மயங்காதே மனமே 1
‘க்ரான்ட் ஜங்க்ஷன்‘
பெரிய கரும்பச்சை நிறப் பளிங்குக் கற்களால் வெளிப்புறமாக அலங்கரிக்கப் பட்டிருந்தது அந்த இரண்டு மாடிக் கட்டிடம். பழமையின் நூதனமான வேலைப்பாடுகளுடன், புதுமையாக வடிவமைக்கப் பட்டிருந்தது.
நேரம் இரவு பத்தைத் தாண்டி இருந்தது. அந்த இடமே அத்தனை அமைதியாக இருக்க, அந்தக் கட்டிடத்தின் வாசலில் நின்ற இரண்டு ஆஜானுபாகுவான ஃபுல் சூட்டும் சொன்னது, இது மேல்தட்டு வர்க்கத்திற்குரிய இடமென்று.
அந்த நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டு வந்து நின்றது அந்த black Audi. காரை நிறுத்திவிட்டு பார்க்கிங்கிற்காக நின்றவரிடம் சாவியைக் கொடுத்து விட்டு உள்ளே நுழைந்தான் அபிமன்யு.
அங்கே வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த அத்தனை பேரின் முகத்திலும் தெரிந்த ஸ்நேக பாவம், அவன் அந்த இடத்திற்குப் புதிதல்ல என்று சொல்லாமல் சொன்னது. இருந்தாலும், தங்கள் கடமையைச் செய்யும் பொருட்டு அந்த ‘பப்பிற்கே‘ உரிய ‘ட்ரெஸ் கோட்‘ இனை சரி பார்த்து விட்டு அபியை உள்ளே அனுமதித்தார்கள்.
வெளியே இருந்த அமானுஷ்ய அமைதிக்கு எதிராக இருந்தது கட்டடத்தின் உட்பகுதி. சற்று மிதமான துள்ளலிசை ஒலித்துக் கொண்டிருக்க, கூட்டம் கூட்டமாக அமர்ந்திருந்து கேளிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்கள் இளம் பிராயத்தினர்.
“ஹேய் அபி!” ஒரு டேபிளில் இருந்து கை காட்டினான் சத்யா. சிரித்தபடியே கை காட்டிய அபி, அந்த டேபிளை நோக்கிப் போக, தாமினி, ரஞ்சித், சத்யா, ரக்ஷிதா என இவன் நண்பர்கள் பட்டாளம் அங்கு கூடியிருந்தது.
“என்னப்பா பிஸினஸ் மேக்னட்! ரொம்பவே பிஸியோ? இந்தப் பக்கமே ஆளைக் காணலை?” ரஞ்சித் கேலியாக வினவ, சிரித்து மழுப்பினான் அபி.
உண்மையிலேயே அவன் இந்த ஒரு மாதமாக மிகவும் பிஸி. புதிதாக ஆரம்பித்திருந்த எக்ஸ்போர்ட் பிஸினஸ் அவனை முழுமையாக இழுத்துக் கொண்டது. போதாததற்கு அப்பா நாராயணன் வேறு ஹாஸ்பிடலில் ஒரு வாரம் அனுமதிக்கப் பட்டிருந்தார். ஹை ப்ளட் ப்ரஷர் அவரை எப்போதும் ஆட்டுவிக்கும் ஒன்று என்பதால் அத்தனை பொறுப்பும் இவன் தலையிலேயே வந்திருந்தது.
ஏற்கனவே அப்பாவிற்கு இருந்த தொழில்களை அவரின் பி ஏ வின் உதவியோடு மேற்பார்வை பார்த்துக்கொண்டு, தான் ஆரம்பித்ததையும் நடத்தி முடிப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது அபிக்கு.
வெற்றிக்கும் இரண்டு நாட்கள் ஓய்வு கொடுத்து அனுப்பி விட்டான். அப்பாவின் மிகவும் நம்பிக்கைக்குப் பாத்திரமான பையன் என்பதால் இவனது வலது கையாக வெற்றியை சிபாரிசு பண்ணியிருந்தார் நாராயணன். அப்பாவின் தெரிவு என்றும் சோடை போனதில்லை என்று நிரூபித்திருந்தான் பையன். தனது வேகத்துக்கு ஈடு கொடுத்த வெற்றியை அபிக்கு மிகவும் பிடித்திருந்தது.
