Mazhai – 14
Mazhai – 14
அத்தியாயம் – 14
அந்த வீடு கட்ட ஆரம்பத்தில் தொடங்கி முடியும்வரை ஒவ்வொரு நாளும் அங்கே என்ன செய்கிறார்கள் என்று ஆர்வமாக கவனிப்பதே வேலையாகி போனது. அவனது பாட்டி அடித்தால் உடனே சோகமாக வந்து கட்டிட வேலை நடக்கும் இடத்தில் ஒரு ஓரமாக அமர்ந்து கொள்வது அவனது வழக்கம்!
அப்படி சோகமாக அமர்ந்திருந்த போது பைக்கில் வந்து இறங்கிய இருவரும் வீட்டைச் சுற்றி பார்த்துவிட்டு, “என்னங்க இன்னும் வேலை கொஞ்சம் பாக்கி இருக்கிற மாதிரி தெரியுதே..” என்றார் விஜயலட்சுமி.
“ஆமா எப்படியும் இன்னும் ரெண்டு வாரத்தில் முடிக்க சொல்லணும்” வசந்தராஜ் பார்வையை சுழற்றிய போதுதான் அங்கே அமர்ந்திருந்த திவாகரை கவனித்தான்.
உடனே தன் மனைவியிடம் கண்ஜாடையால், ‘அங்கே பாரு’ என்று சொல்ல, கணவன் காட்டிய திக்கை நோக்கினாள். சிறுவன் கன்னத்தில் கைவைத்து சோகமாக அமர்ந்து இருப்பது மனதிற்கு பாரமாக இருந்தது.
“எந்த நேரமும் ஒரு பட்டாளத்தோடு வலம் வருவானே! இந்த குட்டிக்கு இன்னைக்கு என்னாச்சு?!” என்ற கேள்வியுடன் அவனை நோக்கி சென்ற மனையாளை பின் தொடர்ந்தார் வசந்த்.
தன்னருகே யாரோ அமரும் ஆராவாரம் கேட்டு அவன் நிமிர்ந்து பார்க்க, “திவாகுட்டி ஏன் சோகமாக உட்கார்ந்து இருக்கீங்க?” அக்கறையுடன் விசாரித்தபடி அவனின் கூந்தலை கலைத்தாள்.
அவனது மறுப்பக்கம் அமர்ந்த ராஜ், “நீயாக சொன்னால்தானே எங்களுக்கு தெரியும். நாங்க உன்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட் தானே” அவனை தாஜா செய்தார்.
“என்னை பாட்டி கடைக்கு கூட்டிட்டு போகல” அவன் வருத்தமாக கூற,
“அவங்க வைத்திருக்கும் பெட்டிக்கடை ரொம்ப சின்னது. அத்தோடு ரோட்டுமேல் இருப்பதால் நீ விளையாட முடியாதுன்னு விட்டுட்டு போயிருக்காங்க. அதுக்காக இவ்வளவு சோகமாக இருந்தால் எப்படி?” விஜி பேசியே அவனை வழிக்கு கொண்டு வந்தாள்.
அவர் சொன்ன காரணத்தைக் கேட்டதும் தனது தவறை உணர்ந்த சிறுவன், “நீங்க சொன்னது சரிதான். ஆனால் எனக்கு இப்போது விளையாட ஆளில்லையே” அவன் ஆரம்பித்த இடத்திலேயே வந்து நின்றான்.
அவன் சொன்னதைக் கேட்டு வாய்விட்டு சிரித்த ராஜ், “ஓஹோ விளையாட ஆள் வேணுமா? இன்னும் கொஞ்சநாள் போனதும் உன்னோடு விளையாட ஒரு குட்டிப்பாப்பா வருவா” அவனை சமாதானம் செய்ய திவாகர் முகம் பூவாக மலர்ந்தது.
“குட்டிப்பாப்பாவா.. ஆமா இப்போ எங்கே இருக்கிறா?” என்று அவன் அடுத்த கேள்வியைத் தொடுத்தான்.
