக்கு இதழ் பிரிக்காமல் புன்னகைத்தார்.
இனி:
அடுத்த தினம் சனிக்கிழமை. முந்தினம் பேசிச் சென்ற கசப்பு மதிமாறனின் நெஞ்சில் இன்னும் மீதமிருக்க, அன்றைய காலை சீக்கிரமாகவே ஸ்டேஷன் சென்றுவிட்டான். செய்யவேண்டிய பணிகளை செவ்வனே செய்து கொண்டிருந்த போது, சுரபியிடம் இருந்து அழைப்பு வந்தது. ஒருவாறு மதிமாறன் இந்த அழைப்பை எதிர்பார்த்தான் என்றே சொல்லவேண்டும். நேற்று தாய் தந்தையுடன் பேசிக் கொண்டிருந்த போது சுரபியிடமிருந்து வந்த அழைப்பை ஏற்க முடியாமல் போயிற்று.
“நான் அக்காவுடன் பெங்களூர் செல்கிறேன். கால் மீ”என குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாள். ராத்திரி வெகு நேரம் கழித்தே குறுஞ்செய்தியை வாசித்தான் என்பதால், இந்த நேரத்தில் தொந்தரவு செய்ய வேண்டாம் என முந்தினம் அழைக்காம்ம் விட்டிடுந்தான்.
காலை எழுந்ததுமே சுரபியின் குறுஞ்செய்தியுடன் தான் நாள் துவங்கியது. தாய் தந்தை என்ன சொன்னார்கள் எனக்கேட்டு செய்தி அனுப்பியிருந்தாள். சுரபியிடம் இருந்து நிறைய நல்ல பழக்கங்களில் இதுவும் ஒன்று. நச்சு நச்சென்று கேள்விகளால் துளைத்துக் கொண்டிருக்க மாட்டாள். “பிசியா இருக்கேன். அப்பறமா கூப்படறேன்”என்று வார்த்தைகளால் சொல்லவேண்டும் என்று கூட அவசியம் இல்லை. கைப்பேசி அழைப்பு வரும் போது ஒரு தரம் துண்டித்தால், திரும்ப அழைக்கமாட்டாள்.
அதேசமயம், அடுத்த முறை அழைக்கும் போது, “அப்போ கூப்பிட்டேன். ஏன் கட் பண்ணீங்க?”என்று சண்டையிடவும் மாட்டாள். “இப்போ ஃப்ரீயா? பேசலாமா?”என கேட்ட பின்பு அவள் பாட்டில் பேசுவாள். ஏன் என் அழைப்பை துண்டித்தாய்? என்னைவிட வேலை முக்கியமாக படுகிறதா?”என நாடகத்தனம் சிறிதும் சுரபியிடம் கிடையாது.
முந்தினம் அழைப்பை துண்டித்த போதும் கூட, “பெங்களூர் செல்கிறேன், முடியும் போது அழைக்கவும்.”என செய்தி அனுப்பியிருந்தாள். மதிமாறன் வீட்டில் இருந்து கிளம்பிய மனநிலையில் சுரபி ஏதேனும் கேள்விகேட்டால் சரியான பதிலை சொல்ல இயலாது. அதனாலேயே ராத்திரி அழைக்காமல் தவிர்த்திருந்தான்.
அதிகாலை எழும்போதே “அப்பா அம்மா என்னை பத்தி என்ன சொன்னாங்க?”என்ற குறுஞ்செய்தியுடன் கண்விழிக்கவும், மதிமாறனுக்கு சுரபியை நினைத்தால் பாவமாக இருந்தது. அவள் தமக்கை மட்டுமே அவள் வாழ்வில் இருக்கிறாள் என தெரிந்தும் தான் பேசிய கேலிகளை தாங்கிக் கொள்பவள், என் தாய் தந்தை என்ன நினைக்கிறார்கள் என தெரிந்து கொள்ள காட்டும் ஆர்வத்தில் கால் பங்கு கூட தான் காட்டாது நினைத்து சற்றே சங்கடமாக இருந்தது.
