Mayavan 19

Mayavan 19

மாயவனின் மயிலிறகே 19

மும்பை நகரின் மேல்தட்டு மக்கள் வசிக்கும் அந்த சாலையில், ஒட்டிப் பிறந்த இரட்டையர்களைப் போல ஒரே மாதிரியான இரு வீடுகள் கம்பீரமாக நின்றன.

அந்த காலை நேரத்தில் ஒரு வீட்டில் பூஜை மணி ஓசை கேட்க, மற்றதோ நிசப்தமாய் இருந்தது. அமிர்தா வசீகரமாய் நின்றிருந்த மாயக்கண்ணனுக்கு துதிகள் பாடி, பூஜை செய்து அங்கு கண்களை முடி அமர்ந்திருந்த சீனிவாசன், ஷௌரியாவிடம் ஆரத்தி காட்டினார்.

அவர்களும் எடுத்துக்கொண்ட பின், வெளியே வர அமிர்தாவின் கண்கள் ஒருமுறை மாடியைப் பார்த்தது, “ஆம்பிளப் புள்ள காலைல பூஜைக்கு வந்துடுது… இந்தக் கழுதை எழுந்து வர எட்டு மணியாகுது. அப்பறம் காலேஜுக்கு லேட்டுனு படுத்தி எடுக்கறது… எல்லாம் அவங்கப்பா கொடுக்கற செல்லம்” என தன் கணவனையும் ஒரு முறை முறைக்க தனக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என, பவ்யமாய் நாளிதழைப் புரட்டிக் கொண்டிருந்தார் சீனிவாசன்.

ஷௌரியாவோ சிரிப்புடன், “அத்தை, சேம் டைலாக் கேட்டு கேட்டு அப்பாக்கும் மகளுக்கும் சலிச்சு போயிருக்கும். அதனால நாளைக்கு வேற மாதிரி திட்டுங்க…”

சீனிவாசனோ, ‘ஏன்டா இப்படி’ என ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் நாளிதழை உயர்த்திப் பிடித்து படிக்க ஆரம்பித்துவிட்டார்.

“எல்லாம் என் நேரம்” என முனுமுனுத்தவாறே அமிர்தா காபி கலக்க சமையலறை செல்ல, ஷௌரியா அவர் பின்னோடேச் சென்றான்.

சீனிவாசனும் அமிர்தாவும் திருமணம் முடித்து நண்பனின் உதவியுடன் மும்பை வந்தனர். அங்கு சீனிவாசனுக்கு வேலையும் ஏற்பாடுச் செய்யப்பட்டிருக்க, சற்றுச் சிரமமில்லாமல் வாழ்க்கையை ஆரம்பித்தனர் புதுமண தம்பதிகள்.

இருவரின் மனதிலும் குடும்பத்தைத் தவிக்க விட்டு வந்த குற்றவுணர்ச்சி அவ்வப்போது எட்டிப்பார்க்கத்தான் செய்தது. அமிர்தாவோ செயலை செய்யும் வரை அதன் வீரியம் உணராதவர், பின் பாசமிக்க அண்ணனை எண்ணி அழுகையிலேயே கரைந்தார். அப்பொழுதெல்லாம் வாசன், தான் அவசரப்பட்டுவிட்டோமோ! அமிர்தாவே கூறியிருந்தாலும் சற்று நிதானித்திருந்தால் இந்த நிலை வந்திருக்காதோ! என யோசித்து, பின் நிதர்சனத்தை உணர்ந்து அவரை தேற்றுவார்.

இதற்கிடையில் நண்பர்கள் மூலம் தன் தமக்கையின் திருமண விபரம் தெரியவர தன்னால்தான் என அதிர்ந்தாலும், சந்திரனை பற்றி கேள்வியுற்ற வரையில் அக்காவிற்கு ஏற்ற வரன்தான் என சற்று ஆசுவாசம் அடைந்தார். அமிர்தாவும் அண்ணனின் திருமணச் செய்தியில் இனி அண்ணனின் வாழ்க்கையை எண்ணிக் கவலைக் கொள்ளத் தேவையில்லை என நிம்மதி அடைந்தார்.

இந்நிலையில் அலுவலகத்தில் உடன் வேலைச் செய்த அமர்நாத்திடம் நல்ல பழக்கம் ஏற்பட்டது சீனிவாசனுக்கு. அவருக்கும் அப்போதுதான் திருமணமாகியிருக்க, இரு தம்பதிகளும் நட்புடன் பழக ஆரம்பித்தனர்.

ஒரு வருடம் செல்ல அமர்நாத்தின் மனைவிக்கு ஷௌரியா பிறந்தான். இரு குடும்பத்திற்கும் ஒரே செல்லப் பிள்ளையாகிப்போனான்.

