Mazhai – 15
Mazhai – 15
அத்தியாயம் – 15
மழையில் நனைந்து வந்த இருவரையும் பார்த்த விஜயலட்சுமிக்கு சிரிப்புதான் வந்தது. ஆனால் பிள்ளைகளை கண்டிக்காமல் விடுவது தவறென்று எண்ணி, “அண்ணனும், தங்கச்சியும் பிளான் பண்ணி நனைச்சிட்டு வந்திருக்கீங்க இல்ல” அவர்களை வாசலில் நிற்க வைத்து விசாரித்தார்.
அவரின் கோபம் உணர்ந்த தமையனோ, ‘விஜிம்மாகிட்ட உண்மையைச் சொல்லலாமா?’ என்று யோசிக்க, “அது வந்து” என்றவன் தொடங்கும்போது, அவன் கையைக் கெட்டியாக பிடித்துக்கொண்டு கண்களால் கெஞ்சினாள்.
விஜிக்கு கோபம் வந்தால் அவளை அடி வெளுத்துவிடுவார் என நினைத்து அவன் மெளனமாக, “மழையில் நனைஞ்சிட்டே மாங்காய் சாப்பிட்டா செமயா இருக்கும்னு அண்ணாதான் சொன்னான். அதுக்காக அண்ணனைத் திட்டாதீங்க. திவாண்ணா பாவம் இனிமேல் மழையில் நனையவே மாட்டோம்” என்று சரளமாக பேசிவிட்டு வீட்டிற்குள் குடுகுடுவென்று ஓடிவிட்டாள் சிற்பிகா.
“நான் அப்படி எல்லாம் எதுவுமே சொல்லல விஜிம்மா. இவ மாங்கா கேட்டான்னு வாங்கி கொடுத்த வரைதான் உண்மை” என்றான் பதட்டத்துடன்.
“அந்த வாலுக்கு தான் மழை என்றால் எவ்வளவு இஷ்டம்னு நமக்கு நல்லாவே தெரியுமே. அவ சொன்னதும் உன்னைத் திட்டுவேன்னு நினைச்சியா?” அவர் பாசத்துடன் அவன் தலையைக் கலைத்துவிட, ஈரம் அப்படியே இருந்தது.
“இங்கே பாரு தலையெல்லாம் ஈரமாக இருக்கு. இப்படியே விட்டால் ஜலதோஷம் பிடிச்சுக்கும். முதலில் போய் தலையைத் துவட்டிட்டு அப்புறம் ட்ரஸ் மாத்து” என்றவனை அங்கிருந்து அனுப்பிய கையோடு வீட்டிற்குள் நுழைந்தார்.
திவாகரை மாட்டிவிட்டு தப்பிச் சென்ற மகள் உடைமாற்றிவிட்டு சமத்துப்பெண்ணாக சோபாவில் அமர்ந்து டோரா பார்க்க, “இவ்வளவு சேட்டை செய்துவிட்டு வந்து உட்கார்ந்து இருப்பதைப் பாரு” என்று முனுமுனுத்த விஜி டிவியை ஆப் செய்துவிட்டு மகளை முறைத்தாள்.
“நீதானே மழையில் நனையலாம்னு சொல்லிட்டு, இங்கே வந்து அப்படியே பிளேட்டை மாத்துற” என்று நேரில் பார்த்த மாதிரியே சொல்ல, ‘இந்த அம்மா மட்டும் நம்ம என்ன சொன்னாலும் கண்டுபிடிக்கிறாங்க’ மனதிற்குள் நொடித்துக் கொண்டாள்.
அவளது பார்வையை உணர்ந்து, “என்ன பார்வை” என்று கேட்க,
“ஆமாம்மா! நான்தான் மழையில் நனையலாம் சொன்னேன் அதுக்கு இப்போ என்னங்கிறீங்க” என்று அவரிடம் சண்டைக்கு வர, விஜியின் கோபம் அதிகரித்தது.
