mayuravalli17

mayuravalli17

17

 

அவ்வளவுதான், தனக்கும் மயூரிக்கும் நடுவில் இருந்த எல்லாமும் முடிந்துவிட்டது என்று நினைத்திருந்த விவேக்கின் மனம், கடந்து போன இந்த கடைசி பத்து நிமிடங்களாக சந்தோஷத்தில் துள்ளிக் கொண்டிருந்தது. அதாவது மயூரி தனக்கானவள் என்று ஊர்ஜிதம் ஆனதிலிருந்து.

 

விஷ்ணு, தான் தாலி கட்டியிருந்த ராஜியை விட்டு கண்களை அகற்றவில்லை. 

பெற்றவர்கள் கவனிக்கிறார்கள் என்ற யோசனையெல்லாம் அந்த புது மாப்பிள்ளைக்கு அறவே இல்லை. காரை அவன்தான் ஓட்ட வேண்டும் என்பதால் பிடித்திருந்த கரங்களை மட்டும் தற்போதைக்கு விட்டான்… வீட்டுக்கு வந்தவுடன் இளைய மருமகளை அமுதா விளக்கேற்ற அழைத்து கொண்டு போக, மயூரியிடம் தன் சட்டை காலரை தூக்கி காட்டினான் விஷ்ணு!

 

மயூரியிடம் சில மாதங்களுக்கு முன் விட்ட சவாலில், சொன்னது போலவே இப்போது ஜெயித்துவிட்டானாம். தன் திருமணத்தை நடத்தி முடித்துவிட்டானாம்.

 

மயூரவள்ளிக்கே முதலில் ஆச்சரியம் தான். எப்படி இவர்கள் இருவருக்கும் என்று!

 

விஷ்ணு திடீரென சில வாரங்களுக்கு முன்பு மயூரியை ஒரு காபி ஷாப் அழைத்து சென்றிருந்தான். அங்கே வைத்து அவளிடம் தன் திருமண விஷயத்தை சொல்லிக் கொண்டிருக்க, இவர்கள் பக்கம் வந்த ராஜியை ஆச்சரியமாய் பார்த்தாள் மயூரி.

 

“நான் கல்யாணம் செய்துக்க போற பொண்ணு நம்ம ராஜி தான் வள்ளி” 

அதிர்ச்சியில் சற்று நேரம் பேச்சு வரவில்லை அவளுக்கு!

“நம்ம ராஜியா!? கூடவே தான டா இருந்தீங்க, எப்ப டா லவ் பண்ணீங்க” 

“இல்ல அவர் தான் முதலில்…” என்றாளே ஒழிய வேறு எதையும் தன் தோழியிடம் சொல்லவில்லை ராஜி.

 

ராஜி மயூரவள்ளி நெருங்கிய தோழிகள் தான் என்றாலும் இந்த வருடம் இருவருக்கும் பணி நேரம் அநேகமாய் மாறுபட்டிருந்தது. இவளுக்கு இரவு என்றால் அவளுக்கு பகல் டியூட்டி இருக்க, நடப்பதை எளிதாக மறைக்கவும் ராஜியால் முடிந்திருக்கிறது! விஷ்ணு கேட்கவே வேண்டாம், முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் ரகம் என்பதுதான் மயூரி ஏற்கனவே அறிவாளே!

“நான் எல்லாத்தையும் உன் கிட்ட சொல்றேன், நீ மட்டும் ஏன் டா இத்தனை லேட்டா சொல்றே!”

“அது ஒண்ணுமில்லை வள்ளி மோனி, அஞ்சுன்னு சொல்லிட்டு அது எதுவுமே செட் ஆகலையா, அதான் இதை மெதுவா சொல்லிக்கலாம்னு விட்டுட்டேன்!”

அவன் சொன்னதை கேட்டுக் கொண்டிருந்த ராஜி அவள் இரு கண்களில் அதிர்ச்சியை தேக்கிக் கொண்டு,

“அஞ்சுன்னு சொல்லியிருக்கீங்க, அது யாரு மோனி!” என்றாள்!

அவன் முழுத்த முழியை பார்த்து,

“சொல்லுங்க விஷ்ணு! மயூரி என்னடி இது!” 

