மழை – 20 

வீட்டினர் எவ்வளவோ கூறியும் கேட்காமல் அரசன் தொழிற்சாலையின் உள்ளே சென்று பார்ப்பதில் தீவிரமாக இருந்தான். 

‘ஏதேனும் ஆதாரம் சிக்கினால் நல்லது தானே? நாளையே காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்துவிடலாம்’ என்றெண்ணிய விக்னேஷ்வரன் அவன் உறுதியாக இருப்பதைப் பார்த்துத் தன் உதவிக்கரம் நீட்டினார்.

இருவரும் சேர்ந்து எங்கே எவ்வாறு எப்படி உள்ளே செல்வது என்று தொழிற்சாலையைச் சுற்றிப் பார்வையிட சென்றுவிட்டனர். திரும்பி வருகையில் அரசனின் சட்டையில் புதிதாக பட்டன் கேமரா குடியேறியிருந்தது. உள்ளே போகும் சுவர் பெரிதாக இருப்பதால் தான் மட்டும் உள்ளே சென்று வருவதாக கூறியிருந்தான் அரசன். 

ஒரு வழியாக வானமுடன் ஊடல் கொண்டு பகலவன் மறைய வானில் நிலவு அவதரித்து தன் குளிர்ச்சியை பூமிக்கு அனுப்பிப் பல மணிநேரம் கடந்திருந்தது. 

அன்றைய இரவு அரண்மனையில் இரவு விளக்குகள் மட்டும் ஒளிர அனைவரும் அவரவர் அறையில் திக் திக் மனதோடே தஞ்சமடைந்திருந்தனர். இரவு பதினோரு மணி போல் விடைப்பெற்று சென்ற அரசனை எண்ணித்தான் இத்தனை கலக்கமும்.

நடுக்கூடத்தில் வாசலைப் பார்த்து அமர்ந்திருந்தவர்களை தாத்தா போய் தூங்குமாறு விரட்ட, மனமின்றிதான் அறைக்குள் நுழைந்திருந்தனர்.   

மதி உறக்கம் வரும் என்று புரண்டு புரண்டு பார்த்தவள் பின் ஒரு கட்டத்தில் அதற்கு மேல் புரள முடியாமல் அரசன் அடிக்கடி உலாவும் பால்கனியைத் தஞ்சமடைந்தாள். 

அங்கிருந்து பார்த்தால் அந்த இருளிலும் வெண்மைநிற ஆடை போர்த்தியது போல் தெரிந்தது தொழிற்சாலையின் சுவர். அதனுள்தான் தன் எண்ணத்தின் நாயகன் இருக்கிறான் என்று தோன்ற அவள் பார்வை முழுவதும் அதன் வசமே.

அரசனோ நீண்ட கயிற்றை அங்கிருந்த கம்பத்திலும் தன் இடையிலும் கட்டினான். பின் தொழிற்சாலையின் பின்புறம் கட்டிடம் கட்ட பயன்படுத்தப்பட்டு தூக்கி வீசிய அந்த நீளமரக்கட்டையின் உதவியுடன் வேகமாக ஓடிவந்து தரையில் ஊன்றி குதித்து அதன் வேகத்தில் மேலெழுந்து உயரமான சுவரின் மதிலைப் பற்றியிருந்தான். பின் மெல்ல உள்ளே எட்டிப்பார்க்க யாரும் இருக்கும் அறிகுறியே இல்லை. அதன் மேல் ஏறி அமர்ந்தவன் நொடிப்பொழுதில் கீழே குதித்தான். மெல்லிய தோம் சதத்தைத் தவிர பெரிதாக எந்த சத்தமும் இல்லை.

பின் இடையில் கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்து அருகில் உள்ள தூணின் பின் மறைந்திருந்தான் யாரேனும் வருவார்களோ என்று.

காட்டில் மரத்தில் இருந்து குதித்தும், விலங்குகளிடம் இருந்து காத்துக்கொள்ள சிறு சத்தமின்றி அதன் கவனம் கவராவண்ணம் வேட்டையாடியதும் இப்போது கைக்கொடுத்து அரசனுக்கு.

