Mayavan-5

Mayavan-5

அத்தியாயம் 5

பெயர் அறியா காரிகையின் நிலை அறிய வேண்டி இவர்கள் காத்திருக்க, அவளோ கண்விழித்ததும் சஞ்சுவை அங்கிள் என விளித்தாள். அதை கேட்டு கிண்டல் செய்த ஜானகியும், அபிஜித்தும் அடுத்து அவள் கூறிய பதிலில் அதிர்ந்திடத்தான் செய்தனர். சஞ்சயோ அவளை ஆராய்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தான்.

அவர்கள் அதிர்ந்து விழித்துக் கொண்டிருப்பதை கண்டுகொள்ளாமல் ஜானகியின் தோளில் சாய்ந்து கொண்டு கையில் இருந்த வெய்ன் பிளாண்டை யே திருப்பி திருப்பி பார்த்துக் கொண்டிருந்தாள். அபிஜித் குழப்பத்துடன் சஞ்சுவை பார்க்க அவனும் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

விழிகளில் பல கேள்விகள் தொக்கி நின்றன. ஜானகி அவளை தன்னிலிருந்து பிரித்து கலைந்த முகத்தில் பரவியிருந்த முடிகளை எடுத்து காதோரம் சொருகிவிட்டவாறே “உங்களுக்கு எத்தன வயசாகுது” என அவள் மனநிலை அறிய வேண்டி குழந்தைகளிடம் கேட்பதை போல தாடையை பிடித்து கேட்க,

உடனே யோசனை செய்வது போல் பாவனை செய்தவள் ” ம்.. சிக்ஸ் இயர்ஸ் ஆகுது சொன்னாங்க ” என ஆறு விரல்களை காட்டியவாறு கூறினாள். “சொன்னாங்களா யார் சொன்னாங்க?” என ஜானகி கேட்க, “அது…அது தெரியலயே! யாரோ சொன்னாங்க” அனைவருக்கும் ஐயோ என்று ஆனது. தலையில் கை வைக்காத குறைதான் . ஜானகி திரும்பி மகனையும் அபிஜித்தையும் பார்க்க அவர்களும் ஜானகியைதான் பார்த்தனர்.

மீண்டும் அவளிடம் திரும்பியவர் “குட் கேர்ள்.. சரி அப்பா, அம்மா எங்க இருக்காங்க, உங்க வீடு எங்க இருக்குன்னு தெரியுமா? ” என கேட்க, இப்போது விழிப்பது அவளது முறையானது “அப்பா, அம்மா….” என யோசனைகள் ஓட ஒரு கட்டத்திற்க்கு மேல் முடியாமல் தலை விண்விண்னென்று இடிக்க தலையை பிடித்துக் கொண்டு “டாக்டர் அங்கிள் தலை ரொம்ப வலிக்குது.. அப்பாவும் அம்மாவும் எங்க இருக்காங்க எனக்கு தெரியலயே!!, எனக்கு இப்பவே பார்க்கனும் வர சொல்லுங்க” என அழுதுக்கொண்டு சஞ்சுவையே கேட்க, அதில் கோவம் வரப்பெற்றவன் ” என்னை அங்கிள்னு கூப்பிடாதே” என கைநீட்டி எச்சரித்தான்.

அதில் பயந்து மீண்டும் ஜானகியுடன் ஒண்டியவள் மேலும் அழத்துவங்க, ஜானகியும், அபிஜித்தும் இப்போ இது ரொம்ப முக்கியமா? என சஞ்சுவை முறைத்தனர். எனக்கு இதுவும் முக்கியம் என அசராமல் நின்றிருந்தான் சஞ்சய்.

அவள் சத்தமாக அழக்கூட தெம்பில்லாமல் தேம்பி தேம்பி அழ, ஜானகி என்ன சமாதானம் கூறியும் நிறுத்தவில்லை. ஒரு கட்டத்தில் அப்படியே மயங்கி ஜானகியின் மேலேயே சாய்ந்திருந்தாள். அபிஜித் பயந்து “என்னாச்சு” என பதற, இப்போது ஜானகி நேரடியாகவே சஞ்சுவை முறைத்தபடி இருந்தார். “ஐய்யய்யோ முறைக்கறாங்களே” என ஜெர்க் ஆனாலும் தன் கெத்தை விடாமல் அவளை பரிசோதித்து “ஒண்ணுமில்ல சோர்வுல வந்த மயக்கம்தான் தூங்கி எழுந்தா சரியாகிடும்” என கூறிவிட்டு நகர, ஜானகி அவளை அலுங்காமல் படுக்க வைத்துவிட்டு வெளியே செல்லலாம் என கண்காட்ட அனைவரும் வெளியே வந்தனர்.

