Mayanathisuzhal 29

Mayanathisuzhal 29

மாயநதிச்சுழல்

சுழல்-29

இதுவரை:

“நான் வேண்டாம்னு தான் மதி சொன்னேன்…உன் அம்மா கேட்டாத்தானே…நான் தான் முட்டுகட்டை போடற மாதிரி என்னை திட்டிட்டு இருந்தா… நீயே சொல்லிட்டேல்ல இனிமே உன்னை திட்ட ஆரம்பிச்சுக்குவா…நான் தப்பிச்சேன்…”என லகுவாக பேசிய சுந்தரம், “நான் அம்மாட்ட சொல்லி புரியவச்சுக்கறேன் மதி….நீ கவலைப்படாத…சாப்பிட்டியாப்பா” என இன்னும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு கைப்பேசியை அணைத்தார்.

இனி:

அன்றைய தினம் மாலை வரையிலுமே அதிகம் வேலை இருந்த படியால், சுரபியை சந்திக்கச் செல்லவிருந்ததைக் கூட தவிர்க்கும் படிக்கு ஆகிவிட்டிருந்தது. நல்லவேளையாக சுரபி அதிகம் கோபித்துக் கொள்ளவில்லை.

“என் டிடி ஸ்டூடண்ட் பிரஜித் இருக்கான்ல, அவனுக்கு இன்னைக்கு ஈவினிங் நேஷ்னல் லெவல் மாட்ச்சாம்…இன்வைட் பண்ணியிருக்கான். நீங்க வந்தா உங்க கூட போலாம்னு பார்த்தேன்….சரி, பரவாயில்லை…நான் போய்கறேன்”என தன்மையாக நடந்து கொண்டாள். மாலை வந்திருந்த சில கேஸ்களை விசாரித்து, வீட்டிற்கு கிளம்பலாம் என இருந்த நேரத்தில், “சார், பெங்களூர் கேஸை விசாரிக்கர இன்ஸ்பெக்டர் ஜெயதேவ் லைன்ல இருக்காரு..கனெக்ட் பண்ணடுங்களா சார்…”என கோபி மொழிய, பரபரப்புடன் கைப்பேசியை காதிற்குக் கொடுத்தான் மதிமாறன்.

“ஹலோ மதிமாறன் ஹியர்…”

“ஹாய் மிஸ்டர் மதிமாறன். ஐம் ஜெய்தேவ்….எப்படி இருக்கீங்க…”

“ஓ, தமிழ் பேசுவீங்களா? எப்படி?”

“நான் சென்னையில தான் காலேஜ் படிச்சேன்..சோ, தமிழ், பேச தெரியும்….” என மறுமுனையில் மொழிந்த ஜெய்தேவின் தமிழில் அநியாயத்திற்கும் கன்னடவாடை வீசியது. அவர் பேசிய விதமும் சிரிப்பு மூட்டுவதாகவே இருந்த போதும், “உதவி செய்கிறவர்” என்ற எண்ணம் மேலோங்க, மதிமாறன் தன் நமுட்டுச் சிரிப்பை வெகுவாக கட்டுப்படுத்திக் கொண்டு பேசத் துவங்கினான்.

“உங்க பெங்களூர் கேஸ் பத்தி கொஞ்சம் டீடெயில்ஸ் சொல்லுங்க ப்ளீஸ்…”

“கேஸ் பத்தி இன்ஃவெஸ்டிகேஷன் டீடெயில்ஸ், ஃபேக்ஸ் பண்ணியிருக்கேன். அதில்லாம வேற என்ன தெரியனும்னு கேளுங்க.எனக்குத் தெரிஞ்சதை சொல்லறேன்”

மதிமாறன் தான் கிறுக்கி வைத்திருந்த பலகையின் அருகே சென்று நின்று கொண்டான். “கடத்தல் எப்படி நடந்தது, அந்த ஃபுட்டேஜ், அப்பறம் பணம் கைமாறினப்போ ரயில்வே ஸ்டேஷன் ஃபுட்டேஜ் எல்லாமே நான் பார்த்துட்டேன்…அந்த சின்ன பையன்…கமிஷ்னர் பேரன் பேரு என்ன…ம்ம்ம்..பிரஜன்…அவங்கிட்ட நீங்க பர்சனலா பேசினீங்களா?”

“ம்ம்ம் ஆமா சார்…பேசினேன்… கமிஷ்னர் பேரங்கறதால அவங்க, பையன்ட்ட பேச அலவ் பண்ணாங்க.. “

“பையன் எப்படி பேசினான்?”

“எப்படி பேசினான்னா? நீங்க கேட்கறது புரியலை…”

“எப்படி இன் த சென்ஸ்…இந்த விஷயம் பத்தி பேசினப்போ கோபமோ, பயமோ ஏற்பட்டுச்சா? இல்லை…நார்மலா…தான் பேசினானா?”

“ஓ, அதைக் கேட்டகறீங்களா? எனக்கு கூட அந்த பையன் பேசினது கொஞ்சம் வித்யாசமா தான் இருந்துச்சு…ஏன்னா, அவன் கோபமோ, பயமோ படலை சார்…ரொம்ப கேஷுவலா தான் பேசினான். இன்னும் சொல்லப்போனா அந்த கடத்தல்காரனை அந்த பையனுக்கு பிடிச்சிருக்குன்னு நினைக்கறேன்…”

“எப்படி?”

“கடத்தல் பத்தி ரொம்ப ஹேப்பியா பேசினான். அந்த பென்10 பொம்மை கேரக்டர் அவனுக்கு ரொம்ப பிடிக்குமாம்….அவனுக்கு பிடிச்ச மில்ஸ்ஷேக்ஸா வாங்கிகுடுத்தானாம்.. அந்த பையன் பிக்னிக் போயிட்டு வந்த மாதிரி தான் எங்கிட்ட சொன்னான்”

“ம்ம்ம்ம்…வேற ஏதாச்சும்…பெகூலியரா….யார் கடத்தினா? அந்த பென்10 முகமூடி போட்டாவங்க எப்படி இருந்தாங்க…இது ஏதாச்சும் கேட்டீங்களா?”

“நேரடியா இதே கேள்வி கேட்கலை…பென்10 பொம்மை பத்தி வேற ஏதாவது க்ளூ சொல்லுன்னு கேட்டப்போ, பொம்மை வாய்ஸ் கரகரன்னு இருந்துச்சு சொன்னான். ஆறடி உயர ஆள். நல்ல திடகாத்திரமான உடல்வாகான ஆளா இருக்கணும்னு நான் அனுமானிக்கறேன்” என மறுமுனையில் ஜெயதேவ் பேசியதைக் கேட்ட மதிமாறனுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

“எதை வச்சு சொல்லறீங்க…அந்த பையன் அப்படி ஏதும் சொன்னானா?” என குரலில் பரபரப்பை கூட்டியபடிக்கு வினவினான்.

“இல்லை சார்…அந்த பையன் வார்த்தையால அப்படி ஏதும் சொல்லலை… ஆனா பென்10 பத்தி பேசறப்போ, கையை அகலமா விரிச்சு குண்டுங்கற மாதிரியும், உயரம்ங்கற மாதிரியும் பேசினான். அதை வச்சு சொல்லறேன்…”

“ம்ம்ம்…நீங்க சொல்லறதும் பாயிண்ட் இருக்கு..ஆனா சின்ன பையன் பாருங்க…அவன் சைஸ்க்கு நார்மல் ஆளுங்களே குண்டானவங்களா தான் தெரிவாங்க இல்லையா?”

