MEM2-16

மறந்துபோ என் மனமே(2) – 16:

அவளை பார்த்தவுடன்… ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு. இரண்டு நாட்கள் மட்டுமே பார்க்கவில்லை. இருப்பினும் அவளை நேரில் பார்த்தவுடன் ஒரு நிம்மதி.

“ஹே சுஷி…” என்று அவளை தழுவிக்கொள்ள… “ஹப்பா வந்துட்டயா… எப்போடா வருவன்னு ஆயிடுச்சு” என்று அவனுடன் கைகோர்த்துக்கொண்டாள்.

“ரொம்ப நேரம் வெயிட் பண்றயா சுஷி? எப்போ வந்த ஏர்போர்ட்க்கு?”

“நீ கிளம்பிட்டன்னு சொன்ன உடனே நான் கிளம்பி வந்துட்டேன்” கண்ணடித்து கூறினாள்.

“என்னது!!! எவ்ளோ நேரமா இங்கயே இருக்க? லூசா நீ”

“வீட்ல போர். அங்க இருக்கிறதும் இங்க இருக்கிறதும் ஒன்னு தான்னு கிளம்பி வந்துட்டேன்” என்றாள் பற்களைக் காட்டி.

பின், “சரி ஆண்ட்டி அங்கிள் எப்படி இருக்காங்க?” சுஷி கேட்க… “ஆல் குட் சுஷி” என்று சொல்லும்போது… பார்வதி பேசியது நினைவிற்கு வந்து சென்றது.

இருவரும் காரில் எற… “ஸ்டீவ் வந்துட்டான் க்ரிஷ். காலைல போனேன் . மதியம் வர பேசிட்டு தான் வந்தேன்” சொன்னவள் மனதில் ஸ்டீவ் பேசியது… அவன் கூறியது… என நினைவிற்கு வந்தவண்ணம் இருந்தது.

சிறிது நேரம் மௌனமே நிறைந்திருந்தது.

“ஏன் எதுவுமே பேச மாட்டேங்கற க்ரிஷ்?” சுஷி கேட்க…

‘எல்லாம் இந்த பாரு’வ சொல்லணும். ஏதேதோ சொல்லி எனக்கு இப்போ என்ன… எப்படி பேசறதுனே தெரில’ என்று மனதுக்குள் புலம்பிய க்ரிஷ்… “அப்படிலாம் ஒன்னும் இல்லயே” என்றான் மழுப்பலுடன்.

இவ்வாறே இருவரும் கேள்வி கேட்டு பதில் சொல்லிக்கொண்டு மட்டுமே இருக்க, வீடு வந்து சேர்ந்தனர்.

“சுஷி அம்மா உனக்கு பூரி தேச்சு குடுத்தாங்க. சீக்கிரம் செஞ்சுடலாமா?” அவன் சொன்னவுடன்… அவள் ஆச்சர்யம் கலந்த சந்தோஷத்தில் “ஆண்ட்டிட்ட சொல்லிட்டயா க்ரிஷ்… என்ன பார்க்க தான் வந்துருக்கன்னு” என கேட்க…

“ஹ்ம்ம்… உனக்காக எல்லாம் ஸ்பெஷல்… இதோ” என்று எடுத்துவந்த அனைத்தையும் கிட்சனுள் வைத்தான்.

“ஆண்ட்டி என்ன பத்தி கேட்டாங்களா? அங்கிள் என்னப்பத்தி பேசினாரா? எனக்காகவா செஞ்சு குடுத்தாங்க இதெல்லாம்” என்று கேட்டுக்கொண்டே போக…

“ஹ்ம்ம்… உன்ன ரொம்ப ரொம்ப விசாரிச்சாங்க. உனக்கு பிடிக்கும்னு பாரு செஞ்சுக்குடுத்தா” அவள் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தை பார்த்து புன்னகைத்தான். இருவரும் இரவு உணவு செய்து சாப்பிட்டு முடித்தனர்.

