Mazhai – 8

images - 2021-05-30T200350.786-2b796b82

அத்தியாயம் – 8

அதுவரை இருவருக்கும் திருமணம் செய்து வைத்து வாழ்க்கையை வீணடித்து விட்டோமோ என்று மனதளவில் கலங்கிய மிருதுளா கண்ணீருடன் தம்பியின் தலையைக் கலைத்து விட்டாள். வார்த்தைகள் சொல்லாத சந்தோஷத்தை சிறு ஸ்பரிசத்தால் உணர்த்த தமக்கையை கையை பிடித்துக் கொண்டான்.

“இவ்வளவு சீக்கிரம் நீ மனம் மாறுவன்னு நாங்க யாருமே நினைக்கல” நிரஞ்சன் மகிழ்ச்சியுடன் கூறினான்.

சட்டென்று அவரை நிமிர்ந்து பார்த்த முகிலன், “நானாக மாறவில்லை மாமா. என்னை அவதான் மாற்றிவிட்டாள். அப்புறம் இன்னொரு விஷயம் நான் இங்கே பேசியதை அவளுக்கு யாரும் சொல்லாதீங்க” மெல்லிய குரலில் அவன் கூற மற்றவர்களும் ஒப்புதலாக தலையசைத்தனர்.

மற்ற நாட்களைவிட வேகமாக தேர்வை எழுதி முடித்துவிட்டு நேராக வீட்டிற்கு சென்று மதிய உணவை செய்து எடுத்துக்கொண்டு இரண்டு மணியளவில் மருத்துவமனைக்குள் நுழைந்தாள் சிற்பிகா.

நிரஞ்சனும், மிருதுளாவும் கேண்டீன் சென்றிருக்க, கணவனோடு பேசிக்கொண்டு இருந்த அத்தை மற்றும் மாமாவைக் கண்டவுடன், “வாங்க.. பிரயாணம் எல்லாம் எப்படி இருந்தது. ஸாரி இன்னைக்கு எனக்கு முக்கியமான எக்ஸாம். நான் லீவ் எடுத்தால் மேம் திட்டுவாங்க. அப்புறம் செமஸ்டர் எழுத முடியாது அதுதான் கிளம்பி போயிட்டேன்” என்று காரணத்தைக் கூறி இருவரிடமும் மன்னிப்புக் கேட்டாள்.

தங்களைக் கண்டவுடன் மரியாதையுடன் வரவேற்று கொஞ்சம்கூட யோசிக்காமல் தன்னுடைய செயலுக்கு பின்னோடு மறைந்திருக்கும் காரணத்தைச் சொல்லி மன்னிப்பு கேட்கும் பெண்மீது யாருக்கேனும் கோபம் வருமா?

“அதனால் என்னம்மா.. ஆமா தேர்வு எப்படி எழுதியிருக்கிற?” மாமியார் பேச்சை மாற்றி விசாரணையில் இறங்க, சிற்பிகாவின் முகம் பூவாக மலர்ந்து விகாசித்தது.

“அதெல்லாம் நல்ல எழுதி இருக்கேன் அத்தை. கண்டிப்பா ரொம்ப நல்ல மார்க் வரும்” என்று கூறிவிட்டு கணவனுக்கு மதியம் சாப்பிட கொண்டு வந்ததைப் பரிமாறினாள்.

ராகுல் வீட்டிற்கு சென்றிருக்க, “அத்தை நீங்களும், மாமாவும் இங்கே சாப்பிட்டுங்க” என்று அவர்களுக்கும் பரிமாறி அவர்களை வற்புறுத்தி சாப்பிட வைத்தாள்.

அவர்கள் சாப்பிட அமர்ந்ததும் கணவனின் அருகே வந்து அமர்ந்தவள், “ம்ம் நீங்க வாயைத் திறங்க” என்ற அதட்டலில் முகிலனின் வாய் திறந்தான்.

அவனுக்கு கவனமாக சோறு ஊட்டும் மருமகளைக் கண்ட சதாசிவம் தன் மனைவிக்கு கண்ஜாடைக் காட்டி சிரித்தார். அப்போது அறையின் கதவைத் திறந்து உள்ளே நுழைந்த மிருதுளாவும், நிரஞ்சனும் அந்த காட்சியைக் கண்டு சிலையாகி நின்றனர்.

சில நொடிகளில் தன்னை மீட்டுக்கொண்ட நிரஞ்சன், “முகிலனுக்கு வலது கை நல்லாவே இருக்கும்மா” கேலியுடன் கூற மிருதுளா மெல்ல சிரித்தாள்.