கடைசியாக தேங்கிய அபிஜித் அவளை பார்வையால் வருடினான் அழுததில் முகம் எல்லாம் சிவக்க சயனித்திருந்தவளை கண்டு “உதவி செய்ய நினைத்து இப்படி ஆகிவிட்டதே!” என மருகினான் “இனி இதை எப்படி சரிசெய்யப் போகிறேன். எதுவானாலும் எப்படியானாலும் சரிசெய்ய வேண்டும்” என்ற உறுதியுடன் அவர்களுடன் சென்றான்.

வெளியே நின்றிருந்த செவிலியிடம் அந்த பெண்ணை கவனமாக பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு ஜானகியின் அறைக்கு சென்றனர். அபி சோர்வாக இருக்கையில் அமர்ந்தவன் “இப்ப என்ன பண்றது மா, யாருன்னு தெரிஞ்சாலாவது பேரன்ட்ஸ்ஸ வர சொல்லலாம். ஆனா இப்ப அதுவும் முடியாது” என அபிஜித் நிலமையை எடுத்துரைக்க, ஜானகியோ

“ஏன் சஞ்சு அப்படி பிஹேவ் பண்ண, உங்கிட்ட இதை எதிர்பாக்கல. உங்கப்பா இதை பார்த்திருந்தா ரொம்ப வருத்தப்பட்டிருப்பாரு.. இதைதான் நாங்க உனக்கு சொல்லிகொடுத்து வளர்த்தோமா? ஒரு டாக்டருக்கு பொறுமை ரொம்பவே அவசியம். அதுவும் அந்த பொண்ணு எந்த மாதிரி நிலமைல இருக்கா இப்ப போய் அவள சத்தம் போடற.” என தாயாய் மகனிடம் தவறை சுட்டிக் காட்டியவர், “டாக்டர் சஞ்சய் இப்படி நடந்துக்கறது இதுவே கடைசியா இருக்கனும். என் மாமியார் பேர்ல என்னோட கணவர் ஆரம்பித்த இந்த ஹாஸ்பிட்டலோட ரெபுடேஷன் எனக்கு ரொம்பவே முக்கியம் இதுபோல இன்னொரு முறை நடந்தா ஐ வில் டேக் சிவியர் ஆக்சன்” என மருத்துவமனையின் உரிமையாளராய் கண்டிக்கவும் தவறவில்லை.

சஞ்சுவும் தன் தவறை உணர்ந்தவன் “சாரி மேடம் இனி இந்த மாதிரி தவறு நடக்காது. இட்ஸ் அ ப்ராமிஸ்” என கூறியவன் விடுவிடுவென வெளியே சென்று விட்டான். அபிஜித் அவன் சென்றதையே கவலையுடன் பார்க்க,

ஒரு அன்னையாய் அவனை அறிந்தவர் “அவன பத்தி கவலைபடாத அபி, தலைல அடிபட்டதால அந்த பொண்ணுக்கு தன்னோட சின்ன வயசு ஞாபகங்கள் தான் இருக்குது அதுவும் முழுசா இல்லாம கொஞ்சம் கொஞ்சம்தான் ஞாபகம் இருக்கு. இது ஒரு விதமான அம்னீசியா.” “சரி பண்ணிடலாம்ல” ஒரு எதிர்பார்ப்புடன் வினவ, “மூளை நரம்பியல் ஸ்பெஷலிஸ்ட்” மிஸ்டர். சார்லஸ்” இந்தியாலதான் இப்ப இருக்காரு…. அவர்கிட்ட நிலமைய எடுத்துசொல்லி எப்படியாவது இங்க வரவழைக்கலாம். லெட்ஸ் ஹோப் ஃபார் தி பெஸ்ட்” என அவனிடம் ஆறுதல் கூறினார்.