சிறிது நேரம் கழித்தும் சத்தம் கேட்காமலோ இல்லை யார் வர போறா என்ற அசைக்க முடியா அலட்சிய நம்பிக்கையினாலோ யாரும் வராமல் போக அங்கிருந்து மெதுவே நடந்தான்.

வெளிச்சம் இங்கு அவ்வளவாக இல்லாததால் வெளிச்சப் பகுதியை நோக்கி காலடிகளை எடுத்து வைக்க நாலைந்து மனித தலைகள் தெரிந்தது. இருவர் கீழே பிளாஸ்டிக் சாக்கு விரித்து அமர்ந்திருக்க அருகில் ஒருவன் எரிச்சலில் கத்திக்கொண்டிருக்க இன்னொருவன் சமாதனம் செய்துக்கொண்டிருந்தான்.  

அரசனின் கை தானாக தன் சட்டையின் பட்டனை தொட்டு விக்னேஷ்வரன் தந்த பொருள் இருப்பதை உறுதிபடுத்தியது.

அந்த எரிச்சல்காரன், “டேய் என்னடா இன்னும் ஆள காணோம். எப்போவும் இந்நேரத்துக்கு வரவன் இப்போ காணோமே. லவட்டிகிட்டு போயிட்டனோ?” என்று இன்னொருவனிடம் கேட்க, அவனோ “அண்ணே என்னணே… அவனுக்கு அம்புட்டு தைரியம் எல்லாம் இருக்காது. வழில எதாவது பிரச்சனை வந்திருக்கும் இன்னும் கொஞ்ச நேரம் பாப்போம் வரலன்னா போன் அடிப்போம்” என்றான்.

ஆனால் சுமார் முக்கால் மணி நேரம் சென்றும் இவர்கள் காத்திருந்தவன் வராமல் போக எரிச்சல் கோப நிலை அடைய போனை எடுத்து யாருக்கோ அழைத்தான் அண்ணன் என்று அழைக்கபட்டவன்.

அங்கு என்ன சொன்னார்களோ? “ஹான்… சரி சரி சீக்கிரம் வா” என்ற பேச்சோடு முடித்தான்.

‘என்ன?’ என்பது போல் பார்த்தவர்களிடம், “இன்னக்கி பார்த்து செக் போஸ்ட்ல நம்மாளு எதோ அவசரம்ன்னு போயிட்டானாம். அதுக்கு பதிலா இன்னொருத்தன் இருக்க… இவனுங்க வராம அங்கேயே இருந்திருக்கானுங்க. கடைசில நம்மாளு வந்து அவனை இப்போதான் அனுப்புனான் போல, ஏற்காடு தாண்டிட்டேன் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவேன்னு சொல்றான். வாங்கடா முன்னாடி போய் நின்னு அவன் வந்ததும் எல்லாத்தையும் எடுத்து குடோன்ல வைப்போம். கொஞ்ச நேரம் தூங்கி காலையில் வேலையைத் தொடங்கணும்ல” என்றவாறு முன்னால் செல்ல மற்றவர்கள் அவனைப் பின்பற்றினர்.

அங்கிருந்தே ஒரு அறைக்குச் சென்றவர்கள் அறையின் விளக்கை எரியவிட்டு அதன் மற்றொரு வாயில் வழியாக வெளியே சென்றனர். அரசன் அவர்கள் சென்றதை அறிந்து உள்ளே எட்டிப்பார்க்க சில கட்டைகள், பிளாஸ்டிக் கவர்கள் ஓரத்தில் ஒரு நாற்காலி சதவீதம் இருந்தது குடோன். அவர்கள் சென்ற இடத்தை அடைய நினைக்க வாயில் புறமே அனைவரும் நின்றிருப்பதைப் பார்த்து பின்வாங்கினான். 

என்ன செய்யலாம் என்ன செய்யலாம் என்று மூளை வேக வேகமாக யோசிக்க கண்கள் அங்கு எரிந்துக்கொண்டிருந்த விளக்கில் நிலைத்து. பின் ஒரு முடிவெடுத்து கீழே இருந்த கட்டையை எடுத்தவன் வந்த வழியே சென்று மற்றொரு வாயிலில் நின்றான். 