பெற்றோரின் மனநிலையை  உள்ளது உள்ளபடி விளம்பிவிட மதிமாறன் எண்ணவில்லை. அவனைப் பொறுத்தமட்டில் அம்மா லலிதாவின் இந்தக் குணம் தற்காலிகமானது. சற்றே அடுத்தவர் பேச்சு கேட்டு நடக்கும் பாங்கு கொண்ட அன்னையை, அவளது அண்ணன் கண்டதையும் கூறி குழப்பிவிட்டிருக்கிறார். அவர் பெண் லாவண்யாவை மதிமாறனுக்கு மணமுடிக்கும் எண்ணம் இருவீட்டாருக்குமே இருந்தது நிஜம். மதிமாறன் தான் பிடிகொடுக்கவில்லை.
“அனுகூட எப்பவும் சேர்ந்து சுத்திகிட்டு இருக்கற பொண்ணு. அவளும் அனுமாதிரி தான் எனக்கு. மனைவியாலாம் யோசிக்க முடியலை. இந்த பேச்சை இனிமே எடுக்காதீங்க” என கராராக மறுத்துவிட்டிருந்தான். அந்த கோபத்தினாலோ என்னவோ அம்மாவின் அண்ணன் இல்லாதும் பொல்லாதும் கூறி, தெளிவாக இருந்த அன்னையின் மனதை கலைத்திருக்கக் கூடும்.
இந்த தற்காலிகமான மனக்குழப்பத்தை சுரபியிடமும் அமுதாவிடமும் சொல்லி பயப்படுத்துவானே என கருதினான். அதனாலேயே அடுத்த தினம் சுரபி அழைத்த போது, சாதாரணமாகவே பேசினான். “என்ன திடீர்ன்னு பெங்களூர்க்கு. முன்னாடி எங்கிட்ட சொல்லவேயில்லை.” என இயல்பாக பேச்சு கொடுத்தான்.
“இல்லை..ப்ளான்லாம் எதுவும் இல்லை. சும்மா திடீர்ன்னு தான்…சரி, உங்க அப்பா அம்மா என்ன சொன்னாங்க…என்னை பிடிச்சிருக்கா? அக்கா வேற, அவங்க அம்மாக்கு இந்த கல்யாணத்தில இஷ்டம் இல்லைங்கற மாதிரி நினைக்கறா. நான் அதெல்லாம் ஒண்ணுமில்லைன்னு சொன்னாலும் கேட்கலை…ஏதாவது சொன்னாங்களா?”என மீண்டும் அதே கேள்வியிலேயே வந்துதேங்கி நின்றாள்.
ஒரு நிமிடம் உண்மையை சொல்லிவிடலாம் என நினைத்தவன், அடுத்த நொடியே மனதை மாற்றிக் கொண்டான். “ஃபோனை உங்க அக்காட்ட குடு” என்றான். கைபேசி கைமாறியதும், “அமுதா, சொல்லுங்க…என்ன பிரச்சனை. ஏன் சுரபி மனசில தேவையில்லாத சந்தேகத்தை விதைக்கறீங்க?”என சற்றே காட்டமாக வினவினான். தன் வீட்டின் நிலைமைய அமுதா சரியாக கணக்கிட்டுவிட்டாளே என கோபம் கூட எழுந்தது. அதை பேச்சிலும் காட்டவே செய்தான்.
“எங்கிட்ட  என்ன பிரச்சனைன்னு எப்படி கேட்டறீங்க..உங்க வீட்டில என்ன நடந்ததுன்னு நீங்க தானே சொல்லனும். நேத்திருந்து சுபி ஒரே புலம்பல். என்னை பிடிச்சிருக்குமாக்கா? வேண்டாம்னு சொல்லிடுவாங்களாக்கா? வேண்டாம்னு சொல்லிட்டா மதிமாறன் அவங்க பேச்சை மீறி என்னை எப்படிக்கா கல்யாணம்பண்ணிக்க முடியும்? அது இதுன்னு ஆயிரம் கேள்வி கேட்கறா…”
“நியாயமா பார்த்தா அவகிட்ட சாந்தமா பேசி புரியவைக்க வேண்டியது உங்க கடமை. அதைவிட்டுட்டு எங்கிட்ட ஏன் உங்க கோபத்தை காட்டறீங்க?”என மறுமுனையில் அமுதா படபடத்தாள். ஒருவிதத்தில் அமுதா பேசுவது உண்மை என மூளைக்கு தெரிந்த போதும், மதிமாறனால் தன் ஈகோவை விட்டுத் தர இயலவில்லை. முடிந்த மட்டும் கோபத்தை வார்த்தைகளில் இருந்து களைந்தவன், சற்றே சமாதானமாக குரலில் அமுதாவிடம் பேசினான்.
