Mazhai – 21

3f86117b81913869ae7d32e815677e45-a7149d31

Mazhai – 21

அத்தியாயம் – 21

வீட்டிற்கு வந்த மகன் பயணக்களைப்பு தீர ஓய்வெடுக்காமல் எங்கே கிளம்புகிறான் என்று புரிந்து கொண்ட மகேஸ்வரி, “முகில் ஒரு நிமிடம் உன்னிடம் கொஞ்சம் பேசணும்” என்று மகனைத் தடுக்க வந்தாள்.

அவர் பேசுவதைக் காதில் வாங்காமல் வாசலை நோக்கிச் சென்றவன்,  “நான் வந்தபிறகு பேசிக்கலாம் அம்மா” என்று முடித்துவிட்டு, அங்கிருந்து கிளம்பிவிட அவனது முடிவு என்னவென்று கணித்துவிட்ட சதாசிவம் மனதிற்குள் சிரித்துக் கொண்டார்.

அவருக்கு எப்போதும் மகனின் மீது தனி நம்பிக்கை இருந்தது. முத்த மகளான மிருதுளாவைவிட, முகிலன் கொஞ்சம் புத்திசாலி. எந்தவொரு விஷயத்திலும் அவனது முடிவு சரியாக இருக்கும் என்பதால் சில நேரங்களில் அவனிடம் கலந்தலோசித்து ஒரு முடிவிற்கு வருவது அவரது வழக்கம்.

சிற்பிகாவின் மீது ஆரம்பத்தில் கோபமாக இருந்தவன், நாளுக்குநாள் அவள் மீது தனி அக்கறை செலுத்துவதை மருமகளின் மூலமாக கண்டு கொண்டார். அத்துடன் வெளிநாடு செல்லும் முன்பு, தன்னவளின் பாதுகாப்பு பற்றி பேசிவிட்டு, அங்கே சேரணு வேலையில் சேர்ந்தபிறகு அவளை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் கட்டளையிட்டான்.

இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் அவளுக்காக யோசிக்கும் மகன் இன்று அவளை அழைத்து வர சென்று இருப்பதைக் கண்டு கொண்டவர், “நீ போய் சமையல் செய்யும் வேலையைக் கவனி. மிருதுளாவிற்கு சாப்பாடு எடுத்துட்டு போகணும் இல்ல” என்று மனைவியிடம் கூறிவிட்டு நியூஸ் சேனல் பார்க்க தொடங்கினார்.

 மருத்துவமனையில் நிரஞ்சன் தன்னுடைய மனைவியின் அருகே அமர்ந்திருக்க, சிந்து அண்ணியின் பக்கத்தில் நின்று தன்னுடைய அண்ணன் மகனைக் கொஞ்சிக் கொண்டிருந்தாள்.

“எங்க முகிலன் லண்டனில் இருந்து வருவதாக அம்மா சொன்னாங்க. அவன்  வந்ததும் போய் சிற்பிகாவை கூட்டிட்டு வந்துவிடுவான் இல்ல?” என்று கணவனிடம் கேட்டாள்.

அவன் பதில் சொல்லும் முன்பு, “அண்ணி நீங்க முகிலனை என்ன நினைச்சீங்க. நம்ம நினைக்கிற மாதிரி அவரு இல்ல. சிற்பிகா அப்போது சின்னப்பொண்ணு. அவளுக்கு குடும்பம் பற்றி எல்லாம் அவ்வளவு தெரியாது. அதுமட்டும் இல்லாமல் படிக்கணும்னு சொல்லிட்டே இருந்ததால் அவளுக்கு தொல்லை கொடுக்காமல் வேலையைக் காரணம் காட்டி வெளிநாடு போயிட்டாரு” என்று அவள் காரணத்தை சரியாக யூகிக்க, மிருதுளா அமைதியாக கணவனைப் பார்த்தாள்.

நிரஞ்சன் உதட்டில் விரல் வைத்து, ‘ஷ்.. சும்மா இரு! என்னதான் பேசறான்னு பார்க்கலாம்’ என்று கண்ணால் சைகை செய்ய அவளும் சரியென்று தலையசைத்தாள்.

“இதோ இப்போது அவ படிப்பை முடித்தவுடன் சார் கிளம்பி இந்தியா வந்துட்டார். உங்க குழந்தையை வீட்டுக்கு எடுத்துட்டுப் போகும்போது இருவரும் சேர்ந்துதான் மருமகனை வரவேற்க போறாங்க பாருங்க. அப்போ சொல்லுவீங்க இந்த சிந்து சொன்னது சரியாக போச்சுன்னு” என்றவள் அண்ணிக்கு பால் வாங்கி வர பிளாஸ்க்கை கையில் எடுத்தாள்.

