Mazhai – 17
Mazhai – 17
அத்தியாயம் – 17
அடுத்தடுத்து வந்த நாட்களில் தந்தையை நினைத்து அழுது காய்ச்சலை வரவழைத்து கொண்டாள். அத்துடன் விஜியின் அடியும் ஒன்றாய் சேர கண்ணைத் திறவாமல் கிடந்த தங்கையைப் பார்த்து அதிகம் துடித்தது திவாகர்தான்.
அவளின் இன்றைய நிலைக்கு தானும் ஒரு காரணம் என்று புரிந்ததும், அந்த குடியை அடியோடு மறந்தவன் அதை பழக்கபடுத்திய நண்பர்களின் சகவாசத்தையும் விட்டொழித்தான். ஆனால் அந்த நிகழ்விற்கு பிறகு பிடிவாதமாக பேசாமல் இருந்த சிற்பிகாவை சமாதானம் செய்வதற்குள் ஒரு வருடம் ஓடி மறைந்தது.
அந்த வருட இறுதியில் அவள் பெரிய பெண்ணாகிவிட, விஜியின் மனதில் மகளைப் பற்றிய கவலை அரிக்க தொடங்கியது. ஆம் இந்த சமுதாயத்தில் பெண் பிள்ளையை பொத்து பாதுகாத்து அடுத்தவன் கையில் பிடித்துக் கொடுப்பதற்குள் பெற்றவர்களுக்கு உயிர் பாதி போய்விடும்.
ஆரம்பத்தில் அவளின் சம்பளம் குடும்பத்தேவைக்கு போக மிச்சம் பிடித்ததை சேமித்தாள். ஆனால் சிற்பிகா வளர்ந்தபிறகு படிப்பு மற்றும் இதர செலவுகளுக்கு பணம் பத்தாமல் தாய் திண்டாடுவதைக் கண்ட சிற்பிகா, “அண்ணா நானும் உன்னோடு பேப்பர் போட வரட்டுமா?” என்று கேட்டாள்.
திவாகர் கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் சமயம் அது. அப்போது கிடைக்கும் வேலையை செய்து தன்னுடைய படிப்பையும் கவனித்துக்கொண்டு, பாட்டியின் உடல்நிலையையும் கவனித்து வந்தான். மரகதம் முதல் போல இல்லாமல் இப்போது எல்லாம் அடிக்கடி முடியவில்லை என்று படிப்பதால், வீட்டின் தேவைக்கும் பணம் அத்தியாவசியமான ஒன்றாக மாறிப்போனது மற்றொரு காரணம்!
“இல்லடா இந்த வேலை உனக்கு வேண்டாம்” என்றவன் சொன்னதைக் கேட்காமல் பிடிவாதமாக அவனுடன் பேப்பர் போட சென்றாள். அத்துடன் அதில் வரும் சம்பளத்தை தாயிடம் கொடுத்துவிட்டு சின்ன பொம்மைகளாக வாங்கி சேர்த்து வைக்க தொடங்கினாள்.
மாலை நேரங்களில் திவாகர் டியூசன் எடுக்க அதில் ஒரு மாணவியாக அமர்ந்து கவனமாக படிக்க தொடங்கினாள். விடுமுறை நாட்களில் மரகதம் பாட்டியுடன் பெட்டிக்கடைக்கு சென்று அவளால் முடிந்தளவு உதவி செய்வாள்.
நாட்கள் மாதங்களாக மாறி வருடங்களாக உருண்டோடியது. திவாகர் கல்லூரி படிப்பின் இறுதியாண்டின் முடிவில் இருக்கும்போது மரகதம் பாட்டியும் தவறிவிட்டார். அவரின் இழப்பில் துவண்டு போனவனை தேற்றிக் கொண்டு வந்தது சிற்பிகாவும், விஜயலட்சுமியும் தான்.
அவனுக்கு தேர்வுகள் நெருங்கும் முன்பே அவனுக்கு கேம்பஸில் வேலை கிடைக்க அதைப் பற்றி சந்தோசமாக வீட்டினருடன் பகிர்ந்து கொண்டான்.
அன்று இரவு மொட்டை மாடியில் அமர்ந்து பேசும்போது அவன் விஷயத்தை சொல்ல, “சூப்பர் அண்ணா. இப்பவே ஜாப் போனால் சீக்கிரம் லைப்பில் செட்டிலாக முடியும்” என்று கூறினாள்.