நான்கு வருடங்கள் கழித்தே அமிர்தா குழந்தை உண்டாக, சீனிவாசன் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்தார். இப்பொழுதாவது நம்முடைய வீட்டிற்குச் செல்லலாம் மன்னிப்பு வேண்டலாம் என்றதற்கு அமிர்தா ஒப்புக்கொள்ளவேயில்லை.

எப்படி அவர்கள் முகத்தில் விழிப்பது! என்ற குற்றவுணர்ச்சி அவரை வாட்ட சீனிவாசனின் எண்ணத்தை வேண்டாம் என மறுத்துவிட்டார். நாட்கள் அதன் போக்கில் செல்ல அமிர்தாவிற்கு அழகிய பெண்குழந்தை பிறந்தது. மதுமிளா எனப் பெயர்சூட்டி சீராட்டி வளர்த்தனர்.

அடுத்த சில வருடங்களில் ஷௌரியாவின் தாய் மீண்டும் கரு உண்டாக ஷௌரியாவும் அவன் குட்டி சிநேகிதி மதுமிளாவும் ஆவலுடன் புதுவரவை எதிர்பார்க்க, ஆனால் விதி வயிற்றுக்குழந்தையுடன் அவர் இறக்கும்படி ஆயிற்று.

அமர்நாத் ஒரே நேரத்தில் இரு உயிர்களை பறிகொடுத்ததில் சோகத்தில் மூழ்க, ஷௌரியாவைக் கவனிக்கும் பொறுப்பை அமிர்தா ஏற்றுக் கொண்டார்.

தன் உடன்பிறப்புடன் தாயும் அவனைப் பிரிந்ததில் ஷௌரியா அழுதே கரைந்தான். அப்பொழுதெல்லாம் மதுமிளாதான் அவனுக்கு ஒரே ஆறுதல்.

ஏற்கனவே பொம்மையைப் போல் இருக்கும் குட்டிப் பெண்ணை பிடிக்கும் என்றாலும் “ஷ்ஷ்ஷாரி… நோ” என அவன் விழிநீரை துடைத்து, உணவு ஊட்டும் குட்டிப் பெண் இப்போது அவனுக்கு உயிராகி போனாள்.

அதன் பிறகு ஷௌரியா வளர்ந்ததெல்லாம் அமிர்தாவிடம்தான். மது அதிகம் தமிழிலேயே பேசுவதால் இவனும் சரளமாக பேசக் கற்றுக் கொண்டான். அவர்களுடன் தமிழிலேயே உரையாடுவான்.

அமர்நாத்தும் சீனிவாசனும் தனியாக தொழில் ஆரம்பித்து முன்னேற ஆரம்பித்தனர். ஆரம்பத்தில் சில சறுக்கல்களைக் கண்டாலும் மீண்டும் மீண்டும் முயன்று வெற்றி பெற ஆரம்பித்தனர்.

வருடங்கள் கடக்க, தொழில் நல்ல முன்னேற்றம் அடைய, பக்கத்து பக்கத்து இடங்களை வாங்கி ஒன்றே போல் இருவீடுகளை கட்டி வசிக்கத் தொடங்கினர். அமர்நாத் அடிக்கடி வெளிநாடு செல்லுவதால் ஷௌரியா சீனிவாசனின் வீட்டிலேயேத் தங்கிவிடுவான்.

ஷௌரியா, மதுமிளா இருவரும் ஒரே பள்ளியில் படிக்க, சேட்டைக்காரியான மதுவை சமாளிக்கவே போதும் போதுமென்று ஆகிவிடும் அவனுக்கு. அவள் ஏதாவது குறும்பு செய்தால் இவனை அழைத்துதான் புகார் கூறுவர். ஆனால் அந்த புகார் இவனைத் தாண்டி வீடுவரை வராது.

இப்படியாக கல்லூரி படிப்பு வரை வந்தாயிற்று. முடிந்தவரை ஷௌரியாவே கல்லூரிக்கு அழைத்து செல்வான். பார்க்க சேட்டைக்காரியாய் இருந்தாலும் அவனின் “டாலு” மிகுந்த பயந்தச் சுபாவம் கொண்ட பெண்.

அதுவும் மற்றவர்கள் இவள் கண்முன் துன்புறுத்தப்பட்டாளோ, அழுதார்கள் என்றாலோ அவர்களை விட இவள் உடைந்துப் போவாள்.

இதை அறிந்த குடும்பத்தினரும் அவளை தேற்ற, எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிய, அவளை தாங்கும் தூண்களாய் இருந்தனர்.