அப்போது அவளின் கரம்பிடித்து அருகில் இழுத்த மிருதுளா, “நீ இன்னும் என் தம்பியை மறக்கவே இல்லையா?” என்று வருத்தத்துடன் கேட்க, அவள் இல்லையென தலையசைத்தாள்.

“அப்புறம் எப்படி அவனைப் பற்றி இவ்வளவு விஷயம் சொல்ற?” என்றாள் ஆச்சர்யத்துடன்.

“அதுவா அண்ணி! இப்போவெல்லாம் டிவி சேனல் பார்க்காமல் எப்.எம்.மில் நீங்காத நினைவுகள் நிகழ்ச்சி கேட்கிறேன். அதை தொகுத்து வழங்குவது நம்ம சிற்பிகாதானே?” என்ற கேள்விக்கு கணவனும், மனைவியும் குத்து மதிப்பாக தலையாட்டி வைத்தனர்.

“அந்த நிகழ்ச்சி ஸ்டார்ட் ஆகும்போது ஒரு கவிதை சொல்வா. அந்த கவிதை மோஸ்ட் ஆப் பார்ட் பிரிவு பற்றியும், சொல்லாத காதல் பற்றியும் தான் இருக்கும். அந்த நிகழ்ச்சியின் முடிவில் ஏதோவொரு விஷயத்தை பகிர்ந்துக்குவா. அப்படிதான் நிறைய விஷயம் தெரிஞ்சிகிட்டேன்” என்றாள் புன்னகையுடன்

“முகிலன் இங்கே வந்ததும் சிற்பிகாவை நேரில் சந்தித்து பேசி கண்டிப்பா ஒன்னு சேர்ந்துவிடுவாங்க” என்று சொன்ன தங்கையின் முகத்தில் எள்ளளவு கூட பொறமை இல்லை.அவளது இந்த மாற்றம் நிரஞ்சனின் மனதை நெகிழ வைத்தது.

 “உன்னை இவ்வளவு நிதானத்துடன் பார்க்க நிம்மதியாக இருக்கு சிந்து. இந்த மாற்றத்தைத்தான் நான் உன்னிடம் எதிர்பார்த்தேன்” என்று ஒரு அண்ணனை அவன் சந்தோஷப்பட, அவளும் சிரிப்புடன் தலையசைத்துவிட்டு விலகி சென்றாள்.

சிற்பிகாவைத் திட்டிவிட்டு திவாகர் அங்கிருந்து கிளம்பிச் சென்ற கொஞ்சநேரத்தில் வீட்டை சுத்தம் செய்து பொருட்களை அதனிடத்தில் நேர்த்தியாக வைத்துவிட்டு நிமிர்ந்து பார்க்கும்போது கடிகாரம் மணி பதினொன்று என்றது.

அன்று வழக்கத்திற்கு மாறாக வானம் திடீரென்று இருண்டது. அவளது மனம் ஓரிடத்தில் நில்லாமல் அங்குமிங்கும் அலைபாயவே, சற்றுநேரம் படிகட்டுகளில் அமரலாம் என்ற எண்ணத்துடன் காஃபி போட்டு எடுத்துக்கொண்டு படிகட்டில் அமர்ந்தாள்.

அவள் பருகிமுடித்து கப்பை கீழே வைக்க சடசடவென்று மழை பொழிய துவங்கியது. வானம் சில்லென்று தூவிய மழைத்துளிகள் அவள் மேனியை நனைக்க, மனமோ சூரியனைப்போல் கோபத்துடன் தகதகவென்று எரிந்தது. அவள் மனம் தன்னவனை மட்டுமே சுற்றி வர, எங்கிருந்தோ கேட்ட பாடல் அவளின் கவனத்தை ஈர்த்தது.

காலம் என்பது மாறும் வலி தந்த காயங்கள் ஆறும்

மேற்கில் சூரியன் மீண்டும் காலையில் கிழக்கில் தோன்றித்தான் தீரும்

நதியோடு போகின்ற படகென்றால் ஆகாதா…

ஆனாலும் அழகாக கரை சென்று சேராதா?

உயிரே என் உயிரே  ஒரு வாய்ப்பை தருவாயா?” என்ற பாடல் வரிகள் அவளுக்குள் இருந்த வலியை அதிகரிக்க செய்தது.