திவாகரின் வளர்ச்சியைக் கண்டு, “உன்னை அவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்த மரகதம் அம்மா இப்போது பக்கத்தில் இல்லாமல் போயிட்டாங்க. அது ஒண்ணுதான் எனக்கு ரொம்ப கவலையாக இருக்கு” என்ற விஜியின் குரலில் வருத்தமே மிஞ்சியது.
அவர் சொன்னதைக்கேட்டு கொஞ்சம் கவலையாக இருந்தபோதும், “பாட்டியும் இவ்வளவுநாள் நம்மளோடு இருந்ததே பெரிய விஷயம் விஜிம்மா” என்று அவன் சொல்ல,
“அவங்க நம்ம கூடத்தான் இருப்பாங்க. அதனால் இப்படி சோககீதம் வாசிக்காமல் பக்கத்தில் இருக்கிற குருமாவை கொஞ்சம் எடுத்துக் கொடு” என்று அவள் சிரிக்காமல் சொல்ல, மகளின் காதைப் பிடித்து திருகினாள் பெரியவள்.
“உனக்கு வாய்க்கொழுப்பு அதிகம் ஆகிடுச்சு” என்று தாய் சொல்ல,
“நீங்க இப்படி வகை வகையாக சமைத்துப் போட்டால் கொழுப்பு ஏறாமல் என்னம்மா பண்ணும்” என்று திவாகர் கூற,
“ஆமா தினமும் சிக்கன், மட்டன், மீன் என்று நேரத்திற்கு ஒரு நான்வெஜ் செய்யறாங்க பாரு” என்றாள் சிற்பிகா சலிப்புடன்.
அவள் வரிசையாக பட்டியல் இடும் உணவு வகைகளை கவனித்த திவாகரோ, “எங்க வீட்டு சைவப்பூனை எப்போது அசைவம் திக்க ஆரம்பிச்சது?” என்று அவளை கேலி செய்ய, இருவரும் சண்டை போடுவதை பார்த்து மனம் விட்டுச் சிரித்தாள் விஜி.
“நான் சைவப்பூனைதான் அதுக்காக இதை எல்லாம் பேசக்கூடாதா?” என்றவள் கோபத்துடன் முகத்தைத் திருப்ப,
“அசைவத்தை சாப்பிட்டால் எப்படி வாந்தி மட்டும் குடம் குடமா வருது. இப்போ இதெல்லாம் பேசும் பேசும்போது அருவருப்பில் வாந்தி வரவில்லையோ?” என்றவன் வாதாட,
“உங்களை மாதிரி ஈவு இரக்கம் இல்லாமல் உயிரைக் கொன்று சாப்பிடும் ரகம் நான் இல்ல. ஐயோ ஞாயிற்றுக்கிழமை நாள் கடைசி கோழியின் கழுத்தை அறுப்பது, மே என்று கத்தும் ஆட்டை காலைகட்டிப்போட்டு வெட்டுவது இது எல்லாம் கண்ணால் பார்த்தபிறகு எப்படி சாப்பிட முடியும்” என்றாள் முகச்சுளிப்புடன்.
“இங்கே பாரு கொன்றால் பாவம் தின்றால் போச்சுன்னு சொல்லி இருக்காங்க. அது புரியாமல் நியாயதர்மம் பேசி உயிரை வாங்காதடி செல்லப்பிசாசு” என்ற திவாகர் வாய்விட்டுச் சிரிக்க,
“உன்னோட நியாயத்தைத் தூக்கி குப்பையில் போடு. நான் என்ன சொன்னாலும் உனக்கு புரியாது போ” என்று சொல்லிவிட்டு எழுந்து செல்ல,
“உன்னைக் கட்டிக்க போகும் மகராசன் யாருன்னு தெரியலடி” என்றாள் பெரியவள் நமட்டுச் சிரிப்புடன்.
“அந்த மகராசனை எதுக்குமா இப்போ நினைக்கிற. அதுக்கு எல்லாம் இன்னும் நாளும் கிழமையும் இருக்கு” என்றவள் தலையைச் சிலுப்பிகொண்டு திரும்பி நடந்தாள்.