ஷௌரியா தனக்கான காபியுடன் இன்னொரு கப்பையும் எடுத்துவர, அதைப்பார்த்த சீனிவாசன் இன்றாவது இந்த கப்பை இவனிடமிருந்து வாங்கிவிட வேண்டும் என்று எண்ணியவராய், “ஷௌரி பேட்டா அதை இந்த மாமனுக்கு கொடுக்கலாமே” என கொக்கிபோட,

அவனோ அவரை ஒரு பார்வை பார்த்துக்கொண்டே, “உங்களுக்கானது அத்தை கொண்டு வருவாங்க, இது…..”

“எனக்கு… டேட் உங்களுக்கு எத்தனை தடவை சொல்றது!” எனச் செல்லமாய் முறைத்தவாறே வந்து சேர்ந்தாள் சுந்தரப்பெண்.

கால் பாதம் கூட தெரியாமல் முழுநீள உடையில் தென்றலாய் தவழ்ந்து வந்தவள், ஷௌரியாவின் கையிலிருந்தக் கப்பை வாங்கியவாறே தந்தைக்கு அழகுக் காட்டவும் செய்தாள்.

சீனிவாசனுக்குதான் மண்டை காய்ந்தது. எப்பொழுதும் நினைப்பதுதான், ‘இவன் மகள் வரும் நேரமறிந்து காபியோடு வருகிறானா? இல்லை, மகள் இவன் காபியோடு வரும் நேரமறிந்து வருகிறாளா?’ என்று.

ஆனால், அதன் ரகசியம் அவர்கள் மட்டுமே அறிந்தது. இருவரும் மற்றவரின் எண்ணத்தைப் படித்தவர்கள் போலக் கண்சிமிட்டி ஹைபை அடித்துக் கொள்ள, அந்நேரம் அமிர்தா கணவனுக்கானக் கப்போடு வந்தார்.

‘எனக்கும் காபி இருக்கு, நானும் குடிப்பேன்’ என இவர்களை மிதப்பாய் ஒரு பார்வை பார்த்தவர், அதை வாங்கி பருக அவர் முகம் அஷ்டகோணலாய் மாறவும் இருவரும் வெடித்துச் சிரித்தனர்.

“அடியே என்னடி காபில சர்க்கரை போட மறந்துட்டயா?” என காபியின் கசப்பு தொண்டையில் மிடறு மிடறாக இறங்கிய கடுகடுப்பில் மனைவியிடம் பொறிய,

“அதான் வீட்ல இருக்க சுகரெல்லாம் சேர்த்து உடம்புல போட்டுட்டு சுத்தறீங்களே… இனி உங்களுக்கு சர்க்கரை போடாதக் காபிதான்” என ஆர்டர் போட்டுவிட்டு சென்றுவிட்டார் சமையலறைக்கு.

“போடி இனி நான் காபியே குடிக்க மாட்டேன், சர்க்கரை இல்லாத காபி ஒரு காபியா?” என இரைய, “சந்தோசம் எனக்கும் ஒரு வேலை மிச்சம்” என அவர் அங்கிருந்தே குரல் கொடுக்க, மனிதன் நொந்து போனவராய் கடுங்காபியை வெறிக்க வெறிக்க பார்த்துவிட்டு ஒரே மூச்சில் அதை வாய்க்குள் ஊற்றிவிட்டு அவர் அறைக்கு ஓடிவிட்டார்.

இதை சிரிப்புடன் பார்த்திருந்தனர் இளையவர்கள்.

“அப்பறம் ஷ்ஷ்ஷௌரி… என்ன நீ இன்னும் உன் கம்பெனிக்குப் போகல” என மதுமிளா கேட்க,

” டாலு, நான் உன்னை காலேஜ்ல ட்ராப் பண்ணிட்டு, தென் கம்பெனி போவேன். வ்வொய் டா எனி ப்ராப்ளம்” நீயே வந்து காலேஜில் விட்டுட்டு போ என ஆணையிடுபவள் இன்று வேண்டாம் என்கிறாளே? என யோசனையாய் பார்த்தான்.

“ப்ராப்ளம் இல்ல ஷ்ஷ்ஷௌரி… இனி நானே போய்க்குவேன். நீ ட்ராப் பண்ண வேண்டாம்.”

“அதான் ஏன்டா?” பின்னே அவன் கவலை அவனுக்கு,

“அதுவா… சிவில் டிப்பார்ட்மெண்ட் ஒரு வாரம் டூர் போயிருக்காங்க…” இவள் படிப்பது பொறியியல் கல்லூரியில் கம்ப்யூட்டர் பிரிவு.

