mazhai5

mazhai5

மழை – 5
அப்பெரியவர் கூறியதை உள்ளிருந்தே கேட்ட கமழிக்கு மனதிற்குள் ஜிவ் என்று இருந்தது. இதுவரை யாரையும் நிமிர்ந்து கூட பார்க்காத ஆண்மகன் தன்னைக் காதலிப்பதாக கூறினால் யாராயிருந்தாலும் மனம் பரவசம் கொள்ளத்தானே செய்யும். வயது கம்மியேன்றாலும் உடலிலும் உள்ளத்திலும் வளர்ச்சி அதிகமாகத் தான் இருக்கும் இந்த மலைவாழ் மக்களிடம். பருவப்பெண்களுக்குண்டான அந்த உணர்வில் இவள் மிதக்க, அரசன் மதியின் கையை எடுத்துவிட்டு விறுவிறுவென்று தன் இருப்பிடம் சென்றுவிட்டான்.

மதிக்கு இங்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. அவன் சக்திவேல் இல்லை என்று மூளைக்கு புரிந்தாலும் அவனை தன் சொந்தமாய் எண்ணி மாமா என்று தான் அழைக்கத்தோன்றியது. கமழி இப்போது தானே பெரியபொண்ணு ஆனதா சொன்னாங்க அதுக்குள்ள கல்யாணமா? அதுவும் அரசனுக்கா? என்று முகம் சுருக்கினாள்.

அவளும் அரசன் சென்ற இடத்திற்கு இதைக்குறித்து விளக்கம் அறிய செல்ல, அங்கே இவள் “மாமா” என்றழைத்த காரணத்தை அறிய காத்துக்கொண்டிருந்தான்.

இவள் வந்தததும், “எதற்கு என்னை அப்படி அழைத்தாய்?” என்று கோபமாகவே கேட்டான். அவனின் நிலைமையை நினைத்து அவனிற்கே இதுவரை வராத உணர்ச்சியான கோபம் அபரிதமாய் வந்தது. ‘ஏன் இந்த பெண்ணை சந்தித்தோம்?’ என்று எண்ணும் நிலைமைக்கு வந்திருந்தான். ஏன் காப்பாற்றினோம் என்று மறந்தும் நினைக்கவில்லை.

“நீங்க இப்போது பார்க்க எப்படி இருக்கீங்க தெரியுமா? எங்க மாமா மாதிரியே இருக்கீங்க. ஆனா அவங்க போன கார் வெடிச்சிருச்சின்னு தான சொன்னாங்க? நீங்களும் இங்க தான் பிறந்து வளர்ந்தீங்க இல்லையா? அப்போ எப்படி இந்த உருவ ஒற்றுமை? எங்க மாமாக்கு குழந்தை எல்லாம் பொறக்கவே இல்லை” என்று இவள் பாட்டிற்கு கேள்வியும் நானே பதிலும் நானே என்ற ரீதியில் வழக்கம் போல வாய் மூடாமல் பேச, கோபத்தில் இருந்தவனுக்கு அதைக்கேட்க பொறுமை இருக்குமா என்ன? அவள் கூறியதில் பாதி தான் புரிந்தது என்ன வெடித்தது? எப்படி வெடித்தது என்று கூட தெரியாதே.

“ஹேய்… போதும் நிறுத்து. இங்க யாரும் உன் மாமா இல்லை. ஒரே மாதிரி தோற்றம் இருந்தா அவங்க உன் மாமா ஆகிருவாங்களா? கொஞ்சம் கூட அறிவு அப்படிங்கறதை ஆண்டவன் உனக்கு இல்லாம படைச்சிட்டான்… நீ பண்ணுன வேலையால நான் இப்போ எவ்ளோ பெரிய சிக்கல்ல மாட்டிருக்கேன் என்று உனக்கு தெரியுமா?” என்று கடிந்தான்.

