mazhai-24

mazhai-24

மழை – 24

“வாயை மூடு மதி” என்ற அதட்டலில் மதியின் வாய் மூடுவதற்கு பதிலாக இன்னமும் வேகத்துடன் பேசியது, “மாட்டேன் மாமா… உங்க மனசுல நான் இருக்கேனா இல்லையா? இருக்கேன் ஆனா எனக்கென்னமோ அதை ஒத்துக்கொள்ள உங்களுக்கு மனசில்லைன்னு தோணுது. இவளே தான காதலை சொன்னா இவளே தானா…” என்று கூறும்போதே அரசன் அவளின் வாயைத் தன் கைகளால் மூடியிருந்தான். (உங்க ரெண்டு பேருக்கும் இதுவே பொழப்புடா சாமி)

அவளோ மூக்குமுட்ட வந்த கோபத்தில் அவனின் கையைக் கடிக்க முயற்சிக்க, “இதுக்கு மேல எதாவது ஏடாகூடமா பண்ணின அப்புறம் காலையில் நீ பண்ணுனதை இப்போ நான் பண்ண வேண்டிவரும்” என்ற வார்த்தைகள் அவளின் காதில் நுழைந்து மூளையைச் சென்றடைய சிறிது நேரம் பிடித்தது.

கண்களை அகல விரித்து அரசனை அதனுள் நிரப்பியவள் பின் அவன் கூறியதை உணர்ந்து காலையில் விட்ட அழுகையைத் தொடங்கியிருந்தாள்.

மதியின் துள்ளல், துடுக்கு, காதல், கோபம் என அத்தனை உணர்வுகளும் அவனிற்கு அத்துபடியானாலும் கண்ணீர் என்ற ஒன்றை இப்போதுதான் பார்ப்பதால் என்ன செய்வது என்று புரியாமல் தடுமாறி, “ஹேய்… என்னம்மா என்னாச்சு? உனக்கு பிடிக்கலைன்னா சொல்லு இனி இப்படி பேசல மன்னிச்சிரு” என்க அதைக்காதிலே வாங்காமல் அழுகையோடே 

“ஹ்ம்ம்… போங்க… காலையில் என்னை… என்னன்னு நினைச்சீங்க? நான் வேணும்ன்னு அப்படி பண்ணல… நான் நீங்க…” என்று திக்க 

அதன் பின்பே அவளின் அழுகைக்கான காரணம் புரிந்தது. எங்கே தான் தவறாக நினைத்து விடுவோமோ என்றெண்ணி மதி திணறுவது கஷ்டமாக இருக்க 

“நீ என்னை விரும்புறதான மதி?” என்று அவளைத் திசை திருப்பும் நோக்குடன் அரசன் கேள்வி கேட்க.

விசுக்கென்று நிமிர்ந்தவள், “விரும்புறேன்தான்… ஆனா அதை நான் மட்டும் சொன்னா போதுமா? நீங்க… உங்க மனசுல என்ன இருக்குன்னு தெரியாம நான் இப்படி பண்ணுனது தப்பு தானே?” என்று கேட்க 

“அந்த தப்பை மட்டும் நீ செய்யலைன்னா நான் தப்பான முடிவெடுத்திருப்பேனே மதி. அதனால அது தப்பில்லை” என்றான் இவன்.

இவள் என்ன என்பது போல் பார்க்க, “நாம கல்யாணம் செஞ்சுக்கலாம். ஆனா இப்போ வேணாம் சரியா? நான் இங்க வந்ததுக்கான காரணம் ஒன்னு கூட நிறைவேறலை அதான்…” என்று தயங்க 

மூக்கு வரை இருந்த கோபம் விர்ரென்று தலைக்கு ஏற மனதினுள் பெரும் ஏமாற்றம் தங்கிவிட, “இப்போ யாரு உடனே கல்யாணம் வேணும்ன்னு சொன்னா? நான் கேட்டேன்தான். பட் உடனே இல்லை. ஆனா என்னைப் பிடிக்குமான்னு ஒரு வார்த்தை அதுக்கு முன்னாடி கேட்டேனே? அதுக்கான பதில் இப்போ வரை வரலை மாமா” என்று கோபத்தில் பொரிந்து கடைசியில் உடைய 

“அதைத்தான் சொல்றேன் மதி. இன்னைக்கு காலையில நீ நெருங்குன பிறகுதான் என்னையே நான் உணர்ந்தேன். என்னால உன்னை விட்டு இருக்க…” முடிக்கும் முன் மதியின் குறுக்கிடல்.