ஆனால் இதையெல்லாம் இவர்களிடம் சொல்ல முடியாதே. எல்லாம் பெரிய இடத்துப் பிள்ளைகள். ஆளுக்கொரு தொழிலென்று எடுத்து நடத்துபவர்களிடம் இதையெல்லாம் சொன்னால் ஏதோ ஃபிலிம் காட்டுவது போல் இருக்கும்.
இவன் வந்து உட்காரவும், வந்த பேரரிடம் ஒரு ‘ மார்ட்டினியை‘ ஆர்டர் பண்ணிவிட்டு சாய்ந்து உட்கார்ந்தான் அபிமன்யு.
நீண்ட நாட்களுக்குப் பிறகு கிடைத்த அந்த ஓய்வும், நண்பர்களின் அருகாமையும் அவனைக் கொஞ்சம் ஆசுவாசப் படுத்தியிருந்தது. ரிலாக்ஸாக கை நீட்டி சோம்பல் முறித்தவன்,
“அப்புறம், லைஃப் எப்பிடிப் போகுது சொல்லுங்கப்பா?” என்றான்.
“ம்… அது போகுது ஊர்ப்பட்ட டென்ஷனோட.” சொன்ன ரஞ்சித்,
“அபி, மித்ரன் க்ரூப்ஸோட ஏதாவது மனஸ்தாபமா?” என்றான்.
“ஏன் ரஞ்சித்? என்ன இப்பிடி திடீர்னு கேக்குறே?”
“இல்லைப்பா, நேத்து அப்பா க்ளப்ல மிஸ்டர் ராஜேந்திரனை சந்திச்சிருப்பாரு போல இருக்கு. வார்த்தைகள் அவ்வளவு நல்லதா வரலைன்னு சொல்லிக்கிட்டு இருந்தார். அதுதான் உங்கிட்ட கேட்டேன்.”
“விட்டுத் தள்ளு ரஞ்சித். எப்போவும் உள்ளதுதான். அப்பனும், புள்ளையும் எப்பவும் மோதுறவங்க தானே.” அசால்ட்டாகச் சொன்னான் அபிமன்யு.
“எதுக்கும் கொஞ்சம் உஷாரா இருப்பா.” அக்கறையாகச் சொன்ன நண்பனைப் பார்த்துச் சிரித்தான் அபிமன்யு.
மிஸ்டர் ராஜேந்திரன், ‘மித்ரன் க்ரூப்ஸ்‘ இன் ஏகபோக உரிமையாளர். ஒரே மகன் மித்ரனின் பெயரில் கம்பெனியை மாற்றிய பிறகு அவருக்கு ஏறுமுகம்தான். அதனால் மித்ரன் மீது கண்மூடித்தனமான அன்பு.
ஆளத்தூரின் பெரிய புள்ளி அபிமன்யு வின் தாய்வழித் தாத்தா பாலகிருஷ்ணன் என்றால், வெங்கண்ணூரின் பெரிய புள்ளி மித்ரனின் தாத்தா மதுராந்தகன். என்ன, இரண்டு தாத்தா மார்களும் நல்ல நண்பர்கள். அதற்குக் காரணம் அவர்களுக்கு வாய்த்த மனைவிமார்.
அபிமன்யுவின் பாட்டி அன்னலக்ஷ்மியும், மித்ரனின் பாட்டி ஜெயந்தியும் பழகுவதற்கு அத்தனை இனிமையானவர்கள். குடும்பம் என்ற புள்ளியை மையமாக வைத்து அதையே சுற்றி வட்டமிடும் பழங்காலப் பெண்மணிகள்.