தன்னை அறிவு இல்லாதவள் என்று கூறிய கோபத்தில், “என்ன? என்ன பெரிய சிக்கலு? நான் ஒன்னும் முட்டாள் இல்லை. ஒரே மாதிரி இருப்பாங்க சரி… மேனரிசம் கூடவா ஒரே மாதிரி இருக்கும்?” அவன் முறைக்கவும் ‘இந்த இங்கிலீஷ் வேற அப்போ அப்போ வந்து தமிழ் அர்த்தத்தை யோசிக்க வைக்குது என்று மனதிற்குள் புலம்பி, “அதான் சிரிக்குறது, பார்க்குறது எல்லாமே வா ஒரே மாதிரி இருக்கும்” என்று கேட்டாள்.

“ஒன்று போல் உருவம் இருந்தால் ஒரே மாதிரி தான் சிரிக்கவும் பார்க்கவும் முடியும். நான் கொஞ்சம் யோசிக்கவேண்டும் தயவு செய்து வெளியே போ” என்று விரட்டினான்.
அவன் சொன்னதை கேட்டுவிட்டால் அது வான்மதி இல்லையே. “போகமாட்டேன்.. எதுக்கு அவங்க உங்களுக்கும் கமழிக்கும் திருமணம் பேசுனாங்க?” என்று கேட்க குரலில் அவளை அறியாமலே பொறாமை எட்டிப்பார்த்தது.

“எல்லாம் உன்னால தான்… ஒரு பெண் பெரியமனுசியாகினால் அவளை காதலிக்கும் ஆண்கள் அவளை திருமணம் செய்துக்கொள்ள விரும்பி தன் தாடியை எடுத்து வெளிப்படுத்துவாங்க. ஒரு வேளை யாரும் வெளிப்படுத்தவில்லை என்றால் அந்த பெண்ணின் பெற்றோர்கள் வேறு மலையில் இருக்கும் எங்கள் இனத்தவர்களுக்கு தூது அனுப்புவாங்க. எப்படியும் மாதக்கணக்கு ஆகும். ஆனா திருமணம் முடிச்சிருவாங்க. இதுவரை அப்படி ஆகுனதில்லை. இப்போ கமழியை எப்படி? அவள் குழந்தை… அவள் பிறந்ததும் என் கையில தான் குடுத்தாங்க. அப்போ எனக்கு பதினைந்து வயதிருக்கும். நான் தான் பேர் கூட வைத்தேன்… நான் எப்படி?” என்று மேலே கூற முடியாமல் வேதனையோடு திக்கினான்.
மதியோ அவன் கூறியதைக் கேட்டு அரண்டுப் போய் அமர்ந்திருந்தாள். தன்னால் தான் இத்தனை பிரச்சனையா? என்று தோன்ற, கூடவே பதினைந்து வயது வித்தியாசமா? என்றும் தோன்றியது. அவள் மனட்சாசி ‘இதை விட அதிக வித்தியாசத்துல நம்மூர்ல கல்யாணம் நடக்குது. இப்போ இங்க இருந்து பிரச்சனையின்றி எப்படி இவனை கூட்டிட்டு போவதுன்னு பாரு’ என்று திட்டியது.
உடனே அவள், “நாம இன்னக்கி நைட்டோட நைட்டா நம்ம வீட்டுக்கு ஓடிப்போலாமா?” என்று அறுந்து போன பழைய ஐடியாவையே மீண்டும் புதுப்பித்துக் கேட்டாள்.
“நான் எதற்கு ஓடனும்? நான் உன் மாமா இல்லை… என்னால எங்கேயும் வர முடியாது” என்று அழுத்தமாக கூறி வெளியே செல்ல, “நீங்க தான நான் என்ன சொன்னாலு..” அவ்வளவு தான் பேச முடிந்தது அவளால். அதற்கு மேல் பேசமுடியாத படி ரௌத்திரத்துடன் அவள் குரல்வளையை நெறித்திருந்தான் நிலவரசன்.