“உனக்கு மாப்பிள்ளையாக வருபவன் இரண்டு மடங்கு வாய்பேச தெரிந்தவனாக தான் உன்னை அடைக்க முடியும். உனக்கு இருக்கும் வாய்க்கு ஏதாவது எப்.எம்.மில் ஆர்.ஜே.வாக வேலைக்கு சேர்ந்துவிடு. அதுதான் உனக்கு தகுந்த வேலை” என்று அவளை வேண்டுமென்றே வம்பிற்கு இழுக்க, திவாகர் வெறும் பார்வையாளனாக மட்டுமே இருந்தான்.
“அப்படி அமைந்தால் எனக்குதான் அம்மா ஜாலி. எந்தநேரமும் கலகலப்பாக இருந்ததால் தான் மனசுக்கு நிம்மதியாக இருக்கும். அப்புறம் உன்னோட ஆசையைக் கூடிய விரைவில் நிறைவேற்றி வைக்கிறேன்” என்று அவள் விளையாட்டாக சொல்லிவிட்டு கீழே சென்றவளை நினைத்து கவலைக் கொண்டார்.
“இவளோட இந்த கலகலப்பு தொலையாமல் பார்த்துக்க நல்ல மாப்பிள்ளையாக பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கணும்” என்று விஜி சொன்னதை மனதிற்குள் குறித்துக் கொண்டான். பாவம் அவனிடம் கூட சொல்லாமல் அவள் திருமணம் செய்வாள் என்று அப்போது அவனுக்கு தெரியாது.
அடுத்தடுத்து வந்த நாட்களில் தேர்வை முடித்து அதில் தேர்ச்சி பெற்றான். கோவையில் ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அவன் வேலைக்கு செல்ல தொடங்கிய கொஞ்சநாளில் அவனது திறமையைக் கண்டு சென்னையில் இருக்கும் ஹெட் ஆபீசிற்கு அழைத்தனர்.
அதற்குள் இரண்டு வருடம் ஓடி மறைய, சிற்பிகா தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்து காலேஜில் அட்மிசன் போட்டாள். அந்த சமயத்தில் தான் திவாகருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு அமைந்தது. முதலில் விஜயலட்சுமி, சிற்பிகா இருவரையும் பிரிந்து செல்வதை நினைத்து வருந்தினான்.
அவன் அந்த வாய்ப்பைத் தட்டிக்கழிக்க நினைத்த சமயம், “ உன்னைத் தேடி வந்த வாய்ப்பை பயன்படுத்தி முன்னேற பாரு. அவளும் இன்னும் கொஞ்சநாளில் படிப்பை முடித்துவிட்டால், அவளுக்கு வரன் பார்க்கும்போது நீ பக்கத்தில் இருக்கணும்னு நினைக்கிறேன். இப்போது நீ அங்கே போய் இருந்தால் இன்னும் இரண்டு வருசத்தில் இந்தியாவிற்கு வந்து விடலாம்” என்று அவனுக்கு தைரியம் சொல்லி அனுப்பி வைத்தாள்.
அவன் ஊருக்குச் சென்ற முதல் இரண்டு வாரம் சாதாரணமாக நடமாடிய விஜயலட்சுமி மெல்ல முடியவில்லை என்று படுக்கையில் கிடந்த தாயைக் கவனிக்கும் பொறுப்பு அவள் தலையில் விழுந்தது.
ஆரம்பத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, “அவங்க மன அழுத்தத்தில் இருக்காங்க. அதனால் முடிந்தளவு உங்க அம்மாவுக்கு ரெஸ்ட் கொடும்மா. அப்புறம் அவங்களை நல்லா கவனிச்சுக்கோ. அவங்க இரவு எல்லாம் தூங்காமல் இருந்தால் இன்னும் ஆபத்து ஆகிவிடும். அதனால் நான் கொடுக்கும் மருந்துகளை நாள் தவறாமல் கொடு” என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தனர்.
திவாகர் இல்லாத நிலையில் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மதியம் வரை கல்லூரி சென்று திரும்புவதை வழக்கமாக வைத்திருந்தாள். அன்று வழக்கம்போல அவள் வீட்டிற்கு கிளம்பும்போது கல்லூரி வாசலில் காத்திருந்த தாயைப் பார்த்து அவளின் மனம் சந்தோஷத்தில் துள்ளிக்குதித்தது.
