Mazhai – 3

depositphotos_104248346-stock-photo-beautiful-spring-white-crocus-in-e6635975

Mazhai – 3

அத்தியாயம் – 3

திடீரென்று தன் பெயரைச் சொல்லி அழைப்பது யாரென்ற கேள்வியோடு நிமிர்ந்த சிற்பிகாவின் முகம் பூவாய் மலர்ந்தது. தாயின் உடல்நிலை சரியில்லாமல் போன நாளிலிருந்து கல்லூரிக்கு செல்வதை முற்றிலுமாய் நிறுத்தி இருந்தாள்.

திடீரென்று எதிர்பாராத விதமாக கோவிலில் தோழியைக் கண்ட சந்தோஷத்தில், “அதெல்லாம் நிறைய விஷயம் நடந்து போச்சு.. ஆமா நீ எப்படி இருக்கிற?” என விசாரிக்க தொடங்கினாள்.

ஏற்கனவே கோவிலுக்கு செல்வது முகிலனுக்கு பிடிக்காத விஷயம்.  தந்தையின் கட்டாயத்தினால் சிற்பிகாவை அழைத்து வந்தவனுக்கு இப்போது என்ன செய்வதென்று சுத்தமாக புரியவில்லை.

“நான் நல்லா இருக்கேன். உன்னிடம் கொஞ்சம் பேசணும்” என்றவளின் பார்வை சிற்பிகாவின் அருகே நின்றிருந்த ஆடவன் மீது படிந்து மீண்டது.

‘இங்கேயே நிற்க வேண்டுமா? போகலாமா?’ இருமனதாய் நின்றவனை அப்போதுதான் கவனித்தாள். அவனின் கோபம் தெரிந்தபிறகு தான் செய்வது தவறு என்று உணர்ந்தாள்.

சற்றுமுன் முக்கியமான வேலையாக அவன் கிளம்பியது நினைவு வரவே, “எனக்காக காத்திருக்க வேண்டாம். நீங்க கிளம்புங்க நான் கொஞ்சநேரம் கழிச்சு வீட்டுக்குப் போறேன்” மெல்லிய குரலில் கூற சரியென்று தலையசைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

செல்லும் அவனை பார்வையால் அளந்த புவனா அப்போதுதான் சிற்பிகாவினை ஊன்றி கவனித்தாள். கழுத்தில் மாங்கல்யமும், நெற்றியின் வகிட்டில் குங்குமம், புது பெண்ணுக்கே உரிய பொலிவுடன் காணப்பட்டாள்.

“ஹே கல்யாணம் பண்ணிகிட்டியா? அம்மா எங்கே?” என்று அடுத்த கேள்வியைத் தொடுத்தாள்.

அவளிடம் அப்படியொரு கேள்வியை எதிர்பார்த்திருந்த சிற்பிகா, “அப்பாவுக்கு அம்மா மேலே அவ்வளவு லவ். தன்னுடைய பிள்ளையைவிட மனைவி ரொம்ப முக்கியம்னு தோணுச்சோ என்னவோ.. அதுதான் அம்மாவையும் அவரிடமே கூப்பிட்டுகிட்டார்” வார்த்தைகளில் வலி இருந்தாலும் முகம் என்னவோ அன்று மலர்ந்த மலரைப் போலவே புன்னகையில் மலர்ந்திருந்தது.

“உன்னைப் பற்றி அளவுகடந்த ஆசைகளை மனசில் வச்சிருக்காங்கன்னு சொல்லிட்டு இருப்பாயே?! திடீர்னு இறந்துட்டாங்க என்று சொல்வதை என்னால சத்தியமா நம்பவே முடியல” அதிர்ச்சியுடன் நின்றவளை அழைத்துச் சென்று பிரகாரத்தில் அமர்ந்தாள் சிற்பிகா.

அவருடைய இழப்பை ஜீரணித்துக் கொள்ள புவனாவிற்கு சில நிமிடங்கள் தேவைப்பட்டது.  எந்த நேரமும் மகளைப்பற்றி சிந்தனையோடு உழன்ற தாய்,  இவ்வுலகில் அவளை தனியாக பரிதவிக்கவிட்டு சென்றதை நினைத்து கண்கள் கலங்கிட தோழியை ஏறிட்டாள்.

