mem2-15

மறந்துபோ என் மனமே(2) – 15:

“அம்மா” க்ரிஷ் பார்வதி சொன்னதைக் கேட்டு அதிர்ந்தான்.

“ஏன்டா காது கிழியறமாதிரி கத்துற… தடி மாடு. அப்படி என்ன கேட்டுட்டேன்?” காதைத் தேய்த்துக்கொண்டு கேட்டார்.

“அவ என்னோட ஃபிரன்ட். அவளப்போய் நான் எப்படி… அப்படி யோசிக்க முடியும்? அது தப்பு இல்ல?” என்றான் கேள்வியாய்.

“ஃபிரன்ட்’டா இருந்தா என்ன க்ரிஷ்? ஏன்  நல்ல ஃபிரன்ட்ஸ் நல்ல லைஃப் பார்ட்னர்ஸ்’ஸா இருக்க முடியாதா? என்ன விக்ரம் நான் சொல்றது?” கணவன் பக்கம் திரும்ப…

விக்ரம் புன்னகைத்து “ஏன் முடியாது??? நீயும் நானும் இல்ல” என்றார்.

“ஐயோ உங்க லவ் ஸ்டோரி ஸ்டார்ட் பண்ணாதீங்க. அப்புறம் என்ன ஃபரஸ்ட் குழப்பாதீங்க” என்றான் தலையில் கைவைத்துக்கொண்டு.

“நான் குழப்பல க்ரிஷ்… உனக்கு புரிய வைக்கறேன். சரி. நேராவே உனக்கு ஒன்னொன்னா சொல்றேன்”

“உன்ன பத்தி… உன்னோட கேரக்டர் பத்தி… உன்னோட ப்ளஸ் மைனஸ், உனக்கென்ன பிடிக்கும் பிடிக்காது, இதெல்லாம், உன்ன எங்களை தவிர… வேற யாருக்கு நல்லா தெரியும்?”

“அதேப்போல அவளைப் பத்தி… நான் சொன்ன அதே விஷயங்கள் யாருக்கு தெரியும்?” என்று கேட்க…

அவன் மனதுக்கு பதில் தெரிந்தாலும் அவன் எதுவும் சொல்லவில்லை. தலையை நிமிர்த்தவும் இல்லை.

“நீ சொல்லலனாலும் உன் மனசுக்கு தெரியும் அது யாருனு…” என்றவர்…  “இதவிட முக்கியமா அவளோட பாஸ்ட்… கல்யாணத்துக்கு முன்னாடி லவ் அண்ட் பிரேக்கப் ஆகறது பெரிய விஷயமே இல்ல இந்த காலத்துல”

“அத… நூத்துல தொண்ணூறு பேரு பெருசா எடுத்துக்க மாட்டாங்க. ஆனா சிலபேர் இருக்காங்க… இந்த விஷயத்தை தேவையான சமயத்துல சொல்லி காயப்படுத்த”

“ஒருவேளை அவளோட future பார்ட்னர்… திரும்பவும் சொல்றேன் ஒருவேளை… அவன் சுஷி’யோட பாஸ்ட் பத்தி பேசி அவளை கஷ்டப்படுத்தினா உன்னால அத ஏத்துக்க முடியுமா?” என்றவுடன்…

கோபமாக நிமிர்ந்த க்ரிஷ், “அப்படி ஏதாச்சும் பண்ணா, அவன் பல்ல உடச்சுடுவேன்” என்றான்.

விக்ரமிற்கு சிரிப்பு தாளாமல் சிரித்தார். க்ரிஷ் அவரைப் பார்த்து முறைத்தான்.

பார்வதி சிரிப்பை அடக்கிக்கொண்டு… “சரி, சுஷியோட பார்ட்னர்’ர விடு. உனக்கு கண்டிப்பா நாங்க கல்யாணம் பண்ணி வெச்சே தீருவோம். அப்படி தானே விக்ரம்” என்று அவர் பக்கம் திரும்ப…

“கண்டிப்பா. யான் பெற்ற துன்பம் ஸாரி இன்பம் பெறுக என் மகனும்” என நக்கல் செய்ய… “சிரிப்பே வரல” என்று சொன்ன பார்வதி, க்ரிஷ் பக்கம் திரும்பினார்.