அந்த ஏரியாவில் எந்த விசேஷம், எந்த வீட்டில் நடந்தாலும் இரண்டு பெரிய வீடுகளுக்கும் முதல் மரியாதை உண்டு. இன்றுவரை எங்கு கண்டாலும் கை கோர்த்துக் கொள்ளும் தோழமை அவர்களது. ஆனால் அடுத்து வந்த சந்ததியிடம் அது தொடரவில்லை.
நாராயணன் மிகவும் நேர்மையானவர். கோயம்புத்தூரிலிருந்து தொழில் நிமித்தமாக ஆளத்தூர் சென்றவர், சீமாவின் அழகில் மயங்கி அவரைக் காதலித்து மணம் முடித்திருந்தார். எந்த பேதமும் பார்க்காமல் மகளின் காதலை ஏற்றுக் கொண்டார்கள் பாலகிருஷ்ணன், அன்னலக்ஷ்மி தம்பதியினர். இன்று வரை அவர்களின் நம்பிக்கையை பொய்க்கவில்லை நாராயணன்.
ஆனால் இதற்கு எதிர்மாற்றமாக ஆகிப்போனார் ராஜேந்திரன். அப்பா மதுராந்தகன் வளர்த்து வைத்த தொழிலை பன்மடங்காக ஆக்க வேண்டும் என்பது ஒன்றே அவரின் குறிக்கோளாக இருந்தது. பணம் ஒன்று மட்டுமே குறியாக இருக்க, நேர்மை, நியாயம் அங்கே தொலைந்து போனது. மனைவி சுலோச்சனாவும் அதற்கு ஏற்றாற்போல அமைந்து போனது ராஜேந்திரனுக்கு சாதகமாகிப் போனது. அது அவரின் துரதிருஷ்டம்.
‘ஹோ‘ வென்ற கூச்சலோடு பப்பிற்குள் நுழைந்தது அந்தப் பட்டாளம். ஆறேழு பேர் ஆண், பெண் பேதமின்றி உள்ளே நுழைய, அதற்கு தலைமை தாங்கி நின்றிருந்தான் மித்ரன். அவன் கை வளைவில் ஒரு பஞ்சவர்ணக் கிளி, இவன் விட்டால் விழுந்துவிடும் அபாயத்தில் அவனோடு தொங்கிக் கொண்டிருந்தாள்.
“அபி, அவன் செலவுல பப்புக்கு வந்துட்டு, கிளி உன்னை சைட்டடிக்குது மச்சி.” சொல்லிவிட்டுச் சிரித்தான் சத்யா. அவன் கேலியில் சிரித்த அபியும் அந்தப் பெண்ணை அலட்சியமாகத் திரும்பிப் பார்த்தான். கண்களில் அத்தனை மயக்கத்தோடு இவனையே பார்த்திருந்தாள் அந்தப் பெண். அருவருப்பாக இருந்தது அபிக்கு.
“அபி, அதை விடு. கொஞ்ச நாளாவே இந்த மைனா உன்னைப் பத்தி எங்கிட்ட விசாரிக்குது.” சொன்ன தாமினியை ஆச்சரியமாகப் பார்த்தான் அபிமன்யு.
“யாரைச் சொல்ற தாம்ஸ்?”
“ஸ்நூக்கர் விளையாடுதே, அந்த மஞ்சக் காட்டு மைனாதான்.” தாமினி சொல்லவும் அங்கே ஒரு பக்கமாக ‘ஸ்நூக்கர்‘ விளையாடிக் கொண்டிருந்தவர்களைத் திரும்பிப் பார்த்தான் அபிமன்யு. அதுவரையிலும் அவனையே பார்த்துக் கொண்டிருந்த அந்தப் பெண் இப்போது விளையாடுவது போல் பாவனை பண்ணினாள். கைகள் ‘க்யூ‘ இல் ‘சோக்‘ ஐத் தடவினாலும் கண்கள் அபியையே வட்டமிட்டுக் கொண்டிருந்தது.
“எதுக்கு என்னை விசாரிக்குது?” அபியின் கேள்வியில் வாய்விட்டுச் சிரித்தான் ரஞ்சித்.