“நடப்பது எதுக்கும் நம்ம காரணமில்ல புவனா. இந்த நேரத்தில் இது நடக்கணும்னு தலையில் எழுதிய எழுத்தை யாரால் மாற்ற முடியும் சொல்லு” தோழிக்கு அவள் தைரியம் சொன்னாள்.

சிறிதுநேரம் அங்கே மௌனம் ஆட்சி செய்ய கோவிலுக்குள் விளையாடும் குழந்தைகளை வேடிக்கைப் பார்த்தபடி அமர்ந்திருந்த சிற்பிகாவிடம், “காலேஜ் எப்போ வருவதாக உத்தேசம்?” அடுத்த கேள்வியைத் தொடுத்தாள்.

சட்டென்று நிமிர்ந்து தோழியின் விழிகளை சந்தித்தவள், “மூணு மாசம் வராமல் இனிமேல் வந்தால் மேலே படிக்க முடியுமோ என்னவோ?” வருத்தத்துடன் சொல்ல சிந்தனையுடன் அவளை ஏறிட்டாள் புவனா.

பிறகு தன் கைபேசியை எடுத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தவள், சீரியஸான முகபாவனையுடன் யாரிடமோ பேசுவதை கவனித்தாள்.

கடைசியில், “ஓகே மேம். அவகிட்ட சொல்லிடுறேன். ம்ஹும் இந்த வீக்ல இருந்து வர முடியுமான்னு கேட்கிறேன் மேம்”  என்று பேசிவிட்டு தோழியின் அருகே வந்தாள்.

“இந்நேரம் வரை யாரிடம் பேசின?” சந்தேகத்துடன் இழுத்தாள்.

“மனோகரி மேம்கிட்ட பேசினேன். ஏற்கனவே உங்கம்மா நிலை அவங்களுக்கு தெரிந்திருந்ததால் உனக்கு அட்டனன்ஸ் போட்டு தேர்வு எழுத ஏற்பாடு பண்ணிருக்காங்க. சோ நீ முடிந்தவரை அடுத்த வாரம் கிளாஸ்க்கு வந்துவிடு” என்று முடித்துவிட சந்தோஷத்தில் பேச வார்த்தைகளின்றி சிலையாகி நின்றாள்.

அவளின் தோளைப்பிடித்து உலுக்கி நனவுலகிற்கு இழுத்து வந்த புவனா, “உங்க வீட்டினரிடம் பேசிட்டு என் நம்பருக்கு போன் பண்ணு. நான் உனக்கு நோட்ஸ் எல்லாம் அனுப்பறேன்” என்றவள் சாமி கும்பிட சென்றாள்.

தான் நன்றாக படிக்க வேண்டும் என்ற தாயின் வேண்டுதலை நிறைவேற்றுவது போல கல்லூரியில் படிக்க மீண்டுமொரு வாய்ப்பு அமைந்திருப்பத்தை நினைத்து உள்ளம் ஒரு நிமிடம் துள்ளிக்குதித்தது.

அதற்குள், யாரிடம் சொல்லி எப்படி சம்மதிக்க வைப்பதென்று புரியாமல் வீட்டிற்கு செல்ல நினைத்து கோவிலைவிட்டு வெளியே வந்தாள்.

சிற்பிகாவை கண்டவுடன் தன் பைக்கை எடுத்து வந்தவன், “கிளம்பலாமா?” என்று கேட்க திகைப்புடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

தன்னை திட்டுவதற்கு எப்போது வாய்ப்பு அமையுமென கண்கொத்திப் பாம்பாய் அலைபவன் தனக்காக காத்திருந்தது ஆச்சர்யமாக இருக்கவே, “நீங்க இன்னும் கிளம்பாமல் என்ன பண்றீங்க?” சுத்தி வளைக்காமல் நேரடியாக விஷயத்திற்கு வந்தாள்.

