mazhai4

mazhai4

வான்மதி தன்னைக் கண்டு ஒரு மாதிரி முழிப்பதை வைத்தே புருவம் சுருக்கி அவளைப் பார்த்த அரசன் அவளை நெருங்க, அவனின் சிரிப்பு விடைபெற்றுச் சென்று பாதி முகம் மீண்டும் தாடிக்குள் ஒளிந்துக்கொண்டது.

“என்ன பண்ணுது? மீண்டும் வலிக்குதா?” என்று இவளிடம் வினவ, குரலில் தான் என்ன ஒரு கரிசனை.

அவளோ சற்று முன் தனக்குத் தெரிந்த அவனின் முகவடிவை நினைத்தக் கண் இமைக்காமல் மீண்டும் அந்த சாயலைத் தேட அது கிடைக்கவில்லை. ‘கொஞ்சம் இந்த தாடியை எடுத்தா தான் என்ன? புதர் மாதிரி வளர்த்து வச்சிருக்கான் பாரு’ என்று மனதிற்குள் திட்டி வெளியே ஒன்றும் இல்லை என்பது போல் தலையசைத்தாள்.

அவன் மேலே பேசாமல் அமைதியாகக் குடிசைக்குள் செல்ல, வான்மதி பின்னோடே வந்தாள். அவன் கேள்வியாக நோக்கியதும், “நீங்க உங்க தாடியை எப்போ எடுப்பீங்க? எனக்கு அது இல்லாமல் உங்க முகத்தைப் பார்க்கணும் போல இருக்கு” என்று அவனின் தாடிக்கு நேர் கைநீட்டிப் பட்டென்று கேட்டிருந்தாள்.

அவன் அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்தான். ஏன் என்றால் அவர்கள் இனத்தில் ஒருவருக்குத் திருமண ஆசை வந்தால் மட்டுமே தாடியை எடுப்பர். ஒருவன் தாடியை எடுத்துவிட்டான் என்றால் அவன் காதலிக்கிறான், அவனின் காதலி பெரிய பெண் ஆகிவிட்டாள். அதனால் திருமணம் செய்து வையுங்கள் என்று சூசகமாக கூறுகிறான் என்று அர்த்தம். ஒரு பெண் பெரியவள் ஆகிவிட்டாள் என்றால் அவளைக் காதலிக்கும் ஆண்கள் எத்தனை பேர் இருந்தாலும் அதை வெளிப்படுத்துவர். அந்தப் பெண் யாரைத் திருமணம் முடிக்க விரும்புகிறாளோ அவனைத் தான் மாப்பிள்ளையாகத் தேர்ந்தெடுப்பர். மற்றவர்கள் சலிக்காமல் தங்கள் வேலையைத் தொடர்வர். அதைப் பற்றித் தெரியாமல் இவள் கேட்டுவிட திருமணம் பற்றிய எண்ணமே இல்லாதவனுக்கு அதிர்ச்சி வரத்தானே செய்யும்.

“அப்படியெல்லாம் எடுக்கக் கூடாது… முதலில் நீ இது மாதிரி என்கிட்டப் பேசுறதை நிறுத்து. எப்போ உங்க இடத்திற்கு கிளம்புற?” என்று இது நாள் வரை கடுமை காட்டாதவன் அவள் எவ்வளவு கலாட்டா செய்தாலும் பொறுத்துச் சென்றவன் இன்று தாடியை எடுக்கச் சொல்லி சற்று உரிமை எடுத்துப் பேசுவது போல் இருக்கவும், அவளைத் தள்ளி நிறுத்த எண்ணியும் அவளின் இடத்திற்கு செல்லவேண்டுமே என்றெண்ணியும் சற்றுக் கடுமையாய் பேசிவிட்டான்.

மதிக்கு உள்ளம் துக்கத்தில் பொங்கியது. போ போ என்றால் எங்கே போவாளாம் இந்த வனாந்திரத்தில்? சற்று முன் பார்த்த அவனின் தோற்றமும் சேர்ந்து அவளைப்படுத்த, தன் உறவு என்ற பாசத்தில் தான் அவனை நன்றாகப் பார்த்து உறுதிபடுத்திக்கொள்ளக் கேட்டது.