“மச்சி, மைனாக்கு உன்னோட கம்பெனியில வேலை வேணுமாம், குடுக்குறியா?” சொல்லிவிட்டும் சிரித்தான் ரஞ்சித்.
“ஷ்… ரஞ்சி, கொஞ்சம் சும்மா இருக்கியா.” ரஞ்சித்தை அடக்கிவிட்டு, அபியின் பக்கம் திரும்பினாள் தாமினி.
“அபி, பணக்கார வீட்டுப் பொண்ணு. பாக்கவும் அழகா இருக்கா. நீ கொஞ்சம் கன்சிடர் பண்ணலாமே.” தாமினியின் பேச்சில் இகழ்ச்சியாக ஒரு புன்னகை தோன்றியது அபியின் முகத்தில்.
“பணக்கார வீட்டுப் பொண்ணா இருந்தா மட்டும் போதாது தாம்ஸ். இந்த அபிக்குப் பொண்டாட்டியா வரனும்னா அதுக்கு வேற க்வாலிஃபிகேஷன்ஸ் வேணும்.” அபியின் பதிலில் முகத்தைச் சுளித்தாள் ரக்ஷிதா.
“எந்த உலகத்துல இருக்கே அபி? இன்னும் எத்தனை நாளைக்கு இந்த குடும்பம், பாரம்பரியம் இதையெல்லாம் புடிச்சிக்கிட்டு தொங்கப்போறே?” எரிச்சலாக வந்தது அவள் குரல்.
“என்னால ஒரு சில விஷயங்களை விட்டுக் குடுக்க முடியாது கைஸ். உங்களுக்கெல்லாம் உங்க லைஃப் பார்ட்னரைப் பத்தி ஒவ்வொரு எதிர்பார்ப்பு இருக்கிற மாதிரி எனக்கும் ஒரு சில கண்டிஷன்ஸ் இருக்கு, தட்ஸ் ஆல்.” இலகுவாக சொன்னான் அபிமன்யு.
“அதுலையும்…” பாதியில் நிறுத்திவிட்டு அவன் விஷமமாகச் சிரிக்க, நண்பர்கள் நால்வரும் ஆர்வமாகப் பார்த்தார்கள்.
“இந்த நேரத்துல… பப்புல… இருக்கிற… பொண்ணு… நோ சான்ஸ்!” சொல்லிவிட்டுச் சிரிக்க, தாமினியும், ரக்ஷிதாவும் அவனை ஆளுக்கொரு பக்கமாகத் தாக்கினார்கள். இன்னொரு டேபிளில் தன் நண்பர்களோடு உட்கார்ந்து கொண்டு இவர்கள் கொட்டத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் மித்ரன். கண்களில் ஒரு வெறுப்பு அப்பட்டமாகத் தெரிந்தது.
“இது டூ மச் அபி, பப்புக்கு வர்ற பொண்ணுங்கன்னா உனக்குக் கேவலமா?” மூக்கை விடைத்துக்கொண்டு ரக்ஷிதா கேட்க,
“டார்லிங், உன்னை நான் கேவலம்னு சொல்லலை, ஆனா எனக்கு வர்றவ பப்புக்கு போறவளா இருக்க வேணாம்னு சொல்லுறேன், இதுல என்ன தப்பு?” அபி நியாயம் பேச,
“அப்போ மஞ்சக் காட்டு மைனாக்கு சான்ஸ் இல்லேன்னு சொல்றயா அபி?” என்றாள் தாமினி.
“கண்டிப்பா இல்லை தாம்ஸ். ஒரு சில விஷயங்கள்ல நான் இன்னும் கன்சர்வேடிவ் தான். நானே நினைச்சாலும் என்னால என்னை மாத்திக்கவே முடியாது.” திடமாகச் சொன்னவனை முறைத்து விட்டு பெண்கள் இருவரும் பாத்ரூமிற்கு போக, அபியின் தோள்களில் கையைப் போட்டுக் கொண்டு நெருங்கி அமர்ந்தான் சத்யா.
