Mazhai – 24 Pre – Final

2d782233c124d64808754c16a0f3db4e-11d633e6

Mazhai – 24 Pre – Final

அத்தியாயம் – 24

தன்னவளை பக்கத்தில் இழுத்து அமர வைத்த முகிலன், ஒரு விரலால் அவளின் முகத்தை நிமிர்ந்தி கண்களைப் பார்க்க அது கலங்கியிருந்தது. இத்தனை ஆண்டுகளாக யாரிடமும் தோற்றுப் போகக்கூடாது என்று மழையில் அழுதவள் இன்று தன் முன்னே கலங்குவதை கண்டு அவளின் இமையில் இதழ் பதித்தான்.

பிறகு. “காலையில கூட நீ தங்கியிருந்த பழைய வீட்டில் போய் விசாரித்து முகவரி கண்டுபிடிக்க சொல்லிட்டு உன்னைப் பார்க்க வந்தேன். ஆனால் இப்போ உன்னிடம் பேச எங்க அப்பா – அம்மா வேற வந்திருக்காங்க. இந்நேரம் அவனுக்கு எல்லா உண்மையும் தெரிஞ்சிருக்கும்” என்றவன் ஓரளவு விஷயத்தை கணித்துவிட, அதில் தனக்கு தேவையானதை மட்டும் தேடிக் கோர்த்தாள்.

“அப்போ அவனோடு  இருந்தவரை நீங்க என் கணவர் என்ற விஷயம் அவனுக்கு தெரியாதா? நீங்களும் என்னை மாதிரியே பொய் சொல்லி அண்ணனை ஏமாத்தி இருக்கீங்களா?” என்றாள்.

அவளின் கேள்விக்கு  ஒப்புதலாக தலையசைக்க, “அண்ணா பாவம் இல்ல” என்றவளின் சோகம் எங்கோ ஓடிமறைய, தன்னவனை அருகே இழுத்து அவன் கன்னத்தில் இதழ்பதித்தாள். அவன் ஆச்சர்யத்துடன் அவளைப் பார்க்க, அவளின் முகம் வெக்கத்தில் சிவந்தது.

அவன் காரணத்தை என்னவென்று கண்களால் கேட்க, “நீங்க அப்போதே சொல்லி இருந்தால் அண்ணா ஊருக்கு வந்து என்னைத் திட்டி இருக்கும். அவரைத் தடுக்க நீங்களும் கிளம்பி வைத்திருந்தால் அப்புறம் எங்கே நான் வக்கீலுக்கு படிப்பது” என்றவள் கன்னத்தில் கைவைத்து சோகமாக கூற, அவனுக்கு இப்போது சிரிப்பு வந்தது.

“உனக்கு என்னம்மா நீ திவாகரின் தங்கச்சி. அவனோட அருந்தவாலு பிசாசு! உன்னைக்கூட அவன் சீக்கிரம் மன்னிச்சிடுவான். என்னைத்தான் வீட்டுக்குள் விட்டு துரத்தி அடிக்க போறான்” என்று அவன் தன் பங்கிற்கு சொல்ல, இப்போது கலகலவென்று சிரிப்பது சிற்பிகாவின் முறையானது.

கடிகாரம் கூவி இருவரின் கவனத்தையும் ஈர்க்க, “அப்போது இருந்த டென்ஷனில் சாப்பிடாமல் கிளம்பி வந்துட்டேன். நாளைக்கு என்னோட திங்க்ஸ் எல்லாம் எடுத்துட்டு வந்து விடுகிறேன். இப்போது என்னை கொண்டு போய் வீட்டில் விடுறீங்களா?” என்று கேட்க, “அதுக்கு முன்னாடி இருவரும் சேர்ந்து சாப்பிடலாம்” என்று அவளை அழைத்துக்கொண்டு கீழே சென்றான்.

அவர்கள் இருவரும் புன்னகையுடன் கீழே இறங்கி வருவதைக் கண்ட சதாசிவம், “எல்லோருக்கும் சாப்பாடு எடுத்து வைம்மா” என்று மனைவியிடம் சொல்ல, அவரும் சரியென்று தலையசைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

சிற்பிகா அத்தைக்கு உதவி செய்ய போய்விட, ஆண்கள் இருவரும் டைனிங் டேபிளில் அமர்ந்தனர். நால்வரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட, “அப்பா அக்காவைப் பார்க்க போகலையா?” என்றான் முகிலன்.