அவனிடம் இப்படியொரு கேள்வியை எதிர்பார்க்காத வசந்த் என்ன சொல்வதென்று புரியாமல் முழிக்க, “இங்கே இருக்கிறா” என்று சிறுவனின் கையை எடுத்து வயிற்றில் வைத்தாள் விஜி.
சட்டென்று நிமிர்ந்து இருவரையும் பார்த்த திவாகர், “பாப்பா பிறந்ததும் என்னிடம் கொடுத்திடுங்க. நான் பத்திரமாக பார்த்துக்குவேன். அவ என்ன கேட்டாலும் வாங்கி தருவேன்” என்று அவன் பேசிக்கொண்டே செல்ல அங்கே வந்து சேர்ந்தார் மரகதம்.
அவரைப் பார்த்தவுடன் வசந்தராஜ் – விஜயலட்சுமி இருவரும் சிரித்தபடி எழுந்து நிற்க, “என்னம்மா வீட்டு வேலையெல்லாம் முடிய போகுது போல?” என்றார் சிரித்தபடியே!
“ஆமாங்கம்மா. வருகின்ற இருபத்தி ஆறாந்தேதி வீட்டு கிரகப்பிரவேசம் வச்சிருக்கிறோம். நீங்க குட்டி பையனோடு வரணும்” என்று அழைப்புவிடுக்க அவரும் சரியென்று தலையசைத்தார்.
பெற்றோரை இழந்த பேரனை தூக்கி வந்து வளர்க்கும் அவரின் மீது இருவருக்கும் தனி மரியாதை இருந்தது. இவர்கள் பேசும்போது அமைதியாக நின்றிருந்த திவாகர், “பாட்டி என்னோடு விளையாட பாப்பா வர போகுதாம். குட்டி பாப்பா வந்தபிறகு என்னை கடைக்கு கூப்பிடாதீங்க” பெரிய மனிதன் தோரணையில் அவன் கட்டளையிட்டான்.
அதைக் கண்டு இருவரும் வாய்விட்டு சிரிக்க, “சரிடா பெரிய மனுஷா.. நீ என்னைத் தொந்தரவு செய்யாமல் இருந்தால் அதுவே போதும்” அவனின் கையில் நேந்திர சிப்ஸை கொடுத்து அனுப்பிய மரகதம் மற்ற வேலையைக் கவனிக்க சென்றார்.
காலைநேரம் கார்மேகங்கள் வானில் முகாமிட, சிலுசிலுவென்ற தென்றல் காற்று இதமாக வீசியது. புதிதாக கட்டப்பட்ட வீட்டின் முன்பு மாவிலை தோரணங்கள் கட்டப்பட்டிருக்க, வாசலில் கலர் நிறங்களைக் கொண்டு கோலம் போடப்பட்டது.
வீட்டின் நடுஹாலில் உறவினர்கள் தங்களுக்குள் பேசியபடி நின்றிருக்க, ஹோமம் வளர்த்த ஐயர் சொன்ன மந்திரங்களை மாலையும் கழுத்துமாக அமர்ந்து இருந்த தம்பதிகள் திரும்ப கூறினார். இதையெல்லாம் தன் பாட்டியின் சேலை தலைப்பை கையில் பிடித்தபடி நின்று பார்த்துக் கொண்டிருந்தான் திவாகர்.
அவன் தனியாக நிற்பதைக் கண்டு விஜியின் மனம் இளகிட, “நீயும் வா! இந்த மாலையை போட்டுக்குக்கோ” என்று அவனை அருகே அழைத்து அமரவைக்க, “தான் பெற்ற பிள்ளைபோல அவ்வளவு உரிமையாக அழைத்து உட்கார வைப்பதைப் பாரு” என்று அங்கே நின்றிருந்த சொந்தபந்தங்களுக்கு நடுவே சலசலப்பு ஏற்பட்டது.