“என்னை கேட்டா அவனை லவ் பண்ணே! அவன் கிட்டையே கேளு! பதிலை வாங்காம விடாதே ராஜி”

மயூரி தன் பங்குக்கு தோழியை வத்தியும் வைத்து, அதன் பலனால் அங்கே இருவரின் செயலை கண்டு நகைத்தும் கொண்டிருந்தாள் மயூரி.

 

கொஞ்சம் விட்டிருந்தாலும் ராஜியின் காலில் விழுந்திருப்பான் விஷ்ணு.

“இல்லடி செல்லம், நீதான், நீ மட்டும் தான் என் உயிர்! வேற யாருமே என் வாழ்க்கையில் சத்தியமா இப்ப இல்லை! பழைய கதையெல்லாம் இப்ப தேவையா நமக்கு, சொல்லு டி என் தங்கம்!”

ஒரு தேர்ந்த காதலனை போல் இருக்கும் அத்தனை வசனங்களையும் பேசி அவளை வழிக்கு கொண்டு வந்துவிட்டான்.

 

திருமணம் செய்ய எத்தனித்த விஷ்ணு, ராஜி வீட்டில் போய் பேச அவளின் அண்ணனுக்கு இதில் இஷ்டமில்லை. ஆனால் ராஜியின் அன்னையோ மகளின் வாழ்க்கைக்காக பார்த்து இந்த பதிவு திருமணத்திற்கு சம்மதித்திருந்தார். இதில் அமுதா கனகவேல் தம்பதியினரும் முதலில் தயங்கியபோது, மயூரி விஷ்ணுவுக்கு ஆதரவாக பேசி சரியாக்கியிருந்தாள். 

அவர்களும் தங்கள் மூத்த மகனால் ஏற்பட்ட மனக்குறை அகல இதையாவது சீக்கிரம் முடித்து வைப்போம் என்ற நிலையிலிருந்தனர். இவர்கள் 

எல்லாருமாய் நேர்ந்து இந்த விஷயத்தை சாமர்த்தியமாய் நகர்த்தி, போகிற போக்கில் விவேக்கை அவன் செய்த வீண் செயலுக்காக ஒரு வழி செய்திருந்தனர்.

 

விஷ்ணு திருமணம் முடிந்த பின் விவேக்கின் முகத்தில் தெரிந்த நிம்மதியை பார்த்த பிறகே அவன் பெற்றோர் இருவருக்கும் அப்பாடா என்றிருந்தது. இனியாவது எந்த சிக்கலும் இராது என்று தங்களை தாங்களே தேற்றிக் கொண்டனர். 

 

“மயூரி அந்த பருப்பு பாயசத்தை எடுத்திட்டு வந்து எல்லாருக்கும் கொடுமா”

வரவேற்பறையில் அமர்ந்திருந்த ராஜி, விஷ்ணு, ராஜியின் தாய் என அனைவரையும் உபசரித்த மயூரவள்ளியை தன் அறை வாசலில் நின்றபடி பார்த்துக் கொண்டிருந்தான் விவேக்.

 

“அப்போ நான் கிளம்புறேன் சம்மந்தி அம்மா. பொண்ணு ஹாஸ்டலில் இருக்கட்டும், படிப்பு முடியிறவரைக்கும். அவ அண்ணனை சீக்கிரம் சமாதானம் செய்திட்டா கல்யாணத்தை விமரிசையை மண்டபத்தில் செஞ்சிடலாம்”

“சரிங்…”

என்று சம்மதித்த தன் பெற்றோரை முந்திகொண்ட விஷ்ணு,

“எனக்கு பெரிசா செலவு செஞ்சி, மண்டபத்தில் எல்லாம் கல்யாணம் செய்ய விருப்பமில்லை அத்தை. இன்னிக்கு உங்க எல்லாரோட ஆசிர்வாதத்தில் நடந்ததே  எனக்கு போதும்!”

 

ராஜியின் அன்னைக்கு மாப்பிள்ளையின் பதிலில் பெருமிதமும் உண்டு, கவலையும் உண்டு.