“அம்மா உங்களுக்கு உடம்பு நல்லாகிடுச்சா? என்னடா அம்மா இப்படி படுத்துட்டாங்கன்னு நினைச்சு நானே ரொம்ப பயந்துட்டேன் தெரியுமா? உங்களை இப்படி பார்த்த பிறகுதான் மனசுக்கு நிறைவாக இருக்கு” என்று தாயின் கரம் கோர்த்துக்கொண்டு வீட்டின் சாலையில் நடந்தாள்.
“இன்னும் என் மகளோட கல்யாணத்தைப் பார்க்கணும். இந்த திவாகருக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்து தரணும்னு எத்தனை கனவுகளை மனசில் வச்சிருக்கேன் தெரியுமா?” என்று சொல்லும்போது மழை பொழிய அதில் நனைந்துகொண்டே தாயும், மகளும் வீடு வந்து சேர்ந்தனர்.
அன்றிரவு மாத்திரை விழுங்கி படுத்த தாயை அணைத்துக்கொண்டு வெகுநாட்களுக்குப் பிறகு நிம்மதியாக உறங்கினாள் சிற்பிகா. மறுநாள் காலை கண்விழிக்கும்போது விஜியின் உடல் நெருப்பாக கொதித்தது.
அவளை மருத்துவரிடம் அழைத்துச் சென்றபோது, “இங்கே பெட்டில் அட்மிட் பண்ணிடும்மா” என்று சொல்ல, அவளும் சரியென்று தலையசைத்தாள்.
தன்னிடம் இருந்த தங்க செயின் ஒன்றை அடகில் வைத்துவிட்டு தான் இதுவரை சேமித்து வைத்திருந்த பணத்தை கட்டி தாய்க்கு மருத்துவம் பார்த்தாள். இந்த சமயத்தில் விஜியின் உண்மையான நிலையை திவாகரிடம் சொல்லாமல் நெஞ்சோடு மறைத்தவளின் படிப்பு பாதியில் நின்றது.
அடுத்த ஒரு மாதம் மருத்துவமனையில் சிகிட்சை பெற்றவளை வீட்டிற்கு அழைத்து வந்தனர். அன்று இரவே மூளைக்காய்ச்சல் வந்து இறந்து போன விஜியின் இறப்பு அவளை வெகுவாக பாதித்தது. அந்த தகவல் அறிந்த திவாகர் முடிந்தவரை அங்கிருப்பவர்களை சமாளித்து இந்தியா வர நினைத்தான்.
ஆனால் கடைசிவரை அது முடியாமல் போய்விட, “அண்ணா நானே பார்த்துக்கிறேன்” என்று சொல்லிவிட்டாள்.
அவர்களின் நல்ல குணம் அறிந்த அக்கம்பக்கத்தினர் சிலர் வந்து விஜியின் உடலை அடக்கம் செய்ய, அதில் முற்றிலுமாக நொறுங்கி போனாள் சிற்பிகா. வீட்டிற்கு நுழையும்போது தாய் வாசலின் அருகே நிற்பது போலவும், படிக்க உட்கார்ந்தால் டீ போட்டு தருவது போலவும், படுக்கையில் படுத்தால் தலையை வருடிவிடுவது போல என்று ஒவ்வொரு நாளும் தாயின் நினைவிலேயே கரைந்தாள்.
திவாகர் படிப்பதற்கு பணம் அனுப்புவதாக சொன்னதைக் காதிலேயே வாங்காமல் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு, தனக்காக ஒரு வேலையைத் தேடிக் கொண்டாள். அவள் வேலைக்கு சென்று திரும்பும்போது தான் எதர்ச்சியாக ஒருநாள் பஸ்ஸில் மிருதுளாவை சந்தித்தாள்.
பேருந்தில் அளவான கூட்டம் இருப்பதைக் கண்டு, “இன்னைக்கு ஸ்கூல் பசங்களுக்கு லீவ் போல. அதுதான் கூட்டம் ரொம்ப குறைவாக இருக்கு” என்று மிருதுளா பெருமூச்சுவிட, பக்கத்தில் அமர்ந்திருந்த சிற்பிகாவிற்கு சிரிப்பு வந்தது.
அவள் உடல் குலுங்குவதை வைத்து, “என்னங்க சிரிக்கிறீங்க.. இந்த பிள்ளைகள் தொல்லை இல்லாமல் இப்படி பஸ்ஸில் வருவது எவ்வளவு நிம்மதியாக இருக்கு தெரியுமா?” என்றாள் மிருதுளா.