“இருக்கலாம் சார்…ஆனா பையன் சின்ன சைஸ் இல்ல சார்…ஐ மீன் பத்து வயசுலையே அவன் சுமார் 50-60 கிலோ இருப்பான் சார்… கொஞ்சம் பல்கியான பையன் தான் சார்…”

“ஓ…ஐ சீ…. தேங்கியூ ஜெய்….உங்க ஷெடியுல்ல எனக்கு கொஞ்சம் டைம் ஸ்பெண்ட் பண்ணி இந்த டீடெயில்லாம் சொன்னதுக்கு….”

“மை ப்ளஷர் சார்…வேற ஏதாவது தெரியனும்னாலும் என்னை காண்டாக்ட் பண்ணுங்க சார். நம்மளை மாதிரி பப்ளிக் சர்வென்ட்ஸ் ஒருத்தருக்கு ஒருத்தர் உதவியா இருந்தா, நிறைய கேஸ் உடனுக்குடன் முடிஞ்சிரும் சார்….”

“சரியா சொன்னீங்க ஜெய்தேவ்….எனக்கு இன்னும் ஒரே ஒரு ஹெல்ப் பண்ணுங்க….அந்த ரயில்வே ஸ்டேஷன்ல அந்த லேடிய விசாரிக்கறப்போ இருந்த கான்ஸ்டபில்கிட்ட, அந்த லேடிய பத்திய டிஸ்கிரிப்ஷன் கேட்டு ஒரு அவுட்லைன் வரைஞ்சு கொடுங்க…அப்பறம், லக்கேஜ் கவுண்டர்ல வேலை செய்யறவங்களை விசாரிச்சு, அந்த சின்ன பையன் ஸ்கூல் பேக்மாதிரி ஏதாவதொரு பேக் அன்னைக்கு கைமாறியிருக்கான்னு கேட்டு சொல்லுங்க…குறிப்பா, போலீஸ் அந்த லேடிய விசாரிக்கர சமயம், லக்கேஜ் கவுண்டர் ரெஜிஸ்டர்ல ஏதாவது பேக் செகவுட் ஆகியிருக்காங்கற டீடெயில்ஸும் எனக்கு வேணும்….ப்ளீஸ்” என மொழிந்தவன், தனது பர்சனல் கைப்பேசி எண்ணையும் வழங்கி நன்றி கூறி விடைபெற்றான்.

காலையில் இருந்தே மனதில் மிதுனா விவகாரமும், அதனுடன் 90% ஒத்து போகும்படிக்கு நடந்து முடிந்த பெங்களூர் விவகாரமமுமே பெரியதாக தோன்றியது. வேறு எந்த சிந்தனைகளும் இல்லாமல் போக, நேரம் பதினொன்றைக் கடந்துவிட்டிருந்த போதும், வீட்டிற்குச் செல்லும் எண்ணம் இல்லாமல் காவல் நிலையத்திலேயே அமர்ந்திருந்தான்.

“சார்….நான் கிளம்பட்டுமா சார்?”என பதினொன்னரை வாக்கில் பவ்யமாக வந்து நின்று வினவிய எழுத்தர் வெங்கடாசலத்தையும், கோபியையும் செல்லுமாறு சைகை செய்தான். “மணி பன்னெண்டாக போகுது சார்…நீங்க இன்னும் வீட்டுக்கு….”என சற்றே தயங்கிய கோபியிடம், “நான் போய்க்கறேன் கோபி…நீங்க போங்க…நாளைக்கு பதினொரு  மணிக்கு வந்தாப் போதும்….சீக்கரமா வரவேண்டாம்…குட் நைட்”என விடை கொடுத்தான். அவ்விருவரும் சென்ற பிறகு காவல் நிலையம் சட்டென அமைதியாகிப் போனது போல் தோன்றியது.

அதுவரையில் சப்தத்தை குறைத்து வைத்திருந்த கைப்பேசியை எடுத்துப் பார்த்தான். சுரபியிடம் இருந்து சில அழைப்புகளும். “ஹோப் யு ஆர் ஒ.கே….கால் மீ வென் ஃப்ரீ” என ஒரு குறுஞ்செய்தியும் வந்திருந்தது. அதே போல், அமுதாவிடம் இருந்து ஒரு அழைப்பும், அவனது பெற்றோரிடமிருந்து ஒரு அழைப்பும் வந்திருக்க, அப்போது தான் அடுத்த தினம் இரு வீட்டினரும் சந்திக்கப் போகும் ஏற்பாடே நினைவு வந்தது.

“சே, எப்படி மறந்தேன்…” என தனக்குத் தானே சொல்லிக் கொண்டவன், அடுத்த தினம் காலை பத்தரை மணிக்கு சுரபியையும், அவளது தமக்கையையும் திருவல்லிக்கேணி கோவிலுக்கு வரச் சொல்லியிருந்தது நினைவு எழ, கூடவே, கோபியை வேறு தாமதமாக வருமாறு சொல்லிவிட்டோமே என்ற குற்ற உணர்வும் உடனே தோன்றியது. அதற்காக, இன்ஸ்பெக்டரும் இல்லாமல், தானும் இல்லாமல் போனால் சரிவராது என தோன்ற, வேகவேகமாக தன் தந்தையின் எண்ணிற்கு அழைத்தான்.

“அப்பா சாரிப்பா…எங்க இருக்கீங்க….வீட்டுக்கு வந்திட்டீங்களா? கீழ அங்கிள்ட்ட சாவி இருக்கும்….வாங்கிட்டீங்களா?” என படபடத்தான்.

“மதி….நாங்க எட்டு மணிக்கே வந்துட்டோம்பா…வீட்டுக்கு வந்துட்டு தான் உனக்கு கால் பண்ணோம்பா…கீழ அங்கிள்ட்ட சாவி வாங்கிட்டோம். அவங்க வீட்டிலையே நைட் சாப்பாடும் முடிச்சுட்டோம்…இரு…அம்மா பேசறாளாம்..” என தான் சொல்ல வந்த விஷயத்தை மட்டும் பேசிவிட்டு கைப்பேசியை தன் மனைவியிடம் கொடுத்துவிட்டார்.

“மதி….எவ்வளவு நேரம் முன்னாடி அப்பா உனக்கு கூப்பிட்டார். நீ ஏண்டா ஃபோனே எடுக்கலை. அப்படி என்ன வேலை…சரி..சரி…நீ பதில் சொல்லாத, நாளைக்கு எத்தனை மணிக்கு நாங்க தயாரா இருக்கணும்…ஒன்னுமே சொல்லலை..”என தன் போக்கில் பேசிய லலிதாவிற்கு உண்டான பதிலைக் கூறி, கைப்பேசியை தந்தையிடம் கொடுக்கும்படிக்குப் பணிந்தான்.

“சொல்லு மதி” என சுந்தரத்தின் குரல் சற்றே கம்மியபடிக்கு ஒலித்தது.

