MEM2-21A

மறந்துபோ என் மனமே(2) – 21

இருவரும் அடுத்த நாள் அவன் பாட்டி வீட்டில் இருந்து புறப்பட்டனர்.

வெளியே சுஷிக்காக காத்திருந்த க்ரிஷை பார்த்ததும்… “இது என்ன பைக்ல போகப்போறமா?” அதிர்ச்சியுடன் அங்கிருந்த ஹார்லி டேவிட்சன் பார்த்து கேட்டாள் சுஷி.

“ஆமா சுஷி. மாமா கார் எடுத்துக்க சொன்னாரு. நமக்கு இங்க ட்ராஃபிக் ஒத்து வராது. பிளஸ் லெப்ட் சைட் டிரைவிங். வந்த இடத்துல எதுக்கு ரிஸ்க்னு ராகேஷ் பைக் எடுத்துட்டேன்”

“அதுக்கு கார் ஹையர் பண்ணிக்கலாமே?” பைக்’கை பார்த்துக்கொண்டே கேட்டாள்.

“எதுக்கு இவ்ளோ கேள்வி? டாக்ஸில போனா… நம்மகூடவே டிரைவர் ட்ராவல் பண்ணுவாரு” என்றுவிட்டு அவள் அருகில் வந்து மெதுவாக “ப்ரைவசி இருக்காது பாரேன்” கண்ணடித்த க்ரிஷ் பைக்கை ஸ்டார்ட் செய்ய ஆயத்தமானான்.

“அய்யே… ச்சீ. ஆமா, நீ பைக் அங்க எப்போ ஓட்டின?” என கேட்டுக்கொண்டே பின் உட்கார்ந்தாள்.

அங்கிருந்தவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு… “ஒழுங்கா பிடிச்சுக்கோ சுஷி” சொல்லிவிட்டு ஸ்டார்ட் செய்தான்.

எங்கு பிடிப்பது என்று பார்த்தவளிடம் கண்ணாடி வழியாக “என் தோள பிடிச்சுக்கலாம் இல்ல என்னோட ஹிப்’ப கூட பிடிச்சுக்கலாம்” என்றான் இதழோரம் புன்னகையுடன்.

அவன் தலையில் குட்டிய சுஷி, தோள்களை பிடித்து நன்றாக உட்கார்ந்துகொண்டாள்.

“நான் ஹார்வர்ட்’ல இருந்தப்ப என்னோட ஃபிரன்ட் ஒரு பைக் ஃபிரீக் (freak)…  கேம்பிரிட்ஜ் பாஸ்டன்’னு பைக்ல நல்லா சுத்திருக்கோம்” என்று சொல்ல

“யாரு கூட சுத்தின” அவன் அருகில் சென்று கேட்க “பையன் கூடவா சுத்துவாங்க?” என்று கண்ணாடிவழியாக பார்த்து சொன்னான் சிரித்துக்கொண்டு.

அவள் தலையில் அடித்துக்கொண்டாள்.

“பைக்னா லெப்ட் சைட் ரைட் சைட் டிரைவிங் ப்ராப்லம் இருக்காது சுஷி. கொஞ்சம் நிம்மதியா ஓட்டலாம். அதுனால தான்”

சுஷிக்கு அது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. தலைமேல் சுட்டெரிக்கும் சூரியன். சூடாக முகத்தில் விழும் அனல் காற்று. அந்த காற்றை கிழித்துக்கொண்டு பறப்பது போல் இருத்தது.

இருவரும் ஹோட்டல் வந்தடைந்தனர்.

பைக்கில் இருந்து இறங்கிய சுஷியின் முகம் அந்த வெயிலுக்கு சிவந்திருந்ததை பார்த்த க்ரிஷ்… “உன்னால முடிலனா கார் எடுத்துக்கலாம் சுஷி. ரொம்ப ஹாட்’டா இருக்குல” யோசனையுடன் கேட்டான்.