“சரி மா நான் சஞ்சுவ பார்த்துட்டு கெளம்பறேன். காலைல வரேன். அந்த பொண்ண பாத்துக்குங்க. ஆனாலும் நீங்க சஞ்சுவ ரொம்ப திட்டிட்டீங்க ” என ஆதங்கபட்டவனிடம்.

“போடா..போடா அந்த குழந்தை எங்கயாவது நின்னு கண்ண கசக்கிட்டு இருக்கும் பால் வாங்கி கொடுத்து சமாதானம் பண்ணி அனுப்பிட்டு போ” என கிண்டலாக கூறியதை கேட்டதும் பக்கெனச் சிரித்தவன்

“ம்மா நீங்க இருக்கீங்களே.. அவன்கிட்ட சொல்றேன் பாருங்க”

“ஆமா அவன பார்த்து அப்படியே பயந்து நடுங்கறாங்க, அவன முன்ன அழாம வரச்சொல்லு அழுதா அவன் முகத்த பாக்க சகிக்காது” என விடாமல் வம்பிழுக்க அந்த சூழல் இறுக்கம் கலைந்தது. அவனும் புன்னகையுடன் விடைபெற வாசல் கதவு வரை சென்றவனை “அபி” என அழைத்தவர், “உண்மைய சொல்லனும்னா அந்த பொண்ணு குழந்தையாட்டம்தான் இருக்கா..என்ன கொஞ்சம் பெரிய சைஸ் குழந்தை” என கூற அவன் சிரித்துக் கொண்டே சென்றுவிட்டான்.

இதுதான் ஜானகி பாசமும் கண்டிப்பும் கலந்து கொடுக்கும் அருமையான தாய், திறமையான மருத்துவர். கணவர் இறந்த பின் மருத்துவமனையை திறம்பட நிர்வகிக்கும் நிர்வாகி.

அங்கே கார்டனில் சஞ்சுவும் ஜானகி கூறியது போல அழாத குறையாக தான் அமர்ந்திருந்தான். அவன் எங்கே என விசாரித்துக் கொண்டு அபிஜித் கார்டனை அடைய, அங்கே இருக்கும் நம்பிக்கை அளிக்கும் தும்பிக்கை ஆண்டவனிடம் புலம்பிக் கொண்டிருந்தான்.

ஒரு சிரிப்புடனே அவனிடம் சென்றவன் கேட்டது ” கடவுளே அந்த பொண்ணு மறுபடியும் என்னை அங்கிள்னு கூப்பிட கூடாது..அதுக்கு என்ன பண்ணனும் ஒரு வழிய காட்டுங்க” என வேண்டியதைதான் அதை கேட்டதும் “இவன” என கடுப்புடன் அவனிடம் சென்றவன் நல்ல வார்த்தைகளால் வசைமாறி பொழிந்துவிட்டு காதை அடைத்துக்கொண்டு நின்றவனிடம் கையை எடுத்துவிட்டு “போ.. அம்மா கூப்டாங்க..ஹான் அப்பறம் அழாம வருவியாம் இல்லானா உன் முகத்த பார்க்க சகிக்காதாம்” வாரிவிட்டு செல்ல.

காதில் விரலை விட்டு ஆட்டியவன் “போடா போ.. ஒரு குழந்த புள்ளய போய் எல்லாரும் மாத்தி மாத்தி திட்டவா செய்யறீங்க…உங்கள…உங்கள” “ம் அடுத்து சொல்லுடா என் பொட்டேடோ” என மனசாட்சி அதுபாட்டுக்கு வார, “நத்திங்..ஒண்ணுமில்ல” என தோளை குலுக்கியவன் ஹாஸ்பிடலின் உள்ளே சென்றான்.

வீட்டிற்க்கு சென்ற அபிஜித் குளித்து முடித்து அவனே இலகுவான சமையலாக தயார் செய்தான். அவனுடைய தாத்தா, பாட்டி வருவதற்கு இன்னும் ஒரு வாரம் ஆகும். அவர்கள் அவன் தாயின் பெற்றோர்கள். அவர்களுடன் தான் பொன்னியம்மாவும் வருவார். அவர் அந்த வீட்டில் முப்பது வருடத்திற்கும் மேலாக சமையல் செய்பவராக இருக்கிறார்.