“ஓ.கே. அதுக்கு”

“சிவில்…சிவில் டிப்பார்ட்மெண்ட் ஷ்ஷ்ஷௌரி…”

அவள் ‘சிவில்’ என அழுத்தி கூறியதில் அரண்டவன் ‘குட்டிப் பிசாசுக்கு எப்படி தெரிஞ்சது’ என பேய்முழி முழிக்க, அவன் உயரம் பத்தாமல் சோபாவின் மேல் ஏறி அவன் தோள் மேல் கைபோட்டவாறு, “எப்படி எப்படி… தினமும் என்னை ட்ராப் பண்றதுதான் உன்னோட பிறவிப்பலன் மாதிரி நடந்துக்கறயேன்னு நானும் கொஞ்சமே கொஞ்சம் … ச்சே ஷ்ஷ்ஷௌரிக்கு நம்ம மேல பாசம் பொங்கி பொங்கி வழியுதேன்னு பாத்தா… அங்க தனியா ஒரு ட்ராக் ஓடுது” என காதைத் திருகினாள்.

“டேய்…டேய், டாலு நான் இன்னும் அவகிட்டயே சொல்லல… ப்ளீஸ் ப்ளீஸ் நீ எதுவும் கேம் ஆடிடாத தங்கமே” என தாடையைப் பற்றி கெஞ்சவும்,

“சரி..சரி போனா போகுது… ஆமா அவ பேராவது தெரியுமா”

“அவ இல்ல… அவங்க… உன்னோட பெரிய பொண்ணு” என திருத்தியவன், ” அதெல்லாம் எப்பவோ கண்டுபுடிச்சாச்சு ‘நேனா’ அவ பேர்” என மெல்லிய சிரிப்புடன் கூறினான்.

அவன் திருத்தலில்,பார்றா… என மெச்சியவாறே, “வாரே..வாவ் ஷ்ஷ்ஷௌரிக்கு லவ் கம்மிங்… வெக்கம் கம்மிங்… கலக்கற ஷ்ஷ்ஷௌரி” என்றவள்,

“என்ன ஒரு ஒரு வருஷம் இருக்குமா லவ் பண்ண ஆரம்…”

“மூனு வருஷம்…” என முடித்து வைத்தான்.

“அடப்பாவி” என வாயின்மேல் கை வைத்து அதிர்ந்தவள், “நான் காலேஜ் போய் ரெண்டு வருஷம்தானடா ஆச்சு”

“நீ ஒன்ன மறந்துட்ட…நானும் அந்த காலேஜ்தான்” என்றவன், “நான் நாலாவது வருஷம், அப்பதான் அவ முதல் வருஷம் சேர்ந்தா”

“போதும்…போதும் கீழ வா… உடனே மேல பாத்து பெனாத்த ஆரம்பிச்சுடுவீங்களே” என அவள் கலாய்க்கவும் அவன் முறைத்துக் கொண்டிருந்தான்.

“அடியே! எத்தன தடவ சொல்றது சோபா மேல ஏறி குதிக்காதன்னு” என அமிர்தா அதட்டல் போட,

“என்ன பண்றது மம்மி நீ என்னோட உயரத்தையும் சேர்த்து இவன இப்படி வளர்த்து விட்டுட்டியே!” என புலம்பித்தள்ளினாள்.

இப்படி மகிழ்வும் கொண்டாட்டமுமாக நாட்கள் கழிய, ஷௌரியா நேனாவிடம் காதலைக் கூறி அவளும் தயக்கம் பாதியும், விருப்பம் பாதியுமாய் ஏற்றுக் கொள்ள, அவள் தலையசைக்க காத்திருந்தவன் போல இருவீட்டாரிடமும் பேசி அவர்கள் திருமணமும் இருவீட்டு பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டது.

நேனா அமைதியான பெண் ஷௌரியின் அதிரடி காதலில் விழுந்தாலும், பெரும்பாலும் மதுவுடனேதான் அவள் சேர்க்கை. அவர்களுடன் ஒட்டுப்புல் போலதான் ஷௌரி செல்வான்.

ஷௌரியா, “டேய் டாலு, நான் நேனாகூட தனியா பேசனும்டா” என எவ்வளவு கெஞ்சி கேட்டும், “இங்க பாரு ஷ்ஷ்ஷௌரி இனி கல்யாணம் முடியற வரை எங்க பக்கம் வராத… மீறி வந்த நேனா பேபிக்கு வேற மாப்பிள்ளைதான் பாக்க வேண்டியிருக்கும்” என பாரபட்சம் பார்க்காமல் மிரட்ட, பல்லைக் கடித்துக் கொண்டு நேனாவை துணைக்கு அழைக்க பார்த்தால் அவளோ சிரிப்பை அடக்கிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

‘அடிப்பாவி சிரிக்கற!இன்னும் கொஞ்ச நாள் அப்பறம் என்ன பண்ற பாத்துக்கறேன். ‘ என பொறுமியவாறு சென்றுவிட்டான்.