இவள் வாங்கிய சத்தியம், அதனால் தான் மாட்டியிருக்கும் சிக்கல், தன்னை இவள் மாமா என்றது எல்லாம் சேர்ந்து அவனின் சாந்தனமான மனதைக் கலைத்து நிம்மதியின்றி போகச் செய்திருந்தது.
இப்பொது மீண்டும் சத்தியத்தை இழுக்கவும் பொங்கிவிட்டான். “என்னை மிருகமாக்காதே… என் முன்னால் நிற்காமல் போய்விடு” என்று கர்ஜித்துக் கொண்டிருக்கையில், “அரசா! என்ன காரியம் பண்ணிக் கொண்டிருக்கிறாய்” என்று சித்தரின் குரல் வாசலில் ஓங்கி ஒலித்தது.

அதில் படமெடுத்து ஆடும் பாம்பாய் இருந்தவன் பெட்டிப் பாம்பாய் அடங்கினான். அவளை விட்டு விலகி தவறு செய்த குழந்தை போல் ஐயாவை பார்த்து நிற்க, உள்ளே வந்து மதியிடம் திரும்பிய சித்தர், “என்னம்மா… ரொம்ப நெறித்துவிட்டானா?” என்று வினவினர்.

அவளோ தன் கழுத்தை பிடித்த அதிர்ச்சியில் இருந்து விலகாமல் “இல்லை ஐயா” என்றாள். உண்மையில் அவன் நெறிக்கவெல்லாம் இல்லை. அவள் பேச்சை தடை செய்யக் குரல்வளையைப் பிடித்தான் அவ்வளவே.

பின் அரசனிடம் வந்தவர், அவனின் தோள்களை ஆதரவாய் வருடினார். “பதற்றம் மனிதனுக்கு வருவது இயல்பு தான். ஆனா என்ன செய்கிறோம் என்று தெரியாத அளவு பதற்றம் மற்றவர்க்கு இருக்கிறதோ இல்லையோ உனக்கு இருக்க கூடாது அரசா” என்றார்.

அவன் அதிர்ந்து நோக்கவும், “உன் பதட்டத்தில் வார்த்தையை விட்டுவிட்டு அவளின் கழுத்தை நெறிப்பது எந்த விதத்தில் நியாயம்?” என்றவர் மதியிடம், “அம்மா நீ உன் வாக்கை திரும்ப பெற்றுக்கொள்… அரசன் சுதந்திரமானவன், தனித்துவமானவன். அவனை எதுவும் கட்டுப்படுத்தகூடாது. அதை அவன் விரும்புகிறானோ இல்லையோ நான் விரும்பமாட்டேன்” என்றும் கூறினார்.
மதி அமைதியாய் இருக்க, “உன் குழப்பத்திற்கான பதில் என்னிடம் இருக்கு. நான் கூறியதை நீ செய்தால், அரசன் உன்னுடன் வருவான். சத்தியத்தில் இருந்து உன்னை விடுவிக்கிறேன் என்று அவனிடம் கூறு” என்று கட்டளையிட, அரசன் பதறினான்.

“ஐயா நான் எங்கேயும் போக மாட்டேன். என்னால போகவும் முடியாது” என்று பிடிவாதம் பிடித்தான்.

மதி குழப்பமாய் இருவரையும் நோக்கி, ‘ஒரு சத்தியத்திற்கு இவர்கள் இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பார்களா? நாம என்னன்னா பொய் சொல்லிட்டு இங்க வந்துல மாட்டியிருக்கோம்’ என்று தான் நினைத்தாள்.

பின் அவரின் கட்டளைப்படி சத்தியத்தைத் திரும்ப வாங்கினாள். அவளிற்கு இது விளையாட்டாய்த் தான் தெரிந்தது. அரசனின் சக்தியை இன்னும் தெளிவாக புரிந்துக்கொள்ளவில்லை. அவள் புரியும் நாளும் விரைவில் வரும்.

