megathotham9

                               மேகதூதம் 9

 

“ஹல்லோ ரிஷி” ரிஷியின் காதுகளை அஞ்சலியின் குரல் எட்டியது.

“அஞ்சலி..அஞ்சு..என்ன ஆச்சு? வீட்டுல மாப்ள பாத்துட்டாங்கன்னு அம்மா சொன்னது உண்மையா? நீ ஒத்துக்கல இல்ல? உங்க அம்மா கிட்ட பேசட்டுமா?” அவனது பதட்டம் அதிகமானது.

“ரிஷி..ப்ளீஸ்.. புரிஞ்சுக்கோங்க. அன்னிக்கு நீங்க உங்க சிச்சுவேஷன சொன்னீங்க. ஆனா இன்னிக்கு திரும்பி வந்திருக்கீங்க. நான் இப்போ என்ன செய்யட்டும். எங்க அம்மா ஏற்கனவே மாப்பிள்ளை பாத்து எல்லாம் முடிவு பண்ணிட்டாங்க. இனிமே என்னால ஒன்னும் செய்ய முடியாது.” சற்று தழுவி தழுத்த குரலில் பேசினாள்.

ஓரளவு அந்த வேலைக்காரி அஞ்சலியைப் போல் பேசினாலும், ரிஷி இருந்த மனநிலையில் உற்று கவனிக்க தவறினான். இது தான் விதி.

அவளும் வருத்தம் போலக் காட்டிக் கொண்டதனால், ரிஷிக்கு சந்தேகம் துளியும் தோன்றவில்லை.

“அஞ்சு.. என்ன பேசறன்னு தெரிஞ்சு தான் பேசறியா? நம்ம உறவு அவ்வளவு தானா?” அவன் அவர்களுக்குள் ஏற்பட்ட உறவைப் பற்றிக் கேட்க,

இந்த விவரம் அறியாத அந்த வேலைக்காரப் பெண்ணோ,

“போதும். எல்லாமே போதும். இதோட நிறுத்திக்குவோம்.” அருகில் இருந்து அம்பிகா எழுதிக் காட்ட, இவள் அஞ்சலியின் குரலில் அதை உணர்ச்சிகரமாகப் பேசிக் கொண்டிருந்தாள்.

“அஞ்சலி.. ஸ்டாப் திஸ்.. இது விளையாடற நேரம் இல்ல.” பொறுமை இழந்தான் ரிஷி.

“நானும் சீரியஸா தான் பேசறேன். நமக்குள்ள எல்லாமே முடிஞ்சு போச்சு.” சற்று நிதானமாகவே சொன்னாள்.

“உனக்கு என்ன அச்சு அஞ்சலி. இப்படி நமக்குள்ள எதுவும் வேணாம்னு சொல்றதுக்கு என்ன காரணம்?” ரிஷியின் குரல் உடைந்தது.

“எங்க அம்மா வேற மாப்பிளை பாத்திருக்காங்க. உங்களுக்காக எங்க அம்மாவை என்னால ஏமாத்த முடியாது. எனக்கு அவங்க முக்கியம். அவங்க கிட்ட என்னால உங்களைப் பத்தி பேச முடியல. ஏற்கனவே நீங்க எப்போ வருவீங்கன்னு சொல்லாம போயிட்டீங்க. எனக்காக வெய்ட் பண்ணாதன்னு சொன்னீங்க. அப்படி இருக்கறப்ப எங்க அம்மா கிட்ட நான் என்னனு சொல்லி கல்யாணத்த நிறுத்தறது. அதுனால தான் சம்மதிச்சேன்.

இப்போ வந்து என்ன சொல்ற ன்னு கேக்கறீங்க?” சற்று கோபம் போன்று பேசினாள் அவள்.