எப்பொழுதும் போல் சிரிப்பு கேலி விளையாட்டு என்றெல்லாம் இல்லாமல் இருவரும் அவரவர் யோசனைகளில் இருந்தபடியே உறங்கினர்.

அடுத்த இரு நாட்களும் இருவரிடையில் ஒரு சின்ன தடுப்பு போடப்பட்டதுபோல் அவரவர் வேலையில் மூழ்கினர். இடைவேளையின்போது சின்ன சின்ன சம்பாஷணை அவ்வளவாகவே இருந்தது.

‘ஏதோ அவன் மனநிலை சரியில்லை’ என்பதை மட்டும் உணர்ந்த சுஷி அன்று மாலை, புறப்படும்போது…

“க்ரிஷ் இன்னைக்கு நம்ம ஒரு ஸ்பெஷல் இடத்துக்கு போகப்போறோம்” என்று சொல்லிக்கொண்டு காரை எடுத்தாள்.

க்ரிஷ் என்னவாக இருக்கும் என்று யோசிக்கும்முன், சில நிமிட தூரத்தில் ஒரு தினக்கூடத்தை அடைந்தனர்.

“சுஷி” என விழிகள் அகல அவளைப் பார்த்து புன்னகைக்க…

“நீ ஏதோ சரியில்ல க்ரிஷ். எதையோ யோசிச்சிட்டே இருக்க. உன்ன இப்படி பார்க்கவே என்னவோ போல இருக்குடா. போ… போய் கொஞ்ச நேரம் மெடிடேட் பண்ணு. யு வில் பீல் பெட்டெர். நான் பார்க் பண்ணிட்டு ரிசெப்ஷன்ல வெயிட் பண்றேன்” என்று  சொன்னவளிடம் புன்னகையுடன் சரி என்றான்.

சிறுவயதிலிருந்து அவன் பார்வதியிடம் கற்றுக்கொண்ட ஒரு கலை. அவன் மனதை ஒருநிலைஃப்படுத்த அவன் தியானம் செய்யும்போது அவள் பார்த்திருந்தாள்.

கொஞ்சம் அதிக நேரம் எடுத்துக்கொண்டவன், முடித்து வெளியே வந்தான். அவன் மனது சமநிலப்பிப்பட, ஒரு நிம்மதி அவன் முகத்தில் தெரிந்தது.

“தேங்க்ஸ் சுஷி” என்றான் புன்னகையுடன்.

“மூஞ்ச பாரு… இப்போ தான் பாக்கற மாதிரி இருக்கு ரெண்டு நாளா இஞ்சி தின்ன மங்கி மாதிரி. ச்ச.. சரி போலாமா” அவள் கேட்டவுடன்… “ஹ்ம்ம்” என்றான் முகத்தில் மலர்ச்சியுடன்.

‘நம்ம நினைக்கறத சீக்கிரம் சுஷிட்ட சொல்லணும். டிலே பண்ணாம. அதுக்கு இந்த சனிக்கிழமை நல்ல நாள்’ என்று மனதில் நினைக்க, முகத்திலும் புன்னகை தெரிந்தது.

——

மறுநாள் காலை முதலில் எழுந்த க்ரிஷ், அவளுக்கு குடிக்க ஏதோ ஒன்றை கொடுத்துவிட்டு… “சுஷி நான் ஜாகிங் போயிட்டு வந்துடறேன். நீ ரெஸ்ட் எடு. முடியாம இருக்க… எதுவும் பண்ண வேணாம். நான் வந்து பண்ணறேன்” என சொல்லிவிட்டு சென்றான்.

அவன் சென்ற சில நிமிடத்தில் அவளுக்கு வீடியோ அழைப்பு வந்தது… யார் என்று யோசனையுடன் அட்டென்ட் செய்ய… ஸ்க்ரீனில் பார்வதியின் முகம்.