நேனாவிற்கு தமிழ் தெரியாது. ஆனாலும் இவர்கள் பேசிய விதத்தில் நிலைமையைப் புரிந்துதான் சிரித்தபடி அமர்ந்திருந்தாள். ஆனால் கடைசியில் ஷௌரியாவின் உரிமைப் பார்வை அவளை படபடக்கச் செய்தது.

அவளுக்கு ஷௌரியாவை மிகவும் பிடித்திருந்தது. முதலில் இவளிடம் விருப்பத்தைத் தெரிவித்தப் போதுகூட அவனைப் பிடித்திருந்தாலும் தந்தையிடம் பேச சொல்லிவிட்டாள். அவனும் உடனே பேசி சம்மதம் வாங்க, மொத்தத்தில் அவன் காதலைச் சொன்ன அந்த ஒரு நிகழ்வைத் தவிர்த்தால், இது பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டத் திருமணம்தான்.

ஷௌரியாவின் திருமணம் கோலாகலமாக முடிய, புதுமணத் தம்பதிகள் தங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை மகிழ்ச்சியும் ஆர்வமுமாக தொடங்கினர்.

முன்பிருந்த நிலை அப்படியே ஆனால், அவர்களுடன் நேனாவும் சேர்ந்து கொண்டாள். காலையில் காதல் கணவனை ஆபீஸிற்கு அனுப்பி வைத்துவிட்டு மதுவின் வீட்டிற்கு வந்துவிடுவாள். ஆம்! காதல் கணவன்தான். திருமணத்திற்கு முன் பிடித்தாலும் இப்பொழுது அவன் காட்டும் அன்பில் உள்ளம் உருகி உயிர் கரைந்து அவனோடு ஒன்றிதான் போய்விட்டாள்.

மதியம் ஷௌரியும் மதுவின் வீட்டிற்கு வந்துவிட, இங்கேயே உண்டுவிட்டு மனைவியை அழைத்து சென்றுவிடுவான் அவன் வீட்டிற்கு. அதன்பின் தம்பதிகளுக்கே உரிய வகையில் மதிய பொழுது, மீண்டும் அவன் அலுவலகத்திற்கு சென்றுவிடுவான். மது காலேஜ் முடித்து வந்ததும் அவளுடன் என கழியும் நேனாவின் பொழுதுகள். இப்பொழுது ஓரளவு தமிழ் கற்றுக் கொண்டாள்.

ஏனென்றால் அவள் கணவன் அவ்வப்பொழுது தமிழில் ஏதாவது சொல்லிச் சீண்டுவான். இவளுக்கு ஒன்றும் புரியாமல் விழிப்பாள். அதனால் ஓரளவு பேசுவது புரியும் வரை கற்றுக் கொண்டாள்.

மதுவை விட ஒரு வயது பெரியவள் என்றாலும் தோழிகள் போலவே பழகினர். அமிர்தாவும் சீனிவாசனும் கூட தங்களுடைய பெண்ணாகவே நேனாவைப் பார்த்தனர்.

இப்படியே நாட்கள் செல்ல அடுத்த இரண்டாவது மாதம் நேனா கருவுற்றாள். இரு குடும்பமும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தது. காலை நேர மசக்கை அவளை படுத்தியெடுக்க அமிர்தா தன்வீட்டுக்கே அவளை அழைத்து வந்துவிட்டார். அமர்நாத் வெளிநாடு சென்றிருக்க அவளுடன் சேர்த்து ஷௌரியாவும் வந்துவிட்டான்.

அன்று காலை சாப்பாட்டு மேஜையில் அமர்ந்து, அமிர்தா எதையோ பார்த்து கண்கலங்கிக் கொண்டிருக்க, சீனிவாசன் அவரை தேற்றிக் கொண்டிருந்தார்.

அதைப் பார்த்தவாறே வந்த மது,”என்னாச்சு டேட்” என்றவாறு அவர்களுடன் அமர, ஷௌரியும் நேனாவுடன் அங்கு வந்து சேர்ந்தான்.

நேனாவுக்கு ஏதோ சரியில்லை எனத் தோன்ற, “என்னாச்சுப்பா,மா ஏன்…” அதற்கு மேல் கோர்வையாய் பேச முடியாமல் முழிக்க ஆரம்பித்தாள்.