அவளுக்கும் இது பிடித்துள்ளது என்பதை வெளிப்படையாக சொல்லாமல் புன்னகையுடன்… “பரவால்ல நீ பைக்ல போகணும்னு ஆசபட்டல. இதுலயே போலாம்” என்றவுடன், ‘உன்னைப்பற்றி எனக்கு தெரியாதா’ என்பதுபோல சிரித்துக்கொண்டே தலையசைத்த  க்ரிஷ்…

“அப்போ ஒரு லாங் டிரைவ் இந்த ECRல போயிட்டு வருவோம். நாளைக்கி தானே திருச்சி கிளம்பறோம். மஹாபலிபுரம் போலாமா? ஈவினிங் வந்துடலாம்” அவன் கேட்டதற்கு மறுப்புத் தெரிவிப்பாளா என்ன?

சிறிது நேரத்தில் இருவரும் புறப்பட்டனர். சுஷிக்கு அதுவே முதல்முறை பைக்கில் செல்வது… அதுவும் சென்னையில். சுற்றி வேடிக்கைப் பார்த்து… அரட்டை அடித்துக்கொண்டே இருவரும் சென்றனர்.

கடல் மற்றும் கடல் ஒட்டிய சாலை. அந்தக் காற்று… பைக்கில் பயணம் அதுவும் க்ரிஷுடன். மிகவும் சந்தோஷமாக இருந்தாள் சுஷி. போகும்வழியில் பார்ப்பதெல்லாம் வாங்கி சாப்பிட்டுக்கொண்டே சென்றனர்.

——-

நன்றாக ஊர் சுற்றிய பின் இருவரும் சென்னை திரும்பிக்கொண்டிருந்தனர்.

அவன் கொஞ்சம் சோர்வாக தெரிய, “என்னாச்சு க்ரிஷ்  ஏன் டல்’லா இருக்க”

“ரொம்ப தல வலிக்குது சுஷி. வெயில்னு நினைக்கறேன்” கிரிஷ் சொல்ல…

“ஃபிசிஷியன்ட்ட போலாம் க்ரிஷ்”

“இல்ல வேணாம் சுஷி. ஏதாச்சும் ஃபார்மசில பரசிட்டமால் வாங்கிப்போம்” என்று அங்கிருந்த மெடிக்கல் ஷாப் பக்கம் நிறுத்திய க்ரிஷ், மருந்து வாங்கிக்கொள்ள… அங்கிருந்தவர் பரசிட்டமால்’லுடன் உடனடி நிவாரணத்துக்கு தலை வலி தைலத்தையும் தந்தார்.

——-

இருவரும் ஹோட்டல் வந்தவுடன்… சாப்பிட்டு முடித்து படுக்க செல்லும் முன்… அவன் மாத்திரை எடுத்துக்கொண்டான்.

“ஸாரி சுஷி. ரொம்ப முடில நான் படுக்கறேன்” அவன் படுத்துக்கொண்டவுடன்…

“க்ரிஷ் அந்த அங்கிள் தான் தலைல தேச்சுக்க சொல்லி மருந்து கொடுத்தாரே சீக்கிரம் சரி ஆகிடும்ன்னு. நான் உனக்கு போட்டுவிடறேன்” அவன்  தலை அருகில் அமர்ந்த சுஷி, தைலத்தை அவனுக்கு தேய்க்க ஆரம்பித்தாள்.

அதன் வாசம், அவள் செய்துவிடும் மசாஜ்… அவனுக்கு தலை வலி கொஞ்சம் குறையத் தொடங்கியது.   

“நாளைக்கெல்லாம் பைக் வேணாம்டா. ரொம்ப வலிக்குதா…” தேய்த்துக்கொண்டே கேட்க… “இல்ல சுஷி. இப்போ பரவால்ல. போதும்” என்றான்.

அவள் தைலத்தை மூடிவிட்டு எழுந்து செல்ல எத்தனிக்க, அவள் கையை பற்றினான். அவள் திரும்பி கேள்வியாக அவனைப் பார்த்து “ஏதாச்சும் வேணுமா?” என கேட்க, இல்லை என்பது போல் தலையசைத்த க்ரிஷ்…

“தேங்க்ஸ்” என்று பற்றிய கையை இழுக்க… அவளும் அருகில் வந்தாள்.