“இத பாருங்க அமுதா. என் அப்பா அம்மாக்கு பிடிக்குது, பிடிக்கலைங்கறது பெரிய விஷயம் இல்லை. அப்படியே பிடிக்கலைன்னு வச்சிகிட்டாலும், அது என்னோட பிரச்சனை. நான் ஹேண்டில் பண்ணிக்குவேன். நீங்க சுரபிகிட்ட கண்டதையும் சொல்லி அவ மனசை குழப்பாதீங்களேன் ப்ளீஸ்.”
“நான் குழப்பறேனா? மதிமாறன், நேத்து நடந்தது பார்த்தீங்கள்ள, நாங்க ரெண்டு ஜீவன் அங்க உட்கார்ந்திருக்கோம்கற மாதிரியே உங்க அம்மா நடத்தலை. கோவத்தில கத்தி சண்டை போடறவங்களை கூட ஒருவகையில நம்பலாம் மிஸ்டர்.மதிமாறன். இந்த மாதிரி அமைதியா, எனக்கு என்னன்னு ஒதுக்கறவங்க ரொம்ப டேஞ்சரஸ் பீபள். அவங்க மனசில என்ன நினைக்கறாங்கன்னு கண்டுபிடிக்கவே முடியாது. நான் சொல்லறதை கேட்க, அதுவும் உங்க அம்மாங்கற போது, நான் பேசறது தப்பாவும், கோபப் படும்படியாவும் கண்டிப்பா இருக்கும். ஆனா, அதான் உண்மை. யோசிச்சு பார்த்தா உங்களுக்கும் புரியும்”என பேச்சை நிறுத்தினாள்.
மதிமாறனுக்கு தலை லேசாக வலிக்கத் துவங்கியது. சுரபியிடம் சாதாரணமாக பதில் சொல்லி தப்பித்துக் கொள்வது போல் அமுதாவிடம் சொல்ல இயலாது என்பது மதிமாறன் ஏற்கனவே பலமுறை பட்டு தெரிந்துகொண்டுள்ளான். அதை இந்த முறையும் அமுதா மெய்பிக்கவே செய்தாள்.
“அமுதா, சுரபி, பக்கத்தில இருக்காளா? நீங்க பேசறது அவளுக்கு கேட்குதா?”
“அந்தளவு எனக்கு நாகரீகம் தெரியாம இல்லை மதிமாறன். நான் பேசறது, குறிப்பா உங்க அம்மா பத்தி அவ முன்னாடி பேசறது தப்புன்னு எனக்குத் தெரியும். அவ கிட்சன்ல இருக்கா, நான் பால்கனியில நின்னு தான் பேசறேன். அவளுக்கு கேட்காது..”
“நல்லது அமுதா. நீங்க சொல்லறதை அப்படியே 100 பர்சண்ட் நான் ஒத்துக்கறேன். உங்க இடத்தில இருந்து நீங்க பேசறது, யோசிக்கறது எல்லாமே சரி. நியாயமும் கூட. ஆனா, என் அப்பா அம்மா பத்தி எனக்கு தெரியும். அவங்க சென்னை கிளம்பற வரைக்கும் நல்லா தான் இருந்தான்ங்க. நடுவுல என் மாமா ஒருத்தர், என் அம்மாவோட அண்ணா, நடுவுல பூந்து என் அம்மா மனசை குழப்பிவிட்டிருக்கார். உடனே, அவங்க பேசினா குழம்பற அளவுக்கு உங்க அம்மாவுக்கு நிலையான மனசு இல்லையாக்கும்னு குதர்க்கமா கேட்காதீங்க.”என அமுதா சொல்லவந்ததையும் தானே சேர்த்து மொழிந்தவன், அமுதா பேச சிறு இடைவெளிகூட கொடுக்காமல் மீண்டும் பேசினான்.