“அப்போ உன் லைஃப்ல, நீ ஆட்டோமேட்டிக்கா(automatic) உன் வைஃப்’கு தான் இம்பார்ட்டன்ஸ் குடுத்து ஆகணும். இப்போவே சுஷிய விட்டு ஒரு ரெண்டு நாள் இருக்க முடிலனு சொல்ற”

“நீ வேற யாராவத கல்யாணம் பண்ணிட்டா, சுஷிக்கு எப்படி இம்பார்ட்டன்ஸ் குடுக்க முடியும்? அப்படி குடுத்தன்னா… உன் வைஃப்’கு இந்த ஃபிரன்ட்ஷிப் ஒரு தொந்தரவா தானே இருக்கும்?” என்று சொல்ல… அவனுக்கு ஏதோ நினைவிற்கு வந்தது.

சாய்ராவிடம் அவன் பேசியதற்கு, சுஷி கோபப்பட்டபோது, அவன் சொன்ன ஒரு வாக்கியம்.

“You have all rights to come and talk to me anytime. அத நான்  disturbance ஆஹ் நினைக்கமாட்டேன்… என்கூட இருக்கவங்க நினச்சா எனக்கு அது முக்கியமில்ல”

மகனின் மனவோட்டத்தை தடுத்த பார்வதி… “இது உனக்கு மட்டும் இல்ல… அவளுக்கும் தான். அவளுக்கு வரப்போற பார்ட்னர் உங்க ஃபிரன்ட்ஷிப்’ப ஏத்துப்பானான்னு யோசி” என்றவரிடம்…

“சரி… இப்படியே பேசிட்டே இருந்தா காலைல சாப்பிட வேணாமா?” என்றார் விக்ரம்.

“அட மறந்தே போய்ட்டேன். பூரி இவனுக்கு பிடிக்கும், செய்யலாம்னு இருந்தேன்” என்றவர் …

“வாடா கொஞ்சம் அப்பளம் தேச்சு குடு…” க்ரிஷை அழைத்துக்கொண்டு சமையலறைக்குள் சென்றார். “என்ன விட்டுட்டு என்ன பேசப்போறீங்க??? நானும் வரேன்” என்று விக்ரமும் உள்ளே சென்றார்.

“ஆமா பெரிய ரகசியம்…” என சொல்லிக்கொண்டே பூரிக்கு எண்ணையை கடாயில் வைத்தார் பார்வதி.

விக்ரம் ஒருபுறம் மகனுக்கு மாவை உருண்டைப்போட்டு தர, அதை தேய்த்துக் கொடுத்தான் அம்மாவிடம்.

“சுஷிக்கும் பூரினா ரொம்ப பிடிக்கும்ல ம்மா” என்று சொல்லிக்கொண்டே தேய்த்தான்.

தீடிரென்று அவன் மனதில் ஏதோ தோன்ற…

“அவளுக்கு என்ன விட நல்ல பார்ட்னர் அமையும் ம்மா. ஏன் அவளே சொன்னா… ராம் கிட்ட நான் இன்னொரு க்ரிஷ் பார்த்தேன்னு. அவளுக்கு ராம் மாதிரியே ஒரு பையன் கிடைக்க மாட்டானா என்ன?” என்று கேட்க… பார்வதி சற்று யோசித்தார்.

“ஹ்ம்ம்… அப்பக்கூட அவ யார reference குடுத்துருக்கா? ராம்… க்ரிஷ் மாதிரி” என்றார் அழுத்தமாக.

“அப்புறம் ராமும் நீயும் ஒன்னு கிடையாது. என் பையன் ராமுக்கும் மேல” என்றார் அவனை ஆழ்ந்து பார்த்து.