அவளின் விழிகளை பார்ப்பதை தவிர்த்தவன், “என்னதான் எனக்கு பிடிக்காதவளாக இருந்தாலும், ஒரு இடத்திற்கு சேர்ந்து வந்தபிறகு விட்டுட்டு போகும் அளவுக்கு கல்நெஞ்சம் எனக்கில்லை. ம்ஹும் வண்டியில் ஏறு வீட்டில் விட்டு விடுகிறேன்” என்று சொல்ல சரியென்று தலையசைத்து அவளின் பின்னோடு ஏறியமர்ந்தாள்.

முகிலனின் கவனம் முழுவதும் சாலையில் நிலைத்தாலும், ‘காலேஜ் படிக்கிற பொண்ணு என்னை எதுக்காக திருமணம் செய்யணும்?’ என்ற சிந்தனையில் உழன்றது அவனின் மனம்.

வீட்டிற்கு செல்லும் பாதையின் மீது கவனத்தை பதித்த சிற்பிகாவின் நினைவலைகள் வேறு எங்கோ இருந்தது.

‘வீட்டில் இருப்பவங்ககிட்ட காலேஜ் போவது பற்றி எப்படி பேசறது? அவங்க எல்லோரும் இதுக்கு ஒத்துக்குவாங்களா?’ என்ற சந்தேகத்துடன் மௌனமாய் வந்தாள்.

அவரவர் சிந்தனைகளில் மூழ்கியிருந்த இருவரும் வீடு வந்து சேரும்போது மணி பண்ணிரண்டு மணியைக் கடந்திருந்தது. அனைவரும் ஒன்றாய் அமர்ந்து மதிய உணவை முடித்துவிட்டு நிமிர,  நிரஞ்சன் – மிருதுளா இருவரும் ஊருக்கு செல்வதற்கு தயாராகி வந்தனர்.

“முகில் நாங்க கிளம்பறோம். நீ சும்மா அவளைத் திட்டிட்டே இருக்காதே” என்ற தமக்கையைப் பார்த்து சரியென்று தலையசைத்தான்.

“இங்கே பாரு முகில் ஆயிரம் தான் பிடிக்காமல் இருந்தாலும் வாழ்க்கையில் ஒரு முறைதான் திருமணம். இன்னைக்கு உனக்கு பிடிக்கலன்னு அவளை வார்த்தையால் காயப்படுத்திட்டு அப்புறம் ஏன் இப்படி செய்தோம்னு வருத்தபடாதே” என்று தன்னால் முடிந்த அறிவுரையை மென்மையாக கூறினான் நிரஞ்சன்.

“சரிங்க மாமா. நீங்க எங்களைப் பற்றி யோசிக்காமல் உங்களோட லைப் பாருங்க” என்பதோடு பேச்சை முடித்துக் கொண்டவன் விறுவிறுவென்று படியேறிச் சென்றான்.

அவன் சென்றதை உறுதி செய்துக்கொண்டு சிற்பிகாவின் அருகே வந்த மிருதுளா, “முகிலன் என்ன பேசினாலும் பொறுமையா இருடா. ரொம்ப பேசினால் அண்ணி எனக்கு போன் பண்ணு. உனக்காக நானிருக்கேன்” என்று அவளின் தலையை வருடிவிட்டு கண்கள் கலங்கினாள்.

அவளின் கண்ணீர் அர்த்தமற்றது என்பது போல இருந்தது சிற்பிகாவின் அடுத்த செயல். மிருதுளாவின் கண்களைத் துடைத்துவிட்டு, “நல்லதோ கெட்டதோ எனக்கு நீங்க நல்லதே நினைச்சிருக்கீங்க.. உங்களுக்கு ஒரு தலைகுனிவு வரும் அளவிற்கு நான் நடந்துக்க மாட்டேன்” என்று தைரியம் சொல்லி புன்னகை முகமாக அவர்களை வழியனுப்பி வைத்தாள்.