“இப்போ எதுக்காக குரலை உயர்த்துற? நீ சவுண்டாக பேசினால் பொய் நிஜமாகிடுமா? பாப்பா இதெல்லாம் நல்லது இல்ல. இப்போ கொஞ்சம் பெரிய பெண்ணாக வளர்ந்துட்ட. இனிமேல் பொய் சொல்லும் பழக்கத்தை விட்டுவிடு” என்று மகளை எச்சரிக்கை செய்தார்.
“ஐயோ அம்மா எதுக்குதான் சின்ன விஷயத்தை இப்போ பெருசு பண்றன்னு எனக்கு சத்தியமா புரியல” என்றவள் கன்னத்தில் கைவைத்து புலம்ப, தாய்க்கோ மனம் பரிதவித்து.
“எனக்கு மட்டும் உன்னை பேசணும்னு ஆசை பாரு. இன்னைக்கு இங்கே வருகின்ற பழக்கம்தான் நாளைக்கு வரும். உன்னை ஒருத்தன் கையில் பிடித்துக் கொடுப்பதற்குள் எனக்கும் நிஜமாவே வயசாகிடும்” என கூறியவர் சமையலறை நோக்கி சென்றாள்.
“நமக்காக வாழ்வதுதான் அம்மா வாழ்க்கை. அடுத்தவங்க என்ன நினைச்சால் நமக்கென்ன. இப்போ என்ன அண்ணாவை மாட்டிவிட்டது தவறுன்னு சொல்றீங்க. இன்னைக்கு நடந்த பிரச்சனைக்கு நைட் ஒரு குல்பி வாங்கிக் கொடுத்து பிரச்சனையை சரி செய்துவிடுகிறேன். நீங்க கவலைபடாதீங்க” என்றவள் அந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க, அவளுடைய பேச்சு அவருக்கும் சிரிப்பை வரவழைத்தது.
“இந்த வாய் பேசும் உன்னை வக்கீலுக்கு தான் படிக்க வைக்கணும்” விஜி சொல்ல, “இந்த படத்தில பேசறமாதிரி பாயிண்ட்டாக பேசி கேஸை ஜெய்த்துவிடுவேன் அம்மா” மகள் கெத்தாக காலரைத் தூக்கிவிட, தாயின் மனம் குளிர்ந்து.
“அந்த நாளை எதிர்பார்த்து தான் காத்துட்டு இருக்கேன் என் கண்ணே” என்றவர் அவளை கிண்டலடிக்க, “அம்மா” என்று சிணுங்கினாள்.
எட்டு வயதில் குழந்தைகள் இவ்வளவு தூரம் பேசுவார்களா என்று நிறையப்பேர் நினைப்பதுண்டு. ஆனால் விஜயலட்சுமி மட்டும் அதற்கு விதிவிலக்கு.
சிறுவயதில் பிள்ளைகளின் மனதில் சில நல்ல கருத்துக்களை விதைக்கும்போது, அவர்கள் வளர்ந்து பெரியாளானதும் அந்த குணங்கள் பல நன்மைகளை மற்றவர்களுக்கு தரும் என்ற எண்ணம் உடையவர். அதனால் சிறு வயதில் இருந்தே அவளுக்கு அனைத்தையும் பக்கத்தில் இருந்து கற்றுக்கொடுத்தார்.
அவள் இவ்வளவு பேசுவதைக் கண்டு அவர் ஒருநாள்கூட வருந்தியது இல்லை. மாறாக டீன்ஏஜ் வயசை நெருங்கும்போது அவள் மனம் பக்குவமானதாக இருந்தால்தான் வரும் பிரச்சனைகளை குழப்பம் இல்லாமல் எதிர்கொள்ள முடியும் என்று முழு மனதுடன் நம்பினர்.