அவள் சத்தியத்தைத் திரும்ப பெற்றதும் நிம்மதி பெருமூச்சை வெளியிட்ட அரசன், “ஐயா இப்போ கமழிக்கும் எனக்கும்…” என்று சொல்லாமல் நிறுத்த, “பொறுமை அரசா. நான் சொன்னபடி நீ செய்தால் எல்லா பிரச்சனையும் ஒரு முடிவிற்கு வரும். நாளைக் காலை தானே கமழியிடம் அவள் விருப்பத்தைக் கேட்பர். அதை ஆனால் நீ இவளுடன் இவள் இடத்திற்கு செல்ல வேண்டும் சம்மதமா?” என்று கேட்டார்.
அவன் மறுக்கவும், “உன் இரத்த சொந்தம் உன்னை தேடி வந்தும் உன் பூர்விகத்தை உன்னிடம் மறைப்பது எனக்குத் தவறாகப்படுகிறது அரசா. இவள் கூறும் சக்திவேல் என்பவர் தான் உன் தந்தை” என்றவர் அன்று நடந்ததைக் கூற ஆரம்பித்தார்.

சக்திவேல் – புனிதா தம்பதி காரில் ஏற்காடு செல்ல கொண்டைஊசி வளைவுகளில் பயணித்துக்கொண்டிருக்க, அதைப் பார்த்த புனிதாவிற்கு தலை சுற்றுவது போல் இருந்தது. வண்டியை நிறுத்தச் சொன்னாள் அவள். பின்னால் வருபவர்க்கு இடைஞ்சல் இல்லாமல் இருக்க காரை ஓரமாக நிறுத்தியவன் மனைவியை இறங்க சொன்னான்.

அவளும் இறங்கி மலைக்காற்றை சுவாசிக்க சற்றுத் தேவலாம் போல் இருந்தது. சிறிது நேரம் இப்படியே பேசிக்கொண்டிருந்தவர்கள் பின் இன்னொரு நாள் வரலாம் என்று எண்ணித் திரும்பச் செல்ல முடிவெடுத்தனர்.
முதலில் சக்திவேல் காரில் அமர்ந்து புனிதாவிற்கு கார் கதவை திறந்து விட்டான். அவள் ஏற முயற்சிக்கையில் மெயின் ரோட்டில் செல்லாமல் இவர்கள் காரை குறிவைத்து லாரி ஒன்று வேகமாக வந்ததை கார்க்கண்ணாடி மூலம் அறிந்த சக்திவேல் புனிதாவை காரினுள் ஏற விடாமல் அவளின் தோள் பற்றி பின்னால் தள்ளினான். அதில் தடுமாறி கீழே விழுந்தாள் புனிதா.

சக்திவேலோ காரை எடுத்துக்கொண்டு தப்பிக்க வேகமாக முன்னால் செல்ல, கொண்டைஊசி வளைவுகளில் பழக்கம் உள்ள லாரிக்கு முன் பழக்கம் இல்லாத கார் தோற்றுத்தான் போனது. புனிதாவின் கண்ணேதிரே கணவனின் காரை லாரி மோத, அது பள்ளத்தில் உருண்டு வெடித்துச்சிதறியது.

அந்தக் காட்சியைக் கண்ட புனிதாவின் மூளை அதிர்ச்சியில் செயல் இழக்க கணவனின் கார் உருண்ட இடத்திற்கு ஓடினாள். அங்கே கீழே எரிந்துக்கொண்டிருக்கும் காரைப் பார்த்து தானும் இறங்கிச் செல்லப் போனாள்.
அப்போது இவளைக் கீழே இறங்க விடாமல் தடுத்தார் சித்தர். அவள் கையைப் பிடித்து தடுத்த சித்தருக்கு அவள் இப்பொது ஒரு மாதம் சிசுவைத் தாங்கும் கர்ப்பிணி என்பது புரிந்தது. மேலும் அது கீழே விழுந்ததில், தாயின் அதிர்ச்சியில் மிகவும் அடிப்பட்டு பலவீனமாக துடித்துக்கொண்டிருந்தது. எதிர்காலம் கணிக்கும் சித்தருக்கு அச்சிசுவின் சக்தி அப்போதே தெரிந்துவிட்டது. மேலும் புனிதாவின் மரணமும் நெருங்கியதை அறிந்தார். அதனைக் காப்பாற்ற அவர் இவளைக் காக்க வேண்டும் அல்லவா?