அங்கிருந்தே விளக்கை குறிப்பார்த்து கையில் இருந்த மரக்கட்டையை வீச, பெரும் சத்தத்தோடு விளக்கு வெடித்துச் சிதறியது. அச்சத்தத்தில் மரக்கட்டை விழுந்த சத்தம் அமிழ வெளியே இருந்தவர்கள் திபுதிபு என நுழைந்தனர்.

“என்னடா லைட் வெடிச்சிருச்சி?” என்றவாறு அந்த அண்ணனாகப்பட்டவன் துணுக்குற்று தன் கைப்பேசியின் டார்ச் வெளிச்சத்தில் குடோனைத் துலாவ அரசன் வெளியேறியதால் அங்கொன்னும் இவர்களால் காண முடியவில்லை. அதற்குள் இன்னொருவன், “அண்ணே வண்டி கேட்கிட்ட வந்துருச்சி” என்று கூவினான். அதற்கு மேல் யோசிக்க முடியாமல், 

“டேய் நீ இந்த உடைஞ்ச பல்ப்ப கூட்டி விடு. நீ வண்டி வந்ததும் மேல ஏறி சரக்க இறக்கு நான் அப்படியே அதை உள்ள தள்ளுறேன்” என்றவாறு வேலை பிரித்துக் கொடுத்து வெளியேறினான். 

அறையில் தரையை கூட்டி விடும் சத்தம் சற்றுநேரம் கேட்டு நிசப்தமாக அரசன் உள்ளே நுழைந்தான். அரசனின் முன்புறம் கேமரா இருப்பதால் அவர்களைப் படம் பிடிக்குமாறு அறையின் நடுப்பகுதியில் வாயிலை பார்ப்பது போல் நிற்க, உள்ளேதான் வெளிச்சம் இல்லை. வெளியே ஒரு குண்டு பல்ப் போடப்பட்டிருந்ததால் அவர்களின் முகம் செயல்கள் அனைத்தும் தெளிவாகவே தெரிந்தது. 

இருளில் உற்றுப்பார்த்தால்தான் அங்கொரு உருவம் இருப்பதே தெரியும். சந்தேகம் வந்தால் அல்லவா உற்றுப்பார்ப்பது? அவர்கள் பின்புறம் திரும்பாமல் வண்டி வரும் பாதையில் விழி பதித்திருக்க அரசன் அவர்கள் பார்த்து விடுவார்களோ என்ற எண்ணமெல்லாம் அவர்களின் இத்தனை நேர செயல்களில் அமிழ்ந்து போக வாசலில் இருந்து இரண்டடி தூரமே இருக்கும் அளவு நெருங்கியிருந்தான்.   

அனைவரும் காத்திருந்த வண்டியும் வந்தடைந்தது. அதுவும் நேராக இல்லாமல் பின்னால் இருக்கும் சரக்கை எடுக்க ஏதுவாக திரும்பி ரிவர்ஸில் இவர்கள் இருக்கும் கட்டத்தின் வாசலில் நின்றது. ஏற்கனவே தாமதமாகியிருக்க அவசர அவசரமாக கயிற்றை அவிழ்த்து மேலே மூடியிருந்த கவரை விலக்கினர். 

அங்கே ஒரு இணுக்கு இடமில்லாமல் லாரி முழுக்க பெரிய பெரிய மரங்கள் அடுக்கி வைக்கப்படிருக்க அருகில் இருந்தவன் மேலேற ஆரம்பித்தான். இதுதான் என்று தெரியும் ஆனால் நேரில் காண்கையில் ஹோவென்று ஒரு துக்கம் மேலெழும்பி அரசனின் நெஞ்சை அடைத்தது.

அதனைக் கடினப்பட்டு உள்ளே இறக்க அதன் கடினத்தன்மை ஜீரணிக்க இயலா நிலையில் அவன் கண்களில் நீராய் தேங்கி வெளியேற முயன்றது.

மரம் செழித்து வளர கிளைகளை வெட்டி அதில் மரமும் செழித்து தானும் களிப்புற்று வளர்ந்ததெல்லாம் எங்கோ போக அவன் மனம் முழுவதும் நேற்று வானம் தொட ஆசைக்கொண்டு மணியின்றி சலசலத்த உயிர் இப்போது இருக்கும் நிலையை எண்ணி இரத்தக்கண்ணீர் வடித்தது.