அவளுடன் பேசியபடி காபிபோட்டு மகளுக்கு கொடுத்துவிட்டு, “சிற்பிகா வீட்டு பாடத்தை முடிச்சிட்டு அப்புறம் டிவி பாரு” என்று சொன்னதற்கு, “சரிம்மா” என்றாள்.
அதற்குள் பாட்டி போட்டு கொடுத்த டீயை குடித்துவிட்டு, “சிற்பிகா” என்ற அழைப்புடன் வீட்டிற்குள் நுழைந்தான் திவாகர்.
“இந்த அண்ணா வேற வந்துடுச்சு” என்று புலம்பியபடி புத்தகத்தை எடுக்கச் சென்ற மகளைப் பார்த்து, உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள் விஜயலட்சுமி.
“வாடா! என்ன இன்னைக்கு எக்ஸாம் நல்லா எழுதினீயா?”
“ம்ஹும் வழக்கம்போலவே என்னால் முடிந்தளவு நல்லாவே எழுதி இருக்கேன்”
“இந்தா இதை சாப்பிட்டுவிட்டு போய் படி” என்று மிச்சரை போட்டு தந்தார்.
மூன்றாம் வகுப்பு படிக்கும் அவளுக்கு வீட்டிப் பாடம் எழுதுவது மட்டும் பிடிக்காத விஷயம். ஆனால் திவா அதை சாதாரணமாக விடுவதில்லை. முடிந்தவரை அவளை அதட்டி எழுத வைத்து விடுவான். அவன் அதை சாப்பிட்டு முடிப்பதற்குள் புத்தகங்களுடன் வந்த சிற்பிகா அமர்ந்து படிக்க தொடங்கிவிட, திடீரென்று மழை வர தொடங்கியது.
அந்த சத்தம்கேட்டு பின் வாசலுக்கு ஓடிய விஜயலட்சுமி கொடியில் காய்ந்திருந்த துணிகளை எடுக்க, “திவா அண்ணா மழை வருது பாரு” என்றாள் மெல்லிய குரலில்.
“இப்போ மறுபடியும் போய் நனையலாம்னு சொல்றீயா?” அவன் அடிக்குரலில் சீற, “கொஞ்சநேரம் கப்பல் விட்டு விளையாடலாமே” என்று சொன்னதற்கு மறுப்பாக தலையசைத்தவன், அவளது வீட்டு பாடத்தை சரியாக செய்ய சொன்னான்.
அவனது கண்டிப்பில் முகம் வாடியபோதும், கிளாசில் தனக்கு நல்ல பெயர் கிடைக்க அண்ணன்தான் காரணம் என்று அமைதியாக அவன் சொன்னதை செய்தாள். இரவு உணவிற்கு விஜயலட்சுமி சப்பாத்தி செய்ய மூவரும் அமர்ந்து சாப்பிட்டு முடித்தும், வீட்டின் வாசலில் கயிற்றுக்கட்டில் போட்டு பிள்ளைகள் இருவரும் அமர்ந்தனர்.
சில்லென்ற காற்று வீசி கவனத்தை ஈர்க்க, உடலெல்லாம் சிலிர்த்து அடங்கியது. இரவு நேரத்தில் நிர்மலமான இருந்த வானில் நட்சத்திரங்கள் மட்டும் பளிச்சென்று ஒளிவீச, அவைகளின் நடுவே வெண்ணிலவு வலம்வர தொடங்கியது.
இருவருக்கும் குடிப்பதற்கு பால் கொண்டு வந்து கொடுத்த விஜி வாசலில் அமர, “ஒன்னு.. ரெண்டு.. மூணு” என்று வரிசையாக நட்சத்திரங்களை எண்ணிய மகளைப் பார்த்து சிரிப்பு வந்தது.
ஒரு கட்டத்திற்கு மேல் குழப்பம் வந்துவிட, “நான் தினமும் முயற்சி செய்யறேன் இந்த நட்சத்திரத்தை மட்டும் எண்ணவே முடியல அம்மா” என்று சலிப்புடன் கூறினாள்.