அவன் மறுத்து அதற்கு மேல் இங்கிருந்து கிளம்ப வேறு சொல்லவும் ஏற்கனவே வீட்டிற்குப் போகும் மார்க்கம் அறியாமல் மனஅழுத்தத்தில் இருந்தவள் இப்பொது துக்கத்தில் இருந்து கோபதொனிக்கு மாறினாள். சுற்றும் முற்றும் பார்த்து சற்றுத்தள்ளி கீழே கிடந்த அந்த வளைவான கத்தி போல இருக்கும் கதிர் அறுக்கும் ஆயுதத்தைக் குனிந்து கையில் எடுத்துக்கொண்டாள்.

“ஏய் எதற்கு அதை எடுக்கிறாய்?” என்று இவன் கேட்டுக்கொண்டே அதைப் பிடுங்க வர, அவள் பின்னால் நகர்ந்து, “அங்கேயே இருங்க! பக்கத்துல வந்தா என் கழுத்தை வெட்டிருவேன்” என்று கூறியவாறே தன் கழுத்தில் கத்தியை வைத்துவிட்டாள். நிலவரசனிற்கு உள்ளுக்குள் உதறியது.

“கிளம்பு கிளம்புன்னு சொல்றீங்கல்ல? நான் இங்க இருக்குறது பிடிக்கலைல்ல? அப்போ ஒரேடியா போய் சேர்றேன்… நீங்க நிம்மதியா இருங்க. இதுக்கு என்னைக் காப்பாத்தாம சாகவே விட்டிருக்கலாம்” என்று உணர்ச்சி வேகத்தில் குரல் உடைந்து கூற, அவளின் வார்த்தைகளும் முகபாவமும் அவனின் மென்மையான இளநெஞ்சைக் கசக்கிப் பிழிந்தது.

அவன் என்ன அவளை சாகவேண்டும் என்றா நினைத்தான்? தான் காப்பாற்றிய உயிர், தன்னால் இவ்வுலகில் மீண்டும் ஜனனமெடுத்தவளின் உயிர் என்ற வகையில் அவள் மீது இவனிற்கும் பாசமே. அது தூய்மையான தாய்ப்பாசத்தை ஒத்தது. ஆனால் அவள் திடீரென்று உரிமை எடுக்கவும் பதற்றத்தில் வார்த்தைகளை விட்டுவிட்டான்.

இதற்கு முன் இப்படிப்பட்ட சூழ்நிலையை சந்திக்காததால் கிட்டத்தட்ட என்ன செய்வது என்றே தெரியாமல் மூளை மரத்த நிலை நிலவரசனிற்கு. கத்தி வெகு நெருக்கமாக அவள் கழுத்தை நெருங்கி கத்திக்கும் கழுத்திற்கும் நூலிழை இடைவெளி இருக்க, மனதிற்குள் தடுமாறியவன், “இனி நீ என்ன சொன்னாலும் நான் செய்றேன்… தயவுசெய்து ஆயுதத்தை என்கிட்ட கொடுத்துவிடு” என்று தன்னையறியாமல் கூறி அந்தக் கம்பீர ஆண்மகன் வாழ்க்கையில் முதல்முறையாகக் கெஞ்சினான்.

அதைக் கேட்டு அவள் கண்ணில் நீரோடு “ப்ராமிஸ்.. இல்ல.. சத்தியமா?” என்று முதலில் ஆங்கிலத்தில் கூறிப் பின் அவனிற்குப் புரியாது என்றறிந்து தமிழில் மாற்றி உறுதிப்படுத்தக் கேட்க,

அவன் சற்றும் யோசிக்காமல் “சத்தியமா…” என்றுக் கூறிவிட்டான். இந்த சத்தியத்தைக் காப்பாற்ற அவன் பின்வருங்காலங்களில் எவ்வளவு போராட வேண்டி வரும் என்பதனை அவன் அறியவில்லை. சத்தியத்தை மீறினால் பாவம் என்றிருக்க, பாவம் செய்தால் மழையுடன் உறவாடும் சக்தியை இழந்துவிடும் அபாயமும் இருந்தது. ஆக அவன் சத்தியத்திற்கும் சக்திக்கும் இடையே சிக்கி சத்தியசோதனைக்கு உள்ளாகப் போகிறான்.

இப்பொது மதி மெதுவே ஆயுதத்தை அவனிடம் நீட்டினாள். அதைப் பாய்ந்து பிடுங்கிய பின்பே தான் கூறிய வார்த்தைகள் நினைவிற்கு வந்தது. தன் கையை இறுக்கி மடக்கி தன் தொடையில் குத்தியவன் அவளை முறைத்தவாறு வெளியேற, “நான் உங்களை இரவு பார்க்கும் போது இந்த தாடி இருக்கக்கூடாது. நான் என்ன சொன்னாலும் செய்வேன்னு சொல்லியிருக்கீங்க… மறந்துராதீங்க” என்று கூறினாள்.