அதற்குள் மேலேறியவன் திரும்பி பார்க்கவும் அரசன்  பக்கவாட்டு சுவரில் மறைந்தான். சுற்றுபுறத்தில் இருந்து கவனம் சிதறியதில் அவனின் கால் அங்கு மடித்து வைக்கப்படிருந்த வேறொரு கவரை மிதித்து அதற்கே உண்டான கர் புர் சத்தத்தை எழுப்பியிருந்தது.

ஒரு நொடி அனைவரும் திரும்பி பார்த்தனர். “என்னமோ உள்ள இருந்து சத்தம் வந்ததுல?” என்றவாறு ஒருவன் கேட்டு உள்ளே செல்லப் பார்க்க, அரசன் ஓரமாக சுவரோடு சாய்ந்திருந்தான். 

மனதினுள் பயம் பதட்டம் வருவது தான் இயல்பு ஆனால் இவனிற்கோ உள்ளே யாரேனும் வந்து தான் மாட்டினால்  அடித்துத் துவம்சம் செய்யும் வெறி. விக்னேஷ்வரன் கூறியிருந்தாரே மாட்டிக்கொண்டால் தவிர அடிதடியில் இறங்க கூடாதென்று. பெரிய பெரிய மூச்சுக்களோடு காத்திருக்க அதற்கு அவசியமில்லாமல் போனது. 

“முதலில் வேலையை முடிப்போம் பூனை கீன ஏதாவது இருக்கும்” என்று செல்ல நினைத்தவனை தடுத்துவிட்டதால் அரசன் வந்த வழியே சென்று கயிற்றைப் பற்றினான்.   

அரசன் அரண்மனைக்கு வந்து சேர்கையில் நேரம் அதிகாலை மூன்று மணியைத் தொட்டிருந்தது. பால்கனி வழியாக மாடிப்படி ஏறப்போகையில் ஏனோ உள்ளுணர்வு உந்த மேலே நிமிர்ந்து பார்த்தான் அவன். 

அங்கே அவனிற்காக காத்திருந்து காத்திருந்தே முதல் படியில் அமர்ந்தவாறு பக்கவாட்டு சுவரில் தலைசாய்த்து உறங்கியிருந்தாள் மதி. அவளைப் பார்த்ததும் மனதின் பாரம் பாதி குறைய உதட்டில் லேசாக மிக மிக லேசாக புன்னகை கூட அரும்பியது.

அவள் அருகில் நெருங்கி “மதி” என்று அழைக்க மனதின் அலைப்புறுதலில் ஆழ்ந்த தூக்கம் இல்லாததால் சட்டென்று முழித்துவிட்டாள்தான், ஆனால் தூக்க கலக்கத்தில் ஏன் இங்கு இருக்கிறோம் என்ற நியபகமின்றி ஒரு நொடி மலங்க விழித்தாள்.    

மூளையின் தூக்கமும் அகத்தின் குழப்பமும் முகத்தில் தெரிய அமர்ந்திருந்த தோற்றம் சிறு குழந்தையின் பாவனையை ஒத்திருக்க வேறு யாரேனும் என்றால் அள்ளிக்கொள்ள தோன்றும். 

அரசனிற்கு அப்படி ஒன்றும் தோன்றவில்லை போல, “எதுக்கு வெளிய தூங்கிட்டிருக்க? உள்ள போ… விடிய போகுது” என்று இயம்ப அவளுக்கு தூக்கம் முற்றிலும் தெளிந்துவிட்டது. 

“மாமா… என்னாச்சு. ஆதாரம் கிடைச்சதா உங்களுக்கு ஒன்னும் ஆகலையே” என்றவாறே எழுந்து அவனை ஆராய, “ஆமா கிடைச்சிருச்சி காலையில் அவங்க கிட்ட கொடுக்கணும்” என்றதோடு தன் பேச்சு முடிந்தது என்பது போல் தனதறைக்கு சென்றான். 