“மாப்பிள்ளை பக்கத்தில் இருந்து கவனிச்சுக்கிறார். அதனால் எங்களை  காலையில் வர சொல்லிட்டாரு” என்றார் மகேஸ்வரி.

“யாருக்கு என்னாச்சு?” சிற்பிகா தலையும் புரியாமல் வாலும் புரியாமல் குழப்பத்துடன் கேட்க, இத்தனை நாளாக அவர்களைப் பற்றி எதுவுமே தெரியாமல் இருந்ததை நினைத்து அவள் தலையில் அடித்துக்கொண்டாள்.

அவளின் செய்கையைக் கண்டு முகிலன் சத்தமாக சிரிக்க, “மிருதுளாவிற்கு ஆண் குழந்தை பிறந்திருக்கு. அதனால் ஹாஸ்பிட்டலில் இருக்காங்க” என்ற சதாசிவம் சொல்ல, “டேய் அவளை கேலி பண்ணாதே” என்று  மகேஸ்வரி மகனை அதட்டினார்.

இத்தனை வருட பிரிவுக்கு பிறகு இணைந்து உணவு உண்ட தருணத்தை மனதிற்குள் பொக்கிசமாக சேகரித்தனர். தங்களின் மனபாரம் மெல்ல குறைந்ததை எண்ணி பெரியவர்களின்  மனதில் நிம்மதி நிலையாக குடியேறியது.

நால்வரும் சாப்பிட்டு எழுந்ததும் வீட்டிற்கு கிளம்புவதாக சொன்ன மருமகளிடம், “இந்நேரத்தில் நீ போக வேண்டாம். உன்னோட திங்க்ஸ் எல்லாமே காலையில் கொண்டு வந்து தருவதாக திவாகர் போன் பண்ணி  சொன்னான்” என்று அவளை தடுத்துவிடவே இருவரும் தங்களின் அறைக்குச் செல்ல திரும்பினர்.

“முகில் காலையில் உங்க அக்காவை ஹாஸ்பிட்டலில் இருந்து அழைத்துக்கொண்டு நாங்க நம்ம வீட்டுப் போயிருவோம். திவாகர் வீட்டைக் காலிபண்ணிட்டு வந்து பொருட்களைக் கொடுத்தால் அதை ரூமில் வச்சிட்டு அவங்களோட வீட்டுக்கு வந்துவிடு” என்று சதாசிவம் சொல்ல அவனும் சரியென்று தலையசைத்தான்.

அவர்கள் மீண்டும் மாடியேற செல்லும்போது மகேஸ்வரி ஏதோ சொல்ல மருமகளை அருகில் அழைக்க, “நீ வா” என்று சொல்லி மனைவியை அழைத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தார்.

தங்களின் அறைக்குள் நுழைந்ததும் கதவை அடைத்து தாழ் போட்டுவிட்டு வேகமாக வந்து படுக்கையில் சரிந்தவனிடம், “என்ன சார் இவ்வளவு சீக்கிரம் தூங்க போறீங்க” என்றவளின் கரம்பிடித்து இழுத்து மார்பில் போட்டு அணைத்துக் கொண்டான்.

அவள் என்னவென்று பார்வையால் வினாவிட, “இன்னும் உன்னோட அண்ணனை சமாளிக்கணும். அதுமட்டும் இல்லாமல் இப்போது நீ என் கைக்குள் இருப்பதே மனசுக்கு நிறைவாக இருக்கு. உன்னை இப்படியே அணைச்சுகிட்டு தூங்கினால் மட்டும் போதும்” என்றவன் அவளின் நெற்றியில் இதழ்பதித்து, “குட் நைட்” என்றான்.

தன்னவனின் நெஞ்சினில் தலைசாய்த்த சிற்பிகா கண்மூடி உறங்க, அவளை அணைத்துக்கொண்டு உறங்கிப் போனான். இத்தனை வருட காத்திருப்பு கைசேர்ந்த திருப்தியில் இருவரும் நிம்மதியாக தூங்குவதைக் கண்ட நிலவு மேகத்திற்குள் மறைந்தது.