“அப்பா, நாளைக்கு காலையில் கோவிலுக்குப் போறது பத்தி ஒரு சின்ன குழப்பம். நாளைக்கு ஸ்டேஷன்ல பதினோரு மணிக்கு தான் எல்லாரும் வருவாங்க…ஏன்னா, நைட் ரொம்ப லேட்டா தான் வீட்டுக்குப் போனாங்க…அதனால..” என தான் சொல்லவந்த விஷயத்தை எப்படி சொல்லுவது என சற்றே திணறியவன்,

“அப்பா, கண்டிப்பா கோவில்ல தான் சுரபிய பார்க்கணும்னு இருக்கா… மதியானம் லன்ச் மாதிரி ஏதாவது ஹோட்டல் போனா ஒன்னும் ப்ராப்ளம் இல்லையே….” என சொல்லி முடித்திருந்தான். மறுமுனையில் ஒரு சில நொடிகள் மெளனமாக இருந்தது.

“மதி, எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை. ஆனா உன் அம்மா ஹோட்டல்ல போயி பொண்ணு பார்க்கறதான்னு எடுத்ததுமே நினைச்சுடப்போறா…” என தந்தை மொழிந்தது ஒத்துக் கொள்ளும்படிக்கு இருந்தது. மதிமாறன் சற்றே யோசித்துவிட்டு “பக்குவமா எடுத்து சொல்லிக்கலாம்ப்பா..அவங்க சைட் பிரச்சனையில்லை” என தன் கருத்தை தெரிவித்தான்.

“அப்பறம் இன்னொரு விஷயம் மதி….நீ கீழ்வீட்டு அங்கிள் ஆண்டிட்ட சுரபியை நாங்க பார்க்க போறது பத்து ஏதாவது சொல்லியிருக்கியா? ஏன்னா, அம்மா பேச்சு வழக்கில பொண்ணு பார்க்க தான் வந்திருக்கோம்னு அவங்ககிட்ட சொல்லிட்டாப்பா…அவங்களும், “ஓ, சுரபி தெரியுமே..இங்க கூட அவளும் அவ அக்காவும் வந்திருந்தாங்களேன்னு” எதார்தமா சொல்ல, அம்மா நாளைக்கு நீங்களும் வரணும்னு கேட்டா…அவங்களும் சரின்னுட்டாங்க….”

“கீழ் வீட்டு அங்கிள் ஆண்டி தானேப்பா….அவங்க வர்றதினால ஒன்னும் பிரச்சனையில்லை…நான் வர கொஞ்சம் லேட்டாகும்ப்பா…நீங்க தூங்குங்க…காலையில பார்க்கலாம்”என அன்னையிடம் சொல்லிவிடும்படிக்கு தந்தைக்கு பணிந்துவிட்டு, கைப்பேசியை அணைத்தான். அடுத்ததாக, சுரபிக்கு அழைத்து மாலை தான் செல்லப்போகிறோம் என்பதை தெரிவிக்க, சுரபி, நல்ல தூக்கத்திலேயே பதிலளித்தாள்.

சுரபிக்கு தான் சொல்வது புரிந்ததா, இல்லையா என்று சிறிய சந்தேகம் தோன்ற, எதற்கும் இருக்கட்டும் என குறுஞ்செய்தி அனுப்பி வைத்தான். அதே போன்று அமுதாவிற்கும் அனுப்பினான். ஒருவாறு செய்யவேண்டியவற்றை காவல் நிலையத்தில் இருந்து செய்து முடித்த பின்னும் அங்கிருந்து வீட்டிற்குச் செல்ல மனம் வரவில்லை. ஏதோ ஒரு பெரிய விஷயம் நடப்பது போலவும், தான் விழிப்புடன் இருக்கவேண்டியது அவசியம் போலவும் மனசாட்சி சொல்லிக் கொண்டிருந்தது.

அன்று ஆச்சர்யம் போல், உறக்கமும் வரவில்லை. அலுவலக அறையை விட்டு வெளியே வந்து சிறிது நேரம் நின்றிருந்தான். வெளிக்காற்று உடம்பில் பட்டுச் சென்றது இதமாக இருந்தது. சிறிது நேரம் கழித்து மீண்டும் மிதுனாவின் கேஸ் ஃபைலையும், பெங்களூர் கேஸ் ஃபைலையும் ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டுப் பார்த்தவண்ணம் அமர்ந்திருந்தவன், எப்போது உறங்கினோம் என்பது தெரியாமல் மேஜை மேலேயே தலையை கவிழ்த்து உறங்கிவிட்டிருந்தான்.

அன்றைய தினம் மாலை, பெங்களூரில் அந்த பிரபல மாலில் அச்சிறுவன் ஆர்வமாக இங்கும் அங்கும் ஓடிக் கொண்டிருந்தான். நேற்றுடன் அவனது முழு ஆண்டுப் பரிட்சைகள் முடிவு பெற்றிருந்தன. அடுத்த வாரம் விடுமுறைக்காக இவனை அழைத்துச் செல்ல வரும் தாத்தாவுடன் சென்னை சென்று, கட்டவிழ்த்த கன்றுகுட்டியாக ஊர் சுற்றித் திரியும் நாட்களை எண்ணி இப்போதிருந்தே குதுகலமாக இருந்தான்.

“அபினவ்….ஜல்தி ஆவோநா….”என ஹிந்தியில் கத்திக் கொண்டிருந்த அவனது தாயை ஒரு பொருட்டாக மதிக்காமல், அவனும் அவனது தந்தையும், லைஃப் ஸ்டைல் கடையில் அலசி ஆராய்ந்து விடுமுறைக்கு ஏற்ற வகையிலும், சென்னை வெயிலுக்கு தாங்கும் வகையில் நல்ல காட்டன் துணிகளை தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தனர்.

“கித்நே தேர் ஹோ சுகி ஹைன்” என புலம்பிய அன்னையின் நச்சரிப்புத் தாங்காமல் வாங்க வேண்டியவற்றை பைகளில் நிரப்பிக் கொண்டு, சில ஆயிரங்களை மொய் எழுதிவிட்டு அந்த சிறிய குடும்பம் அவர்களது காரில் ஏறி இல்லம் நோக்கி விரைந்தது. மாலின் வெளியே அழகிய சிறிய மலர் குவளை ஒன்றை தன் தாத்தா பாட்டிக்காக வாங்கிய சிறுவன், அதனை தன் மடி மீது வைத்துக் கொண்டு வண்டியில் பயணித்தான். மாலை வெயிலில், காரின் மூடியிருந்த கண்ணாடியின் வழியே அச்சிறுவனும், அவனது பூக்குவளையும் தனியாக வரிவடிமாகத் தெரிந்தனர். இந்தக் காட்சியினை, மரங்களுக்குப் பின் மறைந்து கொண்டிருந்த ஆதவனோடு சேர்த்து வேறு ஒரு ஜோடிக் கண்களும் ரசித்துக் கொண்டிருந்தன. ரசிப்புடன் பார்த்தது மட்டுமின்றி, “ஏஞ்சாய் யுவர் ஹாலிடேஸ் அபினவ்” என முனுமுனுக்கவும் செய்தன.

மதிய நேரத்தின் வெயில் தாக்கம் துளி கூடத் தெரியாதவாறு அந்த உணவகம் வடிவமைக்கப்பட்டிருந்தது. சென்னை, மவுண்ட் ரோட்டில் பிரதானமான இடத்தில், முக்கியமான சாலையின் மையத்திலேயே அமைந்திருந்த “ரெயின் ட்ரீ” உணவகத்தில் அவர்கள் அமர்ந்திருந்தனர்.