காரில் ஏற சென்ற நிரஞ்சன் மீண்டும் திரும்பி வந்து, “நீயும் என் தங்கச்சிதான்டா. உனக்கு எந்த நேரத்தில் என்ன உதவி வேண்டும் என்றாலும் அண்ணன் நான் ஒருத்தன் இருப்பதை மறந்துவிடாதே” என்று சொல்ல சரியென்று தலையசைத்தாள் சிற்பிகா.

மகள் மற்றும் மருமகனை அனுப்பி வைத்த கையுடன் ஊருக்கு கிளம்பியவர்களை தடுக்க நினைத்து, “நீங்க எங்கே கிளம்பிறீங்க?” என்று அடுத்த கேள்வி கேட்டாள்.

தன் வீட்டு மருமகளை நேருக்கு நேர் பார்த்தவர், “பிடிக்காத திருமணம் நீ எப்படி நடந்துகொள்வாயோ என்ற பயம் இருந்ததும்மா. இப்போ நாங்க கூட இருந்தால் அவனுக்கு தலைக்கனம் இன்னும் அதிகமாக வாய்ப்பு இருக்கு. அதனால் தான் நாங்க இருவரும் ஊருக்கு கிளம்பறோம்” அவளுக்கு பதமாக எடுத்து சொல்லி புரிய வைத்தார்.

சிறிதுநேரம் அங்கே மௌனம் ஆட்கொள்ள, “மாமா நான் காலேஜ் போய் படிக்கலாம்னு இருக்கேன். அதுக்கு அனுமதி தருவீங்களா?” பணிவுடன் கேட்ட மருமகளுக்கு மறுப்பு சொல்லாமல் சரியென்று தலையசைத்தார்.

அவரின் அனுமதி கிடைத்த சந்தோஷத்தில், “ரொம்ப தேங்க்ஸ் மாமா” மலர்ந்த முகத்துடன் கூறிய மருமகளை விட்டு பிரிய மனமில்லாத போதும் மனத்தைக் கல்லாக்கிக்கொண்டு இருவரும் கிளம்பினர்.

அந்தநேரம் வெளியே செல்ல கிளம்பி வந்த மகனிடம், “டேய் உன்னை நம்பி மருமகளை விட்டுட்டுப் போறோம். நேரத்தோட வீடு வந்து சேரும் வழியைப் பாரு. அதே மாதிரி நண்பர்களை எல்லாம் இனிமேல் வீடு வரை கூட்டுட்டு வராதே. அவளை கவனமாக பார்த்துக்கோ” மகனை கண்டிக்கும் விதமாக கூறினார் மகேஸ்வரி.

தாய் சொன்னதைப் பொறுமையாக கேட்டுக்கொண்டு, “அப்பா கால்டாக்சி புக் பண்ணிருக்கேன். அது வந்ததும் இருவரும் கிளம்புங்க. அங்கே போய் சேர்ந்ததும் மறக்காமல் எனக்கு போன் பண்ணுங்க” என்று சொல்ல சரியென்று தலையசைத்துவிட்டு கிளம்பினார் சதாசிவம்.

அவசர கல்யாணம் என்பதால் உறவினர்கள் மண்டபத்துடன் கிளம்பி சென்றிருந்தனர். இன்று பெற்றோரும், தமக்கையின் குடும்பமும் கிளம்பி சென்றிருந்த காரணத்தினால் வீடே வெறிச்சோடி காணப்பட்டது. அதுவரை இருந்த கோபம் சற்று குறைந்திருக்க சோபாவில் அமர்ந்து விழி மூடினான்.

அவர்கள் சென்றவுடன் அவரசமாக உடையை மாற்றிவிட்டு கீழிறங்கி வந்தவள், “நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன்” சிற்பிகா பொதுவாக சொல்லவே விழிதிறந்து அவளை பார்த்தான்.

“யார் நீ என்னிடம் எதுக்கு சொல்ற? உனக்கு என்ன செய்ய விருப்பமோ தரலாமா செய்.. சும்மா சாக்கு சொல்லி என்னிடம் பேச ட்ரை பண்ணாதே” சிடுசிடுக்க இனி பேசி பயனில்லை என்று உணர்ந்து வேகமாக வீட்டைவிட்டு கிளம்பினாள்.