இவர்களுக்கு முன்பே எழுந்த பெரியவர்கள் இருவரும் மருத்துவமனைக்கு கிளம்பிச் சென்றிருக்க, அதன்பிறகு எழுந்த முகிலன் – சிற்பிகா இருவரும் குளித்து தயாராகி கீழே வரும்போது வீட்டின் வாசலில் கார் வந்து நின்றது. காரின் முன்பக்க கதவைத் திறந்துகொண்டு நிரஞ்சனும், சதாசிவமும் இறங்க, கையில் குழந்தையுடன் கீழே இறங்கிய மிருதுளாவைக் கண்டு சந்தோஷத்துடன், “அண்ணி” என்ற அழைப்புடன் ஓடினாள்.

அதற்குள் மகேஸ்வரி ஆரத்தி எடுத்து வரவேற்க, “அக்கா” என்ற அழைப்புடன் நெருங்கிய முகிலன் கையில் இருந்த குழந்தையை வாங்கிட, தன்னை நோக்கி வந்த சிற்பிகாவை தழுவிக் கொண்டாள்.

பரஸ்பர நலவிசாரிப்புக்குப் பிறகு பெண்கள் இருவரும் வீட்டிற்குள் நுழைய, “அக்கா என் மாப்பிள்ளை அப்படியே மாமா மாதிரி இருக்கான்” என்று சொன்ன தம்பியின் தலையில் நறுக்கென்று கொட்டினாள்.

அவன் தலையைத் தேய்த்துக்கொண்டு, “என்ன அக்கா?” என்று சிறுபிள்ளைபோல சிணுங்க, “மருமகனைப் பார்க்க ஹாஸ்பிட்டல் வராமல் இங்கே என்னடா பண்ணிட்டு இருந்தே” என்றாள் தமக்கை பொய் கோபத்துடன்.

“அதுவா இவனுக்கு ஜோடிக்கு ஆள் வேணும் இல்ல. அதுதான் என் மனைவியை சமாதானம் செய்து வீட்டுக்குக் கூட்டிட்டு வரும் வேலையில் தீவிரமாக இருந்தேனா? அதனாலதான் ஹாஸ்பிட்டல் பக்கம் வர முடியல” என்றவன் கிண்டலும் கேலியுமாக உண்மையைப் போட்டு உடைக்க, “ஐயோ” என்று சிணுங்கலோடு கணவனின் தோள் சாய்ந்தாள் சிற்பிகா.

ஆரம்பத்தில் ஏட்டிக்குப் போட்டியாக செய்யும் இருவரும் இவ்வளவு தூரம் மாறி இருப்பதைக் கண்ட நிரஞ்சன், “என்னடா இப்படி எல்லாம் பேசற? உன்னை கோவிலுக்கு கூட்டிட்டுப் போய் மந்திரிச்சு விடணும்னு நினைக்கிறேன்” என்றவன் சொல்லிவிட்டு சிரிக்க,

“ஏற்கனவே அவன் மந்திரிச்சிவிட்ட மாதிரிதான் இருக்கான்” என்று மிருதுளா கணவனுடன் சேர்ந்து தம்பியை கிண்டலடித்தாள்.

முகிலன் சத்தமில்லாமல் சிரித்தபடி பின்னதலையைத் தடவ, “என்ன நீங்களும் சேர்ந்து அவரை கிண்டல் பண்றீங்க?” என்று இருவரிடமும் சண்டைக்கு வர, அடப்பாவி என்று இருவரும் வாயைப் பிளந்தனர்.

அதற்குள் அங்கே வந்த மகேஸ்வரியிடம், “அம்மா இங்கே பாரேன் உன் மருமகள் என்னை வம்புக்கு இழுக்குறா? என் தம்பியை திட்டக்கூடாதுன்னு எனக்கே ஆர்டர் போடுற. இங்கே வந்து என்னன்னு கேளு” என்று சத்தமாக சொல்ல, ‘மாமியாரிடம் மாட்டி விட்டுடேனே’ என்று சொல்லி கண்களால் சிரித்தாள்.

“நீ கட்டிவைத்த காலேஜ் போற பொண்ணு சிற்பிகான்னு நினைச்சியா? இப்போ இருப்பது சிற்பிகா முகிலரசன் பி.ஏ.பி.எல். அதனால் வீண் வாக்குவாதம் பண்ணி முக்குடைப்பு வாங்காதே அவ்வளவு தான் சொல்வேன்” என்று மகேஸ்வரி மருமகளுக்கு சப்போர்ட் போட, “அத்தை, அம்மா” என்று நிரஞ்சனும், மிருதுளாவும் ஒரே நேரத்தில் கத்தினர்.