மேம்போக்காக பார்த்தால், பெண் பார்க்கும் படலம் போல் எல்லாம் சம்பிரதாயமாகத் தெரியவில்லை. மதிமாறனின் பெற்றோர், தங்கை அனு, மதிமாறனும் அந்த வட்ட மேஜையை சுற்றிலும் ஒரு பக்கம் அமர்ந்திருக்க, அமுதா சுரபியுடன் சேர்ந்து கீழ்வீட்டு அங்கிளும் ஆண்டியும் அமர்ந்திருந்தனர்.

சுரபி பட்டு, நகை என அதிக ஆடம்பரம் இல்லாமல், அழகிய மாம்பழ வண்ண சில்க் காட்டன் புடவையும் அதற்கு தகுந்த இள ஆரஞ்சு வண்ணத்தில் மெல்லிய கண்ணாடி வேலைபாடுகள் அமைந்த ரவிக்கையும் அணிந்திருந்தாள். இதுவும் கூட அமுதாவின் தேர்வு தான். பெங்களூரில் இருந்து வரும் போது வாங்கிவந்திருந்தாள். அமுதாவுமே எப்போதும் அணிவது போல் ஜீன்ஸ், சட்டை என்று அணியாவில்லை. மெல்லிய பிங்க் வண்ணத்தில் சந்தன ஜரிகைகள் அமைப்பெற்றிருந்த சுடிதார் அமுதாவிற்கு அழகாக பொருந்திப் போயிற்று.

“நீயும் புடவை கட்டுக்கா…” என சுரபி எவ்வளவு கேட்டுக் கொண்ட போதும், அமுதா ஒத்துக் கொள்ளவில்லை. “என்னையா பொண்ணு பார்க்க வர்றாங்க…. அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். ஓவரா இருக்கும்” என மறுத்துவிட்டாள். ஆயினும் அமுதா அணிந்திருந்த உடையும் கூட கச்சிதமாகப் பொருந்தியிக்க, ஒரு வயதான அதேசமயம் பொறுப்புமிக்க மதிப்பான தோற்றத்தை வழங்கியிருந்தது.

மதிமாறனின் பெற்றோரும் அவ்வளவாக துருவித் துருவி எதுவும் கேட்கவில்லை. தங்களை அறிமுகம் செய்து கொண்டதுடன் வேலை முடிந்து போயிற்று என்பதைப் போல் நடந்து கொண்டனர். “இவர்களுக்கு சுரபியை அவ்வளவாக பிடிக்கவில்லையோ” என அமுதா  ஐயம் கொண்டாள். ஏனென்றால் சம்பிரதாயமான கேள்விகளைக் கூட அவர்கள் கேட்கவில்லை. “நீங்க எதுவும் வாயைத் திறக்கக்கூடாது” என்று மதிமாறன் அறிவுருத்தி அழைத்துவந்திருப்பானோ என அமுதாவிற்குத் தோன்றவும் செய்தது. சுரபிக்கு இது பற்றியெல்லாம் அவ்வளவாக கவலை இல்லை. அவ்வப்போது மதிமாறனைப் பார்ப்பதையும், தட்டில் வைத்திருக்கும் பதார்த்தங்களைச் சுவைப்பதையும், மதிமாறனின் தங்கை அவ்வப்போது கேட்கும் கேள்விகளுக்கு விடைபளிப்பதையுமே மட்டுமே கருத்தில் கொண்டு, இந்த வேலைகளை செவ்வனே செய்து வந்தாள். நல்ல வேளையாக அமுதா, பெரியவர்கள் இருவருக்கும் சிறிய பரிசுப் பொருட்களும், அனுவிற்கு, அழகிய வேலைபாடுகளுடன் கூடிய சுடிதார் செட் ஒன்றை பரிசளித்திருந்தாள். இதிலேயே மகிழ்ந்து போய்விட்ட சிரியவள் மட்டுமே அவ்வப்போது சுரபியிடம் பேச்சு கொடுத்துக் கொண்டிருந்தாள்.

அவர்களாகக் கேட்காமல் போனாலும், நாமும் அவர்கள் போல் எதுவும் சொல்லாமல் போய்விட்டோம் என்ற பேச்சிற்கு இடமளித்துவிடக் கூடாது என நினைத்த அமுதா, “நான் சார்டட் அக்கவுண்டன்ட் சார். பெங்களூர்ல ஒரு கன்சர்ன்ல வர்க் பண்ணறேன், ஃப்ரீ டைம்ல சின்ன சின்ன கம்பெனிஸ்க்கு அக்கவுண்ட்ஸ் மெயிண்டெயின் பண்ணறேன். வருமானம் போதுமான அளவு வருது. சோ, நீங்க நினைக்கறதை விடவும் என்னால முடிஞ்ச அளவுக்கு சிறப்பா கல்யாணத்தை செய்ய முடியும். எங்ககிட்ட இருக்கற பெரிய குறைன்னா, அப்பா, அம்மா சொந்த பந்தமன்னு சொல்லிக்க யாரும் இல்லை. எனக்கு அவ, அவளுக்கு நான். எங்களோட சின்னவயசு நண்பன் அலெக்ஸ்.. அப்பறம் பக்கத்து வீடு, கூட வேலை பார்க்கற கொலீக்ஸ்ன்னு எங்க வட்டம் ரொம்ப ரொம்ப சின்னது…”என தன்மையாக அமுதா பேசினாள்.

அமுதா பேசியதைக் கேட்ட இன்னொருவராக இருந்திருந்தால், “அதனால என்னம்மா பரவாயில்லை. இனிமே அந்த கவலையும் இருக்காது. அதான் இப்போ எல்லாரும் ஒரு குடும்பமாயிட்டோமே.” என்ற ரீதியில் பேசியிருப்பர். ஆனால் மதிமாறனின் பெற்றோர் இதற்கும் எந்த மறுமொழியும் உரைக்கவில்லை. அப்படியா, மகன் சொன்ன பேச்சைத் தட்டாமல் கேட்கும் பெற்றோராக இருப்பர் என்ற பெரிய குழப்பம் அமுதாவிற்குத் தோன்றியது அந்த நொடி தான். அத்தோடு மட்டுமின்றி “இவர்களுக்கு சுரபியை தன் மருமகளாக்கிக் கொள்வதில் விருப்பமில்லை”என்பதை தெளிவாக மனதில் பதியவைத்துக் கொண்டதும் இந்த நொடி தான். இந்த வித்யாசம் அமுதா உணர்ந்தது போல், மதிமாறனோ, சுரபியோ கவனத்தில் கொள்ளவில்லை என்பதைத் தான் அமுதாவால் அந்த நேரம் சகித்துக் கொள்ள இயலவில்லை.

அன்று பெங்களூரில் இரவு டின்னர் சென்ற போது, திறந்த வாய் மூடாமல் உரையாடியபடிக்கே சாப்பிட்ட விதத்திற்கும் இப்போது உணவருந்து விதத்திற்கும் உண்டான வித்யாசம் மலைக்கும் மடுவிற்குமானது.