தனக்கென்று யாரும் இல்லாத நிலையில் பிடிமானம் இல்லாத இந்த வாழ்க்கையை வாழ்ந்தே தீர வேண்டுமா என்ற எண்ணம் கண்களில் கண்ணீரை வரவழைக்க, முடிந்தவரை உதட்டைக் கடித்து வந்த அழுகையை அடக்கினாள்.

ஆனால் மழையின் வேகம் அதிகரிக்க, அவளால் தன் வலியை மறைத்து கண்ணீரை அடக்க முடியாமல் வாய்பொத்தி எதையோ நினைத்து தேம்பி அழுதாள். அந்த சமயத்தில் வீட்டின் முன்பு பைக்கை நிறுத்தி இறங்கிய முகிலனின் பார்வை தன்னவள் மீது படிந்தது.

கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்குப் பிறகு தன்னவளை இந்நிலையில் சந்திப்பதை நினைத்து உள்ளம் வலிக்க, அவளுக்கு ஆறுதல் சொல்ல நினைத்து இரண்டடி எடுத்து வைத்தான்.

அதற்குள் பக்கத்து வீட்டில் இருந்து வந்த புவனா, “ஏய் என்னடி கொட்டும் மழையில் உட்கார்ந்து அழுதுட்டு இருக்கிற?” என்று அவளை அழைத்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள்.

அவளுக்கு துவட்டுவதற்கு துண்டை எடுத்து கொடுத்த புவனா, “முதலில் இந்த தண்ணீரை குடி” என்று சொம்பை அவளிடம் கொடுக்க, மறுக்காமல் அதை வாங்கி பருகிவிட்டு ஜன்னலின் அருகே சென்று அமைதியாக நின்றாள்.

“கொஞ்ச நேரத்திற்கு முன்னால் உங்க அண்ணா வைத்ததைப் பார்த்தேன். அண்ணனுக்கும், தங்கச்சிக்கும் என்ன சண்டை?” என்று அவள் விசாரிக்க, பாவம் வீட்டின் வாசலில் நின்றிருந்த முகிலனை இருவரும் கவனிக்கவில்லை.

அவள்  பதில் சொல்லாமல் மெளனமாக நின்றிருக்க, “அண்ணா வந்தும் நான் செய்தது தவறுன்னு சொல்லி அடிச்சிட்டான் புவனா. நீயே சொல்லு என்பக்கம் என்ன தவறு இருக்கு” என்று புரியாமல் கேட்க, “ஏன் அது உனக்கு தெரியாதா?” என்று கேட்டு அவளை மடக்கினாள்.

“நான் டைவர்ஸ் பேப்பரில் கையெழுத்து போட்டு தந்தது தவறா? என்ன பிரச்சனை இருந்தாலும் பேசி தீர்த்துக்கொள்ள முடியுமே என்ற ரீதியில் சொல்றீங்க” என்று இடைவெளிவிட, முகிலனின் பார்வை தன்னவளின் மீது படிந்தது.

“நீ சொல்லல என்றாலும் அதுதான் உண்மை. நீ முகிலன் அண்ணனிடம் மனம் திறந்து பேசி இருந்தால் பிரச்சனை வருவதற்கு வாய்ப்பு இல்லாமல் செய்திருக்க முடியும். அன்னைக்கும் இன்னைக்கும் நீ உன்பக்கம் மட்டும்தான் யோசிக்கிற” என்று தோழிக்கு எடுத்து சொல்லி புரிய வைக்க முயன்றாள் புவனா.

அவள் கற்சிலைபோல நிற்பதைக் கண்டு அவளின் பொறுமைக் காற்றில் பறக்க, “அந்த அண்ணன் மேல உயிரையே வச்சிருக்கிற? அப்புறம் எதுக்குடி உனக்கு இந்த வெட்டி பிடிவாதம்?” என்று கோபத்துடன் கேட்டுவிட, சட்டென்று அவளின் பக்கம் திரும்பினாள் சிற்பிகா.

அவளது கண்கள் கோபத்தில் சிவந்திருக்க, “நான் மட்டும் காதலித்தால் போதுமா? அவரு காதலிக்க வேண்டாமா? என்னைக்குமே ஒத்தமரம் தோப்பாக முடியாது. ஆரம்பத்தில் இருந்தே அவருக்கு என்னை பிடிக்கல. இன்னும் எத்தனை நாளைக்கு தான் அவரை இந்த வேண்டாத பந்தத்தில் பிடித்து வைக்க முடியும் நினைக்கிறன்னு மனசு கேட்கும்” என்றவள் பேச அவன் மனமெங்கும் வலி பரவியது.