“இது என்னோட பிரச்சனை. என் அப்பா அம்மாக்கு சுரபியை பிடிச்சுதானிருக்கு. அதில எந்த பிரச்சனையும் இல்லை. ஆனா, என் மாமா, குடும்பம் வேணும், பேக்-கிரவுண்ட் வேணும். நாளைக்கு என் தங்கை அனுவுக்கு மாப்பிள்ளை தேடறது கஷ்டம், ஒரு நல்லது கெட்டதுன்னா யாரும் இருக்கமாட்டாங்கன்னு கொளுத்தி போட்டுட்டு போயிருக்காரு. அந்த ஊசிவெடி கொஞ்ச நாள் வெடிச்சிட்டு தான் இருக்கும். ஆனா, அது தற்காலிகம் தான். என்னை நம்புங்க. என் அப்பா அம்மா உண்மையாவே குறுகிய மனசு உள்ளவங்க இல்லை. இதை நிறைய தடவை என் லைஃப்ல நான் பார்த்திருக்கேன். அந்த நம்பிக்கையில தான் சொல்லறேன். கொஞ்சம் டைம் குடுங்க…”
“மதிமாறன், நான் என்ன நாளைக்கே உங்க கல்யாணம்னா அவசரபடறேன். இல்லையே. இதை நீங்க முன்னாடியே கணிச்சிருந்தா. இந்த பெண் பார்க்கறதை கொஞ்சம் ஒத்தி வச்சிருக்கலாமே. இப்படி குழப்பமா இருக்கறப்போ, எங்களை வேற வரசொல்லி, “இந்த டேட் சவுகரியப்படுமான்னு ஒரு சின்ன கேள்விகூட கேட்காம” நீங்களா முடிவெடுத்து, நீங்களா எல்லா விஷயமும் செய்யறது தான் தப்புன்னு சொல்லறேன். “என அமுதா பேசியது சகலமும் உண்மை தான் என்ற போதும், மதிமாறனால் அதை ஏற்றுக் கொள்ள இயலவில்லை.
“அப்போ, உங்க தங்கை கல்யாணத்தைவிட உங்க வேலையும், உங்ககிட்ட கேட்டுட்டு டேட் சொல்லலைங்கறதும் இப்போ பெரிய பிரச்சனையாப் படுதா உங்களுக்கு?” என சீறினான். அமுதா மறுமுனையில் பெரிதாக மூச்சு விடுவது கேட்டது.
“பாருங்க…திரும்ப திரும்ப புரியாமையே பேசறீங்க. இது எனக்கு ஆடிட்டிங்க டைம். லீவ் போடறது கஷ்டம். என்னோட கம்பெனி க்ளையண்ட்ஸ், அப்பறம் என்னோட பர்சனல் கிளையண்ட்ஸ் பார்க்கணும். டேக்ஸ் ஃபைலிங் இருக்கு. அக்கவுண்ட்ஸ் டேலி பண்ணி, ஆனுவல் ரிப்போர்ட் குடுக்கணும். இதெல்லாம் என்னோட தனிப்பட்ட கஷ்டங்கள். என்னோட பிரச்சனைகள் இவ்வளோ இருக்குன்னு உங்ககிட்ட நான் சொல்லிட்டு இருக்க முடியாது. என் தங்கையோட வாழ்க்கை, மாப்பிள்ளை வீட்டுக்காரங்கன்னு மரியாதையா நான் வரத்தான் செய்தேன்.சோ, உங்களுக்கு மட்டுமே கஷ்டம் இருக்கும், சுத்தி இருக்கற எல்லாரும் உங்களுக்கு ஏத்த மாதிரி நடந்துக்கணும்னு இனியும் நினைக்காதீங்க…புரிஞ்சுக்குவீங்கன்னு நம்பறேன்…”
“புரியுது. இதை நானுமே எதிர்பார்க்கலை. எங்க அம்மா இப்படி நடந்துப்பாங்கன்னு நான் கனவு காணலை. சோ, இந்த விஷயத்தை இப்போதைக்கு கொஞ்சம் விடுங்க. கேப் குடுங்க…அதுக்குள்ல உங்க தங்கை மனசில தப்பான எண்ணங்களை விதைக்காதீங்க”
“உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்….சரி மதிமாறன். நான் பேசறதை புரிஞ்சுக்கற பக்குவம் உங்ககிட்ட இப்போ இல்ல. நான் எதுவும் சொல்லிக் குடுத்து சுரபி மனசை மாத்தவும் பார்க்கலை. இது, நீங்களா உருவாக்கின சங்கடம் தான். இவ, “அவங்க என்ன சொன்னாங்க? என்ன சொன்னாங்கன்னு” ஆயிரம் தடவை கேட்பா. இதெல்லாம் ஈசியா அவாய்ட் பண்ணியிருக்க வேண்டிய விஷயம். காம்பிளிகேட் பண்ணது நீங்க தான். உங்க அப்பா அம்மா என்ன நினைக்கறன்னு ஒரு ஐடியா இல்லாம, அவங்களை மீட் பண்ண ஏற்பாடு  செஞ்சது உங்க மிஸ்டேக்….அதாவது உங்களுக்கு புரியுதா இல்லை, இதை புரிஞ்சுக்கவும் உங்க ஈகோ இடம் குடுக்கலையா?”