இவன் வெளியூர் செல்லும் போது அவர்களும் இவனுடனே ஜாகையை மாற்றிக் கொள்வர். இப்போது தன் மகளின் வீட்டில் அதாவது அபிஜித்தின் அன்னையின் வீட்டில் சில நாட்கள் தங்கிவிட்டு பிறகு வருவதாய் கூறிட, பொன்னம்மாவிற்கும் விடுமுறை அளித்து அவர்களுடன் வந்தால் போதும் என கூறிவிட்டான். அவர் தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார். இவனை “குட்டிப்பா” என அழைக்கும் பாசமான பெண்மணி.

உண்டு முடித்தவன் சிறிது நேரம் செய்திகளை பார்த்துவிட்டு படுக்கையில் விழுந்தான். ஏதேதோ எண்ணங்கள் அலையலையாய் தோன்ற கடைசியில் அது நின்றது பெண்ணவளிடத்தில் அவளின் குழந்தைதனமான முகமும் பேச்சும் சஞ்சுவை அங்கிள் என அழைத்ததும், இப்போது நினைத்தாலும் மெல்லிய புன்னகை இதழ்களில். கூடவே தன்னை எப்படி அழைப்பாள் என்ற குறுகுறுப்பு வேறு. முதல் முறையாக நெஞ்சம் எதிர்பார்ப்பு என்னும் இசையை மீட்ட தொடங்கியது அதில் சுகமாய் நனைந்தவன் அந்த இனிமையுடனே துயில் தழுவினான்.

காலையில் கதிரவன் தன் கதிர்களால் பூமியை அரவணைக்க, பறவைகள் சுறுசுறுப்பாய் இசை மீட்டிக் கொண்டிருந்தன. அபிஜித்தின் விடியல் எப்போதும் போல யோகா, உடற்பயிற்சி, தியானம் இவற்றோடு தொடங்க கூடுதலாய் பெண்ணவளின் நினைவும். வியர்வை முத்து முத்தாய் அவன் கட்டான தேகத்தை அலங்கரிக்க, அவனை தழுவும் மெல்லிய தென்றலாய் அவள் ஞாபகம். அந்த குளுமையான மனநிலையுடனே விரைந்து தயாராகியவன் மருத்துவமனை சென்றான்.

தான் எதற்கு இத்தனை காலையில் அவளை காண துடிக்கிறோம் என மனம் கேள்வி கேட்க, அடங்கியிரு மனமே என அடக்கியவன் அவளை காணும் ஆவலுடன் அறைக்கதவை திறக்க அங்கு அவன் கண்ட காட்சி புருவத்தை உயர்த்த வைத்தது.

சஞ்சு அவளுக்கு ஏதோ சொல்லிகொண்டிருக்க கண்களை மூடி புன்னகையுடன் அமர்ந்திருந்தாள். தலையில் கட்டு போட்டிருக்க, வேறு உடை மாற்றப்பட்டிருந்தது. பெட்டில் சாய்ந்து அமர்ந்திருந்தாள். குழந்தைகளின் புன்னகை ஒரு வரம். ஏனெனில் அவர்களுக்கு உதட்டளவில் சிரிக்க தெரியாது. மனதளவில் ஆத்மார்த்தமாக சிரிக்கும் புன்னகை. பார்த்தவுடன் நம்மையும் அறியாமல் இதழ் விரிய வைக்கும் புன்னகை. அபி மட்டும் விதிவிலக்கா என்ன? இவனும் புன்னகையுடனே அருகில் செல்ல அவளின் சற்று தெளிந்த முகம் கண்டு நிம்மதியடைந்தான்.

“குட்மார்னிங்” என காலை வணக்கத்தோடு ஆரம்பித்தான். அவனது சத்தத்தில் கலைந்த சஞ்சுவும் “குட்மா” என பாதியிலேயே நிறுத்தியவன் “நேத்து என்னை எவ்வளவு திட்டினாங்க ரெண்டு பேரும்” என பொய்க்கோபம் கொண்டு அமைதியாகிவிட்டான். அதோடல்லாமல் “குட்டிமா இவன் பேட் பாய் இவன் கூட பேசாத” என அவளிடம் கூற வேறு செய்தான்.