அதைக்கேட்டு சத்தமாக சிரித்த திவாகர், “இந்த நட்சத்திரத்தை எண்ணவே முடியாது” என்றதும், அவளும் தலையாட்டி அந்த கருத்தை ஒப்புக் கொண்டாள். மரகதம் சமையலை முடித்த கையோடு அங்கே வந்து அமர்ந்துவிட, அவரும் விஜியும் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது எங்கேயோ ரேடியோ பாடும் சத்தம்கேட்டு, “சின்ன வயதில் நாங்க எல்லாம் சாப்பிட்டுட்டு இப்படித்தான் வெளியே உட்கார்ந்து இருப்போம். ஏதோவொரு வீட்டில்தான் ரேடியோ இருக்கும். அதை சவுண்ட் வைத்து எல்லோரும் அமைதியாக கேட்போம். அப்போ இலங்கை வானொலியில் அதிகம் பாடல்கேட்ட ஞாபகம்” என்றாள் விஜி பழைய நினைவுகளுடன்.
“அந்தகாலம் மாதிரி இந்த காலம் இல்லையே” என்றார் மரகதம்.
அதை உன்னிப்பாக கேட்ட சிற்பிகா, “அம்மா நீங்க ஒரு பாட்டுப் பாடுங்க” என்று தாய்க்கு அன்பு கட்டளை பிறப்பித்தாள்.
அவளுடன் திவாகரும் சேர்ந்துவிட, “சின்னபிள்ளைகள் கேக்குது இல்ல மறுப்பு சொல்லாதே” என்றார் மரகதம். அந்த இரவு நேரத்திற்கு தகுந்தாற்போல பாடலைத் தேடியவளின் மனதிற்குள் அந்த பாடல் உதயமாகவே, மெல்லிய குரலில் பாடினார்.
“தேனூறும் ராகம் நான் பாடும் நேரம்..
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே..
உல்லாச மேகம் ஊர்கோலம் போகும்…
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே…
கண்ணின் மணியே நீயும் உறங்கு…
ஆடாத தீபம் தான் என் இல்லம்…
பூங்காற்றுக்கும் தாங்காது என் உள்ளம்…
உன் அன்பாலே பொங்காதோ ஆனந்தவெள்ளம்…
கனவுகளே கனவுகளே இரவு என்னும்
தீபம் எரிகின்ற நேரம்…
உறவைத் தேடி வாருங்கள் கண்களில்
தென்றல் வீசும் கண்ணுறங்கு…
உன்னை நீயே மறந்து உறங்கு…
ஆகாயம் மண்மீது விழாது…
நம் சொந்தங்கள் எந்நாளும் மாறாது…
இனி என்போன்ற அன்னைக்கு ஏகாந்தம் ஏது…
உறவுகளால் ஒரு உலகம்…
இது ஒரு தோட்டம் கிளிகளின் கூட்டம்…
ஆட்டம் பாட்டம் ஆர்பாட்டம் கேட்கலாம்…
அன்னை நெஞ்சில் சாய்ந்திடுங்கள்…
இன்னும் கொஞ்சம் ஓய்வெடுங்கள்…”
அவரது இனிமையான குரல்கேட்டு தமையனின் தோள்சாய்ந்தபடி உறங்கிப்போன மகளைப் பார்த்து சிரித்தவர், “பாட்டு கேட்டால் தூங்கிடுவா” என்றவர் அவளைத் தூக்கிச்சென்று படுக்கையில் படிக்க வைத்துவிட்டு வந்தாள்.
அவளைப் பார்த்து புன்னகைத்த மரகதம், “நாங்க போய் படுக்கறோம்” என்று பேரனைத் தன்னுடன் அழைத்துச் சென்றுவிட, மீண்டும் தனித்துவிடபட்ட விஜியின் மனமோ, ‘இன்னைக்காவது இவர் குடிக்காமல் வீட்டிற்கு வருவாரா?’ என்ற கேள்வியுடன் வாசல்படியில் அமர்ந்து கொண்டாள்.