அவள் சென்றவுடன் டிவியை போட்டு அமர்ந்தவனுக்கு சேனல்களில் கவனம் செல்ல மறுத்தது. பிறகு பாடல்களைக் கேட்டபடி விழி மூடியவனின் மனம் பாரமானது. இடைப்பட்ட நாட்களில் நிகழ்ந்த அனைத்தும் மூடி விழிகளுக்குள் படமாக விரித்தது.

நிரஞ்சன் – மிருதுளாவின் திருமணம் முடிந்த சில ஆண்டுகளாக பிள்ளையில்லாமல் இருப்பதை நினைத்து அவளை இல்லாததும் பொல்லாததும் பேசியே பிறந்த வீட்டிற்கு அனுப்பியிருந்தார் கனகவல்லி.

அத்தோடு நிறுத்தாமல் தன் மகனுக்கு மற்றொரு திருமணம் செய்து வைக்க ஒப்புதல் கேட்டதில் முற்றிலும் மனமுடைந்து வீடு திரும்பியவளைக் கண்டு பெற்றோர் மன வருத்தம் அடைந்தனர். அதே நேரத்தில் தனக்கு வேலை கிடைத்துவிட்ட சந்தோஷத்தில் வீடு வந்து சேர்ந்தான் முகிலரசன்.

அவன் வீட்டிற்குள் நுழையும்போது அங்கே நிலவிய அமைதியைக் கண்டு சிந்தனையுடன் புருவம் சுருக்கியவன் சுற்றிலும் பார்வையைச் சுழற்றினான்.

நடுஹாலில் தந்தையின் மடியில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த மிருதுளாவைக் கண்டவுடன், “அப்பா அக்கா எப்போ ஊரிருந்து வந்தாள்?” என்ற கேள்வியுடன் மற்றொரு சோபாவில் அமர்ந்தான்.

அவர் பதில் சொல்லாமல் மெளனமாக இருக்க, “கொஞ்சம் கண்ணைத் திறந்து என்னை பாருங்கள் தமைக்கையாரே” என்று செல்லம் கொஞ்சி எழுப்பினான்.

மெல்ல எழுந்து அமர்ந்திருந்தவளின் விழிகள் சிவந்திருப்பதைக் கண்டு துணுக்குற்றவன், “ஏய் நீ அழுதியா? ஆமா மாமா எங்கே? நீ மட்டும் தனியாக கிளம்பி வந்திருக்கிற என்ன விஷயம்?” என்று அவன் கேள்வி அடுக்கினான்.

அதற்குமேல் தாங்க முடியாமல் தம்பியின் தோளில் சாய்ந்து அழுதவளை தாயாய் மாறி அரவணைத்தவன், “என்னக்கா பிரச்சனை.. நீ சொன்னால்தானே எனக்கு தெரியும்?” என்று அவளை மெல்ல சமாதானம் செய்து விஷயத்தைக் கரந்துவிட்டான்.

அதன்பிறகு அவளை சமாதானம் செய்து சாப்பிட வைத்தவன், “நான் மாமாவிடம் பேசணும் அப்பா” என்றவன் சொல்ல சதாசிவம் யோசனையுடன் மகனை ஏறிட்டார்.

ஆனால் சிறு வயதில் இருந்தே தமக்கை மீது உயிரையே வைத்திருப்பவன் என்பதால் அவனின் விருப்பத்திற்கு விட்டுவிடவே நிரஞ்சனுக்கு அழைத்துப் பேசியதில் பிரச்சனைக்கு காரணம் வீட்டினர் என்ற விஷயம் தெரிய வந்தது.

அடுத்த ஒரு மாதத்தில் மிருதுளாவை புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைத்தவன் கோவையில் தன் நண்பர்களோடு தங்கி அடிக்கடி நேரில் சென்று தமக்கையை விசாரித்து வருவது வழக்கமாயிற்று.

இதற்கிடையே அவளை நல்ல மருத்துவரிடம் காட்டி உடல்நிலையை பற்றி விசாரித்து அறிந்து கொண்டான். இருவருக்கும் எந்தவிதமான குறையும் இல்லை என்ற ரிப்போர்ட் கைக்கு வரவே ராஜசேகரன் – கனகவல்லி இருவரையும் ஒரு கை பார்த்துவிட்டான்.