“சின்ன பையன் சோகமாக நிற்பதைப் பார்க்க மனசுக்கு வருத்தமாக இருக்கு. அதனால் நான்தான் அவனை இங்கே கூப்பிட்டு உட்கார வைத்தேன்” என்று வசந்த் சத்தமாக சொல்ல, “மனைவி சொல்லே மந்திரம்னு இருக்காதே” என்று கூட்டத்தில் நின்றிருந்த ஒருவர் சொல்ல சட்டென்று நிமிர்ந்து முகம் பார்த்தார்.
“இதுக்கு நல்ல மனசு இருந்தால் போதும். சின்ன பையன் என்று நினைக்காமல் என்னவெல்லாம் பேசுறீங்க. எது நியாயம்னு எனக்கு தெரியும்” என்று அனைவரையும் அடக்கிவிட்டார். அதன்பிறகு சாமியை கும்பிட்ட கையோடு வீட்டின் வாசலில் நின்று ஒரு குரூப் போட்டோ எடுத்தனர்.
நாட்கள் ரெக்கைகட்டி பறந்தது. அன்றிலிருந்தே திவாகர் அவர்களின் வீட்டில் ஒருவன் ஆகிபோனான். வீட்டிற்கு வரும்போது தன் மனைவிக்கு வாங்கி வருவதுப்போல அவனுக்குப் பிடித்ததை வாங்கி வந்து தருவார் வசந்தராஜ்.
காலையில் இருந்து பொழுது வரை அவர்களின் வீட்டிலேயே இருப்பான். இரவு மட்டும் பாட்டியுடன் சேர்ந்து உறங்குவான். இப்படி வசந்தராஜ் – விஜியலட்சுமியின் மகனாகவே மாறிப் போனான் திவாகர்.
இந்நிலையில் பிரசவ தேதி குறித்த சந்தோஷத்தில் வீடு வந்து சேர்ந்த விஜியிடம், “பாப்பா பிறந்ததும் எனக்கு கொடுக்கணும். நான்தான் பாப்பாவை வளர்ப்பேன்” என்று சொல்ல அவர்களும் சரியென்று தலையசைத்தனர்.
அடுத்தடுத்து வந்த நாட்களில் மனைவியைத் தைரியமாக இருக்க சொல்லிவிட்டு தன்னுடைய வேலையைக் கவனிக்கச் செல்வார். அன்றும் அதுபோலவே அவர் சென்ற கொஞ்ச நேரத்தில் விட்டுவிட்டு வலி வருவதாகச் சொல்லி அழுகையில் துடித்த விஜியைப் பார்த்து, “நான் போய் பாட்டியைக் கூட்டிட்டு வரேன்” என்று வீட்டை நோக்கி ஓடினான்.
“பாட்டி விஜிம்மாவுக்கு வலி வந்துடுச்சு” என்று அழுகையுடன் ஓடிவந்த பேரனைக் கண்டு திடுக்கிட்ட மரகதம் அக்கம்பக்கத்தினரை அழைத்துச் சென்று விஜியை மருத்துவமனையில் சேர்த்தனர்.
“இந்த குழந்தை சுகபிரசவத்தில் பிறக்க வாய்ப்பில்லை. இப்போதே ஆப்ரேஷன் செய்தால் தான் இரண்டு பேரையும் காப்பாற்ற முடியும்” என்று சொல்லிவிட, “இவங்க கணவன் வந்திருக்கிறாரா? அவரை வந்து ஒரு கையெழுத்துப் போட சொல்லுங்க” என்றார்.
“இந்த பெண்ணின் கணவன் வேலைக்குப் போயிருக்கான் டாக்டர். இந்த சமயத்தில் இப்படி சொன்னால் நாங்க எங்கே போய் அவரைத் தேடுவது?” என்று மரகதம் கண்ணீரோடு பேசிக் கொண்டிருக்க, திடீரென்று தன்னிடம் அவர் கொடுத்துச் சென்ற டெலிபோன் நம்பர் திவாகருக்கு நினைவிற்கு வந்தது.