“அதுக்கான பதில் மட்டும் எனக்கு கிடைக்கவே இல்ல. ஒருமுறை அடிபட்டு ஹாஸ்பிட்டலில் அட்மிட் பண்ணியிருந்தாங்க. அன்னைக்கு  நான் அழுகவே இல்லன்னு வீட்டில் எல்லோரின் கவனமும் என்மேல்தான் இருந்துச்சு. ஆனால் அன்னைக்கு நைட் கொட்டும் மழையில் ஆறுதல் சொல்ல ஆளில்லாமல் பைத்தியகாரி மாதிரி அந்த சிமிண்ட் பெஞ்சில் அமர்ந்து அழுதது எனக்கு மட்டும்தான் தெரியும்” என்று அவள் ஒருவிதமான இறுக்கத்துடன் சொல்ல, அவன் மனதில் சாரல் அடித்தது.

அவளது புலம்பல்களைத் தடுக்காமல் புவனா அமைதியாக இருக்க, “அன்னைக்குதான் முடிவு பண்ணினேன். பக்கத்தில் இருந்து வெறுப்பை வளர்ப்பதைவிட, கொஞ்சம் விலகி நின்று அவர் சந்தோஷமாக இருப்பதை பார்க்கலாம்னு. அன்னைக்கு வெளிநாடு போறேன்னு சொன்னவரின் கையில் ஈவு இரக்கம் இல்லாமல் விவாகரத்து பத்திரத்தை கொடுத்தேன்னு இத்தனை வருசத்தில் எத்தனை முறை என்னை பேசியிருப்பே?” என்ற கேள்விக்கு அவளால் பதில் சொல்ல முடியாமல் தலை குனிந்தாள்.

“அந்த முடிவை நான் எடுத்ததால் இன்னைக்கு உலகில் எங்கோ ஒரு மூலையில் அவருக்குப் பிடிச்ச பெண்ணோடு சந்தோஷமாக இருக்காரு. எனக்கு கிடச்ச வாழ்க்கையைத் தக்க வைத்துக்கொள்ள தெரியல என்றாலும், அவரின் நினைவுகளோடு இன்னும் எவ்வளவு நாள் வேண்டும் என்றாலும் என்னால இப்படியே வாழ முடியும்” என்று சொல்லிவிட்டு குளியலறைக்குள் சென்று மறைந்தாள்.

அவள் சொன்னதைக் கேட்ட முகிலனோ, ‘எனக்கு விருப்பமான பெண்ணோடு வாழ்கிறேனா? உன்னைத் தவிர என் வாழ்க்கையில் வேறொரு பெண்ணுக்கு இடம் இல்லையடி. எனக்கு உன் நினைவுகள் மட்டும் போதாது. என் உடலில் கடைசி மூச்சுகாற்று இருக்கும்வரை உயிராக நீ என்னுடன் இருக்கணும்’ என்று மனதிற்குள் நினைத்தான்.

அவள் முகம் கழுவிவிட்டு வெளியே வர, “புவனா” என்ற தாயின் குரல்கேட்டு, “அம்மாதான் கூப்பிடுறாங்க. நான் போயிட்டு அப்புறம் வர்றேன்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்ப, சட்டென்று அங்கிருந்து விலகினான்.

முகிலன் அங்கே நிற்பதைக் கவனிக்காமல் அவள் கடந்து சென்றுவிட, “உள்ளே வரலாமா?” என்ற கேள்வியில் சட்டென்று திரும்பி வாசலைப் பார்த்தாள் சிற்பிகா.

இடைபட்ட நாட்களில் அவனின் தோற்றத்தில் வசீகரம் அதிகரித்து கம்பீரம் கூடியிருக்க, அவளின் பார்வை அவனைவிட்டு அங்குமிங்கும் அசைய மறுத்தது. அவளது பார்வை தன்மீது படிவத்தை உணர்ந்த முகிலன் மனதிற்குள் சிரித்துக் கொண்டான்.

வாசலில் நின்றிருந்த கணவனைக் கண்டு புருவங்கள் சிந்தனையில் சுருங்கிட, “வாங்க” தடுமாற்றத்துடன் அவனை வரவேற்றாள்.