அவன் அதைக் கேட்டும் கேட்காதது போல் சென்றுவிட, ‘அதானே இவனாவது நான் சொல்றதைக் கேட்குறதாவது? எல்லாம் பொய்’ என்று அவனைப் பற்றித் தெரியாமல் உள்ளே நொடித்தவள் அவன் தனக்காகத் தவித்த தவிப்பை எண்ணிச் சிறுபுன்னகையோடு வெளியே வந்தாள்.

அன்று பௌர்ணமி இரவு. நிலவொளி பூரணமாக அந்த காட்டில் ஒளிவீச அன்று வழக்கத்திற்கு மாறாக பரபரப்பாக அங்கும் இங்கும் அலைந்துக் கொண்டிருந்தார்கள் ஆண்கள். பந்தல் கட்டுவது, விளக்கை ஆங்காங்கே வைப்பது, புதிதாக குடிசை கட்டுவது என்று சுழன்றுக்கொண்டிருந்தனர்.

பெண்கள் அனைவரும் ஒரே குடிசையில் கூடியிருந்தனர். அவர்கள் முகம் மகிழ்ச்சியில் மிதந்தது. என்ன விஷயம் என்று கேட்க அரசனையும் காணவில்லை. அவனைத் தேடிப் பார்க்கும் போதே அதில் ஒருவன் தாடியின்றி காட்சியளிக்க, ‘என்ன நான் அவனை எடுக்க சொன்னா அவன் வேற யாருக்கோ எடுத்து விட்டுட்டான் போலவே’ என்று நினைத்தாள். உண்மையில் அவன் ஒருவன் தான் ஒரு மாதம் முன்பு பெரிய பெண்ணாகிய முகிலியைக் காதலிப்பதாகவும் திருமணம் செய்து வைக்கும்படியும் சூசகமாகக் கூறியிருந்தான். அரசனைத் தேடி ஓய்ந்தவள் தானே களம் இறங்கிவிடுவது என்று முடிவு செய்து குடிசைக்குள் சென்றாள்.

அங்கே சிறுபெண் மஞ்சள் பூசி மஞ்சள் நிலவாக ஜொலித்துக்கொண்டிருக்க சுற்றி இருந்த கூட்டத்தில் சிலர் அவளது தலையைக் காட்டுப்பூக்களினால் அலங்காரம் செய்துக்கொண்டும் மரத்தினால் செய்யப்பட்ட வண்ண அணிகலன்களைத் தலையில், கழுத்தில், நெற்றியில் சூடிக்கொண்டும் பலர் வேடிக்கைப் பார்த்துக்கொண்டும் இருந்தனர்.

இவள் போய் நின்றதும் அனைவரும் இவளைப் பார்த்தாலும் வாவேன்று அழைக்கவும் இல்லை போவேன்று துரத்திவிடவும் இல்லை.

என்ன பண்ணுகிறார்கள் என்று தெரிந்து கொள்ளாவிட்டால் மதியின் தலைவெடித்து விடாதா? எனவே ஓரமாக நின்றிருந்த ஒரு பதின் வயது சிறுமியான கமழியைப் பேசிப் பேசியே தோழி ஆக்கினாள்.

அதற்குள் முகிலியை அனைவரும் அழைத்துச்செல்ல ஏற்கனவே அந்த பந்தலுக்கடியில் அமர்ந்திருந்த அவள் காதலன் நிமிர்ந்து முகிலியை ஆவலாக நோக்கினான். பின்னே அவள் பெரிய பெண் ஆகியதில் இருந்து அதற்கென்று தனியாய் குடியிருப்பில் இருந்து சற்றுத்தள்ளி இருக்கும் குடிசையில் அடைத்துவிட்டனரே.

முகிலியும் அவனை வெட்கத்தோடுப் பார்க்க, பௌர்ணமி நிலவை சாட்சியாக வைத்து அவள் கழுத்தில் அவர்கள் இனத்தில் இருக்கும் நட்டுவக்காலி பாசிக்கு நடுவில் புலிப்பல் கோர்த்தத் தாலியைக் கட்டினான். ( நட்டுவக்காலி என்பது தேள் குடும்பத்தை சேர்ந்தது. அதனைக் கொன்று மண்ணில் புதைத்து அடுத்த நாள் தோண்டினால் விதவிதமான வேலைப்பாடுகளில் ஒரே அளவிலான பாசிகள் கிடைக்கும். நம்மூரில் குழந்தைகளுக்கு வாந்தி, பேதி, கண்திருஷ்டி போன்றவை வராமல் தடுக்க கிராமப்புறங்களில் இந்தப் பாசியை இடுப்பில் அணிவிப்பார்கள். )