பக்கத்தில் நின்ற நர்ஸிடம், “ராஜுப்பா வேலை செய்யும் இடத்தோட டெலிபோன் நம்பர். இதுக்குப் போன் செய்து கொஞ்சம் சீக்கிரம் வர சொல்லுங்க” என்று தன் பாக்கெட்டில் வைத்திருந்த சீட்டை நர்சிடம் கொடுத்தான்.
அவனிடம் வாங்கிய நம்பருக்கு போன் செய்து விவரம் சொன்ன கொஞ்ச நேரத்தில் தலைதெறிக்க ஓடிவந்த ராஜ், “அம்மா விஜிக்கு இப்போ எப்படி இருக்கு?” என்று மரகதத்திடம் விசாரிக்க, டாக்டர் சொன்ன விவரத்தை ஒன்றுவிடாமல் கூறினார்.
“இங்கே விஜயலட்சுமியின் கணவர் யாருங்க?” என்று நர்ஸ் கேட்க, “நான்தான்” என்று சொல்லி அவர் கொடுத்த பேப்பரில் கையெழுத்துப் போட்டு கொடுத்துவிட்டு பதட்டத்துடன் அங்கிருந்த சேரில் அமர, அவருக்குப் பக்கத்தில் அவரைவிட சோகமாக அமர்ந்திருந்தான் திவாகர்.
“என்னப்பா இவ்வளவு சோகமாக உட்கார்ந்து இருக்கிற?” என்று அவனிடம் விசாரிக்க, “விஜிம்மா ரொம்ப அழுதுட்டாங்க. அவங்களால் வலி தாங்கவே முடியல. நான்தான் பாட்டிகிட்ட சொல்லி இங்கே கொண்டு வந்து சேர்த்தேன். இப்போ பாப்பா பிறந்துவிடுவா இல்ல” எனக் கேட்க அவரும் ஒப்புதலாக தலையசைத்தார்.
கொஞ்சநேரத்தில் ஆபரேசன் அறையைத் திறந்து வெளியே வந்த நர்ஸ் “உங்களுக்கு பெண் குழந்தைப் பிறந்திருக்கு” என்றதும் அங்கிருந்த அனைவரின் முகமும் பூவாக மலர்ந்தது.
அந்த குழந்தையை தூக்கி வந்த நர்ஸ், “இங்கே பாரு உனக்கு தங்கச்சி பிறந்திருக்கிற” என்று சொல்லி திவாகரிடம் காட்ட, “அழகு பாப்பா” என்று மெல்ல தொட்டவன் உடல் சிலிர்க்க, மெல்ல சிணுங்கிய குழந்தையைப் பார்த்து அவன் உதடுகளில் புன்னகை அரும்பியது.
அதன்பிறகு நர்ஸ் அந்த குழந்தையை ராஜிடம் காட்டிவிட்டு, சென்ற சிறிதுநேரத்தில் நார்மல் வார்டிற்கு விஜியை மாற்றிவிட்டனர். உடனே அவளைச் சென்று பார்த்தவரின் கண்கள் கலங்கிட, “ரொம்ப சந்தோஷமாக இருக்குடி. பொண்ணு அப்படியே என்னை மாதிரி இருக்கிற” என்று சொல்லி சந்தோஷப்பட, விஜியின் முகம் மலர்ந்தது.
மெல்ல பக்கத்தில் அமர்ந்து கூந்தலை வருடிவிட, பாட்டியும் – பேரனும் அறைக்குள் நுழைய, “இப்போ வலி இல்லையே விஜிம்மா” என்று அவன் அக்கறையுடன் கேட்க, “அதெல்லாம் போயிடுச்சு கண்ணா” என்று சொல்லி புன்னகைத்தாள்.