“அஞ்சு எல்லாம் என்னோட தப்பு தான். ப்ளீஸ் அஞ்சு. எதாவது சொல்லி உங்க அம்மா கிட்ட இந்தக் கல்யாணத்த நிறுத்த சொல்லு. இது நம்ம வாழ்க்கை அஞ்சலி. நம்ம காதல். எப்படி டி நீ இல்லாம என்னால…” ரிஷி இப்படி இறங்கிப் பேசுவான் என அம்பிகா கொஞ்சமும் எதிர்ப்பார்க்கவில்லை.

‘அத்தனை தூரம் என் மகன மயக்கி வெச்சிருக்கா அந்த அஞ்சலி.இப்போவே இப்படி.. இன்னும் இவ எனக்கு மருமகளா வர நான் சம்மதிச்சா என் பையன் மொத்தமா எனக்கில்லாம போய்டுவான். நான் இப்போ எடுத்த முடிவு சரி தான்.’ அம்பிகா அந்த வேலைக்காரியை மேலும் உசுப்பேற்றினாள்.

“என்னை மன்னிச்சிடுங்க ரிஷி.” ஒரே வார்த்தையில் பட்டுத்தரித்தார்ப் போல முடித்தாள்.

“அஞ்சலி இதுக்கு என்ன அர்த்தம். அப்போ உன் மனசுல நான் இல்லையா? என்னை வெருத்துட்டியா?” ரிஷியின் குமுறல் கோபமாக மாறியது.

“அப்படியே வெச்சுக்கோங்க. எனக்கு நீங்க வேண்டாம். உங்கள என் மனசுல இருந்து தூக்கி எறிஞ்சுட்டேன். இனிமே தயவுசெஞ்சு என்னை தொந்தரவு பண்ணாதீங்க. என் வாழ்க்கைல குறுக்க வராதீங்க. ப்ளீஸ்.” இப்படி ஒரு வார்த்தை அவள் கூறியது தான் தாமதம் ரிஷி தன் தொலைபேசியை துண்டித்துவிட்டான்.

அம்பிகா, “அப்பாடா… ரொம்ப நல்லா பேசின. இனிமே ரிஷி அந்த தரங்கெட்டவ கூட பேசவும் மாட்டான், அவள இனி தேடவும் மாட்டான். இந்தா உனக்கு கமிஷன்.” என மேலும் சில நோட்டுகளைக் கொடுத்தாள் அந்தப் பெண்ணிடம்.

“இதோ பாரு, இந்த விஷயம் நீ செத்தாலும் வெளிய வரக் கூடாது. புரியுத?” அவளை மிரட்டவும் தவறவில்லை.

“நான் ஏன் மா இதப் போய் வெளிய சொல்லப் போறேன். வரேன்மா” விட்டால் போதும் எனக் கிளம்பிவிட்டாள்.

ரிஷிக்கு அவள் கடைசியா சொன்ன வார்த்தைகள், தன்னை யாரோ கழுத்தை நெரித்துக் கொல்வது போன்ற உணர்வை அளித்தது.

“என்னை பார்த்து இப்படி பேசிட்டாளா! அதுவும் என் அம்மா முன்னாடியே என்னை வேண்டான்னு சொல்லிட்டா..அப்போ நான் வேண்டாம்! என்னை மனசுலேந்து தூக்கி எறிஞ்சுட்ட? எப்படி முடிஞ்சுது அஞ்சலி? நமக்குள்ள நடந்த எல்லா விஷயத்தையும் எப்படி உன்னால ஒதுக்க முடியும்?

வாழ்க்கையே நீ தான்னு இருந்தேன். தப்பு தான். எனக்காக காதிருக்காதன்னு சொன்னது உண்மை தான். ஆனா அதுக்காக ஒரு நாலு மாசம் வெய்ட் பண்ணிருக்கலாமே!

நீங்க திரும்பி என்கிட்டே வருவீங்க எனக்குத் தெரியும்னு சொன்னியே.. அதெல்லாம் என்ன ஆச்சு? உன் காதல் உண்மையா இருந்தா தான.. சச் எ லையர்.