“புரியுதுங்க அமுதா. சில மிஸ் கால்குலேஷன் சரியா. திரும்ப திரும்ப சொல்லறேன், என் பேரண்ட்ஸோட இந்த மனநிலை தற்காலிகமானது. அதனால இதை பெருசு படுத்தாதீங்கன்னு தான் நான் சொல்லறேன்.” என விடாமல் மதிமாறனும் அமுதாவிடம் வாக்குவாதம் செய்து பார்த்தான்.
“சரி..உங்க இஷ்டம். உங்க பிராப்ளம்ஸ், நீங்க தான் சல்வ் பண்ணனும்…. என்ன செய்யலாம்னு நீங்களே முடிவெடுத்து பண்ணுங்க….இருங்க ஃபோனை சுரபிட்ட தர்றேன்…”என்றவள், கைப்பேசியை சுரபியிடம் கொடுத்துச் சென்றாள். சுரபி நல்லவேளையாக அக்காவிடம் என்ன பேசினாய். நேற்று பெற்றோர் என்ன கூறினர் என கேள்வி கேட்டு, அதற்கான பதிலை சமாதானமாக மதிமாறன் மொழிந்ததை மறுகேள்வி கேட்காமல் ஏற்றுக் கொண்டாள். அமுதாவைப் போல் நோண்டி நோண்டிக் கேட்டிருந்தாள், நிட்சயமாக மதிமாறன் தன் இயல்பை மீறி, பொறுமை இழந்திருப்பான்.
இன்னும் சிறிது நேரம் சுரபியுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு, சுரபியின் மனதிற்கு இதமான பதில்களையே மொழிந்துவிட்டு கைப்பேசியை அணைத்தான் மதிமாறன். “சுரபி மாதிரியே குணமா, சொன்னதை எல்லாம் கேட்டுகிட்டு அவ அக்கா காரியும் இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும். எப்படி டிசைன் டிசைன்னா கேள்விகேட்கரா” என மனதிற்குள் முனுமுனுத்தவன், அவன் ஸ்டேஷன் கிளம்பும் சமயம்,அவனது தங்கை அனு “அண்ணா, சாயந்தரம் ஏதாவது படத்துக்கு கூட்டிட்டுப் போறியா?”என வினவியதை மனதில் கொண்டு, அன்றைய மாலைக் காட்சிக்கு, மாயாஜாலில் நான்கு டிக்கெட் முன்பதிவு செய்தான்.
அவனது கவலைகளை ஒருபக்கம் கழற்றிவைத்துவிட்டு, அன்றைய தின அலுவல்களில் கவனம் செலுத்தினான்.
அந்தச் சிறுவன் மிகவும் கவனமாக படம் வரைந்து கொண்டிருந்தான். கண்களை சுருக்கி, ஒரு பார்வை எதிரில் இருந்த கான்வாஸ் மேலும், மற்றொரு பார்வை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த அந்த பன்னாட்டு கார் விற்பனை கண்காட்சியில் இடம்பிடித்திருந்த அந்த நவீன ரக ஜகுவார் காரின் மீதும் நிலைத்திருந்தது. அந்த அடர் கருப்பு நிற ராட்சச காரினை முடிந்த அளவு அதே கம்பிரத்துடன் படம் தீட்டிவிடுவது என முனைப்பாக இருந்தான்.
அந்த பாலகனுக்கு பத்து வயதே இருக்கும். இவன் வயதையொத்த சிறுவர்கள் போல், கால், வீடியோ கேம்ஸ் என ஆர்வம் கொண்டிருந்த போதும், தனித்திறமை என்று வரும்போது, கராத்தே, ஸ்கேட்டிங்க என இவனது அறிவு செல்லவில்லை. மாறாக, கண்கள் காண்பதை, ரசிப்பதை, மற்றவரும் வியக்கும் வண்ணம் அழகிய ஓவியமாக தீட்டிவிவான்.