ஏனோ அவனைத் தடுக்க சதாசிவம் – மகேஸ்வரியால் கூட முடியவில்லை. அந்தளவுக்கு தமக்கை மீது பாசம் உடையவன்.

இறுதியாக, “எங்க அக்காவுக்கு பிரச்சனை தந்ததால் வரதட்சனை கொடுமை என்று நானே உங்க இருவரையும் பிடித்து உள்ளே தள்ளிவிடுவேன்” என்று சாமியாடிவிட்டு சென்றவனை அடைய நினைத்து திட்டம் தீட்டினாள் நிரஞ்சனின் தங்கை சிந்து.

அவளின் பிடிவாதத்துடன், தான் மட்டுமே அழகி என்ற கர்வமும் தலைதூக்கவே அவன் மிருதுளாவை சந்திக்க வரும்போது தானே வழிய வந்து பேச தொடங்கினாள்.

அவளை வெறுத்து ஒதுக்க மனம் வராமல் முகிலனும் அவளோடு பழக தொடங்கிய சமயத்தில், “மிருதுளா உங்க வீட்டு ஆளுங்கள முறைப்படி வந்து பெண் கேட்க சொல்லுமா” எதுவுமே நடவாதது போல பேசிய கனகவள்ளியின் பேச்சில் சுதாரித்தாள் மருமகள்.

தன் தம்பியை கைக்குள் போட்டுகொண்டால் இஷ்டம்படி தன்னை ஆட்டி வைக்க முடியும் என்ற சூட்சுமம் உணர்ந்து அவர்கள் செயல்படுவதைத் தெரிந்தது.

தந்தையிடம் விஷயம் இன்னதென்று போட்டு உடைக்க சதாசிவம் உண்மையறிந்தே, “சொந்தத்திற்குள் பெண்ணெடுக்க விருப்பமில்லை” ஒரே வாக்கியத்தில் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

அதுவரை தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்த முகிலனுக்கு தந்தையின் நிராகரிப்பில் துளியும் நியாயமில்லை என்று தவறாகப் புரிந்துக்கொண்டு வேண்டுமென்றே சிகரெட் பிடிப்பது, மது அருந்துதலை தினசரியாக மாற்றினான்.

அதற்காக சிந்துவை அவன் காதலித்தான் என்று அர்த்தமில்லை. பெண்ணுடன் பழகியவன் இல்லை என்பதால் மீது இருக்கும் பிடித்ததை பிடிவாதமாக மாற்றி சிந்துவை திருமணம் செய்ய நினைத்தான்.

தம்பியின் மீதுள்ள அக்கறையால் தடுக்க வந்த மிருதுளாவிடம், “உன் வாழ்க்கைக்காக அவ்வளவு போராடிய என்னோட ஆசையை நிறைவேற்றி வைக்கல. எனக்கு சிந்துவை கல்யாணம் பண்ணி வை” பிடிவாதமாக நின்றான்.

அவன் தினம் குடித்து உடல்நிலையை வருத்தி கொள்வதை நினைத்து கவலையுடன் வலம்வரும் மனைவியை பிறந்த வீட்டில் விட்டு வந்தான் நிரஞ்சன்.

தந்தையிடம் அவள் விஷயத்தை சொல்லி அழுகவே, “நீ கவலைப்படாமல் கிளம்புமா. நான் இதுக்கொரு முடிவெடுக்கிறேன்” என்று அனுப்பி வைத்தபோதுதான் பஸ் பயணத்தில் எதிர்பாராத விதமாக சிற்பிகாவை சந்தித்தாள் மிருதுளா.

பழைய சிந்தனையில் உழன்றவன் விழி திறந்து பார்க்கும்போது இரவு பத்து மணியைக் கடந்திருக்க சிற்பிகா வந்ததற்காக சுவடில்லை என்றவுடன் திடுக்கிட்டான் முகிலரசன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!