இப்போ தான் உங்க அம்மா உனக்குத் தெரியறாங்களா? என்கூட படுக்கறப்ப தெரியலல… பி***” அங்கிருந்த தலையணை தாறுமாறாகக் கிழித்துக் கொண்டிருந்தான்.

“ உனக்காக கண்டிப்பா நான் என் வாழ்க்கைய அழிச்சுக்க மாட்டேன் டி. எப்படி இனிமே என் வாழ்க்கைய அமைச்சுக்கறேன்னு பாரு. என்னைக்காவது ஒரு நாள் உன்னைப் பாப்பேன்.

அன்னிக்கு உனக்கு நான் யார்ன்னு தெரியும்.” அன்று எடுத்த அந்த சபதம் இன்று அவன் வரையில் நிறைவேறிக் கொண்டிருந்தது.

ஆனால் அஞ்சலியோ ஏர்ப்போர்டில் விட்டுச் சென்றவனை இன்று தான் மீண்டும் கண்டாள். கண்டதும் ஆனந்தப் படக் கூட அவளுக்கு அவகாசம் தராமல், அவளது இத்தனை வருடக் காத்திருப்பையும் ஒரு நொடியில் பொடிப் பொடி ஆக்கிவிட்டான்.

அவன் சென்றதும் ஓடிச்சென்று தனது அறையில் அடைந்து கொண்டு  இத்தனை வருட மனப் போராட்டத்தையும் அதற்கு மேல் ரிஷி பரிசாக அளித்த உயிர்வலியையும் சேர்த்து வைத்து அழுது கதறினாள்.

யாரைக் குற்றம் சொல்வது? என்ன நடந்தது? எதுவும் தெரியாமல் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல ஆனது.

‘யாரோ எங்கள பிரிக்கணும்னு வேணும்னே ஏதோ ப்ளான் பண்ணிருக்காங்க. அவங்க யாருன்னு கண்டு பிடிக்கணும். ஆனா கண்டுபிடிச்சு என்ன செய்ய? என்னை விட்டு ரிஷி ரொம்ப தூரம் போன மாதிரி இருக்கு. விடமாட்டேன். என் ரிஷிய யாரோடையும் பங்கு போட்டுக்க என்னால முடியாது. போறேன். கண்டிப்பா ரிஷிய மீட்டு அவனுக்கு என் மேல எந்தத் தப்பும் இல்லன்னு புரியவைக்கறேன்.’  உறுதி கொண்டாள்.

வெகுநேரம் யோசித்துக் கொண்டிருந்தாள்.

ரம்யா அதற்குள் வீட்டிற்கு வந்துவிட , மதியமே வந்துவிட்ட அஞ்சலியைக் காண அவளது அறைக்குச் சென்றாள்.

“ரம்மி…!” ஓடி  வந்து அணைத்துக் கொண்டாள் அஞ்சலி.

“என்ன டி ஆச்சு? ஏன் அழற? என்ன கண்ணெல்லாம் இப்படி சிவந்து வீங்கி இருக்கு? என்னன்னு சொல்லு அஞ்சலி” ரம்யா பதறிப் போனாள்.

“ரிஷி…ரிஷி…!” அவள் திணற

“என்ன ஆச்சு டி ரிஷிக்கு?” ரம்யா அவளது தோளைப் பிடித்து உலுக்கினாள்.

“ரிஷி இங்க வந்தாரு..” கேவிக் கொண்டே நடந்த அனைத்தையும் கூறினாள்.

“அவர் என்னை பத்தி கொஞ்சம் கூட யோசிக்கல ரம்யா. இப்போ அவர் இஷ்டத்துக்கு எல்லா பொண்ணுங்க கிட்டயும்…”சொல் முடியாமல் தவிக்க,

“ச்ச ச்ச அப்படியெல்லாம் இருக்காது அஞ்சு. அப்படி நடந்துக்கற ஆள் இல்ல அவர்…” ரம்யா அவளைத் தேற்றினாள்.