இரவில் நடக்கும் இந்த வித்தியாசத் திருமணத்தைக் காணும் வாய்ப்பு வான்மதிக்கு அமைந்தது. அவள் அனைத்தையும் மறந்து அவர்கள் சடங்குகளை ஆர்வமாகப் பார்க்க, நிலவரசன் பௌர்ணமி இரவில் மட்டும் கிடைக்கும் மூலிகையை அவசரத் தேவை என்பதால் பறிக்கச்செல்வதாகக் கூறித் திருமணத்தைப் புறக்கணித்துச் சென்றதை அவள் அறியவில்லை.

திருமணம் முடிந்ததும் அவர்களுக்காகக் கட்டப்பட்ட புதுக் குடிசையினுள் அவர்களை அனைவரும் வாழ்த்தி அனுப்ப, சித்தரும் அந்நேரம் வந்து ஆசிர்வதித்தார்.

ஒரு மணி நேரம் கடந்த பின் மதிக்கு அருகில் இருந்த கமழிக்கு சிறிது சிறிதாக வயிற்றுவலி வந்து அவள் தாயை நோக்கி ஓட, அந்தத் தாய் அவள் பெரிய பெண்ணாகிய நிகழ்வை அறிந்து மற்றவர்களிடம் மகிழ்ச்சியாகக் கூறினாள்.

அதே நேரம் ஆற்றங்கரையில் நின்றிருந்த அரசன், நிலவொளியில் நீரில் தெளிவாகத் தெரிந்த தன் தாடியில்லா முகத்தின் பிம்பத்தை வெகு நேரம் பார்த்துக்கொண்டிருந்தான். திருமணத்திற்கு இந்த கோலத்தில் போனால் கண்டிப்பாக அனைவரும் அதிர்ச்சி அடைவர் என்று தெரியும். அதனால் அதன் இனிமையைக் குலைக்காமல் இருக்கவே அவன் அதைத் தவிர்க்க எண்ணி பௌர்ணமி நிலவில் கிடைக்கும் மூலிகையின் தேவையை அறிந்து அந்தக் காரணத்தைப் பயன்படுத்திக்கொண்டான். பின் மூலிகைக் கிடைத்த கையோடு தாடியையும் மனதின் கூக்குரலை மீறி எடுத்திருந்தான். இப்போது அவனின் இடத்திற்குப் போகத் தயங்கி இங்கே இருக்க, எவ்வளவு நேரம் இருக்க முடியும்? அவன் மெதுவாக குடிசை பகுதிக்குள் நுழைந்ததும் அவனின் வருகைக்காகக் காத்திருந்த மதிக்குத் தன் கண்கள் பொய் கூறவில்லை என்ற அளவற்ற மகிழ்ச்சி.

அங்கே அரசன் அச்சு அசலாக சக்திவேலே மீண்டு வந்தாற் போல் நடந்து வர, அவன் அரசன் என்பதை மறந்து அவனை நோக்கிக் கிட்டதட்ட ஓடினாள் மதி. அவனை நெருங்கி “மாமா, என்னை நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டுப் போங்க… என்னால இங்க இருக்க முடியல” என்று கூறி அவன் கையைப் பிடிக்கவும் அங்கிருந்த ஒரு பெரியவர் “நம்ம அரசனுக்கும் திருமண விருப்பம் வந்துவிட்டது பாருங்க. கமழி அரசன் ரொம்ப பொருத்தமா இருப்பாங்க” என்று கூவவும் சரியாக இருந்தது.

மதி அவனை மறைத்துக் கையைப் பிடித்ததால் அது மற்றவர்களுக்குத் தெரியவில்லை. மதி மற்றும் பெரியவர் கூறிய செய்தியில் யார் கூறியது அதிக அதிர்ச்சி தருகிறது என்றறியாமல் அந்நாளின் தொடர் அதிர்ச்சிகளால் கல்லாய்ச் சமைந்தான் நிலவரசன்.

இனி?

மழை வரும்…

முழு நிலவாய் பௌர்ணமியில் ஜொலிக்கிறேன்
அதைப் பார்த்தும் என்னை உனக்குள் அடக்கிக்கொள்ள ஆசையில்லையா?
அப்படி ஆசையிருந்தால் உன்னைச்சேர
மழையாக நான் வரவா?

error: Content is protected !!