“அபி, அந்தப் பொண்ணு கண்ணைப் பாரு. விட்டா அப்பிடியே உன்னை சாப்பிட்டு ஏப்பம் விட்டிரும் போல இருக்கு. கொஞ்சம் லைஃபை அனுபவிக்கலாமேப்பா?” அவன் காதில் கிசுகிசுக்க, லேசாகச் சிரித்தான் அபிமன்யு.
“சத்யா, இந்த பப், ட்ரிங்க்ஸ், சோஷியலைஸிங் எல்லாமே ஜஸ்ட் ஒரு ரிலாக்ஸுக்காகத்தான். மத்தபடி, எனக்கு வர்றவ எவ்வளவு ப்யூரா இருக்கனும்னு நான் எதிர்பார்க்கிறேனோ, அதேமாதிரி அவளுக்கும் நான் ஹொனஸ்ட்டா இருக்கனும்னு நினைக்கிறேன்பா. கற்புங்கிறது பொண்ணுங்களுக்கு மட்டுமில்லை, பசங்களுக்கும்தான். சில விஷயங்கள் என்னை நம்பி வர்றவளுக்கு மட்டும்தான் சத்யா.” சொல்லி விட்டு அழகாகப் புன்னகைத்தான் அபிமன்யு.
“நீ சொல்லுறதைக் கேக்கும் போது ரொம்ப நல்லா இருக்கு அபி, ஆனா அமுல்படுத்துறதுதான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு. நானும் ட்ரை பண்ணுறேன்பா.”
“தட்ஸ் குட். பாக்கிறவளோட போறதுல எல்லாம் என்ன மச்சி த்ரில் இருக்கு? நமக்காகன்னு ஒருத்தி எங்கேயோ பொறந்திருப்பா. அவளை அணு, அணுவா ரசிச்சுக் காதலிக்கனும். நம்ம ஆசை, கனவு எல்லாத்தையும் அவமேல மூச்சு முட்ட முட்டக் கொட்டனும். அதுல இருக்குடா த்ரில்.” கிறக்கத்தோடு சொன்னவனை அணைத்துக் கொண்டான் சத்யா.
“ரசிகன்டா நீ.” நண்பர்கள் பேச்சைக் கலைத்தது அபியின் ஃபோன். எடுத்துப் பார்க்க, ரஞ்சனி என்றது. சுறுசுறுப்பானான் அபிமன்யு.
“ஹேய் ரஞ்சிம்மா, எப்பிடி இருக்கே?”
“அண்ணா, நீ இப்போ எங்க இருக்கே?” காட்டமாக வந்தது ரஞ்சனியின் குரல்.
“மாப்பிள்ளை எப்பிடி இருக்காருடா? தருண் குட்டி என்ன பண்ணுறான்?” பேச்சை மாற்றினான் அபி.
“என்ன? பேச்சை மாத்துறயா? நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் வரலை. இப்போ எங்க இருக்கே? அந்த விளங்காத பப்புலதானே?” ரஞ்சனி பல்லை அங்கே கடிப்பது, இங்கே புரிந்தது அபிக்கு.
“ரொம்ப நாளைக்கு அப்புறம் இன்னைக்குத் தான் அண்ணா இந்தப் பக்கமே வந்திருக்கேன்டா. உனக்கிட்ட நான் எதையாவது மறைச்சிருக்கேனா சொல்லு.” தங்கையை கொஞ்சிக் கொஞ்சி சமாதானம் பண்ணும் அந்த இளம் தொழிலதிபனை ஆச்சரியமாகப் பார்த்திருந்தார்கள் சத்யாவும், ரஞ்சித்தும். அவர்களைப் பார்த்துக் கண்ணடித்தவன்,
“இன்னும் கொஞ்ச நேரத்துல வீட்டுக்குப் போயிருவேன்டா.” என்றான் ரஞ்சனியிடம்.
“ம்… வீட்டுல தான் நானும் இருக்கேன். நீ வந்ததுக்கு அப்புறமா கிளம்பலாம்னு பாத்தா, நீதான் வீட்டுக்கு வர்ற மாதிரி தெரியலையே. அதான் கால் பண்ணினேன்.”