“அம்மா சூப்பர்மா. அப்பாவை திருமணம் செய்த நாளில் இருந்து இன்னைக்கு தான் புத்திசாலிதனமாக யோசிச்சிருக்கிற? எல்லாம் உன் மருமகள் டிரைனிங்கா” என்றவன் பொய்யாக புகழாரம் சூட்ட, கொஞ்ச நேரம் சென்றபிறகே அவன் சொன்ன முழு அர்த்தம் அங்கிருக்கும் அனைவருக்கும் விலகியது.

“என்னை முட்டாள்னு சொல்றீயா?” என்று சதாசிவம் கேட்க, “என் புருஷனை எதுக்குடா வம்புக்கு இழுக்கிற” என்று மகனிடம் சண்டைக்கு வந்தார் மகேஸ்வரி.

இப்படி கொஞ்சநேரம் அவர்களுக்குள் நடக்கும் வாக்குவாதத்தில் அனைவரும் சந்தோசமாக இருக்க, வீட்டின் வாசலில் லாரி வந்து நிற்கும் சத்தம் கேட்டது. எல்லோரின்  கவனமும் வாசலின் பக்கம் திரும்ப, “ம்ஹும் எல்லா பொருளையும் கொண்டுபோய் அந்த ரூமில் வைங்க” என்றான் திவாகர்.

இரண்டு வேலையாட்கள் பொருட்களையும் கொண்டுபோய் ரூமில் வைக்க, “வாங்க அண்ணா” என்றவள் அவனை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.

“அண்ணா இவர் முகிலரசன். என்னோட கணவர்” என்று சிற்பிகா தமையனுக்கு அறிமுகப்படுத்த, அவனை முறைத்துவிட்டு அமைதியாகிவிட்டான் திவாகர்.

அங்கிருக்கும் மற்றவர்களிடம் அவன் இயல்பாக உரையாடிய போதும் முகிலனிடம் பேசாமல் விலகி செல்வதைக் கண்ட மிருதுளா, “என்ன திவாகர் நீ இவனோட ஃப்ரெண்ட்தானே? அப்புறம் ஏன் அவனிடம் பேசாமல் விலகி போற?” என்றாள்.

“நான் உங்க தம்பிக்கு நண்பனாக இருந்திருந்தால் அவன் ஆறு வருஷம் உண்மையை மறைத்திருக்க மாட்டானே? நான் எவ்வளவு விஷயம் இவனை நம்பி சொல்லி இருப்பேன். ஒரே ஒரு முறை சிற்பிகாதான் என்னோட மனைவின்னு இவன் சொல்லவே இல்ல தெரியுமா?” என்றவன் கோபத்துடன் நண்பனை முறைக்க, முகிலன் அவனை எப்படி சமாளிப்பது என்று யோசித்தான்.

“அப்பா – அம்மாவிடம் சொல்லாத விஷயத்தைக்கூட நண்பர்களிடம் பகிர்வாங்க. ஆனால் இவன் என்னிடம் ஒரு விஷயத்தைக் கூட சொல்லல. ஒவ்வொரு முறை தங்கச்சியை நேரில் பார்த்தால் உன்னைப் பற்றி சொல்றேன்னு கிண்டல் பண்ணுவேன் அப்போகூட வாய் திறக்கல” என்றவன் இடைவெளிவிட, சிற்பிகா என்ன செய்வது என்று புரியாமல் கையைப் பிசைந்தாள்.

“மேடம் இங்கிருந்து சொல்லும் பொய் அப்படியே நிஜமாக்குவான். அவளுக்காக புடவை எடுத்து இருப்பதாக இவ சொன்னால், அதை எடுத்து வைத்துக்கொண்டு நேரில் போய்தான் கொடுக்கணும்னு சொல்வான். ஒவ்வொரு முறை அவள் மெசேஜ் செய்யும் விஷயங்களை சொல்லும் முன்னாடியே கேட்டு தெரிஞ்சுக்குவான்” என்று சொல்ல அவன் பக்கம் இருக்கும் வலியை மற்றவர்கள் புரிந்துக்கொள்ள, கணவனை திகைப்புடன் ஏறிட்டாள் சிற்பிகா.