அவள் தன்னிடம் தான் பேசுகிறாள் என்று உணர்ந்தவள், “நீங்க நினைக்கிறது ரொம்ப தப்பு தெரியுமா? பேருந்து பயணமே ஒரு அழகான அனுபவம். ஒவ்வொரு பிள்ளைகளும் ஏதோவொன்றை பேசிட்டு வந்தாலும் அவங்ககிட்ட இருந்து நமக்கு தெரியாத பல விஷயத்தை தெரிஞ்சிக்கலாம். மழலையின் சிரிப்பில் மட்டும் இல்ல மாணவிகளின் சிரிப்பில் கூட பட்டாம்பூச்சி அழகிய படபடப்பு இருக்கும்” என்றாள் புன்னகையுடன்.
சிற்பிகாவின் இந்த பேச்சு மிருதுளாவை வெகுவாக கவர, “ம்ஹும் உனக்கு நல்ல ரசனைதான். உன் வீடு இந்தபக்கம் தானா? படிக்கிறாயா வேலை செய்கிறாயா?” என்று இயல்பாக அவள் விசாரித்தாள்.
“இந்த இயர் தான் காலேஜ் சேர்ந்தேன். ஒரு மாசம் போவதற்குள் அம்மா தவறிட்டாங்க. அண்ணா வெளிநாட்டில் வேலையில் இருக்கிறான். நான் இங்கே வேலைக்கு போயிட்டு இருக்கேன்” என்றவள் சிரிப்புடன் விளக்கம் சொல்ல, மிருதுளாவின் மனம் வலித்தது.
“ஸாரிம்மா” என்றவள் மன்னிப்பு கேட்க, “பிறப்பும், இறப்பும் வாழ்க்கையில் ரொம்ப சகஜம் அக்கா. அதை ஏற்றுக்கொண்டு வாழ நம்மதான் பழகிக்கணும்” என்று சொல்லும்போது ஸ்டாப் வந்துவிட்டதாக கண்டக்டர் குரல்கேட்க, அவள் எழுந்து சென்றாள்.
அதன்பிறகு அவளது முகவரியைக் கண்டுபிடித்து விசாரித்ததில், ரொம்ப நல்லப்பெண் பெற்றவர்களை இழந்து தனிமையில் வசித்து வரும் விஷயம் அறிந்து அவளை முகிலனுக்கு மனம் முடிக்க கேட்டனர். அவளும் திவாகர் விருப்பம் இல்லாமல் சம்மதம் சொல்லிவிட, இந்த விஷயம் அறிந்து இப்போது பேசாமல் இருக்கிறான்.
அவன் தன்னுடைய கடந்தகாலம் விட்டு வெளியே வந்ததும், “இவளை எல்லாம் எவ்வளவு செல்லமாக வளர்த்தோம் தெரியுமா? கடைசியில் அம்மா இழப்பை எப்படித்தான் தாங்கிகிட்டு அதில் இருந்து மீண்டும் வந்தால் என்று இன்னைக்கு வரைக்கும் எனக்கு சத்தியமாக புரியல” என்றவன் குரல் வருத்தத்துடன் ஒலித்தது.
அவர்களின் கடந்த காலம் பற்றிய அனைத்து உண்மையும் தெரிந்து கொண்ட முகிலனுக்கு மனம் வலித்தது. இந்த உண்மைகளை அறியாமல் அவளை வார்த்தைகளால் வதைத்த தருணங்கள் நெஞ்சில் வந்து போக, ‘ஸாரிம்மா! உன்னை வருத்தப்பட வைக்க நான் அப்படி பேசல. இனிமேல் அந்த மாதிரி பேசவும் மாட்டேன். என்னால் முடிந்தவரை உன்னை சந்தோசமாக வச்சுக்குவேன்’ என்று மனதிற்குள் உறுதி எடுத்தான்.
அவ்வளவு பெரிய இழப்பில் இருந்து அவள் இலகுவாக மீண்டு வந்ததை நினைத்து கண்கலங்கிய முகிலனை ஏறிட்ட திவாகர், “எங்க வாழ்க்கையில் நடந்ததை சொல்லி உன்னையும் வருத்தப்பட வச்சிட்டேன். என்னை மன்னிச்சிருடா” என்று சொல்ல, அவனின் கரங்களை அழுத்திவிட்டு எழுந்து சென்றான்.