க்ரிஷ் புருவத்தை உயர்த்தி…“பாரு… போதும் காமெடி பண்ணது. நான் சிரிக்கிற நிலமைல இல்ல” என்றான்.

“என்ன காமெடியா…? நெஜம்மா தான் சொல்றேன். நீ என் பையனதுனால சொல்லல. சுஷி விஷயத்துல என்ன சொன்னாலும்… ராம் பண்ணது பெரிய தப்பு” க்ரிஷும் விக்ரமும் பார்வதியை கேள்வியாய் பார்த்தனர்.

“என்ன பாக்கறீங்க? உண்மை… சுஷி அவனுக்கு ஒரு செகண்ட் சாய்ஸ். அவனுக்கு அவன் பேமிலி ரொம்ப முக்கியம். அது தப்பு கிடையாது. அப்படி தான் இருக்கணும்”

“ஆனா லவ் பண்ற பொண்ண காலம் முழுசா கண்ணுக்குள்ள வெச்சு பாத்துக்க முடுயும்னு நெனச்சா மட்டும் தான் லவ் பண்ணணும் … ஏன் அவனுக்கு சுஷிய லவ் பண்றப்ப யோசிக்க தெரியலையா? அவன் family future பத்தி?”

“எப்படியாவது சாமாளிச்சிடலாம்ன்னு நினச்சுருப்பான். முடியலனவுடனே லவ் வேணாம் பேமிலி தான் போய்ட்டான்… சுஷி அவன் மேல வெச்சிருந்த நம்பிக்கையை உடைச்சிட்டான்”

“ஆனா க்ரிஷ்… நீ சுஷி கூட நேரா பேசி எவ்ளோ வருஷம் ஆச்சு… அவளுக்கு ஒன்னுன்னவுடனே நீ போகல?” என்று சொல்லும்போது…

“அம்மா அவ என் ஃபிரன்ட். அதுனால நான் போனேன். இல்லாட்டி நான்” என்றவனை மறித்து

“கண்டிப்பா இல்ல க்ரிஷ். ஏன்… நீ நந்தினிக்கு சப்போர்ட்’டா இல்லையா? அவ, ‘ராம் தீவாளி செலிப்ரேஷன்க்கு வரல… டான்ஸ் ஆட மாட்டேன்’னு சொன்னா… நீ அவளை என்கரேஜ் பண்ணல்ல. சோ அது உன்னோட குணம்…” என்றவுடன்…

“என்னமோ சொல்ற. ஒன்னும் புரில” என்றான் குழப்பத்துடன்.

“யார் வந்தாலும்… எவ்ளோ பிரச்சனை வந்தாலும்… நம்மள லவ் பண்றவங்கள விட்டு கொடுக்கக்கூடாது. எப்பவுமே அவங்களுக்கு சப்போர்ட்டா இருக்கணும்”

“அந்த நினைப்பு இருந்தா மட்டுமே லவ் பண்ணணும்  க்ரிஷ். அதுல ராம் தோத்துட்டான். ஆனா நீ… அம்மா அப்பாகிட்ட பொய் சொல்லிட்டு அவளுக்காக போயிருக்க… அது தான் நான் சொன்ன வித்தியாசம்” என்றார்.

“சுஷிய ஏமாத்திட்டான்னு நீ ஏன் ராம திட்டல? சுஷி நம்ம வீட்டு பொண்ணு மாதிரில” என்று விக்ரம் கேட்க…

“அவன் கல்யாணம் பண்ணிட்டுல வந்து நின்னான். அப்போ போய்… ஏன் சுஷிய ஏமாத்தினன்னா கேட்கமுடியும்? பொண்டாட்டி கூட சந்தோஷமா இருனு தான் சொல்லமுடியும். அது தான் சுஷிக்கும் நந்தினிக்கும் நல்லது”