பிடித்த கையை நெஞ்சின் மேல் வைத்துக்கொள்ள… என்ன என்று புரியாமல் அவன் அருகில் அவள் உட்கார்ந்தாள்.

“பாரு எனக்கு இப்படி பிடிச்சு விடுவா. இப்போ நீ. என்ன உனக்கு நிஜமா பிடிச்சிருக்கா சுஷி? இல்ல பாரு ஏதாச்சும் கம்பல் பண்ணி…” என முடிக்கவில்லை…

அவன் பிடியில் இருந்து கையை விளக்கி… அவனை கோபமாக பார்த்துவிட்டு அங்கிருந்து செல்ல முற்படும்போது மறுபடியும் அவள் கையை பற்றி எழுந்தான்.

“விடுடா கைய. இடியட்… நேத்து அவ்ளோ ஃபீல் பண்ணி பேசினேன். இப்போ என்ன கேள்வி இது???” அவள் விடுவித்துக்கொள்ள பார்க்க,

அவளை இழுத்து அருகில் உட்காரவைத்த க்ரிஷ், அவள் கண்களைப் பார்த்து “முக்கியமான மூனு வார்த்தை வரலையே மேடம்ட்ட இருந்து” புன்னகையுடன் கேட்க “அது சொன்னா தான் நம்புவியா?” கேட்டாள் முகத்தை திருப்பிக்கொண்டு.

அவளை தன் பக்கம் திருப்பிய க்ரிஷ் ‘வேண்டாம்’ என்பது போல தலையசைத்து… “வேற ஒன்னு பண்ணா கூட ஒகே” சொன்னவன் கண்கள் அவள் இதழ்களை பார்த்தது.

சுஷி புன்னகையுடன் “பார்வையே சரியில்லையே… விடு” என்று எழ முயற்சிக்க…

அவள் தோள்பற்றி தன் பக்கம் திருப்பிய க்ரிஷ் இதழோரம் புன்னகையுடன்… “நீ சொல்லலைனா என்ன…. நான் சொல்றேன்” என்று சொல்லவரும்போது…

“ஐயோ வேணாம்” கைகளால் காதுகளை மூடிக்கொண்டு கண்களையும் இறுக மூடிக்கொண்டாள்.

அத்தருணம் ‘அவன் சொல்லப்போகிறேன்’ என்று நினைத்த சுஷி… சில நொடிகள் கழித்து ‘சொல்லிவிட்டானா’ என்று மெதுவாக ஒற்றை கண் திறந்து பார்க்க, அவன் சிரித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான்.

அவனைப் பார்த்து முறைத்து, கைகளை காதில் இருந்து எடுத்த தருணம்… அவள் கன்னங்களை ஏந்தி… அவள் இதழ்களை முற்றுகையிட்டான்.

சுஷி விழிகள் விரிந்து கண்ணிமை படபடக்க அவனைப் பார்க்க, சில நொடிகள் இருவரும் அதில் திளைக்க… அவளை விடுவித்த க்ரிஷ், அவள் கண்களைப் பார்த்து…

“நானும் சொல்ல மாட்டேன் அந்த மூனு வார்த்தை. அதுக்கு பதில் தான் இது” அவன் சொன்னவுடன் தன்னிலைக்கு வந்தாள் சுஷி.

“டேய். என்ன பண்ண நீ? உன்ன…” என்று அவன் மேல் விழுந்து அடிக்க… அவள் கைகளைப் பற்றி தடுத்தவன்…

“இந்த டிரீட்மென்ட் நல்லா இருக்கு சுஷி. தலைவலியே போயிடுச்சுன்னா பாரேன். சோ இனி தல வலி வர்றப்ப இதான்” என்றவனை மறுபடியும் அடிக்க ஆரம்பித்தாள்.

——–

இருவரும் அடுத்த நாள் திருச்சிக்கு புறப்பட தயாரானார்கள்.!!!!