அன்றும், அடுத்த வாரம் நடக்கவிருந்த போட்டி ஒன்றிற்காக தன்னை தயார் படுத்திக் கொள்ளவே அன்னையை நச்சரித்து இந்த ஆட்டோ மொபைஸ் எக்ஸ்போவிற்கு அழைத்துவந்திருந்தான்.
அவனது அன்னை ஒரு பக்கம் கைப்பேசியில் ஏதோ ஹிந்தி சீயரில் மூழ்கியிருக்க, கால் மணிக்கு ஒரு முறை மகன் என்ன செய்கிறான் என கண்களை சில நொடி கைப்பேசியில் இருந்து அகற்றி மகனிடம் செலுத்துவார்.
“கித்னே தேர் பேட்டா?” என கைப்பேசியில் இருந்த கண்களை அகற்றாமல் வினவிய அன்னைக்கு, “ஹோ சுகி மா….தேக்”என தன் கலைநயத்தைக் காட்டியவன், “5 மின்…மேன் ரெஸ்ட் ரும் தக் ஜாதா ஹேன்” என மொழிந்தவன், கீழே சிதறிக் கிடந்த பெயிண்ட் டப்பாக்களையும், பிரஷ்களையும் அள்ளிக் கொண்டு ஆண்கள் பாத்ரூம் நோக்கிச் சென்றான். அவனது அன்னை எழுந்து அவன் பின்னே வரவோ, “சீக்கரம் வந்துவிடு”என மொழியவோ இல்லை. இன்னமும் அன்னையின் கண்கள் கைப்பேசியின் ஹிந்தி சீரியலிலேயே லயித்திருந்தன.
அந்த பெரிய சைஸ் பாத்ரூமினுள் அழகான கண்ணாடி மேடையில் முன்பு வீற்றிருந்த மூன்று சிங்குகளில் ஒன்றில் அவனது பொயிண்ட் டப்பாக்களை கழுவிக் கொண்டிருந்தவனிடம் “அபினவ்” என அந்தக் ஆண் குரல் மெல்லமாக அழைத்தது.
“ஏஸ்” என திரும்பியவனிடம், அவனது தண்ணீர் பாட்டில் நீட்டப்பட்டது. “இஸ் யுவர் மதர்ஸ் நேம் நீரஜா? எ லேடி இன் பிங்க கலர் சுடிதார் வித் ஆரஞ்ச் துப்பட்டா?..” என ஸ்டைலான ஆங்கிலத்தில் வினவ, இந்தச் சிறுவனும் தலையசைத்தான்.
“ஷிஆஸ்க்ட் டு கிவ் யு திஸ்” என மொழிந்தவன், அந்த வாட்டர் பாட்டிலை அவனிடம் நீட்ட, சிறுவனும் எந்த தயக்கமும் இன்றி, “தேங்க்ஸ்”என்ற வார்த்தையுடன் பெற்றுக் கொண்டான். அத்தோடு மட்டுமில்லாமல், அரை மணிக்கும் மேலாக நின்றபடியே படம் வரைந்து கொண்டிருந்த களைப்பு நீங்க, அந்த பர்பிள் கலர் டப்பர்வேர் பாட்டிலைத் திறந்தவன் நொடி நேரம் தாமதிக்காமல் அதிலிருந்த தண்ணீரை கடகடவென குடித்து முடித்தான்.
அச்சிறுவனுக்கு தண்ணீர் பாட்டில் தன்னுடையதா என்ற சந்தேகமோ, அதைக் கொடுத்துவிட்டது தன் அன்னை தானா என்ற சந்தேகமோ துளி கூட ஏற்படவில்லை. ஏனென்றால் ஆண்கள் பாத்ரூமில் தண்ணீர் பாட்டிலை கொடுத்துச் சென்றவன் மீது சந்தேகப்படும்படி எந்த எண்ணமும் தோன்றவில்லை. ஆழ்ந்த சந்தன நிற ஆலன் சோலி சட்டை, அதற்கு தோதாக காக்கி நிற கார்கோ பேண்ட், கையில் மின்னிய ஃபாசில் வாட்ச் என அவனது உடையில் பணக்காரத்தனம் அப்பட்டமாக மிளிர்ந்தது.