“டவுரி மாதிரி ஏதாவது எதிர்பார்கறாங்களோ. அதனால தான் எப்படி கேட்கறதுன்னு சங்கடப்பட்டுகிட்டு பேசாம இருக்கறாங்களோ”என எண்ணிய அமுதா, தன் பொருளாதார நிலையை இன்னும் சற்றே விளக்கினாள். “எனக்கு மாசம் சம்பளம் எம்பதாயிரம் வரும் சார். அதில்லாம என்னோட ஃப்ரீ லான்சிங் அக்கவுண்டன்ஸி வர்குலையும் நல்ல இன்கம் வரும். தேவைப்பட்டா பர்சனல் லோன் போட்டு, சுரபியோட கல்யாணத்தை கிராண்டா செய்திடலாம்” என அப்பட்டமாகவே மொழிந்திருந்தாள். எதிர்தரப்பில் இருந்த எந்த பதிலும் இல்லாமல் போக, எத்தனை நேரம் தானாகவே பேசிக் கொண்டிருப்பது என அமுதாவும் மெளமாயிருக்கத் துவங்கினாள். அவரவர் தட்டில் கவனத்தையும், உணவகத்தின் அலங்காரத்தையும் பார்வையிட்ட படிக்கு அமர்திருக்க, கீழவீட்டு அங்கிளும், பங்கஜம் மாமியும், ஒருவரும் பேசிக் கொள்ளாத அமைதியை சரிசெய்ய, தாங்களாவது நிரப்புவோம் என்ற ஆர்வத்தில் பேச்சு கொடுத்தனர்.

சுரபியோ, மற்றவர்களோ அவர்கள் பேச்சை முக்கியதுவம் கொடுத்து கேட்காவிடினும், யாரும் பேசாத அமைதிக்கு இந்த பேச்சு சற்றே குறைகளை நிரப்பத்தான் செய்தது. “நாங்க அடுத்த வாரம் பெங்களூர் வருவோம் அமுதா. எங்க பேரன் அபினவ்க்கு ஆனுவல் லீவ் விட்டாச்சுன்னு நேத்து தான் என் பையன் ஃபோன் பண்ணான். எப்பவுமே அபினவ் லீவுக்கு இங்க தான் இருப்பான். ரெண்டு மூனு வாரம் இருந்துட்டு, அப்பறமா அவனோட அப்பா வந்து பஞ்சாப்க்கு அழைச்சிட்டு போவான்.”

“சூப்பர் அங்கிள்….பெங்களூர் வந்தா கண்டிப்பா வீட்டுக்கு வரணும். “ என மொழிந்த அமுதாவிடம், தன் பேரன் செய்யும் அன்றாடக் குறும்புகளைக் கூறி ரசித்து சிரித்தபடிக்கு இருந்தார்.  வந்ததில் இருந்து மதிமாறனின் அன்னை பேசிய ஒரே வரி, “கிளம்பலாமா தம்பி” என்பது மட்டுமே.

அமுதாவின் முகம் சுருங்குவதை மதிமாறன் கவனித்ததாகவே தோன்றியது. கை கழுவ செல்லும் சமயம், இயல்பாக அருகில் நின்ற மதிமாறன், அமுதாவின் காதுகளுக்கு மட்டும் கேட்கும் வகையில், “அப்பா அம்மாவுக்கு அவ்வளவா இஷ்டம் இல்லை. என் கம்பல்ஷனுக்காக வந்திருக்காங்க….சோ, எதையும் பெருசுபடுத்தாதீங்க…பார்த்துக்கலாம். இன்னும் நாள் இருக்கு.” என்று கிசுகிசுத்தான்.

அமுதா திரும்ப மறுமொழி கூறும் முன்னர், “இப்போ பேச வேண்டாமே ப்ளீஸ்…நான் ஹேண்டில் பண்ணிக்குவேன்..நம்புங்க”என்று சிரிப்புடன் மொழிந்தவன், டிஷ்ஷூ பேப்பரில் கைதுடைத்தபடிக்கு அங்கு வந்து சேர்ந்த சுரபியுடன் பேசியவாறே நடந்து திரும்பவும் மேஜைக்கு வந்துவிட்டிருந்தான்.

அனைவரிடமும் விடைபெற்று, முதலில் அமுதாவும் சுரபியும் கால் டாக்ஸியில் கிளம்பிவிட, மதிமாறன் தனது பொலேரோவில் மற்றவர்களை ஏற்றிக் கொண்டான். அமுதா இந்த முறை சென்னை தி.நகரின் அருகில் ஒரு சர்வீஸ்ட் அபபார்ட்மெண்டில் அறை எடுத்திருந்தாள். அன்றைய தினம் அதிகாலை பெங்களூரில் இருந்து வந்து சேர்ந்தவள், சுரபி பள்ளியின் விடுதியிலேயே தங்கிக் கொள்ளலாமே என மொழிந்த போது அமுதா மறுத்துவிட்டாள்.

“சும்மா நாள்ன்னா உன் கூட ரூம்ல தங்கறது பிரச்சனை இல்லை சுபிம்மா…அது மாதிரி எவ்வளவோ நாள் நான் உங்கூட தங்கியிருக்கேன் தானே. இன்னைக்கு தங்கறது சரிபடாது. நாம, கிளம்பி போறதை நிறைய பேர் நோட் பண்ணலாம். மனசுக்குள்ள புகைச்சல் இருக்கும். எதுக்கு இதெல்லாம், கல்யாணத்துக்கு நாள் குறிக்கற வரைக்கும் அதிகம் பேர்த்துக்கு தெரியாம கண்திருஹ்டி படாம இருக்கறது முக்கியம்…..”என அவ்வளவாக திருஷ்டி, நம்பிக்கை, வாஸ்து என எதிலும் அவ்வளவாக அக்கறை காட்டாத அக்கா, இவ்வளவு தூரம் சொன்ன பிறகு சுரபிக்கு எங்கணம் மறுக்கத்தோன்றும்.

உணவு முடித்து, மதிமாறனின் பெற்றோரை ஒருவாராக சந்தித்து முடித்த களைப்பில் சுரபி  சர்வீஸ் அப்பார்மெண்ட் வந்த உடனேயே உடை மாற்றிக் கொண்டு, சாவகாசமாக ஆதித்யா சானல், சிரிப்பொலி என தொலைக்காட்சிப் பெட்டியில் தன்னைத் மூழ்கடித்துக் கொண்டாள். அமுதாவிற்கு அன்றைய மாலையே பெங்களூருக்கு செல்லும் வேலை இருந்தது. மார்ச், ஏப்ரல் மாதங்கள் எப்போதுமே அக்கவுண்ட்ஸ் துறையைப் பொறுத்தமட்டில் சற்றே பரபரப்பான மாதங்கள்.

வணிகக் கணக்கு முற்று பெற்று புதிய கணக்குகள் பராமறிக்கத் துவங்குவதால், ஒரு வருட வரி நிலுவைகளையும் தாக்கல் செய்யவேண்டியிருக்கும். அமுதாவால் முடிந்திருந்தால், இந்த மாதம் பெண் பார்க்கும் படலத்தைக் கூட மே அல்லது ஜூன் மாதத்திற்கு மாற்றி வைக்கச் செய்திருப்பாள். எங்கே? இவளிடம் கேட்டுக் கொண்டு மதிமாறன் தேதி சொல்லவில்லையே. “இன்ன தேதியில் என் தாய்தந்தை வருகின்றனர்” என தகவலாக மட்டுமே விஷயம் சொல்லப்பட்டது. “இந்த தேதி சவுகரியப்படுமா?”என்று அமுதாவிடம் விசாரிக்கக் கூட இல்லை. இதுகூடப் பரவாயில்லை, தானாவது வேற்று மனுஷி. இதில் முழுக்க சம்பந்தப்பட்ட சுரபியிடம் கூட எதையும் கலந்து கொள்ளாமல் தானாகவே எல்லாவர்றையும் மதிமாறன் முடிவு செய்திருந்தான்.