“ஆண்ட்டி” என்றாள் சத்தமாக… சந்தோஷத்தின் மிகுதியில்.

“சுஷி எப்படி இருக்க….

“நல்லா இருக்கேன் ஆண்ட்டி. நீங்க அங்கிள்’லாம் எப்படி இருக்கீங்க…”

“ரெண்டு பேரும் நல்லாவே இருக்கோம். அந்த தடி மாடு இருக்கானா….”

புன்னகையுடன் சுஷி… “இல்ல ஆண்ட்டி அவன் ஜாகிங் போயிருக்கான்”

“ஏன் நீ போகல சுஷி?

“எனக்கு கொஞ்சம் ஸ்டொமக் pain அதா….”

“ஓ அதுக்கு தான் நேத்து என்கிட்டே அவன் கை வைத்தியம் கேட்டானா…”

முகத்தில் சிரிப்புடன்… “அத தான் இப்போ குடுத்து… குடிக்கச் சொன்னான் ஆண்ட்டி”

“அப்புறம் அந்த வத்தக்கொழம்பு தக்காளி தொக்கெல்லாம் இப்போ சாப்பிடாத. வயத்துவலியோட… அது காரம்”

“கண்ட்ரோல் பண்ணிட்டு இருக்கேன் ஆண்ட்டி. இன்னும் ஒரு ரெண்டு நாள் தான்”

சுஷியை பார்த்து புன்னகைத்த பார்வதி… “ஹ்ம்ம்… சரி. நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணுமே. நீ என்ன பண்ற… போய் கதவை தாள் போட்டுட்டு வா” என்க…

சுஷி அவரிடம் “எதுக்கு ஆண்ட்டி? வந்தா க்ரிஷ் தான் வருவான்”

“அவன் வந்து தொல்லை பண்ண கூடாதுனு தான் போடச்சொல்றேன். போ” என்றார் அதே புன்னகையுடன்.

“இதோ” என்று கதவை தள்ளிட்டு விட்டு வந்து உட்கார உட்கார்ந்த சுஷி, அவரிடம் “சொல்லுங்க ஆண்ட்டி” என்க…

“சுஷி… நீ க்ரிஷ் பத்தி என்ன நினைக்கற?” கூர்மையாக அவளை பார்த்தார்.

‘இது என்ன கேள்வி என்பதுபோல’ சுஷி, “ஆண்ட்டி” என்றாள். 

“அப்படி என்ன கேட்டுட்டேன் சுஷி?” 

“ஹாஹாஹா. திடீர் கேட்டீங்களா அதான். க்ரிஷ் பத்தி நான் என்ன சொல்லப்போறேன்… என் லைஃப்’ல நான் தொலச்ச சந்தோஷம் எனக்கு திரும்பி வந்துருக்குன்னா அது க்ரிஷ்’னால. அவன் தான் இப்போ என்னோட சந்தோஷமே” என்றாள் முகத்தில் மலர்ச்சியுடன்.

“ஹ்ம்ம். அப்போ க்ரிஷ் உன்கூடவே லைஃப் full’ல இருந்தா… நீங்க ரெண்டு பேருமே இப்படியே சந்தோஷமா இருக்க முடியும் தானே” என்றார் புருவத்தை உயர்த்தி.

“புரியல ஆண்ட்டி நீங்க சொல்றது? நாங்க இப்படியே தானே இருக்க போறோம்… அப்புறம் என்ன?” என்றாள் கேள்வியாய்.

“இப்படியேனா?” அவர் கேட்க… அவளுக்கு புரிந்தது அவர் ‘என்ன சொல்ல வருகிறார்’ என்று.