 

“இதை பத்தி நீங்க இரண்டு பேருமே யோசிச்சு ஒரு முடிவுக்கு வாங்க. எனக்கு பஸ்ஸுக்கு நேரமாகிட்டு, கிளம்புறேன்” என்றபடி எழுந்தவரை விட்டுவர போனான் விஷ்ணு!

“ராஜி நீயும் வாயேன், அத்தைக்கு பேச்சு துணைக்கு ஆச்சு” கடைசி நிமிடத்தில் மனைவியையும் இழுத்துக் கொண்டு போயே விட்டான்.

மகன் அடித்த கூத்தை பார்வையாலேயே மயூரியிடம் புகார் சொல்லிக் கொண்டிருந்தார் அமுதா!

இனிமையாய் கடந்துவிட்ட அந்த நாளில் மயூரியின் மனம் மிகவும் லேசுபட்டிருந்தது. 

தன் வீட்டில் தன் படுக்கையில் போய் விழுந்தவளுக்கு விவேக்கின் பாவ முகம் மனக்கண்ணில் வந்து போனது.

அவன் எதுவும் தன்னை பற்றி உணர்ந்தானா? ஆம் என்பதை அவன் கண்களில் ஏற்கனவே தெரிந்துகொண்டாளே, ஆனாலும் ஒரு சந்தேகம். இவனை எந்த வகையில் சேர்ப்பது என்ற குழப்பத்துடனே,

அவனை மேலும் மேலும் நினைத்தபடி உறங்கியவளுக்கு கனவுகளும் அவனுடன்!

 

அடுத்த வந்த நாட்களில் மருத்துவமனை வரையிலுமான அவளின் பேருந்து பயணத்தின் போது, அந்த வழியில் ஒரு இறுதி ஊர்வலம் கடந்து போனதை கண்டாள் மயூரி. அவளின் பழைய நினைவுகளை மறுபடியும் தட்டி எழுப்பிவிட அது போதுமானதாக இருந்தது.

 

மயூரியின் வாழ்க்கையை புரட்டி போட்ட அந்த நாளை அவளால் என்றுமே மறக்க முடியாது. காலையில் அவளை பள்ளியில் இறக்கி விட்டு சந்தோஷமாய் காரில் சென்ற பெற்றோரை இனி அவள் காணப் போவதில்லை என்று இயற்கை சொன்ன செய்தி அவள் செவிகளுக்கு எட்டியிருக்கவில்லை.

 

மாலை அவள் திரும்புகையில் வீடு பூட்டியிருக்க அமுதா அத்தை வீட்டுக்கு போய்விட்டாள். அவளுடைய பெற்றோர் எப்படி இறந்தார்கள் என்பது அந்த வயதில் அந்த அதிர்ச்சியில் சற்றும் நினைவில் நிற்கவில்லை மயூரிக்கு! வெள்ளை துணியால் சுற்றி, சடலமாக வந்த இருவரையும் நடு வீட்டில் கிடத்தி, சுற்றியிருந்த உறவினர்கள் எல்லாம் அழுதது மட்டும் தான் நினைவில் இருந்தது!

 

அந்த அதிர்ச்சிக்கு பின் நடைப்பிணம் ஆகியிருந்தாள்!  எப்படி ஒவ்வொரு உறவினரிடமிருந்து மற்றொருவர் வீட்டுக்கு பந்தாடப்பட்டாள் என்பது அவளுக்கு மட்டுமே தெரிந்த ரணம்! 

 

சில வருட போராட்டங்களுக்கு பிறகு இறுதியாக தன் தந்தை எழுதி வைத்திருந்த உயில் படி அவளுக்கு பாதுகாவலராக கனவேல் குடும்பத்தினர் மாத்திரமே இருக்க முடியும் என்று தெரிய வர அவள் அவர்கள் வசம் வந்த பிறகே அவளுக்கு சுதந்திரம். அவள் அனுபவித்து கொண்டிருந்த எல்லா துக்கங்களிலிருந்தும் காப்பாற்றினார் கடவுள்.

கனகவேல் குடும்பத்திடம் ‘ஒழிந்தால் சரி’ என்றபடி அவளை தள்ளிவிட்டு போனார் குரு மாமா! 