இதை எல்லாம் எடுத்துச் சொன்னால அது சுரபியின் காதில் விழுந்ததாகவே தெரியவில்லை. எதைப் பற்றியும் கவலையின்றி அவள்பாட்டில் சுற்றிக் கொண்டிருக்கிறாள். இதோ, இன்று கூட அவனது பெற்றோர் நடந்து கொண்ட முறை என்ன? நாகரீகம் கருதிக்கூட இரண்டொரு வார்த்தை பேசவில்லை. அதிலும், அவனது தாய் அந்த இடத்தில் அமுதா, சுரபி என்ற இரு உயிர்கள் இருப்பது போல் மருந்துக்கும் நினைக்கவில்லை. விருப்பமில்லை என்றால் அதை முன்னரே மகனிடம் தெரிவித்து வராதிருந்திருக்கலாம். இப்படி வந்து இம்சித்து சென்றிருக்க வேண்டிய அவசியம் என்ன? இப்படிப்பட்ட வீட்டிலா சுரபி சென்று நிம்மதியாக வாழ்ந்துவிட முடியும்?

இப்படி பலதிக்குகளிலும் சிந்தனை ஓட, தன் துணிமணிகளை தோள் பையினுள் திணித்தவள், “சுபி….சுபி” என வடிவேலுவின் காமெடியில் லயித்திருந்தவளை, நிஜ உலகிற்கு இழுத்துவந்தாள்.

“சுபி, நாளைக்கு ஸ்கூல் இருக்கா?” என மீண்டும் காலையிலேயே கேட்டு தெளிவுபடுத்திக் கொண்ட விஷயத்தை மீண்டும் கேட்டாள் அமுதா.

“இல்லைக்கா…லீவ் தான்” என சுரபி தொலைக்காட்சியில் இருந்து கண்களைத் திறவாமல் பதிலளித்தாள். அமுதாவிற்கு சுரபியின் தோளைப் பிடித்து உலுக்கலாம் போல் இருந்தது.

“சுபி, என் கூட பெங்களூர் வர்றீயா?” என மீண்டும் காலையில் பாடிய பல்லவியை தொடர்ந்தாள். “அங்க வந்து நான் என்ன செய்யட்டும். நீயும் வேலை இருக்குன்னு போயிடுவ, நான் மட்டும் தனியா மொட்டு மொட்டுன்னு உட்கார்ந்திருக்கணும்.” என சுரபி சிணுங்க, அமுதாவிற்கு சுரபியின் மனநிலை புரியாமல் இல்லை. அதனாலேயே தன் குரலில் கண்டிப்பை மருந்துக்கும் காட்டாது தன்மையாகவே பேசினாள்.

“சுபிம்மா, மதி இந்தவாரம் வெளிய எங்கயும் வருவார்ன்னு எனக்குத் தோணலைடா. அவங்க அப்பா அம்மா இருக்காங்க..அவங்க கூட வெளிய எங்கையாவது போனாலும் போவார். நீ தனியா இங்க ஹாஸ்டல்ல இருக்கறதுக்கு பெங்களூர் வரலாம்ல”என எடுத்துரைத்த போது, சுரபி உடனே மறுப்பேதும் சொல்லிவிடவில்லை. சிறிது யோசிப்பது தெரிந்து, கிடைத்த வாய்ப்பை விடாமல் அமுதா சுரபியை பெங்களூர் வரும்படிக்கு சம்மதிக்கவைத்திருந்தாள்.

சுரபியும் செவ்வனே மதிமாறனிடம் ஒரு வார்த்தை “அக்காவுடன் பெங்களூர் செல்கிறேன்..திங்களன்று வந்துவிடுவேன்” என தகவல் சொல்லிவிட்டிருந்தாள். அமுதா சுரபியின் சம்மதம் கிட்டிய உடனே, டிராவல் ஏஜெண்டிடம் பேசி, தனக்காக மட்டும் வாங்கப்பட்டிருந்த மாலை விமானத்தின் டிக்கெட்டுடன் சேர்ந்து சுரபிக்கும் ஒரு டிக்கெட் ஏற்பாடு செய்தாள். அமுதா,சுரபி இருவரும் மாலையில் சென்னையில் இருந்து பெங்களூருக்கு விமானம் ஏறியிருந்தனர்.

இந்த முறை மதிமாறன் விமான நிலையம் வரை வந்து வழியனுப்பவில்லை. அமுதா  அவனால் வர இயலாது என யூகித்திருந்த போதும், சுரபி போர்டிங் கேட் வரையிலும் திரும்ப திரும்ப பார்த்துக் கொண்டே நடந்தது கண்டு சற்றே சஞ்சலப்பட்டாள். “அவங்க அப்பா அம்மா இருக்காங்க…ஏற்கனவே நாம நினைச்ச விதமா சுமூகமா ஏதும் நடக்கலை. மதிமாறன் அவங்களை சமாதானப்படுத்தி பேசிட்டு இருந்திருக்கலாம். வர முடிஞ்சா வந்திருப்பார் இல்லையா. இதுக்கெல்லாம் முகத்தை தூக்கி வச்சிட்டு வராத சுபி…”என அறிவுறுத்தி சுரபியுடன் விமானம் ஏறினாள்.

அமுதா சொல்லியது போல, அதே நேரம் மதிமாறன் வீட்டின் மாடியில் இந்த விவாதம் தான் ஓடிக் கொண்டிருந்தது. மதிமாறனின் தங்கை அனு, மெல்லமாக ஓசையுடன் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்க, அவனது தந்தையும் தாயும் வீட்டு ஹாலின் சோஃபாவில் அமர்ந்திருந்தனர். கீழ்வீட்டு மாமாவும் பங்கஜம் மாமியும் நாகரீகமாக விடைபெற்று சென்றிருக்க, மதிமாறனின் பெற்றோர் முக்கியமாக அவன் அன்னை சற்றே கொதிநிலையில் இருந்தார்.

“அந்த டீவியை கொஞ்ச ஆஃப் பண்ணேன் அனு…”என சீரியவளை சட்டை செய்யாமல் ஒலியை குறைத்துவைத்து மீண்டும் தன் வேலையை செவ்வனே செய்து கொண்டிருந்தாள் அனு. மதிமாறனின் தந்தைக்கு மகனின் காதல் விவகாரத்தில் அவ்வளவாக விருப்பு வெறுப்புகள் இல்லை. முன் தினம் மயிலாடுதுறையில் இருந்து கிளம்பும் சமயம் கூட அவரது மனையாள், நல்ல மனநிலையில் இருந்தது போலத் தான் தோன்றியது. திடீரென ஏதோ நினைத்துக் கொண்டு முகத்தை திருப்பிக் கொள்வது பார்க்க சற்றே சிறுபிள்ளைத்தனமாக தோன்றியபோதும், மனதில் நினைத்ததை வார்த்தைகளாக வடிக்க தைரியம் இன்றி வெறுமனே அமர்ந்திருந்தார்.