இதையே தான் அன்று ஸ்டீவும் அவளிடம் கேட்டான். அவள் மெளனமாக இருக்க…

“நீங்க ரெண்டு பேரும் எப்பவுமே சந்தோஷமா இருக்கணும். எனக்கு அதான் ஆசை… இங்க வந்த ரெண்டு நாள் அவன் எவ்ளோ உன்ன மிஸ் பண்ணான்னு நான் பாத்தேன். அவன் கிட்ட பேசினேன். அதே போல இப்போ உன்கிட்ட பேசறேன். சரி நேரடியாவே சொல்றேன். நீங்க ரெண்டுபேரும் ஏன் உங்க லைஃப், ஹாப்பினஸ் எல்லாமே ஷேர் பண்ணிக்கக்கூடாது” பட்டென கேட்டார்…

“ஆண்ட்டி அது… வந்து…” தயங்கினாள் சுஷி. இதே தயக்கத்தை தான் அன்று ஸ்டீவிடமும் காட்டினாள்.

“இதுல என்ன இருக்கு சுஷி? உங்க ரெண்டு பேர பத்தி… உங்க ரெண்டு பேர தவிர, வேற யாரு நல்லா புரிஞ்சுக்க முடியும்? அந்த புரிதல் இருந்தா தான் லைஃப் நல்லா இருக்கும். அப்புறம்… நான் ஃபோர்ஸ்(force) பண்ணல. உன்ன கொஞ்சம் யோசிக்க சொல்றேன் அவ்ளோதான். அவன்கிட்டயும் இதே தான் சொன்னேன் உன்கிட்டயும் சொல்றேன்” என்றவரை மறித்த சுஷி…

“எனக்கு நீங்க சொல்ற லைஃப் மேல பிடிப்பே போச்சு ஆண்ட்டி. நான் அவனுக்கு எப்படி செட் ஆவேன்? என்னோட பாஸ்ட்… உங்க எல்லாத்துக்கும்…” கண்கள் கலங்க வார்த்தை தடுமாறியது.

“நீ எந்த உலகத்துல இருக்க சுஷி? பாஸ்ட் பத்தி யோசுச்சுட்டு இன்னும் எவ்ளோ நாள்? மனுஷங்க எல்லாத்துக்குமே ஒரு கசப்பான காலம் இருக்கும். அதையே நினைச்சுட்டு…”

“கண்ணத் தொட. எனக்கு சுஷிய பழைய சுஷியா… சந்தோஷமா பாக்கணும். நீ சந்தோஷமா இருந்தா… நாங்க எல்லாருமே சந்தோஷமா இருப்போம். அவ்ளோ தான்”

“நல்லா யோசிங்க. நீங்க ரெண்டு பேரும் பேசி முடிவெடுங்க. மறுபடியும் சொல்றேன் நான் கட்டாயப்படுத்தல. என்னோட கருத்தை சொன்னேன். உங்களுக்கு எது கரெக்ட்’னு படுதோ அத நீங்க முடிவு பண்ணுங்க” என்று நிறுத்தியவர்…

“அந்த தடி மாடு தான் கதவ தட்டிட்டே இருக்கான்னு நினைக்கறேன். நீ போ. நான் உன்கூட அப்பறமா பேசறேன்” என்று அவளிடம் Bye சொல்லிவிட்டு போன் வைத்தார்.

அவன் கதவை தட்டும் சத்தத்தில் தன்னிலைக்கு வந்த சுஷி, எழுந்து கதவை திறந்தாள்.

“இடியட்… என்ன ஆச்சு உனக்கு? பயந்தே போய்ட்டேன். ஏன் லாக் பண்ணின? வேற யாரு வரப்போறா இங்க?” என்று கேட்டுக்கொண்டே உள்ளே வர… அவள் மெளனமாக இருப்பதை பார்த்து… “என்ன ஆச்சு உனக்கு திடீர்னு? சுஷி…” என உலுக்கினான்.

“அது… அது ஒன்னும் இல்ல” அவள் தயங்க… “நான் வீடியோ மெசேஜ் அனுப்பினேன் பாத்தியா?” என்றான் கட்டிலில் இருந்த அவளுடைய மொபைலை எடுத்து.