“லைஃப் இனி இதுதான்னு அவன் கரெக்ட்டா புரிஞ்சுட்டு சரியான வழில போக ஆரம்பிச்சான். ஆனா சுஷி அந்த நிலைமைக்கு போவான்னு நானும் நினைக்கல. இவன் சொல்றமாதிரி… அவ கூடவே இவன் இருந்துருந்தா… அவ அந்த நிலைமைக்கு போயிருக்க மாட்டா” என்றவர் தொடந்து…

“அவளை பொறந்ததுல இருந்து பாக்கறேன். போதும் அவ பட்ட கஷ்டம்… வலி. இனி அது வேணாம்”

“அவளோட அப்பா… வேல வேலன்னு போயிட்டு இருக்காரு, அவ பொறந்ததுல இருந்து இது வரைக்கும். அவ அம்மா… கொஞ்ச நாள் வேலைக்கு போனதுக்கப்புறம், சோசியல் கேதரிங், பார்ட்டி, hi fi லைஃப்னு வீட்ல பொண்ணு இருக்கறாங்கறதையே மறந்துட்டா”

 “சின்ன வயசுல எதுக்கெடுத்தாலும் பொண்ணுமேல சந்தேகம். ஒரு கட்டத்துல அப்படியே ரிவர்ஸ். பொண்ணு என்ன சொன்னாலும் சரி… செஞ்சாலும் சரி.  அவங்கள தொல்லை பண்ணாம இருந்தா போதும்னு இருந்துட்டாங்க. சரி என்ன தப்பென்னனு சொல்லக் கூட ஆள் இல்ல.”

“அவங்களுக்குள்ள ஒரு இணக்கமே இல்லாம போய்டுச்சு. அவளோட பெரிய சப்போர்ட்… நீயா இருந்த. நீயும் இல்லன்னு போனப்புறம் எங்ககூட கூட அவ சரியா பேசல. அப்புறம் ராம். அதுனால அடிக்ஷன்”

“போதும்… இனி அவளுக்கு தேவ ஒரு நல்ல companion. புதுசா உள்ள யாரு வந்தாலும், உறுதியா சொல்ல முடியாது… அவ நல்லா இருப்பாளா இல்லையானு”

“அவ லைஃப்’ல சந்தோஷமா இருக்கணும். என் பையன்… அவ கூட இருந்தா, அவன் லைஃப்‘உம் ஹாப்பியா இருக்கும்னு நம்பறேன்” என நீளமாகப் பேசி முடித்தார் பார்வதி. 

பார்வதி பேசப்பேச க்ரிஷ் கண்கள் கலங்கின. இதுவரை மகனிடத்தில் அவர்கள் பார்த்திடாதது. இருவரும், அதற்கு மேல் எதுவும் பேசாமல்… அவனை அவன் போக்கில் யோசிக்க விட்டனர்.

‘சுஷி எப்பொழுதும் தேடியது அவளுக்கே அவளுக்கென அன்பும் அரவணைப்பும் காட்ட யாரேனும் இருக்கிறாரா என்று…

அந்த அன்பு முதலில் க்ரிஷிடமும் அவனுடைய குடும்பத்தினரிடமும் கிடைத்தது. பின்பு சில தவறான முடிவுகள். அவனுடன் ஏற்பட்ட விரிசல்…

ராமுடன் ஏற்பட்ட பழக்கத்தில் கிடைத்த அந்த அரவணைப்பு… அதுவும் தவிடுபொடி ஆக, அவளுடைய தனிமையை மறைக்க அவள் தேடிய மது. அதனால் ஏற்பட்ட அசௌகரியங்கள்’

இது அனைத்தும் க்ரிஷ் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. ஒருவகையான பாரத்தை மனதில் உணர்ந்தான்.

சுஷியிடம் காலையில் மட்டும் பேசியிருந்தான். ‘கிளம்பும் போது கூப்பிடு’ என்று சொல்லிவிட்டு அவளும் அவனை தொந்தரவு செய்யவில்லை.

——

மதிய நேரம் ஆக, அவனின் இறுக்கத்தை கலைத்தது ராம் வருகை.