 

அன்றிலிருந்து அவளுக்கு என்றுமே அதிமுக்கியமாய் இன்றுவரை இருந்திருக்கிறான் விஷ்ணு. 

 

இப்படி நினைத்தது அவளுக்கே பழைய கதையாக தோன்றி முகத்தில் ஒரு ஏளன சிரிப்பை உண்டாக்கியது. இன்றைய தேதிக்கு அவளை விடவும் அவனுக்கு அதி முக்கியமான ஆள் வந்தாயிற்று! அவனும் அதை பல முறை பளீச்சென்று அவளுக்கு அதை விளக்கிவிட்டான்.

 

சில நாட்களுக்கு முன் இரவு தாமதமாய் தங்கள் பணி முடிந்து ராஜி, மயூரி ஒன்றாய் வெளிவர விஷ்ணு தன் பைக்கில் காத்திருந்தான். முகத்தில் ராஜியை பார்த்தும் அப்படி ஒரு பொலிவு! ‘எப்படி டா ராசா உன்னால மட்டும் முடியுது’

இவள் நினைத்துவிட்டு திரும்புவதற்குள் அவனருகில் சென்றுவிட்டாள் ராஜியும்!

அவர்களிடம் செல்லாமல் தள்ளி நின்றபடி தன் போனை ‘கிண்டி’ கொண்டிருந்தாள்.

 

ராஜியுடனான திருமணத்துக்கு பின் இவன் செய்யும் சேட்டை எல்லாம் சகிக்க பழகிக் கொண்டாள் மயூரி. அந்த வீட்டில் அவன் மனைவி உடன் இல்லை, ஆனாலும் பொழுதன்னைக்கும் ‘ராஜி ராஜி’ என்று அவன் செய்த அலப்பரை அமுதாவுடன் சேர்த்து அவளுக்கும் கடுப்பை உண்டாக்கியிருந்தது.

 

மனைவியிடம் ரகசியம் பேசி முடித்தவன் சற்று தள்ளி நின்றிருந்த மயூரியிடம்,

“நீ சீக்கிரம் வீட்டுக்கு கிளம்பு! பஸ்ஸை விட்றாதே!  நானும் ராஜியும் இங்கேயிருந்து அப்படியே வெளியே போறோம். நான் வர லேட் ஆகும்னு அமுதாகிட்ட சொல்லிடு ப்ளீஸ்” என்றான்.

 

கண்கள் விரிய அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

“எனக்கு லேட் ஆனா வழக்கமா நீதானே வந்து கூப்பிடுவே! இன்னிக்கி தனியா போக சொல்றே!”

ராஜி அந்த நண்பர்கள் இருவரையும் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க,

“சாரி வள்ளி, திடீர் பிளான். உனக்கு முன்னாடியே சொல்ல மறந்து போயிட்டேன். இப்ப என்ன செய்யலாம்…ம்ம்…நான் வேணா விவேக்கை வந்து உன்னை பிக்கப் பண்ண சொல்லவா!”

கண்ணடித்து சொன்னவனின் 

மண்டையில் இரண்டு தட்டு தட்டிவிட்டு, 

“ராஜி இப்படியே செஞ்சி நம்ம ரெண்டு பேரையும் சீக்கிரம் பிரிக்க போறான் பாரு!”

பதில் சொல்லாமல் நின்றிருந்தவளை மேலும் நோகடிக்காமல்,

“ஓகே நீ என்ஜாய் பண்ணு. நான் கிளம்புறேன் ராஜி!”

சற்று தூரம் நடந்தவளை,

“வள்ளி பஸ் ஸ்டாப் வரைக்கும் விடவா?”

“இங்கே இருக்கு பஸ் ஸ்டாப், அதுக்கு லிப்டா! நான் போயிக்கிறேன். நீ கிளம்பு விஷ்ணு! பை”

 

விடு விடுவென்று அவள் போன வேகத்தை பார்க்கையில் அவனுக்கு தெரிந்தது, தூங்கி கொண்டிருந்த சிங்கத்தை சீண்டி விட்டுவிட்டோம் என்பது.

error: Content is protected !!