அதே நேரத்தில் அலுவலகத்தில் இருந்து காரில் கிளம்பிய வசந்தராஜ் பாருக்குச் சென்று குடித்துவிட்டு ட்ரைவிங் செய்தபடி வீடு வந்து சேர்த்தார். வீட்டின் வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம்கேட்டு விஜி நிமிர்ந்து பார்க்க, தள்ளாடியபடி இறங்கிய கணவனைப் பார்த்து எப்போதும்போலவே இன்றும் ஏமாந்து போனாள்.
வழக்கம்போலவே குடித்துவிட்டு வந்ததை நினைத்து கலங்கிய கண்களை சேலைத் தலைப்பில் துடைத்துகொண்டு நிமிர, “என்னம்மா சிபி தூங்கிவிட்டாளா?” என்ற கேள்வியுடன் மனைவியின் அருகே அமர்ந்தான் வசந்த்ராஜ்.
அவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், “உங்களுக்கு மனைவி, மகள், சொந்த வீடுவாசல், நல்ல வேலை, கைநிறைய சம்பளம் என்று எதிலும் குறைவில்லாமல் நிறைவான வாழ்க்கைத்தானே நமக்கு கொடுத்திருக்கிறார் கடவுள். அப்புறம் என்ன வேணும்னு கவலைப்பட்டு குடித்து உடலைக் கெடுத்துக்கிறீங்க?” என்றாள் ஆதங்கத்துடன்.
அவள் சொன்ன விஷயத்தை அமைதியாக கேட்டவன், “சோகத்தில் இருந்தால் குடிக்கணும்னு அவசியம் இல்லம்மா. நீ சொன்ன எல்லாமே எனக்கு கிடைச்சிருக்கு என்ற சந்தோசத்தில குடிக்கிறேன். மத்தவங்க மாதிரி நான் ஒன்னும் தொடர் குடிகாரன் இல்லையே!” என்றவரின் விளக்கத்தில் அவளுக்கு கோபம் அப்படியே பத்திக்கொண்டு வந்தது.
கணவன் கொடுத்த விளக்கத்தில் அவளுக்கு தலைவலி அதிகமாக, “உங்களோட இந்த பழக்கவழக்கம் சிற்பிகா மனதை ரொம்பவே பாதிக்குதுங்க. அவ அப்பா ஏன் இப்படி இருக்காருன்னு கேட்கிறாங்க. என்னால அவளுக்கு பதில் சொல்ல முடியல” தன் பாரத்தை கணவனின் தோளில் இறக்க வைத்துவிட்டு எழுந்து வீட்டிற்கு சென்றாள்.
திருமணமான இத்தனை ஆண்டுகளில் தன்னிடம் இப்படி கண்டிப்புடன் பேசாத மனைவி இன்று பேசியது அவரை வெகுவாக பாதிக்க, வீட்டிற்குள் செல்லாமல் காரின் சாவியை எடுத்துகொண்டு மீண்டும் வெளியே சென்றார்.
தன் பின்னோடு கணவன் வீட்டிற்குள் வராததைக் கவனித்த விஜயலட்சுமி, “இன்னும் வாசலில் என்ன செய்யறாரு” என்று வெளியே சென்று பார்க்க, அங்கே கணவனைக் காணவில்லை. ஏற்கனவே குடித்திருந்த கணவனை நினைத்து மனம் பதறவே, அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் குழப்பத்துடன் வீட்டிற்குள் நுழைந்தாள்.