“என்ன மெசேஜ்?” அவள் கேட்டவுடன், போனை நீட்டினான்.

அந்த வீடியோவில்… திடீரென அங்கு நின்றவன் மூக்கில் யாரோ குத்த, அதை மற்றொவன் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தான். அடிவாங்கியவன், மூக்கில் இருந்து கையை எடுத்துப் பார்க்க… கையில், மூக்கில் ரத்தம்.

அடிவாங்கியவன் முகம் அந்த ரத்தக் கரையில் கூட சுஷிக்கு நன்றாகவே தெரிந்தது ‘அது யார்’ என்று… விழிகள் விரிய பார்த்துக்கொண்டிருந்தாள். அடுத்த நொடி மற்றொரு பன்ச்(punch) இன்னும் அழுத்தமாக அவன் முகத்தில் விழுந்தது.

க்ரிஷை ஏறிட்டாள் கண்கள் கலங்க. அவன் கைகளை குறுக்கே கட்டிக்கொண்டு முகத்தில் புன்னகையுடன்… அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.

மறுபடியும் வீடியோ பார்க்கும்போது… அதுவரை வீடியோ எடுத்துக்கொண்டிருந்தவன் “Can I?” என்று கேட்டுவிட்டு,  அவனும் ஒரு பன்ச் கொடுத்தான்.

அப்போதுதான்… முன்பு வீடியோ எடுத்துக்கொண்டிருந்தவன் ஸ்டீவ் என தெரிந்தது.

சில வினாடிகள் கழித்து அடிவாங்கிய அந்த சரத்… “ஸாரி சுஷீலா. இனி இந்த தப்ப யார்கிட்டயும் நான் பண்ண மாட்டேன்” மூக்கை துடைத்துக்கொண்டு மன்னிப்பு கேட்டான்.

சரத் குறித்து அத்தியாயம் 6’றில் வந்தது.

அந்த நொடி போனை கட்டிலில் போட்ட சுஷி… ஓடிச் சென்று க்ரிஷின் இடையை சுற்றி கட்டிக்கொண்டாள். அவனும் அவளை தோளோடு அணைத்துக்கொண்டு…

“மைக்கேல்’கு கொஞ்சம் கஷ்டப்பட்டேன். இவன் நல்லா அமுல் பேபி மாதிரி இருந்தான். வேல ஈஸி’யா முடிஞ்சது” என்று சிரித்துக்கொண்டே சொல்ல, தன்னை அவனிடம் இருந்து விடுவித்துக்கொண்ட சுஷி…

“அவன் என்ன செஞ்சான்னு…” அவள் சொல்ல வரும்போது… அவளை செல்லவிடாமல் மறித்த க்ரிஷ்…

“சில விஷயத்தை திரும்ப திரும்ப பேசி… அதையே நினைச்சுட்டு இருக்கறது வேஸ்ட். அது தெரியாம இருக்கறதே நல்லது. நான் தெருஞ்சுக்கவும் விரும்பல”

“ஏன்னா… அப்புறம் நான் அவனை ஏதாச்சும் பண்ணிட்டு, என்ன பிடிச்சு உள்ள போட்டுட்டா? பக்கத்துல சப்போர்ட்’கு கூட யாரும் இல்ல. எதுக்குனு சொல்லு?” புருவத்தை ஏற்றி… அவள் முகத்தை பார்த்து புன்னகைத்தான்.

அவன் வயிற்றில் குத்திய சுஷி… “நீ தடிமாடே தான். தெரியுது” கலங்கிய கண்களுடன் புன்னகைத்தாள்.

“என்ன தடி மாடா? பாருட்ட பேசினயா?” என்று அவசரமாக கேட்டவன் மனதோ ‘ஐயோ… பேசினங்களா… என்ன பேசிருப்பாங்க…?” என படபடத்தது.