அப்போதுதான் அவர்கள் வந்திருப்பதைக் கவனித்த சிற்பிகா, “அது எனக்கும் தெரியும் அண்ணா. இடது கையில் பிடிப்பு இல்லாததால் எப்படியும் தட்டு சிலிப்பாகி கீழே விழுந்திடும். அப்புறம் அதை யார் சுத்தம் செய்யறது?” என்ற கேள்விக்கு மெச்சுதலான பார்வையை மாமனை நோக்கி வீசினான் முகிலன்.

“டேய் உங்க அக்காகூட எனக்கு இப்படியெல்லாம் ஊட்டி விட்டது இல்லடா. இதெல்லாம் சொர்க்க வாழ்க்கை..” என்று பொறாமையுடன் சொல்லவே அவனின் தோள்பட்டையை இடித்த மிருதுளா அமைதியாக இருக்கும்படி கண்ஜாடையில் வெளிபடுத்தினாள்.

மற்றவர்கள் குறும்புடன் சிரிக்க, அவனுக்கு உணவை ஊட்டிவிட்டு கை கழுவியவள், “மாமா, அத்தை நீங்கெல்லாம் வீட்டுப்போயி ரெஸ்ட் எடுத்துட்டு சாயந்திரம் வாங்க” என்று அவர்களை அனுப்ப நிரஞ்சன் முகிலனைப் பார்த்து கண்ணடித்தான்.

அவர்கள் சென்றபிறகு இருவருக்கும் இடையே மௌனம் குடிகொண்டது. சிறிது நேரத்தில் அவனுக்கு கொடுக்க வேண்டிய மாத்திரையை எடுத்து நீட்டினாள்.

அவன் மறுப்பின்றி வாங்கி விழுங்கிவிட்டு, “இப்போ வாமிட் வரவில்லையே?” அக்கறையுடன் விசாரிக்க மறுப்பாக தலையசைத்துவிட்டு விலகினாள்.

அவளின் பளிங்கு முகத்தை சிலநொடி இமைக்காமல் பார்க்க, “இப்போ எதுக்கு வச்சகண்ணு வாங்காமல் பார்க்கிறீங்க? என்னையே பார்த்துட்டு இருக்கும் வேலை வச்சிருந்தீங்க கண்ணை நோண்டிவிடுவேன்” வேண்டுமென்றே அவனை மிரட்டினாள்.

சிற்பிகாவை பேச வைத்துவிட்ட சந்தோஷத்தில், “என்னது! உனக்கு அவ்வளவு தைரியமா?” என்றதும் ஏதோ பதில் சொல்ல வந்தவள் மறுப்பாக தலையசைத்துவிட்டு மீண்டும் வாயை இறுக்கி மூடிகொள்ள முகிலன் வாய்விட்டு சிரித்தான்.

பிறகு, “என்னிடம் பேசாமல் இருக்க முடியல இல்ல. அப்புறம் எதுக்கு இந்த வீண் பிடிவாதம்?” கேள்வியாக இடது புருவம் உயர்த்தினான்.

அவனுக்கு பதில் சொல்லாமல் முகத்தை அவள் வேறுபக்கம் திருப்பிக்கொள்ள, “சரியான ஈகோ பிடிச்சவளே.. சண்டை போட வாய் திறப்பியா? இல்ல காலம் முழுக்க மௌன விரதம்தானா?” சிரித்தபடியே அவளை சீண்டினான்.

அடுத்த நிமிடம் மற்ற அனைத்தும் மறந்துபோக, “யார் ஈகோ பிடிச்சவ.. அதெல்லாம் நீங்க தான். உங்களுக்காக மௌனவிரதம் இருக்கேன்னு நினைச்சிட்டு இருக்கீங்களா? எனக்கு உங்கமேல் இருக்கிற கோபத்துக்கு” என்று பல்லைக் கடித்தாள்.

“என்மேல் உனக்கு என்ன கோபம்” அவன் புரியாமல் கேட்க,

“எவனோ பார்ட்டி கேட்டால் குடிச்சிட்டு கீழே விழுந்து இப்படித்தான் கையைக் காலை உடச்சுக்குவியா? உனக்கெல்லாம் மூளையில்ல. நீயெல்லாம் ஆறறிவு படச்ச மனுஷன்தானே.. நீ குடித்து விட்டு வண்டி ஓட்டி யார் மேலயாவது விட்டு அவன் குடும்பத்துக்கு நீயா வந்து பதில் சொல்லுவ” என்று கோபத்துடன் அவனைத் திட்டித் தீர்த்தாள்.