“நானும் இத்தனை நாள் வரைக்கும் அப்படித் தான் இருந்தேன். ஆனா எனக்கு முன்னாடியே அவர் இன்னொரு பொண்ண இன்னிக்கு பப் க்கு வர சொல்லி கூபிட்டு இருக்காரு.”அழுகையை அவளால் நிறுத்த முடியவில்லை. முழங்காலில் முகத்தை மறைத்து குலுங்கினாள்.

“ஹே. இங்க பாரு.. அழாத அஞ்சலி. நான் இருக்கேன். அவர் மேல இன்னும் கொஞ்சம் நம்பிக்கை வை. நாம இன்னிக்கு அங்கப்  போய் பார்க்கலாம். நான் ராஜ் கிட்ட சொல்றேன். நாம மூணு பேரும் போறோம். கவலைய விடு. ரிஷி இன்னும் உன்னை நெனச்சுட்டு தான் இருக்காருன்னு நான் ப்ரூவ் பண்றேன்.” நம்பிக்கை அளித்தால் ரம்யா.

ரம்யாவின் வார்த்தைகள் அஞ்சலியின் மனதில் நம்பிக்கை என்னும் விதையை விதைத்தது.

ரம்யா சென்று அஞ்சலியின் நிலையை ராஜிடம் கூறினாள்.

உடனே ராஜும் உதவி செய்ய முன் வந்தான்.

மூவரும் அன்று இரவு ரிஷி கூறிய பப்பிற்கு சென்றனர்.

அஞ்சலியும் ரம்யாவும் கண்ணில் படாமல் ஒரு தனி பூத்தில் அமர்ந்து கொண்டனர்.

ராஜ் மட்டும் அங்கே இருந்த பார்டண்டரிடம் ப்ளடி மேரி ஆர்டர் கொடுத்தான். ரம்யாவும் அஞ்சலியும் ரிஷி அங்கே வந்தால் , அவனை அடையாளம் காட்டுவதாகக் கூறியிருந்தனர்.

ராஜை அவனுக்குத் தெரியாது என்பதால் அவனைப் பற்றி அறிந்து கொள்ளலாம் என்று திட்டம் போட்டிருந்தனர்.

அவர்கள் எட்டு மணிக்கே அங்கே வந்து காத்திருக்க, ரிஷி சற்று யோசனையோடு கிளம்பினான்.

கல்யாணம் ஆன ஒரு பெண் அதுவும் தனியாக வந்துவிடுவாளா என்று யோசித்தான்.

அவளைக் கண்டத்திலிருந்தே அவன் மனதில் ஒரு அலைப்புருதல் இருந்து கொண்டே தான் இருந்தது.

இத்தனை நாள் பார்க்காதபோது இருந்த வைராக்கியம், அவளைக் கண்ட பிறகு காணாமல் போய்விட்டது. மீண்டும் மீண்டும் அவளைக் காண வேண்டும் என்றே தோன்றியது.

சற்று தாமதமாகவே கிளம்பினான். ஒன்பதரை மணிக்கு அங்கு வந்து சேர்ந்தான். ஒரு மணி நேரமாக அவனைக் காணாமல் தவித்துக் கொண்டிருந்த அஞ்சலிக்கு அவனைக் கண்டதும் ஒரு மலர்ச்சி வந்தது.

அவள் உள்ளே வந்ததும், அவனுக்காகக் காத்திருந்த ஒரு பெண் அவன் மேல் வந்து ஈஷினாள்.

“ஹே ரிஷி… ஐ வாஸ் வெய்டிங் பார் யூ..” என அவனது கன்னத்தைத் தடவினாள்.

அவளின் தொடுகை எரிச்சலை உண்டாக்கினாலும், எங்கேயாவது அஞ்சலி இருப்பாளோ என்ற நினைவில் அவளைத் தொட அனுமதித்தான்.