அவளது பார்வையை சந்திக்க முடியாமல் வேறுபக்கம் அவன்  பார்வையைத் திருப்ப, “அவளோட படிப்பைப் பற்றி அக்கறையாக விசாரிப்பான். அதுக்கு ஏதாவது ஹெல்ப் கேட்டால் தயங்காமல் என்னிடம் சொல்லு நான் அப்பா – அம்மாவிடம் சொல்லி செய்ய சொல்றேன்னு சொல்வான், அப்போகூட உன் தங்கச்சியைத்தான்  கல்யாணம் பண்ணிருக்கேன்னு சொன்னதே இல்ல.” என்றான்  ஆதங்கத்துடன்.

“இங்கே இருந்திருந்தால் அவளோட படிப்பு பாதியில் நின்னு போகும்னு வெளிநாடு வந்ததாக சொல்வான். எத்தனை நாள் இவனைப் பார்த்து நான் வருத்தப்பட்டு இருக்கேன்” என்றவனின் தவிப்பை உணர்ந்த மற்றவர்கள் அமைதியாக இருக்க அவன் மட்டுமே பேசினான்.

“ஒருநாளா இரண்டு நாளா ஆறு வருஷம் பிரிவு சாதாரண விஷயமா? விடுமுறை கிடைத்தால் ஊருக்குப் போய் எல்லோரையும் பார்த்துவிட்டு வான்னு சொல்வேன். அங்கிருந்து அசையக்கூட மாட்டான்” என்று தன்னுடைய மனதில் அடக்கி வைத்திருந்த அனைத்தையும் அவன் கொட்டித் தீர்க்க, முகிலன் சொல்லாமல் மறைத்த விஷயம் வெட்டவெளிச்சம் ஆனது.

கடைசியாக, “சிற்பிகா தான் செய்த தவறால் உண்மையை மறைத்தால் சரி. இவனுக்கு அவளைப்பற்றி உண்மையைத் தெரிந்து கொள்ள என்னை பகடைக்காயாக மாற்றியதைக் கூட விட்டுவிடலாம். அவ என் மனைவின்னு உண்மையை அவன் சொல்லி இருந்தால், என் தங்கச்சிக்கு இவ்வளவு நல்ல மாப்பிள்ளைக் கிடைத்திருக்குன்னு நினைச்சு சந்தோசமாக இருந்திருப்பேனே! அதை ஏன் அவன் செய்யவே இல்ல” என்ற திவாகர் கேள்விக்கு அங்கிருக்கும் யாராலும் பதில் சொல்ல முடியவில்லை.

அதுவரை அமைதியாக இருந்த முகிலன், “சாரிடா! உன்னிடம் சொல்லாமல் இருந்தது என்னோட தவறுதான். ஆனால் உன்னிடம் சொல்லக்கூடாது என்று திட்டம்போட்டு மறைக்கல. அப்போ எங்களுக்கு  நடுவே காதலை பகிர்ந்துக்காமல் நான் விலகி நின்ற சமயம். உன்னிடம் நான் உண்மையைச் சொல்லி நீ  சிற்பிகாவிடம் சொல்லிவிட்டால் அவளோட கவனம் படிப்பு செல்லாது என்றுதான் சொல்லல” என்று அவன் தன்பக்கம் இருக்கும் நியாயத்தைக் கூறினான்.

“என்மேல் உனக்கு இருந்த நம்பிக்கை அவ்வளவுதானா?” என்றவனை இரண்டே எட்டில் நெருங்கிய முகிலனைக் கொலைவெறியுடன் பார்த்தான்.

“இங்கே பாருடா! உன்மேல் செம காண்டில் இருக்கேன். என்னை சமாதானம் செய்ய பக்கத்தில் வந்து நல்ல வாங்கிக்காதே” என்றான்  கோபத்துடன்.

“என்னடா செய்வ?” என்றவன் பக்கத்தில் செல்ல, “முகில் வேண்டாம்டா” என்றவன் சொன்னதைக் காதில் வாங்காமல் தோளில் கைபோட, அவனது கோபம் எல்லை கடக்க தன்னையும் அறியாமல் முகிலனின் கன்னத்தில் பளார் என்று அறைய, அங்கிருக்கும் அனைவரும் அதிர்ந்து நின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!