“அப்போ இந்த கல்யாணம் காலையில் நடந்ததுக்குத்தானா? எனக்கான இடம், உணர்வு காதல்ன்னு ஒன்னுகூட உங்க மனசுல இல்ல… நீங்க இப்படி சொல்றது எப்படி இருக்கு தெரியுமா? நான் உங்க உணர்ச்சியைத் தூண்டிவிட்ட மாதிரி இருக்கு. அதனால பாவம் பார்த்து சம்மதம் சொல்ற மாதிரி இருக்கு. அப்படி ஒன்னும் கஷ்டப்பட்டு என்னைக் கல்யாணம் பண்ண வேண்டாம். நீங்க உங்க வேலைய பாருங்க. நான் என் வேலைய பார்க்குறேன். ஆனா ஒன்னு நானும் தனியாத்தான் இருப்பேன் நீங்களும் தனியாத்தான் இருக்கனும். என்னை கல்யாணம் பண்ணலைனாலும் பரவால்ல வேற யாரையாவது பண்ணனும்ன்னு நினைச்ச மவனே” என்று ஆட்காட்டி விரலை நீட்டி எச்சரித்து எழப்  போக

“ஏய்… சொல்ல வந்ததை முழுசாக் கேளேன்டி. எனக்கு நீ மட்டும் போதும் வேற யாரும் வேண்டாம். என்னைப் பார்த்தா உணர்ச்சிக்கு அடிமை ஆகி கல்யாணம் பண்ண கேட்டவன் மாதிரியா இருக்கு? என்ன தாண்டி உன் பிரச்சனை எதையாவது நினைச்சிட்டு உளற வேண்டியது” என்று அவளின் கையைப் பற்றிக்கொள்ள

கையை அவனிடம் கொடுத்து முகத்தை உர்ரென்று திருப்பியிருந்தாள். “நானே நாளைக்கு தாடி எடுக்க நினைச்சேன்டி. விருப்பத்தை உணர்த்திதான் எங்களுக்கு பழக்கம்” என

மதியின் மனதில் கோபம் சட்டென்று தணிந்து அதில் சிறிது நீரூற்றி மகிழ்ச்சிக்கான விதை தூவப்பட்டது.

“தாடி எடுத்தாலாம் இங்க யாரும் பொண்ணு குடுக்க மாட்டாங்க. அத்தோட நான் பெரிய பொண்ணு ஆகி எட்டு வருஷம் மேல ஆச்சு” என்றாள் லேசான கன்னச்சிவப்பில் எங்கோ பார்த்துக்கொண்டு.

“சொன்னாதான் தெரியுமா மதி. இன்னும் புரியலையா என்னோட மனசு?” என்றவாறு நெருங்கி அவளின் முகத்தைத் திருப்ப

அவளின் காதல் மனம் நன்றாக முழித்துக் கொண்டது. இப்படியேல்லாம் தன்னுடன் பேசுவதாக எத்தனை நாள் கனவு கண்டிருப்பாள். அது உண்மை ஆகுகையில் உள்ளம் சிலிர்த்துத்தான் போனது.  

அவனின் கண்ணில் தனக்கான காதலை அந்தக் காரிருளிலும் தெளிவாகப் பார்த்தவள், “கண்ணுக்கு தெரியுது உங்க கண்ணில் இருக்குற காதல், மூளைக்கும் புரியுது நீங்க இலைமறைவு காய்மறைவா சொல்ல வரது, மனசு கூட உங்க பக்கம் எப்போவும் போல சாயுது ஆனா…” என்று நிறுத்த 

“ஆனா…” அரசனும் எடுத்துக்கொடுத்தான். 

“என் காது மட்டும் என்ன பாவம் பண்ணிருச்சின்னு அதுகிட்ட உங்க காதலைச் சொல்ல மாட்டிக்குறீங்க?” என்றாள் அவனின் வாய்மொழியாகக் காதலை உணர்ந்து தெரிந்துக்கொள்ள.

“ஏதோ ஒரு உறுப்புக்கு புரிஞ்சா போதாதா? கண்ணு காது மூக்குன்னு எல்லாத்துக்கும் தெரியணுமா?” என்றவாறு அவளின் மூக்கைப் பிடித்து ஆட்ட

அதனைத் தட்டிவிட்டவள், “ஆக மொத்தம்… நீங்க சொல்ல மாட்டீங்க? பாத்துக்குறேன் எத்தனை நாளைக்கு இப்படியே மழுப்புறீங்கன்னு” வார்த்தைகள் விளையாட்டாய் வந்தாலும் குரலில் அதன் ஏமாற்றமும் வலியும் தெரிய, அதனை உணர்ந்துக்கொள்ளவில்லை என்றால் அது காதலாகுமா?