அப்போது கண்களை திறந்து பார்த்தவளும் அபிஜித்தை பார்த்து ஒரு வெட்கப்புன்னகை புரிந்தாள். அது குழந்தை ஒருவரை கண்டால் தன் அன்னையின் தோளில் முகம் புதைக்கும்போது வருமே அந்த அழகு புன்னகை. அதில் அபிஜித் டோட்டல் சரண்டர் அவளிடத்தில். குழந்தையே அழகுதான், ஆனால் குமரியின் வடிவில் குழந்தை எனும் போது இன்னும் பேரழகாக தோன்றியது.

அவனை சிறிது நேரம் அளவிட்டவள்… “நோ…சஞ்சுண்ணா அவர் பார்க்க குட் பாயாதான் இருக்காரு” என அவனது பாலை பவுண்டரிக்கு விளாச , அவளது சஞ்சுண்ணா என்ற அழைப்பில் “பார்டா” என ஒற்றை புருவத்தை உயர்த்திய அபிஜித் தன்னை நல்லவன் என கூறியதில் உவகையடைந்தான்.

ஒரு சேய்ரை இழுத்து போட்டு அமர்ந்தவன். “ஹாய் இப்ப எப்படி இருக்கு” “ஐ ஏம் ஃபைன் அங்……” என கூற வந்தவள் “உங்கள எப்படி கூப்பிட” என அவனிடமே கேட்டாள். அங்கிள் என கூறிவிடுவாளோ என பதறியவன் அவளது கேள்வியில் ஆசுவாசமடைந்து “உங்களுக்கு எப்படி கூப்பிட தோணுது” அவள் சஞ்சுவையும் அவனையும் மாறிமாறி பார்க்க, “சரி டாக்டர ஏன் அப்ப அங்கிள்னு கூப்டிட்டு, இப்ப சஞ்சுண்ணான்னு கூப்பிடறீங்க” ஏன் மாற்றி அழைக்கிறாள் என அவனுக்கு தெரிய வேண்டியிருந்தது.

“அதுவா! இவங்களுக்கு என்னோட கொஞ்சம்தான் வயசு அதிகமாம். இதுவரை யாருமே அண்ணானு கூப்பிடலயாம் ” என சோகம்போல கூறியவள் “அதனால அண்ணா கூப்பிட சொன்னாங்களா நான்தான் பேரையும் சேர்த்து சஞ்சுண்ணா கூப்டேன். நல்லாருக்கா” என மெல்லிய குரலில் வினவ சஞ்சயோ எப்படி என்னும் விதமாக காலரை தூக்கிவிட்டுக் கொண்டான். அவனை நோக்கி உதட்டை பிதுக்கி கட்டை விரலை உயர்த்தி காட்டியவன். “சரி என்னை எப்படி கூப்பிடுவீங்க” யாரென்று அறியா பெண்ணிடம் தான் ஏன் இத்தனை ஆர்வமாக வினவுகிறோம் என அக்கனம் அவன் நினைக்கவில்லை. ஒரு ஆவல் மட்டுமே அவனிடத்தில். “ம்ம்ம்ம்…” என தன் யோசனையை சுழல விட்டவள் “உங்க பேர் என்ன?” “அபிஜித்” விழிகளோ அவளது ஒவ்வொரு பாவனையையும் ரசித்தது. “சஞ்சுண்ணா நீங்க எப்படி கூப்பிடுவீங்க” என அவனையும் பெவிலியனுக்குள் இழுக்க “நான் அபி ன்னு கூப்பிடுவேன்” “ஓ….” வெகுநேர யோசனைக்கு பின் “அபிஜித்…அபி…..ஜித்… ஜித்… ஜித்து…. ஹான் ஜித்து இது நல்லாருக்கா”