கணவன் இறந்துவிட்டான் என்பதை இன்னும் நம்பத்தயாராக இல்லை அந்த பேதை நெஞ்சம். அவர் தடுத்ததும் சக்தியெல்லாம் வடிய அங்கேயே அமர்ந்து கதறிஅழுதாள் புனிதா. அது தான் அவள் கடைசியாக உணர்ச்சியை வெளிப்படுத்திய நாள். அதன் பின் வந்த நாள்களில் எதாவது ஒரு திசையை வெறித்துக்கொண்டே அமர்ந்திருப்பாள்.

அப்போதெல்லாம் மலைவாசிகள் இவ்வளவு அடர்ந்த கானகத்தினுள் மறைந்து வாழாமல் வெளியே சுற்றிய காலம். பின்னர் அரசாங்கம் காடுகளில் வாழ்வது சட்டப்படி குற்றம் என்று சட்டம் இயற்றிப் பல மலைவாசிகளைக் காட்டை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்ற அதில் அகப்படாமல் தப்பித்து காட்டிற்குள் புகுந்த சொற்ப குடும்பம் தான் இப்பொது சேர்வராயன் காடுகளில் வெளியுலக வெளிச்சம் படியாமல் வாழும் மக்கள்.
நிலவரசன் பிறந்ததும் அதற்காகவே காத்திருந்தது போல் புனிதாவின் உயிர் பிரிய, அந்த மலைவாசி மக்களின் செல்லமான மகனாகவே வளர்க்கப்பட்டான் நிலவரசன்.

அனைத்தையும் கேட்ட மதி தன் மாமா அத்தையின் முடிவை நினைத்து அழ, அரசனோ தன் கதையைக் கேட்டு இறுகிப்போய் அமர்ந்திருந்தான். அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை.
“அது மட்டுமல்ல அரசா, நீ இங்கேயே வளர்ந்தாலும் உன் மரபணு இங்குள்ள பழக்கங்களை முழுதாக ஏற்றுக்கொள்ளவில்லை தெரியுமா? உன் பேச்சு சற்று உடைந்த தமிழில் தான் அடிக்கடி வரும், சிறு குழந்தைகளே கள் பானம் அருந்த அதை நீ தொடக்கூட மாட்டாய், இங்கு பெரிய மனுசி ஆகியதும் அவர்களை இங்குள்ள மக்கள் பெண்ணாய்ப் பார்க்க, நீ மட்டுமே குழந்தையாய் எண்ணி இப்பொது மருகுகிறாய். இதெல்லாம் உன் தந்தையின் குணங்களாக இருக்கும்” என்று அவனிற்கு புரியும் படி எடுத்துக் கூற,
சித்தர் கூறியதை வைத்து யோசித்தவன் அதை ஒத்துக்கொண்டான். பின் தன் தந்தை இறப்பிற்கு யார் காரணம் என்று அவரிடமே கேட்க, “அதை நீ தான் உன் இடத்திற்கு சென்று அறியணும். கூடவே உன் பிறப்பே பூமியைக் காக்கத் தான்.

இந்த மலை மட்டும் உலகமல்ல. அது அந்த வானத்தைப் போலப் பறந்து விரிந்தது. இனி நீ உன் வேரைத் தேடிச் செல் அரசா” என்று கூறி அவன் தலையில் கை வைக்க, அவரிடம் சிறு குழந்தையென தஞ்சம் அடைந்தான் அந்த கம்பீர ஆண்மகன்.
அடுத்த நாள் காலைப் பொழுது அழகாக விடிய, ‘என்ன நடக்கப் போகிறதோ?’ என்ற நடுக்கத்தில் இரவு முழுவதும் உறங்காமல் மதி மற்றும் அரசன் அவரவர் குடிசையில் அமர்ந்திருந்தனர்.

error: Content is protected !!