கடிகாரத்தில் நேரம் ஓடிக்கொண்டே இருக்க, தன்னுடைய செல்போன் மூலமாக கணவனுக்கு அழைத்து சோர்ந்து போனவள் டைனிங் டேபிளில் உட்கார்ந்தபடி உறங்கிப்போன கொஞ்ச நேரத்தில் அவளது செல்போன் சிணுங்கியது.
அந்த சத்தத்தில் கண்விழித்த விஜியலட்சுமிக்கு அப்போதும் கணவன் வீடு வரவில்லையே என்ற எண்ணம் மேலோங்க, ‘ச்சே நான் அவ்வளவு கோபமாக பேசி இருக்க கூடாது’ என்று நினைத்தபடி அழைப்பை ஏற்று பேச, மறுப்பக்கம் சொன்ன தகவலைக் கேட்டு அவளின் தலையில் இடி விழுந்தது போல இருந்தது.
ஒரு நிமிடம் உலகம் சுழல்வதை நிறுத்தியதை போல ஒரு தடுமாற்றம் உருவாக, ஓரளவு தன்னை சமாளித்துக் கொண்டு, “எந்த ஹாஸ்பிட்டல்” என்று விசாரித்தாள்.
அவர்கள் சொன்ன மருத்துவமனையின் பெயரை மனப்பாடம் செய்தவள் கலங்கிய விழிகளை புடவை முந்தானையில் துடைத்துக்கொண்டு, “சிற்பிகா” என்று மகளை எழுப்பிட, “என்னம்மா” என்று சிணுங்கிய மகளைத் தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு மருத்துவமனைக்கு வீட்டைப் பூட்டிவிட்டு கிளம்பினாள்.
விடியற்காலை நான்குமணி என்றாலும் ஆள் ஆராவாரம் இல்லாத சாலையில் அழுதபடி நடந்த விஜிக்கு மகளை சுமப்பதுகூட பாரமாக தெரியவில்லை. கொஞ்சநேரத்தில் உறக்கம் கலைந்து கண்விழித்த சிற்பிகா, “அம்மா எங்கே போறோம்” எனக் கேட்டாள்.
அவளை கீழே இறக்கிவிட்டு, “அப்பாவைப் பார்க்க போறோம்” என்று சொல்லி மகளை சமாளித்தவளின் கண்களில் கண்ணீர் பெருகியது.
விஜயலட்சுமி மருத்துவமனைக்குள் நுழைந்து அவள் கணவனின் பெயரைச் சொல்லி விசாரிக்க, “ஓ அந்த ஆக்சிடென்ட் கேஸா? மருத்துவமனைக்கு பின்னால் இருக்கும் இடத்தில் போய் பாருங்க” என்றனர்.
தன்னுடன் மகள் வந்திருப்பதை மறந்து, அவர்கள் சொன்ன இடத்தை நோக்கி நடந்தவளின் மனம் படபடவென்று அடித்துக் கொண்டது. நெஞ்சில் ஒரு பயம் எழுந்து அவளை ஆட்டிவைக்க, அவர்கள் சொன்ன இடத்திற்கு சென்றாள்.
தாயின் பின்னோடு சென்ற சிற்பிகாவின் பார்வை கட்டிடத்தின் மீது இருந்த வாசகத்தை வாசித்தது. ‘பிணவறை’ என்ற சொல்லுக்கு அர்த்தம் புரியாமல், அங்கிருந்த பலரின் அழுகுரல் அவளை என்னவோ செய்தது. விஜயலட்சுமியிடம் உடலைக் காட்டி அடையாளம் காண ஸ்டேச்சரில் மூடிய துணியை விளக்கினார்.
சிதைந்த நிலையில் இருந்த உருவத்தை கண்ட சிற்பிகாவின் பார்வையில் அதிர்ச்சி அப்பட்டமாகத் தெரிய, விஜி தலை தலையாக அடித்துக்கொண்டு அழுதாள். தந்தையின் சிதைந்த உருவம் அவளின் மனதில் கல்வெட்டுப் போல ஆழப்பதிந்து போனது.