“ஹேய் ரஞ்சிம்மா, நீ இப்போ நம்ம வீட்டுலயா இருக்கே. இதோ, இப்போ கிளம்பி வந்திர்றேன்டா.” சொன்னவன், ஃபோனை அணைத்து பாக்கெட்டில் போட்டான்.
“என்ன மச்சி, கிளம்புறயா?” கேட்ட ரஞ்சித்தைப் பார்த்துப் புன்னகைத்தான் அபிமன்யு.
“ஆமாம்பா, ரஞ்சனியும், மாப்பிள்ளையும் வீட்டுக்கு வந்திருக்காங்களாம். எனக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காங்க. நான் உடனே போகணும், அதுங்க ரெண்டுகிட்டயும் சொல்லிடுங்கப்பா, இல்லைன்னா உண்டு இல்லைன்னு பண்ணிடுவாளுங்க.” சிரிப்போடு சொல்லிவிட்டு வேகமாக வெளியேறிப் போனான் அபி.
ரிஸப்ஷனில் காரின் கீயை எடுத்துக் கொண்டு வேகமாக வெளியே வந்தவன், வந்த வேகத்தில் யார் மீதோ மோதிக் கொண்டான். தன்னை சுதாகரித்துக் கொண்டு அபிமன்யு பார்த்த போது, மித்ரனின் கைவளைவில் இருந்த அந்தப் பெண் இவன் மீது முற்றாகச் சரிந்திருந்தாள். ஓர் அருவருப்போடு அவளை விலக்கி நிறுத்தியவன்,
“ஸாரி.” என்றான். அப்போதும் அவனை விட்டு விலக மனமில்லாமல் விலகியவள்,
“இட்ஸ் ஓ கே அபி.” என்றாள். அவளது குரலின் பேதத்தில் அவளை வினோதமாகப் பார்த்துவிட்டு, அவசரமாக நகர்ந்து விட்டான் அபிமன்யு. அவர்களின் அந்த சில நொடி நெருக்கத்தை ஒரு கேமரா பல கோணங்களில் தனக்குள் உள்வாங்கியதை அவன் கவனிக்கவில்லை.
————————————————————————
காரை வீட்டுக்கு முன் நிறுத்திவிட்டு அவசர அவசரமாக உள்ளே ஓடி வந்தான் அபிமன்யு. வீடே நிசப்தமாக இருக்க, சோஃபாவில் உட்கார்ந்து டீவி பார்த்துக் கொண்டிருந்தார் ஈஷ்வரன்.
அப்போது தான் டைனிங் டேபிளில் எல்லாவற்றையும் எடுத்து வைத்துக்கொண்டிருந்த ரஞ்சனி, இவனைக் காணவும் முகத்தை நாலு முழத்தில் நீட்டிக் கொண்டாள். அவள் செய்கையில் அபியும், ஈஷ்வரனும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர். ஈஷ்வரன் பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்ட அபி,
“ஸாரி மாப்பிள்ளை, நீங்க இன்னைக்கு வீட்டுக்கு வர்றது எனக்குத் தெரியாது. தெரிஞ்சிருந்தா கண்டிப்பா சீக்கிரமா வந்திருப்பேன்.” என்றான். சொன்னவனைப் பார்த்து சமாதானமாகப் புன்னகைத்தார் ஈஷ்வரன்.
“ஒன்னும் ப்ராப்ளம் இல்லை மச்சான். தீடீருன்னு உங்க உடன்பொறப்பு அப்பாவைப் பாக்கனும்னு கண்ணைக் கசக்கினா. அதான் கிளம்பி வந்துட்டோம்.”
“இப்போவாவது சாப்பிட வர்றீங்களா ரெண்டு பேரும்?” ரஞ்சனியின் குரலில் இரண்டு பேரும் திரும்பிப் பார்த்தார்கள். எள்ளும், கொள்ளும் முகத்தில் வெடிக்க நின்று கொண்டிருந்தாள் ரஞ்சனி.
“செம கோபமா மாப்பிள்ளை?”