அவள் தன்னைக் கடிந்து கொள்வதற்காக காரணம் உணர்ந்து மெளனமாக இருந்தான் முகிலன். அவள் திட்டுவதற்கு பின்னோடு மறைந்திருக்கும் அக்கறையை உணர்ந்தவனால் அவளிடம் சரிக்கு சரி சண்டை போட முடியாமல் போனது.

இதுநாள்வரை அவன் அமைதியாக அவளிடம் திட்டு வாங்கியது இல்லை. ஆனால் இன்று அனைத்தும் தலைகீழாகவே நடந்தது. அவன் மெளனமாக இருப்பது உலகின் எட்டாம் அதிசயம் என்றால் அது மிகையில்லை. அதைக்காரணமாக காட்டி அவனைத் திட்டித்தீர்க்க முடியாமல் தடுமாறினாள் பெண்ணவள்.

தன் பலவீனமான மனதை அவனிடம் மறைக்க நினைத்தவள் சட்டென்று எழுந்து மறுபக்கம் திரும்பி நின்று, “நீ எனக்கு யாரோ தானே? எப்படியோ எக்கேடோ கெட்டுப்போ. ஆனால் இன்னொரு முறை கையைக் காலை உடைச்சிட்டு இப்படி வந்து படுத்த எனக்கு தகவல் சொல்லி அனுப்பாதீங்க” என்றவள் சொல்ல தனக்கு முதுகாட்டி நின்றிருந்தவளை வெறித்தான்.

அவனின் பார்வையை உணராத சிற்பிகா, “ச்சே ! உன்னால மறக்க நினைச்சது எல்லாமே ஞாபகம் வருது” தன்னையும் அறியாமல் கடந்தகால விஷயத்தை உளற, அவனின் பார்வை அவளைத் துளைத்தெடுத்தது.

அந்த பார்வையை உணராத பெண்ணவள், ‘எங்க அம்மாவுக்கு நான் அழுதல் பிடிக்காது. நான் அழுக மாட்டேன்’ கலங்குவதற்கு தயாரான கண்களைக் கட்டுபடுத்தி, மனதினுள் உருப்போட்டுக் கொண்டாள்.

இத்தனை நாளாக ஒரே வீட்டில் இருப்பவன் இதுவரை அவளைப்பற்றி ஒரு வார்த்தைக் கேட்டது கிடையாது. அவளின் படிப்பைத் தவிர அவனுக்கு வேறு எந்த விஷயமும் தெரியாது. தன்னுடைய விபத்துக்கு பிறகு அவளின் கோபம் அவனை சிந்திக்க வைக்க, ‘ஒருவேளை அழுகிறாளோ?’ என்ற சந்தேகம் மனதில் எழுந்தது.

 உடனே, “சிபி இந்தப்பக்கம் திரும்பி என்னைப் பாரு” என்று சொன்னதற்கு மறுப்பாக தலையசைத்தாள்.

அவளின் கரம்பிடித்து இழுத்ததில் வெடுக்கென்று அவனின் கையைத் தட்டிவிட்டு அவனின் பக்கம் திரும்பி, “இப்போ எதுக்கு இப்படியெல்லாம் பண்றீங்க?” அவனிடம் சண்டைக்கு வந்தாள்.

நேருக்கு நேர் அவளின் விழிகளைச் சந்தித்த முகிலன், “ஹே! இப்போ உன்னை நான் என்ன பண்ணினேன். சும்மா கையைப்பிடித்து இழுத்தது ஒரு குத்தமா?” அவளை இயல்புநிலைக்கு கொண்டுவர நினைத்து  சண்டைப் போடுவதற்கு தயாரானான்.

“ஆமான்னு சொன்னால் என்ன பண்ணுவீங்க?” அழுத்தம் திருத்தமாக கூற, அவள் எதிர்பார்க்காத நேரத்தில் அவளின் கைப்பிடித்து இழுத்த மறுநொடி அவனின் மார்பில் வந்து விழுந்தவளின் மனம் படபடவென்று துடித்தது.

சிற்பிகாவின் விழிகளில் தன் பார்வையைக் கலந்தவன், “உன்னைப் பார்த்தால் என்னென்னவோ பண்ண தோணுது. என்னோட சரிக்கு சரி சண்டைபோடும் இந்த வாயை இப்போ அடைத்துக் காட்டட்டுமா?” முகத்தை மறைத்த கற்றை முடியை காதோரம் ஒதுக்கியபடி கேட்டான்.

அவன் சொன்னதைகேட்டு திடுக்கிட்ட பெண்ணவள், “என்ன?” என்றாள்.