அதைப் பார்த்துக் கொண்டிருந்த அஞ்சலி, “பாரு ரம்யா… அந்தப் பொண்ணு ரிஷி கூட..” கோபம் கொப்பளித்தது.

“இரு டி. அவசரப் படாத… நீ மட்டும் வெளியவே வராத. எவ்வளவு தூரம் போறாங்கன்னு பார்ப்போம்.”

அதற்குள் ராஜ்க்கு ரம்யா போன் செய்து ரிஷி யார் என்பதைக் கூறினாள்.

அவனைக் கண்டதும் ராஜுக்கு ஏற்கனவே அவனைக் கண்டிருப்பது தெரிந்தது.

அவனுடைய கம்பனியும் இவர்கள் வேலை செய்யும் அந்த காம்ப்ளெக்ஸ்ல் இருப்பதால், அவனைப் பற்றி அறிந்திருக்கிறான்.

“ரம்யா..இவன் பொண்ணுங்கள பக்கத்துலையே வரவிடமாட்டான்னு கேள்விப் பட்டிருக்கேன். ஆனா இப்ப்போ மட்டும் எப்படின்னு தெரியல. லெட்ஸ்வெய்ட் அண்ட் சீ” ராஜ் சொன்ன விஷயத்தை ரம்யா, அஞ்சலியிடம் கூறினாள்.

“ஓ! சரி நீ சொன்ன மாதிரி இங்கயே இருப்போம். பார்க்கலாம்” அவனையே அணு அணுவாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அப்பெண் அவனின் அருகில் இருந்தாலும் அவள் மேல் இவனது அஞ்சலி விரல் கூடப் படவில்லை என்பதை அறிந்தாள்.

ரிஷி அஞ்சலி வந்திருக்கிறாளா என்று தேடினான். அவள் கண்ணில் படவில்லை. இன்னும் சிறிது நேரம் காத்திருந்து அவள் வருகிறாளா என்றுபார்த்தவன், அவள் வரவில்லை என்றதும் அருகில் இருந்த பெண்ணை கடுப்பில் முறைத்தான்.

அவள் ரிஷியின் கன்னத்தை தடவி, “யுவர் பிளேஸ் ஆர் மைன்” என்று ஆங்கிலத்தில் கேட்க,

“கெட் லாஸ்ட்… டோன்ட் ஈவன் திங் ஆப் கமிங் நெக்ஸ்ட் டு மீ அகைன்” என உதறிவிட்டு அங்கிருந்து சென்று நான்கு டக்கீலா வை ஒரே மடக்கில் குடித்தான்.

“அஞ்சலி” என கையை மடக்கிக் குத்திவிட்டு அங்கிருந்து திரும்ப ராஜ் அவனது கண்ணில் பட்டான்.

‘இவன் தானே அஞ்சலியின் கணவன், இவன் எப்படி இங்கே! இவன் மோசமானவனா? அஞ்சலி ஏமாந்து விட்டாளா? பொண்டாட்டிய வீட்டுல விட்டுட்டு இங்க வந்து இவன் என்ஜாய் பன்றானா?’ ஒரு புறம் கோபம் வந்தாலும், அஞ்சலிக்காக வருந்தினான்.

அவனிடம் சென்று கேட்கலாமா என் யோசித்தவன். பிறகு தன்னால் அவளது வாழ்வு பாதிக்கப் படும் என யோசித்து எதுவும் பேசாமல் வெளியேறினான்.

வெளியே அவனது காரின் அருகில் நின்றிருந்தாள் அஞ்சலி.

“அஞ்சலி” ரிஷி அவளைக் கண்டு அருகில் சென்றான்.

“என்னை பார்க்க வந்தியா? அதுவும் உன் புருஷன் கூட?

“வாட்…? புருஷனா?” அதிர்ந்தாள் அஞ்சலி.