“ஆமா மச்சான், தருண் இவ்வளவு நேரமும் உங்களைத்தான் கேட்டுக்கிட்டே இருந்துட்டு இப்போதான் தூங்கினான். அந்தக் கோபம்.” அபியின் காதில் ஈஷ்வரன் முணுமுணுக்க,
“ஷ்…” என்றான் அபி.
ரஞ்சனியின் கணவர் ஈஷ்வரன் ஒரு டாக்டர். பெரிங்குளத்தில் நல்ல செல்வாக்கான குடும்பம் அவர்களது. ஒற்றைப் பையன் வேறு. ஈஷ்வரனின் அப்பா, ஈஷ்வர் படித்துக்கொண்டிருக்கும் போதே மாரடைப்பால் காலமானார். சொத்து, சுகங்களுக்குக் குறைவில்லாததால் தந்தை இல்லையே என்ற குறையைத் தவிர வேறெதுவும் பெரிதாகத் தெரியவில்லை. தாயும் கடந்த ஆண்டுதான் தவறி இருந்தார். மிகவும் நல்ல மனிதர். அபிமன்யு விடம் எந்த பந்தாவும் காட்டாமல் இயல்பாகப் பழகுவார்.
பேரனை அவர்கள் ரூமில் தூங்கச் செய்துவிட்டு அப்போதுதான் வெளியே வந்தார் சீமா. அபியைக் கண்டவுடன் அவர் முகம் மலர்ந்து போனது.
“வந்துட்டயா அபி, உன்னால மாப்பிள்ளையும் சாப்பிடாம காத்துக்கிட்டு இருக்காங்க. சீக்கிரமா வந்து சாப்பிடுப்பா, வாங்க மாப்பிள்ளை.” சொல்லிவிட்டு டைனிங் டேபிளை நோக்கிப் போனார்.
“அம்மா, அண்ணா இப்பிடியெல்லாம் நடந்துக்கிறதுக்கு காரணமே நீங்கதான். ஒரு வார்த்தை என்ன ஏதுன்னு கேக்க மாட்டீங்களா?” கோபமாக வந்தது ரஞ்சனியின் குரல். மகளின் கேள்வியில் நியாயம் இருப்பது புரிந்தாலும், களைத்து வீடு வந்திருக்கும் பிள்ளையை நிற்க வைத்துக் கேள்வி கேட்க அந்தத் தாய் மனது ஒப்பவில்லை.
“ரஞ்சிம்மா, சாப்பிட்டதுக்கு அப்புறமா அண்ணாவை எவ்வளவு வேணும்னாலும் திட்டுடா. முதல்ல சப்பாட்டைப் போடும்மா.” சீமாவின் குரலில் அத்தனை கெஞ்சல் இருந்தது.
“எக்கேடாவது கெட்டுப் போங்க. எனக்கென்ன வந்துது. உங்க வயசுல இருக்கிற பசங்கெல்லாம் பிள்ளை குட்டின்னு ஆகிட்டாங்க. இங்க மட்டும் பிள்ளையார் ஆத்தங்கரையில உக்காந்த மாதிரி திரியுறாங்க. இதையெல்லாம் தட்டிக்கேக்க இந்த வீட்டுல இருக்கிற பெரிய மனுஷங்களுக்கு நேரமில்லை.” கை தன்பாட்டில் உணவைப் பரிமாறிக் கொண்டிருக்க, வாய் ஓயாமல் புலம்பியது. அபியும், ஈஷ்வரும் சத்தம் போடாமல் புன்னகைத்துக் கொண்டார்கள்.
சாப்பிட்டு முடிக்கவும் ஆண்கள் இருவரும் வீட்டிற்கு முன்னால் இருக்கும் தோட்டத்தில் சற்று நேரம் நடந்தார்கள்.
“அபி.”
“சொல்லுங்க ஈஷ்வர்.” தனிமையில் இருவரும் இப்படி மனம் விட்டுப் பேசுவது வழமை.
“மாமாவோட ரிப்போர்ட்டை இப்போதான் பாத்தேன். அது சம்பந்தமா டக்டர்ஸ் ஏதாவது சொன்னாங்களா?” ஈஷ்வரனின் கேள்வியில் அபியிடமிருந்து ஒரு பெருமூச்சு கிளம்பியது.