“நீ துடித்ததைப் பார்த்து எனக்கு கையும் ஓடல, காலும் ஓடல. அங்கே எல்லாம் போட்டது போட்டபடி விட்டுட்டு வந்துட்டேன். தாயும் – சேயும் நலம் என்று சொன்னபிறகுதான் மனசுக்கு கொஞ்சம் நிறைவாக இருக்கு. இந்த நேரத்தில் சத்தானது சாப்பிடணும்னு சொல்வாங்க. நானே வீட்டில் போய் சமைத்து எடுத்துட்டு வர்றேன்” என்று அவர்களிடம் விடைபெற்றுக் கிளம்பினார்.
அடுத்தடுத்து வந்த நாளில் திவாகர் தினமும் தன்னுடைய பாட்டியை அழைத்துக்கொண்டு, மருத்துவமனைக்கு வந்து குழந்தையைப் பார்த்துச் செல்வான். பதினைந்து நாளும் இதுவே தொடர்கதையானது.
அதன்பிறகு இருவரும் வீடு வந்து சேர, திவாகர் தான் சந்தோஷத்தில் குதித்தான். ஒவ்வொரு நாளும் அவனுக்கு பண்டிகைதான். அந்த குழந்தை சிரித்தால் இவனும் சிரித்து, அது அழுதால் காரணமின்றி அழுது என்று வித்தியாசமாக நடந்து கொண்டான்.
இந்நிலையில் பிறந்த குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என்று வசந்தராஜ் – விஜயலட்சுமி இருவரும் தீவிரமாக சிந்திக்க, “வசந்தி, ராஜலட்சுமி, மலர்க்கொடி” என்று ஒவ்வொரு பெயராகச் சொல்ல, “ஐயோ பாப்பாவுக்கு இந்த பேரு வேண்டாம்” என்று கத்தினான் திவாகர்.
“உனக்கு இது எல்லாம் பிடிக்கலையா?” என்ற கேள்விக்கு மறுப்பாக தலையசைத்தனர் திவாகரும், விஜியும்.
“அப்போ நீங்க சொல்லுங்க” என்று அவர் சொல்ல, “மேனகா, மௌனிகா, நிரஞ்சனா, நித்யா, மதுமதி, கவிதா, கிருத்திகா” என்று விஜி ஒரு பட்டியலை வாசித்தார்.
“இது இப்போ இருக்கின்ற பெண்கள் எல்லோருக்கும் இருக்கு” என்று சொல்லி மறுப்பு தெரிவித்தார்.
இருவரும் எழுதி வைத்திருந்த பெயர் பட்டியலில் படித்த எந்த பெயரும் யாருக்கும் பிடிக்கவில்லை. பெயர் புத்தகம் வாங்கி வந்து அதில் இருக்கும் பெயர்களையும் வாசித்து பார்த்ததில், ‘இதுவும் சரியில்லை’ என்றனர்.
கடைசியாக, “இப்படியே காரணம் சொல்லிட்டு இருந்தால் அவ்வளவுதான்” என்று மரகதம் சலித்துக்கொள்ள, அங்கிருந்த தமிழ் புத்தகத்தில் இருந்த பெயர்களை வாசித்த திவாகர், “சிற்பிகா” என்றான்.
அவன் சொன்ன பெயரைக்கேட்டு திரும்பிய மூவரும், “இது ரொம்ப நல்ல இருக்கே” என்று அதையே குழந்தைக்கு பெயராக சூட்டி மகிழ்ந்தனர்.
இதற்கிடையே திவாகரை பள்ளிக்கூடம் சேர்த்து விட்டார் மரகதம். அவனுக்கும் சிற்பிகாவிற்கும் ஏழு வருடம் வித்தியாசம். அவர்களின் குட்டி தேவதை என்ன செய்தாலும் வீட்டில் இருப்பவர்களுக்கு அதிசயம்தான்.