“ஹே க்ரிஷ். வீட்டுப்பக்கம் வரவேயில்லையே? நான் நேத்தே வந்து உன்ன பார்க்கணும்ன்னு நினச்சேன்… ஆனா நந்தினி function’கு சிலது வாங்கணும்னு சொன்னா. அதா சிகாகோ போயிருந்தோம். எப்படி இருக்க…” என்று கேட்டுக்கொண்டே ராம் வந்தான்.

“ஹாய் ராம். வா வா. நான் நல்லா இருக்கேன்… நீ நந்தினி எப்படி இருக்கீங்க” என்று அவனை தழுவிக்கொள்ள… “நல்லா இருக்கோம். என்ன fitness freak’க்கு லைட்டா tummy’லாம் வந்துருச்சே” என்று கேட்டு கொண்டே உட்கார்ந்தனர்.

அதே நேரம் அங்கு வந்த விக்ரம்… “அதுவா ரெண்டு வாரம் பையன் செம்ம குஷியா இருந்திருக்கான். ஒர்க் அவுட் கூட மறந்துட்டான்னா பாரேன்” என்று நக்கல் அடித்தார்.

க்ரிஷ் திரும்பி அவன் தந்தையை முறைக்க… அவர் நமட்டு சிரிப்பு சிரித்தார்.

“அங்க இன்னும் எது, எங்க இருக்குன்னே தெரில ராம். இனி தான் ஜிம் பாத்து சேரனும்” என்று சாமாளித்தான்.

“ஹ்ம்ம். நீ வரல்ல இன்னிக்கி ப்ளூமிங்டன்… நந்தினியோட ப்ரொக்ராம்’க்கு??” ராம் கேட்க “இல்ல ராம். நான் ஈவினிங் கிளம்பறேன். கொஞ்சம் வேல இருக்கு” என்றான் க்ரிஷ்.

மகனின் பதிலை எதிர்பார்த்த பார்வதியும்… அங்கே புன்னகையுடன் வந்து உட்கார்ந்துகொண்டார். அதேநேரம் நந்தினியும் வர, “நீங்களும் வருவீங்கன்னு நினச்சேன் க்ரிஷ்” என்றாள்.

“Sorry Nandy. நெஸ்ட் டைம் கண்டிப்பா இருப்பேன்” என்றவன்… அவர்களிடம் பேசிவிட்டு, ஊருக்கு கிளம்பத் தயாரானான்.

——-

“அம்மா… நான் தான் லாஸ்ட் டைம்’மே சொன்னேனே… இந்த food பேக்’லாம் வேணாம்னு” சலித்துக்கொண்டான் க்ரிஷ்.

“உனக்கு யாரு குடுத்தா? இது சுஷிக்கு பிடிச்ச வத்தக்கொழம்பு, பூண்டு ரசம் மிக்ஸ், தக்காளி தொக்கு. அப்புறம்… பூரிக்கு அப்பளம் மட்டும் தேச்சு வெச்சுருக்கேன்”

“ஒரு அஞ்சு ஆறு மணி நேரத்துக்குள்ள செஞ்சு சாப்பிட்டுருங்க” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே… க்ரிஷ் பார்வதியை கட்டிக்கொண்டு கன்னத்தில் முத்தமிட்டான்.

“தெளிவா தானே இப்போ இருக்க?” கேட்ட பார்வதியிடம்…

“தெரில பாரு… ஆனா ஒரு விஷயம் உண்மை. அவ சந்தோஷமா இருந்தா… நான் நிம்மதியா இருப்பேன். அதுக்காக நான் எதுவும் செய்யலாம்னு முடிவு பண்ணிட்டேன்” என்றவுடன் பார்வதியின் முகம் பூரித்தது.

——

பல எண்ணங்களுடன் க்ரிஷ் நெவார்க் வந்தடைந்தான். அவனுக்காக அங்கே சுஷி காத்துக்கொண்டிருந்தாள்…