அவளின் தலையில் செல்லமாக தட்டியவள், “சும்மா உன்னை பயமுறுத்தினேன். ம்ஹும் அம்மிணியின் வீராப்பெல்லாம் போன இடம் தெரியல” என்று சிரித்தபடி கூறியவனை அவள் கோபத்துடன் முறைத்தாள்.

“ஏய் இம்சை எழுந்துபோய் உன் சேரில் உட்காரு.. நான் கொஞ்சநேரம் தூங்கி எழுந்திருக்கிறேன்” என்று அவளின் தலையை செல்லமாக ஆட்டிவிட்டு படுக்கையில் சரிந்து விழிமூடினான்.

சிலநொடிகளில் தன்னை கலங்கடித்து விட்டதை நினைத்து மனதினுள் சிரித்துக்கொண்டு எழுந்து சேரில் அமர்ந்தாள். நாளை படிக்க வேண்டியது என்னென்ன இருக்கிறதென்று யோசித்தபடி திரும்பிப் பார்க்க அவன் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுவிட்டதை பறைசாற்றிவது போல மார்பு சீரான வேகத்தில் ஏறி இறங்கியது.

நேற்று இரவு தூங்காததோடு, இன்றைய அலைச்சலும் ஒன்றிணைய தூக்கம் கண்களை சுழற்ற, “கொஞ்சநேரம் தூங்கி எழுந்தால் நன்றாக இருக்கும்” என்று மெல்லிய குரலில் கூறியவள் சேரை இழுத்து படுக்கைக்கு அருகினில் போட்டு அவனின் அடிபடாத கைக்கு பக்கத்தில் தலைவைத்து படுத்தாள்.

அவனருகே இருக்கும் தைரியத்தில் தன்னையும் மறந்து அவள் உறங்கி போக சிறிதுநேரம் கழித்து தற்செயலாக கண்விழித்து பார்த்த முகிலனின் உதடுகளில் புன்னகை அரும்பியது. சிறுபிள்ளைபோல உறங்கிய சிற்பிகாவின் தலையை வருட எழுந்த வலது கையை கஷ்டப்பட்டு அடக்கினான்.

‘காலேஜ் முடியும் வரை காத்திருக்கணும். நான் அவசரபட்டால் வாழ்க்கை வீணாக போய்விடும்’ தன் மனதிற்கு கடிவாளமிட்டு கொண்டான்.

இந்த சின்ன வயதில் தாய், தந்தையை இழந்து தனிமரமாய் நிற்கும் அவளின் மனோதைரியத்தை மனதினுள் பாராட்டியவன், ‘இவளுக்கு உறவென்று சொல்ல ஒருவரும் இல்லையா? தன்னுடைய விபத்துக்குப் பிறகு துடுக்குத்தனமின்றி கோபத்துடன் பேசுகிறாளே?! என்ன காரணமாக இருக்கும்?’ என்ற சிந்தனை மனதினுள் ஓடியது.

அதே நேரத்தில் ராகுலின் வீட்டில்..

மதியம் வீடு திரும்பும்போது யாரும் வீட்டில் இல்லாததை நினைத்து நிம்மதியடைந்தவன் தன்னுடைய அறைக்குள் சென்று உடையை மாற்றிவிட்டு ஹாலில் வந்து அமர்ந்து சேனலை மாற்றிக்கொண்டு இருந்தான்.

இரண்டு நாளுக்கு முன்னர் சொந்த ஊருக்கு ஒரு உறவினர் வீட்டு விசேஷம் ஒன்றிற்கு சென்றிருந்த சந்திரா பயணக்களைப்புடன் வீடு வந்து சேர்ந்தார்.

அவர் வீட்டிற்குள் நுழையும்போதே ஹாலில் அமர்ந்திருந்த மகனைக் கண்டவுடன், “ராகுல் இன்னைக்கு நீ வேலைக்கு போகலயா? இது தெரியாமல் நானே ஆட்டோ பிடிச்சு வந்தேன். பஸ்ஸில் கூட இவ்வளவு காசு வாங்கலடா..” என வாய்விட்டு புலம்பியபடி கையோடு கொண்டு வந்த பேக்கை அருகே வைத்துவிட்டு சோர்வுடன் சோபாவில் அமர்ந்தார்.

“என்னம்மா  கல்யாணம் நல்லபடியாக முடிந்ததா?” அவன் அக்கறையுடன் விசாரித்தான்.

“அதெல்லாம் நல்லபடியாக..” என்றவர் மகனின் தலையில் போடப்பட்டிருந்த கட்டைக் கண்டவுடன்,

“டேய் எங்கே போய் விழுந்து காயம் பண்ணிட்டு வந்திருக்கிற.. ஆமா நான் ஊரில் இல்லாத இரண்டு நாளும் இங்கே என்ன நடந்தது?” படபடவென்று பொரிந்து தள்ளியவர் மகனை கேள்வியாக நோக்கினார்.