சிறு திடுக்கிடல் அவன் உள்ளத்தில், பேரலையாய் சில நினைவுகள் கண்முன் விரிந்தது “ஜித்து கண்ணா எங்க இருக்கீங்க” “ம்மா கண்டுபுடி” “ஜித்து குட்டி எங்க இருக்கீங்கன்னு தெரியலயே” “நீங்க தோத்துட்டீங்க” என கலகலத்து சிரித்த சிறுவனின் குரல் காதுக்குள் ரீங்காரம் இட்டது கண்களை இறுக மூடிக் கொண்டான். உள்ளம் வலித்தாலும் அதிலும் சற்று இதம் காணவும் செய்தான். “ஜித்து” என மெல்லிய குரல் அவனை மீட்க “இது ஓகேவா” என எதிர்பார்ப்புடன் இரு கருவிழிகளும் அவனை பார்க்க தலை தானாக சரியென்றது. அந்நொடி இதயத்திற்க்கு அருகில் அவள் வந்ததை உணர்ந்தான். ” ஃப்ரண்ட்ஸ்” என அவள் நட்புக் கரம் நீட்ட இவனும் கரம் இணைத்தான். அந்த வலிமையான கையினுள் இவளது மலர் போன்ற கரம் அழகாய் அடங்கியது.

“சரி உங்க பேர் என்ன? நான் உங்கள எப்படி கூப்பிடறது? அவன் குரல் ஏன் இப்படி குழைந்து வருகிறதோ? அவனை பாவமாக பார்த்தவள் தெரியாது என்னும் விதமாக உதட்டை பிதுக்கி பாவமாக பார்க்க…. உப்பிய கன்னங்களும், பிதுங்கிய உதடும், லேசாக கலங்கிய கண்களும் என அள்ளிகொள்ளலாம் போன்ற தோற்றம்… “ச்சோ ச்வீட்” என கன்னம் கிள்ளியவன் “தெரியலன்னா என்ன நாமளே பேர் வச்சிடலாம் சரியா” என தன்னை மீறி கொஞ்சிக் கொண்டிருந்தான் அபிஜித்.

“ஸ் ஆ வலிக்குது ஜித்து” கன்னம் பற்ற அப்போதுதான் தான் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என உணர்ந்தவன் கைகளை எடுத்து குற்றவுணர்வுடன் சஞ்சுவை பார்க்க அவனோ சிரித்து ரசித்து இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் தன்னை தவறாக நினைக்கவில்லை என்றாலும் விளக்கம் அளிக்க எண்ணி “சஞ்சு….” அவன் தயக்கத்தை புரிந்து கொண்ட சஞ்சு “ம்ச் அபி அவ குழந்தைடா” நான் சரியாக புரிந்து கொண்டேன் என்னும் மறைபொருள் அதில் தொக்கி நின்றது.

என்ன பெயர் வைப்பது என மண்டையை குடைந்து “பாப்பு” என்னும் பெயர் முடிவு செய்யப்பட்டது. அடுத்தடுத்த நாட்களில் ஜித்துவும் அவன் பாப்புவும் இன்னும் ஆழமான வட்டத்திற்குள் இனைந்து கொண்டனர். தினமும் அவள் கண்விழிக்கையில் வருபவன் அவளை காலை கடன்களை முடிக்க உதவி செய்து உண்ண வைத்துவிட்டு அலுவலகம் சென்று விடுவான். ஜானகி நானே பார்த்துக் கொள்வதாக எவ்வளவு கூறியும் அவன் அனுமதிக்கவில்லை. ஒரு தாயாகவே மாறி பார்த்து கொண்டான். அது ஏன் என்று அவனே அறியான். ஆனால் பிடித்திருந்தது.

மீண்டும் மாலை அவளுடன் சிறிது நேரம் செலவழித்து அவளுக்கு கதைகள் கூறி உறங்க வைத்தே செல்வான். மருத்துவமனையே இந்த தாயுமானவனையும், இந்த வளர்ந்த குழந்தையையும் ஆச்சர்யத்துடன் பார்த்தது. சஞ்சுவை அண்ணா என்றழைப்பவள், ஜானகியை அம்மா என அழைத்து பழகினாள். ஆனால் யாருடன் இருந்தாலும் அவள் தேடுவது அவள் ஜித்துவையே!

இதுவரை பாசம் வைக்க ஆளில்லாமல் இருந்தவன் இன்று சேமித்து வைத்த அத்தனை நேசத்தையும் மாரி போல் பொழிய, அனைத்தையும் மறந்த அவள் நினைவில் நின்றது ஜித்து..ஜித்து ..ஜித்து மட்டுமே. அள்ள அள்ள குறையா பாசத்துடன் அவன், அவன் காலை சுற்றும் பூனைக்குட்டியாய் அவள் இந்த நிலை நீடிக்குமா?

error: Content is protected !!