அபினவ் என்று அழைக்கப்பட்ட சிறுவன், பாட்டிலின் தண்ணீரை குடித்த அடுத்த இரண்டு நிமிடங்களில் கண்ணைக் கட்டிக் கொண்டு வர, கையில் பிடித்திருந்த பெயிண்ட் டப்பாக்களை கீழே தவறவிட்டபடிக்கு வெட்டுண்ட மரம் போல் தரையில் வீழ்ந்தான். அவன் கீழே விழும் போது காத்திருந்தவன் போல் தாங்கிப் பிடித்தான் அந்த சந்தன நிற சட்டை. அருகில் நின்றிருந்த ஒரு முதியவர் என்னவோ ஏதோவென பதற, “சார்,,,ப்ளீஸ்…டோண்ட் பேனிக்….ஹி இஸ் மை சன்… அவனுக்கு சைல்ட் டயாபடீஸ் இருக்கு. திஸ் இஸ் வெரி நார்மல். கேன் யு ஹெல்ப் மீ டு கேரி ஹிம்.?”எனக்கோற, அவனது தோற்றத்தைக் கண்டு சற்றும் சந்தேகிக்காத முதியவர், அச்சிறுவனை தூக்க உதவினார். அதற்கு முன்பு, அந்த சந்தன நிற சட்டை தன் சூட்கேஸில் இருந்து அச்சிறுவன் அணிந்திருந்த உடைகளைக் களைந்து, மடமடவென உடை மாற்றியது.
சட்டையின் பெத்தாங்களைப் போட்டவண்ணம், அவனது செய்கைகளை கவனித்துக் கொண்டிருந்த முதியவரிடம், “நனைஞ்சுட்டான். வீட்டுக்கு போறவரைக்கும் ஈர சட்டையோட இருந்தா சளி பிடிச்சுரும்…” என தெளிவான ஆங்கிலத்தில் மொழிய முதியவரும் ஆமோதித்தார். சற்றே கால்களை விந்தி விந்தி நடந்த சந்தன சட்டை, அந்த முதியவரின் உதவியுடன், சிறுவனை தோளில் சுமந்த படிக்கு மெல்ல பாத்ரூமை விட்டு வெளியேறியது.
தோளில் குழந்தையுடன், தகப்பன் வயது முதியவர் உடன் வர நடந்து சென்றதைக் கண்டு சந்தேகிக்க அங்கு எவருக்கும் தோன்றவில்லை. இதை விடவும், இம்மூவரும் சிறுவனின் அன்னை அமர்ந்திருந்த இடத்தை மெளனமாக கடந்து போன போதும், நீரஜாவிற்கு வித்யாசமாக ஒன்றும் தோன்றவில்லை. அந்த தாயின் மனதில் இளநீல சட்டை அணிந்து பாத்ரூமிற்குள் சென்ற மகனே நினைவில் நின்றான்.
இன்னொருவரின் தோளில், பச்சைவண்ண டீசர்டும், நீல பேண்டும் அணிந்து, ஓவர்கோட்டின் மேல் பாகம் தலையை மறைத்திருக்க, தூங்கிக் கொண்டே செல்லும் குழந்தை தனது மகன் என அந்தத் தாய்க்குத் தெரிய வாய்ப்பில்லை.
சட்டையும் பேண்ட்டும் மாற்றப்பட்டு சிறுவன், அவனது தந்தை என தன்னை காட்டிக் கொண்ட சந்தன சட்டையின் காரில் பின்சீட்டில் படுத்தபடிக்கு பயணிக்கத் துவங்கினான். அவன் படுத்திருந்த கார், பெங்களூரின் ஆட்டோ மொபைல் எக்ஸ்போ நடந்து கொண்டிருந்த டிரேட் ஃபேர் காம்பிளக்ஸில் இருந்து சீரான வேகத்துடன் யாரும் சந்தேகிக்காத வண்ணம் மெல்ல பெங்களூர் போக்குவரத்து நெரிசலில் தொலைந்து காணாமல் போயிற்று.
இத்தனை சம்பவம் நடந்து முடிந்திருந்த போதும், மகன் வருகிறானா என பாத்ரூம் பக்கம் ஒரு பார்வையும், கைப்பேசியில் ஒரு பார்வையும் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த நீரஜாவை நினைத்து தனக்குள் மெல்ல புன்னகைத்தவண்ணம், காரை செலுத்திக் கொண்டிருந்தது சந்தன சட்டை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!