லலிதா தான் மதிமாறனிடம் பேச்சு கொடுத்துக் கொண்டிருந்தாள். “மதி, கொஞ்சம் யோசிச்சு செய்யலாம்பா…எடுத்தோம் கவிழ்த்தோம்னு முடிவெடுக்க இதென்ன, நாளைக்கு என்ன சமையல்னு பேசற சமாச்சாரமா? வாழ்க்கை விஷயம்…நீ சொன்னேங்கறதுக்காக நாங்களும் அந்த பொண்ணை வந்து பார்த்தோமா இல்லையா?” என்றார் கராராக. மதிமாறனும் உடனே விட்டு கொடுத்துவிடவில்லை. முடிந்தமட்டில் அம்மாவிற்கு புரியும்படிக்கு தன்மையாகவே பேசினான்.

“திடீர்ன்னு என்னாச்சும்மா உங்களுக்கு. நேத்து ஃபோன்ல பேசறப்போ கூட நல்லாத் தானேமா பேசினீங்க… ஒரே ராத்திரில எப்படி இப்படி மாறிப்போக முடியுது உங்களால… நைட் யார் கூட பேசினீங்க…சொல்லுங்க…”என தன் போலீஸ் புத்தியுடன் பேச எத்தனிக்க, “ஏன் எனக்கே திடீர்ன்னு எந்த யோசனையும் தோணக்கூடாதா?” என அம்மா கேட்ட விதத்திலிருந்தே இது சுயமுடிவு இல்லை என்பது மதிமாறனுக்கு விழங்கிற்று.

அதனால் நேராத தந்தையின் அருகில் சென்று மண்டியிட்டவன், அவர் முகத்தின் அளவிற்கு அமர்ந்து, “அப்பா, நீங்க சொல்லுங்க…என்ன பிரச்சனை…ஏன் உங்களுக்கும் அம்மாவுக்கும் சுரபியை பிடிக்கலை. அதுவும் திடீர்ன்னு ஏன் பிடிக்காம போச்சு…”என வினவ, மனைவியை ஒருதரம் ஏறிட்ட சுந்தரம், “எனக்கு பிடிச்சு தான் மதி இருக்கு. பொண்ணு, கண்ணுக்கு லட்சணமா அமைதியா அடக்கமா தான் தெரியறா. அவ அக்காவும் தன்மையா நாகரீகமா நடந்துக்கறா. கொஞ்சம் செழிப்பா இருக்கறாப்ல தான் தெரியுது. எனக்கு, அம்மாவுக்கு, அனுக்குன்னு தனித்தனியா பார்த்து பரிசுலாம் வாங்கிட்டு வந்திருக்காங்க.. எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை…”என்று நிறுத்தியவர், மீண்டும் மனைவியை ஏறிட்டுவிட்டு,”நேத்து ராத்திரி நாங்க கிளம்பறதுக்கு முன்னாடி, உன் மாமாவும் அத்தையும் வீட்டுக்கு வந்திருந்தாங்க. அவங்க ஏதோ சொல்லிட்டு போயிருக்காங்கன்னு நினைக்கறேன். அவங்க போனதுக்கு அப்பறமிருந்தே உன் அம்மா முகம் சரியில்லை. எங்கிட்டையும் சகஜமா பேசலை. இங்க வந்து, உன்னை பார்த்தா சரியாயிடும்னு தான் நினைச்சேன். இப்படி பட்டும்படாம நடந்துக்குவான்னு நினைக்கலை” அவ்வளவு தான் என் கோட்டா முடிந்து விட்டது என்பது போல் சட்டென அமைதியாகிப்போனார்.

கணவர் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த லலிதா, அவரை ஒரு கண் முறைப்பதும், மகனை முறைப்பதுமாகவே இருக்க, “அம்மா, இன்னும் ஒரு தடவை பொறுமையா கேட்கறேன். என்ன விஷயம்னு சொல்லுங்க…இல்லைன்னா, உங்க அண்ணன் அண்ணிக்கு ஃபோன்பண்ணி நான் பேச வேண்டிய விதத்தில பேச ஆரம்பிச்சிடுவேன்”என சற்றே மிரட்டல் தொனியில் வினவினான் மதிமாறன். சொன்னதோடு மட்டும் நில்லாமல், கைப்பேசியை எடுத்து, தன் தாய்மாமாவின் எண்ணை தேட முற்பட, லலிதா சற்றே துணுக்குற்றாள்.

லலிதா ஏகத்திற்கும் கெளரவம் பார்ப்பவள், அதிலும் தன் வீட்டு மனிதர்களுக்கு ஒரு சின்ன விஷயம் கூட மதிப்பு குறைச்சலாக போய்விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார். மதிமாறன் எங்கே தன் அண்ணனிடம் அதிகாரமாக ஏதேணும் பேசிவிடுவானோ என்ற பதைப்பில் சற்றே இறங்கி வந்திருந்தார்.

“இப்போ என்ன தெரியனும் உனக்கு?” என லலிதா வினவ, மதிமாறன் பதிலேதும் சொல்லாமல் அவரையே கண்கொட்டாமல் பார்த்தவண்ணமிருந்தான். அந்த பார்வையின் தீட்சண்யம் தாளாமல் மீண்டும் லலிதா பேசத்துவங்கினார். “எனக்கு அந்த பொண்ணை பிடிக்காம இல்லை. நல்லா லட்சணமாத்தான் இருக்கா…படிச்சிருக்கா.. அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை.”

“வேற என்ன?” என்ற மதிமாறனின் காட்டமான குரலைக் கேட்ட பின், சற்றே தொண்டையை செருமிக் கொண்டு தயக்காமாக பேசத் துவங்கினார்.

“அந்த பொண்ணு யாரோ, எவரோ, அதை நினைச்சா கொஞ்சம் தயக்கமாவே இருக்கு. நேத்து வீட்டுக்கு வந்த மாமா கூட, இப்படி ஊர் பேர் தெரியாத பொண்ணை கட்டறது நல்லது இல்லம்மா, நாளைக்கு நம்ம அனுவுக்கு வர்ற நல்ல வரனெல்லாம் தடைபட்டுப் போக நிறைய வாய்ப்பிருக்கு. லவ் மேரேஜ்க்கு நாம ஒண்ணும் எதிரி இல்லை. நம்ம வீட்டில ரெண்டு மூனு கல்யாணம் நடந்திருக்கு. காதல் கல்யாணம் தானாலும், அதெல்லாம் நாம நல்லபடியா பார்த்து பண்ணிவைக்கலியா? சொல்லு. காதல் கல்யாணம் பண்ணறது தப்பில்லை மதி. நாங்க எதிர்க்கவும் இல்லை. ஆனா, இந்த பொண்ணுக்கு அவ அக்காவைத் தவிர வேற சொந்தம்னு சொல்லிக்க யாரும் இல்லைன்னு சொல்லறது தான் கேட்க சங்கடமா இருக்கு. நாளைக்கு நமக்கு சொந்த பந்தம்னு வேணும் இல்லையா”

“ஏன் இதெல்லாம், நான் அந்த பொண்ணை பிடிச்சிருக்குன்னு சொன்னப்போ, அவளைப் பத்தி முழுசா எல்லா தகவலும் தந்தப்போ எதுவும் சொல்லலை. இப்போ உங்க அண்ணன் வந்து உன் அறிவுக்கண்ணை திறந்ததுக்கு அப்பறம் தான் இதெல்லாம் தோணுதா?”