அரசனுக்கு மனதே கேட்கவில்லை. வாடிய முகத்தை இரு கைகளாலும் பற்றியவன், “என்ன மதி உனக்கு தெரியனும்? முதல்தடவை உன் குரல் கேட்டதும் ஆர்ப்பரிக்கும் அருவி மாதிரி ஒரே இரைச்சலா இருக்கேன்னு நினைச்சத சொல்லவா? உடம்பு சற்றுச் சரி ஆகியதும் நாய்க்குட்டி மாதிரி பின்னாடியே சுத்தியதைச் சொல்லவா?

மான் கூட தோற்றுபோகிற அளவுக்கு இருக்கிற உன் துள்ளல் நடையைச் சொல்லவா? ஓயாமல் பேசிட்டே இல்லை சாப்பிட்டுக்கிட்டே இருக்குற இந்த வாய் முயல் வாய் மாதிரி தெரியுதேன்னு பார்த்ததைச் சொல்லவா? கோபத்துல, வெட்கத்துல சிவக்குற உன் முகம் சூரியன் வரதுக்கு முன்னாடி வர்ற செவ்வானத்தைக் காமிச்சத சொல்லவா?”

இப்படி சொல்லவா? சொல்லவா? என்று அரசன் சொல்லிக்கொண்டிருக்க மதி மனம் மயங்கிக் குறுக்கிடாமல் கேட்டுக்கொண்டிருந்தாள். வேறுநேரம் என்றால் குறுக்கிட்டிருப்பாள் ஆனால் இப்போதைய அரசனின் காதலில் கரைந்து வந்த குரல் அவளின் சிந்தையை ஆக்ரமிக்க பேச நா எழவில்லை. 

வறண்டு இருண்டிருந்த வானமும் நொடியில் மழைமேகத்தை தத்தெடுத்து சட் சட் என்ற நீர்த்துளியை அவர்கள் மேல் பொழிய ஆரம்பித்தது. 

வெகுநாட்கள் கழித்து மழையை அழைத்த அரசனோ அதனைக் கண்டுக்கொள்ளாமல் மழை வருவதால் வீட்டினுள் செல்லப் பார்த்த மதியை விடாமல் பற்றியபடி, “எங்க ஓடுற மதி. நாளை அதிகாலை கூப்பிட நினைச்சேன் ஆனா ஏனோ இப்போதே நனையனும்ன்னு தோணிருச்சு இங்கயே இரு” என்றான்.

“உங்க வேலைதான இது? எதுக்கு கூப்பிட்டீங்கலாம்?” குரல் மழைக்குப் பதிலாக அவளைக் கூப்பிட்டதைப் போல் கொஞ்சியது.

“எதுக்குன்னா… அன்றைக்கு மழையில் இதே மாதிரி நனைஞ்சி என் மேல விழுந்தியா? அப்போ பன்னிரண்டு ஆண்டுக்கு ஒருமுறை மலையில பூக்குற குறிஞ்சிப்பூவை மொத்தமா கொய்துவந்து என் மேல கொட்டுனமாதிரி இருந்ததை சொல்லவான்னு கேட்கத்தான்” என அடுத்த நொடி மொத்தக் குறிஞ்சிப்பூவும் அவன் கைகளுக்குள் அடங்கியது வெட்கத்தில்.

அவளை இறுக்கி அணைத்தவன், “இப்போ உன்னோட அருகாமையை விட இந்த உலகத்துல வேற எதுவும் எனக்கு பெருசாத் தெரியலைன்னு சொன்னா நம்புவியா நீ?” அரசன் கேள்வியை உணர்ந்தாலும் அவளால் பதில் கூற முடியவில்லை மழைக்கு கதகதப்பாய் இருக்கும் அவனுள் இன்னமும் புதைந்துகொண்டாள். 

ஆரம்பிக்கையில்தான் அரசனுக்குத் தயக்கம் எல்லாம், பின்னர் தன்னைப்போல் உள்ளத்தில் இருப்பதை சொல்லச் சொல்ல வார்த்தைகள் பிரவாகமாய்ப் பொங்கி வந்தது. 