அத்துடன் அவளுக்கு எந்த பொருள் வாங்கி கொடுத்தாலும், இரண்டு கைகளுக்கு இரண்டு வாங்கி தருவார்கள். அந்தளவுக்குச் செல்லம் என்று சொல்லலாம். அதே நேரத்தில் சிற்பிகாவிற்கு வாங்கும்போது திவாகருக்கு தேவையான பொருட்களையும் வாங்கி வருவது இயல்பாகவே நடந்தது.
தாய் – தந்தை இல்லை என்ற சோகம் மறந்து, அவனும் சந்தோஷமாக வலம் வர தொடங்கினான். இப்படியே எட்டு ஆண்டுகள் ஓடி மறைந்தது. வசந்தராஜ் கார் டிரைவர் என்பதால் அடிக்கடி வெளியூர் செல்வது வழக்கம். அந்த சமயத்தில் சேரக்கூடாத நபர்களுடன் சேர்ந்து குடிக்க தொடங்கினர்.
ஆரம்பத்தில் ஏதோவொரு நாள் மட்டும் என்று இருந்த பழக்கம் மெல்ல மாறி வாரத்தில் ஒரு முறை என்று வந்து நின்றது. கணவனது இந்த பழக்கம் விஜயலட்சுமியை வெகுவாக பாதிக்க தொடங்கியது.
காலையில் பொழுது விடிந்தால் ஆயிரம் மன்னிப்பு கேட்டுவிட்டு வேலைக்கு கிளம்பும் வசந்தராஜ் இரவு வரும்போது போதையில் திரும்பி வருவதைக் கண்டு, “அப்பா ஏன் இப்படி பண்றாரு, இந்த ஒரு விஷயத்தில் மட்டும் அப்பாவை பிடிக்கவே இல்லம்மா” பயந்து விலகுவது சிற்பிகாவின் வழக்கமாக மாறியது.
வானம் இருட்டிக்கொண்டு மழை வருவதுபோல இருக்க ஸ்கூல் பெல் அடித்ததும், கேட்டின் அருகே வந்து நின்று அண்ணனுக்காகக் காத்திருக்க தொடங்கினாள். அதே நேரத்தில் நண்பர்களுடன் பேசியபடி வெளியே வந்த திவாகர், “போலாமா?” என்ற கேள்விக்கு சரியென்று தலையசைத்தாள்.
ஸ்கூல் விட்டு வெளியே வந்ததும் பக்கத்தில் மாங்காய் வித்துக் கொண்டிருக்க, “அண்ணா இதை எனக்கு வாங்கிக்கொடு” என்று உப்பு, மிளகாய் தூள் போட்டு ஊற வைத்த மாங்காவை கை காட்டினாள்.
அதைப் பார்த்தும் நாக்கில் எச்சில் ஊற, “இரு நான் வாங்கிட்டு வரேன்” என்று இருவருக்கும் வாங்கிக்கொண்டு அதை சாப்பிட்டபடி வீடு நோக்கி நடக்க, திடீரென்று சடசடவென்று மழை பொழிய துவங்கியது.
“ஐயோ பேக் நனைந்துவிட்டால் அவ்வளவுதான்” என்று பிள்ளைகள் அங்குமிங்கும் ஓடி ஒதுங்கி நிற்க, “அண்ணா இப்படியே வீட்டுக்குப் போலாம் ரொம்ப ஜாலியாக இருக்கு” அவளின் விருப்பத்திற்கு மறுப்பு சொல்ல மனம் வராமல் சரியென்று தலையசைத்தான்.
கொட்டும் மழையில் இருவரும் நனைவதைப் பார்த்து, “புதுமழை நனைந்தால் காய்ச்சல் வந்துவிடும். அதனால் மழை நிற்கும் வரை இங்கேயே நில்லுங்க” என்று ரோட்டில் போகும் சிலர் சொல்ல அதை இருவரும் காதில் வாங்காமல் வீடு வந்து சேர்த்தனர்.