அவள் பேசிய எதையும் வெளியே காட்டிக் கொள்ளாமல், “என்ன சிபி எப்படி இருக்கிற? படிப்பு எல்லாம் முடிஞ்சிதா? இப்போவும் அந்த ஆர்.ஜே. வேலைக்கு போயிட்டு தான் இருக்கிறாயா?” என்று விசாரித்தபடி இயல்பாக அங்கிருந்த சோபாவில் அமர்ந்தான்.

திடீரென்று வந்து நிற்கும் அவனை நினைத்தும் மனதில் கலக்கம் சூழ்ந்த போதும், “ம்ஹும் இப்போது படிப்பு முடிந்தது. ஒரு சீனியர் லாயரிடம் ஜூனியராக பிராக்டீஸ் பண்ணிட்டு இருக்கேன்.கிடைக்கின்ற நேரத்தில் ஆர்.ஜே.வாக போயிட்டுத்தான் இருக்கேன்” என்று அவள் புன்னகைக்க, அவனது பார்வை அவளை அளவெடுத்தது.

இந்த ஆறு வருடங்களில் அவளின் மெலிந்த தோற்றம் மாறி, படிப்புடன் சேர்ந்து அழகும் அதிகரித்திருந்தது. சிவப்பு நிற சுடிதாரில் தேவதையாக தெரிந்தாள்.

கணவன் பார்வை தன் மீது படிவதை உணர்ந்து, “என்ன விஷயமாக வந்திருக்கீங்க?” என்று விசாரித்தாள்.

“இப்போதும் கேட்டால்தான் கிடைக்கும் பாலிசிதான் இருக்குதா? ஒரு கப் காபி கொடு. அதை குடிச்சபிறகு நிதானமாக பேசலாம்” என்று அவன் சொல்ல வேறு வழியின்றி எழுந்து சமையலறைக்குச் சென்றாள்.

அவனது பார்வை அந்த வீட்டை வலம்வர இரண்டு கரங்கள் வலுகட்டாயமாக இரும்பு சங்கிலியில் பிணைக்கப்பட்டு இருக்க, அதன் நடுவே ஒரு தனியாக இதயம் இருந்தது. அதில் காதல் என்று எழுதி இருந்தாள் சிற்பிகா.

நாம் பார்க்கின்ற படங்களில் வருகின்ற விஷயங்களில் நமக்கு பிடித்ததை மனம் சேகரித்து வைத்துக் கொள்வது போலவே, அவள் மனதை வெளிபடுத்தும் விதமாக அந்த பிக்சரின் கீழே தன் கைப்பட சொந்தமாக கவிதை எழுதி இருந்தாள்.

விரும்பாத இரு உள்ளங்களை

திருமணம் என்ற சங்கிலியில்

பிணைத்துவிட்ட உறவினர்

விலகி நின்று வேடிக்கை பார்க்க..

சங்கலியில் சிறைபட்ட இதயங்கள்

இணையாமல் இரு துருவங்களாக

மற்றவர்களின் மீது வெறுப்பை வளர்க்க..

இருவரின் மனமும் மாறும் நிலை

வந்தால் இணைக்கப்பட்ட சங்கலியின்

வழியாக ஒரு இதயம் உருவாகுமே…

அதன் பெயர்தான் காதல்!” என்று அழகாக கவிதை வரிகளை எழுதியிருந்தாள் சிற்பிகா.

அதற்குள் கையில் காபி கப்புடன் வந்த சிற்பிகா அவனுக்கு ஒன்றைக் கொடுத்துவிட்டு, தானும் ஒன்றை எடுத்துக்கொண்டு அமர்ந்தாள். வெகுநாட்களுக்குப் பின் தன்னவளின் கையால் காபியை பருகியவன், “ம்ஹும் ரொம்ப நல்லா இருக்கு” என்றான் ரசனையுடன்.

“நீங்க எதுக்காக வந்திருக்கீங்க?” அவளின் கேள்வியில் சட்டென்று நிமிர்ந்தவன், “வாழ்க்கையைப் பற்றி என்ன முடிவெடுத்து இருக்கிற?” என்றான் நிதானமாக!

அவனது கேள்வி அவளுக்குள் பிரளயத்தை உருவாக்கியது என்றாலும், “யாரோட வாழ்க்கை?” என்றாள் அவனைப் போலவே.

“நம்மளோட வாழ்க்கையைத்தான் சொல்றேன்” என்றவன் நம்ம என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுத்தான். அப்போது போலவே இப்போதும் அவனது நேசத்தைத் தவறாகக் கணித்தவளுக்கு, சுர்ரென்று கோபம் தலைகேறியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!