தன் தாயிடம் பொய் சொல்லி தப்பிப்பது கடினம் என்ற உண்மையறிந்த ராகுல், “நேற்று முகிலன் கூட பைக்கில் வரும்போது சின்ன ஆக்சிடென்ட். அதுதான் அடிப்பட்டிருச்சு அம்மா” என்றவன் நேற்று நடந்ததில் தொடங்கி அனைத்தையும் தாயிடம் ஒப்பித்து நிமிர்ந்தான்.

அவனின் இரண்டு தோள்களிலும் மாறி மாறி இரண்டடி போட்டவர், “ஏண்டா உன் புத்தி இப்படி போகுது. உனக்கு அடுத்து ஒரு தங்கச்சி இருக்கிறாளே அவளை நீ யோசிக்கிறீயா?” என்று அவனிடம் சண்டைக்கு வந்தார்.

“அம்மா அது ஏதோ தெரியாமல்..” என்றவன் அவரை சமாளிக்க முயன்றான்.

அதற்குள், “ஏற்கனவே வாழ வேண்டிய வயதில் கணவனைத் தூக்கி கொடுத்துட்டு உங்க இருவருக்காகவும் வாழ்கிறேன். ஏதோ அந்த புண்ணியவதி நல்லவளாக இருக்க போயி இருந்த ஒரே வீட்டை நம்ம வீட்டுக்கு எழுதி வைத்துவிட்டு போனாள். இல்லன்னா நம்ம நிலை..?” என்றவர் கண்ணீரோடு கேட்க பதில் சொல்ல முடியாமல் தடுமாறினான் ராகுல்.

அவன் தலைகுனிந்து மெளனமாக இருப்பதைக் கண்ட சந்திரா, “இந்த குடியால் தான் நம்ம குடும்பமே இப்படி இருக்கு. அது ஏன்டா உன் மரமண்டைக்கு ஏறவே இல்ல?” ஆதங்கத்துடன் கேட்டவர் தொப்பென்று சோபாவில் அமர்ந்தார்.

“மத்தவங்களுக்கு தான் சொன்னால் புரியாது. பாதிக்கப்பட்ட நீயே புரிஞ்சிக்காமல் இருந்தால் மத்தவங்களுக்கு எப்படிடா புரியும்?” என்று கேட்டபோது ராகுலின் பார்வை ஹாலில் மாட்டப்பட்டிருந்த தந்தையின் புகைப்படத்தின் மீது படிந்து மீண்டது.

எந்தவிதமான கள்ளம் கபடமின்றி சிரிப்புடன் இருந்த தந்தையின் முகம் பார்த்தவன், ‘சாரி அப்பா..’ மனதினுள் சொல்லும்போது சிற்பிகா சொன்ன வாக்கியம் மீண்டும் காதினுள் எதிரொலித்தது. அப்போதுதான் அவள் கேட்ட ஒவ்வொரு கேள்வியும் சரியானது என்ற உண்மை புரிந்தது.

அதே நேரத்தில் கலங்கிய கண்களை சேலையின் தலைப்பினுள் துடைத்துக்கொண்டு, “என்னவோ இனிமேல் எனக்காக இல்லனாலும் உன் வாழ்க்கை நல்லா இருப்பதற்காக கொஞ்சம் மாறுப்பா” என்றவர் அங்கிருந்து அகன்றார்.

தாயின் பேச்சில் இருந்த கவலை அவனையும் சூழ்ந்து கொள்ளவே இரண்டு கைகளிலும் தலையைத் தாங்கியபடி அமர்ந்து விட்டான். அன்றைய பொழுது ஓடி மறைந்தது. மறுநாள் காலை முகிலனை டிஸ்சார்ச் செய்து வீட்டிற்கு அழைத்து வந்தனர்.

அவன் வீட்டுக்குள் நுழைந்ததும், “நீ கீழ் அறையில் தங்கிகோ முகில்” என்றார் மகேஸ்வரி.

உடனே முகிலனின் பார்வை தன்னவளின் மீது படிந்து மீளவே, “சரிங்க அத்தை நான் அவரை ரூமிற்கு கூட்டிட்டு போறேன்” தன்னுடைய அறைக்கு கணவனை அழைத்துச் சென்றாள் சிற்பிகா.

அவளின் அறைக்குள் நுழைந்த முகிலனின் பார்வை வியப்பில் விரிய உதடுகளில் புன்னகை லேசாக அரும்பியது.