ஆம்! நேனா இவர்களை அம்மா, அப்பாவென்றுதான் அழைப்பது.

சீனிவாசன் நாளிதழில் வந்த செய்தியைக் காட்ட, “அட நம்மாளு” என சுவாரசியமாகப் பார்த்தாள் மது. நேனா வாங்கிப் பார்க்க அதில் ஒரு ஆடவனின் பேட்டி. மேலும் அவன் ஒரு கலெக்டர் என்பதும் தெரிந்தது. “இது ஒரு சாதாரண விசயம், இதற்கு ஏன் அம்மா கண் கலங்குகிறார்கள்” என நினைத்ததைக் கேட்டும்விட்டாள்.

“அவரு எங்கம்மாவோட சொந்த அண்ணன் பையன்.”

“வாவ் இட்ஸ் கிரேட். ஹி வாஸ் அ கலெக்டர்”

‘எஸ் எஸ் அ ஹேண்ட்சம் கலெக்டர் ‘என மனதோடு முனுமுனுத்துக் கொண்டாள் மது.

ஓரளவு இவர்களின் குடும்பம் பற்றி நேனாவுக்கு தெரியுமாதலால் மது அவளிடம், “பாரு நேனா குட்டி, அம்மாவோட அண்ணன் ஒரு டெரர் பீஸ்போல… அங்க போக பயந்துட்டு இப்படிதான் அப்பப்ப அழுது வீட்ட கூட்டிட்டு உட்கார்ந்துடறது…

லவ் பண்றது அவ்ளோ தப்பான விசயமா என்ன? அவங்களுக்குதான் அறிவில்லனா இவங்களுக்காவது புரியுதா! வயசுபுள்ள இருக்கற வீட்ல இதெல்லாம் நல்லாவா இருக்கு. நாளபின்ன நான் எப்படி லவ் மேரேஜ் பண்ணுவேன். கொஞ்சம் நீயாவது எடுத்து சொல்லேன்” என புகார் வாசிக்க தன் அண்ணனைப் பற்றி பேசவும் வெகுண்டெழுந்த அமிர்தா,

“அடிங்க யார என்ன வார்த்த சொல்ற… என் அண்ணன பத்தி உனக்கு என்னடி தெரியும். தாயில்லாத என்னை அவ்ளோ பாசமா வளர்த்தாருடி. இப்ப போனா கூட என்னை ஒன்னும் சொல்ல மாட்டாருதான்,

ஆனா… ஆனா எனக்குதான் குற்றவுணர்ச்சியா இருக்கு அவங்க முகத்துல முழிக்க… இதோ உங்கப்பாவோட அக்கா எங்களாலதான் அவங்களுக்கு இப்படி ஒரு கல்யாணம்… எல்லாம் எங்களால…

ம்ஹும் என்னால… நான் மட்டும் கொஞ்சம் நிதானமா இருந்திருந்தா இந்த நிலமை வந்திருக்காது. நம்பினவருக்கு துரோகம் பண்ணிட்டேன். ஆனா ஒன்னு அவர்கிட்ட மன்னிப்பு கேக்காம என் கட்டை வேகாது…”

“அம்மா”

“அமிர்தா”

“அத்தை” என பலகுரல்கள் கண்டனத்தை தாங்கிவர,

அமிர்தாவுக்கோ அப்படி ஒரு அழுகை. எப்போதும் இப்படிதான் அவர் அண்ணன் குடும்பத்தைப் பற்றிய செய்திகள் வரும்போது புலம்பி தீர்ப்பார்.

மது அவருடைய அண்ணனை கிண்டல் செய்தால் உடனே கோபத்தை எடுத்துக்கொண்டு, வருத்தத்தை விட்டுவிடுவார். ஆனால் இன்று அப்படி நடக்கவில்லை.

ஏதோ ஒன்று அமிர்தாவை கொஞ்ச நாட்களாகப்படுத்தி எடுக்கிறது. தங்களுக்கு பிறகு மகளுக்கு யார் ஆதரவு என்ற எண்ணம்.

ஷௌரியா இருக்கிறான்தான். கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக் கொள்வான்தான். ஆனால் சொந்தங்களுடன் சேரவேண்டும் என்ற எண்ணம் வலுவாய் இருந்தாலும், அதற்கும் மேல் வலுவாய் தயக்கம் அவரை ஆட்டிப்படைக்கிறது.