மதியும் முணுமுணுத்தவாறு பின்னால் வந்து அவளின் அறைக்கு செல்வதைப் பார்த்தப் பிறகே வழக்கம் போல் கீழே படுத்தான். உடல் அசதியாக இருந்தது ஒரு காரணம் என்றால் மனம் அதை விட அசதியாக இருந்தது. 

கண்ணை மூடினால் தொழிற்சாலையில் பார்த்த காட்சிகள் மனதில் ஓட, அன்று தன் பெற்றோர் இன்று மரங்கள் என்று பல உயிர்களை கொன்று குவித்த மனிதஅரக்கனைச் சுற்றி வந்தது. ‘இன்னும் தனக்குத் தெரியாமல் எத்தனையோ?’ என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை. 

எண்ணங்களின் சுழலில் சிக்கியவனை ஜன்னலில் இருந்து வந்த சூரியஒளியே மீட்டெடுத்தது. வேகமாக காலை கடன்களை முடித்து வெளிவர அவனிற்காக மொத்த வீட்டினரும் காத்திருந்தனர் மீனாம்பிகை தவிர. அவரிற்கு தெரிந்திருந்தால் பிரளயமே வெடித்திருக்கும்.

மகன்தான் போய்விட்டான் என்றால் அவனின் பிரதிபிம்பமாய் மீண்டு வந்த பேரனையும் ஆபத்தில் சிக்க விடுவதா என்று வீட்டை ஒரு வழி செய்திருப்பார். எளிதில் உணர்ச்சி வசப்படுபவர் கூட என்பதால் அவரின் உடல்நிலையை கருதி பிரச்சனையை முடிந்த அளவு சொல்லாமல் தவிர்க்கவே பார்ப்பார் தாத்தா. இப்போதும் அதுதான் நடந்திருந்தது.

சில பல விசாரிப்புகளுக்கு பிறகு நேற்று நடந்ததை அரசன் சுருக்கமாக விவரித்தான். கீதா அவனிற்கு பழச்சாறு தர அதனை குடித்து முடித்து விக்னேஷ்வரன் எப்போது வருவார் என்றும் கேட்டான்.

அவர்கள் விக்னேஷ்வரனிற்கு அழைக்கவும் நடந்ததை அறிந்தவர் தான் ஒரு மணிநேரத்தில் வருவதாக கூறவும், கீதா அரசனை ஓய்வெடுக்குமாறு கூறி அனுப்பி வைத்தார். அதனை அவர் மகளே கெடுக்க போவதை அறியாமல்.

அரசன் அறைக்குள் நுழைந்த அடுத்த நிமிடம் பின்னோடே வந்தாள் மதி கையில் பத்திரத்தோடு.  

“மாமா… இந்தாங்க பத்திரம். இது அப்புறம் உங்க ஆதாரம் எல்லாம் போலீஸ் கிட்ட போகும் போது தேவைப்படும் பத்திரமா வச்சிக்கோங்க. தாத்தா கிட்ட கொடுத்தேன் அவருதான் உங்க கிட்ட கொடுக்க சொன்னாரு”  என்றவாறு அவன் கையில் திணித்தாள்.

“சரி மதி” என்று அவன் வாங்கி பத்திரப்படுத்த அவளோ அங்கிருந்து நகராமல் அவனையே பார்த்திருந்தாள். அவள் தன்னையே பார்க்கவும், “என்ன மதி வேற ஏதாவது வேணுமா?” என்று கேட்டான். 

“ஹ்ம்ம்… ஆமா மாமா எனக்கு உங்க காதல் வேணும். அப்படியே நம்ம கல்யாணத்துக்கு சம்மதமும் வேணும்” என்று கட்லட் வேணும் என்பது போல் கேட்க அரசனின் காதருகே ரூபிணி தன்னைப் பற்றி பாட்டியிடம் சொன்னது மீண்டும் கேட்டது.

ஆம். அன்று ரூபிணி பேசியதைக் கேட்ட இன்னொரு ஜீவன் அரசனேதான். மதிக்கு என்ன பதில் சொல்வது என்ற குழப்பத்தில் சுத்தியவனுக்கு ஐயம் திரிபற மறுக்க வேண்டும் என்று முடிவெடுக்க வைத்த பேச்சல்லவா? 