“சொன்னாங்க ஈஷ்வர், ஹார்ட் ஃபங்ஷன் கொஞ்சம் குறைஞ்சிருக்குன்னு சொன்னாங்க.”
“அபி, இதுல நீங்க வொர்ரி பண்ணிக்க ஒன்னுமே இல்லை. கொஞ்சம் கவனமா பாத்துக்கனும். ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ண விடாதீங்க, அவ்வளவுதான்.”
“புரியுது ஈஷ்வர். அதனால்தான் இந்த மன்த் கொஞ்சம் முழி பிதுங்கிருச்சு. அப்பாவோட பிஸினஸ், நான் ஆரம்பிச்சதுன்னு எல்லாம் என் தலையிலேயே வந்து விழுந்திடுச்சு. பாவம் தாத்தா, இந்த வயசுல அவராப் புரிஞ்சுக்கிட்டு வந்து ஹெல்ப் பண்ணுறார்.” சொல்லிக்கொண்டு போனவனின் தோளில் அனுசரணையாகத் தட்டிக் கொடுத்தார் ஈஷ்வரன்.
“இது போதாததுக்கு அந்த ராஜேந்திரனும், அவர் பையனும் ஒரு பக்கம் கூத்தடிக்குறாங்க.”
“என்னாச்சு அபி?”
“அவங்களோட கஸ்டமர் ஒருத்தர் அப்பா பக்கம் சாஞ்சுட்டார். கேட்டதுக்கு க்வாலிட்டி பத்தலைன்னு சொல்லியிருக்கார். அவனுங்க என்னடான்னா நாமதான் ஏதோ பண்ணிட்டோம்னு குதிக்குறானுங்க.”
“கஸ்டமர் பெரிய புள்ளியோ?”
“ம்… ரொம்பவே. அதுக்கு எதுக்கு ஈஷ்வர் நம்மளை வம்பிழுக்குறானுங்க அப்பனும், மகனும்?”
“கவனம் அபி. அப்பனும், புள்ளையும் பழி, பாவத்துக்கு அஞ்சாதவனுங்க. கொஞ்சம் கெயார்ஃபுல்லா இருங்க.”
“அடப்போங்க ஈஷ்வர். எங்கிட்ட நல்லா இருந்தா மட்டும் தான் இந்த அபி நல்லவன். இல்லைன்னா என்னோட முகத்தை நானும் காட்டுவேன்.” அசால்ட்டாகச் சொன்னாலும் அந்தக் குரலில் இருந்த உறுதியை ஈஷ்வரால் புரிந்து கொள்ள முடிந்தது.
“ஓ… அதான் ஸ்ட்ரெஸ் ரிலீஃபுக்கு பப்பா?” கண்சிமிட்டியபடி கேட்டார் ஈஷ்வரன்.
“ஹா…ஹா… எப்போதாவது இருந்துட்டுப் போறதுதான் ஈஷ்வர். ஆனா சரியா அன்னைக்கு உங்க பொண்டாட்டிக்கிட்ட மாட்டிக்குவேன். எப்பிடித்தான் அவளுக்கு மூக்குல வேர்க்குமோ!” அங்கலாய்த்தவனைப் பார்த்துச் சிரித்தார் ஈஷ்வரன்.
“உங்க மேல ரொம்பவே பிரியம் இருக்கு அபி. ஒரு தேவதையைக் கண்டுபிடிச்சு உங்களுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கனும்கிறதுதான் அவளோட கனவே.” ஈஷ்வரன் சொல்லவும், அத்தனை பெருமை தெரிந்தது அபியின் முகத்தில்.
“ரெண்டு பேருக்கும் தூங்குற ஐடியா இருக்கா?” இருவரையும் கலைத்தது ரஞ்சனியின் குரல். விடியல் வைத்திருக்கும் விபரீதம் அறியாமல் உள்ளே போனார்கள் அபியும், ஈஷ்வரும்.