இதையெல்லாம் நினைத்துதான் அப்படியொரு அழுகை. “ம்மா… நான் சும்மா விளையாண்டேன். இனி உங்கண்ணன பத்தி பேசல. நீ அழாதேயேன்! ப்பா… சொல்லுங்கப்பா! நாம வேணா அவங்கள பாக்க போகலாம். நான் அவங்ககிட்ட பேசறேன்.” இவளும் கண்ணீரோடு பேச, ஷௌரி அவளை தோள்சாய்த்துக் கொண்டான். அதே சமயம் அத்தையை கண்களால் கண்டிக்கவும் தவறவில்லை.

இப்போது தான் மிகவும் அதிகமாக நடந்துகொண்டோமோ! அதுவும் மகளின் முன், என நினைத்தாலும், “மது இங்க வா” அழைக்க அதற்காகவே காத்திருந்தார் போல் அவரை அணைத்துக்கொண்டாள்.

அவளுக்கு தன் குடும்பத்தைப் பற்றி மொத்தமும் தெரியும். அவ்வப்போது குடும்ப போட்டோ சகிதம் அவர்களின் அப்டூடேட் விசயங்கள் இவர்களுக்கு கிடைக்கும்படிச் செய்திருந்தனர்.

“மது சாரிடா நான் ஏதோ உணர்ச்சிவசப்பட்டு இப்படிலாம் பேசிட்டேன்.” என கன்னம் தடவ,

“ம்மா நாம மாமாவ அத்தைய பாக்க போகலாமா?”

“போகலான்டா நேனாவோட பிரசவம் முடியட்டும் அப்பறமா ஒன்னா போகலாம்” என சமாதானம் செய்தார்.

“ம்மா என்னை நான் பாத்துப்பேன். நீங்க போய்ட்டு வாங்க” என நேனா சொல்ல,

“ஓய், நேனா குட்டி நீ அவ்ளோ பெரிய ஆள் ஆகிட்டயா… என் டார்லிங்க் வந்தவாட்டி அவனையும் கூட்டிட்டுதான் போவா இந்த மது. சோ, நீ போய் சமத்தா என் டார்லிங்க கவனி!” என வயிற்றுப்பிள்ளையை அவள் பக்கம் சேர்த்துக்கொண்டாள்.

இதை ஆண்கள் இருவரும் ரசித்துப் பார்த்தபடி இருந்தனர். சீனிவாசன் முடிவெடுத்துவிட்டார். இம்முறை அமிர்தா தடுத்தாலும் அவரை எப்படியாகினும் அழைத்து செல்ல வேண்டுமென்று. ஆனால் காலத்தின் கணக்கு வேறாக இருக்க யாரால் அதை மாற்ற இயலும்.

நேனாவிற்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. “அர்னவ்” என பெயரிட்டனர். அதன் பிறகும் நான்கு மாதங்கள் கடந்துவிட்டன. அடுத்த வாரம் அனைவரும் ஊருக்குச் செல்வதாய் இருந்தது.

அமிர்தா அனைவருக்கும் பரிசுகளாக வாங்கி குவித்தார். அன்று அமர்நாத் வெளிநாட்டிலிருந்து வருவதாக இருக்க, ஷாப்பிங் சென்ற சீனிவாசனும் அமிர்தாவும் தாங்களே அவரை அழைத்து வருவதாகக் கூறினர்.

அவருக்கும் நண்பன் அவனது குடும்பத்தைக் காணச் செல்வது மகிழ்ச்சியே. இப்படியே நண்பர்கள் இருவரும் பேசியவாறு காரைச் செலுத்திக் கொண்டிருக்க கண்ணிமைக்கும் நொடியில் அந்த அசம்பாவிதம் நடந்து முடிந்துவிட்டது.

எதிரே வந்து கொண்டிருந்த ஒரு லாரி கட்டுப்பாட்டை மீறி இவர்கள் வாகனத்தோடு சேர்த்து இவர்களையும் சிதைத்திருந்தது.

நண்பர்கள் இருவரும் அந்த இடத்திலேயே இறந்துவிட, அமிர்தா ஆபத்தான நிலைமையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தகவல் அறிந்து மதுவை அழைத்துக்கொண்டு ஷௌரியா வர, தாய் தந்தையை ஒரே நேரத்தில் பறிகொடுக்கப் போகும் நிலையில் கண்களில் நீர் வழிய நின்றிருந்த தன் மகளை அழைத்த தாய், “ம…து நா…ன் எ..ங்..ண்ணன பாக்கற குடுப்பினை இந்த ஜென்மத்துல இல்ல போல…”

“ம்மா அப்படிலாம் சொல்லாதமா…” என அழ,

“பேச விடு மது… ஆனா ந்நீ… போகனும், இனி நீ அங்கதான் இருக்கனும்! அவர்கிட்ட நாங்க மன்னிப்பு கேட்டதா சொல்லு…பத்திரமா இருந்துக்கடா” என கூறியவர் அத்தோடு தன் மூச்சை தியாகம் செய்து விட்டார்.