“உன்னை பார்த்ததுல இருந்து அடிக்கடி என் மூளை மனசு எல்லாத்தையும் கலங்கடிச்சிருவ தெரியுமா? அதுவும் இன்றைக்கு… என் உயிரே உன்னைக் காணோம்ன்னு தெரிஞ்சிப் பதறுனதை என்னால மட்டும்தான் உணரமுடியும்” இப்போது அரசனின் குரலில் அந்த நேரத்து வலியும் பயமும் அபரிதமாக இருந்தது.

அதைக்கேட்க பிரியப்படாமல் சொகுசாக அவன் மீதே சாய்ந்திருந்து தலையை மட்டும் உயர்த்தி, “மாமா போதும்… மீதியெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் பொறுமையாக் கேட்குறேன். விட்டா நாலு கால் ஜீவன்ல இருந்து விண்வெளி வரைக்கும் உவமையா சொல்லுவீங்க போலவே… இது தெரியாம நான் வேற அப்பாவியா சுத்திட்டு இருக்கேன் பாருங்க” என்று கலாய்க்க

“இதான்… இதுக்காகத்தான் இவ்ளோ சொன்னேன். இந்த குரல், அதோட உற்சாகம் எல்லாம் கேட்டு ரொம்ப நாள் ஆச்சு தெரியுமா? இந்த சந்தோசத்துக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன் மதி” என்று இயம்ப 

பெண்ணின் மனதானது ஆழ்கடலின் ஆழத்தை விட ஆழமாகவும், வானத்தை விட பரந்ததாகவும் இருக்கும் அரசனின் காதலில் சந்தோசமாய்ச் சிக்கித்திணறியது. 

ஒரு பருக்கை சோறு இருக்கா என்று கேட்டவனுக்கு அறுசுவை உணவை வயிறாற உண்ணக்கொடுத்தால் ஏற்படும் நெஞ்சடைத்தக் களிப்பான நிலையில் இருந்தாள் வான்மதி.

மழையில் வெகுநேரம் நனைந்ததால் அரசனின் உடலில் இருந்த கதகதப்பும் நீங்கிச் சில்லிட்டிருந்ததால் குளிர் வர ஆரம்பித்தது மதிக்கு. 

அவனிடம் இருந்து விலகியவள் நிமிர்ந்து அரசனின் முகம் பார்க்க, “மதி அப்புறம் இன்னொன்னு கேட்கவா?” என்றான்.

அவன் முகத்தில் இருந்த பாவனையில் இவளுக்கும் ஒரு ஆர்வம் வர குளிரையும் பொருட்படுத்தாமல், “என்ன மாமா? சீக்கிரம் சொல்லுங்க” என்றாள்.

“இல்ல… காலையில் என் விருப்பம் தெரியாததால நீ பண்ணுனதைத் தப்புன்னு சொன்ன… இப்போதான் தெரிஞ்சிருச்சே… அதே தப்பைத் திரும்ப பண்ணலாமா?” என்றவாறு அவளின் ஈர இதழை நெருங்கினான். 

‘ஹான்…’ என்று விழிகளை வியப்பினாலோ அல்ல அதிர்ச்சியினாலோ விரித்த மதி வெளியே இருந்த நடுக்கம் மனதிற்குள் ஊடுருவ, இரு இதழ்களுக்கும் இடையே நூலளவுக்கும் குறைவான இடைவெளி இருக்கையில் தன்னைச் சுதாரித்துக்கொண்டாள். 

ஆவலோடு நெருங்கியவனை ஒற்றைக் கைக்கொண்டு நெஞ்சில் கைவைத்துத் தள்ளியவள் அவன் எதிர்பாரா நேரத்தில் தன்னைச் சிறைப்பிடித்திருந்த பிடியில் இருந்து மின்னலென விலகினாள்.  

விலகிய கையோடு வீட்டிற்குள் ஓடி தனதைறைக்குள் சென்று மறைந்திருந்தாள் மதி, அரசனின் பாசையில் மான்குட்டியாக.

ஏமாற்றம் தந்தாலும் மனம் ஏனோ மந்தமடையாமல் மந்தகாசமாகவே இருக்க, அதே ஏகாந்தத்தோடுத் தன்னவளை எண்ணி எண்ணியே இன்னமும் வலுத்த மழையில் சுகமாய் நனைந்துக் கொண்டிருந்தான் வான்மதியின் அரசன். 

மழை வரும்…

தரிசாக இருந்த என் மனதில் 

காதலென்னும் செடி முளைக்கவே

மழையாக நீ வந்தாயோ? 

    

 

      

 

error: Content is protected !!