“டே, தாய்மாமான்னு மரியாதையா பேசு. அவர் ஒண்ணும் இந்த கல்யாணத்துக்கு தடங்கல் சொல்லலை. நாளைக்கு உனக்கும் ஒரு பொண்ணு இருக்கா லல்லி. பார்த்து செய்ன்னு என்மேல இருக்கற அக்கரையில தான் சொன்னாரு. அதை புரிஞ்சுக்கோ மதி” என குரலை சற்றும் ஏற்றாமல், அமைதியான ஆனால் தீர்க்கமாகவே பேசினார் லலிதா.

“அம்மா அந்த பொண்ணை நான் விரும்பரேன்மா…கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைக்கறேன்.நீங்க என்ன இப்படி பேசறீங்க?” என கோபம், ஆத்திரம் எல்லாம் கலந்து, தன் அன்னைக்கு புரியவைக்க முயற்சித்தான் மதிமாறன்.

“மதி, நம்ம குடும்பம் காதலுக்கோ, காதல் கல்யாணத்துக்கோ எதிரிக இல்லைப்பா. உனக்கே தெரியனும், காதல் கல்யாணத்தை நாம, நல்லவிதமா ரெண்டுவீட்டு சம்மத்ததோட கிராண்டா செஞ்சு தான் வைக்கறோம். பிரச்சனை நீ காதலிக்கறதில இல்லை. நீ காதலிக்கற பொண்ணு தான்… அதுலையும், அந்த பொண்ணு மேல குறை சொல்லற மாதிரி எந்த விவரமும் இல்லை. அழகா இருக்கா, லட்சணமா இருக்கா, அமைதியா, தன்மையா பேசறா, அவ அக்காவும் நல்லவளா தெரியறா, தன் தங்கச்சிக்கு நல்ல வாழ்க்கை அமைச்சுதரணும்னு பாடுபடறது கண்கூட தெரியுது.” என சற்றே நிறுத்தியவர், மதிமாறனின் கவனம் தன் மீது முழுவதும் படர்ந்திருப்பதை உணர்ந்து மீண்டும் பேசத் துவங்கினார்.

“ ஆஸ்ரமத்தில வளர்ந்திருந்தாலும், படிச்சு, சொந்தக்கால்ல நின்னு, ஒரு சிறப்பான நிலையில தான் அக்கா தங்கச்சி ரெண்டு பேரும் இருக்காங்க…அதெல்லாமே பாராட்டப்படவேண்டிய விஷயம் தான். நான் இல்லைங்கலையே…அதுக்காக நீ வாழ்க்கை தர்றேன்னு சொல்லறது என்னால ஏத்துக்க முடியலைப்பா.ஊர் பேர் தெரியாம, சொந்த பந்தம்னு யாரும் இல்லாம இருக்கறது, இப்போ நல்லா இருக்கலாம், இன்னும் கொஞ்ச வருஷம் கழிச்சு, எங்க காலத்துக்கு அப்பறம் உனக்கு ஒரு நல்லது கெட்டதுன்னா மனுஷ மக்கள் வேண்டாமாப்பா. பெரிய குடும்பமா இல்லாம போனாலும், கடைசில குடும்பம்னு ஒரு பத்து பேராவது வந்து நிக்க வேண்டாமா? எனக்கு மனசு ஒப்பலைப்பா. அதுக்கு மேல உன் இஷ்டம். நான் தலையிடமாட்டேன்.” என தீர்மானமாக பேசிய அன்னையை என்ன சொல்லி சமாதானப்படுத்துவது என அறியாமல் மதிமாறன் திணறினான். அவனின் தந்தையிடமிருந்த எந்த உதவியும் கிட்டப்போவதில்லை என்பது தெரிந்து பின்னர், குரலில் முடிந்த அளவு வெறுப்பை வெளிக்காட்டாமல் பேசினான்.

“அம்மா, அவளுக்கு குடும்பம் இல்லை. ஆனா, நமக்கு இவ்வளோ பேர் இருக்காங்க. என்னை கல்யாணம் பண்ணிக்கறதால அவளுக்கு ஒரு நல்ல குடும்பம் கிடைக்கப்போகுது. அப்படி பெருந்தன்மையா யோசிக்கப்பாருங்க….இது உடனே முடிவெடுக்கற சமாச்சாரம் இல்லை. சுரபியை உங்களுக்கு நான் அறிமுகப்படுத்தினதுக்கு முக்கிய காரணம், இப்படி ஒருத்தி என் வாழ்க்கையில் இருக்கான்னு நீங்க தெரிஞ்சுக்கணும். இல்லைன்னா கல்யாணம் பண்ணு பண்ணுன்னு என்னை நச்சிகிட்டே இருப்பீங்க. முடிவு உங்க கைல தான்.”

“இந்த பொண்ணைத் தவிர வேற யாரையும் என்னால என் மனைவியா கற்பனை பண்ணி பார்க்க முடியலை. புரிஞ்சுக்கோங்க.” என்றவன் அறையை விட்டு வெளியே செல்ல துவங்கி, கதவின் அருகே சென்று நின்றவன், தாய் தந்தை என அனைவரையும் ஒரு தரம் பார்த்துவிட்டு, “நான் உங்ககிட்ட கேட்கறது ஒரே ஒரு விஷயம் தான். மனசை கொஞ்ச விசாலப்படுந்துங்க. அமைதியா யோசிங்க. யார் சொல்லறதியும் கேட்காம முடிவெடுங்க. ஏன் இவ்வளவு தூரம் சொல்லறேன்னா, நீங்க மனசளவில நல்லவங்க. யாரும் கெட்டுப் போகணும்னு நினைக்காதவங்க. யோசிங்க” என சொல்லி, ஒரு நொடி கூட நில்லாமல் கீழே இறங்கி சென்றிருந்தான்.

மதிமாறனின் பேச்சை அசைபோட்டவண்ணம் அமர்ந்திருந்த அவனது பெற்றோம் ஒருவரோடு ஒருவர் பேசாது தத்தமது நினைவுகளில் மூழ்கிப் போயினர். அனு மட்டும் அவ்வப்போது தொலைக்காட்சியில் இருந்து கண்களை அகற்றி, பெற்றோரை ஒரு பார்வை பார்ப்பதும் பின் தொலைக்காட்சியை நோட்டமிடுவதாக இருந்தாள்.

சந்தர்பத்திற்கு ஏற்றவாறு, தொலைக்காட்சியில் “கடவுள் தந்த அழகிய வாழ்வு… உலகம் முழுதும் அவனது வீடு…கண்கள் மூடியே வாழ்த்துபாடு”என மெல்லமாக பாடத் துவங்க, அனு வேண்டுமென்றே பாட்டின் சத்தத்தை அதிகப்படுத்தினாள். சற்று நேரம் பேசாமல் பாடலைக் கேட்டுக் கொண்டிருந்த லலிதா, “டிவியை ஆஃப் பண்ணுடீ”என சொல்லி, ஹாலில் இருந்து எழுந்து அறையினுள் முடங்கிக் கொண்டாள். சோஃபாபில் அமர்ந்திருந்த தந்தையைப் பார்த்து அனு, முறுவலிக்க, அவரும் பதிலுக்கு இதழ் பிரிக்காமல் புன்னகைத்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!