மூவரும் ஒன்றாக இவ்வுலகை விட்டுப் பிரிய இன்னதென்று வரையறுக்கமுடியாத அளவுக்கு மது கதறித் தீர்த்தாள். ஷௌரியாவோ அடுத்த இழப்பை தாங்கமுடியாமல் தவித்துக் கொண்டிருந்தான். நேனாவோ வருத்தம் கடலளவு இருந்தாலும் இவர்கள் இருவரையும் கவனிப்பதே தன் முதல் வேலை என தன் பணியைச் செய்துக் கொண்டிருந்தாள்.

குழந்தையைக் கூட தன் தாயிடம் ஒப்படைத்துவிட்டாள். ஆனால் மது அவளைத்தான் தேற்றவே முடியவில்லை.

ஷௌரியாவும் ஓரளவு மீண்டவன் தன் டாலுவைத் தாங்கிக் கொண்டான். ஒரு மாதம் கடந்த நிலையில் அவன் வெளிநாடு சென்றே ஆக வேண்டிய கட்டாயம் வரவே ஆயிரம் பத்திரங்கள் கூறி மனமே இல்லாமல் சென்றிருந்தான்.

மதுவிற்கு தனித்து விடப்பட்ட நிலை. “ஒரே நாளில் அனாதையாக்கத்தான் இத்தனை பாசம் பொழிந்தீர்களா! ஷௌரி இருக்கிறான்தான்… ஆனால் எனக்கே எனக்குன்னு யார் இருக்காங்க, நான் என்ன பண்ணுவேன்” என தன் பெற்றோரின் போட்டோவை பார்த்து விசும்பிக் கொண்டிருந்த மதுவிற்கு தாய் கூறிய,

“நீ அங்கு செல், இனி அங்குதான் இருக்க வேண்டும்” என்ற வார்த்தைகள் நினைவு வர, உடனே அதனை செயல்படுத்த நினைத்தவளாய் கிடைத்த உடைகளை அள்ளிப்போட்டுக்கொண்டு, தன் பெற்றோரின் புகைப்படத்துடன் நேனா எவ்வளவு கூறியும் கேளாமல் தனியாக கிளம்பிவிட்டாள்.

அந்த நிமிடத்தில் யாரைப் பற்றியும் எதைப் பற்றியும் யோசிக்கவில்லை. தாயின் வார்த்தைகளை நிறைவேற்ற வேண்டுமென்ற எண்ணம் மட்டுமே அவளை ஆட்கொண்டிருந்தது.

நேனாவும் பதறி ஷௌரியாவிற்கு போன் செய்ய அவனால் எடுக்க முடியாத சூழ்நிலை அங்கு. அதனால் மதுவை அவளால் தடுக்க முடியவில்லை.

மதுவிற்கு தன் மாமாவின் குடும்பத்தைப் பற்றி தெரியும்தான். ஆனால் இப்போது எங்கு செல்வது தேனிக்கா? இல்லை திருவள்ளூருக்கா? என யோசித்து, முதலில் திருவள்ளூர் சென்று தாத்தா பாட்டியைப் பார்ப்போம் எனதான் இங்கு வந்தது. அதுவும் ரயிலில்.

சென்னையில் இறங்கி திருவள்ளூர் வரை பஸ்ஸில் வந்து, அங்கிருந்து டாக்ஸியில் செல்லலாம் என நினைத்து நடந்து வந்தபோதுதான் அந்த தடியன்களிடம் மாட்டியது.

அதுவரை ஏதோ நினைவில் இருந்தவள் அவர்கள் ஆசைக்கு இணங்கும்படி, கத்தியைக் காட்டி மிரட்டவும் அப்போதுதான் நிலமையின் தீவிரத்தை உணர்ந்து தப்பித்து ஓடத் தொடங்கினாள்.

இதில் ‘யாரோ ஒருவன்’ என நினைத்துதான் அபியிடம் உதவி கேட்டது. ஆனால் அவனுக்கு ஆபத்து எனும்போது காப்பாற்றச் சென்று அடிவாங்கி அவன் மடிவீழ்ந்தபோதுதான் அவனை நன்றாக பார்த்தாள்.

மாமன் மகனை அடையாளம் தெரிந்ததும் தான், சேர வேண்டிய இடத்திற்கு வந்துவிட்டோம் என்ற நிம்மதியில் புன்னகையுடன் கண்மூடியது.

error: Content is protected !!