“இல்லை மதி இது சரி வராதுன்னு தோணுது. இதை மறந்துரு. ஊருக்கு போ கொஞ்ச நாள் கழிச்சி உனக்கே தோணும் நாமளா இப்படி கேட்டோம்ன்னு” என்று பேசிக்கொண்டே போக மதியின் மனதினுள் பொங்கிக்கொண்டே வந்தது கோபம்.

“ஒஹ் அப்படியா? அப்புறம்” என்று கதை கேட்க, “நான் என்ன கதையா சொல்லுறேன்? அப்புறம்ன்னு கேட்குற… அப்புறம் உனக்கு பிடிச்சவன் உனக்கு வருவான் அவனை…” என்று கூறும் போதே, “போதும் நிறுத்துங்க மாமா… என்னை பத்தி நான் என்ன பண்ணனும் எப்படி பண்ணனும்ங்கறத பத்தி நீங்க கவலைப்பட வேணாம். என்னை உங்களுக்கு பிடிக்கல அதான் என்னை அங்க போக சொல்லி, இங்க நீங்க உங்களுக்கு பிடிச்ச வேறொரு பொண்ண கல்யாணம் பண்ணப் பார்க்குறீங்க” என்று மீண்டும் ரூபிணியை நினைத்துச் சொன்னாள். 

அரசன் மறுத்ததும் மதிக்கு மீண்டும் ரூபிணியின் நியாபகங்கள். அரசனுக்கும் சினமேறியது அவளின் கூற்றில், “மதீ… இப்போ இருக்குற நிலைமையில் என்ன பேச்சு இது. எனக்கு கல்யாணமே வேண்டாம் போதுமா. சத்தியமா இனிமேல் என் வாழ்…” என்கையில் அவள் அலறியிருந்தாள். 

சொன்னால் சொன்ன சொல்லை காப்பாற்றுபவன் ஆகிற்றே அதை அவள் காட்டில் இருக்கும் போதே உணர்ந்தவள் கூட. இவளின் மிரட்டலும் அவன் சத்தியமும் அதன் பின் நடந்த அனைத்தும் கண்முன் ஓட, “மாமா பேசாதீங்க…நோ” என்று கத்தி அவனின் வாயை இரண்டாம் முறையாக மூடினாள். 

ஆனால் அவன் இவளை விட பிடிவாதமாக இருக்க, அவளின் கையை பிடித்து உதட்டில் இருந்து பிரித்தவன், “வாழ்கையில…” என்று அடுத்த வார்த்தை உச்சரித்தான். மதி அவனுடன் சண்டையிட்டு கையை உருவி மீண்டும் வாயடைத்தாள். இந்த விளையாட்டில் இருவரும் நகர்ந்து படுக்கை அருகில் வந்ததை கவனிக்கவில்லை. 

அரசன் தலையை பின்புறம் சாய்க்கப்பார்க்க மதியும் எம்பி அவன் மேலேயே சாய கட்டில் அருகில் இருந்ததால் அதற்கு மேல் போக முடியாமல் அரசன் கால்தடுக்கி படுக்கையில் விழுந்தான். மதியின் கையையும் இறுக பற்றியிருந்ததால் அவளும் அவன் மேலேயே விழுந்து வைத்தாள். 

அவளின் இரு கைகளையும் அரசன் பற்றிக்கொண்டதால்  அரசனின் வாய் சுதந்திரம் அடைய, சொல்ல நினைத்த வார்த்தைகளை சொல்லி விடும் வேகம் அவனிற்கு. அதில் இருக்கும் நிலை மறக்க, “கல்யாணம் பண்ண…” என்று உச்சரித்தான்.

அவ்வளவு தான் தெரியும் அதற்கு மேல் அவனின் இதழ்கள் பேச முடியாதபடி சிறை செய்யப்பட்டது. இம்முறை மதியின் கைகளால் அல்ல இதழ்களால்.

மழை வரும்…

ஊருக்கெல்லாம் மழையாய் நீ இருக்க 

உன் மழையாக நான் வரவா?

 

 

error: Content is protected !!